13. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் - பகவத்கீதை - The Eternal Way
பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).
பகவத் கீதை பதிமூன்றாம் அத்தியாயம்
13. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
(செயல்களத்தையும் செயல்கள அறிவோனையும் பகுத்தறியும் யோகம்)
இங்கு முதல் ஸ்லோகத்திற்கு எண் இடப்படவில்லை. ஏனெனில், எல்லா பகவத் கீதை மூல நூலிலும் இந்த ஸ்லோகம் இருப்பதில்லை.
அர்ஜுனன் கூறியது.
ஜட இயற்கை மற்றும் இறைமை, செயல்களம் மற்றும் செயல் களத்தை அறிவோன், ஞானம் மற்றும் ஞாதா ஆகியனவற்றைப் பற்றி அறிய விரும்புகிறேன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதில் கூறியது.
13.1. இந்த உடம்புதான் செயல்களம். இதில் கற்றுத்தேர்ந்தோர் கூறுவதென்னவென்றால் இதனை அறிபவனே தன் செயல்களத்தை அறிவோன் ஆவான்.
உட்பொருள்:
உடம்பே செயல்களமாக அறிவிக்கப்படுகிறது. [ஏனென்றால், சாதகன் முக்தி பெறுவதற்கான முயற்சிகளை இங்குதான் செய்கிறான்.] இவ்விஷயங்களில் கற்றுத்தேர்ந்தோர், இதனை அறிபவனைத்தான், செயல்களத்தை அறிவோனாகப் பார்க்கின்றனர்.
உரை:
முதல் அத்தியாயத்தில், தன்னலமூட்டும் மன இயல்புகள் ஆன்ம குணங்களுடனான புனித மனோநிலைகளுடன் “தர்ம—அதர்மப் போர்க் களத்தில்” எதிர்ப்படுகின்றன எனப் பார்த்தோம். இப்போது, இந்த 13ம் அத்தியாயத்தில், நம் எல்லோரிலும் உறையும் இறையாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணர் பகர்வதான முதல் வார்த்தைகள், உடம்பே ஆன்ம வளர்ச்சி நடைபெறும் களம் என விவரிக்கிறது. உடலாகிய கட்டுக்கோப்பில், சூட்சும மற்றும் காரண உடம்பும் மனமும் அடக்கம். ஆன்மீக வளர்ச்சியானது, ஆன்மா உடலில் இருந்து பிரிந்த பின்பும் சூட்சும மற்றும் காரண தளங்களில், அதற்கேற்ப சூட்சும மற்றும் காரண தேகங்களில் தொடருமாகையால் அத்தேகங்களே ஆன்ம வளர்மாற்றங்களுக்கும், உணர்வு ஒளிமயமாவதற்கும் களமாகச் சொல்லப்படுகிறது.
13.2. எல்லா க்ஷேத்ரத்தின் க்ஷேத்ரக்ஞன் நான் என அறி. க்ஷேத்ரமும் க்ஷேத்ரக்ஞனும் ஆகிய இவை பற்றிய அறிவே மெய்யறிவு என நான் கருதுகிறேன்.
உட்பொருள்:
சர்வ வியாபகத் தன்மையால் எல்லா நிகழ்வுகளுக்கும் நிகழ்விடமாக இருக்கும் இறைமைதான் க்ஷேத்ரக்ஞன் என அறி. கர்மபந்தங்களிலிருந்து விடுவிக்கும் அறிவு என்பது, எல்லா நிகழ்வுகளின் நிகழ்விடம் பற்றிய அறிவையும், நிகழ்வுகளை நோக்குபவரும் அறிபவருமான பேருணர்வு பற்றிய அறிவையும் உள்ளடக்கியது.
உரை:
சர்வ வியாபகப் பேருணர்வு தன்னையும் தான் வெளிப்படும் களத்தையும் அறிகிறது. முழு ஒளியூட்டம் பெற்றவனுக்கு, சகலமாயுள்ள பேருணர்வு அதன் பிரபஞ்ச வெளித்தோன்று அம்சங்கள் மற்றும் ஆக்கங்கள் பிடிபடுகின்றன. இதனால், ஆன்மாவினை மாயையிலிருந்து விடுவிக்கும் உண்மையினை அறிபவனாகச் சொல்லப்படுகிறான். அக்ஞானம் முழுமையாக நீங்கும்வரை ஒளியூட்டம் நிறைவுபெறாது.
13.3. க்ஷேத்ரம் எது? அதன் தன்மைகள் மற்றும் மாற்றங்கள் என்ன?, எதிலிருந்து அது வெளித்தோன்றுகிறது? க்ஷேத்ரக்ஞன் யார்? அவனுடைய ஆற்றல்கள் என்ன? என என்னிடமிருந்து சுருக்கமாகக் கேட்டுத் தெரிந்துகொள்.
உட்பொருள்:
க்ஷேத்ரமாம் தேகத்தின் தன்மைகள், மாற்றங்கள், அதன் தோன்றுமூலம், அது வெளித்தோன்றும் விதம், அந்த தேகக்ஷேத்ரத்தை அறியும் க்ஷேத்ரஞனின் அடையாளம் மற்றும் ஆற்றல் ஆகியனவும் விளங்கும் ஞானத் திறவாதலுக்குச் சித்தப்படு.
13.4. ஞானிகள் பல பாசுரங்களில் இதனைப் பற்றி பலவழிகளில் பாடியுள்ளனர். பூரணத்தைப் பற்றிய அறிவார்ந்த விவரணங்களையும் நல்கியுள்ளனர்.
உட்பொருள்:
ஒளியூட்டம் பெற்ற ஆன்மாக்கள், பொருள்ஞான மற்றும் மெய்ஞ்ஞான விஷயங்களைப் பற்றியும் உன்னத இருப்புண்மையின் அறிவார்ந்த விவரணங்கள் பற்றியும், அவர்களின் உண்மை விளக்கத்தைத் தெளிவாக விவரித்துள்ளனர்.
உரை:
பேருணர்வின் ஞானம் சுயப் பிரகடனம் ஆன ஞானிகளின் வார்த்தைகளும் அவ்வார்த்தைகளின் வித விதமான வெளிப்பாடுகளும், நமக்கு ஆன்மீகப் பாதையில் ஒளியூட்டி நம் சுய விளக்கத்திற்குத் தூண்டுதலாய் அமைகின்றன. பிறர் அறிய முடிவதை நாமும் அறியலாம். நாம் ஆன்மஞான அனுபூதிசீலர்களாகவும் ஒளியூட்டம் பெற்றவர்களாகவும் ஆக வேண்டுமென்றால், நாமே இறைமைக்கு விழிப்படையவேண்டும். பிறரின் அறிவு பிறரை விடுவிப்பது போல, நம் அறிவு தான் நம்மை விடுவிக்கும்.
13.5. பஞ்ச பூதங்கள், அஹங்காரம், நுண்ணறிவு, வெளித்தோன்றா சாட்சி, பத்து கரணங்கள், மனம், புலன் விஷயங்கள்,
உரை:
இந்த ஸ்லோகம், பிரபஞ்ச வெளிப்பாட்டின் 24 தத்துவங்களை தேகக்ஷேத்ரத்தின் பரவுமூலங்களாக வர்ணிக்கிறது.
