17. சிரத்தா த்ரய விபாக யோகம் - பகவத்கீதை - The Eternal Way
பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).
பகவத் கீதை பதினேழாம் அத்தியாயம்
17. சிரத்தா த்ரய விபாக யோகம்
(மூன்று வித சிரத்தைகளின் வேறுபாடு எனும் யோகம்.)
உயர் உண்மைகளை அறிவது நன்று. வரம்பற்றதை மன ஒருமைப் படுத்தி தியானிப்பது எவ்வாறு என அறிவது நன்று. பலன் தரும் வாழ்வை வாழ்வது எப்படி என அறிவதும் செய்வகை மதிப்புடையது. இந்த அத்தியாயத்தில் முழு நலன் பற்றிய வழிகாட்டுதல் விவரிக்கப்பட்டுள்ளது.
இவ்வத்தியாயத்தின் தலைப்பிலும் சில ஸ்லோகங்களிலும் இடம்பெற்ற சிரத்தை எனும் வார்த்தையானது, மதிப்பு எனவும், சார்ந்திருக்க நம்பத்தகுந்தது எனவும், வேண்டிய பலனைத் தரத்தக்கதென நம்பப்படுவது எனவும் அர்த்தம் செய்யப்படுகின்றது.
அர்ஜுனன் கூறியது:
17.1. கிரந்த நூல் வழிகாட்டுதலுக்குப் படியாது ஆனால் சிரத்தையுடன் யக்ஞம் செய்வோரின் நிலை என்ன? அது சத்வமா, ரஜஸா, அல்லது தமஸா?
உட்பொருள்:
ஆன்மீகப் பயிற்சிக்கான செயலில் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் ஆனால் தங்களின் செயல்களில் நேர்மையான நம்பிக்கை வைத்திருப்போரின் நிலை என்ன? அது சத்வமா, ரஜஸா, அல்லது தமஸா?
உரை:
செயல்படு விதத்தில் ஆகச்சிறந்த வழியறியாதோர் அல்லது சுபாவத்தால் செய்தலையோ சுய தூண்டுதலில் செய்தலையோ தேர்ந்தெடுப்போரை முன்வைத்து இக்கேள்வி எழுகிறது. எதனால் இவர்கள் தூண்டப்படுகின்றனர் என அறிவதற்கு ஆன்மா இவ்விதம் விசாரிக்கின்றது: இவர்கள் தூண்டப்படுவது, ஏற்றம் தரும் இயல்பாலா? மன இச்சை வளர்க்கும் இயல்பாலா? அல்லது ஒருவனின் விழிப்புணர்வினை கலக்கும் இயல்பாலா?
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதில் கூறியது:
17.2. உடலெடுத்த பிறவிகளின் சிரத்தை மூன்று வகைகள் - சாத்வீகம், ராஜஸீகம், தாமஸீகம். இப்போது இவைகளைப் பற்றிக் கேட்டறி.
உட்பொருள்:
மனிதர்களின் மதிப்பிற்குரியவை மூன்று வகைகள் – அது மேம்படுத்துவது மற்றும் ஒளியூட்டுவது, தன்னை முன்னிறுத்துவதான சுய சேவைகள், அல்லது, மன இருளுக்கு இட்டுச் செல்வது மற்றும் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளுவதாக இருப்பவை.
17.3. அவரவர் அடிப்படைச் சுபாவத்திற்கேற்ப சிரத்தைகள் வேறுபடும். ஒருவன் அவனவன் சிரத்தையாலேயே ஆக்கப்பட்டுள்ளான். ஒருவன் அவனின் சிரத்தையின் அளவே.
உட்பொருள்:
ஒருவனின் மதிப்பிடும் தன்மை அவனவனின் மன-உடல் ஜோடியின் கட்டுக்கோப்பின்படியே. ஒருவனின் ஆளுமையும் அவன் வாழ்சூழலும் அவனே முன்தேர்வு செய்த மனக்கோணத்தையும் செயலையும் கலந்ததால் ஆன விளைவே. ஒருவனின் தற்போதைய வாழ்நிலை, கடந்த காலத்தில் அவனுடைய நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளின் விளைவே.
17.4. சாத்வீக மனிதர்கள் தேவதைகளை வணங்குகின்றனர். ராஜஸீக மனிதர்கள் யக்ஷர்களையும் ராக்ஷஸர்களையும் வணங்குகின்றனர். தாமஸீக மக்களோவெனில் பிரேதங்களையும் பூதகணங்களையும் வணங்குகின்றனர்.
உட்பொருள்:
தூய்மை மற்றும் பிரகாசம் ஒளிரும் மக்கள், பிரபஞ்ச நிகழ்வினை நடத்துவதான இறைமையின் தன்மையை கௌரவிக்கின்றனர். நிதானமிழப்பு மற்றும் ஆசை நிரம்பிய மக்கள், நன்மை தருபவை என தாங்கள் தவறான எண்ணத்தில் அறிந்த ஆவிகளையும், துன்பம் தருவதில் வல்லமையுடையதாகக் கருதும் ஆவிகளையும் கௌரவிக்கின்றனர். அசமந்தம் மற்றும் கலங்கிப்போன நுண்ணறிவால் ஆளப்படும் மக்களோவெனில், இறந்து போன நண்பர்களையும் உறவினர்களையும் பிறரையும் பஞ்ச பூதங்களை இயக்குவதான ஆவிகளாகத் தாங்கள் நம்புபவைகளையும் கௌரவிக்கின்றனர்.
