11. விஸ்வரூப தரிசன யோகம் - பகவத்கீதை - The Eternal Way
பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).
பகவத் கீதை பதினொன்றாம் அத்தியாயம்
11. விஸ்வரூப தரிசன யோகம்
(பேரண்டவுருக் காட்சி யோகம்)
பேரார்வம் கொண்ட ஆன்மாவுக்கு பூரணத்தின் நாமரூபமற்ற இருப்புண்மையைச் சொல்லி அதன் மேன்மையை ஆன்மா ஏற்றுக்கொள்ளச் செய்யப்பட்டது. ஆனால், முன் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட பங்குபாகமான பேருணர்வுத் தரிசன மனப் பிம்பங்கள் கண்டும் திருப்தியடையாத ஆன்மா, அந்த ஒற்றை இருப்பின் பலபட்ட அம்சங்கள், வாழ்வு, விசை, இறைமையின் வெளிப்படு வஸ்து ஆகியனவற்றைக் காண விழைகிறது.
11.3. இவ்வாறாக உன்னை நீ விளக்கமுறுத்திக் கொண்டாய். இப்போது, உன் பேருணர்வின் பலபட்ட வெளிப்பாடும் அவற்றின் பிரகடனங்களுமான உன் தெய்வீகத் தோற்றத்தைக் காண விழைகிறேன்.
உரை:
இறைஞானம் படிப்படியாய் திறவாகிறது. இதுவரை நுண்ணறிவால் கண்டுணர்ந்த அதே காட்சி நேரடி அனுபவமாவதுதான் ஞானத்திறவின் அடுத்த படிநிலை.
11.4. அத்தெய்வீகத் தோற்றத்தை நான் காணத் தகுதியுடைவன் என நீ கருதினால், உன் நித்ய ஆன்மாவின் முழுத் தோற்றத்தை எனக்குக் காட்டு.
உரை:
சொந்த அனுபவத்தில் இறைமையை அறியும் ஆர்வம் உதவிகரமானது. ஒழுக்கச்செறிவான பயிற்சியினாலும் அவசியமான அறிவைப் பெற்றதாலும் ஆயத்தமாகியிருக்கிற சாதகன் இறைமையின் வெளிப்பாடு காண தகுதி பெற்று அதன் முழுமை விரிவு காணும் கோரிக்கையை வைக்கிறான். தானாக முதிர்கிற ஆன்ம அனுபூதி அந்த ஆன்மாவின் பெறும் தகுதிக்கேற்ப நடக்கும் என்றாலும், நாம் நம் உள்ளார்ந்த இருப்பின் மூலத்திலிருந்து முகிழ்வதாய தெய்வீகத் தோற்றத்தினை அறிய வேண்டுதல் வைத்தலும், விசாரித்தலும், ஆர்வமுறுதலும் நன்றே.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது:
11.5. என் பல நூறாயிரக் கணக்கான தெய்வீக வடிவம் மற்றும் வகை, நிறம், சித்திரம் ஆகியன பார்.
உட்பொருள்:
பேருணர்வின் பலவாறான வெளிப்பாடுகளைப் பார்.
11.6. ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்ரர்கள், அஸ்வினி இரட்டையர்கள், மருத் கணங்கள் மற்றும் இதுவரை காணாத அதிசயங்களைப் பார்.
உட்பொருள்:
விண்ணகத் தேவதைகளையும், நலம் தரும் கடவுளர்களையும், ஆரோக்யம் நல்கும் சக்திகளையும், இயற்கைப் போக்குகளை நிர்ணயிக்கும் பேரண்ட விசைகளையும், இதற்கு முன்பு நீ காணாத அதிசயங்களையும் பார்.
உரை:
கீதையின் செய்தியானது, மதம் மற்றும் கலாச்சார பேதங்களைக் கடந்ததாகையாலும், கீதாச்சார்யனான ஸ்ரீ கிருஷ்ணர் இந்து மத வேதங்களில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு போதிப்பதாலும், ஒழுங்கமைத்து நிகழ்த்துவதும், நியம அதிகாரத்திலுள்ளதுமான தேவ தேவதைகள் மற்றும் பல்வேறு விண்ணக விசைகள் எனும் குறியீடுகள், அவர்களுக்குப் புரியும் வண்ணம் விவரிக்கப்பட்டுள்ளன.
விண்ணகக் காட்சிகள் திறவாகத் திறவாக ஒரு சாதகனுக்கு ஏற்படும் அனுபவங்களின் பரிபக்குவத்தை அறிய கீழ்க்காணும் அடுத்தடுத்த ஸ்லோகங்களை சங்கிலித் தொடர்ச்சியாய் ஒருமுறை படித்துவிட்டு பின் மீண்டும் அதிகக் கவனத்துடன் படிக்க வேண்டும்.
11.7. அசையும் அசையாப் பொருட்கள் என் உடம்பில் ஒன்றிணைந்திருப்பதைப் பார். மேலும், நீ பார்க்க விழைவதை எல்லாம் பார்.
உட்பொருள்:
உயிர் மற்றும் ஜடப் படைப்புக்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கலந்திருக்கும் பேருணர்வைப் பார். நீ பார்க்க விழைவதை எல்லாம் பார்.
11.8. உன் ஸ்தூலக் கண்களால் என் இந்த விரிவை நீ பார்க்கமுடியாதாகையால், உனக்குத் திவ்யப் பார்வையை அளிக்கிறேன். என் மாட்சிமை பொருந்திய அதிகாரவல்லமையைப் பார்.
உட்பொருள்:
உன் குறுகியபரப்புடைய புலன்களால் பேருணர்வின் முழுமையைப் பார்க்க முடியாதாகையால் உன் உள்ளுணர் சுயபோதனா சக்தி திறவாகும். படைப்புக்காட்சி விரிவில் பேருணர்வின் உன்னத வல்லமையைப் பார்.
