2. நித்யத்தின் ஞானம் எனும் யோகம் - பகவத்கீதை - The Eternal Way
பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).
பகவத் கீதை இரண்டாவது அத்தியாயம்
2. நித்யத்தின் ஞானம் எனும் யோகம்
இரண்டாவது அத்தியாயத்தில்,
• வாழ்க்கை உண்மைகளைப் புரிந்து கொள்ள அவசியமான பொருள்கணங்களைப் பற்றியும்
• சுய தர்சனத்திற்கு விழிப்படைதல் பற்றியும்
• பந்த உணர்விலிருந்து விடுபடுதல் பற்றியும்
புத்திபுகட்டுதல் ஆரம்பிக்கிறது.
"சாங்கிய யோகம்" என்பது மூலநூலில் உள்ள தலைப்பு.
சாங்கிய தத்துவமானது,
• பிரபஞ்சப் பெருவெளியின் திணைகளையும் பகுதிகளையும் எண்ணுதல்
மற்றும்
• நித்யப் பேருணர்வுக்கும் மாறுதலடையும் பிரபஞ்சக் காட்சிகள் மற்றும் இயற்கையின் வடிவங்களுக்கும்
உள்ள வேறுபாட்டை விவரிக்கிறது.
உயரிய பேருணர்வு (Supreme Consciousness) பற்றிய ஞானம் பிசிறின்றி வாய்க்கப் பெற்றால், தவறான நம்பிக்கைகள் அழிக்கப்பட்டு, சுவாபிமான சுதாரிப்பானது அதன் மூலமுழுமைக்கு மீட்டுக்கொள்ளும் திறன் பெறுகிறது.
இந்த அத்தியாயம் கீதையின் இதயமாகக் அழைக்கப்படுகிறது.
VRGC கருத்து --- மன நல ஆலோசனைக் குறிப்பு:
• வனவாசமும் அக்ஞாதவாசமும் அர்ஜுனனுக்கு துயரத்தைப் பழக்கிவிட்டது. தோற்றால் அது தொடரும்.
• போரில் வென்றால் கிடைக்கும் ராஜ்யமோ பாசபந்தங்களின் மரணத்திற்குப் பிறகுதான். எனவே, அதுவும் துயரம்தான்
இவ்வாறு, ஏற்கனவே உள்ள துயரத்திலிருந்து புதுத் துயரத்திற்கு மாற போர் தேவைதானா?
இதுதான் அர்ஜுனனின் கேள்வி.
சஞ்சயன் கூறியது:
2.1 சுய பச்சாதாபம் மற்றும் ஏமாற்ற கலக்கத்தால் தாக்குண்ட கண்ணீர் ததும்பிய தாழ்ந்த கண்களுடைய அவனைப் [அர்ஜுனனைப்] பார்த்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு கூறியது.
உரை:
குழப்பம் மற்றும் சலன மனத்தினனாய் இந்த நிலையில் ஒரு சாதகன், உண்மையோ அல்லவோ, முக்கியமென நினைக்கும் விஷயங்களை மனத்தில் நிரப்பியவனாயிருக்கிறான்.
சோகம் மிஞ்சி அதனை ஆலாபனை செய்தல், முதிராத, உணர்ச்சிபூர்வ சுய ஈடுபாடு. ஆனாலும், உண்மை வெளிப்படுதல் நடக்க ஆயுத்தம் ஆகிறது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது:
2.2 இந்தக் கடினமான தருணத்தில் எங்கிருந்து இந்த பலவீனம் உன்னை வந்தடைந்தது? உன்னைப் போன்ற தூயவனுக்கு இது பொருத்தமானதல்ல. இது உன்னை சொர்க்கத்திற்கு (ஆன்மீக நிறைவுக்கு) இட்டுச் செல்லாது. மேலும், நீ புகழற்றவன் ஆகக் காரணமாகும்.
உரை:
அகத்தாய்வின் போதும், சவால்கள் மோதும்போதும், தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்படும்போதும், நம் சகஜ அறிவு மற்றும் உள்ளுணர்வு, நம் நடத்தையை பொருத்தமற்றதென நினைவுபடுத்தும்.
நாம் தேர்ந்தெடுத்திருக்கும் செயல், நம் மனக்கோணல்களால் தீர்மானிக்கப்பட்டதாக இருப்பதால், ஆக்கபூர்வ முடிவினைத் தராது எனவும் அதனால் துரதிருஷ்டமே எனவும் நாம் உள்ளூர அறிய நேரலாம்.
கீழ் கண்டவை நாம் செயல்படும் திறனைப் பாதிக்கும்
1. தீர்மானகரமற்ற தன்மை
2. அர்த்தபுஷ்டியான காரணத்தின் அறிவின்மை
3. சுயம் பற்றிய எதிர்கருத்து
4. நாம் ஆன்ம சொரூபம் என அறிவதில் பிசிறுத்தனம்
5. தோல்வி பயம்
6. நம் செயலுக்குத் தொடர்பின்றி, நம்மைப் பிறர் என்ன நினைப்பார்கள் எனும் பயம்
7. முடிவெடுப்புச் சுதந்திரத்தை அமலாக்குவது சரியல்ல எனும் பயம்
8. மேலும் பல
VRGC கருத்து --- மன நல ஆலோசனைக் கருத்து:
1. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை இங்கு கண்டிக்கிறார். இந்த உரிமை அவனுக்கு எப்படி கிடைத்தது?
அ. அர்ஜுனனும் கிருஷ்ணரும் பால்ய நண்பர்கள். எனவே, நல்லுறவு ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டது.
ஆ. அர்ஜுனன் கிருஷ்ணரை ஒரு ஆலோசகராக ஏற்கனவே ஏற்றுக்கொண்டவர். ஸ்ரீ கிருஷ்ணர் இவன் மேல் அதிகாரம் கொண்டவர்.
இந்த இரண்டும் எந்த மன நல ஆலோசனைக்கும் முதல் அவசியம்.
2. அர்ஜுனன் கொட்டித் தீர்த்த பின் அவன் மனம் காலியாகிவிட்டது. இனி, அதில் ஸ்ரீ கிருஷ்ணர் தன் பாடங்களை நிரப்பப் போகிறார்.
3. உரையில் மேற்சொன்ன பட்டியலில் நான்காவதைத் தவிர அனைத்தும் மன நல ஆலோசனை (Counseling) யிலும் கையாளப்படும்.
நான்காவது விஷயம் மட்டும் சொல்லிக் கொடுத்து வருவதல்ல. அதற்கான உள்ளீடுகள் தான் (Inputs) ஊட்டமுடியும்.
2.3. முதிர்ச்சியற்ற இந்த நடத்தைக்கு இணங்காதே. இது உனக்குப் பொருத்தமானதல்ல. பலவீனத்தையும் இதய நலிவையும் விடு. எழுந்து நில், அர்ஜுனா!
உரை:
அர்த்தபுஷ்டியான செயலை முடிக்கத் தேவையான உறுதிப்பாடும் ஆக்கபூர்வச் செயலும் வேண்டியிருக்கும்போது, செயலின்மையைத் துறக்க அறிவுறுத்துவது ஒரு நடைமுறை அறிவுரையாகும்.
ஆன்மாவினை அகத்தே கொண்டுள்ள நாம் உள்காட்சி மிக்கவர்களாகவும் ஆக்கபூர்வமாகச் செயலூக்கம் மிக்கவர்களாகவும் இருக்க வாய்ப்பு பெற்றுள்ளோம்.
அற்ப சுயநலம், பலவீனத்தை ஆலாபனை செய்தல் மற்றும் கோழைத்தனம் ஆகியன ஆன்ம இயல்பு அல்ல. அவை மனநோயின் அடையாளங்களும் செயல்படாமையும் ஆகும். “எழுந்து நில்” எனும் கட்டளை, எதை ஆராயவேண்டுமோ, அதனை ஆராய்ந்து சரியானதைத் தேர்ந்தெடுத்து, தெளிவான முனைப்புடனான தீர்மானத்துடன் செயல்படுவதற்காகும்.
