W9. ஒளிச்சுடர்களின் தாயான நீ, பிரபஞ்சத் திரைப்படத்திற்குப் பின்னே மறைந்திருக்கும் உன் திருமுகத்தைக் காட்டு. (Whispers from Eternity - Tamil & English)
9. ஒளிச்சுடர்களின் தாயான நீ, பிரபஞ்சத் திரைப்படத்திற்குப் பின்னே மறைந்திருக்கும் உன் திருமுகத்தைக் காட்டு.
ஓ தெய்வக்காளி அன்னையே, நீ தேச-கால-ரூப-நிகழ்வுண்மையை உருவாக்கி, ஒரு எல்லையுள்ள ஆனால் பிரம்மாண்ட வடிவெடுத்து, எல்லாவற்றிற்கும் இடம்கொடுக்கும் இயற்கை மூர்த்தியாகத் தோன்றுகிறாய். புலனாகா பரப்பிரம்ம உணர்வே புலனாகும் ரூபத்தில் தெய்வத்தாயான உன் வடிவை எடுத்துள்ளது. அனைத்தையும் காத்து ரட்சிக்கும், தாயின் கருணையால் துடிக்கின்ற இதயம் உன்னுள்ளே உறைகின்றது.
ஓ மகாமாயீ அம்பாளே! சந்தியாகாலம், நிசியெனும் உன் இரு புருவங்களுக்கு மத்தியில் சந்திரனே அழகுப்பொட்டாய் அமைந்துள்ளது. நிரந்தரத்தின் மேகங்கள் உன் முகத்தை மூடிமறைக்கின்றன. அருளாளர்களின் வாழ்வெனும் பருவக்காற்று அவ்வப்போது உன் மர்மமான முகத்திரையைத் துணிவுடன் பொருத்தமாக விலக்கி, எங்கள் அறியாமைப் பார்வைக்குப் புலப்படாத உன் திருமுகத்தை சிறிதுகாலத்திற்குப் புலப்படுத்துகின்றது.
ஓ மகாமாயீ அம்பாளே, தோற்றத்தின் விடிவுகாலத்தில் நீ நாகரீகம் வளராத பிராகிருத கோலத்தில் சிறு, பருவான பொருட்களுடன் பக்குவமற்ற மனங்களாலான உடைகளையும், கரடுமுரடான இயற்கைக் கிரீடமும் அணிந்துகொண்டு காலப்பாதையில் சுற்றுவதை நான் கண்டேன்.
தோற்றத்தின் பகல்பொழுதில், தங்கள் பொருளாசைத் தீயினால் வெந்து புழுங்கும் ஜீவாத்மாக்களையும், பளீரெனத் துலங்கும் மனங்களாலாலுமான ஆடை போர்த்திய கோலத்தைக் கண்டேன். உன் செயல் உடம்பு ஆரவாரத்தில் வியர்வை சிந்தியது. உன் எல்லா மக்களும் போராட்டத்தின் வெம்மையைத் தாங்கமுடியாமல், சாந்தமெனும் குளிர்த்தென்றலை அனுப்புமாறு அவர்கள் உன்னிடம் வந்து முறையிட்டனர்.
உன் மத்தியான மனோ வஸ்திரத்துடன், நீ விழாக்கோலமான பல நூற்றாண்டுகளைக் கடந்து பெரும் கனவு கண்டுகொண்டு பயணம் செய்தாய். மனித வாழ்வு-சாவு, கோளங்களின் வளர்வு-சிதைவு, நாகரீகங்களின் பிறப்பு-இறப்பு, விண்வெளி ஆவிப்படரால் (nebulae) உருவாக்கப்படும் உலகங்கள் - இப்படி புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட கோளங்கள், நிலநடுக்கங்கள், முடிவுறாத பிரளயங்கள் என ஒரு பெருங்கனா.
அப்புறம் கருமையான இரவு நெருங்கியது. நீ இறுக்கமான, சோகக் கருந்திரையை உடுத்திக் கொண்டு, பிரபஞ்சத்தை பயங்கரமான, ஆனால் சுத்தப்படுத்தும், பிரளயத் தீயில் போட்டுப் புரட்டினாய். சூரியன் வெடித்து, நெருப்பைக் கக்கியது; பிரளய பூகம்பம் வானத்தைப் பிளந்தது; விண்மீன்கள் வானிலிருந்து கனலுடன் நழுவி விழுந்தது; முழுத் தோற்றமும் பெரும்சுடருடன் கொழுந்து விட்டு எரியும் நெருப்புலையாய்க் காட்சியளித்தது. எல்லாமே நெருப்புமயம்: பொருள்கள், பாபம், இருள் என இவையனைத்தும் உன் தீக்குவையில் இடப்பெற்று, அதில் அவை தூய்மையடைந்து பிரகாசமாய் ஒளிவீசின.
பிரபஞ்சத் தோற்றம் நெருப்பிலிருந்து உருவானது: பொருட்களின் சாம்பலுக்குக் கீழ், தகதகக்கும் பிரபஞ்சம் உறங்கியது; அத்தோற்றம் உன் கரங்களினால், ஓ மகாமாயீ, உலுக்கிவிடப்பட்டு அது தனது சுடரொளி விடும் உடம்பினை சிலிர்த்துக்கொண்டு எழுந்தது.