சஞ்சயன் கூறியது:
11.9. இவ்வாறு பிரகடனப்படுத்திவிட்டு, யோகபகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தன் உன்னத வடிவத்தைக் காண்பித்தார்.
உட்பொருள்:
நடக்கப்போவதை உரைக்கும் உள்ளறிவு கூறத் தொடங்கியதும், பேருணர்வு தன் பலவாறான வெளிப்பாடுகளின் உண்மையை சுய பிரகடனப்படுத்திக் கொண்டது.
11.10. அவ்வடிவம் வாய்கள் பலவும் கண்கள் பலவும், ஆச்சரியகரமான அம்சங்கள், திவ்ய ஆபரணங்கள், தயார்நிலையில் ஆயுதங்களையும் கொண்டது.
உட்பொருள்:
பல விண்பரப்பு விசைகளை வசியப்படுத்தக்கூடிய அம்சங்கள் மற்றும் தோற்றக் காட்சிகள், ஆச்சரியகரமான அம்சங்கள், கருணை பொழியும் தன்மைகளுடனும், எண்ணியதை ஈடேற்றும் வல்லமைகளுடனும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
11.11. திவ்ய மலர்மாலைகளையும், வஸ்திரங்களையும் அணிந்து, திவ்ய பரிமளத்துடன், ஆச்சரியம் கலந்த, ஆதியந்தமற்ற மின்னுவதான இருப்புண்மை சகல திசைகளிலும் பரவியவாறே தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது.
உட்பொருள்:
சுய வெளிப்பாட்டின் பல அடுக்குகளுக்கேற்ற கவசங்களுடன், பிராண சக்தியின் அலையதிர்வு நறுமணத்துடன், அவற்றிற்கிடையே வியப்பு கலந்த பரிபாஷைகளை வெளியாக்கிக் கொண்டு, பேருணர்வின் ஒளிரும் இருப்புண்மை, ஆதியந்தமற்ற சர்வவியாபி (தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது).
11.12. அவ்வளவு உயரிய இருப்புண்மையின் வல்லமைக்கு, ஆயிரம் கதிரவன்கள் ஒரு சேர உதித்தால் உண்டாகும் வெளிச்சம் வெகு மங்கலாகத் தோன்றும்.
11.13. அங்கே, அர்ஜுனன், முழுப் பிரபஞ்சம் அதன் எல்லா விரிவுகளுடனும் ஒரே ஒருமையில் கடவுளர்களின் கடவுளாவனின் மேனியில் கண்டார்.
உட்பொருள்:
ஆத்மா அதனிடத்தில் இருந்தவாறே, முழுப் பிரபஞ்சத்தையும் ஒரு தொடர் இருப்பாக, அதாவது, பேருணர்வின் தன்மைகளையும் செயற்பாடுகளையும் ஒரு இணைச்சங்கிலித் தொடராக, ஒற்றை வெளிப்பாடாக, ஆதிக்கவிசைகளின் இயக்கங்களாக பலவாறான வெளித்தோன்றல்களை ஒரு முழுமையாகப் பார்த்தான்.
அர்ஜுனன் கூறியது:
11.14. கிருஷ்ணரிடம் தலை தாழ்த்தியவாறே, ஆச்சர்யபூதனாய் அர்ஜுனன் கூறலானார்:
11.15. இறைவனே, உன் உடம்பில் தெய்வங்களையும் பலவாறான ஜீவராசிகளையும் குவிந்திருப்பதைப் பார்க்கிறேன். பிரஹ்மன் அவனுடைய தாமரைப்பீடத்திலும், பல ஞானிகளும், பல தெய்வீகச் சர்ப்பங்களும் (இருப்பதைப் பார்க்கிறேன்).
உட்பொருள்:
ஆன்மா, தன் பேராச்சரிய அனுபவத் ததும்பலால் தத்தளித்து, ஆணவத்தின் மிச்சசொச்சத்தையும் விட யத்தனித்து, மேலும் விசாரிக்கிறது.
பேருணர்வின் வெளிப்படு பரப்பில், நான் பிரபஞ்சப் போக்குகளை இயக்குகிற மற்றும் அதன் செயலாக்க ஊக்கிகளான ஆதிக்கசக்திகளைப் பார்க்கிறேன். உன்னதப்பேருணர்வின் படைப்பு அம்சம், ஒளியுட்டம் பெற்ற ஆன்மாக்கள், பேருணர்வின் செயல்துடிப்புள்ள ஆக்கவிசையான குண்டலினியின் வெளிப்படு அம்சங்கள் (ஆகியன பார்க்கிறேன்).
11.16. நான் உன்னை எங்கும் பார்க்கிறேன். உன் வடிவம் பல புஜங்களுடன், உடல்களுடன், முகங்களுடன், கண்களுடன் முடிவற்றனவாக இருக்கின்றன. ஆனால், உன் எல்லையற்ற வடிவத்தின் முடிவு, நடு மற்றும் ஆரம்பத்தைக் காண முடியவில்லை.
உட்பொருள்:
நான் உள்ளுணர்வில், பேருணர்வின் சுயவெளிப்பாடுகளை அதன் வெளித்தோன்றல்களின் முழுப்பரப்பில் எல்லையற்றதாய்ப் பார்க்கிறேன். ஆனாலும் பேருணர்வின் முடிவற்ற வளர்போக்குகளின் முழுவீச்சினைப் பார்க்க முடியவில்லை.
