கைவல்ய தரிசனம் (மூலமும் - தெளிவுரையும்) - The Holy Science (Tamil)
The Holy Science - Kaivalya Darsanam
(தி ஹோலி சயின்ஸ் - கைவல்ய தரிசனம்)
Swami Sri Yukteshwar Giri - சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி
(Sanskrit-Tamil)
---
கைவல்ய தரிசனத்தின் மூலமும், தெளிவுரையும்
ஞானவதாரர் என்று போற்றப்படும் சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி
மஹாராஜ் இயற்றிய இவ்வரிய சிறு நூல், முழு ஆன்மீக சாரத்தையும்
தன்னுள்ளே அடக்கியுள்ளது.
இவர், இந்நூலை நான்கு பகுதிகளாக அமைத்து, சமஸ்க்ருதத்தில்
சூத்திரங்களையும், அவற்றிற்கு பைபிள் மேற்கோள்களுடன் ஆங்கிலத்தில்
விளக்கவுரையும் இயற்றியுள்ளார். சூத்திரங்களுக்கு ஆங்கில
மொழிபெயர்ப்பினை அவருக்குப்பின்னர் யோகோதா சத்சங்கத்தினர்
அருளியுள்ளனர்.
இங்கு, இந்நூலிற்கு தமிழில் மூலமும்-தெளிவுரையும்
வழங்கப்பட்டுள்ளது. இது செய்யப்பட்டதின் முக்கிய நோக்கங்கள்
பின்வருமாறு:
1) தமிழ் பேசும் மக்கள் இந்நூலைப் பயில,
2) குறிப்பாக மேலைநாட்டவர்களுக்காக காட்டப்பட்ட பைபிள்
மேற்கோள்கள் இல்லாமல் ஆன்மீக சாரத்தை மட்டும் வழங்க,
3) மூல சூத்திரத்தில் வார்த்தைகளால் சொல்லப்படாத, ஆசிரியர்
உரையில் இடம்பெறும் முக்கியமான அம்சங்களை, மூல
சூத்திரத்துடன் இணைத்து சுருக்கமாக அதே சமயத்தில் முழுமையாக
வழங்க,
4) மூல சூத்திரத்தை எளிதாகப் படிக்கவும், மனனம் செய்ய
ஏதுவாகவும், நீளமான வாக்கியங்களை மூலத்திலும், தமிழிலும்
பதம்பிரித்துத் தர,
5) சில இடங்களில் ஆசிரியர் உரையில் சுருக்கமாக இடம்பெற்ற
விஷயங்களை பிற மேற்கோள்களுடன் தெளிவுபடுத்தவும்.
இத்தெளிவுரையில் ஏதேனும் பிழை காணின், தயையுடன் எனக்கு இந்த
phdsiva@mccrf.org மின்னஞ்சல் வாயிலாகத்
தெரியப்படுத்தவும்.
இத்தெளிவுரையைப் அன்புடன் பரிசீலனை செய்த என் ஆன்மநண்பர் V.R.
கணேஷ் சந்தருக்கு என் மனமார்ந்த நன்றி.
குறிப்பு: இந்நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்களை தேர்ந்த யோகமுறை
ஆசிரியரிடம் பயிலுதல் வேண்டத்தக்கது. சுயமாகப் பயிற்சி செய்வது
தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது. சுருக்கமாக, பல உன்னத ஆன்மீக
நிலைகளைப் பற்றியும், அரிய சித்திகளைப் பற்றியும், அவற்றை அடையும்
பொதுவான வழிமுறைகளும் வாசகர்கள் பரிச்சயம் பெறுவதன் பொருட்டு இங்கு
பகிரப்பட்டுள்ளது.
எங்கும்நிறை இறையன்பில்,
பரமஹம்ஸ தாசன் சிவா
---
I. वेद: - வேதம்
1.1. नित्यं पूर्णम्-अनादि-अनन्तं ब्रह्म परम् |
तत्-एव-एकम्-एव-अद्वैतं सत् ||
1.1. நித்யம் பூர்ணம்-அநாதி-அநந்தம் ப்ரஹ்ம பரம் ।
தத்-ஏவ-ஏகம்-ஏவ-அத்வைதம் ஸத் ॥
1.1. கடவுள் என்றும் நிரந்தரமானவர், முழுமையாக தன்னிறைவு கொண்டவர்,
தொடக்கமற்றவர், முடிவற்றவர், 'பரப்பிரம்மம்' என அழைக்கப்படும்
அளவிடமுடியாத பெரியவர், எல்லாவற்றிற்கும் மேலானவர், அவர்
ஒருவர் மட்டுமே இருக்கிறார், தன்னைத் தவிர இரண்டாவதாக வேறொன்றும்
இல்லாதவர், 'ஸத்' என்னும் பேருண்மை.
1.2. तत्र सर्वज्ञ-प्रेम-बीजम्-चित् सर्वशक्ति-बीजम्-आनन्दश्च
||
1.2. தத்ர ஸர்வக்ஞ-ப்ரேம-பீஜம்-சித் ஸர்வஶக்தி-பீஜம்-ஆநந்தஶ்ச ॥
கடவுள் சர்வஞானத்திற்கும் பேரன்பிற்கும் ஆதாரமான
பேருணர்வாகவும், சர்வசக்திக்கு ஆதாரமான ஆனந்தமாகவும் ஒருங்கே
உள்ளார்.
1.3. तत्-सर्व-शक्ति-बीज-जड-प्रकृति-वासनाया व्यक्त-भाव: |
प्रणव-शब्द: दिक्-काल-अणौ-अपि तस्य रूपाणि ||
1.3. தத்-ஸர்வ-ஶக்தி-பீஜ-ஜட-ப்ரக்ருதி-வாஸநாயா வ்யக்த-பாவ: ।
ப்ரணவ-ஶப்த: திக்-கால-அணௌ-அபி தஸ்ய ரூபாணி ॥
1.3. கடவுள் சர்வசக்தியை ஆதாரமாகக் கொண்டு வெளியில் தோன்றும்
ஜடப்ரக்ருதி ரூபத்திலுள்ள பிரபஞ்சத்தை (இயற்கை), வெளிப்படாத
ரூபத்திலுள்ள கர்மவாசனைகளைக் கொண்டு வெளிப்படுத்துகிறார்.
[கடவுளின் சர்வஞான-பேரன்பு "கவரும்விசை" ஆகவும், சர்வசக்தி
"விலகும்விசை" ஆகவும் இணைந்து அதிர்வதால் வெளிப்படுவது ஓம் என்னும்
பிரணவ சப்தம்.] தேச-கால-கலன(i) தத்துவங்களை உள்ளடக்கிய ஓம் என்னும்
பிரணவ சப்தம் அப்பிரபஞ்சத் தோற்றத்தின் ரூபம்.
(i) இங்கு "திக்" என்னும் சொல் "திசை" என அர்த்தம் செய்யாமல் "தேசம்"
(space) என எடுத்துக்கொள்ள வேண்டும். "அணு" என்னும் சொல் இங்கு
பிரபஞ்சத்தில் ஒன்று வெளிப்படுவதற்கான பாத்திரமாக
உபயோகிக்கப்பட்டுள்ளது. சென்ற நூற்றாண்டின் அணுவிஞ்ஞான வளர்ச்சியினால்,
விஞ்ஞான நூல்களில் அணு என்பதற்கு வேறுவிதமாக வரையறுக்கப்படுவதால்,
இங்கு வைதிகநூல்களில் காணப்படும் மாற்றுச்சொல்லான "கலனம்" என்பதை
"அணு"விற்கு பதிலாக உபயோகிக்கப்படுகிறது. "கலனம்" என்பது
பிரபஞ்சத்தில் தேச-கால வரையறைக்குள், ஒரு தனித்துவ கர்மகுண-அமைப்பு
கொண்ட ஒன்று அது வெளிப்பட ஏதுவாகும் பாத்திரம் அல்லது அலகு.
1.4. तदेव जगत्-कारणं माया ईश्वरस्य, तस्य व्यष्टिर्-अविद्या ||
1.4. ததேவ ஜகத்-காரணம் மாயா ஈஶ்வரஸ்ய, தஸ்ய வ்யஷ்டிர்-அவித்யா ॥
1.4. கடவுள், வியஷ்டியான (பகுதி) தனித்துவ கலனங்களின் அவித்தை
கர்மத்தைக் கொண்டு, அவற்றின் சமஷ்டியான (தொகுதி) மாயையால் (ii)
இப்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து இயக்குகிறார்.
(ii) மாயை, கலனங்களின் பரிணாம வளர்மாற்றங்களுக்கு, அவைகளின் கர்ம-குண
அமைப்பிற்குப் பொருத்தமான அமைப்புள்ள மற்ற கலனங்களுடன் தொடர்புபடுத்தி
பிரபஞ்சத்தை இயக்குகின்றது.
1.5. तत्-सर्वज्ञ-प्रेम-बीजं परं तदेव कूटस्थ-चैतन्यम् |
पुरुषोत्तम: तस्य-आभास: पुरुष: तस्माद्-अभेद: ||
1.5. தத்-ஸர்வக்ஞ-ப்ரேம-பீஜம் பரம் ததேவ கூடஸ்த-சைதந்யம் ।
புருஷோத்தம: தஸ்ய-ஆபாஸ: புருஷ: தஸ்மாத்-அபேத: ॥
1.5. சர்வஞானத்தையும், பேரன்பையும் கொண்ட கடவுளின்
பேருணர்வு, எல்லாவற்றிற்கும் மேலான கூடஸ்த-சைதன்ய உணர்வாக
பிரபஞ்சத்தில் விளங்குகின்றது. அதன் பிரதிபிம்ப-சைதன்ய உணர்வாகப்
புருஷர் [ஆத்மா, ஜீவாத்மா, உயிர்] விளங்குகிறார். அதனால், கடவுள்
புருஷோத்தமர் [பரமாத்மா, தூயஆவி] என்றும் அழைக்கப்படுகிறார்.
சைதன்யவுணர்வு இவ்விருவகையில் விளங்கினாலும், அவை கடவுளின் பேருணர்வு
ஒன்றையே ஆதாரமாகக் கொண்டுள்ளதால், அவ்விருவகைச் சைதன்யவுணர்விற்கும்
இடையே சார பேதம் இல்லை.
1.6. चित्-सकाशाद्-अणोर्-महत्त्वं तत्-चित्त्वं, तत्र-सत्-अध्यवसाय:
|
सत्त्वं बुद्धि: ततस्तत्-विपरीतं मन: चरमे-अभिमानो-अहङ्कार: तदेव जीव:
||
1.6. சித்-ஸகாஶாத்-அணோர்-மஹத்வம் தத்-சித்வம், தத்ர-ஸத்-அத்யவஸாய:
।
ஸத்வம் புத்தி: ததஸ்தத்-விபரீதம் மந: சரமே-அபிமாநோ-அஹங்கார: ததேவ ஜீவ:
॥
1.6. சைதன்யம் கலனத்தில் பிரதிபலித்து விளங்குகையில் அது 1) மஹத்
அல்லது சித்தத்தைத் தோற்றுவிக்கின்றது. சைதன்யத்தின் உண்மை அதனில்
ஏற்றுவிக்கப்பட்டு, [அது தோற்றத்தின் இருமை விசைகளான கவரும்-விலகும்
விசைகளால் காந்தமயம் ஆக்கப்பட்டு,] இரு துருவங்களாகி, உண்மைக்கு
அண்மையில் இருப்பது 2) சத்வம் அல்லது புத்தியாகவும், அதற்கு மாறான
துருவமாக சேய்மையில் இருப்பது 3) ஆனந்தத்வம் அல்லது மனமாகவும்
பரிமளிக்கின்றது. அக்கலனம், தான் பிரபஞ்சத்தில் தனித்தியங்கும் ஒன்று
என்ற எண்ணம் 4) அகங்காரம் (அகந்தை) அல்லது ஜீவனைத்
தோற்றுவிக்கின்றது.