கிரியா யோகத்தின் எல்லா அம்சங்களும் நம் சுதாரிப்பு மிகுந்த ஈடுபாட்டுடனான கவனம் கொடுக்கப்பட வேண்டும். விழிப்படையும் ஒவ்வொரு கணத்திலும், உடலளவு மற்றும் மனதளவு ஆத்திரங்களையும் தூண்டுதல்களையும் வழிநடத்திப் பொருத்தமாக, திறமையாக, வெற்றிகரமாக வாழவேண்டும்.
தியானத்தின்போது,
• உலகாயத கவர்ச்சிகளைப் புறக்கணித்தல்
• ஜட, உணர்ச்சி, மற்றும் மனப் போக்குகளிலிருந்து கவனத்தை விலக்குதல்
• சிதறலற்ற மனத்துடன் இறையில் முனைவொருமையும் மாறா நிஜங்கள் மேல் முனைவொருமையும் வைத்தல்
ஆகியன செய்யவேண்டும்
நம்மைப் பற்றிய நிஜங்களிலும், இறையிலும், பிரபஞ்ச காரியங்களிலும் முனைவொருமைப்படும்போது, நாம் நம் நுண்ணுணர்வு மற்றும் உள்ளுணர்வு ஆகியன பயன்படுத்தி, வெளிக்காட்சி, நம்பிக்கை மற்றும் பொய்மைகள் ஆகியவற்றை ஊடுருவிப் பாயும் அசல் வஸ்துவைக் காணவேண்டும்.
இறைமேன்மைக்கு விழிப்படையும்போது, இறைத்தன்மை அல்லாத பிற எல்லா நினைப்பு மற்றும் கவர்ச்சிகளைத் துறக்க வேண்டும்.
என்றும் சுயவிருப்பத்துடன் உணர்வற்ற தன்மையிலிருந்து விலகவும், சுயஞானம் மற்றும் உணர்வொளி ஆகியன இயல்பில் திறவாகுமாறும் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அர்ஜுனன் சொன்னது:
2.4 கிருஷ்ணரே!, பீஷ்மரையும் துரோணரையும் நான் எவ்வாறு கொல்வேன்? மரியாதைக்குரிய இவர்களை எதிர்த்து திறமையுடன் நான் எவ்வாறு போரிடுவேன்?
உட்பொருள்:
என் தெய்வீக ஆத்மாவே, என் சத்யமே [ஸ்ரீ கிருஷ்ணர் ], என் சுய இச்சை இருப்பையும் [பீஷ்மர்], என் நினைவுகள் மற்றும் பழக்கங்களையும் [துரோணர்] எவ்வாறு நீக்குவேன்? நீடித்த இந்த பாசபந்தங்களை எதிர்த்து என் திறமைகளை எவ்வாறு பயன்படுத்துவேன்?
உரை:
ஆன்ம உணர்வற்று இருக்கும்போது, சுவாபிமான சுயம் தன் மயக்கு நோக்கில் நம் பேரொளி நிலையைப் பார்க்கும்போது, அறிவு மற்றும் பேரார்வத்தின் மூல ஊற்றாக நம் நிஜ சொரூபத்திற்குத் திரும்புவோம்.
முழுமையை நேரடியாக அனுபவிப்பதான நம் விழிப்புணர்வை நீக்குவதான நம் சுயசார்புப் பொய்யுணர்வினை நாம் எவ்வாறு அழிப்பதென நாம் கேட்கக்கூடும். மனக் கட்டாயங்களையும் நினைவுக் கூட்டங்களையும் அலட்சியப்படுத்துவது எவ்வாறு எனவும் கேட்கலாம்.
நீண்ட நாள் பழகிய பந்தபாச நினைவுகளினால் அவைகளை நாம் அழிக்க முடியாது எனத்தோன்றும். அதனால், அவை நம் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியன என்றும் எண்ணத்தூண்டும்.
பீஷ்மர் எனும் பெயர், பிரபஞ்ச வியக்தி, மற்றும் [தனிமனித] சுய வியக்த உணர்வு என்பதின் அடையாள வார்த்தை. பிரபஞ்ச வியக்தம், பிரபஞ்ச வெளிப்பாட்டினை சாத்தியப்படுத்துகிறது. [தனிமனித] சுய வியக்தி ஆன்மாவை, மனம் மற்றும் ஜடத்துடன் உணர்வறு நிலையில் அடையாளப்படுத்திக் கொள்ளச் செய்கிறது.
நினைவுக் கூட்டங்களும், அனுபவங்களின் எல்லா மனப்பதிவுகளும் பிடிவாதமானவையாகவும், அதன் சுபாவத்தாலும் மயக்குறு மனம் அவைகளை தன்னுடன் அடையாளப்படுத்திக் கொண்டு ஒட்டிக் கொண்டிருப்பதாலும் மனதளத்தைப் பற்றிக்கொள்கின்றன.
நீடித்திருக்கும் ஆணவத்தையும் மனக்கட்டாயங்களையும் கடப்பதற்கு அவைகளை அலட்சியப்படுத்த வேண்டும்.
சுய இச்சை வியக்தத்துவத்தையும், மனப்பதிவுகளையும் வெல்லப்பார்ப்பது என்பது அவைகளுக்கு உண்மையில் இல்லாத பலம் மற்றும் வலிமையை அவற்றிற்கு இருப்பதாய் நாம் கருதுவதாகும்.
2.5. இந்தப் புனித ஆசிரியர்களைக் கொல்வதைவிட, பூமியில் நான் பிச்சையெடுப்பது எனக்கு உசிதமானது. சுயநலத்திற்காகக் கொன்றுவிட்டு, என் செய்கைகளால் கறை படிந்த உலக சுகத்தைத்தான் நான் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
உரை:
சுய இச்சை வியக்தியும் ஒருவனின் நினைவுக்கூட்டங்களும் ஆசிரியராக அடையாளப்படுத்தப்படுகிறது. ஏனென்றால்,
• அவை, சுவாபிமான சுயத்தின் நிலைப்பாடுகளை ஆதரிக்கின்றன.
• அவை, வியக்த இருப்பின் தொடர்ச்சியையும், தனக்கென ஒரு நிகழ்வரலாறையும், உலகாயத வாழ்சூழலையும் கொடுக்கின்றன.
உயர் சாத்தியங்களுக்குத் தெளிவான உள்காட்சி கொண்டிராத சாதகன், இந்த இரண்டு நிலைப்பாடுகளையும் நீக்காதிருத்தலே நலம் எனக் கொண்டு அவைகளின் கருணைக்குத் திருப்தி அடைகிறான்.
இந்த நிலையில், கடினமான சுய இச்சை வியக்தத்துவத்தைக் கரைப்பதும், அல்லலுக்குள்ளாக்கும் நினைவுக்கூட்டங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விலகுவதும், துயரத்திற்குக் காரணமாகிவிடும் என நினைக்கிறான்.
இந்த நிலை ஏன் இருக்கிறது என்றால், சாத்தியமான உண்மை அறிவின் அடிப்படையில் உயர் புரிதலின் உணர்வொளியை சாதகன் இன்னும் அனுபவிக்கவில்லை என்பதால்.
2.6. எது உசிதம் என்று எனக்குத் தெரியவில்லை—நான் அவர்களை வெல்வதா? அல்லது அவர்கள் என்னை வெல்வதா? என் முன் நிற்கும் திருதராஷ்ட்ர புத்ரர்களை நான் கொன்றால், நான் வாழ விரும்பமாட்டேன்.
2.7. இரக்கத்தாலும் பலவீனத்தாலும் நான் வெகுவாக ஆட்கொள்ளப் பட்டிருக்கிறேன். எது என் கடமை என அறிவதில் என் மனம் குழம்புகிறது. எது சரியான வழி என அறிய என்னைத் தெளிவாக்கவும், எனக்குக் கற்றத் தரவும், எனக்குச் சொல்லவும் உன்னைக் இறைஞ்சுகிறேன். நான் உன் மாணவன். உன் வழிகாட்டுதலில் நான் அடைக்கலம் புகுகிறேன்.
2.8. போட்டிக்கிடமில்லாத ஆள்பலத்தையும், செல்வத்தையும், தேவலோக ஆதிபத்தியம் ஆகியன நான் பெற்றாலும், என் புலன்களை வறளச் செய்யும் இந்தத் துயரை எது விரட்டும் என என்னால் காண முடியவில்லை.