11.17. பார்ப்பதற்குக் கடினமானவான நீ, கிரீடம் அணிந்தவனாய், சங்கு, சக்கரங்களுடன், எங்கும் ஜொலிக்கும் ஒளிவெள்ளத்துடன், ஒப்பிலா சூரியப் பிரபை போன்ற அக்னிப் பிரகாசத்துடன் (இருப்பவனாகப் பார்க்கிறேன்.)
உட்பொருள்:
உன்னதப் பேருண்மையின் வெளிப்படு இருப்புண்மையை அதன் பலவாறான ஆதிக்கச் சக்திகளுடன், சர்வ வியாபகத் தனிப் பெரும் ஒளிப் பிரகாசத்துடன் (பார்க்கிறேன்).
11.18. நீ என்றும் மாறாதவன், பரம லட்சியமாக உணரப்படவேண்டியவன், அனைத்திற்கும் உன்னதமான இருப்பிடம், சனாதன தர்மத்தை நித்தியமாகக் காக்கும் அழிவில்லா ரக்ஷகன், மற்றும் ஆதி ஆத்மா என நம்புகிறேன்.
உட்பொருள்:
பேருணர்வினை என்றும் நிலைத்ததாக, பரமான உண்மை என உணரப்படவேண்டியதாக, உன்னத லட்சியமான அனுபவமாக அடையப்பட வேண்டியதாக, பிரபஞ்ச நிலைப்புக்கான ஒழுங்குமுறைகளின் நிரந்தர காப்பாளனாக, ஆதியாக, வாழ்வூட்டும் இருப்புண்மையாக புரிந்துகொள்கிறேன்.
11.19. உன்னை வரம்பற்ற சக்தியாக, ஆதி, நடு, அந்தமற்றவனாக, கணக்கற்ற புஜங்களுடையவனாக, சூரியனையும், சந்திரனையும் உன் கண்களாக, உன் ஒளிரும் அதரங்கள் அதன் கீற்றுகளால் பிரபஞ்சத்தை வெளிச்சமாக்குவதையும் பார்க்கிறேன்.
உட்பொருள்:
பேருணர்வினை நிலைத்த சக்தியுடையதாக, காலத்தாலோ, பிரபஞ்ச வளர்போக்குகளாலோ தீண்டப்படமுடியாதவனாக, செயல்களின் கணக்கற்ற தன்மைகளையும் ஊடகங்களையும் கொண்டவனாக, கிரகங்களும், நட்சத்திரங்களும் இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கும் பேருணர்வின் கண்களாக, பிரபஞ்ச வெளிப்பாட்டின் மூலத்திலிருந்து அதன் ஜொலிப்பால் இந்தப் பிரபஞ்சத்தை வெளிச்சப்படுத்துவதாகவும் பார்க்கிறேன்.
11.20. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட தூரத்தை நீ மட்டும்தான் நிரப்புகிறாய். உன் இந்த அடக்கவியலாத தோற்றத்தைக் கண்டு மூவலகங்களும் நடுங்குகின்றன.
உட்பொருள்:
பேருணர்வுதான் புலனறியா நுண்ணிய மற்றும் பெருவெளிகளை நிரப்பியுள்ளது. பிரபஞ்சத்தில் அதன் அதிரவைக்கும் பிரகடனத்தாலும் அதன் செயல்களாலும் காரண, சூட்சும, ஸ்தூல உலகங்கள் அதனதன் தொழிலைச் சீராகச் செய்கின்றன.
11.21. தேவதா கணங்கள் உன்னை அடைகின்றன. அவர்களில் சிலர் பயம் கலந்த மரியாதை காண்பிக்கும் ஸ்தோத்தரிப்புடன் துதிக்கின்றனர். அவர்களில் முழுமையடைந்தோர் உனக்கு பூரணகும்ப மரியாதை செலுத்துகின்றனர்.
உட்பொருள்:
முழுமையை நெருங்கி அடைந்துவரும் ஆன்மகூட்டம் பேருணர்வின் இருப்புண்மை எனும் இறுதி படிநிலையை அடைய அணுகுகின்றன; அவர்களில் தன்னிலை விளக்கத்தில் முழுமைபெறாத சிலரோ, பணிவுடன் மரியாதை செலுத்தி, ஆன்மீகக் கிரியைகளைச் செய்கின்றனர். முழு ஒளிபெற்ற ஆன்மாக்களான ஞானிகள் ஆனந்தக் களிப்புடன் இறைமையைத் தெளிகின்றனர்.
11.22. ருத்ரர்கள், ஆதித்யர்கள், வஸுக்கள், சைத்யர்கள்: விஸ்வதேவதைகள், அஸ்வினி இரட்டையர்கள், மருத்கணங்கள், உஷ்ம பாஸர்கள், கந்தர்வ கணங்கள், யக்ஷ கணங்கள், சித்தர்கள் உன்னைக் கண்டு ஆச்சரியத்தில் திகைக்கின்றனர்.
உட்பொருள்:
வெளிப்படு பேருணர்வின் நோக்கத்தைப் பூர்த்திசெய்யும் வண்ணம், அதன் பிரபைகளால் உயிரூட்டப்படுவதான அதன் துணை ஊடகங்கள் யாவும் அந்தப் பேருணர்வின் நுண்ணறிவு காட்டிக் கொடுக்கும் வழியில் அடிபணிந்து செயல்புரிகின்றன.
11.23. பற்பல வாய்கள், கண்கள், புஜங்கள், தொடைகள், பாதங்கள், வாயிடுக்குகளிலிலுள்ள தந்தங்கள், ஆகியனவற்றின் பேருருக் காட்சியைக் காணும் இந்த உலகங்களும் நடுங்குகின்றன. அதுபோல நானும் நடுங்குகிறேன்.
உட்பொருள்:
பேருணர்வின் முழு உருக் காட்சி மற்றும் அதன் அம்சங்களையும் செயல்களையும் காணும் இந்த உலகங்கள் உன்னுடனான உறவை அறிந்து நடப்பதாக அறிகின்றேன். அவ்வாறே நானும் உன்னுடனான உறவை அறிகின்றேன்.
