W166. உன்னைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நாங்கள் வாங்கிவிடலாம். உன்னை எங்களுக்கு வழங்குமாறு இறைஞ்சுகின்றோம்.(Whispers from Eternity - Tamil & English)
166. உன்னைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நாங்கள் வாங்கிவிடலாம். உன்னை எங்களுக்கு வழங்குமாறு இறைஞ்சுகின்றோம்.
கடவுளே, "ஊனுடம்பின் தேவைகள், பசி, மற்றும் லோகாயத சுகங்கள் எனும் பெரும்பாரத்தினால் நீ என்னை பிணைத்துக் கட்டிவைத்துள்ளாய்" என்று நான் புலம்பிக் குறைகூறாமல் இருப்பேனாக.
எப்போதும் வேலையாக இருக்கும் வியாபாரிகளை அதற்காக நான் அவர்களைக் குற்றம் சாட்டமாட்டேன். நீ தேனீயை சுறுசுறுப்பாய் இயங்குமாறு செய்யவில்லையா? மழையினை உயிர்-நல்கும் பயிர்களின் மேல் தவறாமல் பொழிய வைக்கவில்லையா? நீர்சுமக்கும் கருமேக வானக வாகனங்களைக் கொண்டு தாகத்தால் ஏங்கும் பசுஞ்செடிகளின்மேல் உயிர்-நீரைத் தெளிக்கவில்லையா?
தெய்வக்குயவன் இந்த பூமி எனும் மண்ணுருண்டையை வடித்து, அதனைத் தன்பாதையில் தனக்குத்தானே தொடர்ந்து சுழலவைத்துக் கொண்டு, அதனைக் கதிரவனின் கதிரால் கோர்த்து, அது அக்கதிரவனை லயம் தப்பாமல் சுற்றிவருமாறு இடையறாமல் இயக்குகின்றான்.
பெரும்பிரபஞ்சக்குயவன் தனது உயிர்ச் சக்கரத்தைக்கொண்டு அழியக்கூடிய ஊன் பாத்திரங்களாலான பலகோடானுகோடி உருவங்களைப் படைக்கின்றான். அமீபா, சிட்டுக்குருவி, விண்வெளிக்காட்டில் உறுமும் பிரம்மாண்டமான நெருப்புகக்கும் கோளங்கள் - என இவையாவும் அவனது செயல்களில் சிலவற்றைச் செய்யப் பணிக்கப்பட்டுள்ளன.
வானில் தோன்றும் கணநேர வெண்ணெருப்பும் மழை பெய்வதற்கு உதவுகின்றது.
உயிர்களின் அரசே, நீ தான் எல்லாத் தொழிலாளர்களிலும் மிகுந்த சுறுசுறுப்பானவன். ஓர் குருவி கீழிறங்குவதையும் பார்த்துக்கொண்டு, உடற்சதையில் சிறு கீறலையும் குணப்படுத்திக்கொண்டு, வால்நட்சத்திரத்தின் பாதையையும் வகுத்துக்கொண்டே, நீ எப்போதும் கவனத்துடன் இருக்கின்றாய்.
நீ கட்புலனாகா உன் தோற்றத் தொழிற்சாலையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்குகின்றாய். உன் இயற்கைப் பொருட்களை உற்பத்தி செய்பவனும் நீயே, விளம்பரப்படுத்துபவனும் நீயே. ஆரோக்கியம், மனோசக்தி, ஞானத் தங்கக்கட்டிகளை எங்களுக்கு விற்கும் நீ தெய்வ விற்பனையாளன்.
நீ எங்களை எல்லாவற்றுக்கும் ஏதோவொரு வழியில் சம்பாவனை கட்டச்செய்கின்றாய்! நாங்கள் எங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக, சுகாதார வாழ்வினை மேற்கொள்ளவும், நல்ல உணவுப் பொருட்களை நாடி உட்கொள்ளவும் நாங்கள் செய்யும் முயற்சியின் மூலம் ஈடுகட்டச் செய்கின்றாய். எங்கள் மனக்குடிலை வெளிச்சப்படுத்தத் தேவையான மின்சார சக்தியை நாங்கள் நாகரீக நாணயங்களைக் கொடுத்து விலைக்கு வாங்குகின்றோம். பக்தியின் தங்கக்கட்டிகளை கொடுத்து உன்னை எங்கள் பிடியில் ஒருக்கால் சிக்குமாறு செய்கின்றோம்.
நாங்கள் மற்ற எல்லாவற்றையும் ஏதாவதொன்றைக் கொடுத்து வாங்கிவிடலாம்; ஆனால் மக்கள் சிலர் உன்னை விலைகொடுத்து வாங்க முயல்வதை நீ நன்கு அறிந்தபோதிலும், நீ மட்டும் விற்பனைக்கு அல்ல என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.
விலைமதிக்கமுடியாத ஒன்றே, உன்னை ஒருவராலும் வாங்கமுடியாது; உனக்கு நிகர விலை நிர்ணயிக்கவே முடியாது.
ஆயினும், நாங்கள் உன் குழந்தைகள் - உன் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ராஜ்ஜியத்திற்கு உரிமையுடைய உன் வாரிசுகள் - என்று அறியும்போது, நீ உன்னை எந்த நிபந்தனைகளுமின்றி வழங்குகின்றாய்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
166 We buy everything but Thee. Pray give me Thyself.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org