உரை:
தீர்மானகரமின்மையும் பகுத்தறியா சிந்தனையும் தொடர்கின்றன. ஒளிராமனத்தின் (திருதராஷ்டரன்) போக்கினைத் துணை கொள்ளாத வாழ்க்கை, பரிச்சயமுள்ள அர்த்தம் ஏதும் இல்லாததாக சாதகன் உணர்கிறான்.
ஆனாலும், இப்போது விடிவுகாலம் பிறக்க தருணம் நெருங்குகிறது. ஏனெனில் திக்குத் தெரியாத மன ஆட்டத்தின் நடுவே, அதனை ஒப்புக்கொண்டு, தீர்க்க ஞானம் வேண்டி சாதகன் சரணடைகிறான்.
VRGC கருத்து:
(முதல் பாரா) ஒளிராமனத்தின் (திருதராஷ்டரன்) போக்கினைத் துணை கொள்ளாத வாழ்க்கை, பரிச்சயமுள்ள அர்த்தம் ஏதும் இல்லாததாக சாதகம் உணர்கிறான்.
ஒப்பிடுக
சாக்ரடீஸ் – “சிந்தித்து வாழாத வாழ்க்கை வாழத் தகுந்ததல்ல”
சஞ்சயன் சொன்னது.
2.9. கிருஷ்ணரிடம் இவ்வாறு கூறிவிட்டு, அர்ஜுனன், "நான் போரிடமாட்டேன்" என்று சொல்லிவிட்டு அமைதியானார்.
உரை:
சாதகன் இன்னும் தன் நிலையில் பிடிப்பு தளராமல், சரியானதைச் செய்யும் முன்னர் விடுக்கப்பட்ட அழைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தவன், இறுதியில் மௌனமாயிருக்கும் சரியான செயலைச் செய்கிறான்.
மனதின் நிச்சலனமும், அறிவுக்கு ஏற்பாகும் தன்மையும் சிஷ்யனாயிருப்பதற்கு முன்தேவையும் அதற்கு ஊட்டமும் ஆகும்.
2.10 திருதராஷ்டரனே! துவண்டுபோயிருந்த அர்ஜுனனைப் பார்த்து மந்தகாச புன்னகையுடன் இரண்டு படைகளுக்கு நடுவே ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வார்த்தைகளைப் பேசினார்.
உரை:
கிருஷ்ணரின் புன்னகை, உண்மையில் பிரச்னை ஏதுமில்லை என்றும், உறுதியுடன் கைமேலிருக்கும் பிரச்னையைக் கையாண்டுவிடலாம் என்பதையும் அர்த்தமாக்குகின்றன.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது:
2.11 வருத்தப்படக் கூடாதவைகளுக்காக நீ வருத்தப்படுகிறாய். ஆனால், ஞானம் உடையவன் போல் வார்த்தைகள் பேசுகிறாய். ஞானி இறந்தவர்களுக்காகவோ, வாழ்பவர்களுக்காகவோ வருத்தப்படமாட்டான்.
2.12 நீயோ, நானோ, இங்குள்ள பிறரோ, முன்பு ஒருபோதும் இல்லாமலிருந்ததும் இல்லை; நாம் இனி ஒருகாலத்தில் இல்லாமல் போய்விடுவோம் என்பதும் இல்லை.
2.13 எவ்வாறு ஜீவன் ஒரு உடலில் பாலபருவம், இளமைப் பருவம், முதிய பருவம் எனப் பல பருவங்களை அடைகிறதோ, அது போல, ஜீவன் [மரணத்திற்குப் பின்] இன்னொரு உடலை அடைகிறது. ஞானிக்கு இதில் கலக்கம் ஏதுமில்லை.
உட்பொருள்:
[பெரிதாக வேறுபாடு இல்லை].
உயர் உணர்வும் [நானோ], எல்லா நிரந்தரமான அம்சங்களும் [நீயோ, பிறரோ] இருந்தே வருகின்றன. இதனை ஞானிகள் அறிவர்.
உரை:
தான் ஒரு ஒளிவீசும், இறையம்சம் பிரபவிக்கும் வியக்தி என அறியாத தவறான கருத்தே அர்ஜுனனின் பிரச்னை. நுண்ணறிவின் இந்தத் தவறை சரி செய்துவிட்டால், அதனால் தோன்றும் அறியாமையின் விளைவுகள் நின்றுவிடும்.
தன் ஆன்ம முழுமையைத் தடுப்பவைகளின் மேல் தேவையற்ற கவனம் செலுத்துவதாக அர்ஜுனன் அறிவுறுத்தப்படுகிறார். மாற்ற கதியில் கடந்து ஓடும் வாழ்சூழலுக்கு அடிப்படையாக மாறாத உயிர் ஒன்று நிலவுகிறது எனவும் அவன் அறிவுறுத்தப்படுகிறான்.
பலவேறு தரப்பட்ட விசாலமான இப்பிரபஞ்ச காட்சிகளின் பின்புள்ள அந்த ஒற்றை உயிரைப் பார்த்து, அவன் ஒரு புனிதமான பணியை மேற்கொண்டு நிறைவேற்றவேண்டும்.
உடல்களை வாழ்விப்பதான ஆன்மா எவ்வாறு அவைகளல்லவோ, அதுபோலவே, மனப்போக்குகளை வாழ்விப்பதான அந்த ஒற்றை உயிர் அவைகளைச் சார்ந்தல்ல. நிரந்தரங்களைப் பார்க்காமல் அர்ஜுனன் நிலையற்ற அந்தர மாற்றங்களை எண்ணி வருத்தமுறுகிறார்.
தற்காலிக இருப்பை இயல்பாய்க் கொண்டுள்ள உடல், பொருள் மற்றும் சூழல் ஆகியன கடந்து போவதைப்பற்றி அறிவு குறைந்தவர்களே வருத்தமுறுவர். மனமயக்கமும் வருத்தமும்தான் ஆன்மாவை மனம் மற்றும் ஜடத்துடன் இணைத்து இயல்பு நடப்பில் உள்ள காரண, காரியத்துடன் சேர்க்கும்.
VRGC கருத்து:
1. ஒரு மனப்பயிற்சி. கற்பனை செய்யுங்கள்.
உடலின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு உருவம் எடுத்தால் எப்படி இருக்கும்? அப்பொழுது அது மரணம் என்றே ஆகாதா? உருவம் அடையாளம் கண்டுகொள்ள முடியாததாக மாறாததால் அதனை மரணம் என நாம் கூறுவதில்லை.
அல்லது
மரணத்திற்குப் பின் மறுபிறவியிலும் மனிதன் முன்பிறவியின் உருவமே எடுத்தால், நாம் அதனை மரணம் என்று கூறுவோமா?
2. அந்தரத்தில் [இடையூறாகும் காலத்தில்], நிரந்தரத்தைப் பார்க்கக் கற்றுக்கொள்வது ஆன்மீக, சம்சார வாழ்க்கை இரண்டிற்கும் முதல் பாடம்
• எழுத்தர் (Clerk) பார்க்காத நிரந்தரத்தை மேலாளர் பார்க்கிறார்
• நோயாளி பார்க்காத நிரந்தரத்தை மருத்துவர் பார்க்கிறார்
3. நிரந்தரத்தைப் பற்றிய வாதத்தை ஸ்ரீ கிருஷ்ணர் தொடங்க முதலடி எடுத்துக் கொடுத்தவனே அர்ஜுனன்தார். வெற்றியோ, தோல்வியோ இரண்டிலும் துயரம் என அர்ஜுனன் வைத்த ஒரு வாதம் இதைப் போன்றதுதார். ஆனால், தவறான உள்ளீடுகளால் வந்த முடிவு. எனவே, அதுவே முதல் போதனை.
2.14 குளிர், வெப்பம், மகிழ்ச்சி, துன்பம் ஆகியன மாறிக்கடந்து செல்பவை, நிரந்தரமற்றவை. ஞானம் தேடும் நீ, அவைகளைப் பொறுத்துக்கொள்.