- பஞ்ச பூதங்கள் என்பவை ---
• ஆகாயம் -- (பிரபஞ்ச ஆற்றல்களுக்கு இடம் கொடுப்பது)
• காற்று - (பிராணன்)
• நெருப்பு, --(மாறுதலடையச் செய்யும் சாரம்)
• நீர் --(திரவம்)
• நிலம் - (திடம்)
- அஹங்காரம் என்பது தன்னால் தானிருப்பு எனும் பிம்பப் புலப்பாடு
- நுண்ணறிவு அல்லது புத்தி என்பது நிர்ணயிக்கும் தன்மை அல்லது விவேகம்
- வெளித்தோன்றா சாட்சி என்பது தேக மற்றும் மனத்துடன் உறவு கொண்டிருக்கும் ஆத்மா. இதுவே, பிரபஞ்ச வெளிப்பாட்டில், சர்வ வியாபகப் பேருணர்வு
- பத்து கரணங்கள் என்பவை, பார்த்தல், கேட்டல், ருசித்தல், நுகர்தல், தொடுதல். பேச்சு, செய்கை, நடத்தல், நீக்கல், சேர்த்தல் எனும் புத்தாக்கம் அல்லது படைப்பாக்கம்.
- மனம் என்பது தகவல்களைப் புடம் போடுவது.
- பார்த்தல், கேட்டல், ருசித்தல், நுகர்தல், தொடுதல் ஆகியவற்றுக்கு இலக்கு பொருட்களே புலன் விஷயங்கள்.
13.6. ராகம் (ஆசை), துவேஷம் (வெறுப்பு), இன்பதுன்பம், பருவுருவம் மற்றும் அறிவின் இயக்கம், நிலைத்தன்மை, என்பன தேகக் களம் மற்றும் அதன் மாற்றங்கள் பற்றிய சுருக்கமான விவரம்.
உரை:
மனோமய உருக்களும் பொருளாகச் சொல்லப்படுவதன் காரணம் அவைகளையும் அறியப்படுபொருளாக அறியமுடிவதால்தான். ராகம் (ஆசை), துவேஷம் (வெறுப்பு), இன்பதுன்பம் ஆகியவற்றை நாம் அறிவோம். நம் நுண்ணறிவினைப் பயன்படுத்துவதையும், எடுத்த முடிவில் நிலைப்பாட்டுடன் இருப்பதையும் அறிந்து செய்கிறோம். நாம் உடல்-மன-ஆன்மா இருப்பு. ஆன்மா, உடலளவு மனதளவுச் செயல்களின் சாட்சியே. ஆன்ம விழிப்பில் நாம் இல்லாத போது நம் ஆன்மாவானது உடலுடனும் மனதுடனும் அடையாளப்படுத்தப் படுகிறது. ஆன்மீக முன்னேற்றத்தின் ஆரம்பப் படிநிலை எதுவென்றால், நம்மை ஆன்ம வியக்தி மற்றும் உடல் மனச் சாதனங்களைப் பயன்படுத்துவோர் என இவ்விரண்டையும் விவேகத்தால் வேறுபடுத்தி அறியும் பகுத்தறிவே. ஆணவமையத்தில் நம்மை ஆட்படுத்தி இறைமையுடன் உறவற்ற ஒரு படைப்புக் காரியமாக நம்மைத் தவறாக நம்பிக்கொண்டிருக்கும் வரை இந்தப் பகுத்தறிவு சித்திக்காது.
13.7. கர்வமின்மை, போலித்தனமின்மை, அகிம்சை, பொறுமை, நேர்மை, ஆசார்ய கைங்கர்யம், தூய்மை, நிலைத்தன்மை, சுய கட்டுப்பாடு,
உரை:
இப்போது, ஆன்மவள ஊக்க மனோபாவங்கள், மற்றும் நடத்தைகள் விவரிக்கப்படுகின்றன.
· சுயத்தை ஊட்டப்படுத்துகை இல்லை என்பதால் கர்வமுமின்மை
· உண்மையாயிருத்தல் பின்பற்றுகையால் போலித்தனம் இல்லை
· சரியானப் புரிதல் இயல்பானால் துன்புறுத்தாமைதான் நம் நடத்தை
· ஆன்மதிருப்தியடைந்தால் பொறுமை சுலபம்.
· அறிவோடு இயங்கினால் நேர்மை இயல்பானது.
· ஆசார்ய கைங்கர்யம் என்றால் அவருடைய பேச்சைக் கவனித்து அதன்படி ஒழுகுதல். ஒருவேளை அந்தப் பேச்சு எழுதப்பட்டதாகவோ, பேசினதாகவோ தன் உள்ளிருந்தே வருவதாகவோ இருக்கக்கூடும்.
· உடலிலிருந்தும், மனதிலிருந்தும் அவைகளைக் கட்டுப்படுத்தும் பலவந்தங்கள் மறைந்தால் தூய்மை நிலவும்
· நிலைத்தன்மை என்பது அலைபாயா மனத்துடன் இறைமைக்கு சிந்தனையை பிசிறின்றி ஓடவிடுதலும், முழுநலத்திற்கும் ஆன்ம முன்னேற்றத்திற்கும் தேவையான செயல்முறைகளும் கடமைப்பூர்வ சடங்குகளும் நிறைவேற்றுதல்
· ஆன்ம விழிப்பில் தொடர்ந்து நிலைபெறுதலே சுய கட்டுப்பாடு.
13.8. புலன் விஷயங்களுக்கு ஈடுபாடு காட்டாமை, ஆணவமின்மை, துர்பாக்கியங்களான ஜனன-மரணங்கள், வயோதிகம், நோய், வலி ஆகியவனவற்றைப் பற்றிய சரியான கண்ணோட்டம்,
உரை:
· புலன் விஷயங்களுக்கு ஈடுபாடு காட்டாமை (பார்வை, ஒலி, பொருட்கள், புலன்படு விஷயங்கள் ஆகியன) என்றால் அவைகளுடன் பற்றற்று அவசியமாகில் உறவு கொள்ளுதல்
· நாம் இறையொளியின் ஒரு கீற்று எனும் தெளிவு பெற்றிருத்தலே ஆணவமின்மை. அதாவது, நாம் எவ்விதத்திலும் விசேஷமானவனல்ல என்றும் நாம் சிறப்பு அங்கீகாரம் செய்யப்படவேண்டும் எனக் கருதாமையும் ஆம்.
· துர்பாக்கியங்களான ஜனன-மரணங்கள், வயோதிகம், நோய், வலி ஆகியவனவற்றைப் பற்றிய சரியான கண்ணோட்டம் இருந்தால் அது நம்மை அவைகளின் தோன்றுமூலத்தை அறிந்து, அவைகளைக் களைதல் எவ்வாறு எனக் கற்று, அவைகளிலிருந்து நீங்கவும் மற்றும் உயர் சாத்தியங்களுக்கு ஏறவும் நம்மை ஊக்குவிக்கும்.
