W29. முகம்மது நபியாக என்னிடம் வருவாயாக. (Whispers from Eternity - Tamil & English)
29. முகம்மது நபியாக என்னிடம் வருவாயாக.
முகம்மது நபியே, சுடரும் கடவுளின் மைந்தனே! பிரகாசமாக ஒளிரும் உங்கள் தெய்வீக வீரமுழக்கத்தினால் பலர் தங்கள் போராடும் உள்ளங்களுக்குச் செயலில் நிதானமான சாந்தத்தைக் கண்டுகொண்டு, இருளெனும் கடுங்கோலனிடமிருந்து ஞானக் கன்னியை மீட்கப் பேராவல் கொண்டுள்ளனர்.
வலுவான அமைதிக்கும் கோழைத்தனமான காம-சுகத்திற்கும் நடுவே நடக்கும் போரில் தெய்வீகப் போராளியைத் தவிர மற்றோர் எவரும் வெல்லமுடியாது. உன் போர்வீரர்கள் அவர்களுடைய பிரகாசமான நன்மைதரும் ஈட்டிகளை தீயவைகளின் நஞ்சு-நெஞ்சங்களில் துளைத்து அவைகளின் உயிரைப் பறித்தனர்.
முகம்மது நபியே, ஆன்ம-சாரமற்ற விக்ரஹ-அடையாளங்களைக் கண்டனம் செய்பவரே, உருச்சிதைக்கும் அடையாளங்களும் ரூபங்களும் முற்றிலும் இல்லாத சுத்தமான, ஒன்றேயான உருவமற்ற கடவுளை வழிபட நீங்கள் எங்களுக்கு கற்பித்தீர்கள்.
முகம்மது நபியே, உங்களைச் சார்ந்திருப்பவர்கள் உலகாயத புலனின்பங்களின் வறண்ட பூமிக்கு தவறிச் சென்றுவிடாமல், பெரும்விளைச்சல் கொடுக்கும் அழிவற்ற மனத்தை நாடுமாறு அவர்களை எச்சரித்தீர்கள்.
புலன்களை மயக்கும், எண்ணங்களைத் தகர்க்கும், கடவுளை விலக்கும் மதுபானங்களுக்கும், போதைப்பொருட்களுக்கும் நீங்கள் பரம வைரி என்பதை உங்கள் வழிநடப்பவர்கள் அறிவார்கள். உண்மையான, சீரான நமாஸ் பிரார்த்தனையெனும் மதுபிழியும் எந்திரத்தினால் வடிக்கப்பட்ட மெய்யான மதுரசத்தின் மேலுள்ள ஏக்கமே, தவறுதலாக மதுபானத்தின் மேல் கொள்ளும் ஆசையாகப் பரிமளிக்கின்றது என்பதனை நீங்கள் கற்பித்தீர்கள்.
முகம்மது நபியே, உங்கள் திருக்குர்ஆன் எனும் ஒளிவிளக்கு வழிதவறிய பல ஜீவாத்மக் கப்பல்களை, மறைவாய் அமிழ்ந்திருக்கும் பாவமெனும் பாறைகளினின்று காத்துப் பாதுகாப்பாகக் கடவுளின் கரைக்கு வழிநடத்திக் கொண்டிருக்கின்றது.
அவ்வப்போது உண்ணா நோன்பினைக் கடைபிடிப்பதன் மூலமும், ஸ்தூல உணவினைச் சார்ந்திருப்பதை விடுவதன் மூலமும், பேருணர்வைப் பக்குவப்படுத்தப்பட்ட பீடத்திற்குக் கீழிறங்கி வர ஏதுவாகி, அது அழியா அமிர்த உள்ளங்களை நுகருமாறுத் திறவாக நீங்கள் கற்பித்தீர்கள்.
முகம்மது நபியே, எல்லாம் வல்ல இறைவனின் நாமமான அல்லா-ஹூ-அக்பர் எனும் போர் முரசினால் உலகாயதப் பிடிப்பெனும் சாத்தானை விரட்டியடித்தீர்கள்.
உங்கள் ஆன்மபலம் பொதிந்த போர்-முழக்கங்கள் எங்கள் இதயங்களைச் சூறையாடும் பலவீனங்கள், குறுகிய எண்ணங்களின் இறுக்கப்பிடிகளிலிருந்து விடுபடச் செய்யட்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
29 Come to me as Mohammed.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org