உரை:
நிலைமையை மேம்படுத்தும் அறிவை எட்டும்வரை சிறிது கால நலக்கேடு என்றாலும் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளவேண்டும்.
உண்மையான பொறுமை என்பது நலக்கேட்டினை வேறு வழியின்றி சகித்து ஏற்பதிலிருந்து வேறுபட்டது. அது, வெளிச்சூழலுக்குத் தொடர்பின்றி, ஆன்ம மையமானதும், மனதை அமைதிப்படுத்துவதும், உணர்ச்சியைத் தணிப்பதும் ஆகும்.
எண்ணப்போக்குகள், உணர்ச்சிகள் ஆகியன ஆன்மாவிற்கு வெளியில் இருப்பதால், மன உளைச்சலின் நடுவிலும், உணர்ச்சிப் போரின் நடுவிலும், சிக்கல் தீர்ந்து நிலைத்தன்மை ஸ்தாபிக்கப்படும் வரை பொறுமையாக இருக்க நம்மால் முடியும்.
2.15. எந்த சாதகன்
• இந்த தூண்டல்களினால் உளைச்சல் அடைவதில்லையோ
• மாறி, மாறி நடப்பதாகிய மகிழ்ச்சி, துயரங்களுக்கு ஆட்டம் காணுவதில்லேயோ
• புத்தியறிவாளியோ
அவன், சநாதன வாழ்வின் அணுகு சாத்தியத்தினைக் கிரகித்துக் கொள்ளத் தகுதியடைகிறான்.
உரை:
நாம் ஆன்மீக விழிப்புணர்வில் இருக்கும்போது, வெளிச்சூழல்கள் நமக்கு இடைஞ்சலாவதில்லை.
இந்த சமநோக்கு ஈடுபாடின்மையால் ஏற்பட்டதல்ல. மாறாக, ஆன்மா திறவாதலை அணுகுசாத்தியமாக்கும் உயர புரிதலால் ஏற்பட்டது. அது, நம் உணர்வினை ஒளியூட்டுவது, நித்யானுபூதியைக் கொடுப்பது.
ஆன்ம விழிப்புணர்வு அற்பச் சூழலுக்கு அடிமையாகாமல், விரிவடைந்து அதன் சர்வ வியாபகத் தன்மையை மீட்கும்.
2.16. இல்லாத ஒன்று தோன்றாது. உண்மையில் இருக்கும் ஒன்று ஒருக்காலும் அழியாது. இந்த உண்மையை ஞானிகள் அறிவர்.
2.17 பிரபஞ்சத்தை வியாபித்துள்ள ஆதாரமான வாழ்க்கை அழிக்கவொண்ணாதது. யாரும், எதுவும் அதனை மாற்றவோ, இல்லாமலாக்கவோ முடியாது.
2.18 சநாதனமான, அழிக்கமுடியாத, அளப்பரியதான ஆன்மா தங்கும் இந்த உடம்பு முடிவுறுவது. எனவே சரியான முயற்சியில் ஈடுபடு.
2.19. ஆன்மாவை அழிப்பதாகவோ, அழிவதாகவோ நினைப்பவர்கள் உண்மையை ஆராயவில்லை. யாரும் அழிவதில்லை; யாரையும் அழிப்பதில்லை.
உரை:
பேருணர்வு மட்டும் இருக்கிறது. அதுதான் பல வகைகளாகக் காட்டிக்கொண்டு தானும் எல்லாவற்றிலும் இருக்கிறது. தூய பேருணர்வின் தளத்திலிருந்து ஒரு துடிப்பு, எழுந்து குணங்களுடையதான இறைத்தலைமையைத் தோற்றுவிக்கிறது.
குணங்களாவன
சத்வம் – ஒளியூட்டுவது
தமஸ் – செயலின்மையின் கூட்டாளி
ரஜஸ் – மேலிரண்டின் கூட்டால் உருவாகும் மாறுபடுத்தும் சலனப்போக்கு
இறைத்தலைமையிலிருந்து ஓம் நாதம் பெருகி ஓடி
• வெளி (தேசம்),
• காலம்,
• ஆதார பிரபஞ்ச சக்திகள் –
எனும் மாற்றத்திற்குள்ளாகி மூல இயற்கையின் எல்லா உருப்படிகளாக வெளிப்படுத்திக்கொள்கிறது.
இறையாத்மாவிற்கும் மூல இயற்கைக்கும் இடையிலான உறவு, பிரபஞ்ச வியக்தியைத் (பீஷ்மர்) தோற்றுவிக்கிறது. ஒரு பிரபஞ்ச மனம் கிளம்பி
• ஐந்து தன்மாத்திரைகள் (மூலபுலன்கள், தத்துவங்கள் என்பன வேறு பெயர்கள்),
• கர்மேந்திரியங்கள்,
• பஞ்சபூதங்கள்
ஆகியவற்றைத் தோற்றுவிக்கிறது. பஞ்சபூதங்கள் என்பன தங்களுக்குள் ஊடாடி,
• காரண,
• சூக்ஷம,
• ஸ்தூல
தளங்களைத் தோற்றுவிக்கின்றன.
இறையொளியின் கீற்றுக்கள் மூல இயற்கையில் பட்டு, வியக்த உணர்வாக அல்லது ஆத்மாக்களாக பிரதிபலிக்கிறது.
உயர் உணர்வுதான் எல்லா மனிதர்களிலும் படைப்புக்களிலும் உள்ள உண்மையான சுத்த சுயம்.
உயர் உணர்வு மட்டுமே இருப்பதால் வேறு சாரமோ பொருளோ அங்கு இல்லை. இதனை நேரடியாக சுயமாக மட்டுமே உணரமுடியும். உள்காட்சி முயற்சியால் அன்றி பிற வழிகளில் இதனின் உண்மையை நிரூபிப்பதோ, நிரூபணம் அற்றதாக்கவோ முயல்வது தோல்வி அடையும்.
நுண்ணறிவு என்பது நுண்மாண் நுழைபுலத்தின் ஸ்தூல அங்கம் என்பதால், அவ்வகையிலான விசாரணை, சற்றுத் தெளிவூட்டும் என்றாலும் அனுபவித்துணர்ந்த ஞானத்தை விடக் குறைவுபட்டதாகும்.
தூய உணர்வு தளம், தொடக்கமோ முடிவோ இல்லாதது. அதன் சுய வெளிப்பாடுகள் மாறுதலுக்குரியது (இயற்கை மற்றும் இயற்கைப் போக்குகளை இயக்குவது). அவைகளின் சலனப்போக்குகளிடையே இருந்தாலும் உயருணர்வு நிச்சலனமானது. உயருணர்வால் வாழ்விக்கப்படும் உருவங்கள் மற்றும் அதன் வகையறாக்கள் (எண்ணங்களும் மனப்போக்குகளும்) நிலையற்றவை.
எனவே, வாய்ப்பு தெளிவாக இருக்கும்போதும் ஆர்வம் உறுதிப்படும்போதும், சாதகன் அதிகாரப்பூர்வ ஆன்மீக வளர்ச்சிக்கு ஆர்வமுறவேண்டும்.
பேருணர்வு, சனாதனமானது என்பதால் குறைப்பதோ அதனை இல்லாமலாக்குவதோ முடியாது. எனவே, உயருணர்வை அழித்துவிடலாம் எனும் நம்பிக்கை தவறான புரிதலினால் ஏற்பட்ட ஒரு மாயை.
VRGC கருத்து:
அந்தரங்களைக் கட்டியுள்ள நிரந்தரம் எனும் நூலைப் (தாரையைப்) பார்க்க வேண்டும் என ஆரம்பித்த போதனையைத் தொடர்ந்து, அந்த நிரந்தரத்தின் அழியாத் தன்மையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார்.
ஒப்பிடுக: அறிவியலில் வரும் Conservation of Energy, Conservation of Mass
ராய், இங்கு படைப்பின் மூல இயக்கத்தை விளக்குகிறார். Mechanical Engineering படிப்பவர்கள், Physics, Strength of Materials படிப்பது போல, Spiritual Engineer ஆவதற்கு படைப்பின் மூல இயக்கத்தைப் படிக்க வேண்டும். இதனை Metaphysics என்பார்கள். Physics of Physics எனலாம். இயல் கடந்த பௌதீகம் என தமிழில் கூறலாம்.