உரை:
ஆன்மீக வளர்ச்சியை விரும்பி ஆனால் இறையுண்மையை மனப்பிடியில் கொள்ளமுடியாதவர்கள் அல்லது பேருணர்வு ஒளியூட்டத்தை தங்களிடமே உள்ளடக்கமாக உள்ளதாக அறியத் திறனற்றவர்கள் ஞானசித்திப் பேராளர்களையோ அல்லது பெரும் சக்திகளையோ அனுசரணை செய்து அவர்களின் கருணாகடாட்சத்தைப் பெற முயல்வர். மகத்தான சித்திகளை உடையதாகக் கருதும் நிஜமான அல்லது கற்பிதமான ஞானிகளையோ, அல்லது பிற துறவிகளையோ தங்களின் நலம்நாடியும் முக்திபெற வழிகாட்டுவர் என நம்பியும் அவர்களின் உதவியை நாடி இருப்பர். ஞானசித்திப் பேராளர்களின் ஆன்மீக வழிகாட்டுதல் உதவும் என்றாலும், ஒருவரின் சுய உணர்வுக்கும் மேம்பட்ட ஒன்றின் மேல் வைக்கப்படும் நம்பிக்கை உயர்வு தரும் என்றாலும், இறைவேட்கை உள்ளவர் இம்மாதிரியான நிஜ அல்லது கற்பிதம் செய்யப்பட்ட இடைநிலை முயற்சிகளைக் கடந்து பேருண்மையைக் காணவேண்டும்.
தன்னலத்திலேயே மையம் கொண்டுள்ளார், வலுவான ஆசைகளால் தூண்டப்பட்டு ஆனால் தத்துவ விளக்கங்களில் பகுத்தறிவற்று, விண்ணக மண்டலங்களில் அறிவுப்பூர்வ தோழமையான ஆன்மாக்கள், திறன் பெற்ற வியக்திகள் இருப்பதாகவும், அவைகள் பிரார்த்தனை, மந்திர ஜபம், வலுவான ஆசை அல்லது சாதாரண எதிர்பார்ப்பு ஆகியவைகளால் கவரப்படுவர் என்றும் கற்பிதம் செய்துகொண்டு, அவைகள் தொலைதூர உணர்வலை வழிகளிலோ அல்லது பிறவழிகளிலோ தங்களுக்கு உதவும் என எண்ணி அவைகளை அடைய முயற்சிக்கின்றனர். அவர்கள் தேவதைகள், கனவு வழிச் செய்தி பரிமாற்றம், யோகக் காட்சியில் கிடைக்கும் செய்திகள், ஆவிவழி இடைத்தொடர்பாளர்கள், ஆவி வழிகாட்டிகள், மேலும் இவை போன்ற இயற்கை மீறிய நிகழ்வுகளில் நம்பிக்கை கொள்வர். "ராக்ஷஸர்கள்" என சுலோகத்தில் குறிக்கப்பட்டவைகள் சிறப்புத் திறமை மற்றும் சக்தி இருப்பதாக நம்பப்படும் கற்பனாவாத ஆன்மீக வியக்திகள். நுண்ணறிவு மற்றும் முதிர்ச்சிக் பற்றாக்குறையினாலும் நம்பிக்கையாளர்களிடையே அபலைத் தன்மை ஆட்டிப்படைப்பதாலும், பல நூற்றாண்டுகளாக பல கலாச்சாரங்களில் இவை போன்ற விஷயங்களில் நம்பிக்கை நிலவி வருகிறது.
மேற்கத்திய கருத்தான சாத்தான் போல, தீயசக்திகள் தனித்தியங்கும் இருப்புருவம் கொண்டவை என நம்புகிறார்கள். பிரபஞ்சம் படைக்கப்பட்ட முறை மற்றும் அதன் பலவாறான உருக்கொள் விளைவுக் கூட்டங்களும் அறியாமல், இயற்கையின் செயல்களையும் செல்வாக்கினையும் அறியாமல், அவர்களே ஆன்மீக வியக்தி என்பதை அறியாமல் மயக்குறு மக்கள் தங்களின் சொந்த மன நிம்மதிக்காக எல்லாவற்றுக்கும் பதில் உள்ளடங்கியதாகக் கொள்ளப்படுகின்ற ஒரு இறைக்கோட்பாட்டியலை ஜோடித்துக் கொள்கின்றனர்.
அவர்களுடைய மற்றும் பிறருடைய துயரத்தினை, அவர்களின் குழம்பிய மனோபாவத்தால் ஒரு கெட்ட வெளிக்காரணியால் ஏற்படுவதாகத் தவறாகக் கணக்கிட்டுக் கொள்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் உயர்சிந்தனை மற்றும் உயர்வாழ்வு என்பதனை அறியவேண்டியவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் சொந்த உணர்வு தளத்திலிருந்து மேம்பட்ட உணர்வு தளத்திற்கு மேலேற வேண்டியவர்களாயிருக்கிறார்கள். பேருணர்வின் உண்மையிருப்பினை அறிவிப்பதான ஒரு கல்வியோ அல்லது அக்கல்வி புகட்டுபவரோ அவர்களுக்கு வேண்டும்.
நுண்ணறிவுக் குறைபாடு உள்ளவர்கள், மதச் சார்பு மற்றும் ஆன்மீக ஆதரவு வாய்க்கப்பெற்றால், இறந்து போன தங்களின் நண்பர்களின் ஆவிகள் அவர்களுக்கு உதவக் கூடியதாக இருக்கும் எனவும், அல்லது வியக்தகதமான ஆவிகள் இயற்கையை ஆட்டிப்படைக்கவல்லது என நம்புபவர்களாகவும் அவைகளை வேண்டுவதால் அவைகளின் ஒத்துழைப்பினைப் பெறமுடியும் எனவும் நினைக்கிறார்கள். இவர்களும் உணர்ச்சி, நுண்ணறிவு, ஆன்மீக தளங்களில் முதிர்ச்சி அடையத்தக்கதான கல்விபெற வேண்டியவர்களே.