13.9. பற்றின்மை, குடும்ப உறவுகளுக்கும் தன் இருப்பிடத்திற்கும் ஏக்கமின்மை, விருப்ப மற்றும் வெறுப்புச் செயல்களை நிலைத்த புத்தியுடன் சமதையான ஏற்பு,
உரை:
· ஆன்மாவில் நிலைத்திருத்தலாலும், சரியான புரிதலாலும் ஆணவமின்மை எளிது. அப்போது வாழ்வின் எல்லா அம்சங்களையும் உறவுகளையும் நன்கு தேவையான அளவு, சுதந்திரமாக அனுபவிப்போம்.
· குடும்ப உறவுகளுக்கு ஏங்குதல் இல்லாமை என்பது நாம் அவர்களிடம் சார்பு உறவு மற்றும் கட்டுப்படுத்தும் நடத்தை கொள்ளாமையால் எளிது. அதாவது, அன்பு மற்றும் ஆதரவான உறவு வைத்துக் கொண்டே பிறரையும் அவர்கள் சுதந்திரமாக வளர்வதற்கும், தன் எண்ணங்களை வெளிப்படுத்தி வாழவும், அவர்களின் நோக்கங்கள் ஈடேற அனுமதித்தும் இருத்தல்.
· தன் இருப்பிடத்திற்கு ஏங்குதல் இல்லாமை என்பது நம் வீடு மற்றும் சமுதாயம் நமக்குப் பழக்கமாகி அவற்றின்மேல் பற்று ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது என்பதோடு நாம் நினைவில் கொள்ளவேண்டியது இங்கு என்னவென்றால், அவைகள் தற்காலிகமானவை என்பதும் நாம் எங்கிருந்தாலும் இறைமையின் சன்னிதியில் வாழ்பவர்கள் எனும் நினைவுடன் இருத்தலே ஆகும்.
· விருப்பு மற்றும் வெறுப்புச் செயல்களை நிலைத்த புத்தியுடன் சமதையான ஏற்பினால், அறிவார்த்தமான முடிவுகளை எடுப்பதற்கும், புறச் சூழலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் நமக்கு சுதந்திரம் அளிக்கிறது.
13.10. முனைவுபட்ட யோகாப்பியாசத்துடன் பிசிறற்ற பக்தி, தனிமையை நாடுதல், கூட்டத்தை விரும்பாமை,
உட்பொருள்:
மன ஒருமை மற்றும் சமாதியில், அலைபாயாத இறைபக்தி, உள்முகமாய் ஆன்ம திருப்தியுடன் எப்போதும் இருத்தல், பொய்யான வெளிப்போக்கான சமூக உறவுகளையும் மற்றும் அபிப்பிராயங்களையும் நாடாமை,
உரை:
முக்கியமானதிற்கு முதன்மை கொடுத்துவிட்டால், பிற அனைத்தும் நம் ஆதரவுக்கு ஆகும். முற்றுமுதலானது எதுவென்றால், தியான ஒருமையிலும் உயர் உணர்விலும் இறைமையை அறிந்து உணர்வதற்குத் தன்னை முழுதுமாக அர்ப்பித்துக் கொள்வதை வழக்கமாகக் கொள்வது.
ஆன்மச் சரணாலயமே நாம் வசிக்கவேண்டிய தனிமையான இடம். ஆழ்ந்த தியானத்தை விரும்பி அனுபவித்தலையும், பிற செயல்களிலும் உறவுகளுடனும் கலப்பில் நாம் இருக்கும் போதும் ஆன்மமைய வசத்தில் இருத்தலையும் கற்று இதனைச் சாதிக்கலாம்.
தங்களின் சுயநலத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக கூடுபவர்களையும், புலன் திருப்தி ஆசைக்கு அடிமைப்பட்டு சேர்ந்து களிப்போரையும், நம் ஆன்ம திருப்தி குணத்தால் நாம் விரும்ப மாட்டோம்.
13.11. முழுமை மீதான அறிவில் நிலைத்தன்மை, முடிவான உண்மை மீதான உள்காட்சி – இவைகள்தான் மெய்யறிவு. அறியாமை இதன் எதிர்நிலை.
உரை:
மாறாத தூய பேருணர்வு வெளியின் இருப்பும், இயல்பும் சாதகனின் நோக்கில் எப்போதும் ஸ்திரமாக இருக்க வேண்டும். உள்ளார்ந்த ஆன்ம ஞானத்தின் பூர்த்தி என்பது முடிவான உண்மையை உள்ளபடி தெளிவாகக் காணலே. அதுதான் ஒளியூட்டம் பெற்றதன் நிரூபணம். பூர்த்தியாகாத புரிதல் பழுதானதும் பொய்யானதும் ஆகும்.
13.12. அழிவற்ற நித்யத்தை உணர எதை அறிய வேண்டுமோ அதை நான் அறிவிக்கிறேன். அது பூரணம் எனப்படுகிறது, அது இருப்பதுமன்று இல்லாததுமன்று என வருணிக்கப்படுகிறது.
உட்பொருள்:
ஆன்மாவின் உட்கிடையான நுண்ணறிவு எதை அறிய வேண்டுமோ அதையும், அதன் நித்யத்தை அறியும் அறிவையும் கொடுக்கிறது. அதுதான் காலவரம்பற்ற மாறாத பூரணத் தூயப்பேருணர்வு வெளி எனவும் ஆனால் அதனை விவரிக்கவொண்ணாதது எனவும் அனுபூதிமான்கள் அறிவிக்கிறார்கள்.
உரை:
பூரணத் தூயப்பேருணர்வு வெளி விவரிக்கவொண்ணாதது என்றாலும் அதுவே ஆன்மாவிற்கு ஆதாரமான சத்யம் என்பதால் அதனை நேரடியாக அனுபவிக்க முடியும். எண்ணங்களும் உணர்வுகளும் அமைதியாகி, கவனத்தை நம் அடியாழமான இருப்பு மையத்திற்குத் திருப்பி, நாம் விழிப்புணர்வுச் சுதாரிப்புடன் இருந்தால், எஞ்சி நிற்பது நம் நிஜ சொரூபமான தூயப் பேருணர்வு அனுபவமே. இதனைச் செயற்கையாக உருவாக்கவோ அடையவோ முடியாது. இதற்கு முற்றிலும் திறவாகி அனுபவித்தலே முடியும். நம் இருப்பிற்கு ஆதார உண்மை இதுவென்பதால், இது நம் அடியாழ உட்கிடையான இருப்பு என்பதைத் தவிர வேறல்ல.
13.13. எங்கும் கைகள், பாதங்கள், கண்கள், தலைகள், முகங்கள், காதுகள் என சர்வவியாபகமாக உள்ள பூரணம், எல்லா வெளிப்பாடுகளுடனும் அது எப்போதும் அப்படியே உள்ளது.
உட்பொருள்:
சர்வ வியாபக, வரம்பற்ற, தூய பூரணப் பேருணர்வின் வெளி எங்கும் பரவியதாய் பிரபஞ்ச மொத்தத்தையும் தன்னுள்ளே உள்ளடக்கியதாய் உள்ளது.