1.7. तत्-अहङ्कार-चित्त-विकार-पञ्च-तत्त्वानि ||
+
1.8. तान्येव कारण-शरीरम् पुरुषस्य ||
+
1.9. तेषां त्रिगुणेभ्य: पञ्चदश विषय-इन्द्रियाणि ||
+
1.10. एतानि मनो-बुद्धिभ्यां सह सप्तदश-सूक्ष्म-अङ्गानि |
लिङ्ग-शरीरस्य ||
1.7. தத்-அஹங்கார-சித்த-விகார-பஞ்ச-தத்வாநி ॥
+
1.8. தாந்யேவ காரண-ஶரீரம் புருஷஸ்ய ॥
+
1.9. தேஷாம் த்ரிகுணேப்ய: பஞ்சதஶ விஷய-இந்த்ரியாணி ॥
+
1.10. ஏதாநி மநோ-புத்திப்யாம் ஸஹ ஸப்ததஶ-ஸூக்ஷ்ம-அங்காநி ।
லிங்க-ஶரீரஸ்ய ॥
1.7. அந்த காந்தமயமாக்கப்பட்ட கலனத்தின் சித்த, அகங்காரங்களின்
வெளிப்பாட்டின் மாறுபாடாக [சத்வ(ஒளி) - ரஜஸ்(கலவை) - தமஸ்(இருள்) எனும்
முக்குணங்களாலான] பஞ்ச தத்துவங்களை (பஞ்ச மஹா பூதங்களை)
தோற்றுவிக்கின்றது.
+
1.8. இவை [பஞ்ச தத்துவங்கள்] ஒரு புருஷனின் காரண சரீரம்.
+
1.9. இந்த பஞ்ச தத்துவங்கள், சத்வ(ஒளி) - ரஜஸ்(கலவை) - தமஸ்(இருள்)
எனும் முக்குணங்களுடன் மேலும் இணைந்து பெருகி, பதினைந்து
விஷய-இந்திரியங்களைத் (iii) தோற்றுவிக்கின்றன.
+
1.10. இப்பதினைந்துடன், மனதையும் புத்தியையும் சேர்த்து சூட்சும
அங்கங்கள் பதினேழாக எண்ணப்படும்.
இவை புருஷனின் சூட்சும சரீரம்.
(iii) பதினைந்து இந்திரிய, இந்திரிய-விஷயங்கள் அவையாவன:
ஐந்து ஞானேந்திரியங்கள்: கேட்டல், தொடுதல், பார்த்தல், சுவைத்தல்,
நுகர்தல்.
ஐந்து கர்மேந்திரியங்கள்: பேசுதல், கைவேலை, நடத்தல், வாரிசு உற்பத்தி,
மலஜலம் கழித்தல்.
ஐந்து விஷய தன்மாத்திரைகள்: ஐந்து ஞானேந்திரியங்கள் கிரகிக்க
உபயோகிக்கும் அவற்றிற்கு நேரான சூட்சும அதிர்வலைகள்.
1.11. तत: पञ्च-तत्त्वानां
स्थिति-शील-तामसिक-विषय-पञ्च-तन्मात्राणां
पञ्चीकरणेन स्थूल-शरीरस्य-अङ्गानि
जडी-भूत-पञ्च-क्षित्-अप्-तेजो-मरुत्-व्योमानि-उद्भूतानि ||
+
1.12. एतान्येव चतुर्विंशति: तत्त्वानि ||
1.11. தத: பஞ்ச-தத்வாநாம்
ஸ்திதி-ஶீல-தாமஸிக-விஷய-பஞ்ச-தந்மாத்ராணாம்
பஞ்சீகரணேந ஸ்தூல-ஶரீரஸ்ய-அங்காநி
ஜடீ-பூத-பஞ்ச-க்ஷித்-அப்-தேஜோ-மருத்-வ்யோமாநி-உத்பூதாநி ॥
+
1.12. ஏதாந்யேவ சதுர்விம்ஶதி: தத்வாநி ॥
1.11. அந்த பஞ்ச தத்துவங்கள் தேங்கும் தன்மையுடைய தாமஸ குணத்துடன்
கலந்து உருவான பஞ்ச தன்மாத்திரைகள், மேலும் அவைகளுக்குள்ளே பஞ்சீகரணம்
(iv) அடைந்து ஸ்தூல அல்லது ஜட பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று,
ஆகாயம் ஆகியவைகளை உண்டுசெய்கின்றன.
+
1.12. மேற்சொன்ன இவையாவும் இருபத்தி நான்கு(v)
தத்துவங்கள்.
(iv) பஞ்சீகரணம் என்பது பஞ்ச தன்மாத்திரைகளில், ஒரு தன்மாத்திரையின்
பாதி அளவை (1/2) எடுத்துக்கொண்டு, அதனுடன் மற்ற நான்கு
தன்மாத்திரைகளின் அரைக்கால் (1/8) பங்கு சேர்த்துக் கலந்து, அந்த
பாதியளவுத் தன்மாத்திரைக்கு நேரான ஸ்தூல பூதத்தை
உருவாக்குவது.
(v) சூத்திரம் 1.6ல் கூறப்பட்ட நான்கும், 1.9ல் கூறப்பட்ட
பதினைந்தும், 1.11ல் கூறப்பட்ட ஐந்தும் சேர்த்து தத்துவங்கள் இருபத்தி
நான்கு என எண்ணப்படுகின்றன.
1.13. तत्रैव चतुर्दश-भुवनानि व्याख्यातानि ||
1.13. தத்ரைவ சதுர்தஶ-புவநாநி வ்யாக்யாதாநி ॥
1.13. இவ்விதமாக (மேற்கூறியபடி), கடவுளை முதலாகக்கொண்ட பிரபஞ்சத்
தோற்றம் பதினான்கு புவனங்களாக(vi) வெளிப்பட்ட விதம் இங்கு
கூறப்பட்டுள்ளது.
(vi) ஒரு ஏழு புவனங்கள் அண்டத்திலும் (சமஷ்டி-தொகுதி), மற்ற ஏழு
புவனங்கள் கலனத்தில் அல்லது பிண்டத்திலுமாகச் (வியஷ்டி-பகுதி) சேர்த்து
பதினான்கு புவனங்கள் ஆகின்றன.
அண்டத்தில் வெளிப்படும் புவனங்களுக்கு, சுவர்க்கங்கள் அல்லது லோகங்கள்
என்றும் பெயருள்ளன. அவையாவன:
1) சத்யலோகம் அல்லது தோற்றக் கலப்பற்ற கடவுளின் கோளம்
2) தபலோகம் அல்லது கடவுளின் பேருணர்வுக் கோளம்
3) ஜனலோகம் அல்லது சைதன்யத்தின் பிரதிபிம்பக் கோளம்
4) மஹர்லோகம் அல்லது மாயையின் மூலப்ரகிருதி (இயற்கை)
கோளம்
5) சுவர்லோகம் அல்லது பஞ்ச தத்துவங்கள்-முக்குணங்களுடன்
காரணரூபத்தில் சக்தியாக வெளிப்படும் கோளம்
6) புவர்லோகம் அல்லது பஞ்ச தத்துவங்கள்-முக்குணங்களுடன் சூட்சும,
பிராணரூபத்தில் சக்தியாக வெளிப்படும் கோளம்
7) பூலோகம் அல்லது பஞ்ச தத்துவங்கள்-முக்குணங்களுடன் ஸ்தூல,
ஜடரூபத்தில் பஞ்சபூதங்களாகவும், சக்தியாகவும் வெளிப்படும் கோளம்.
பிண்டத்தில் (உடல்பெற்ற ஜீவாத்மாவில்) வெளிப்படும் புவனங்களுக்கு,
பாதாளங்கள் அல்லது சக்கரங்கள் என்றும் பெயருள்ளன. அவை மேற்சொன்ன ஏழு
லோகங்களின் வரிசையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1) சஹஸ்ராரம் (ஆயிர-இதழ் தாமரை) - தலையுச்சிப் பகுதி
2) ஆக்ஞா சக்கரம் (கட்டளை மையம்) - புருவமத்தி, நெற்றிப்பகுதி
3) விசுத்திச் சக்கரம் - தொண்டைப்பகுதி
4) அநாஹதச் சக்கரம் - இதயப்பகுதி
5) மணிப்பூரகச் சக்கரம் - தொப்புள் பகுதி
6) சுவாதிஷ்டானச் சக்கரம் - கருவிடும் வாசற்பகுதி
7) மூலாதாரச் சக்கரம் - தண்டுவடத்தின் நுனியடிப்பகுதி
1.14. त एव पञ्च कोषा: पुरुषस्य ||
1.14. த ஏவ பஞ்ச கோஷா: புருஷஸ்ய ॥
1.14. ஜீவாத்மா (புருஷர்) பிரபஞ்சத்தில் ஐந்து-அடுக்கு பரிணாம வளர்
உணர்வுறைகளில் (vii)(கோஷம்) ஏதேனும் ஒன்றைக் கொண்டு
வெளிப்படும்.
(vii) பரிணாம வளர் உணர்வுறை ஜீவாத்மாவின் மெய்யான உணர்வினை மறைக்கும்
திரை போன்றது. ஜீவாத்மாவின் வெளிப்பாட்டுத் தன்னுணர்வு,
மெய்யுணர்விலிருந்து எவ்வளவு விலகியுள்ளது என்பதை உணர்வுறை அடுக்கின்
எண்ணிக்கை குறிக்கின்றது. அதிக எண்ணிக்கை அதிகயளவு விலக்கம். தாவர,
ஜீவராசிகளைத் தவிர ஜடப்பொருட்களும் இம்முறையில் சேர்த்துக்
கொள்ளப்படுகின்றது.
உணர்வுறைகளின் ஐந்து-அடுக்குகள் பின்வருமாறு:
1) ஆனந்தமய கோஷம் - மெய்யுணர்விலிருந்து சற்றே மெல்லிய திரையளவு விலகி
இருப்பன
2) விஞ்ஞானமய கோஷம் - பகுத்தறிவை உடையன
3) மனோமய கோஷம் - மனத்தால் இயக்கப்படும் வளர்வுற்ற புலன்களை
உடையன
4) பிராணமய கோஷம் - பிராணசக்தியை உடையன
5) அன்னமய கோஷம் - ஸ்தூல ஜட பொருட்கள், பிற உயிர்களுக்கு உணவாக
அமைவன.