17.5. வீணர்களான ஆணவமிகு மக்கள் மனத்தூண்டல் சக்திகளால் உந்தப்பட்டு, தங்களை இம்சைப்படுத்திக் கொண்டு கிரந்த ஆதரவற்ற சடங்குகளைக் கைகொள்கின்றனர்.
17.6. அவர்கள் முட்டாள்தனமாக உடலளவுத் தேவைகளையும் உள்ளிருப்பான ஆன்மாவினையும் அடக்குகின்றனர். இவைகள் மயக்குறு தீர்மானங்களே.
உரை:
ஆன்ம ஆவலைப் பூர்த்தி செய்துகொள்ள இம்சை தரக் காரியங்களில் ஈடுபடுவோர், உணர்ச்சிகளால் தங்களின் செயல்களைத் தூண்டிவிட்டுக் கொண்டு அறிவிலிகளாக இருக்கிறார்கள். இச்செயல்களினால் அவர்களின் உடலை முடக்கி வைத்து, ஆன்மா தன் இயல்பூக்கமான திறவாதலுக்கான தூண்டுதலை அனுபவிக்க விடாமல் தடுக்கின்றனர். அதில் நேர்மை இருந்தாலும் அவர்களின் அணுகுமுறை பகுத்தறிவற்ற நடைமுறைச் சாத்தியமற்ற சுய ஏமாற்று காரியமான ஒன்றாகும்.
அவர்கள் செயல்பாடு பெரும்பாலும் எல்லையை மீறிச் செல்வதாக இருக்கும்:
• மிகத் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
• பிரார்த்தனைகளுக்கு சுய ஊட்ட உணர்வுகளை அர்ப்பிப்பதை விட்டுவிட்டு பலவந்தமாகப் பலன்களை வேண்டுகின்றனர்.
• மன இச்சாசக்தியை அதன் உச்சியில் கையாள்கிறார்களே அன்றி மனதை அமைதிப்படுத்துவதைக் கற்பதில்லை.
• உறக்கம் – ஓய்வுச் சுழற்சியினைப் பலவீனப்படுத்துகின்றனர்.
• விரதங்களில் ஆகத்தீவரமாயிருக்கின்றனர்.
• சராசரியான, ஆக்கபூர்வ, வாழ்வினை ஆதரிக்கும் தினசரிப் பழக்கங்களைக் கைகொள்ளாமல் பிடிவாதம் மற்றும் விருப்ப வெறியர்களாயிருக்கின்றனர்.
17.7. மக்களின் தன்மைக்கேற்ப அவர்களின் உணவு விருப்பத்தேர்வுகளும் மூவகையானவை. அவ்வாறே அவர்களின் தன்மைக்கேற்ப, யக்ஞங்கள், தவ ஒழுக்கங்கள், மற்றும் கொடைகளும் மூவகையானவை. அவைகளின் வேறுபாட்டினை இப்போது கேள்.
உட்பொருள்:
அவரவர் உடல்-மன ஜோடிக் கட்டமைப்புக்கேற்ப அவர்கள் தேர்ந்தெடுக்கும் உணவு வகைகள், அவரவர் அடிப்படை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும். அவ்வாறே, அவரவர் மத அல்லது ஆன்மீக செயல்பாடுகள், சுய ஒழுக்கங்கள், பிறருக்கு ஈதல் அல்லது நற்காரியத் திட்டங்களுக்குக் கொடையளித்தல் ஆகியனவற்றில் அவரவர் கொள்ளும் நிலைப்பாடுகளுக்குப் பொருந்துவதாக இருக்கும். அவைகளுக்கிடையேயுள்ள தெளிவான வேறுபாட்டினை அறிந்துகொள்.
17.8. சத்வ குணம் கொண்டவர்கள்,
• உயிர்ச்சக்தி
• நற்குணம்
• பலம்
• நலம்
• மகிழ்ச்சி
• திருப்தி
வளர்க்கும் உணவுகளை, ருசி, கனிவு, திடம், ஒவ்வுதல் ஆகியன கூடியதாகவும் அமைந்திருப்பவைகளைத் தேர்வர்.
உரை:
உடலுக்கு சத்து மற்றும் ஆற்றல் தரக்கூடிய உணவுகளை நாம் உண்கிறோம். சரியான உணவு என்பது தூயதான மற்றும் உடல்-மனக் கட்டுக்கு ஒவ்வுவதான இயற்கை உணவு, ஒத்துக்கொள்ளும் அளவோடு சத்து மற்றும் ஆற்றல் தருவதுமாகிய எளிதில் ஜீரணிக்கக்கூடியதாகவும் நச்சுத்தன்மையற்றதாகவும் இருக்கும்.
ஆரோக்கியமுடைய, கல்விகற்ற, தெளிவான சிந்தனை கொண்ட, உணர்ச்சிகளை மட்டுப்படுத்திய ஆன்மீக விழிப்பு கொண்டவர்கள் இத்தகைய உணவினை பொதுவாகத் தேர்ந்தெடுப்பார்கள். ஒரு எளிய தாவர உணவு காய்கறிகளுடன், தானிய, பருப்பு வித்துவகைகளுடன், பழங்களுடன் இருப்பது சிறந்தது. ஆயுர்வேத சாஸ்திரத்தில் சொல்லப்படுவதென்ன என்றால் உணவின் ருசிக்கு உடல் காட்டும் பதில்-வினையே அதன் விளைவின் பதத்தைக் காட்டித் தரும். பஞ்ச பூதங்களின் வழியாக வெளிப்படும் குணச் செயல்பாடுகள் உருவாக்குபவையே உணவின் ருசி என்பது. உடலை நிர்விகிப்பதான வாத, பித்த, கப எனும் மூன்று "தோஷங்கள்" பலப்படுவது, பலவீனமாவது அல்லது தங்கள் செயல் மட்டுப்படுவதென ருசிகளினால் தாக்கமுறுகின்றன.
