W45. என் கனவுகளின் சோலைக்கு வா. (Whispers from Eternity - Tamil & English)
45. என் கனவுகளின் சோலைக்கு வா.
என் கனவுகளின் சோலையில் பல கனவு-மலர்கள் பூத்தன. என் கற்பனையில் மிக அரிய பூக்கள் எல்லாம் அரும்பின. என் கனவுகளின் கதகதப்பில் இன்னம் விரியாத மொட்டுக்களான நிலவுலக விருப்பங்கள் துணிவுடன் தங்களின் பூர்த்தியடைவெனும் இதழ்களை விரித்தன. மங்கிய வெளிச்சத்தில், நான் மறந்துபோன என் அன்புக்குரியவர்களின் முகங்களை ஒற்று பார்த்தேன்; வெகுகாலத்திற்கு முன் மரித்து மனநிலத்தில் ஆழமாகப் புதைக்கப்பட்ட நேச உணர்வுகள் பிரகாசமான உடைகளை உடுத்திக்கொண்டு பீறிட்டுக் கிளம்பின. என் கனவு-தேவதைகளின் ஏவலுக்கு, என் எல்லா அனுபவங்களும் புனர்ஜென்மம் பெறுவதை நான் கண்டேன்.
என் கனவுகளின் மற்றும் எண்ணற்ற கனவுலகங்களின் அரசே, உன் கனவு-கேலக்ஸிகளில் (பலகோடி விண்மீன்களின் கூட்டத் தொகுப்பு) , நான் ஒரு சின்னஞ்சிறிய விண்மீனாய் இருக்க விரும்புகிறேன்; அல்லது உன் அன்புக்குரிய சிறு கனவு-விண்மீனாக உன் பிரபஞ்ச கனவுகளின் மன்றத்தில் நான் உன்னருகில் மின்ன விழைகிறேன்; அல்லது, அப்படி உன் கனவு மணிமாலையில் வாழ்க்கையின் ஒரு சிறு விண்மீன்-மணியாக நான் ஆகமுடியாவிடில், உன் கனவுகளின் நெஞ்சத்தில் எனக்கு எளிமையான ஒரு இடத்தைக் கொடு.
உன் இருதய வாசஸ்தலத்தில், நான் புனிதமான வாழ்க்கைக் கனவுகள் உதயமாவதைக் காண்பேனாக. கனவுகளை நெய்வதில் தலைசிறந்த நிபுணனே, உன் நிரந்தரக் கனவுகளின் கோயிலை நோக்கிப் பயணிக்கும் உன் கனவுக் கோலங்களை ரசிக்கும் எல்லா அன்பர்களும் நடந்து செல்லுமாறு விரிக்க, பல வண்ணங்களில் கனவுக் கம்பளங்களை உற்பத்தி செய்ய எனக்குக் கற்றுக்கொடு. மேலும், திவ்யதரிசனக் காட்சிதரும் உன்னை வழிபடும் தேவர்கள் குழாத்துடன் நானும் சேர்வேனாக. அவர்களுடன் சேர்ந்து, புதிதாக உதித்த உன்னைப் பற்றிய என் கனவுகளின் மலர்க்கொத்தை நான் உன் சந்நிதியில் சமர்ப்பிப்பேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
45 Come into the Garden of my Dreams.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org