W161. பயத்தை வெல்லும் ஆற்றலை உரிமையுடன் வேண்டுதல்.(Whispers from Eternity - Tamil & English)
161. பயத்தை வெல்லும் ஆற்றலை உரிமையுடன் வேண்டுதல்.
எல்லையற்ற பேருணர்வே, பயப்படுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை எனக்கு நன்கு புரியுமாறு கற்பி. மரணம் என்பது ஒருமுறை நேர்ந்தால், அது மறுபடியும் வரப்போவதில்லை என்பதை என் நினைவில் நிறுத்த உதவு; எப்போதோ அது நேரும்போது, இயற்கையின் கருணையால் அதைப் பற்றிக் கவலை ஏதுமின்றி, என் அறிவிற்கு எட்டாமலேயே அது நேர்ந்துவிட்டுப் போகட்டும். அதனால், நான் அனாவசியமாக மரணத்தை நினைத்து நடுங்கத் தேவையில்லை.
நானே கற்பித்துக் கொண்ட விபத்தின் பயங்கரத்தினாலே என் நரம்புநாளங்களை முடக்கி, அதனை ஒருக்கால் நிஜமாகவே நடக்குமாறு செய்துவிடாமல் இருக்க எனக்குக் கற்பி.
வாழ்க்கையின் கஷ்டங்களையும் சோதனைகளையும் மேற்கொள்ள, உன் குழந்தையாகிய எனக்கு அளித்த வரம்பற்ற ஆற்றலை நான் பயத்தினால் மூர்ச்சையடைவிக்காமல் இருக்க எனக்கு அருள்புரி. நான் உறங்குகையிலும், விழித்திருக்கையிலும், கவனத்துடன் இருக்கும் போதும், கற்பனைக்கனவு கண்டுகொண்டிருக்கும் போதும், உன் எல்லாம்-புரக்கும் இருப்பு என்னைச் சூழ்ந்துள்ளதை நான் அறியுமாறு செய்.
நான் இதை நன்கு உணரும்படி செய்: உறுதியான, மனிதனால் கட்டப்பட்ட கோட்டைக்குள்ளே நான் அங்க கவசங்களை தரித்துக்கொண்டு இருந்தாலும், நீ என்னுடன் கூடி இல்லையெனில் நான் நோய், பூகம்பம், விபத்து இவற்றிற்கு ஆளாகக்கூடும். மாறாக, துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பறந்து கொண்டிருப்பினும், பாக்டீரியக் கிருமிகள் நிறைந்த இடத்திலும், நீ என்னுடன் இருப்பாயெனில் எக்காலத்திலும் காக்கும் உன் கோட்டை மதில்சுவரின் பின் பத்திரமாக நான் இருப்பேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
161 Demand to be able to conquer fear.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org