ஏற்கனவே ஆரோக்கியமாக மற்றும் செயலூக்கமாக இருக்கும் மக்கள் அவ்வாறே இருக்கத் தீர்மானிக்க வேண்டும். அது போலவே, அவ்வாறு இருக்க நினைப்பவர்கள் அதற்காக ஆர்வமுற வேண்டும். அறிவார்ந்த உணவுத் தேர்வு ஒவ்வொருவருக்கும் உதவிகரமாக இருக்கும். இறைத்தேடலில் உள்ள சாதகர்கள் இதனை நிராகரிக்கக் கூடாது.
17.9. உபாதை, அசௌகரியம், நோய் உருவாக்குவதும், கசப்பான, உப்பான, காரமான, சூடான, எரிச்சலூட்டுவதும் வறண்டதுமான உணவுகள், ராஜஸீகமானவர்களால் விரும்பப்படும்.
உரை:
நாக்குக்கு இனிப்பான உணவுகள், ஜீரணமாகி கபதோஷமாக மாறி உடலைக் கட்டி வளர்க்கும். கசப்பான, உப்பான, காரமான, சூடான எரிச்சலூட்டக்கூடிய உணவுகள் உடல்-மன ஜோடி சமச்சீரற்றவர்களுக்கும், நிலைகொள்ளாமை, கடுமை, வெளிப்பகட்டு, கெட்டி, புலனின்பவெறி, ஆக்ரோஷம் முதலானவைகளையுடைய ராஜஸீக குணமுடையவர்களுக்கும் விருப்பமூட்டும்.
வறண்ட காரமான உணவுகளும் அவர்களுக்குப் பிடிக்கும். உடல்-மன ஜோடியை நிலைப்படுத்த அறுசுவைகளும் --- அதாவது, துவர்ப்பு, இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, காரம் --- தினசரி உணவில் கலக்க வேண்டும். குறைபடு தோஷங்களைச் சரிசெய்ய அந்த தோஷத்துக்கான சுவையால் அதிகரித்து சமன்படுத்தலாம். அதுபோலவே மிகுபடு தோஷங்களைச் சரிசெய்ய அந்த தோஷத்துக்கான சுவையால் குறைத்து சமன்படுத்தலாம்.
17.10. கெட்டுப்போன, ருசியற்ற, நாறி அழுகிவரும் உணவுகள் தாமஸீகர்களால் விரும்பப்படுகின்றன.
உரை:
இத்தகைய உணவுகள் பிராணசக்தியின்றி, உடல் பலத்தைக் குறைத்து, பெருநோயை விளைவித்து, புலன்களை மங்கச் செய்யும். தாமஸீகர்கள் பொதுவாக நுண்ணறிவுக் குறைபாடுகளுடன், சொந்த நலத்தில்கூட அக்கறையின்றி, அழிவுகர நடத்தைகளில் ஈடுபட்டு தங்களையும் ஏமாற்றிக் கொள்ளும் நடத்தை கொண்டிருப்பர்.
17.11. கிரந்தநூல் பரிந்துரைக்கேற்ப கடமையுணர்வுடன் பலனில் பற்றின்றி யக்ஞம் செய்வது சாத்வீகம்.
உட்பொருள்:
மதச் சடங்குகள் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள் ஆணவமைய உந்தலில் செய்யாமை சாத்வீகம். அவை வாழ்வினை வலுவூட்டி ஆன்மீக ரீதியில் உயர்வு தருபவை.
உரை:
தனி அல்லது கூட்டு வழிபாடு, பிரார்த்தனை, புண்யஸ்தல யாத்திரை, சடங்காச்சார காரியங்கள் போன்றவைகளை உள்ளடக்கமாகக் கொண்ட மதச் செயல்பாடுகள் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள் ஆன்ம தன்மைகளை ஊட்டி வளர்த்து ஆன்ம ஞானத்தை விழிப்படையச் செய்யும். இவைகளை அவற்றின் பயனறிந்து ஈடேற்றவேண்டும். ஆக்கபூர்வ விளைவுகள் தானாக வந்தடையும். ராஜஸ, மற்றும் தாமஸ குணங்கள் பலவீனமடையும். சாத்வீகம் பலமடையும். சமாதி அனுபவம் நிரந்தரமாகி தூயதானதாகவும் இருக்கும்.
17.12. புகழ் எதிர்பார்த்தும், பிறர் அறியச் செய்யப்படுவனவாகவும் உள்ள யக்ஞச் செயல்கள் ராஜஸீகமானவை.
உட்பொருள்:
மதச் சடங்குகள் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள் ஆணவமைய உந்தலுடன் செய்தலும் பிறர் அறியச்செய்தலும் ராஜஸீகம். அவை மனமயக்கங்களுக்கும் பிறழ்காட்சிகளுக்கும் வழிவகுக்கும்.
உரை:
ஒரு செயலைச் செய்ய ஞானமிருந்தும், அவன் அதனை சுய ஊட்ட நிலை பலப்படுவதற்கென்று செய்தால் அல்லது அச் செயலால் பிறரை ஆளப் பயன்படுத்தினால் அதிருப்தியான விளைவும் மனமயக்கங்களும் பிறழ்காட்சிகளும் அதிகரிக்கும்.
17.13. சிரத்தாபூர்வமின்றி, கிரந்த நூல் வழிக்கு முரணாக, கொடைகளற்ற யக்ஞச் செயல்கள் தாமஸீகமானவை.
உட்பொருள்:
மதச் சடங்குகள் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள் வழிமுறை அறியாமல் செய்யப்படும்போதும் அல்லது பிழையாகச் செய்யப்படும்போதும் சரணாகதி அற்று செய்தாலும் அது தாமஸீகம்.