உரை:
தூயப் பேருணர்வானது, வெளிப்பாடு அடைந்த இயற்கையின் நுண்ணுருவின் அடியாழத்திலும் உள்ளது. அதனைத் தேடி நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. அதற்கு விழிப்படைய நாம் செய்யும் அனைத்தும் உடலையும் மனதையும் தூயதாக்கித் தடைகளை நீக்கிவிடுகிறது. நம் முழு நலத்தையும் ஆன்ம வளர்ச்சியையும் நோக்கி நாம் செய்யும் ஆக்கபூர்வ வேலைகள் கிரியைகள் எனப்படும். உண்மை இருப்பை அறிய எவ்வளவு தடைகள் நீக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு, நாம் பிசிறின்றி உண்மையை அறிவதும் அனுபவிப்பதும் நடக்கும். இத்தகைய அறிவும் அனுபவமும் தான் அனுபூதி என்பது.
13.14. அது புலன்களுடையது போன்ற தன்மை காண்பித்தாலும் அது புலன்களற்றது. பந்திக்கப்படாமல் இருந்தும் அனைத்தையும் காப்பது. ஜட இயற்கையின் தன்மைகளற்றும் அவைகளை அனுபவிப்பது.
உட்பொருள்:
வெளித்தோன்றிய இயற்கையுடன் ஒப்பிட்டு நோக்கினால், உன்னதப் பேருணர்வு அது எதனை வாழ்விக்கிறதோ அதனுடைய தன்மைகளைக் கொண்டிருப்பது போல் தோன்றினாலும் அது குணங்கள் முதலான எதனுடனும் ஒட்டாதது, ஆனாலும் அவைகளை இயக்கிவைப்பது.
உரை:
குணங்கள் மூல இயற்கையைச் சார்ந்தது, அவைகள் தூயப் பேருணர்வு வெளிக்குள் இல்லை. தூயப் பேருணர்வின் வெளியிலிருந்து இறைமுதலின் வெளித் தோன்றி, ஓம் ஸ்வர ஓட்டத்தின் வாயிலாக குணங்களை, ஜட இயற்கையின் இயல்புகளைத் தோற்றுவிக்கின்றது.
13.15. அது நுண்மையான ஒன்று என்பதால், அசையும் அசையா வஸ்துக்களின் உள்ளடக்கமும் வெளியுறையும் அதுவாக இருந்து, புரிபடமுடியாததாக இருக்கும். ஒரு சேர அது அருகிலும் தொலைவிலும் இருப்பதாகும்.
உட்பொருள்:
உன்னதப் பேருணர்வு நுண்மையான ஒன்று என்பதால் எல்லாப் படைப்புகளின் உள்ளும் புறமும் அதுவாக இருந்தாலும் அவைகளால் புரிந்துகொள்ள முடியாதது. அது சர்வ வியாபி.
13.16. பிரிவுபடாததென்றாலும் பிரிவுபட்டது போலுள்ளது. எல்லாப் படைப்புக்களையும் காப்பது, எல்லாவற்றையும் அழித்து மீண்டும் புதிதாக தோற்றுவிப்பது.
உட்பொருள்:
ஜட இயற்கையின் புற வயத் தோற்றங்களுடன் தொடர்பின்றி உன்னதப் பேருணர்வு என்றும் பூரணமானது. மனித மற்றும் பிற படைப்புக்களின் ஆன்மாக்களையும் காப்பது. அவைகளை உள்வாங்கி புதியனவற்றைப் படைக்கிறது.
உரை:
ஆன்மாக்கள், தன்னிச்சை இருப்பே தானென்னும் மாயப் புரிதலிலிருந்து தன் (பிறழ்) பார்வையை இறுதியில் நீக்கிக் கொள்கிறது. அப்பொழுது, ஆணவம் தான் அழிகின்றதே அன்றி பூரணம் எப்போதும் போலவே இருக்கும். பேருணர்வானது ஆன்மா எனும் வியக்தமாகையும், தன்னிச்சை இருப்பைத் தான் என புரிந்துகொள்ளும் ஆணவம் கரைந்து போவதும் (ஆகிய இவை இரண்டும்) நிரந்தரம். நம் பிரபஞ்சத்திலும் பிறவற்றிலும் உள்ள ஆன்மாக்கள் பலப்பல.
13.17. அது இருளுக்கு அப்பால் இருப்பதான ஒளிகளின் ஒளி. அது ஞானம். அது ஞேயம் (ஞானத்தினால் அறியப்படுபொருள்), அது ஞானகம்யம் (ஞானத்தினால் அடையப்படுவது). அது எல்லாருடைய இதயத்தில் குடிகொண்டுள்ளது.
உட்பொருள்:
உன்னதப் பேருணர்வு மூல இயற்கையின் பரப்பினைக் கடந்து ஒளிரும் உண்மை ஒளி. அது முற்றுமுடிந்த ஞானம். அனைத்து ஞானத்தின் மூலம். அதுதான் உள்ளிருந்து சுரக்கும் ஞானமாக வெளித்தோன்றி அனுபவமாவது. அது எல்லா ஆன்மாக்களின் தன்மையாகயிருக்கும் உள்வஸ்து.
13.18. இவ்வாறு க்ஷேத்ரமும், ஞானமும், ஞேயமும் (அறியப்படுவது) ஆகியன சுருக்கமாகச் சொல்லப்பட்டன. இதனைப் புரிந்துகொள்ளும் என் பக்தன், என் இருப்புநிலைக்கு வருகிறான்.
உட்பொருள்:
இவ்வாறு அறிவிற்கு க்ஷேத்ரமான உடம்பு, அறிவின் லட்சணம், மற்றும் அறிவின் மூலம் -- ஆகியன சுருக்கமாகக் கூறப்பட்டன. இதனை உள்ளவாறே புரிந்துகொள்பவன் இறைமைக்கு முழுவதும் திறவாகிறான்.
13.19. பேருணர்வும் மூல இயற்கையும் தோன்றுமூலமற்றவை என அறி. இயற்கை வெளியின் குணங்கள் மற்றும் அவைகளின் மாற்றங்கள் மூல இயற்கையில் இருந்து தோன்றுவன எனவும் அறி.
உரை:
பிரபஞ்சத்தின் சாரம் மற்றும் இறைமையின் வாழ்வூட்டப்பேருணர்வு ஆகியன நித்யம். குணங்களின் ஊடாட்டத்தால் மூல இயற்கையின் பரப்பில் எல்லா மாற்றங்களும் நிகழ்கின்றன. இயற்கையின் தன்மைகளின் ஊடாட்டங்கள் எப்போது பலம் பெறுகின்றனவோ, அப்போது ஒரு பிரபஞ்சம் வெளித்தோன்றலாகிறது.
13.20. மூல இயற்கைதான் தோற்றுவாயின் அடிப்படை. பேருணர்வுதான் இன்ப துன்ப உணர்வாதலுக்கு அடிப்படை.