2.20. ஆன்மா பிறப்பதில்லை, அது என்றும் இறப்பதுமில்லை, முன்பு ஒரு காலத்தில் தோன்றி இனி அழியப்போவதோ இல்லை. ஆன்மா பிறப்பற்றது, நிரந்தரமானது, காலவரம்பற்றது. உடல் அழியும்போது ஆன்மா அழிவதில்லை.
2.21 ஆன்மாவை அழிக்கமுடியாததாகவும், சனாதனமானதாகவும், தோற்றுவிக்கப்படாததாகவும், மாறாததாகவும் அறிந்தவன், எப்படி யாரையும் கொல்ல முடியும்? அவன் யாரைக் கொல்வான்?
உரை:
இறையொளிக்கீற்றான நாம் வெளித்தோன்றுகிறோமே அல்லாது, நாம் படைக்கப்படுவதில்லை. ஆன்மாவின் விழிப்புணர்வு மூல இயற்கை, மனம், மற்றும் ஜடத்துடன் ஆதியில் ஈடுபட்டிருக்கிருக்கும்போது
• ஆன்மாவின் விழிப்புணர்வு குறைவாக,
• தற்காலிகமானதாக,
• பின்னத்தனமான உணர்வின்மையைத் தோற்றுவிப்பதாக,
• புறவயத்தில் பாசபந்தத்துடன் அடையாளப்படுத்திக் கொள்வதாக
இருக்கிறது.
A இது விழிப்புணர்வினை
• கலங்கலாக்குகிறதாக
• தான் தன் சுய இச்சையில் இருப்புள்ளவனாகக் காட்டும் தவறான நம்பிக்கையில் இருத்தி
ஒரு “பொய்---நான்” ஐ உற்பவிக்கிறது.
B இவ்வாறு மயங்கிய ஆன்மா,
• தானே தோற்றுவித்துக் கொள்ளும் காட்சிப்பிழைகளிலும் தவறான நம்பிக்கைகளிலும் ஒட்டுதலாகி
• மனப்பிறழ்வுகளை அனுபவிப்பதாக
• உணர்ச்சி மற்றும் எண்ணப்போக்குகளுடன் அடையாளப்படுத்தி
• அதன் உண்மை இயல்பினை மறந்ததாக
ஆகிறது.
---
VRGC கருத்து:
வேதாந்த பரிபாஷையில், மேலே
• A = ஆவரணம்
• B = விக்ஷேபம்
---
உரை (தொடர்ச்சி):
யார் கொல்லப்பட முடியும்? மனிதனின் அல்லது ஜீவராசியின் ஆன்மாவை அழிக்கமுடியாததாக நாம் அறிந்திருந்தாலும், தீய எண்ணம் உதிக்காத, தீய செயல் செய்யாத வகையில் தீங்கின்மையில் நாம் திண்மைப்படவேண்டியுள்ளது.
ஆன்ம வளர்ச்சிக்கும் திறம்பட செயல்படவும் தடையாயுள்ள பழக்கங்களும் மன ஓட்டங்களும் அவைகளின் ஆதரிப்பு நிபந்தனைகளையும் தேவைக்கேற்ப நீக்கிவிடலாம். அவைகளை நீக்குவதன்றி ஜீவராசிகளை அல்ல.
அல்லல்படுத்தும் அவசியமற்ற மன ஆக்கிரமிப்புகளை நிறுத்த நேரடி வழி அவைகளின் பயனாகாத் தன்மையைத் தீர்மானித்து விலக்குவதாகும். இது முடியாதபோது, உணர்ச்சி நிலைகளைத் திருத்துவதான மனமொன்றிய சுயாப்பியாசத்தைக் கை கொள்ளலாம்.
இதனைச் செய்வதற்கு, யோகப் படிநிலைகளில்,
• யமம் (விலக்கவேண்டியவை)
• நியமம் (ஆசரிக்கவேண்டியவை)
ஆகியன பயன்படும்
சாதகனின் வாழ்க்கைப் பாணி, அதாவது,
• தின நடப்புகள்
• உணவு முறை
• பணம் மற்றும் பிற வளங்களைப் பெறும் வகை
• சமுதாய உறவு
ஆகியவை, அவனுடைய சுய தேவைகளையும் ஆன்ம வளர்ச்சியையும் முழுவதும் நிறைவேற்றுமாறு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்
மேலும்
• இறைபக்தியை பேணி வளர்த்தல்
• இடைவிடா அதியுணர்வுத் தியானம்
ஆகியன சாதகனின் ஆன்மீகப் பயிற்சிகள் ஆதல் வேண்டும்.
மேலும்,
• தியானத்தின் போது பிராணசக்தியை தண்டுவடப் பாதையில் செலுத்துதல்
• பிற சமயங்களில், விழிப்புணர்வினை ஆன்மீகக் கண்ணிலும் இதயச் சக்கரத்திலும் மையப்படுத்துதல்
ஆகியனவற்றால், ஒருவனின் உட்சமநிலையைத் தக்க வைக்கவும், பிராணனையும், கவனத்தையும் அதிகமாய் வெளியில் ஓடுவதிலிருந்து தடுக்கவும் முடியும்.
2.22. கிழிந்த ஆடை மாற்றி புது ஆடை உடுத்துவது போல், ஆன்மா நைந்து போன உடம்பை விட்டு தேவைக்கேற்ப புதுஉடலை ஏற்கிறது.
2.23 ஆன்மாவை
• ஆயுதங்கள் வெட்டாது
• தீ எரிக்காது
• நீர் நனைக்காது
• காற்று உலர்த்தாது.
2.24 ஆன்மாவை துன்புறுத்த முடியாது. அது,
• சனாதனமானது
• சர்வ வியாபி
• நிலையானது
• அசையாதது
• ஆதிமூலமானது.
2.25 ஆன்மா
• வெளித் தோன்றாதது.
• மனதால் வரையறுக்க முடியாது
• மாறாதது
இதனை அறிந்து நீ, வருத்தப்படாதே
2.26. தொடர்ந்து மாறிமாறி பிறப்பெடுப்பதாகவும், இறப்பதாகவும் ஆன்மாவை நீ நினைத்தாலும் வருத்தப்படாதே.
2.27 பிறப்பதெல்லாம் இறக்கும். இறப்பதெல்லாம் பிறக்கும். தவிர்க்க முடியாததைக் குறித்து நீ வருத்தப்படாதே.
2.28 ஜீவராசிகளும் மனித இனமும் வெளிப்படாதவையாக இருந்து உருவம் எடுக்கையில் வெளிப்படுகின்றன, கெடு முடிவடையும் போது மீண்டும் அவை வெளிப்படா நிலை பெறும். இது உன் அதிருப்திக்கு ஏன் காரணமாக வேண்டும்?
உரை:
இறைமைக்கு விழிப்படையும் வரை, ஆன்மா உடலை விட்டு, மற்றொன்றை ஏற்பதை, உடல் உடையை விடுவதுடன் கீதாச்சார்யன் ஒப்பிடுகிறார். மறுபிறவிக் கொள்கையினை, புத்திக்கு எட்டும் விவேக விசாரணைக்குட்படுத்தக் கூடிய தத்துவமாகக் கற்பிக்கப்படுகிறது. கீதாச்சார்யனோ, பிற ஆசிரியர்களோ இதனை நிரூபிக்க முயற்சிக்கவில்லை. இது,
• உணர்வு நிலை
• கர்ம நிலை
• விதியை ஆதரிக்கும் ஆசை
• ஆன்ம இலக்கு
ஆகியவற்றிற்குத் தேவையென அங்கீகரிக்கப்படுகிறது.
பிரபஞ்சத்தைச் சூழ்ந்த இறைவஸ்து, இயற்கையின் எந்த அம்சத்தாலும் ஆதிக்கம் செலுத்தப்படாதது போல, உடலெடுத்த ஆத்மா, கர்மவினைகளிலிருந்து முக்தி பெற்ற பின்னர் மனதின் மற்றும் உடலின் உறவுக்கூட்டங்களால் ஆதிக்கம் செலுத்தப் படுவதில்லை.