உரை:
ஆன்மீகக் காரியங்களில் பலன் தருவதான வழி எது என்றால், செய்வகை அறிந்து கிரந்த வழிகாட்டுதலுக்குட்பட்டுச் செய்வதே. நம் வாழ்வின் மிக முக்கியமான சாதனை எது என்றால் பலன் தரும் வாழ்வையும் ஆன்மீக விழிப்பையும் சாதிப்பதே. இறைமைக்கு நேர்மையான சாதகன், ஆன்மீகப் பாதையின் ஆரம்ப காலங்களில் எவ்வளவு அவனுக்குப் புரிகிறது அல்லது செயல் விருப்பம் உள்ளது என்பதை விஸ்தாரமாக அலசாமல், எவ்வாறு செய்வதென்பதில் தெளிவும் பிசிறின்றியும் செய்தால், திருப்திகரமான தீக்ஷாபூர்வ திறவாகுதலை சாதித்துவிடலாம்.
17.14. தெய்வ பூஜை, ஞானிகள் பூஜை, ஆச்சார்ய பூஜை, மற்றும் அறிவாளிகள் பூஜை, தூய்மை, ஒழுக்கநலம், உள்முக ஒருமை, அகிம்சை – ஆகியன உடலளவு தவம்.
உட்பொருள்:
பிரபஞ்ச காரியங்களை நடத்தும் சக்திகளுடன் இசைந்து உறவாடுதல், உணர்வு நிலைகளை முனிவர்களினுடைய நிலைகளுக்கு இசைவுப் படுத்துதல், ஆச்சார்யர்களுக்கும் அவர்கள் கற்றுத் தந்தவைகளுக்கும் மரியாதையாக இருத்தல் மற்றும் கற்றதை அர்ப்பண புத்தியுடன் நடத்துதல், அறிவாளிகளின் செயல்களை முன் மாதிரியாகக் கொண்டு வழிநடத்தல், உடல், மனம், நோக்கம் ஆகியனவற்றில் தூய்மை, ஆன்ம மையத்தில் கருத்தூன்றுதல், தீங்கிழைக்காமை ஆகியன உடலெடுத்த ஆன்மாக்களின் ஒழுக்கங்கள்.
உரை:
ஆன்மீக பாதையில் கருத்தூன்றியவனுக்கு ஆன்மீகப் பயிற்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் முழுக்கவனம் செலுத்துவதற்கு ஊக்கம் தரப்பட்டு, ஆன்ம திறவாதலை விரைவுபடுத்துவது இங்கு தெளிவாகிறது. முனைப்பின்றி எதனாலோ தள்ளப்பட்டுச் செய்யும் இறை அனுபூதிக்கான முயற்சிகள் மன அமைதி விளைவிக்கலாமே தவிர, திருவுருமாற்றம் தராது. அதிக முனைவுபட்ட ஈடுபாடு, ஈடுபாட்டின் உறுதிக்கேற்ப திருப்திகரமான விளைவுகளைத் தரும். ஆக்கபூர்வச் செயல்பாடுகளால் ஆன முழு ஈடுபாடு உத்தம விளைவுகளைத் தரும்.
17.15. உண்மையான, ஒப்புக்கொள்ளத்தக்க, பலன் தரக்கூடிய, பதட்டம் உருவாக்காத பேச்சுக்கள், மற்றும் சாஸ்திரங்களை வாசித்தல் ஆகியன கொண்டதே பேச்சுத் தவம்
உட்பொருள்:
உண்மை, அன்பு, பொருத்தம், ஆக்கபூர்வம், ஆதரவு, ஒளியூட்டம் பெற்ற ஆன்மாக்களின் புத்துணர்வுதரும் பேச்சினைப் பேசுதல் ஆகியன கொண்டதே பேச்சு ஒழுக்கமாகும்.
உரை:
நாம் என்ன கூறுகிறோம் அதனை எவ்வாறு கூறுகிறோம் என்பது நம் மன மற்றும் ஆன்ம நிலைகளை வெளிப்படுத்துகின்றன. எண்ணங்களையும், மனக் கோணங்களையும், உணர்வு நிலைகளையும், நம் பேச்சினை கூர்மையாக, அறிவார்த்தமாக, காரணபுஷ்டியாக வைத்துக்கொள்ளவதன் மூலம் நிர்வகிக்கலாம். நம் எண்ணங்கள் ஒழுங்குபட வைத்துக் கொள்ளவில்லை என்றால் அல்லது நாம் உணர்ச்சிக் கலக்கத்தில் இருந்தால், நம் பேச்சுத் தோரணைகள் குழம்பி, பேசிப் புரியவைக்க நினைப்பது பலனற்றதாகவும் தடை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். மன, உணர்ச்சி, உணர்வு நிலை ஆகியனவற்றை நாம் பேசுவதைக் கவனமாகச் செய்து நிர்வகிக்கலாம்.
நாம் எதைப் பேசுகிறோம் அதனை எவ்வாறு பேசுகிறோம் என்பதைப் பொருத்து, கீழ்கண்ட இரட்டைகளில் ஏதேனும் ஒன்றில் நம்மை வைத்துக் கொள்கிறோம்,
• குழப்பம் அல்லது மனத் தெளிவு
• மன அழுத்தம் அல்லது மன அமைதி
• துயரம் அல்லது மகிழ்ச்சி
• பயம் அல்லது நம்பிக்கை
• உடல் உபாதை அல்லது ஆரோக்கியம்
பிறரையும் அவ்வாறே நம் பேச்சுத் தொடர்பின் மூலம் ஆக்கபூர்வமாகவோ பயனற்ற வகையிலோ ஆட்படுத்துகிறோம்.