1.15. स्थूल-ज्ञान-क्रमात् सूक्ष्म-विषय-इन्द्रिय-ज्ञानं स्वप्नवत्
||
+
1.16. तत्-क्रमात् मनो-बुद्धि-ज्ञानं-च-आयातम्-इति परोक्षम्
||
1.15. ஸ்தூல-ஞாந-க்ரமாத் ஸூக்ஷ்ம-விஷய-இந்த்ரிய-ஞாநம் ஸ்வப்நவத்
॥
+
1.16. தத்-க்ரமாத் மநோ-புத்தி-ஞாநம்-ச-ஆயாதம்-இதி பரோக்ஷம்
॥
1.15. விழிப்பு நிலையில் ஸ்தூல, ஜட விஷயங்களால் ஏற்படும் எண்ணங்கள்,
நாம் கனவு காணும்போது ஏற்படும் சூட்சும இந்திரிய விஷய எண்ணங்களை
ஒத்திருப்பதாக அறிகிறோம். அது நாம் புறவுலகில் காண்பவைகளைக் கனவுபோல்
நிலையற்றவைகளாக நம்மை உய்த்து உணரச் செய்கின்றது.
+
1.16. அதே விதத்தில் மேலும் ஆராய்ந்து பார்த்தால், விழிப்பு நிலை
அனுபவங்கள், நம் புத்தி மனங்களினால் உருவாக்கப்பட்ட எண்ணங்களை
ஒத்திருப்பதையும் அறியமுடியும். இவ்வாறு சரியாக உய்த்துணர்தலால்
பெறுமறிவு "பரோக்ஷ-ஞானம்" எனப்படும்.
1.17. तत: सद्गुरु-लाभो भक्ति-योगश्च तेन-अपरोक्ष: ||
1.17. தத: ஸத்குரு-லாபோ பக்தி-யோகஶ்ச தேந-அபரோக்ஷ: ॥
1.17. சரியான உய்த்துணர்தலால் பெற்ற பரோக்ஷ-ஞானத்துடன் உண்மையை
நாடுபவர்க்கு, வழிகாட்ட மெய்யுணர்ந்த சத்குரு அமையப் பெறுகிறார். [அவர்
குருவின் உபதேசத்தின்படி நடந்து, தொடர்ந்த பயிற்சியினால், கடவுளின்
உண்மையைத் தெரியப்படுத்தும் பிரணவ சப்தத்தையும், ஒளிரும் ஜோதி
தரிசனத்தையும் அகத்தே விளங்கப் பெறுகிறார்.] அவற்றில் கவனம் செலுத்தி
லயிப்பது பக்தி-யோகம். [பக்தி-யோகத்தினால், தனது உண்மையறியா
நிலையிலிருந்து மீண்டு, மெய்ப்பொருளான கடவுளை நோக்கிச் செல்கின்றார்.]
படிப்படியாக தனது அவித்தை கர்மவினைகள் நீங்கும்போது, மாயையினால்
ஏற்பட்ட பிரபஞ்சத்தோற்றத்தின் உண்மையான தன்மையை (viii) கிரகிக்கிறார்.
இந்த நேரடி அனுபவத்தால் பெறும் அறிவு, "அபரோக்ஷ-ஞானம்"
எனப்படும்.
(viii) ஆதி சங்கரபகவத் பாதாள் இயற்றிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி
அஷ்டகத்தில், முதல் இரண்டு சுலோகங்களில், பிரபஞ்சத்தின் தன்மையைப்
பற்றி மூன்று உதாரணங்களைக் கூறியுள்ளார். அவை மூன்றனையும் சேர்த்து
ஒருங்கே கோர்த்து, அவற்றை அனுசரித்து மேலும் நம் கற்பனையில் அதை
உணரவேண்டும். ஏனெனில், மாயையின் கீழுள்ள எந்த பிரபஞ்ச விஷயமும்
அதை துல்லியமாக விளக்கமுடியாது. அதனால் தான் மாயையை நிர்வசனீயம்
(வார்த்தையால் விவரிக்கமுடியாதது) என்று கூறுவர். அம்மூன்று
உதாரணங்களும் மேலும் சில விளக்கங்களுடன் இங்கு
கொடுக்கப்பட்டுள்ளன:
1) பிரபஞ்சம் ஒரு நகரம் கண்ணாடியில் பிரதிபலிப்பது போன்றது - அதாவது,
பிரபஞ்சம் ஒரு கண்ணாடிபோல் நம் கர்மவினைகளை சமனப்படுத்த ஏதுவாக
அவற்றின் பிரதிபிம்பத்தைப் பிரதிபலிக்கின்றது.
மேலும்,
2) கனவில், நாம் அதில் பார்க்கும் விஷயங்கள் நமக்கு வெளியில்
உள்ளன போல் காண்கின்றோம், ஆனால், அவை எல்லாமே நம்முள்ளே நடப்பவை தான்.
அதேபோல், பிரபஞ்சமும் உள்ளுக்குள் உள்ள (அதாவது, கடவுளின்
பேருணர்வினுள்ளே நிகழும்) அமைப்பியக்கங்களை, வெளியில் தோன்றுமாறு
செய்கின்றது.
மேலும்,
3) ஒரு விதை முளைக்காத முன்னம் எப்படி மரத்தின் புலனாகாத, சூட்சும
ரூபத்தை உள்ளடக்கிப் பின்னர் அந்த மரம் முளைத்து ஸ்தூலமாகத் தோன்றுவது
போல், பிரபஞ்சமும் தோற்றத்திற்கு முன்னம் நம் கர்மவினைகளின் புலனாகாத,
சூட்சும தொகுப்பான மூலப்ரக்ருதியாக இருந்துகொண்டு, பின்னர் மாயையின்
துணையுடன் தேச-கால-கலன தத்துவங்களின் வாயிலாக நமக்குப்
புலனாகும்வகையில் ஸ்தூலமாக வெளிப்படுகின்றது. மேலும், எப்படி ஒரு
மாயாவி அல்லது ஒரு பெரும்யோகி தனது சிருஷ்டிக்கும் தவ-வலிமையினாலும்,
இச்சா-சக்தியினாலும் தான் மனத்தில் நினைப்பவைகளை வெளித்தோற்றிப்
புலப்படுத்துகிறார்களோ, அதே போல் கடவுளும் தன் அளப்பரிய சக்தியினால்
மாயையின் துணையுடன் புலனாகும்வகையில் இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்து
இயக்குகிறார்.
1.18. यत्-आत्मन: परमात्मनि दर्शनं-तत: कैवल्यम् ||
1.18. யத்-ஆத்மந: பரமாத்மநி தர்ஶநம்-தத: கைவல்யம் ॥
1.18. [தனது அவித்தை கர்மம் முழுதும் நீங்கியபின், மாயைக்கு மேம்பட்ட]
தனது ஆன்மா (பிரதிபிம்ப-சைதன்யம்) பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள
கடவுளின் பரமாத்ம ஜோதியின் ஒரு அம்சம் (அல்லது மையம்) என்பதை
உணர்கின்றார். முடிவில், அந்த தனித்த உணர்வையும் அவர் பரமாத்மாவில்
அர்ப்பித்து தியாகம் செய்கையில், "கைவல்யம்" எனப்படும் பூரணமான ஒருமையை
அடைகிறார்.
---
II. अभीष्टम् - அபீஷ்டம்
2.1. अतो मुक्ति-जिज्ञासा ||
2.1. அதோ முக்தி-ஜிக்ஞாஸா ॥
2.1. அதனால் [தனது அவித்தையைக் கொண்டு மாயையினால்
கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படுவதை உய்த்துணர்ந்த அறிவால்],
அக்கட்டிலிருந்து விடுதலை (முக்தி) பெற விரும்பி நாடப்படுகிறது.
2.2. मुक्ति: स्वरूपे-अवस्थानम् ||
2.2. முக்தி: ஸ்வரூபே-அவஸ்தாநம் ॥
2.2. முக்தி என்பது தனது மெய்யான சுயரூபத்தில் ஒன்றி என்றும்
நிலைத்திருப்பது.
2.3. तदा सर्वक्लेश-निवृत्ति: परमार्थ-सिद्धिश्च ||
2.3. ததா ஸர்வக்லேஶ-நிவ்ருத்தி: பரமார்த-ஸித்திஶ்ச ॥
2.3. முக்தியுறுதலின் போது, எல்லா துன்பக் கிலேசங்களும்
நீங்கப்பெற்று, [எல்லா புருஷார்த்தங்களும் பூர்த்தியுற்று]
புருஷார்த்தங்களில் மேன்மையானதான லட்சியத்தை அடையும் பேறு
கிட்டுகின்றது.
2.4. इतरत्र अपूर्ण-काम-जन्म-जन्मान्तर-व्यापि दु:खम् ||
2.4. இதரத்ர அபூர்ண-காம-ஜந்ம-ஜந்மாந்தர-வ்யாபி துக்கம் ॥
2.4. அப்படியில்லையெனில் (முக்தியுறும்வரை), பூரணதிருப்தியுறாத
ஆசைகளால் நேரும் ஜென்மந்தோறும் துக்கத்தால் வியாபிக்கப்பட்ட அனுபவங்கள்
நேர்கின்றன.
2.5. क्लेशो अविद्या-मातृक: ||
+
2.6. भावे-अभावो अभावे भाव इत्येवं बोधो-अविद्या ||
2.5. க்லேஶோ அவித்யா-மாத்ருக: ॥
+
2.6. பா4வே-அபா4வோ அபா4வே பா4வ இத்யேவம் போ3தோ-அவித்யா ॥
2.5. எல்லா துன்பக் கிலேசங்களுக்கும் மூல காரணமான தாய் அவித்தை
[அதாவது, தனது மெய்யான தன்மையை அறியாமை].
+
2.6. 1) உள்ளதை இல்லாததாகவும், 2) இல்லாததை உள்ளதாகவும் தவறாகக்
கருதுதல் அவித்தை எனப்படும்.
2.7. तदेव-आवरण-विक्षेप-शक्ति-विशिष्टत्वात्
क्षेत्रं-अस्मिता-अभिनिवेश-राग-द्वेषाणाम् ||
+
2.8. तस्यावरण-शक्तेर्-अस्मिता-अभिनिवेशौ विक्षेप-शक्तेश्च राग-द्वेषौ
||
+
2.9. स्व-स्वामि-शक्त्योर्-अविविक्त-ज्ञानं-अस्मिता ||
+
2.10. प्राकृतिक-संस्कार-मात्रम्-अभिनिवेश: ||
+
2.11. सुखकर-विषय-तृष्णा राग: ||
+
2.12. दु:खकर-विषय-त्याग-तृष्णा द्वेष: ||
2.7. ததேவ-ஆவரண-விக்ஷேப-ஶக்தி-விஶிஷ்டத்வாத்
க்ஷேத்ரம்-அஸ்மிதா-அபிநிவேஶ-ராக-த்வேஷாணாம் ॥
+
2.8. தஸ்யாவரண-ஶக்தேர்-அஸ்மிதா-அபிநிவேஶௌ விக்ஷேப-ஶக்தேஶ்ச ராக-த்வேஷௌ
॥
+
2.9. ஸ்வ-ஸ்வாமி-ஶக்த்யோர்-அவிவிக்த-ஞாநம்-அஸ்மிதா ॥
+
2.10. ப்ராக்ருதிக-ஸம்ஸ்கார-மாத்ரம்-அபிநிவேஶ: ॥
+
2.11. ஸுககர-விஷய-த்ருஷ்ணா ராக: ॥
+
2.12. துக்ககர-விஷய-த்யாக-த்ருஷ்ணா த்வேஷ: ॥
2.7. மாயையின் இருட்படுத்தும் (ஆவரண), இருமுனைப்படுத்தும் (விக்ஷேப)
தன்மைகளுடைய அதன் வியஷ்டியான அவித்தையை அடிப்படையாகக் கொண்டு,
அகங்காரம் (அஸ்மிதா), அபிமானப்பற்று (அபிநிவேசம்), விருப்பு (ராகம்),
வெறுப்பு (துவேஷம்) ஆகியவை தோன்றுகின்றன.