உரை:
வெளிப்படுத்தப்பட்ட இயற்கையின் எல்லா அம்சங்களும் வடிவங்களும் மூல இயற்கைப் பரப்பிலிருந்து தோன்றியவை. இறைமையின் வாழ்வூட்டப் பேருணர்வுதான் ஜீவாத்மாவாகி இன்ப துன்ப உணர்ச்சிகளை அறியும் திறனூட்டுகிறது. இன்ப துன்ப உணர்ச்சிகள் யாவும் உடலளவு, மனதளவு, மற்றும் ஆன்ம அளவினதாக பாகுபடுத்தலாம். உடலளவு இன்ப துன்பங்கள் எல்லோரும் அறிந்ததே. மனதளவில் மனமகிழ்ச்சி, மனத்தளர்வு, மனக்கிலேசம் ஆகியன. ஆன்ம அளவில் பெருமிதம், ஏமாற்றம் போன்றவை. ஜீவாத்மாதான் உயிரின் உள்ளிருந்து இந்த எல்லாவற்றையும் அதனதன் தளத்தில் உணர்கிறது. படைப்புகளின் உள்ளடக்கமான உயிர்மையானது, இன்பத்தை விளைவிப்பவைகளையும் அச்சத்தையல்லது துன்பத்தை விளைவிப்பவைகளையும் எதிர்கொள்கிறது.
13.21. இயற்கையுடன் சம்பந்தப்பட்ட பேருணர்வு, அந்த இயற்கையின் தன்மைகளை அனுபவிக்கிறது. இயற்கையின் குணங்களுடன் அது ஜீவாத்மாவாகக் கொள்ளும் பற்றானது பல்வேறு ஜென்மங்களைப் பெறக் காரணமாகிறது.
உரை:
ஜீவாத்மா இயற்கையிடம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இயற்கையின் தன்மைகளை அனுபவிக்கிறது. குணங்கள், அவைகளின் செயல் மற்றும் விளைவுகள் ஆகியவற்றிற்கு அடிமையாகி ஜீவாத்மா அதனுடன் கட்டுண்டு அது ஜனன-மரண சுழற்சியில் பல பிறப்புகளை எடுக்கக் காரணமாகிறது.
ஆன்ம வளர்ச்சியானது எப்போது நடக்குமென்றால் ----
அ. இயல்பூக்கத்தில் குண்டலினி சக்தி எழுந்து, அது உணர்வுநிலைகளுக்குத் தோதாக கிரமமாகவோ ஒரே எடுப்பிலோ ஆன்மாவின் உள்ளார்ந்த ஞானத்திற்குத் திறவாகிறது.
ஆ. சுய ஒழுங்குச் செயல்களாலும் உயருணர்வுத் தியானப் பயிற்சிகளாலும் உடலளவு மற்றும் மனதளவுத் தடைகள் நீங்கி ஆன்மாவினைப் பற்றுகளிலிருந்து விடுவிக்கிறது.
ஒருவனை கிரமகதியில் உயர்த்தும் ஆன்ம வளர்ச்சிப் படிநிலைகளாவன் :--
1. ஆன்மவுணர்வின்மை – மன மயக்கம், விருப்பின்மை, மற்றும் சோர்வு ஆகியன பொதுவாக காணப்படும். ஆன்மீக விஷயங்களில் விழிப்புணர்வு என்பது முற்றிலும் இருக்கவே இருக்காது. சமய சடங்குகளில் ஈடுபாடுள்ளவன் என்றால் கருத்தாக்கம் செய்த ஒரு தெய்வ உருவத்திற்கு அல்லது விக்கிரகத்திற்கு தன் பிரார்த்தனைகளை முன் வைப்பான். சாதாரண செயல் மற்றும் உறவுகள் யாவும் சடங்குத்தனமாய் எவ்வளவுக்கெவ்வளவு தன்நோக்கம் சார்ந்ததாக இருக்கிறோ அவ்வளவுதான் வைத்துக்கொள்வான். நுண்ணறிவு அளவுக்குட்பட்டு இருக்கும். ஞாபகங்கள், பழக்கங்கள், கற்றவைகள் ஆகியனதான் வாழ்வை கோலோச்சும். குறுகிய மனப்பான்மையையும், தன்னொழுக்கத்தையும் டம்பமடித்துக் கொள்வதும் காணப்படலாம். தாமஸ குணத்தின் ஆட்சி மேலோங்கியிருக்கும் நிலை. இது மூலாதாரச் சக்கர விழிப்புணர்வு நிலை.
2. செயல்முடங்கிய ஆன்ம உணர்வு – மனக்குழப்பங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் ஆகியன சுபாவமாக இருக்கும். ஆணவ மைய நடத்தைகள் இருக்கும். ஒரளவு மன உள் அமைதி, யோகக் காட்சிகள், ஆனந்தக்கிளர்ச்சி நிலைகள் மற்றும் பலவிதமான யோக நிகழ்வுகள் நடக்கலாம் எனும் எதிர்பார்ப்பில் தியானம் பழகக் கூடும். தவறான கருத்துக்கள், பற்றுதல்கள், சார்பு நிலைகள், பிடிவாத அடிமைத்தனம், தன்னைத் தான் ஏமாற்றிக்கொள்ளும் நடத்தைகள் ஆகியன சகஜமாக இருக்கும். செயல்கள் அறிவுபூர்வமாக இராது. நடத்தைகளை முன்னறியமுடியாது. தினசரி வாழ்க்கை நிகழ்ச்சிகள் மீதும், உயர் உண்மைகள் குறித்தும் மனக்கோட்டைக் கற்பனைகள் நிலவுவது போல முரட்டுத்தனம், குற்றச் சாட்டுகள், பொறுப்பின்மை ஆகியனவும் சகஜமாக இருக்கும். மன மற்றும் உணர்ச்சி நிலைகளை அடிமன உணர்வு தளம் ஆதிக்கம் செலுத்தும். தமோ குணத்தால் ஆளப்படும் ராஜசீகம் கோலோச்சும். இது ஸ்வாதிஷ்டான சக்கர விழிப்புணர்வு.
3. செயல்படும் ஆன்ம உணர்வு – நலமான மனப்போக்கு. மேலான மனித உணர்வு நிலை. தியானம் பழகினாலும் முக்கியத்துவம் தேவையான ஓய்வை அனுபவிக்கவும், உடலளவு, மனதளவுப் பலன்களை அனுபவிக்கவுமே இருக்கும்; உயர்புரிதலுக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் குறைந்த முக்கியத்துவம் தரப்படும். உலக வாழ்க்கையில் ஸ்தூல சுகானுபவம் ஏற்படுத்தும் செயல்களினை பற்றிக்கொள்வது போல தியானத்தின் போது யோக சுகானுபவத்திலும் பற்றிக்கொள்ள விழையும். சாதாரண செயல்களும் உறவுகளும் பகுத்தறிவுடன் தேர்ந்தெடுப்பு சார்ந்ததாக இருக்கும். செயல்திறமை இருக்கும். நுண்ணறிவின் துணையால் இறைமை பற்றிய தெளிவு கிடைத்திருக்கும். ஓரளவு சத்வம் கலந்த ராஜஸ குணத்தால் ஆளப்படும் நிலை. இது மணிபூரகச் சக்கர விழிப்புணர்வு.