ஆன்ம இயல்பு பிசிறற்றது என்றாலும், ஒளி பெற்ற ஆத்மாவின் விழிப்புணர்வு, உடல், மன, சூழல் காரணிகளுடன் அடையாளப்படுத்தி சற்று மாறுபட்டிருக்கலாம்.
நம் உண்மை ஆன்மா, எல்லாவற்றினுடைய ஆன்மாவின் வியக்த அலகு. நாம் இறைமையின் எல்லா தன்மைகள், குணங்கள், திறன்கள், முழு அறிவு ஆகியன நிரம்பப் பெற்றுள்ளோம்.
உண்மை ஆன்மா அடிக்கடி பிறந்து இறப்பதாகத் தவறாக நம்பினாலும் உள்ளதை மாற்ற நாம் எதையும் செய்யமுடியாதபோது அதற்கு வருத்தப்படுவது முட்டாள்தனம். நிலையற்ற சதைப்பிண்டத்தால் ஆக்கப்பட்டுள்ளதால் படைப்புகளும் மனித இனமும் பிறந்துஇறக்கும். அதனைத் தற்காலிகமாக உயிரூட்டும் ஆன்மா, உடலுருவத்தை விட மேலானது.
உணர்ச்சி நிலைகள், பழக்கங்கள், நினைவுகள், ஆசைகள் ஆகியனவும் பிறந்து இறக்கின்றன. இதனை அறிந்து ஆக்கபூர்வ மன உணர்ச்சி நிலைகளை வளர்த்துக் கொள்ளவும் நம் நலத்திற்குக் கேடானவைகளை விலக்கிக் கொள்ளவும் சுதந்திரம் பெற்றுள்ளோம்.
VRGC கருத்து:
• அந்தரங்களை விட்டு நிரந்தரங்களைப் பார்த்தல்.
• நிரந்தரங்களின் அழியாத் தன்மை அறிதல்
ஆகியவற்றை போதித்த ஸ்ரீ கிருஷ்ணர் , இங்கு
• ஜீவனின் பின்னத்தனத்தை ஜீவன் ஏற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.
எல்லா வருத்தங்களும் ஜீவன் தன் தோற்றத்தைப் பூரணம் என பா:வித்துக் கொள்வதில் தொடங்குவது.
2.29. ஆன்மாவை வியப்புக்குரியதாகக் கருதுவர் சிலர், பிறர் அதை அவ்வாறு எடுத்துரைப்பர். அவ்வாறு கேட்டு வியப்புறுவோர் சிலர். ஆயினும், யாரும் அதனை அறியவில்லை
2.30. உண்மை ஆன்மா அழிக்க முடியாதது. எனவே, எந்த படைப்புக்காகவும் மனிதனுக்காகவும் நீ வருத்தமுறக் கூடாது.
உரை:
ஆன்மாவை எவ்வளவு அசாதாரணமானதாக நாம் நினைத்தாலும், ஆன்ம விழிப்பால் உள்காட்சி மிக்கவர்களாகவும் ஞானமுள்ளவர்களாகவும் ஆகும் வரை, அதன் உண்மைத் தன்மையைத் துல்லியமாக அறியமாட்டோம்.
எனவே, சுவாபிமான சுய தளத்தில் யாரும் முழு உணர்வு, இறைமை, ஆத்மாவாகக் காட்டிக் கொள்ளும் ஒற்றை உயிர் ஆகியனவற்றை உள்ளவாறு அறிவதில்லை.
ஆன்மப் பயணத்தை நிறைவாக்கி மகிழ்வான வாழ்க்கை அடைய, ஆன்மாவின் உண்மை இயல்பினை நினைவுபடுத்தி. அந்தப் புரிதலிலேயே சஞ்சலமின்றி வாழ்வது பயனுள்ளது.
2.31 உன் முன்னுள்ள கடமையை அறிந்த நீ, தயங்காதே; க்ஷத்ரியனுக்கு தர்மப்போர் புரிவதைக் காட்டிலும் சிறந்த நன்மை இல்லை.
2.32. ஆன்ம சாதிப்புக்கு வெளிப்படையான அழைப்பு உள்ள சாதகனுக்கு, இத்தகைய அதிர்ஷ்டகரமான வாய்ப்பு மகிழ்ச்சியே.
2.33. இத்தருணத்தில், இந்தத் தர்மப்போரை நீ செய்யவில்லையென்றால், உன் கடமையிலிருந்து நழுவியவனாக, துரதிர்ஷ்டத்தை வரவழைத்துக்கொள்வாய்.
2.34. உன்னை அறிந்தவர்கள் உன்னை இழிவாகப் பேசுவார்கள். உயர்வாகக் கருதப்பட்டு வந்த நீ, இகழுக்கு ஆளாவது மரணத்தை விட மோசமானது.
2.35. சிறந்த போர் வீரர்கள், நீ பயத்தினால் உன் கடமை தவறியதாகக் கருதுவர்; உன்னைப் பெருமை மிக்கவனாகக் கருதியவர்கள், உன்னை லேசாகக் கருதுவர்.
2.36. உன் எதிரிகள் அன்பிலாத, அவதூறு வார்த்தைகளை உதிர்ப்பர். இதனைக் காட்டிலும் வேறு துன்பம் உண்டா?
2.37. போரில் நீ மடிந்தால், உனக்கு ஆன்ம லாபம். வென்றாலோ, உலக வாழ்க்கையில் மகிழ்வாய். எனவே, எழுந்து உன் கடமைக்குச் சித்தமாகு.
உரை:
உண்மை ஆன்மாவின் உள்பொதிந்த செயல்தகுதியைத் திறவுக்குக் கொண்டுவரும் அதன் உள்ளக்கிடக்கை, சாதகனை, ஆன்மீகப் பயிற்சிகளைப் புனிதக் கடமையாகத் தயக்கமின்றி ஏற்றுச் செய்யத் தூண்டுகிறது.
நமக்குள்ள கடமைகளினிடையே,
• ஆன்ம குணங்களை வளர்ப்பதான
• பலன் சாத்தியத் திறனைக் கொடுப்பதான
• ஆன்மீக வளர்ச்சியை விரைவு படுத்துவதான
ஒரு செயலை விட முக்கியமானது எதுவுமில்லை.
ஆன்மாவின் எல்லையை அடைவிப்பதான அப்படியொரு உறுதிபட்ட வாய்ப்பு கிடைக்கும்போது, நாம் அதனைச் சாதகமாகத்தான் மேற்கொள்ளவேண்டும்.
தர்மத்தை காக்கும் கடமையுள்ளவனாக அர்ஜுனன் சித்தரிக்கப்படுகிறார். தர்மம் என்பது சநாதனமான, துல்லியமான, ஒழுங்கான செய்முறை. பரிணாமம் இதன் மூலம் தன் நோக்கத்தை பூர்த்தி செய்கிறது.
எனவே, அர்ஜுனன், சவால் அதீதமாக இருக்கும்போது, கடமை அர்ப்பணிப்புடனான ஒரு போர்வீரன் எனும் தகுதியிலிருந்து நழுவவது, நம் கவனத்தை ஈர்க்கின்றது. மனித சுபாவம், அதன் மோசமான தாக்குதலுக்குட்படுவதை நாம் இநில் பார்க்கிறோம்.
நாம் செய்யத் திறம் பெற்றிருப்பதிலும், பிரயோஜனம் உண்டு என்று கருதும் செயல்களிலும் ஈடுபடுவது எளிதானது. குழப்பம், நம் திறனளவின் நிச்சயமின்மை ஆகியன மேலோங்கியிருக்கும் போது, நாம் முழுமனதுடன் செய்கையுறுதி செய்வது அவ்வளவு எளிதானதல்ல.
தகுதியுள்ள முயற்சிகளில் சரியான தீர்மானத்துடன், திறம்பட ஈடுபடும்போது, நாம் நம் கர்மாவைச் செய்வதினாலும் ஆன்ம அடைவெல்லையை நிறைவேற்றுவதாலும் நாம் எப்படியும் நம் முயற்சியில் வெற்றி பெறுவோம் என நிச்சயமாக இருக்கிறோம்.