11.24. திறந்த வாயுடனும் எண்ணற்ற ஒளிரும் கண்களுடனும் பல வண்ணங்களுடனும் ஆகாயத்தைத் தொடும் உன்னைப் பார்க்கும்போது, எனக்கு மேனி நடுங்குகிறது. எனக்கு தைரியமோ அமைதியோ காணப்பெறவில்லை.
உட்பொருள்:
பேருணர்வின் பிரபஞ்ச வெளிப்பாட்டின் பலவாறான அம்சங்களைப் பார்க்கும்போது விக்கித்துப் போகும் நான் தைரியமோ அமைதியோ காணப்பெறவில்லை.
11.25. கடவுளர்களின் கடவுளே, விண்மண்டலத்தின் கொள்ளிடமே, திறந்த உன் வாயை அதன் தந்தங்களுடன் பார்க்கும்போது காலத்தையும் அனைத்தையும் விழுங்கும் ஒளிப்பிழம்பாக இருக்கிறது. நான் திசையறியா நிலை எய்தி, ஆசுவாசமோ அடைக்கலமோ பெற்றேனில்லை.
உட்பொருள்:
பிரபஞ்ச சக்திகளின் மாறுபடுத்தும் போக்குகளையும், அழித்து நிர்மூலமாக்கும் போக்குகளையும் பார்க்கும் போதும், என் தியான ஒருமையால் கிடைத்த ஆற்றல்கள் தடுமாற்றமுற்று, நான் மன அமைதியையோ சமாதிநிலையையோ அனுபவிக்க இயலவில்லை.
11.26. திருதராஷ்ட்ரனின் அனைத்து மகன்களும் மற்ற அரசர் குழாத்துடன், பீஷ்மர், துரோணர், தேரோட்டி மகனாகிய கர்ணன் மற்றும் நம் பிரதான படைவீரர்களுடன் உன் உள்ளே நுழைகின்றனர்.
உட்பொருள்:
உன்னதப் பேருணர்வில் கரைந்தழிபவைகள் இப்போது எதுவென்றால்,
• விசாரித்தறிவதை பழக்கமாகக் கொள்ளாத அழிவுப் போக்குகள்,
• மனவிழிப்பைப் பாதிக்கின்ற பற்பல ஆதிக்கவிசைகள்,
• தன்னிச்சையால் இருப்புடையதென தன்னை எண்ணும் அகம் [பீஷ்மர்],
• சம்ஸ்காரங்கள் [துரோணர்],
• ஆன்ம திறவாதலுக்குத் தடைகள் [கர்ணன்],
• மற்றும் பிற தொந்தரவான போக்குகளும் பழக்கங்களும்.
11.27. அவர்கள் அனைவரும் உன் திறந்தவாயில் துரிதமாக நுழைகின்றனர். அவர்களில் சிலரின் தலைகள் உன் பற்களினால் துகள்துகளாக்கப்பட்ட நிலையில் பார்க்கப்படுகின்றன.
உட்பொருள்:
அவர்கள் உன்னதப் பேருணர்வில் விரைவாகக் கரைகின்றனர். அவர்களில் சிலர் மிக்கவேகத்துடன் விழுங்கப்படுவதாகத் தோன்றுகிறது.
11.28. வேககதியில் பற்பல ஆறுகள் கடலை நோக்கி ஓடிவருவதுபோல, இந்த உலக நாயகர்கள் உன் ஜ்வலிக்கும் வாயை நோக்கி உட்புகுகின்றனர்.
உட்பொருள்:
வேககதியில் பற்பல ஆறுகள் கடலை நோக்கி ஓடிவருவதுபோல, மயக்குற்ற மனத்தின் பற்பல தன்மைகள், போக்குகள், பழக்கங்கள் ஆகியன பேருணர்வின் பிரகாசமான வெளிச்சத்தில் கரைகின்றன.
11.29. விட்டில் பூச்சிகள் விளக்கொளியில் விழுந்து மரணிப்பதைப் போல, இந்தப் படைப்புகள் அனைத்தும் உன் வாயில் நுழைந்து அழிகின்றன.
உட்பொருள்:
விட்டில் பூச்சிகள் விளக்கொளியில் விழுந்து மரணிப்பதைப் போல, மயக்ககதி மனத்தின் இந்தப் போக்குகளும் வேகமாக உள்நுழைந்து இந்தப் பேருணர்வு ஒளியில் அமிழ்ந்து நீக்கப்பெறுகின்றன.
11.30. உக்கிரமான சக்தியோடு பிரபஞ்சத்தை நிறைத்து ஜ்வலிக்கும் உன் அச்சுறுத்தும் தீ நாக்குகள் எல்லா உலகையும் முழுங்குகின்றன.
உட்பொருள்:
அது தன் உக்கிரமான சக்தியோடு பிரபஞ்சத்தை நிறைத்திருக்கும் பேருணர்வின் மாற்றவல்ல அதிகாரம் எல்லாவற்றையும் தன்னடக்கத்தில் வைத்துள்ளது.
11.31. அச்சுறுத்தும் வடிவத்துடனான நீ யாரெனக் கூறு. உனக்கு என் மரியாதைகள். பெருமதிப்பிற்குரிய இறைவனே, என்னிடம் கருணை காட்டு. ஆதியானவனே. உன்னைப் புரிந்துகொள்ளவே நான் விரும்புகிறேன். உன் செயல்கள் எனக்கு (சிறு அறிவுக்கு) விளங்கும்படி (எளிய தரத்தில்) இல்லை.