17.16. மன அமைதி, மென்மை அல்லது நாகரீகம், மௌனம், சுயகட்டுப்பாடு, மனத்தூய்மை, ஆகியன மனதளவு தவம்.
உட்பொருள்:
மன அமைதி, மென்மை அல்லது நாகரீகம், மௌனம், சுய ஆளுமை, மனத் தூய்மை ஆகியன மன ஒழுக்கங்கள்.
உரை:
ஆன்ம விழிப்பு வளர்த்துக் கொண்டால் மன அமைதி வளரும். மனதில் சாதாரணமாக உதிக்கும் மாறுதல்கள் சலனங்கள் ஆகியன ஆட்டமிழந்து செம்மையாகும்.
மென்மை அல்லது நாகரீகம் என்பது தீங்கிழைக்காமைக்கான நன்நோக்கத்தால் விளைவது.
மன மௌனம் என்பது மனதை தூயதாக்கி அதனை பலப்படுத்துவது. எல்லா காலத்திலும் மனதை சலனப்படுத்தாமல் வைத்துக்கொள்வதாலும் பேருணர்வு நிலைகளினாலும் மன மௌனத்தை வளர்க்கலாம்.
சுய கட்டுப்பாடு என்பது மனத் தூண்டல்களையும் புலன் தூண்டல்களையும் தன்வசத்தில் தேர்ந்தெடுத்து அனுமதிப்பதன் மூலம் மெருகூட்டலாம்.
மனத் தூய்மை என்பது சுயக் கட்டுப்பாடு, உணர்ச்சித் தணிவு, மேலும் தீங்கிழைக்காமை, நேர்மை, உண்மை, உள்முகமாதல் (பிராண சக்தியைத் தக்கவைத்தல்), துறவு ஆகியனவற்றைக் கைகொள்வதாலும், திரும்பத் திரும்ப தியானத்தின்போது பேருணர்வு அனுபவத்தாலும் அடையப்படுகின்றது.
17.17. இந்த மூன்று தவங்களையும் முழு நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பின்றி செய்வோர் சாத்வீகர்கள்.
உட்பொருள்:
உடல், பேச்சு மற்றும் மனத் தவங்களை முழுதாக மதித்து, பலனில் பற்று வைக்காமல் செய்வோர் சாத்வீக அல்லது தூய சுபாவமுடையோர்.
17.18. மரியாதை, அந்தஸ்து பெற ஆசைப்பட்டு கபடமாகச் செய்யப்பட்ட தவம் ராஜஸீகமானது, நிலையற்றது.
உரை:
நேர்மையின்மை, ஆணவமையச் செய்கை ஆகியன உண்மையான மதிப்புடையன அல்ல. பிரபஞ்சத்தை நிலைப்படுத்துவதும் ஆன்ம குறிக்கோளுக்குத் தொடர்புடையதுமான பரிணாமத் தத்துவங்களை அடிப்படையாகக் கொள்ளாத இவை மேலோட்டமானவை.
17.19. தவறாய்ப் புரிந்துகொண்டு செய்யப்படும் கிரியைகள், அல்லது பிறரை அவதிக்குள்ளாக்கும் நோக்கத்துடன் செய்யும் கிரியைகள் தாமஸீகமானவை.
உரை:
தவறுதலாக செய்யும் கிரியைகள் முழுமையான ஆக்கபூர்வ பலனை கொடுக்காது. நேர்மையாகப் பிரார்த்தித்தாலும் பலனின்றிப் போகும் வாய்ப்புண்டு. தொடர்ந்து தியானம் செய்தும் பலனின்றிப் போக வாய்ப்புண்டு. சிரத்தாபூர்வ பயிற்சி செய்தும் நன்மையை விட தீமையை தருவனவாய் அமையலாம். வாத உடம்புக்காரன் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடலாம். பித்த உடம்புக்காரன் பரபரப்பான உடற்பயிற்சி செய்யலாம்.
பிறருக்குத் தீங்கிழைக்கச் செய்யும் எந்தச் செயலும் தனக்கே தீங்கிழைக்கும். பிறருக்குத் தீங்கு நினைத்தலும் சுய-அழிவைத் தருவதாகும். சாதகன் எல்லா உயிர்களிலும் உள்ளார்ந்த தெய்வீகத்தை அங்கீகரித்து அது திறவாகி மலர்தலைக் கண்டு களிப்புறவேண்டும்.
17.20. தானம் பெறுபவரிடம் எதனையும் பிரதியுபகாரமாக எதிர்பாராமல் பொருத்தமானதாக [தகுதியான இடத்திலும் தகுதியான காலத்திலும் தகுதியுள்ளவர்க்கும் கடமையெனுமுணர்வுடன்] செய்யப்படும் தானம் சாத்வீகமானது.
உரை:
நல்லெண்ணம், பிரார்த்தனைகள், அபிமானப் பேச்சு அல்லது தைரியமூட்டும் பேச்சு, பொருளுதவி, நிதியுதவி, முதலிய கொடைகள் எதுவாக இருந்தாலும், சிந்தித்து, பொருத்தமாக, பெறுபவருக்கு மதிப்புள்ளதாக பிரதியுபகாரம் எதிர்பாராது செய்யவேண்டும். பொருத்தமான கொடையளிப்பு என்பது நமது ஆசிர்வாதத்துக்கான கணமே. ஏனென்றால், அப்போது வாழ்வாதாரமான ஓட்டத்துடன் லயப்படுகிறோம். குறுகிய மனதுக்காரனாகவோ தாராளமனதுக்காரனாகவோ ஒரே சமயத்தில் இருக்க முடியாது. அதே போல, ஆன்மீக வறுமையிலோ ஆன்மீக செழிப்பிலோ ஒரே சமயத்தில் இருக்க முடியாது. முழுமை மீதான நம் விழிப்புணர்வினை முதலாக வைத்து அதன் அன்பையும் நலப்படுத்தும் கருணையையும் ஊடகப்படுத்தும் பிரதிநிதியே நாம் எனும் எண்ணத்தில் நாம் கொடையளிக்கவேண்டும்.
