W44. நான் உன் தேவலோக விமானத்தில் ஏற விரும்பும் உன் சொர்க்கலோகப் பறவை. (Whispers from Eternity - Tamil & English)
44. நான் உன் தேவலோக விமானத்தில் ஏற விரும்பும் உன் சொர்க்கலோகப் பறவை.
பூலோகத்திலிருந்து விடைபெறும் காலத்தில், என் ஜீவாத்மாவை அழைத்துச் செல்ல உன் தேவலோக விமானம் வந்துள்ளது. நான் வியப்புடன், எப்படிப்பட்ட ஆகாயமார்க்கத்தில் மேலெழும்பி, எந்தெந்த லோகங்களில் பயணிக்கப் போகிறோமோ? என எண்ணினேன்.
நான் பிரபஞ்ச நியதியின் அந்த ரகசிய மாலுமியைக் கேட்டேன். அந்த பேசாமாலுமி மௌனமொழியில் பதிலுரைத்தான்:
"நான் வாழ்க்கையின் மாலுமி. ஆனால் அறியாத பூலோகத்தவர்களால் தவறாக அச்சமூட்டும் காலன் என அழைக்கப்படுகிறேன். நான் உன் சகோதரன், உன்னை உயர்த்துபவன், உன் மீட்பாளன், உன் நண்பன் - பளுவான உன் உடற்துன்பச் சுமையை இறக்குபவன். உன் சிதிலமடைந்த கனவுகளெனும் பள்ளத்தாக்கிலிருந்து உன்னை மீட்டு, உயர்தள ஒளியுலகத்திற்கு கூட்டிச் செல்ல வந்துள்ளேன். துயரத்தின் விஷப்புகை அந்த மேலுலகினை ஒருக்காலும் எட்டாது.
"நான் உன் ஜீவாத்ம-பறவையை உன் ஊனுடம்புக் கூண்டிலிருந்து விடுவிக்க அக்கூண்டை கருணையின்றி நொறுக்கியுள்ளேன். உன்னைப் பிணைத்த நோய், பயம் எனும் சங்கிலிகளை அறுத்து எறிந்துள்ளேன். நீ நீண்டகாலமாக சதையெலும்புக் கூட்டினிற்குள் சிறைப்பட்டுக் கிடந்ததனால், பழக்க தோஷத்தால் அக்கூட்டை விட்டு வெளியேறத் தயங்குகிறாய். நீ எப்போதும் சுதந்திரத்தையே விரும்புபவன். இப்போது, வெகுநாட்களாய் நீ ஏங்கிய இந்த விடுதலையைப் பெறும்போது, உனக்கு ஏனிந்த நடுக்கம்?"
"ஏ சொர்க்கலோகப் பறவையே! ஏறு என் எங்கும்நிறை விமானத்தில்! நெடுநாளாய் சிறகடித்து களைத்த உன் இறகுகளுக்கு ஓய்வுகொடு, என்னுடன் இளைப்பாறிக் கொண்டு, எங்கும், எல்லா இடங்களிலும் பரந்து விரிந்த உன் ஆகாய வீட்டிற்குப் பிரயாணம் செய்யப் புறப்படு!"
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
44 I am Thy Bird of Paradise wishing to fly in Thine Astral Airplane
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org