உட்பொருள்:
பேருணர்வின் தோற்ற மாற்றங்கள் அவ்வளவு அச்சுறுத்துவதாக இருப்பதால் அதன் உண்மையை எனக்குக் காட்டு. பேருணர்வின் வெளித்தோன்றல்களை நான் மதிப்புடன் அங்கீகரிக்கிறேன். கருணையை நான் கோருகிறேன். பேருணர்வின் முழுமையை நான் முழுமையாய் அறிய விரும்புகிறேன். இக்கணம் வரை நான் அதனை அறிந்திலேன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது:
11.32. அழிக்கும் வல்லமை வாய்ந்த காலம் நான். உலகங்களை சூன்யமாக்க வந்துள்ளேன். உன் முயற்சியால் ஏதும் காரியமாற்றாமலேயே, உன்னை எதிர்த்து நிற்கும் இவ்வீரர்கள் இல்லாமல் போய்விடுவார்கள்.
உட்பொருள்:
இறைப் பேருணர்விலிருந்து வெளியாகும் ஓம் ஸ்வரத்தால் உருவாக்கப்பட்ட மூல இயற்கைப் பரப்பின் வெளித்தோன்றலே காலம் என்பது. அது பிரபஞ்ச வெளிப்பாடுகள் மற்றும் ஒடுக்கங்களுக்கு நிர்ணய அதிகாரமாகும். சமாதியில் நிலைபெற்ற சாதகனின் சுயமுயற்சி இல்லாமலேயே இறைக் கருணையானது அவனுடைய ஆத்மானுபூதிக்கான தடைகள் அனைத்தையும் நீக்கிவிடும்.
11.33. ஆகையால், எழுந்திரு! புகழை அடை! எதிரியை வென்று ராஜ்யப் பெருமை அனுபவி! அவர்கள் கொல்லப்பட்டவர்களே. நீ ஒரு கிரியாசாதனம் மட்டுமே.
உட்பொருள்:
எனவே, சுதாரித்து ஆன்மஞானத்திற்கும் இறையனுபூதிக்கும் விழிப்பாகு. ஒளியூட்டம் பெற எல்லாத் தடைகளும் அகற்றியான பிறகு திறவான ஆன்மதன்மைகளின் விளைவின்பங்களை அனுபவி. தடைகள் யாவும் உன்னதப் பேருணர்வால் ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டன. நேர்த்தியான காரியங்களுக்கு நீ ஒரு செயல்வழிக் கருவியாகு.
உரை:
எல்லாத் தடைகளும் அகற்றுப்பட்டுவிட்டன எனும் குறிப்பு, ஒளியூட்டப் பாதைக்கான வெற்றி ஊர்ஜிதமாகியிருக்கிறதை அடையாளப்படுத்துகிறது. இனிச் செய்யவேண்டியதெல்லாம் கடமைகளையும் ஆன்மப் பயிற்சிகளையும் செவ்வனே நிறைவேற்றுவதே. இறைக் கருணை பொழிகிறது, வெற்றி நிச்சயம்.
11.34. துரோணர், பீஷ்மர், ஜெயத்ரதன், மேலும் கர்ணனும் பிற போர்வீரர்களும் என்னால் கொல்லப்பட்டுவிட்டனர். தயங்காதே! போர் புரி! போரில் எதிரிகளை நீ வெல்வாய்!
உட்பொருள்:
சுயத்தை இழவுபடுத்தும் பழக்கங்களையும், அடிமைத்தனமான போக்குகளையும் ஆதரிப்பதான சம்ஸ்காரங்கள், தன் இருப்புக்குத் தானே ஆதாரம் எனும் ஆணவமாய அறிவு, அழிவுக்குரிய விஷயங்களின் மேலுள்ள பற்று, ஆக்கப்பூர்வ மாற்றங்களை ஏற்காத மனதின் எதிர்ப்பு, பிரச்னை ஏற்படுத்துவதான ஆழ்மனத்தின் ஆதிக்கவிசைத் தன்மைகள் ஆகியன யாவும் சமாதி பலத்தால் ஆட்டம் காட்டாவண்ணம் அடக்கியாளப்பட்டு விட்டன. உன் முன் உள்ள சவால்களை எதிர்கொள். உன் ஆன்மக் கிரியைகளில் வெற்றிபெறுவது நிச்சயம்.
சஞ்சயன் கூறியது:
11.35. இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன் நடுக்கத்துடன், கைகூப்பித் தலை குனிந்து அச்சத்துடன் தழுதழுத்தக் குரலில் கூறியதாவது:
உட்பொருள்:
இவ்விதமாக வெளிப்படுத்தபட்ட அறிவுடனான ஆத்மா, பதட்டத்துடனும் நிச்சயமின்றியும் பேருணர்விற்குத் தன் ஆணவத்தை அர்ப்பித்து தன் தியான ஒருமையை முனைப்பாகத் தொடர்ந்தவாறே தன் அறிதலை கூறலாயிற்று:
11.36. இப்பிரபஞ்சம் குதூகலத்துடன் பொருந்தும் விதத்தில் உன்னிடம் நன்றியுடையதாய் இருக்கிறது. அசுரகணங்கள் அச்சத்துடன் எல்லாத் திசைகளிலும் ஓடுகின்றனர். சுரகணங்களோ மதிப்புடன் உன்னை வணங்குகின்றனர்.
உட்பொருள்:
பிரபஞ்சப் படைப்புகள் எல்லாம் களிப்புடனும் நன்றியுடனும் இருப்பதே சரி. ஏனென்றால், உன்னதப் பேருணர்வு பிரபஞ்ச மற்றும் சொந்த விஷயங்களில் தப்பாது தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. உணர்வுத் திறவாகுதலின் எதிர்ப்பான சக்திகள் யாவும் விலக்கப்பட்டுவிட்டன. சிதறாத ஒருமுக பக்தியுடன் ஒளியூட்டம் பெற்ற பலவான ஆன்மாக்கள் உன்னதப் பேருணர்வைப் போற்றுகின்றன.