17.21. பிரதியுபகாரம் எதிர்நோக்கியோ பலன் கருதியோ குறை மனத்துடன் செய்யப்படும் கொடை ராஜஸீகமானது.
உரை:
கொடை என்பது முதலீடு அல்ல. பொருத்தமானதாக (அதாவது பிரதியுபகாரம் எதிர்பாராமல்) கொடுக்கப்படும்போது நாம் வாழ்வாதார ஓட்டத்தில் லயப்படுகிறோம். நாம் அப்போதுதான் மிகப் பெரிய செல்வந்தராக இருக்கிறோம். உதவும் மனத்துடன் கொடுக்க வசதியிருந்தும் கொடுக்காவிட்டால் வாழ்வோட்டத்தைத் தடுக்கிறோம் என்பது மட்டுமல்ல, அதன் ஆசிர்வாத கணத்திலிருந்து விலகுகிறோம். பலன் விரும்பி கொடுப்பதனால் நாம் காரிய—விளைவுச் சுழற்சியில் நம்மை இருத்திக் கொள்கிறோம். இறைபக்தர்கள் என்ற தரத்தில் நாம் உலகாயத பலனின் ஆட்படுத்தும் கட்டிலிருந்து விடுவித்துக் கொள்ளவேண்டும்.
17.22. பொருத்தமற்றதாக, பிரயோஜனமற்ற ஒன்றிற்காக, மரியாதையின்றி வெறுப்புடன் கொடுக்கப்படும் கொடைகள் தாமஸீகமானவை.
உரை:
பொருத்தமற்றதாகக் கொடுப்பது என்றால் சிந்திக்காமல் கொடுத்தல். அதாவது, ஒரு மனிதனுக்கோ அல்லது ஒரு பிரயோஜனமான காரியத்திற்கோ பெறுபவரின் தேவை பூர்த்தி ஆகுதலைக் கணக்கிலெடுக்காது செய்வது.
பிரயோஜனமற்ற ஒன்றுக்குக் கொடுப்பது என்பது வீண்விரயமே.
• பெறுபவரை மதிக்காது கொடுப்பது
• பெறும் நோக்கத்தை மதிக்காது கொடுப்பது
• வெறுப்பாகக் கொடுப்பது
• மன உறுத்தல் மறையவோ அல்லது கொடுக்கும் கட்டாயத்தில் மாட்டிக்கொண்டோ கொடுப்பது
போன்றவை பெறுபவருக்கு ஒரளவு உதவலாமே தவிர கொடுப்பவருக்கு எந்த முன்னேற்றமும் இருக்காது.
ஒரு சாதகனின் வாழ்வு இறைமைக்கு எந்த ஒரு கட்டு திட்ட கெடுபிடியின்றிக் கொடுக்கப்பட வேண்டும். இதற்கு என்ன பொருள் என்றால் ----
• இயற்கையின் போக்குகளுடன் இயைந்து வாழ்தல்
• ஆன்மீகப் பயிற்சியில ஈடுபட்டிருத்தல்
• மயக்க உணர்வுகளிலிருந்து விடுபடுதல்
• பிறருக்கு ஆசிர்வாதம் கிடைக்கவும் கருணையின் செயல்களுக்கு பணிவுடன் இருக்கவும் ஒரு ஊடகமாக இருத்தல்.
17.23. ஓம், தத், சத் என்பவை உன்னதப் பேருண்மையின் மும்மை என்பர். இதனைக் கொண்டுதான் பிராஹ்மணர்களும், வேதங்களும், யக்ஞங்களும் புராதனக் காலத்தில் நியமமாக செய்யப்பட்டன.
உட்பொருள்:
“ஓம், அதுதான் உண்மையிருப்பு” எனும் மும்மைக் குறியைத்தான் உன்னதப் பேருண்மை எனச் சொல்லிக் கொடுக்கிறார்கள். உயர்ஞானம் உள்ள துறவிகளின் கிரியைகள், சத்யத்தின் வெளிப்பாடு, வாழ்வு தியாகமயமாகுதல் என்பவை இந்த பேருண்மையைக் கொண்டுதான் நிர்ணயிக்கப்பட்டன.
உரை:
ஓம் என்பது அ உ ம என்ற மூன்று ஒலிகளின் சம்மேளனம். இது பூரண உத்தமத்தினைப் பிரதிநிதிப்படுத்துவது மற்றும் இதுவே அனைத்தின் ஆதியந்தம். “தத்” (அது) என்பது வரம்பற்ற. விவரிப்புக்கடங்காத, உள்-வெளிப் பிரிவற்ற பேருண்மையாக, இருப்பதும் பிரபஞ்சத்தை வெளிப்படுத்தியதும் ஆகும். “சத்” அதாவது இருப்புள்ள உண்மை, என்பது பூரண இருப்பினை அல்லது உண்மையைப் பிரதிநிதிப் படுத்துவது. “அதுதான் உண்மை” எனும் பதக்கூட்டு “ஓம்” எனும் மந்திரத்தோடு முன்சேர்த்து உச்சரிக்கப்படுகிறது.
17.24. உன்னதப் பேருண்மையினைப் போற்றுவோரின் பரிந்துரைக்கேற்ப, யாகம், கொடை, தவம், யாவும் “ஓம்” ஸ்வரத்தை ஆரம்பமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.
