W216. பரஞ்ஜோதித் தாமரையே, உன் இதழ்ப் பாதங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்! (Whispers from Eternity - Tamil & English)
216. பரஞ்ஜோதித் தாமரையே, உன் இதழ்ப் பாதங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்!
பரஞ்ஜோதித் தாமரையே, உன் இதழ்ப் பாதங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்! உன் பாதத்தில் என் இதயத்தை முழுமையாகச் சமர்ப்பிக்கின்றேன். உன் பாதத்தில் என் ஆன்மாவை முழுமையாகச் சமர்ப்பிக்கின்றேன். சர்வவியாபகமான உன் பாதத்தில் என் அன்பின் மணமான கஸ்தூரி கந்தத்தை முழுவதுமாகச் சமர்ப்பிக்கின்றேன்.
அருமையான அருளாளனே, என் இதயத்தின் இருள்கவ்விய மூலைகளில் உன் ஆனந்த கானத்தை எப்போதும் இசைப்பாயாக.
நான் முழுதுமாக உன்னவனே! நான் என்றென்றும் உன்னவனாகவே இருப்பேன்! என் மறவா நினைவின் பொற்சிமிழுக்குள் உனது காக்கும் அன்பினை நான் எப்போதும் வைத்துக் கொண்டிருப்பதால், எல்லா பயங்கரங்களையும் கண்டு நான் எள்ளி நகைப்பேன்.
என் அனைத்து ஆசைகளையும், உலக சுகங்களையும் உன் வேள்வித்தீயில் இட்டு, உன்மேலுள்ள என் பக்திக்கு காணிக்கையாக சமர்ப்பிப்பேன். என் கற்பனையின் நிழல்கள் மற்றும் அச்சங்கள் அனைத்தையும், உன் அருட்ஜோதியில் சுட்டெரிப்பேன். உன் அருட்ஜோதியில் நான் எப்போதும் விழித்திருந்து, உன் அரிய, சர்வவியாபக முகத்தை என் உன்னிப்பான கண்களால் யுகாந்தரமாக என்றும் நிரந்தரமாய் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.
உன் அன்பு என் பக்தி கோயிலில் எப்போதும் பிரகாசிக்கட்டும், அதன்மூலம் நான் எல்லா இதயங்களிலும் உன் அன்பினை விழிப்புறச் செய்வேனாக.
கடவுளே! என் ஆன்மாவை உன் கோயிலாக்கிக் கொள்! என் இதயத்தை உன் பீடமாக்கிக் கொள்! என் அன்பினை உன் இல்லமாக்கிக் கொள்!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
216 A million salutations at Thy petaled feet, O Lotus of Light.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org