11.37. மேலானவனே, மூலப் படைப்பானவனே, கடவுளர்களில் முதல்வனாகிய பிரம்மாவை விட மேலானவனே, எல்லா தேவகணங்களையும் ஆளும் எல்லையற்ற பெருமானே! பிரபஞ்சத்திற்கு உறைவிடமே, உள்ளதாய் இல்லதாய் இருப்பவனே, இவ்விரண்டையும் கடந்தவனே, ஏன் உன்னை அவர்கள் புகழமாட்டார்கள்?
உட்பொருள்:
பிரபஞ்சத்தின் ஆதித் தோன்றல்களின் மூலமும், உலகைத் தோற்றுவிக்கும் கடவுளம்சத்திற்கும் மேலானதும், இயற்கைப் படைப்பினை ஆக்கி, மாற்றி, காத்து அழிக்கும் வல்லமை பெற்ற பிரபஞ்ச சக்திகளின் நித்ய அதிகாரி ஆகிய உன்னதப் பேருணர்வினை ஏன் அவைகள் போற்றாது? உன்னதப் பேருணர்வு என்றும் அழிவற்றது. அது உலகங்களைத் தோற்றுவிக்கும்போது இருப்பதாகவும், இயற்கையைக் கடந்துள்ள பேருணர்வின் அம்சத்தினால் அது இல்லாததெனவும் அறியப்படுகின்றது. அதனாலேயே பேருணர்வு விளங்கிக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.
11.38. நீதான் முற்றுமுதலான கடவுள். தொன்மைப் பேருணர்வு, பிரபஞ்சத்தின் புகலிடம். நீயே ஞாதா [அறிபவன்], ஞான விஷயம் [அறியப்படுபொருள்], ஞானசித்தி [அறிவுணர்வு]. வரம்பற்றவனே, இம் முழுப் பிரபஞ்சம் உன்னால்தான் நிரப்பப்பட்டுள்ளது.
உட்பொருள்:
இருப்புண்மை என்பது பேருணர்வின் முதல் அம்சம். காலம் கடந்தவன், பிரபஞ்ச வளர்போக்குகளின் செயல்தீரமுள்ள ஊக்கி. பிரபஞ்சத்தின் மூலமும் அதன் இருப்பிடமும் ஆவாய். அதுதான் ஞாதா [அறிபவன்], ஞான விஷயம் [அறியப்படுபொருள்], ஞானசித்தி [அறிவுணர்வு]. பிரபஞ்சமானது பேருணர்வால் வியாபிக்கப்பட்டுள்ளது. அதுவே பல வடிவங்களில் பல அம்சங்களில் தன்னை எண்ணற்ற வழிகளில் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்கிறது.
11.39. நீதான் வாயு, யமன், அக்னி, வருணன், சந்திரன், பிரஹ்மா, பிதாமஹா. உனக்கு ஆயிரம் நமஸ்காரங்கள். உனக்கு மீண்டும் மீண்டும் என் சிரசாஞ்சலிகள்!
உட்பொருள்:
இயற்கையிலும் தியானம் செய்யும் சாதகனிடமும் பிராண சக்தியாக [வாயு] பேருணர்வு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் உருமாற்றிக் [அக்னி] காத்து நிலைநிறுத்தும் [வருணன்] சுய கட்டுப்பாடாகவும் [யமன்], ஒளியைப் பிரதிபலிக்கும் எல்லாமாகவும் [சந்திரன்], நுண்ணறிவுடன் முடிவுகட்டுவதும் சர்வ வியாபகமாவும் உள்ள ஆதிக்கமாக [பிரம்மா], ஆன்மாக்களின் பிரபஞ்ச வெளிப்பாட்டின் வியக்தகதமாகுதலுக்குக் காரணமாகவும் பேருணர்வு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது [பிதாமஹா].
ஆன்மா உன்னதப் பேருணர்வை தொடர்ந்து மரியாதையுடன் வணங்குகிறது.
11.40. நான் உன்னை பின்பக்கமும் முன்பக்கமும் தலை தாழ்த்தி வணங்குகிறேன். உன்னை எல்லா பக்கமும் வணங்குகிறேன். வரம்பில்லா சக்தியே, கரையற்ற வல்லமையே, எல்லாவற்றையும் நீயே வியாபித்திருப்பதால் எல்லாமும் நீயே.
உட்பொருள்:
அன்பும், நன்றியுணர்ச்சியும் மிகுந்து வழியும் ஆன்மா சர்வவியாபியை சர்வசக்தனை, வரம்பற்ற உன்னதப் பேருணர்வை அங்கீகரிக்கிறது.
11.41. கிருஷ்ணரே, உன்னுடனான மனித நட்பு பாவனையினால், உன் பெருமை அறியாமல் அன்பினாலோ அலட்சியத்தாலோ தெரியாத்தனமாக ஏதேனும் உளறியிருந்தால்,
11.42. வேடிக்கையாக களங்கமின்றி உன்னை அவமதித்திருந்தாலும் விளையாட்டின்போதோ, உன் அருகில் அமர்ந்திருக்கும்போதோ, உணவருந்திக் கொண்டிருக்கும்போதோ, பிறரின் முன்போ, (அவ்வாறு செய்திருந்தால்) அளப்பரியவனே, உன் மன்னிப்பை வேண்டுகிறேன்.
உட்பொருள்:
உன்னதப் பேருணர்வே, எனக்குள்ளே குடிகொண்டும் அனைத்திற்கும் இருப்புண்மையாய் உள்ளவனே, நான் முன்பு உண்மை அறியாமல் என்ன பேசியிருந்தாலும் செய்திருந்தாலும் நான் மன்னிக்கப் படவேண்டுகிறேன்.