நாம் அறிவுக்கு எட்டிய, செய்தே தீர வேண்டிய கடமைகளைச் செய்யாமல் விடுவது, துயரத்தையும் துரதிருஷ்டத்தையும் இழுத்துப் போடுவதாகும்.
ஆகவே, சுவாபிமான சுயத்தின் கஷ்டங்களை முடிவுக்குக் கொண்டு வர, சரியான செயலுக்கு நம்மை தைரியமாக அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால், இந்த ஜென்மத்திலேயே ஆன்ம ஞானத்திற்கு, விழிப்படைவதற்கு ஆயுத்தமாகிறோம்.
ஆத்ம தீர்மானம் பலவீனமாக இருந்தால், வல்லமை மிக்க போர்வீரர்கள் (சுவாபிமானத்தை ஊட்டும் அனாத்ம மனப்போக்குகள்) பலமடைவார்கள். அவர்கள் ஒருக்கால் அதைச் செய்ய முடியும்போது, ஆன்மா அதன் செயல் தகுதியை நிறைவேற்றிக் கொள்ளும் விருப்பமின்மையைக் கண்டு கொண்டாடுவார்கள்.
VRGC கருத்து:
இதுவரை, அர்ஜுனனை ஒரு ஜீவன் எனும் அந்தஸ்த்தில் போதித்து வந்த ஸ்ரீ கிருஷ்ணர் , இங்கே அவனை ஒரு மனித அந்தஸ்த்தில் வைத்து போதிக்கிறார். சம்சாரிக்கு “உடன்வாழ் கூட்டத்தின” ரிடையே (Peer) கௌரவம் என்பது அவ்வளவு பெரியது. ஊர்ப் பேச்சு என்பார்கள். ஒருவனை மதிப்பாக எண்ணாமல் குறைக்கும் போதுதான் தற்கொலை, குடிப்பழக்கம் முதலியன கூட இழிவற்றதாக அவனுக்குத் தோன்றுகின்றன.
“வாய்ப்பின் போதல்ல, சவால்களின் போது ஒருவன் யார் என்பதே ஆன்மீக அளவுகோல்” எனக்கூறும் மிக அற்புதமான மன நல ஆலோசனைக் கருத்துக்கள். ராய் மிகத் தேர்ந்த மன நல ஆலோசகர்.
2.38. இன்ப-துன்பம், லாப-நஷ்டம், வெற்றி-தோல்வி ஆகியனவற்றை சமநோக்குடன் கருதி, தர்ம காரியங்களில் ஈடுபடு. நீ துரதிருஷ்டம் அடையமாட்டாய்.
2.39 இது ஆதி தீர்க்கதரிசிகளின் ஞானம். இதனைக் கேட்டு, அர்ப்பணிப்பு பாவனையுடன் செயல்படு. இந்த யோக ஞானத்தால், அர்ஜுனா, கர்மத்தளையிலிருந்து விடுபடுவாய்.
2.40 இதில் முயற்சி வீணாதலோ, தடைகளோ இல்லை. இதில் சிறிதளவும் பேராபத்திலிருந்து ஒருவனைக் காப்பாற்றும்.
உரை:
ஆன்மஞானத்திற்கான நம் அணுகுமுறையும் அதன் அமலாக்கமும் சுயநலக் கலப்பில்லாததாகவும், பலனில் சஞ்சலமின்றி உறுதியான தீர்மானத்துடனும் இருக்க வேண்டும். சரியான முயற்சியாலும், இறையருளாலும் வெற்றி நிச்சயம்.
இந்தப் போதனை, எல்லா அனுபூதி பெற்ற ஞானிகளின் மையக்கருத்து ஆகும். முயற்சியினால் உதிக்கும் ஞானம் வழியை ஒளியூட்டுகிறது. சுயவெளிப்பாடாய் வந்த இந்த ஞானம், ஆன்மாவின் உலகாயத காரண காரிய முடிச்சுகளிலிருந்தும் கர்மாக்களிலிருந்தும் விடுவிக்கிறது.
முன்னேற்றம் ஸ்திரமானது, தடைகள் உடைக்கப்படுகின்றன. சிறிதளவே செய்யப்பட்ட சரியான முயற்சி கூட அருட்செயலுடனும் பரிணாம வளரோட்டத்துடனும் ஆன்மாவை லயிக்கச் செய்வதான ஆன்ம வளர்ச்சிக்கு ஏதுவாகிறது.
நடப்புக்கால மற்றும் எதிர்காலப் பயங்களிலிருந்தும், மரணம், மரணத்திற்குப்பின் எவ்விதம் இருப்போம் என்பன போன்ற பயங்களும் புறந்தள்ளப்படுகின்றன.
VRGC கருத்து:
பார்க்க – முதல் பாரா “சரியான முயற்சியாலும், இறையருளாலும்” அரவிந்தர் சின்னத்தில் இருக்கும் நட்சத்திரத்தில் மேலேறு முக்கோணம் என்பது சரியான முயற்சி. கீழிறங்கு முக்கோணம் என்பது இறையருள்.
2.41. இந்தப் பாதையில் செயலுறுதியுடையோர் புத்திமான்கள். செயலுறுதியற்றவர்களின் எண்ணங்களோ பல கிளையாக பரவுவதாகவும், முடிவற்ற மாறுதலுள்ளதாகவும் உள்ளது.
2.42. ஆராய்ந்து தெளியாமல், வேதவாதங்களிலேயும் அவற்றின் மேலோங்கிய சொற்களின் ஜாலத்திலே மட்டுமேயும் திருப்தி பெற்று, அவற்றைத் தவிர வேறு ஒன்றும் தேவையில்லை எனப் பகர்வோர், ஆசைகளில் தூண்டப்பட்டவர்கள், சொர்க்க நாட்டம் உடையவர்கள் போன்றோர் அவரவர்களின் செயல்களுக்கேற்ப மறுபிறவியைப் பலனாக அடைவார்கள்;
2.43. அவர்கள் இன்பத்தையும் அதிகாரத்தையும் அடைய விசேஷித்த பல சடங்குகளைப் பரிந்துரைப்பர்.
2.44. இன்பத்தையும் அதிகாரத்தையும் பெற ஏங்குவோர் இவ்வார்த்தைகளுக்கு வசியப்படுவதால், நுண்ணறிவு மழுங்கி, தியானக் காட்சி அசாத்தியமாகிறது.
உரை:
குழப்பம், கவனச்சிதறல் ஆகியன கெட்டிப்பட்டுப்போன மனித இயல்பின் தன்மைகள். இதனால், ஒருவன் வசியப் பேச்சுக்களினால் தூண்டப்பெற்று மனம்போன போக்கில் செல்கிறான். இத்தகைய வாழ்க்கையில் ஆன்மீக முன்னேற்றத்தைக் காண்பது அரிது.
கீதை,
• மதிப்புறு ஆன்மீகப் பயிற்சிக்கும்
• சடங்குபூர்வ அல்லது சுவாபிமான சுயத்திற்கு ஊட்டம் தருவதான மதச்சடங்குகளுக்கும்
இடையே வேறுபாடு காட்டுகிறது.
சிலர், பிரார்த்தனை, விரதம், விரும்பிய கிரந்தங்கள் கூறும் விதிமுறைகளை
• பலனடையவும் (நற்கதி, கடவுளர்களுக்குப் பிரியமாகுதல்)
• ஆரோக்கியம், ஆஸ்தி, அமானுஷ்ய சக்திகள், சித்திகள் ஆகியன அடையவும்
மேம்போக்காக ஆசரிப்பது எனச் செய்கின்றனர்.
சுயஞானத்திற்கும் இறையுணர்வுக்கும் ஆர்வமுறும் சாதகர்கள், உயர்ந்த ஆன்ம மகிழ்ச்சியான ஆன்மப் பிரகாச அனுபூதி, ஆன்மக்கனிவுக்கான அனைத்தையும் இயல்பாகவே வழங்குகிறது என அறிய வேண்டும்.
முழுமைக்காக சுயானுபவத்தில் நாம் ஸ்திரப்படுகையில் நலவாழ்விற்கான அனைத்தும் அதில் அடங்கியிருக்கிறது.