+
2.8. அவைகளில் அகங்காரமும், அபிமானப்பற்றும் அவித்தையின்
இருட்படுத்தும் (ஆவரண) தன்மையினாலும், விருப்பும், வெறுப்பும்
அவித்தையின் இருமுனைப்படுத்தும் (விக்ஷேப) தன்மையினாலும்
உருவாகின்றன.
+
2.9. உடைமை [அநாத்ம விஷயங்கள்], உடையவன் [ஆத்மா] இவற்றிற்கு இடையே
உள்ள வேறுபாடுகளைச் சரியாகப் பகுத்தறியாமல் ஏற்படும் அறிவு
அகங்காரம்.
+
2.10. தனக்கு அமைந்த உடல்சார்ந்த வாழ்வியல் என்றும் நிலைத்திருக்க
வேண்டி, அதன்மேல் வைக்கும் திண்மையான நம்பிக்கை
அபிமானப்பற்று.
+
2.11. சுகம்தரும் விஷயங்களைப் பெற ஏற்படும் துடிப்பு (தாகம்)
விருப்பு.
+
2.12. துக்கம்தரும் விஷயங்களைத் துறக்க ஏற்படும் துடிப்பு (தாகம்)
வெறுப்பு.
2.13. क्लेश-मूलं कर्म तद्विपाक एव दु:खम् ||
2.13. க்லேஶ-மூலம் கர்ம தத்விபாக ஏவ துக்கம் ॥
2.13. துன்பக் கிலேசங்கள் (2.7 - 2.12ல் குறிப்பிடப்பட்டவை)
கர்மவினைகளுக்கு மூலம்; கர்மவினைகளால் ஏற்படும் விளைவுகள்
துக்கத்தைத் தருகின்றன.
2.14. सर्व-दु:खानां निवृत्तिर्-इत्यर्थ: ||
+
2.15. निवृत्तौ-अपि-अनुवृत्ति-अभाव: परम: ||
2.14. ஸர்வ-துக்காநாம் நிவ்ருத்திர்-இத்யர்த: ॥
+
2.15. நிவ்ருத்தௌ-அபி-அநுவ்ருத்தி-அபா4வ: பரம: ॥
2.14. வாழ்வின் லட்சியம் (புருஷார்த்தங்கள்) துன்பக் கிலேசங்களை
நீக்குவதாக அமையவேண்டும்.
+
2.15. துன்பக் கிலேசங்களை நீக்கி, பின் மறுபடியும் அவைகளைத்
திரும்பவராமல் அழிப்பது தலையாய உன்னத லட்சியம் ஆகும்.
2.16. सर्व-काम-पूर्णत्वे सर्व-दु:ख-मूल-क्लेश-निवृत्ति: तदा
परमार्थ-सिद्धि: ||
+
2.17. सत्-चित्-आनन्द-मयत्व-प्राप्तिर्-इति स्थिर-कामा:
||
+
2.18. सद्गुरु-दत्त-साधन-प्रभावात् चित्तस्य प्रसाद एव-आनन्द:
||
+
2.19. तत: सर्व-दु:खानां हानम्-तदा सर्व-भाव-उदय:-चित् ||
+
2.20. तत आत्मनो नित्यत्व-उपलब्धि: सत् ||
+
2.21. तदेव स्वरूपं पुरुषस्य ||
2.16. ஸர்வ-காம-பூர்ணத்வே ஸர்வ-துக்க-மூல-க்லேஶ-நிவ்ருத்தி: ததா
பரமார்த-ஸித்தி: ॥
+
2.17. ஸத்-சித்-ஆநந்த-மயத்வ-ப்ராப்திர்-இதி ஸ்திர-காமா: ॥
+
2.18. ஸத்குரு-தத்த-ஸாதந-ப்ரபா4வாத் சித்தஸ்ய ப்ரஸாத ஏவ-ஆநந்த:
॥
+
2.19. தத: ஸர்வ-துக்காநாம் ஹாநம்-ததா ஸர்வ-பா4வ-உதய:-சித்
॥
+
2.20. தத ஆத்மநோ நித்யத்வ-உபலப்தி: ஸத் ॥
+
2.21. ததேவ ஸ்வரூபம் புருஷஸ்ய ॥
2.16. எல்லா ஆசைகளும் நிறைவுற்று, எல்லா துக்கங்களும், அவற்றிற்குக்
காரணமான எல்லா துன்பக் கிலேசங்களும் நீங்கும்போது, உன்னத லட்சியம்
சித்தியாகின்றது.
+
2.17. "ஸத் (இருப்பு) - சித் (பேருணர்வு) - ஆனந்த"மய நிலையை அடைவதே
இதயத்தின் ஸ்திரமான, மெய்யான ஆசையாகும்.
+
2.18. ஸத்குரு உபதேசித்த சாதனைப் பயிற்சியை முனைப்புடன்
மேற்கொள்வதால், சித்தம் அடையும் சாந்தத்தில் பெறுவது
ஆனந்தம்.
+
2.19. அதன்பின் [அந்த ஆனந்த அனுபவத்தினால்], எல்லா துக்கங்களும்
அழிகின்றன; துக்கநிவிருத்தி, எல்லாவற்றிலும் விளங்கும் பிரபஞ்ச உணர்வு
பாவனையை உண்டுசெய்கிறது; அதில் ஏற்படுவது பேருணர்வு
(சித்).
+
2.20. அதன்பின் [பேருணர்வு அனுபவத்தினால்], ஆன்மாவின் என்றும் அழியாத
நித்தியத்துவம் விளங்குகின்றது; அந்த நித்தியத்துவம் இருப்பு
(ஸத்).
+
2.21. அதுதான் [ஸத் (இருப்பு) - சித் (பேருணர்வு) - ஆனந்தம்] ஒரு
புருஷனின் [ஜீவனின்] உண்மையான சுயரூபம்.
2.22. तदा सर्व-काम-पूर्णो-परमार्थ-सिद्धिकात् गुणानाम्-प्रतिप्रसव
आत्मन: स्वरूप-प्रतिष्ठा, तदेव कैवल्यम् ||
2.22. ததா ஸர்வ-காம-பூர்ணோ-பரமார்த-ஸித்திகாத் குணாநாம்-ப்ரதிப்ரஸவ
ஆத்மந: ஸ்வரூப-ப்ரதிஷ்டா, ததேவ கைவல்யம் ॥
2.22. 1) எல்லா ஆசைகளும் முழுதுமாகப் பூர்த்தியுற்று, 2) வாழ்வின்
உன்னத லட்சியம் அடையப்பெற்று; 3) அதனால் தங்கள் கடமை முடிந்து
முக்குணங்கள் அவற்றின் மூலத்திற்குத் (மூலப்ரக்ருதிக்கு) திரும்பி, 4)
தனது ஆன்மாவின் மெய்யான சுயரூபமான கடவுட்பேருணர்வுடன் இடையறாமல் ஒன்றி
நிலைக்கும்போது, முடிவான முக்தியான கைவல்யம்
சித்திக்கின்றது.
---
III. साधनम् - ஸாதநம்
3.1. तप: स्वाध्याय-ब्रह्मनिधानानि यज्ञ: ||
+
3.2. मात्रा-स्पर्शेषु तितिक्षा तप: ||
+
3.3. आत्म-तत्व-उपदेश-श्रवण-मनन-निदिध्यासनं-एव स्वाध्याय:
||
+
3.4. प्रणव-शब्द एव पन्था ब्रह्मण: तस्मिन् आत्म-समर्पणं
ब्रह्मनिधानम् ||
3.1. தப: ஸ்வாத்யாய-ப்ரஹ்மநிதாநாநி யக்ஞ: ॥
+
3.2. மாத்ரா-ஸ்பர்ஶேஷு திதிக்ஷா தப: ॥
+
3.3. ஆத்ம-தத்வ-உபதேஶ-ஶ்ரவண-மநந-நிதித்யாஸநம்-ஏவ ஸ்வாத்யாய:
॥
+
3.4. ப்ரணவ-ஶப்த ஏவ பந்தா ப்ரஹ்மண: தஸ்மிந் ஆத்ம-ஸமர்பணம்
ப்ரஹ்மநிதாநம் ॥
3.1. தவம் புரிதல், ஆன்மீக சுயக்கல்வி பயிலுதல், கடவுளைச் சரணடைதல்
ஆகியன "யாகம்"(i).
+
3.2. தவம் என்பது [குளிர், வெப்பம், சுகம், துக்கம் போன்ற] எந்த
சூழ்நிலையிலும் அமைதியாகப் பொறுமை காத்தல்.
+
3.3. 1) ஆன்மீகத் தத்துவ உபதேசங்களைக் கேட்டல் அல்லது படித்தல், 2)
அக்கருத்துக்களைப் பற்றி சிந்தித்தல் மற்றும் அவற்றில் தனக்குள்ள
சம்பந்தத்தை ஆராய்தல் (ஆன்ம-விசாரணை), 3) உண்மையான ஆன்மீகக்
கருத்துக்களை மனதில் நிலையாக உருக்கொள்ளுதல் - இவை ஆன்மீக
சுயக்கல்வியில் அடங்கும்.
+
3.4. கடவுளை அடைவதற்கான ஒரே மார்க்கமான பிரணவ சப்தத்தில், தன்
சுயஉணர்வை முழுமையாக அர்ப்பணம் செய்வது கடவுளைச் சரணடைதல்.
(i) இங்கு யாகம் என்பது, அக்கினிகுண்டத்தில் அக்கினி வளர்த்து,
மந்திரங்கள் ஓதி, ஆகுதியிட்டு செய்யப்படுவதைக் குறிப்பதல்ல; இங்கு
"யாகம்" என்பது, பஞ்ச மஹாபூதங்களில் அக்கினியின் அம்சமான நம் சக்தியை
உபயோகித்து, அதன் மூலத்தைத் (கடவுளை) திரும்ப அடைவதற்காகச் செய்யும்
தியாகச் செயல்களைக் குறிக்கின்றது.
3.5. श्रद्धा-वीर्य-स्मृति-समाधि-अनुष्ठानात् तस्य-आविर्भव:
||
+
3.6. स्वभावज-प्रेम्ण: वेग-तीव्रता श्रद्धा ||
3.5. ஶ்ரத்தா-வீர்ய-ஸ்ம்ருதி-ஸமாதி-அநுஷ்டாநாத் தஸ்ய-ஆவிர்ப4வ:
॥
+
3.6. ஸ்வபா4வஜ-ப்ரேம்ண: வேக-தீவ்ரதா ஶ்ரத்தா ॥
3.5. 1) சிரத்தை [ஆன்மநம்பிக்கை], 2) வீரியம் [அறத்தின்மேல் உறுதி],
3) ஸ்ம்ருதி [ஆன்மநினைவு], 4) ஸமாதி [ஜீவாத்ம உணர்வை கடவுட்
பேருணர்வுடன் ஒன்றுதல்] - இவைகளை முனைப்பாக, முறையாக அனுஷ்டானம்
செய்தலால் பிரணவ சப்தத்தைக் கேட்கும் அனுபவம் ஏற்படுகிறது.