11.43. அசையும் அசையாத உலகின் தந்தை நீ. இந்த உலகத்தால் நீ மதிக்கப்படவேண்டும். மூவுகிலும் உன்னைப்போல் எதுவும் இல்லை. ஒப்பிடமுடியாத பிரகாசமுடைய பெருமை மிகுந்தவனே, உன்னை விட மிக்கார் யாரிருக்க முடியும்?
உரை:
இப்போது, உன்னதப் பேருணர்வு உலக வெளிப்பாட்டின் மூலம் என அறியப்பட்டு அது மரியாதையாக உள்ளவாறே அங்கீகரிக்கப் படுகிறது.
11.44. தெய்வமே, உன்முன் சிரம் தாழ்த்தி மன்னிப்பை வேண்டுகிறேன். மகனுக்குத் தந்தை போலவும் நண்பனுக்கு நண்பன் போலவும், காதலனுக்குக் காதலி போலவும் அன்பு காட்டு.
உரை:
ஆன்மா முன்பிருந்த குறுகிய அகந்தை உணர்வின் மிச்ச நினைவுகளையும், தொடர்ந்து பிரபஞ்சப் பேருணர்வில் நிலைப்பதற்காகச் சரணடையச செய்கிறது. இனி, உன்னதப் பேருணர்வின் பரப்பு தளத்தின் சிலிர்ப்பிலிருந்துத் தோன்றுவதாகிய வாழ்வூட்டப் பிரபஞ்சத்தின் ஆதிக்கத்தையும் செயல்களையும் பெறுவதற்கேற்ப ஆன்மா தகவமைகிறது.
11.45. கண்டறியாதன கண்ட பின்பும், மகிழ்ச்சியில் திளைக்கும் என் மனம் அதே சமயம் அஞ்சவும் செய்கிறது. இறைவனே, பிரபஞ்சத்தின் புகலிடமே, முன் பரிச்சயமான உன் அழகிய தோற்றத்தைக் காட்டும் கருணை கொள்.
உரை:
ஆன்மா அதன் முற்றிலுமகலாத சிறிது தன்னிச்சை இருப்பினால், இன்னும் காட்டப்பட என்ன என்ன இருக்கிறதோ என்பதில் உறுதிப்பாடின்றி, அதன் முந்தைய பழகிவிட்ட உறவிலேயே இறைமையை மீண்டும் காண விரும்புகிறது.
11.46. நான் உன்னை சங்கு சக்கரதாரியாக முன்பு நீ இருந்ததைப் போலவே பார்க்க விரும்புகிறேன். அனைத்து உருவங்களையும் உடையவனே, அதே முன்னிருந்த வடிவம் கொள்.
உரை:
பிரபஞ்ச உணர்வு ஏற்படுமுன் ஆன்மா அறிந்திருந்த அதன் உகப்பான குணங்களும், அங்கங்களுமுடைய வடிவத்திலேயே ஆன்மா இறைமையைக் காண விரும்புகிறது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது:
11.47. என் கருணையால், என் ஆற்றலால், இந்த உன்னத வடிவம் உனக்குக் காட்டப்பட்டது. உலகப் பொதுவான, வரம்பற்ற, ஆதியான, சிறப்பான என் வடிவம், உன்னைத் தவிர யாராலும் முன் பார்க்கப்படவில்லை.
உரை:
பேருணர்வால் வழங்கப்பட்ட கருணைச் செயலான இறைமையின் உன்னத வெளிப்பாடு அதனை ஏற்கும் தரத்திலிருந்த ஆன்மாவுக்கு வெளிப்பாடானது. மன நிலைகளின் பந்திக்கப்பட்ட தன்மையாலும்,, ஏற்புத் தரத்தின் மாறுபாடுகளாலும், ஒருவனின் விழிப்புணர்வுப் பரப்பின் குண சேஷ்டைகளாலும், (இறைமையின் உன்னத) வெளிப்படு அனுபவங்கள் அந்த அந்த ஆன்மாக்களுக்குப் பிரத்யேகமானவை. எனவே, இந்த ஆன்மா தவிர பிற ஆன்மாக்கள் இக்காட்சியைக் காணவில்லை என கூறப்படுகிறது.
11.48. உன்னைத் தவிர வேறு எவரும் சடங்குகளாலோ, மந்திர உச்சாடனைகளாலோ, யக்ஞங்களில் இடும் பொருட்களாலோ, பரிசுகளாலோ, தபஸ்களாலோ இந்தத் [பூலோக] தளத்தில் என்னை இவ்வாறு பார்க்க முடியாது.
உட்பொருள்:
வழக்கமான சடங்குகளாலோ, கிரந்தங்களில் இருந்து எடுத்துச் சொல்லிவிடுவதாலோ, இயந்திர கதமான அன்றாட வாழ்வின் செயல்கள் மற்றும் தியானப் பயிற்சிமுறைகளாலோ, ஏதோ ஒரு பலனை உத்தேசித்து வழங்கும் பரிசுப் பொருட்களாலோ, கடின உபாசனைகளாலோ இவ் வெளிப்பாடு நீ அனுபவித்த வகையில் உன்னை அல்லாது பிற யாராலும் அனுபவிக்கப் படமுடியாது.
11.49. ஆயாசப்படுத்தும் இந்த என் வடிவத்தைப் பார்த்து பயம் கொள்ளவோ குழப்பம் அடையவோ வேண்டாம். அச்சம் விடுத்து மீண்டும் மகிழ்வுடன் இரு. என் முன் வடிவத்தைப் பார்.