உட்பொருள்:
வெளிப்படுத்தப்பட்ட உண்மையினைக் கண்ட தர்சகர்களின் பரிந்துரைக்கேற்ப, புனிதக் கொடைகள், அர்ப்பணிப்புப் பூர்வ ஆன்மீகப் பயிற்சி, தன்னையே அர்ப்பணம் செய்தல், சுய ஒழுக்கம் யாவும் “ஓம்” உச்சரித்தே ஆரம்பிக்கப்படுகின்றன.
உரை:
சாதகர்களுக்கு இந்த ஸ்லோகத்தின் உட்பொருள் அறிவிப்பது என்னவென்றால், “ஓம்” ஸ்வரத்தைத் தியானித்தவாறே, மனதை சமாதியில் ஒப்படைத்து பூரணத்தை உணர புலன்களை உள்ளிழுத்து ஆணவம் கரைதல் என்பதே ஆகும்.
17.25. “தத்” என்ற பதத்தை உச்சரித்து, தியாகம், தவம், கொடைகள் வழங்குதல் ஆகியனவைகளை, முக்தியை நாடுபவர்களால் அவைகளின் பலனை எதிர்நோக்காமல் செய்யப்படுகின்றது.
உட்பொருள்:
“தத்” என்ற ஒலியை உச்சரித்து, ஆன்மீகப் பயிற்சி எனும் நற்கொடை, சுய ஒழுக்கம், பலவகைக் கொடைகள் ஆகியன யாவையும், முக்தியை நாடுபவர்களால் அவைகளின் பலனை எதிர்நோக்காமல் செய்யப்படுகின்றது.
உரை:
ஆணவத்தினை ஆதரிக்கும் ஆசையறுத்து, உணர்வின் விடுதலைக்குச் சித்தமாகி, ஆகப் பெரிய பேருண்மைக்கு மனமொருமித்தும் சரணடைந்தும், இறைமைக்கு அனுபூதனாவதற்கு ஒரு சிரத்தாபூர்வ சாதகன் ஆவதனைத்தையும் செய்கின்றான். வரம்பற்ற ஒன்றுக்கு நம் ஆணவத்தினை ஆஹூதி செய்வதே நம் உன்னதக் கொடை.
17.26. “சத்” என்பது பேருண்மை அல்லது நன்மை எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. இவ்வொலியினையும் மங்களகரமான செய்கையில் உச்சரிக்கப்படும்.
உட்பொருள்:
“சத்” என்பது பூரணப் பேருண்மையினையும் அதன் நன்மையையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. எதேனும் ஒரு முக்கிய முயற்சி தொடங்குகையிலும் இதனை உச்சரிப்பர்.
உரை:
அனைத்தையும் கடந்த பூரணப் பேருண்மைக்கு மனம் ஒருமித்து, சிரத்தாபூர்வ சாதகன், ஆணவத்தை மூலத்துடனான ஒன்றிப்பில் கரைக்கிறான். தியான ஆரம்பத்தின்போது இறுதி நிலையினை உணர்தலை நினைவுறுத்திக்கொண்டு, உள்முகமாதலுக்கு ஆதரவான வழிமுறைகளை நிறைவேற்றி, தியான அமைதி ஏற்படுகையில் அதனில் அமிழ்ந்து, சமாதிப் படிநிலைகளுக்கு மேலெழும்பி உணர்வு ஒளியூட்டத்தினை நிறைவு செய்ய வேண்டும்.
17.27. பற்றுறுதியுடன் செய்யும் யக்ஞம், தவம், கொடை, மற்றும் இவைகளுக்கு ஆதரவான செயல்கள் யாவும் சாத்வீகமே என அங்கீகரிக்கப்படுகிறது.
உட்பொருள்:
சலனப்பாடில்லாமல் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டிருத்தல், சுய ஒழுக்கம்,, கொடை, மற்றும் இவைகளுக்கு உரிய ஆதரிப்புச் செயல்கள், ஆகிய இவையாவும் உயர்வு மற்றும் ஒளியூட்டம் தருபவை என கருதப்படுகிறது.
உரை:
சாதகனின் தியான மற்றும் ஆதரிப்புச் செயல்கள் யாவும் ஓம் ஸ்வரத்திற்கு லயப்பட ஒரு ஆயத்தபூர்வ காரியமே. அங்கிருந்து ஒரு சாதகன் ஆன்மஸ்மரணை அமைதிக்கு நிலைப்பட்டு அது இறையனுபூதியாக மலர்கிறது.
17.28. கொடையோ ஆன்மீகப் பயிற்சியோ அசிரத்தையுடன் செய்யப்பட்டிருந்தால் அது “அசத்” அல்லது இன்மை எனப்படும். அது இக, பர ஆகிய இரண்டு உலகங்களுக்கும் ஒன்றுக்கும் ஆகாததாக (பயனற்றதாக) கருதப்படும்.
உட்பொருள்:
கொடையோ ஆன்மீகப் பயிற்சியோ அவமரியாதையுடன் செய்யப்பட்டிருந்தால் அது “அசத்” அல்லது இன்மை எனப்படும். அவை இந்த ஜென்மத்திலோ வருகிற காலங்களிலோ பயன்பாடற்றவை.
உரை:
ஒரு சாதகனின் செயல்கள் நேர்மையாக சுய ஊட்டத்தில் குறியற்று சரணாகதமாக ஒற்றையிருப்பான, வாழ்வாதாரமான, ஆற்றல் மற்றும் நிகழ்செய்கையான ஒன்றுக்குச் செய்யப்படும் கொடை போல ஒருவனின் ஆன்மீக நலன் கருதிச் செய்தாலன்றி, அவை யாவும் அர்த்தமற்றவை.
முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், சிரத்தாத்ரய விபாக யோகம் என மூலத்திலும், மூன்று வித சிரத்தைகளின் வேறுபாடு எனும் யோகம் என இவ்வுரையிலும் தலைப்பிடப்பட்ட 17ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.
Send Your Comments to phdsiva@mccrf.org