+
3.6. [கடவுளின் கவரும்விசையினால் முழுமையைத் திரும்ப அடைவதற்காக
ஜீவராசிகளின்] இதயத்தில் சுபாவமாகச் சுரக்கும் அன்பின் வேகம்
தீவிரமடைதலால் உண்டாவது சிரத்தை [ஆன்மநம்பிக்கை].
3.7. श्रद्धा-सेवित-सद्गुरो: स्वभावज-उपदेश-पालने वीर्य-लाभ:
||
+
3.8. सर्व एव गुरव: सन्ताप-हारका: संशयच्-छेदका: शान्ति-प्रदायका:
|
सत् तत्संग: ब्रह्मवत् करणीय:, विपरीतम्-असत् विषवद्-वर्जनीयम्
||
Quote (in 3.8 commentary):
अप्सु देवो मनुष्याणां दिवि देवो मनीषिणाम् |
काष्ठ-लोष्ट्रेषु मूर्खाणां युक्तस्य-आत्मनि देवता
||
3.7. ஶ்ரத்தா-ஸேவித-ஸத்குரோ: ஸ்வபா4வஜ-உபதேஶ-பாலநே வீர்ய-லாப: ॥
+
3.8. ஸர்வ ஏவ குரவ: ஸந்தாப-ஹாரகா: ஸம்ஶயச்-சேதகா: ஶாந்தி-ப்ரதாயகா:
।
ஸத் தத்ஸங்க: ப்ரஹ்மவத் கரணீய:, விபரீதம்-அஸத் விஷவத்-வர்ஜநீயம்
॥
(3.8 உரையில் மேற்கோள் காட்டப்பட்ட சுலோகம்):
அப்ஸு தேவோ மநுஷ்யாணாம் திவி தேவோ மநீஷிணாம் ।
காஷ்ட-லோஷ்ட்ரேஷு மூர்காணாம் யுக்தஸ்ய-ஆத்மநி தேவதா ॥
3.7. சிரத்தையுடன், சுபாவமான அன்பினால், தன்னிச்சையாக வழங்கப்படும்
சத்குருவின் உபதேசங்களைக் கடைப்பிடித்து நன்கு ஒழுகுதலினால் அடையும்
பலன் வீரியம் [அறத்தின்மேல் உறுதி].
+
3.8. 1) தாபத்தை அழிப்பதும், 2) சந்தேகத்தை நீக்குவதும், 3) சாந்தம்
நல்குவதுமானவைகள் உண்மையைச் (ஸத்) சார்ந்தவையாதலின், இவையாவும்
[நம்மைக் கடவுளை நோக்கி இட்டுச்செல்வதனால்] கடவுளைப் போன்று
செயல்புரிகின்றன; இவைகளை "குரு"வாக மதிப்புடன் பா4வித்து நட்புறவு
கொள்ள வேண்டும்(ii).
மேற்சொன்ன மூன்றனுக்கு எதிர்மறையானவை (அதாவது, தாபத்தை உண்டாக்குபவை,
சந்தேகத்தைப் பெருக்குபவை, சாந்தத்தைக் குலைப்பவை) பொய்ம்மை
(அஸத்) ஆகும். அவைகளை விஷம்போல் கருதி நீங்கவேண்டும்.
(3.8 உரையில் மேற்கோள் காட்டப்பட்ட சுலோகம்):
சில மனிதர்கள் நீரை [தீர்த்தத்தை] தெய்வமாக வழிபடுகின்றனர்; மனத்தை
அடக்கி ஆளுபவர்கள் ஒளியுலகில் வாழ்பவர்களை [தேவர்களை] தெய்வமாகவும்,
கல்லாதவர்கள் கட்டை, கல் போன்றவற்றையும், யோகிகள் ஆன்மாவையும்
தெய்வமாக வழிபடுகின்றனர்(iii).
(ii) ஆதிகுருவான கடவுள் பிரபஞ்சம் முழுதுமாக விரவியுள்ளதால், இங்கு
"குரு" என்று குறிப்பிடப்பட்டது மனிதர்களை மட்டுமின்றி அஃறிணைகளையும்
(நூல்கள், உபதேசங்கள், பொருட்கள், மந்திரங்கள், கோயில்கள், நதிகள்,
தீர்த்தங்கள், பழக்கங்கள், எண்ணங்கள், மனோபாவனைகள், உறவுகள் போன்றவை)
உள்ளடக்கியுள்ளது. இது எதிர்மறையில் சொன்ன நீங்க வேண்டியவைகளுக்கும்
பொருந்தும்.
(iii) அவரவர்களின் மனப் பரிணாம வளர்நிலையைப் பொறுத்து அவர்கள்
சூழ்நிலையமைந்தாலும், சுபாவமான இதயத்தின் அன்பு திறவாகும்போது,
அவர்களின் ஆன்ம வளர்ச்சிக்கு ஏதுவாக மேற்சொன்ன மூன்று நிர்ணய
விஷயங்களையும் அனுசரித்து தேர்ந்தெடுத்தல் தொடர்ந்து நடைபெறுகின்றது.
அந்த அன்பு மலர்ச்சியுறாத போது, நாம் தவறாக வேறு நிர்ணய விஷயங்களை
பொறுத்துத் தேர்ந்தெடுத்து, துன்பங்களை விளைவித்துக்
கொள்கின்றோம்.
3.9. तद्-वीर्यं यम-नियम-अनुष्ठानात् द्रुढ-भूमि:
||
+
3.10. अहिंसा-सत्य-अस्तेय-ब्रह्मचर्य-अपरिग्रह-आदयो यम:
||
+
3.11. शौच-सन्तोष-सद्गुरु-उपदेश-पालन-आदय: नियम: ||
3.9. தத்-வீர்யம் யம-நியம-அநுஷ்டாநாத் த்ருட-பூமி: ॥
+
3.10. அஹிம்ஸா-ஸத்ய-அஸ்தேய-ப்ரஹ்மசர்ய-அபரிக்ரஹ-ஆதயோ யம:
॥
+
3.11. ஶௌச-ஸந்தோஷ-ஸத்குரு-உபதேஶ-பாலந-ஆதய: நியம: ॥
3.9. அந்த வீரியம் [அறத்தின்மேல் உறுதி], யம நியமங்களை நன்கு
கடைப்பிடிப்பதன் மூலம் அசைக்கமுடியாத உறுதி அடைகின்றது.
+
3.10. அஹிம்சை (இன்னா செய்யாமை), ஸத்யம் (பொய்யாமை), அஸ்தேயம்
(கள்ளாமை), பிரம்மச்சரியம் (கூடாஒழுக்கமின்மை), அபரிக்கிரஹம்
(தேவைமீறிக் கொள்ளாமை) - இவை யமம் என்னும் தகாதன விலக்கல்
(iv).
+
3.11. [அகம், புறம்] தூய்மை, ஆன்மதிருப்தி, சத்குருவின் உபதேசங்களை
சிரத்தையுடன் அடிபணிந்து பயின்று பழகுதல் - இவை நியமம் என்னும் தகுந்தன
பழகுதல்.
(iv) ஸத்யம் என்பது பொய் பேசுவதை விலக்குதல், பிரம்மச்சரியம்
என்பது கூடாஒழுக்கத்தை விலக்குதல் என்ற நோக்கில், இவை தகாதன "விலக்கல்"
எனும் யமம் தொகுப்பில் இடம்பெறுகின்றன.
3.12. तत: पाश-क्षय: ||
+
3.13. घृणा-लज्जा-भय-शोक-जुगुप्सा-जाति-कुल-माना: पाश-अष्टकम्
||
+
3.14. तदा चित्तस्य महत्त्वं वीरत्वं वा ||
+
3.15. गार्हस्थ्य-आश्रम-उपयोग्य-आसन-प्राणायाम-प्रत्याहार-साधनेषु
योग्यता च ||
+
3.16. स्थिर-सुखं-आसनम् ||
+
3.17. प्राणानां संयम: प्राणायाम: ||
+
3.18. इन्द्रियाणाम्-अन्त-र्मुखत्वं प्रत्याहार: ||
3.12. தத: பாஶ-க்ஷய: ॥
+
3.13. க்4ருணா-லஜ்ஜா-ப4ய-ஶோக-ஜுகுப்ஸா-ஜாதி-குல-மாநா: பாஶ-அஷ்டகம்
॥
+
3.14. ததா சித்தஸ்ய மஹத்வம் வீரத்வம் வா ॥
+
3.15. கார்ஹஸ்த்ய-ஆஶ்ரம-உபயோக்ய-ஆஸந-ப்ராணாயாம-ப்ரத்யாஹார-ஸாதநேஷு
யோக்யதா ச
+
3.16. ஸ்திர-ஸுகம்-ஆஸநம் ॥
+
3.17. ப்ராணாநாம் ஸம்யம: ப்ராணாயாம: ॥
+
3.18. இந்த்ரியாணாம்-அந்தர்-முகத்வம் ப்ரத்யாஹார: ॥
3.12. வீரியத்தில் நிலையான உறுதியடையும்போது கர்மபந்தத் தளைகள்
அழிகின்றன.
+
3.13. வெறுப்பு, பொறுப்பின்மை, பயம், சோகம், குற்றம்சாட்டுதல்,
ஜாதிச்செருக்கு, குலச்செருக்கு, மானச்செருக்கு - இவை எட்டும்
கர்மபந்தத் தளைகள்.
+
3.14. இக்கர்மபந்தத் தளைகளிலிருந்து விடுபடுகையில், சித்தம் தனது
இயற்கையான பெருந்தன்மையெனும் வீரத்தை
வெளிப்படுத்துகின்றது.
+
3.15. அந்நிலையில் [சித்தம் பெருந்தன்மை அடையும்போது], ஆசனம்,
பிராணாயாமம், உள்முகமாக்கல் (பிரத்தியாஹாரம்) ஆகிய பயிற்சிகளை
மேற்கொள்ளும் வகையில், இயற்கையோடு ஒன்றிய ஆன்மீக வாழ்க்கைக்கு
ஒருவர் யோக்கியதை அடைகிறார்.
+
3.16. ஆசனம் என்பது உடல் சலனமின்றி நிலையாகவும், சுகமாகவும்
இருத்தல்.
+
3.17. நம் உடலில் இயங்கும் பிராணகதியை [மூச்சுப்பயிற்சி மற்றும் பிற
பயிற்சிகளினால்] சீராக, முறையாகக் கட்டுப்படுத்துதல் பிராணாயாமம்
(v).
+
3.18. புலன்கள் தத்தம் விஷயங்களை நாடி வெளிமுகமாகச் செல்லும் அவைகளின்
ஓட்டத்தினை, ஆன்மாவை நோக்கித் திசைதிருப்புதல் உள்முகமாக்கல்
(பிரத்தியாஹாரம்).