உட்பொருள்:
உன்னதப் பேருணர்வின் ஆயாசப்படுத்தும் இந்த வடிவத்தைப் பார்த்து பயம் கொள்ளவோ குழப்பம் அடையவோ வேண்டாம். . அச்சம் விடுத்து மீண்டும் மகிழ்வுடன் இரு. பேருணர்வின் முந்தைய உன் பழக்கமான வடிவத்தை இப்போது பார்.
சஞ்சயன் கூறியது.
11.50. இவ்வாறு அர்ஜுனனிடம் கூறிவிட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் தன் முந்தைய உருவத்தைக் காட்டினார். அவனுடைய அழகிய கருணை வடிவான தோற்றத்திற்குத் திரும்பி பயந்திருந்த அர்ஜுனனை ஆசுவாசப்படுத்தினார்.
உட்பொருள்:
ஆன்மாவுக்கு இவ்வாறு வெளிப்படுத்திவிட்டு, உன்னதப் பேருணர்வானது மீண்டும் மாறுதலுக்குட்படும் ஒரு சகஜ தன்மைகளைப் பெற்றதாக காணப்பட்டது. சாதகனை இது சாந்தப்படுத்தி அவனுடைய பதட்டத்தைத் தணிவித்தது.
அர்ஜுனன் கூறியது:
11.51. கிருஷ்ணா, உன்னுடைய அழகிய வடிவைக் காணும் நான் அமைதியுற்றேர். என் மனம் அதன் சகஜநிலைக்குத் திரும்பியது.
உட்பொருள்:
மனம் ஏற்கும் இறைமையின் சகஜவடிவத்தைக் கண்ட மனம் அடங்கி, சாதகன் இப்போது பாதுகாப்பானவனாக நம்பிக்கையுள்ளவனாக உணர்கிறான்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது:
11.52. நீ கண்ட என் இந்த வடிவத்தைக் காணுதல் அரிது. தேவதேவதைகளுமே இக்காட்சி காண ஏங்குகின்றன.
உட்பொருள்:
பேருணர்வின் சுய பிரகடன பிரபஞ்சத் தோற்றம் சாதாரண சாதகனால் காணப்பட முடியாது. ஞானதர்சனத்தை நெருங்கிய ஆன்மாக்களும் இக்காட்சியைக் கண்டனுபவிக்க ஏங்குகின்றனர்.
11.53. கிரந்த வாசிப்பினாலோ, தவத்தாலோ, நன்கொடைகளாலோ, அல்லது சடங்காச்சாரங்களாலோ நீ என்னைப் பார்த்த இந்த வடிவத்தில் காணமுடியாது.
உட்பொருள்:
பேருணர்வின் படைப்புத் தன்மைகளின் இந்த சுயப் பிரகடமானது, வெறுமனே கிரந்தம் வாசிப்பதினாலோ, மனமாற்றம் ஏற்படச் செய்யும் சீரொழுங்குப் பயிற்சிகளாலோ, தானக் கொடைகளாலோ, அல்லது வெளிப்பகட்டான சடங்காச்சாரத்தினாலோ வெளிப்படுவதில்லை.
11.54. அர்ஜுனனே, என் இவ்வடிவத்தை அறிவதோ, பார்ப்பதோ, உள்ளனுபவமாவதோ உறுதியான ஆழ்ந்த பக்தியால் மட்டுமே.
உட்பொருள்:
பேருணர்வின் படைப்புத் தன்மைகளை அறிவதோ, பார்ப்பதோ, உள்ளனுபவமாவதோ உறுதியான ஆழ்ந்த பக்தியால் மட்டுமே.
11.55. எந்தச் சாதகன் எல்லாச் செயல்களையும் என்னைக் கருதிச் செய்கிறானோ, எவன் என்னை உன்னதச் சொரூபமாக அறிகிறானோ, எல்லா உலகப்பற்றுகளையும் விட்டு என்னை பக்தி செய்கிறானோ, எவன் யாதொரு படைப்பின் மீதும் இழிவெண்ணங்களை அறவே விட்டவனோ, அவன் என்னையே அடைகிறான்.
உட்பொருள்:
பரிணாமத்திற்கு அர்ப்பண புத்தியுடன் செயலாற்றுபவன், உன்னதப் பேருணர்வினை முழுமை என அறிந்தவன், இறையனுபூதத்திற்குப் பக்தி சிரத்தை மிகுந்தவன், உலகப்பற்றுகளை முற்றிலும் துறந்தவன், பிற எந்த ஆன்மா மீதும் இழிவெண்ணம் விட்டவன், உண்மைக்கு விழிப்பாகிறான்.
உரை:
இந்த அத்தியாயத்தில் இடம்பெற்ற சாதகனின் மன உணர்ச்சித் ததும்பல்கள், எதனைக் குறிக்கிறதென்றால் அவன் இன்னும் பிரபஞ்ச உணர்வுண்மை உள்ளனுபவமாகுதல் விஷயத்தில் இன்னும் ஆகி ஆகாத ஒரு அபக்குவ கதியில் இருக்கிறான் என்பதே. மனப் பிம்பங்கள், மரபாயமைந்த நம்பிக்கைகளுடன் பிரபஞ்ச தர்சனத்தைத் தன் சுய இச்சைப் போக்குகளுடன் இணைத்து அறிவு விளக்கம் பெறுகிறான். ஆயினும், இந்த அனுபவம் சாதகனை மேலும் சரியான பாதையில் ஊக்கம்பெற்று முன்னேற உதவுகின்றது.
முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், விஸ்வரூப தர்சன யோகம் என மூலத்திலும், பேரண்டவுருக் காட்சி யோகம் என இவ்வுரையிலும் தலைப்பிடப்பட்ட 11 ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.
Send Your Comments to phdsiva@mccrf.org