சக்தியினாலான உன் ஒரு கையினால், கட்புலனாகா ஆக்கசக்தியை எழுப்பி, பலவண்ணங்களில் வரம்புக்குட்பட்ட அழகிய ரூபங்களைப் படைக்கின்றாய். மற்றொரு கை, பாதுகாக்கும் சூட்சும அரிவாளைக் கொண்டு, அனைத்து கோளங்களையும் அதனதன் பாதையினில் கதி தவறாமல் சுழற்றிக் காக்கின்றது. உன் மூன்றாவது கை, பிரபஞ்சத்தின் அறுபட்ட தலையைப் பிடித்துக்கொண்டு, பிரளயத்தின்போது எல்லா அகிலாண்டமும் உன்னுள்ளே தான் உறங்குகின்றது என்பதை சூசகமாக உணர்த்துகிறது. உன் நான்காவது கை, மோகக்குழப்பச் சூறாவளிகளைத் தடுத்து அமைதிப்படுத்தி, நாடுகின்ற பக்தர்களுக்கு மோட்சத்தின் ஒளிக்கிரணங்களை நல்குகின்றது.
ஓ காளி, நீ மனிதமனங்களைத் தார்மாலையாய் அணிந்து ஆக்கச்செயல்களின் ஆழ்ந்த தோற்றுவாயான ஜனனியாய் விளங்குகிறாய்; உன் பாதம், உன் வரம்பற்ற-கட்புலனாகா-பதியாம் சிவபிரானின் அனைத்திற்கும் அப்பாற்பட்ட நெஞ்சினைத் தொடுகையில் மட்டுமே, உன் பிரபஞ்சத் தோற்றத்தின் கோர நடனத்தின் ஆட்டம் முழுதுமாக நிற்கின்றது. அவ்வமயம் தோன்றிய அகில பிரபஞ்சமும், சிவனிடம் லயம் அடைகின்றது.
ஓ முன்னேற்றத்தின் தாயே, உன் வாழ்க்கை நடனத்தை நான் இயற்கை இயைபுடன் வாழ்வோரின் எளிமையான சிரிப்பு மணிகளினில் காண்கின்றேன். என் தளிர்க்கும் எண்ணங்களின் தளத்தில், உன் அண்டகோளங்களின் இசையை ஒத்திசைக்கும் உன் உற்சாகமூட்டும் எண்ணங்கள் மெதுவாக நடனம் புரிகின்றன.
பிரபஞ்சத்தோற்றச் சபையில், ஓ காளி, பலத்த அதிரடியுடன் இடிக்கும் மின்னலிலும், சன்னமாக ரீங்காரிக்கும் அணுக்களிலும் என எல்லாப்புறங்களிலும் நான் உன் திருவடித் தாளத்தைக் கேட்கிறேன்.
வரம்பற்ற பரம்பொருள் புரிபடாத மாயமோகத்தினடியில் உறங்குகின்றது; இருப்பினும், பரத்தின் நெஞ்சிலிருந்து புறப்பட்டு, ஓ ரூபங்களின் இறைவியே, உன் எல்லைக்குட்பட்ட அற்புத நடனங்கள் துவங்குகின்றன. என் ஆன்மத்துடிப்பைக் காட்டிலும் அருகாமையிலே நீ நாட்டியமாடுகின்றாய்; உன் பாதங்கள் எழுப்பும் கூட்டு இசையோசையை என் மனத்தின் வெகுகோடியில் உள்ள திசையந்தத்திலும் நான் கேட்கின்றேன். ஓ மகமாயித் தாயே, நீ எங்கு வேண்டுமானாலும் சென்று ஆடு; ஆனால், நான் உன்னை இறைஞ்சுகிறேன், என் ஆன்மாவின் புனித சந்நிதியில் உன் அற்புதத் திருவடிகளின் இசையை என்றும் விடாமல் தொடர்ந்து இசைப்பாயாக!
ஓ காளி மா, உன் மாறிக்கொண்டேயிருக்கும் உடுப்புகள் தோற்றத்தின் ஆக்குதல், காத்தல், அழித்தல் எனும் கனவு நூல்களால் நெய்யப்பட்டுள்ளது. தெய்வத்தாயே, உன் அழகிய மனத்திரையில் பலகோடிப் பிரபஞ்ச சினிமாப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. இதனால், உன் நல்ல குழந்தைகளை உல்லாசமாய் பொழுதினைக் கழிக்கச் செய்கின்றாய்; உன் விஷமக் குழந்தைகளை பயமுறுத்துகின்றாய்.
இறையன்னையே, உன்னை மூடியுள்ள இந்த பளபளக்கும் பிரபஞ்ச சலச்சித்திரத் திரையை நீ விலக்கிக்கொள்; மோகத்தை அழிக்கும் உன் கருணை முகத்தை எனக்குக் காட்டு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
9 Thou Mother of Flames, show Thy Face, hidden beneath the veil of Cosmic Motion Pictures.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Post a Comment