(v) பிராணாயாமத்தினால் உடலில் இதயம், நுரையீரல், மற்றும் பிற முக்கிய
உறுப்புகளின் அனிச்சை செயல்களால் காலப்போக்கில் ஏற்படும் தேய்மானத்தைக்
குறைத்து வாழ்வை நீட்டிக்கவும், அதன்மூலம் வாழ்வில் செய்யவேண்டிய
கடமைகளை மேற்கொள்ளவும் ஏதுவாகின்றது. மேலும், பதஞ்சலி யோகா
சூத்திரத்தில் (2.52, 2.53) குறிப்பிடப்பட்டது போல்:
PYS 2.52. பிராணாயாம சித்தி பெறுகையில் உள்ளொளியை மூடியிருக்கும்
மறைப்பு அகலுகிறது.
PYS 2.53. மேலும், பிராணாயாம சித்தியால் மனம் ஒருமுகப்பாடு பெற
ஆயுத்தமாகிறது.
3.19. चित्त-प्रसादे सति सर्व-भाव-उदय: स्मृति: ||
+
3.20. तदेव-अर्थमात्र-निर्भासं स्वरूप-शून्यमिव समाधि: ||
+
3.21. तत: संयमस्-तस्मात् ब्रह्म-प्रकाशक-प्रणव-शब्द-अनुभव:
||
+
3.22. तस्मिन्-आत्मनो योगो भक्ति-योगस्-तदा दिव्यत्वम् ||
3.19. சித்த-ப்ரஸாதே ஸதி ஸர்வ-பா4வ-உதய: ஸ்ம்ருதி: ॥
+
3.20. ததேவ-அர்தமாத்ர-நிர்பா4ஸம் ஸ்வரூப-ஶூந்யமிவ ஸமாதி:
॥
+
3.21. தத: ஸம்யமஸ்-தஸ்மாத் ப்ரஹ்ம-ப்ரகாஶக-ப்ரணவ-ஶப்த-அநுபவ:
॥
+
3.22. தஸ்மிந்-ஆத்மநோ யோகோ பக்தி-யோகஸ்-ததா திவ்யத்வம் ॥
3.19. சித்தம் அமைதியடைதலினால் தன்னுணர்வு விரிவடைந்து
பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும் தன் சித்தத்தில் உணரும் பா4வனையான
ஸ்ம்ருதி [ஆன்மநினைவு] உண்டாகின்றது.
+
3.20. தன்னைப் பற்றிய குறுகிய உணர்வின்றி, விரிவடைந்த பிரபஞ்ச உணர்வு
தனது சித்தத்தில் ஒளிர்வது சமாதி நிலை.
+
3.21. அந்த பிரபஞ்ச உணர்வு சமாதிநிலையில் ஸம்யமம் (vi) செய்தலினால்
கடவுளின் உண்மையை நமக்குப் பிரகாசிக்கும் பிரணவ சப்தத்தைக்
கேட்கும் அனுபவம் ஏற்படுகிறது.
+
3.22. அப்பிரணவ சப்தத்தில் ஸம்யமம் செய்து, அதில் தன்னை லயிப்பது
பக்தி-யோகம். இதனால், தெய்வத்தன்மை (திவ்யத்வம்) நம்மிடமிருந்து
வெளித்தோன்ற ஆரம்பிக்கின்றது.
(vi) "ஸம்யமம்" என்பது தாரணை, தியானம், சமாதி எனும் மூன்று யோக உட்புற
அங்கங்களையும் ஒருங்கே குறிக்கும் சொல். பதஞ்சலி யோகா சூத்திரத்தில்
(PYS 3.1 - 3.4), இவற்றிற்கு இலக்கணம் பின்வருமாறு
சொல்லப்பட்டுள்ளது:
PYS 3.1. சித்தத்தின் கவனத்தை ஒரே இடத்தில் [விஷயத்தில்]
தக்கவைத்திருப்பது ஒருமுகமாக்கல் [தாரணை].
PYS 3.2. ஒருமுகமாகி அந்த விஷயத்தின் தன்மையை கிரகிப்பது
தியானம்.
PYS 3.3. தியானிக்கப்படும் விஷயம் தனது மெய்த்தன்மையை எவ்வித
வடிவமுமின்றி உள்ளபடி ஒளிர்வது சமாதி.
PYS 3.4. மேற்கூறிய மூன்றும் [PYS 3.1 - 3.3] ஒருங்கே "ஸம்யமம்"
என்றழைக்கப்படும்.
3.23.
मूढ-विक्षिप्त-क्षिप्त-एकाग्र-निरुद्धाश्-चित्त-भेदास्-ततो-जाति-अन्तर-परिणाम:
||
3.23.
மூட-விக்ஷிப்த-க்ஷிப்த-ஏகாக்ர-நிருத்தாஶ்-சித்த-பேதாஸ்-ததோ-ஜாதி-அந்தர-பரிணாம:
॥
3.23. சித்த பரிணாம வளர்நிலைகள், 1) மூட நிலை 2) உத்வேக நிலை 3)
ஸ்திர நிலை 4) ஒருமுகமான நிலை 5) தூய நிலை என ஐந்து படிநிலைகளாக
பிரிக்கப்பட்டுள்ளன.
3.24. मूढ-चित्तस्य विपर्यय-वृत्ति-वशाद् जीवस्य शूद्रत्वम्, तदा
ब्रह्मण: कला-मात्र-इन्द्रिय-ग्राह्य-स्थूल-विषय-प्रकाशात् कलि:
||
3.24. மூட-சித்தஸ்ய விபர்யய-வ்ருத்தி-வஶாத் ஜீவஸ்ய ஶூத்ரத்வம், ததா
ப்ரஹ்மண: கலா-மாத்ர-இந்த்ரிய-க்ராஹ்ய-ஸ்தூல-விஷய-ப்ரகாஶாத் கலி:
॥
3.24. கடவுளின் பிரபஞ்சத்தோற்றத்தில், நமக்கு கண்ணெதிரே விளக்கமுறும்
முதல்தளமான பூலோகத்தில், ஜடமான புலன்களால் கிரகிக்கப்படும்
ஸ்தூலவிஷயங்களை உண்மை எனக் கருதும் சித்தம் "மூடநிலை"யில்,
"பொய்யறிவு" (விபர்யய) விருத்தி [உள்ளதை உள்ளபடி அறியாமல் குறைவாகவோ,
அல்லது மாற்றியோ அறிவது] வசமாகின்றது. இந்த நிலையில் உள்ள மனிதர்கள்
"சூத்திரத்தன்மை" உடையவர்கள் [பிறருக்கு சேவகம் செய்யும் சேவகப்
படிநிலை] எனப்படுவர். இம்மூட நிலையிலுள்ளோர் ஒரு
சூரியமண்டலத்தில் பெரும்பான்மை ஆகும்போது, அந்த யுகம் சதுர்-யுகக்
காலக்கிரம சுழற்சியில் "கலியுகம்" (பகுத்தறிவு குன்றி, ஆன்மீக
அறியாமையில் இருப்பது) எனப்படும்.
3.25. ब्रह्मण: प्रथम-पाद-पूर्णत्वे
द्वितीय-सूक्ष्म-विषय-ज्ञाना-प्राप्त-संधिकाले चित्तस्य विक्षेपस्-तदा
प्रमाण-वृत्ति-वशात् क्षत्रियत्वम् ||
+
3.26. तत: सद्गुरु-लाभो भक्ति-योगश्च तदा-लोकान्तर-गमनम् ||
3.25. ப்ரஹ்மண: ப்ரதம-பாத-பூர்ணத்வே
த்விதீய-ஸூக்ஷ்ம-விஷய-ஞாநா-ப்ராப்த-ஸந்திகாலே சித்தஸ்ய விக்ஷேபஸ்-ததா
ப்ரமாண-வ்ருத்தி-வஶாத் க்ஷத்ரியத்வம் ॥
+
3.26. தத: ஸத்குரு-லாபோ பக்தி-யோகஶ்ச ததா-லோகாந்தர-கமநம் ॥
3.25. கடவுளின் பிரபஞ்சத்தோற்றத்தின் முதல்தளமான பூலோக [ஸ்தூல விஷய]
அனுபவத்திற்குப் பிறகு, மனிதர்கள் சூட்சும விஷயங்கள்
விளக்கமுறுவதற்காக வேண்டி, அவை அனுபவமாகும் கடவுளின்
பிரபஞ்சத்தோற்றத்தின் இரண்டாவதுதளத்திற்குச் [புவர் லோகத்திற்கு] செல்ல
விழைகிறார்கள். இந்த இடைப்பட்ட சந்திகால இடைவெளியில், சித்தம் "உத்வேக
நிலை" அடைந்து "அறியும் அளவைகள்*" (பிரமாண) விருத்தி வசமாகின்றது. இந்த
நிலையில் உள்ள மனிதர்கள் "க்ஷத்திரியத்தன்மை" உடையவர்கள் [உண்மையை
நிலைநாட்ட போராடுபவர்கள்] எனப்படுவர்.
+
3.26. அவ்வமயம் உண்மையை நாடுபவர்க்கு, வழிகாட்ட மெய்யுணர்ந்த சத்குரு
அமையப் பெறுகிறார். அவர் குருவின் உபதேசத்தின்படி நடந்து, தொடர்ந்த
பயிற்சியினால், கடவுளின் உண்மையைத் தெரியப்படுத்தும் பிரணவ
சப்தத்தையும், ஒளிரும் ஜோதி தரிசனத்தையும் அகத்தே விளங்கப் பெற்று,
அவற்றில் லயமடைந்து பக்தி-யோகத்தினால், தனது உண்மையறியா நிலையிலிருந்து
மீண்டு, மெய்ப்பொருளான கடவுளை நோக்கி படிப்படியாக பல லோகங்களைக்
கடந்துசெல்ல ஆரம்பிக்கின்றார்.
* - "அறியும் அளவைகள்" (பிரமாண) விருத்தி இலக்கணம்:
பதஞ்சலி யோகா சூத்திரம்
PYS 1.7. [புலன்களால்] நேரடி காட்சி, [குறிகளால் உய்த்துணரும்]
அனுமானம், [நம்பத்தகு பிறர் மூலம் அறியும்] ஆகமம் என அறியும் அளவைகள்
மூன்று.