4. உயர் உணர்வு ---- கடமையுணர்வுடனான சிஷ்யனாயிருப்பதற்குரிய விழிப்புணர்வுப் பக்குவம். ஆன்மீக விழிப்பு நிலையின் பக்குவத்திற்கேற்ப ஆன்ம ஞானம் போதும் போதாமல் இருக்கும். நான் இறையொளியின் ஒரு கீற்று எனும் ஞானம் இருக்கும். தியானத்தின்போது, உயர் உணர்வு எளிதில் திறவாகி இறைமை மற்றும் உயர் உண்மைகள் தெளிவாக விளங்கும். ஆன்ம அனுபூதி வளர வளர ஆணவப் பிடி தளரும். அன்றாடச் செயல்கள் மற்றும் உறவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருந்து ஆனால் கட்டாயப்படுத்தப் படாததாக இருக்கும். சத்வ குணம் மேலோங்கியும் ரஜோ குணம் மங்கியும் இருக்கும். தமோ குணம் தலைகாட்டலாம். இது அனாஹத சக்கர விழிப்புணர்வு.
5. பிரபஞ்சப் பேருணர்வு – படைப்புலக இயற்கைக் காரியங்கள் அறிவுக்கு எட்டி, படைப்புலகம் என்பது பிரபஞ்சச் சக்திகளின் லீலாவினோதமே எனும் அறிவு ஏற்படுதல். தியானத்தின்போது, இயல்கடந்த யோகக் காட்சிகள் விளங்கும். ஓம் ஸ்வரம், பிரபஞ்சச் சக்திகள் மற்றும் அவை சார்ந்த கட்டுமானப் பொருட்கள், இடம் மற்றும் காலம் ஆகியன கொண்ட மூல இயற்கையின் புரிதல் ஏற்படும். அன்றாடச் செயல்கள் மற்றும் உறவுகள் ஆகியன உயர்புரிதலில் இருக்கும். சத்வ குணம் கோலோச்சும். இது விசுத்தி சக்கர விழிப்புணர்வு.
6. இறைப் பேருணர்வு – இறைமையை முற்றிலுமோ சற்றுக்குறைவுடனோ புரிந்து கொள்ளப்பட்டு, இயல் கடந்த அனுபவம் பழக்கமாகியிருக்கும். சம்ஸ்காரங்கள் எனப்படும் மனத்தடைகள் இருந்தாலும், அவை பலவீனமாக இருக்கும். உள்காட்சியால் உருவான நல்ல சம்ஸ்காரங்கள் பழைய மனப் படிமங்கள் மேலும் ஏற்படுவதைத் தடுக்கும். இன்னும் திறவாகப்படுபவைகள் மீதமிருந்தாலும், மனமயக்கங்களிலிருந்து பெரும்பாலும் ஆன்மா விடுபட்டிருக்கும். குணங்களின் ஆட்டம் மெலிந்திருக்கும். இது ஆக்ஞா சக்ர விழிப்புணர்வு.
7. பூரண அனுபூதி --- இறைமை மற்றும் படைப்புலகக் காரியங்கள் பற்றிய பூரண ஞானம் இருக்கும். தியானத்தின் போது இயல்கடந்த அனுபூதி சாதாரணமாக இருக்கும். உலக விவகாரங்களில் ஈடுபடும்போது, பூரண ஒளிப்பேறு குறைவுபடாமல் ஆனால் எல்லா காரியங்களும் இயல்பூக்கத்தில் நடைபெறும். குணாதீத நிலை. கர்மங்களின் கிடுக்கிப்பிடி எஞ்சியிருக்காது. இது ஸஹஸ்ரார சக்கர விழிப்புணர்வு.
VRGC குறிப்பு: இதே நூலில் முன்னுரையில், திரு. ராய் அவர்கள் சக்கரங்களை பஞ்ச பாண்டவர்களுடன் இணைத்துச் சொல்லும் விளக்கம் கொடுத்திருப்பார். இங்கு சக்கரங்கள் விழிப்புணர்வு நிலையுடன் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளன. வாசகர்கள் இடத்துக்கேற்றப் பொருத்தப்பாடு பார்த்து புரிந்து கொள்க.
13.22. உடலுடன் உறவில் கலக்கும் ஆன்மா, அவ்வுடலின் சாட்சிபூதம் எனச் சொல்லப்படுகிறது. அதுதான் எல்லாவற்றிற்கும் அனுமதி தருகின்றது. அதுதான் ஆதரவாளர், அதுதான் அனுபோகி, மனதையும் புலன்களையும் ஆளும் மன்னன், மற்றும் உன்னத ஆன்மா.
உரை:
படைப்புலகத்துடன் பொருத்திப் பார்த்தால், இறைமைதான் சர்வவியாபி ஆன்மாவாக இருந்து சாட்சிபூதமாக உள்வெளி நிரப்பி பல்வேறு கடமையாற்றுகிறது. இயற்கையின் வெளித்தோன்று வஸ்துக்களின் உன்னத இருப்புண்மை அதுதான். ஜீவாத்மா உன்னத ஆன்மாவின் வியக்தியானதால் அதுதான் சாட்சி, அனுமதிப்பவர், அனுபோகி, மனதையும் புலன்களையும் ஆளும் மன்னன், மற்றும் உன்னத ஆன்மா. ஒழுக்க வாழ்க்கை வாழ யத்தனிக்கும் போதும் ஆன்மீகப் பயிற்சியின்போதும், “நான் தூயப்பேருணர்வு” என்பதை உள்ளூர அறிய வேண்டும். இது மனதை நம்ப வைக்க நாம் உருப்போட்டுச் செய்யும் சாதூர்யமான காரியமல்ல; இதனை உண்மை என அங்கீகரித்து, அவ்வுண்மைக்கு விழிப்படைய வேண்டும்.
ஆன்ம விழிப்படையாத நபர்களின் பிரச்னை எதுவென்றால், தவறான சுய அடையாளமே. அதாவது, ஆன்மாவே நிஜ இருப்பு மற்றும் அதுதான் இறையொளியின் ஒரு கீற்று எனக் கொள்ளாமல், தன்னை வரம்புக்குட்பட்டவனாக, பழக்கவசப்பட்டவனாக நினைத்தல்.
13.23. ஆன்மாவையும் இயற்கையின் விவித வகைகளையும் இவ்வாறு அறியும் ஒருவன், தற்சமயம் எந்த வாழ்க்கைநிலையில் வாழ்ந்தாலும் மறுஜென்மம் எடுப்பதில்லை.
உரை:
இறைமை பற்றிய உண்மை மற்றும் அதன் தன்மைகள் அறியவரும்போது, நமக்கு ஒளியூட்டம் இருப்பதால் மறுஜென்மம் எடுக்கத் தேவையில்லை. சமீபத்தில்தான் ஆன்ம விழிப்புணர்வு கிடைத்திருக்கிறது என்றால் இன்னும் முறியடிக்கப்பட வேண்டிய கர்மப்பலன்கள் பாக்கியிருக்கலாம். ஆனாலும் நம் அனுபூதத்தின் தரத்தை அது பாதிக்காது. விடுதலை பெற்ற ஆன்மா, மறுஜென்மம் எடுக்க நிர்ப்பந்தமில்லை, ஆயினும், பரிணாமக் கைங்கர்யபரமாகவோ, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சுதந்திரத்திற்காகவோ அவ்வாறு மறுஜென்மம் எடுக்க ஒப்புக் கொள்ளும்.
13.24. ஆன்மாவின் இருப்புண்மையை சில சாதகர்கள் தியானத்தில் கண்டுணர்கிறார்கள். சிலரோ, அறிவுத் தேடலை முறைப்படுத்தி கண்டுணர்கிறார்கள். சிலரோ, கர்மயோகத்தினால் கண்டுணர்கிறார்கள்.
உரை:
சில சாதகர்கள் தியானத்தின்போது இறைமையைக் கண்டுணர்கிறார்கள். சிலரோ, உயர் நுண்ணறிவால் கண்டுணர்கிறார்கள். சிலரோ, ஆன்ம ஞானத்திற்குத் தடைகளை நீக்குவதான கர்ம யோகம் பயில்வதால் கண்டுணர்கிறார்கள்.
13.25. இவைகளை அறியாத இன்னும் சிலரோ, பிறரால் கற்றுக்கொடுக்கப்பட்டதை பக்தி சிரத்தையுடன் பயின்று கண்டுணர்ந்தாலும் அவர்களும் மரணத்தை வெல்கிறார்கள்.
உட்பொருள்:
சமாதி, நேர்க்காட்சி, யோகசாதனை, ஆகிய வழிமுறைகளை அறியாத சாதகர்கள், ஞானாநுபூதியாளர்களிடம் கற்று ஆன்ம வளர்ச்சி மற்றும் இறையனுபூதி அடைகிறார்கள்.
உரை:
ஆன்ம வளர்ச்சி என்பது யோகமார்க்கத்தில் ஒளியூட்டம் பெற்ற, ஞானிகளுக்கு மட்டும் அல்லது உலகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு, அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் என வகுக்கப்பட்டதல்ல. ஒளியூட்டக் கல்வி சரியான ஒன்றாக இருந்துவிட்டால், அது ஆன்ம திறவுக்குப் பாதையேற்படுத்தும் நல்லதொரு வழியாக உரிய தயார் நிலை சாதகர்களுக்கு அமையும். ஆன்ம வளர்ச்சியை விரைவு படுத்தும் ஒரு கற்றல் அனுபவம் எதுவென்றால், கற்பித்தும் ஊக்கப்படுத்தியும் இறைமை பற்றிய துல்லிய அறிவைப் பகிர்ந்தும், ஆன்ம திறவாதலை எவ்வாறு முறைப்படுத்துவது என வழிமுறை காட்டியும் பழகும் ஒரு இறையனுபூத ஆசானிடம் ஆன்மநெருக்க உறவு கொள்வதே ஆகும்.
13.26. அர்ஜுனா! அசையும் பொருளோ அசையாப் பொருளோ எதுவெல்லாம் தோன்றுதல் உடையதோ அவைகள் யாவும் க்ஷேத்ரமும் க்ஷேத்ரக்ஞனும் கூடுதலால் என அறி.
உட்பொருள்:
உணர்வுடனும் உணர்வின்றியும் தோன்றிய வியக்த ஆன்மா யாவும், உயராத்மா மூல இயற்கையுடன் கூடுவதால் (அதனதன்) அனுபவத்துக்குட்படுகின்றன என அறி.
உரை:
உணர்ந்தோ உணராமலோ ஆசைகளால் உந்தப்பட்டோ, கர்மவினையின் வசப்பட்டோ ஆன்மாக்கள் உடலெடுக்கின்றன. மனம் விஷயங்களுடன் கூடும் உறவில், ஓர் ஆன்மாவுக்கு எது உண்மையோ அது எல்லா ஆன்மாவுக்கும் உண்மையே. உணர்வின்றி இக்கூடுகை நேரும்போதும், அச்செறிவிலிருந்து மீள்வதும் எல்லா ஆன்மாக்களுக்கும் ஒரே மாதிரிதான்.
13.27. உன்னதப் பேருணர்வினை எல்லா படைப்புக்களிலும் இருப்பதாகவும், அவை அழியும்போதும் அவற்றில் அழியாத ஒன்றைக் காண்பவனே, உண்மையில் காண்பவன்.
உரை:
இறைமை மற்றும் வாழ்வுகதி ஆகியன பற்றிய பிசிறற்ற ஞானம் வாய்த்துவிட்டால் சர்வ வியாபகப் பேருணர்வு அழியாதது என அறிவோம். ஆன்மஞானபூதியும், இறையுணர்வும் அடையும்போது, நம் க்ஷேமம் என்றும் நிரந்தரமாக காக்கப்படுகின்றது என்பதை உறுதியாகவும் அறிவோம்.
13.28. சுயநல ஊட்டத்தால் தான் பேராத்மாவை மறைக்காமல், உன்னதப் பேருணர்வினை சர்வ வியாபகனாய்க் காணும் காரணத்தால், அந்த சாதகன் அதி உயர் ஸ்திதியை அடைகிறான்.
உட்பொருள்:
ஆன்ம விழிப்புணர்வினை தன் அறிவிலித்தனமான சுய ஊட்ட நடத்தைகளால் களங்கப்படுத்தாமல், உன்னதப் பேருணர்வினை சர்வ வியாபகனாய்க் காணும் காரணத்தால், சாதகன் அதி உயர் ஸ்திதியை அடைகிறான்.
உரை:
ஆன்மாவிற்கு தீங்கிழைக்க முடியாதென்றாலும், அதனை அறிவதானது, கீழ்கண்ட காரணங்களால் களங்கப்படுத்தப்படும்:
அ. நுண்ணறிவுத் தவறுகள்
ஆ. பிறழ் பார்வைகள்
இ. மன மற்றும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் ஆவேசங்களும்
ஈ. கவனத்தின் வெளிமுக ஒட்டம்.
இறையுண்மையை மனதார ஏற்கவும், முழுமையான ஒழுக்கமான ஆக்க பூர்வ வாழ்க்கை வாழவும் சாதகன் அறிவுறுத்தப்படுகிறான்; அதனால் ஆன்ம விழிப்புணர்வு தூயதாகவும், சரியான நோக்கினை நல்குவதாகவும் இருக்கும்.
எந்த மன உணர்ச்சி நிலைகள், நடத்தை மற்றும் உறவுகள் ஆகியன ஆன்ம உணர்வை தடுக்கின்றதோ, அவைகளை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக ஆன்ம விழிப்புக்கு ஆதரவானவைகளை நாடிப் பற்றிக் கொள்ள வேண்டும்.