3.27. भूः-भुवः-स्वः-महः-जनः-तप: सत्यम्-इति सप्त लोका: ||
3.27. பூ:-புவ:-ஸ்வ:-மஹ:-ஜந:-தப: ஸத்யம்-இதி ஸப்த லோகா: ॥
3.27. அண்டத்தில் உள்ள ஏழு புவனங்களுக்கு, சுவர்க்கங்கள் அல்லது
லோகங்கள் என்றும் பெயருள்ளன. அவையாவன:
1) பூலோகம் அல்லது பஞ்ச தத்துவங்கள்-முக்குணங்களுடன் ஸ்தூல,
ஜடரூபத்தில் பஞ்சபூதங்களாகவும், சக்தியாகவும் வெளிப்படும் கோளம்
2) புவர்லோகம் அல்லது பஞ்ச தத்துவங்கள்-முக்குணங்களுடன் சூட்சும,
பிராணரூபத்தில் சக்தியாக வெளிப்படும் கோளம்
3) சுவர்லோகம் அல்லது பஞ்ச தத்துவங்கள்-முக்குணங்களுடன்
காரணரூபத்தில் சக்தியாக வெளிப்படும் கோளம்
4) மஹர்லோகம் அல்லது மாயையின் மூலப்ரகிருதி (இயற்கை)
கோளம்
5) ஜனலோகம் அல்லது சைதன்யத்தின் பிரதிபிம்பக் கோளம்
6) தபலோகம் அல்லது கடவுளின் பேருணர்வுக் கோளம்
7) சத்யலோகம் அல்லது தோற்றக் கலப்பற்ற கடவுளின் கோளம்
3.28. भुव-र्लोके ब्रह्मण: द्वितीय-पाद-सूक्ष्मान्त-र्जगत्-प्रकाशाद्
द्वापर:, जीवस्य द्विजत्वं-च, तदा चित्तस्य क्षिप्तत्वात्-तस्य
वृत्ति-र्विकल्प: ||
3.28. புவர்-லோகே ப்ரஹ்மண: த்விதீய-பாத-ஸூக்ஷ்மாந்தர்-ஜகத்-ப்ரகாஶாத்
த்வாபர:, ஜீவஸ்ய த்விஜத்வம்-ச, ததா சித்தஸ்ய க்ஷிப்தத்வாத்-தஸ்ய
வ்ருத்திர்-விகல்ப: ॥
3.28. கடவுளின் பிரபஞ்சத்தோற்றத்தின் இரண்டாவதுதளமான புவர்லோகத்தில்,
உள்ளுலகத்தைப் பிரகாசப்படுத்தும் சூட்சும விஷயங்களை கிரகிக்கக்கூடிய
திறனுடைய சித்தம் "ஸ்திர நிலை" அடைய ஏதுவாகி, "கற்பனை*" (விகல்ப)
விருத்தி [உண்மையைப் பற்றி மனதில் உண்டாகும் கருத்துக்கள்]
வசமாகின்றது. இந்த நிலையில் உள்ள மனிதர்கள் "இருபிறப்பாளர்கள்"
[கீழ்த்தள லோகத்திலிருந்து மேல்தள லோக அனுபவங்களுக்குப் புகுவதனால்]
எனப்படுவர். இந்த நிலையிலுள்ளோர் ஒரு சூரியமண்டலத்தில் பெரும்பான்மை
ஆகும்போது, அந்த யுகம் சதுர்-யுகக் காலக்கிரம சுழற்சியில் "துவாபர
யுகம்" (பகுத்தறிவும், ஆன்மீக அறிவும் ஓரளவுக்கு வளர்ந்து இருப்பது;
பொருட்சக்தியின் உபயோகங்களை அறிந்த யுகம்) எனப்படும்.
* - "கற்பனை" (விகல்ப) விருத்தி இலக்கணம்:
பதஞ்சலி யோகா சூத்திரம்
PYS 1.9. இல்லாத ஒன்றினை மனத்தினால் காணும் காட்சி [கற்பனை].
3.29. स्वर्गे चित्तस्य-एकाग्र-तया वृत्ति: स्मृतिस्-तत:
ब्रह्मणस्-तृतीय-पाद-जगत्-कारण-प्रकृति-ज्ञान-वशात् त्रेता, तदा
विप्रत्वं जीवस्य ||
3.29. ஸ்வர்கே சித்தஸ்ய-ஏகாக்ர-தயா வ்ருத்தி: ஸ்ம்ருதிஸ்-தத:
ப்ரஹ்மணஸ்-த்ருதீய-பாத-ஜகத்-காரண-ப்ரக்ருதி-ஞாந-வஶாத் த்ரேதா, ததா
விப்ரத்வம் ஜீவஸ்ய ॥
3.29. கடவுளின் பிரபஞ்சத்தோற்றத்தின் மூன்றாவதுதளமான சுவர்லோகத்தில்,
பிரபஞ்சத்திற்கு காரணமான இயற்கையைப் பற்றிய அறிவை கிரகிக்கக்கூடிய
திறனுடைய சித்தம் "ஒருமுகமான நிலை" அடைந்து, அது "ஞாபக*"
(ஸ்ம்ருதி) விருத்தி [உண்மையைப் பற்றிய திடமான அறிவு]
வசமாகின்றது. இந்த நிலையில் உள்ள மனிதர்கள் "அறிவாளிகள்
(விப்பிரர்கள்)" [கடவுள், பிரபஞ்சம் பற்றி நன்கு கற்று, முழுமைபெறற்கு
அருகாமையில் உள்ளவர்கள்] எனப்படுவர். இந்த நிலையிலுள்ளோர் ஒரு
சூரியமண்டலத்தில் பெரும்பான்மை ஆகும்போது, அந்த யுகம் சதுர்-யுகக்
காலக்கிரம சுழற்சியில் "திரேதா யுகம்" (பகுத்தறிவும், ஆன்மீக அறிவும்
நன்கு வளர்ந்து இருப்பது; மனோசக்தியின் உபயோகங்களை அறிந்த யுகம்)
எனப்படும்.
* - "ஞாபக" (ஸ்ம்ருதி) விருத்தி இலக்கணம்:
பதஞ்சலி யோகா சூத்திரம்
PYS 1.11. முன்னம் அனுபவித்து, அழியாமல் தங்கியிருக்கும் நினைவுகள்
ஞாபகம்.
3.30. मह-र्लोके चित्तस्य निरुद्धत्वात्-तस्य
वृत्ति-र्निद्रा
तत: सर्व-विकार-अभावे ब्रह्मवत् स्वात्म-अनुभवात्
ब्रह्मणत्वं-तदा-ब्रह्मणस्-तुरीयांश-सत्-पदार्थ-प्रकाशात् सत्यम्
||
3.30. மஹர்-லோகே சித்தஸ்ய நிருத்தத்வாத்-தஸ்ய வ்ருத்திர்-நித்ரா தத:
ஸர்வ-விகார-அபா4வே ப்ரஹ்மவத் ஸ்வாத்ம-அநுபவாத்
ப்ரஹ்மணத்வம்-ததா-ப்ரஹ்மணஸ்-துரீயாம்ஶ-ஸத்-பதார்த-ப்ரகாஶாத் ஸத்யம்
॥
3.30. கடவுளின் பிரபஞ்சத்தோற்றத்தின் நான்காவதுதளமான மெய்ப்பொருளைப்
பிரகாசிக்கும் மஹர்லோகத்தில், சித்தம் "தூய நிலை" அடைந்து, அது
"நித்திரை*" விருத்தி [எண்ணங்களற்ற மனோலய நிலை] வசமாகின்றது. அவ்வமயம்,
எல்லா பிரபஞ்ச மாறுபாடுகளும் நீங்கி, கடவுளைப் போன்று தானும் மாயையின்
எல்லைக்கப்பாற்பட்ட அனுபவத்தைப் பெறுவதால், இந்த நிலையில் உள்ள
மனிதர்கள் "பிராமணர்கள்" [கடவுள் அனுபவம் பெற்றவர்கள்] எனப்படுவர்.
இந்த நிலையிலுள்ளோர் ஒரு சூரியமண்டலத்தில் பெரும்பான்மை ஆகும்போது,
அந்த யுகம் "சத்ய யுகம்" (முழுமையான மெய்யுணர்வுடன் இருப்பது)
எனப்படும்.
* - "நித்திரை" விருத்தி இலக்கணம்:
பதஞ்சலி யோகா சூத்திரம்
PYS 1.10. தன் உணர்வற்ற நிலையை அனுபவிக்க விழையும் விருத்தி
நித்திரை.
3.31. तदपि संन्यासान् माया-अतित-जन-लोकस्थे मुक्त-संन्यासी ||
+
3.32. तत: चैतन्य-प्रकटित-तपो-लोके आत्मनो-अर्पणात्
सत्य-लोकस्थे कैवल्यम् ||
3.31. ததபி ஸந்யாஸாந் மாயா-அதித-ஜந-லோகஸ்தே முக்த-ஸந்யாஸீ ॥
+
3.32. தத: சைதந்ய-ப்ரகடித-தபோ-லோகே ஆத்மநோ-அர்பணாத் ஸத்ய-லோகஸ்தே
கைவல்யம் ॥
3.31. அந்த மாயையின் எல்லையில் கடவுள் உணர்வை அனுபவித்துக்கொண்டே,
முழுமையாக தன் கர்மவினைகளைத் தியாகம் செய்து மனம் தூய்மையடைந்து,
மாயைக்கு அப்பாற்பட்ட ஜனலோக அனுபவத்தை அடைகிறார்கள். அவ்வமயம் அவர்கள்
கடவுட் சைதன்யத்தை வெறுமனே பிரதிபலிக்காமல் தானே அச்சைதன்யத்தை
பிரகாசிக்கிறார்கள். அந்நிலையில் அவர்கள் "ஜீவன்-முக்த சந்நியாசிகள்"
(மறுபடியும் மாயையின் கட்டுக்குள் பிறக்க அவசியமில்லாதவர்கள்)
எனப்படுவர்.
+
3.32. ஜனலோகத்திலிருந்து கடவுட் சைதன்யத்தைப் பிரகாசித்துக்கொண்டு
தனது தனித்துவத் தன்மையையும் கடவுட் பேருணர்வில் தியாகம் செய்துவிட்டு,
தபோலோக அனுபவத்தைப் பெறுகிறார்கள். அப்படியாக, கடவுட் பேருணர்வுடன்
கலந்து, பின்னர், கடவுளும் தானும் இரண்டற ஒன்றுபட்டு கைவல்ய சித்தியை
சத்தியலோகத்தில் அடைகிறார்கள்.
---
IV. विभूति: - விபூதி:
4.1. सहज-द्रव्य-तपो-मन्त्रै: देह-त्रय-शुद्धिस्-तत: सिद्धि:
||
+
4.2. सद्गुरु-कृपया सा लभ्या ||
+
4.3. सहज-द्रव्येण स्थूलस्य तपसा सूक्ष्मस्य मन्त्रेण
कारण-देह-चित्तस्य च शुद्धि: ||
4.1. ஸஹஜ-த்ரவ்ய-தபோ-மந்த்ரை: தேஹ-த்ரய-ஶுத்திஸ்-தத: ஸித்தி:
॥
+
4.2. ஸத்குரு-க்ருபயா ஸா லப்யா ॥
+
4.3. ஸஹஜ-த்ரவ்யேண ஸ்தூலஸ்ய தபஸா ஸூக்ஷ்மஸ்ய மந்த்ரேண
காரண-தேஹ-சித்தஸ்ய ச ஶுத்தி: ॥
4.1. பஞ்சபூதங்களால் சேர்ந்து தோன்றிய ஸ்தூல பொருட்கள் (உணவு, மருந்து
போன்றவை), தவம், மந்திரம் - இவை ஜீவாத்மாவின் மூன்று-தேகங்களை
தூய்மையாக்க உதவுகின்றன. முழுமையாகத் தூய்மை பெறுகையில் யோகசித்தி
கைகூடுகிறது.
+
4.2. சத்குருவின் கருணையினால் அந்த முழுத் தூய்மையை அடைய
முடிகின்றது.
+
4.3. பஞ்சபூதங்களால் சேர்ந்து தோன்றிய ஸ்தூல பொருட்கள் (உணவு, மருந்து
போன்றவை) ஸ்தூல தேகத்தையும், தவம் சூட்சும தேகத்தையும், மந்திரம்
சித்தத்தின் காரண தேகத்தையும்
தூய்மைப்படுத்துகின்றன.