13.29. இயற்கையால் தூண்டப்பட்டு எல்லாம் நிகழ்கிறதே அன்றி ஆன்மா அதனைச் செய்வதில்லை என அறிந்தவனே உண்மையில் அறிந்தவன்.
உரை:
நம் உடல் மற்றும் மனம் உட்பட, இயற்கையில் மனோ மற்றும் பரு உருவங்களை வெளிப்படுத்தி, குணங்கள் எல்லாச் செயல்களையும் சாத்தியமாக்குகிறது. உடலையும் மனதையும் முறையாக உபயோகித்து, வேண்டிய விளைவுகளை ஏற்படுத்தலாம். அப்படி செய்யும்போதும், நம் ஆன்ம விழிப்பிலிருந்து நழுவாமல் நிலைத்திருக்கலாம். நாம் இறைமையில் அழியா இருப்புண்மை என்பதை நாம் என்றும் மறவாமல் வாழலாம்.
13.30. உள்ளதனைத்தின் நானாவித கோலங்கள் தனி ஒரு மூலத்தில் வேர்க்கொள்கிறதெனவும் வெளித்தோன்றல்கள் யாவும் அதனிடத்திலிருந்தே எனவும் அறியும் பக்தன், பூரண இறுதி நிலைக்குச் சித்தியடைகிறான்.
உரை:
ஆன்மாவின் நிஜசொரூபம் மற்றும் இயற்கையின் பரப்பு வெளிகளை ஆராய்ந்தால், அவைகள் யாவும் இறைமையின் இருப்புண்மையில் உள்ளதென்பதைத் தானாக நினைவூட்டிக் கொள்ள வேண்டும். ஆன்மாக்கள் என்பவை இறைமையின் ஒளிக்கதிர்களே. இயற்கை என்பது ஓம் ஸ்வர இறை அலையின் ஓட்டத்தின் விளைவே. அவைகள் படைப்புக்கள் அல்ல. ஒரு பொது உற்பத்தி மூலத்திலிருந்து வெளித்தோன்றுபவையே.
இறைமைக்கும் ஆன்மாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், இறைமை வரம்பற்றது, ஆனால் ஆன்மாவோ சிறிது காலத்திற்கு தன் இச்சையால் தனித்துவ இருப்புடையதாகத் தன்னைப் பந்தித்துக் கொள்கிறது. மூல இயற்கைக்கும், வெளித்தோன்றிய இயற்கைக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், முன்னதில் எந்த சக்தி உள்ளடக்கமாக உள்ளதோ அதுதான் பின்னதில் ஆர்ப்பரிக்கின்றன. உன்னதப் பேருணர்வின் இருப்புண்மையை உள்ளவாறு அறியும் அறிவும் இயற்கையின் காரியங்ளைப் பற்றிய தெளிவான அறிவும் முழு ஒளியேற்றத்தின்போது இருக்கும்.
13.31. அழியா இந்த உன்னதப் பேருணர்வு ஆதியற்றது மற்றும் குணாதீதம். உடலில் அது கட்டுண்டிருந்தாலும் அது செயல்படுவதோ களங்கமுறுவதோ இல்லை.
13.32. அது அவ்வளவு நுண்ணியதாக இருப்பதால், பிரபஞ்சத்தை நிறைக்கும் ஆகாயம் எப்படி களங்கப்படுவதில்லையோ, அப்படி உடலை நிறைக்கும் ஆன்மாவும் களங்கமுறாது.
உரை:
உன்னதப் பேருணர்வு, வியக்தமான ஜீவாத்மாவாக உடல் மற்றும் மனதில் வாயிலாக வெளிப்பட்டாலும் அது எந்தக் காரியமும் ஆற்றுவதில்லை. அவற்றின் கண்ணோட்டம் மற்றும் அனுபவங்களுக்கும் ஆட்பவடுவதில்லை. அதற்கு ஜனன மரணச் சுழற்சி என்பது உண்மையில் இல்லை. அது மனம் மற்றும் உடலோடு அடையாளப்படுத்திக் கொண்டு, பின்னர் காலப்போக்கில் விலகிவிடுகிறது. தன்னூட்ட சுயத்துடன் ஆன்ம விழிப்பற்ற ஒருவன் எதனை எண்ணுகிறான், காண்கிறான், அனுபவிக்கிறான் என்பதற்கு எந்தத் தொடர்புமின்றி, உள்ளடக்க ஆன்மா ஒட்டுதலின்றி உள்ளது. அடியாழத்தில் ஆன்மா, இறையொளியின் ஒரு கீற்றானதால், அது சர்வவியாபியாக இருக்கிறது. அது மனம் மற்றும் உடலுடன் அடையாளப்படுத்திக் கொள்வதனாலேயே பொய்ம்மையான கட்டுண்ட விழிப்புணர்வு கொள்கிறது.
13.33. சூரிய மண்டலம் முழுவதையும் ஒற்றைச் சூரியன் மட்டுமே பிரகாசிப்பிப்பது போல, இந்த க்ஷேத்ராதிபதி முழு க்ஷேத்ரத்தையும் பிரகாசிப்பிக்கிறான்.
உரை:
தோற்றத்தில் எந்தவொரு உலகிற்கும், "பிரபு", அல்லது நியந்தா அம்சம், எதுவென்றால் அதற்கு வாழ்வூட்டும் பேருணர்வுதான். சர்வ வியாபகப் பேருணர்வு பிரபஞ்சத்தையும், வியக்தமான ஆன்மாவாக மனத்தை சக்தியூட்டி உடலையும் வாழ்விக்கின்றது.
13.34. க்ஷேத்ரம் மற்றும் க்ஷேத்ரக்ஞனின் வேறுபாட்டையும், உயிர்ப்படைப்பை ஜடத்திடமிருந்து அடியோடு விடுவிக்கிற காரியத்தையும், ஞானக்கண்ணால் தெளிவாகக் காணும் யாரும் உன்னத நிலையை அடைகிறார்கள்.
உரை:
ஒளியூட்டம் பெறுவதனாது, தோற்றத்திற்கு அப்பாற்பட்ட பரத்தை உணர்வதால்,
• ஆன்ம விடுதலை ஞானம்
• மன ஒளி
• சாதகனுக்கு நடைமுறையில் தெரிந்தெடு சுதந்திரம்
ஆகியனவற்றை உறுதியாக நல்குகிறது என நேரடியாகப் பிரகடனப்படுத்தப் படுகிறது.
தீனமான நம்பிக்கை, நற்குணம் வேண்டிச்செய்யும் நலிந்த முயற்சிகள், ஆன்மீகப்பயிற்சிகளின் சோம்பேறித்தனமான செயல்பாடு, மற்றும் குறுகிய உணர்ச்சிமேலிட்ட பக்தி ஆகியவை ஆன்மப் பூரணத்துவம் அடைய முயற்சிப்பவனுக்குப் போதுமானவைகள் அல்ல என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் என மூலத்திலும், செயல்களத்தையும் செயல்கள அறிவோனையும் பகுத்தறியும் யோகம்
என இவ்வுரையிலும் தலைப்பிடப்பட்ட 13 ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.
Send Your Comments to phdsiva@mccrf.org