4.4. साधन-प्रभावेण प्रणव-शब्द-आविर्भावस्-तदेव मन्त्र-चैतन्यम्
||
+
4.5. देश-भेदे तस्य भेदात् मन्त्र-भेद: साधकेषु ||
4.4. ஸாதந-ப்ரபாவேண ப்ரணவ-ஶப்த-ஆவிர்பாவஸ்-ததேவ மந்த்ர-சைதந்யம்
॥
+
4.5. தேஶ-பேதே தஸ்ய பேதாத் மந்த்ர-பேத: ஸாதகேஷு ॥
4.4. சாதகனின் சாதனா பலத்தினால் பிரணவ சப்தம் கேட்கும் அனுபவம்
சித்திக்கின்றது. அதுவே மந்திர சைதன்யம்.
+
4.5. சாதகனின் மனோவளர்ச்சிநிலை வேறுபாட்டினைப் பொறுத்து அதற்கேற்ப
வெவ்வேறு மந்திர சப்தங்கள் தோன்றுகின்றன.
4.6. श्रद्धा-युक्तस्य सद्गुरु-लाभस्-तत: प्रवृत्तिस्-तदैव
प्रवर्त्तका-अवस्था जीवस्य ||
4.6. ஶ்ரத்தா-யுக்தஸ்ய ஸத்குரு-லாபஸ்-தத: ப்ரவ்ருத்திஸ்-ததைவ
ப்ரவர்த்தகா-அவஸ்தா ஜீவஸ்ய ॥
4.6. சிரத்தையுடன் கூடி ஸத்குரு வாய்க்கப்பெற்று, அவரின் உபதேசத்தைக்
கடைபிடிக்க உறுதிபூணும் நிலையில் மனிதன் "பிரவர்த்தகன்" (ஆன்மீகப்பயணம்
துவங்குபவன்) என்று அழைக்கப்படுகிறான்.
4.7. यम-नियम-साधनेन पशुत्व-नाशस्-तत: वीरत्वम्-आसनादि-साधने योग्यता
च तदैव साधका-अवस्था प्रवर्त्तकस्य ||
4.7. யம-நியம-ஸாதநேந பஶுத்வ-நாஶஸ்-தத: வீரத்வம்-ஆஸநாதி-ஸாதநே யோக்யதா
ச ததைவ ஸாதகா-அவஸ்தா ப்ரவர்த்தகஸ்ய ॥
4.7. பிரவர்த்தகன் யம (தகாதன விலக்கல்), நியம (தகுந்தன பழகல்) ஆகிய
ஒழுக்க நெறியைக் கடைபிடிப்பதனால், தளைப்படுத்தும் பாசங்கள் ஒழிந்து,
அறத்தில் உறுதிகொண்ட வீரம் தோன்றுகின்றது. மேலும், ஆசனம், பிராணாயாமம்,
உள்முகமாக்கல் (பிரத்தியாஹாரம்) ஆகிய பயிற்சிகளை மேற்கொள்வதற்கான
தகுதியும் உண்டாகிறது. அந்நிலையில் அப்பிரவர்த்தகன் "சாதகன்" என
அறியப்படுகிறான்.
4.8. तत: भाव-उदयात् दिव्यत्वं तस्मिन् समाहिते दैव-वाणी
प्रणव-अनुभवस्-तदैव सिद्धा-अवस्था साधकस्य ||
4.8. தத: பா4வ-உதயாத் திவ்யத்வம் தஸ்மிந் ஸமாஹிதே தைவ-வாணீ
ப்ரணவ-அநுபவஸ்-ததைவ ஸித்தா-அவஸ்தா ஸாதகஸ்ய ॥
4.8. மேற்கொண்டு, சாதகனுக்கு பிரபஞ்ச உணர்வு பாவனை தோன்றி
தெய்வத்தன்மை (திவ்யத்வம்) உண்டாகின்றது. கூடவே, கடவுளின் வாக்கான
பிரணவ சப்தத்தைக் கேட்கும் அனுபவமும் ஏற்படுகிறது. அந்நிலையில்,
அச்சாதகன் "சித்தன்" என அறியப்படுகிறான்.
4.9. तत्-संयमात् सप्त-पाताल-दर्शनम् ऋषि-सप्तकस्य च-आविर्भाव:
||
4.9. தத்-ஸம்யமாத் ஸப்த-பாதால-தர்ஶநம் ரிஷி-ஸப்தகஸ்ய ச-ஆவிர்பா4வ:
॥
4.9. அந்த பிரணவ சப்தத்தினில் ஸம்யமம் செய்வதனால், அவருக்கு ஏழு
ஒளிரும் பாதாளங்களின்(i) (சூட்சுமதேகச் சக்கரங்கள்) தரிசனமும்,
அவற்றில் உறையும் சப்தரிஷிகளின் தரிசனமும் விளங்குகின்றன.
(i) ஏழு பாதாளங்கள் (பிண்டவெளிப் புவனங்கள் - பார்க்க #1.13) அல்லது
சூட்சுமதேகச் சக்கரங்கள் மற்றும் அவை ஸ்தூலதேகத்தில் இடம்பெறும்
பகுதியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1) சஹஸ்ராரம் (ஆயிர-இதழ் தாமரை) - தலையுச்சிப் பகுதி
2) ஆக்ஞா சக்கரம் (கட்டளை மையம்) - புருவமத்தி, நெற்றிப்பகுதி
3) விசுத்திச் சக்கரம் - தொண்டைப்பகுதி
4) அநாஹதச் சக்கரம் - இதயப்பகுதி
5) மணிப்பூரகச் சக்கரம் - தொப்புள் பகுதி
6) சுவாதிஷ்டானச் சக்கரம் - கருவிடும் வாசற்பகுதி
7) மூலாதாரச் சக்கரம் - தண்டுவடத்தின் நுனியடிப்பகுதி
4.10. तदा ज्ञान-शक्ति-योग-क्रमात्
सप्त-स्वर्गा-अधिकारस्-ततश्-चतुर्-मनूनाम्-आविर्भाव: ||
4.10. ததா ஞாந-ஶக்தி-யோக-க்ரமாத்
ஸப்த-ஸ்வர்கா-அதிகாரஸ்-ததஶ்-சதுர்-மநூநாம்-ஆவிர்பா4வ:
4.10. பின்னர், ஞானசக்தியுடன் கூடிய முறையான
யோகப்பயிற்சியினால், அவர் ஏழு ஸ்வர்க லோகங்களுக்கும் (அண்டவெளிப்
புவனங்கள் - பார்க்க #1.13) அதிகாரம் உடைத்தவராக ஆகிறார். மேலும்,
நான்கு பிரபஞ்ச அடிப்படைத் தத்துவங்களான "மனு"க்களும் (ii) அவருக்கு
விளங்குகின்றன.
(ii) தேச-கால-கலன என்னும் மூன்று பிரபஞ்ச அடிப்படைத் தத்துவங்களை
உள்ளடக்கிய ஓம் என்னும் பிரணவ சப்தத்துடன் சேர்த்து அவை நான்கு
"மனு"க்கள். அதாவது, அவை "மனிதர்கள்" தோன்றக் காரணமான
முன்னோடிகள் எனப்படும்.
4.11. तत: भूत-जयाद्-अणिमादि-ऐश्वर्यस्-आविर्भाव: ||
4.11. தத: பூத-ஜயாத்-அணிமாதி-ஐஶ்வர்யஸ்-ஆவிர்பா4வ: ॥
4.11. அதற்குமேல், இருள்படிந்த பஞ்சபூத தத்துவங்களைக் கடந்து வெற்றி
கொண்டதனால், அணிமா முதலான அஷ்டமா சித்திகளும் (iii)
கைகூடுகின்றன.
(iii) எட்டு வகையான சித்திகள் (விபூதிகள் அல்லது ஐஸ்வர்யங்கள்)
பின்வருமாறு:
1) அணிமா - அணுவினைப் போல தனது உடலை சிறியதாக்கும் சக்தி.
2) மஹிமா - "மஹத்"தினைப் (பிரபஞ்ச மனம்) போல தனது உடலை பெரியதாக்கும்
சக்தி.
3) லகி4மா - தனது உடலை மிகவும் லேசானதாக்கும் சக்தி.
4) க3ரிமா - தனது உடலை மிகவும் பளுவானதாக்கும் சக்தி.
5) பிராப்தி - தான் விரும்பும் எதையும் அடையும் சக்தி.
6) வஸித்துவம் - எந்த ஒன்றையும் தன்வசம் ஆளும் சக்தி.
7) பிராகாம்யம் - தடுக்க இயலாத இச்சையின் ஆற்றலினால், தன் எல்லா
ஆசைகளையும் திருப்திப்படுத்தும் சக்தி.
8) ஈஸித்துவம் - எல்லாவற்றையும் ஆளும் ஈஸ்வரனாகும் சக்தி.
4.12. तत: सृष्टि-स्थिति-प्रलय-ज्ञानात् सर्व-निवृत्ति: |
तदा माया-अतिक्रमे आत्मन: परमात्मनि दर्शनात् कैवल्यम् ||
4.12. தத: ஸ்ருஷ்டி-ஸ்திதி-ப்ரலய-ஞாநாத் ஸர்வ-நிவ்ருத்தி: । ததா
மாயா-அதிக்ரமே ஆத்மந: பரமாத்மநி தர்ஶநாத் கைவல்யம் ||
4.12. அதற்குப்பின், பிரபஞ்சத்தின் சிருஷ்டி, ரக்ஷணம், பிரளயம்
ஆகியவற்றின் ஞானத்தைப் பெற்று, அனைத்து மாறுபாடுகளிலிருந்தும்
விடுபட்டு, மாயையின் எல்லைக்கு அப்பாற்கடந்து, தனது ஆன்மா பரமாத்மாவோடு
ஐக்கியமாகி பரமமான கைவல்யம் (இரண்டற்ற ஒருமை)
சித்திக்கின்றது.
---
(முடிவுரையில் மேற்கோள் காட்டப்பட்ட சுலோகம்):
नलिनी-दल-गत-जलम्-अतितरलं तद्वत्-जीवनम्-अतिशय-चपलम् |
क्षणम्-इह सज्जन-सङ्गतिर्-एका भवति भव-आर्णव-तरणे नौका ||
- श्री आदि शंकराचार्य
நலிநீ-தல-கத-ஜலம்-அதிதரலம் தத்வத்-ஜீவநம்-அதிஶய-சபலம் ।
க்ஷணம்-இஹ ஸஜ்ஜந-ஸங்கதிர்-ஏகா ப4வதி ப4வ-ஆர்ணவ-தரணே நௌகா
॥
- ஶ்ரீ ஆதி ஶங்கராசார்ய
தாமரையிலைமேல் ஓடும் நீர்த்துளிகளைப் போல் இவ்வுலக வாழ்க்கை மிக்க
சஞ்சலமானது. ஒரு கணமாயினும் சத்ஜனங்களின் (உண்மையறிந்தவர்களின்) சங்கம்
ஒன்றே, அப்படிப்பட்ட பெரும் சம்சார சாகரத்தைக் கடக்க உதவும்
படகு.
- ஆதி சங்கர பகவத்பாதாள்.
---
ॐ तत् सत् ब्रह्मार्पणमस्तु ||
ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்பணமஸ்து ॥
----
Send Your Comments to phdsiva@mccrf.org