விசாரித்து முடிவுக்கு வரும் ஒரு சாதகன்,
1. பலவேறு சொர்க்கங்களைப் பற்றிய முடிவற்ற நோட்டம்
2. கிரந்த விஷயங்களில் நோக்கமற்ற விவாதம்
3. புரியாத விதிகளை ஒட்டிக் கொண்டு கடைபிடித்தல்
4. இயல் கடந்த பௌதீகத்தைப் பற்றிய சொல் அலங்காரப் பேச்சுக்கள்
ஆகியன காலவிரயம் என அறியவேண்டும்.
அதே போல்,
• பூதங்களைக் கட்டுப்படுத்த ஏவிவிடப்படும் மந்திர வேலைகள்
• பிறரின் வாழ்வைத் தங்கள் சுயநலத்திற்கு மாற்றுதல்
போன்றவைகளில் ஈடுபடுவதும் வாழ்வை வீணடிப்பதே.
விசாரித்து அறியாத சாதகன் செய்யும் தியானம் கூட ஆன்ம விடுதலை விளைவிக்காத ஒரு சடங்காச்சாரமாகத்தான் இருக்கும். ஒருவனின் மனப்பரப்பு கலங்கலானதாக, சலனப்பட்டதாக, குழப்பமானதாக இருக்கும் வரை, திருப்தி, மன அமைதி, நுண்ணறிவு ஆற்றல் பயனாகுதல் சாத்தியமில்லை.
இறைச் சரணாகதியால் மட்டுமே தியானம் திருப்தியளிக்கக் கூடியதாகவும், சமாதி அனுபவம் தரக்கூடியதாகவும் இருக்கும்.
VRGC கருத்து:
வசியப்படுத்துவோரிடம் சிக்காமை ஒரு முக்கியமான போதனை. ஏனென்றால், துயரத்திலுள்ளோர் மனோபலத்தில் குறைந்திருப்பதால் வசியப்படுத்துவோர் அவர்களை எளிதாகத் தங்களின் இலக்கு மக்கள் ஆக்கப் பார்ப்பர்.
முழுமை காட்டும் கனிவை ருசிக்க மனிதன் காத்திருக்க வேண்டும். பெரும்பாலானோர் இடைவழி வெற்றியில் திருப்தி அடைவதைக் காணலாம். ஆன்மீகத்தில் மட்டுமல்ல, மன நல ஆலோசனையின் (Counseling) போதுகூட, இடைநிற்றல் (Drop Out) சகஜம்.
முழுமை, இடைவழி வெற்றி --- இந்த இரண்டில், மனிதன் உலகவாழ்க்கை வேகத்தில் அடிக்கடி இரண்டாவதைத் தேர்ந்தெடுத்து உலகவாழ்க்கைச் சுழற்சியிலிருக்கிறான். அவனை முதலாவதைத் தேர்ந்தெடுப்பவனாக மாற்றும் வரை சுழற்சி ஓயாது.
2.45 இயற்கையின் முக்குணங்கள் வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இக்குணங்களிலிருந்து விடுபடு. தூய்மையில் ஸ்திரப்பட்டு, பொருள் சேர்ப்பதிலும் அவைகளைப் பாதுகாப்பதிலும் அக்கறை காண்பிப்பதை விடுத்து, ஆன்ம உணர்வாளனாக இரு.
உரை:
தூய்மையில் ஸ்திரப்படுவது என்பது இயற்கைக் குணங்களற்ற உணர்வு கடந்த நிலை ஆகும். இவ்வாறு ஸ்திரப்பட்ட பின், முழுமை உணர்வில் தங்கியிருப்பதால், பொருள் சேர்த்தல், சுவாபிமான அக்கறை ஆகியன இருக்காது.
பொருள் சேர்த்தல், சுவாபிமான அக்கறை ஆகியன ஆணவமலத்தால் மட்டுமே சாத்தியமாகின்றன. நல்லதைப் பெறவேண்டி இச்சித்தாலும், சுவாபிமான சுயம் உலகத்தை தன் மருட்சிகளால் பார்க்கிறது.
இறைமையில் கலந்துவிடவேண்டும் எனும் அதீதபலமான இச்சையே, புதிதாகத் தோன்றாமல், என்றும் உள்ள இறைமையை உணரத் தடையாக முடியும்.
இறைமை என்பது:
• பிரபஞ்சத் தோற்றத்தில் உள்ள ஒரே சத்யம்,
• ஒருவன் இருக்கும் இடத்திலேயே என்றும் இருப்பது,
• ஆன்மாவாக ஒருமை அனுபவம் தேடுவதும் அதுவே.
ஒரு சாதகன்,
• ஆன்மா மற்றும் மனம், மனப்போக்குகள் – இவைகளுக்கிடையே உள்ள வேறுபாடு
• உடல் மற்றும் மனத்தின் மேல் இயற்கையின் உட்பொதிந்த, செல்வாக்குள்ள குணங்கள் ஏற்படுத்தும் தாக்கம்
ஆகியவற்றை விசாரித்துத் தெளியவேண்டும்.
இக்குணங்களில்,
• தாமஸ குணம், மனத்தின் மந்தத் தன்மை
• ராஜஸ குணம், சலனத்தன்மை மற்றும் குறிக்கோளை அடையும் உந்துதலைத் தருதல்
• சத்வ குணம், வாழ்வை வளப்படுத்தும் பேரார்வத்தையும், மனச்சாந்தியையும் தரும்
அவற்றில்,
• தாமஸ குணமானது, சரியானதை மனமுவந்து (கிரியைகள்) செய்வதாலும்
• ராஜஸ குணமானது மனச் சாய்வற்ற நடுநிலையாலும், அடிக்கடி உயர் உணர்வு கொள்வதாலும் நீர்த்துப் போகச் செய்யலாம்
• சத்வ குணத்தைக் கடப்பது, நிரந்தர ஒளியூட்டம், சுவாபிமான உணர்வின் விடுதலை ஆகியவற்றை நல்குவதான ஆன்ம உணர்வுப் பேறு பெறுகையில் நேரும்.
இயற்கையின் பரப்பில் உள்ள இவ்வுலகில் நாம் சாதாரணமாக வாழும் போதும் சரி அல்லது நாம் “நம்முடைய மோட்சத்திற்காக திட்டமிட்டு அமல்படுத்தும்” போதும் சரி, இயற்கையின் குணங்களோடு நம்முறவு விடுபடுவதில்லை.
நாம் நம் ஆன்ம அறிவில் வலுவடையும்போது, இயற்கையின் தன்மைகள் தடையற்றதாக நமக்கு ஆதரவாக அமையும்.
பதஞ்சலி யோக சூத்ரம் 4-32 மற்றும் 4-34 ஸ்லோகங்களில், ஆன்ம விழிப்புணர்வின் இறுதிப் படிநிலைகள் சொல்லப்பட்டுள்ளன.
பூர்ண ஞானோதயத்தின் போது , குணங்களின் சேட்டைகள் நின்றுவிடுகின்றன; குணங்கள் மேற்கொண்டு செய்வதற்கு ஒன்றுமின்றி தங்களின் செயல்களைப் பின்வாங்கிக் கொண்டு மூலத்திற்குத் திரும்புகின்றன. ஆத்மா முற்றுமுடிவான விடுதலையை அனுபவிக்கிறது.
இந்த விடுதலையின் வர்ணனை
1. ஆன்ம விழிப்புணர்வை குணங்கள் ஆட்டிப்படைப்பதில்லை
2. ஆன்ம விழிப்புணர்வு சுத்த சுயத்துடன் ஒன்றும்போது, பேருயர் ஆத்மா எனப்படுகிறது.
2.46 எங்கும் நீர்நிறைந்து வெள்ளமாகச் செல்கையில் குளத்து நீரிற்கு என்ன மதிப்போ, அவ்வளவே ஆத்ம உணர்வு பெற்றவனுக்கு கிரந்தங்களின் மதிப்பு!
உரை:
பிசிறற்ற ஆத்மஞானம் உள்ள சாதகன், ஞானத்திற்கு வேறு ஏதும் ஆதாரம் தேடவேண்டியதில்லை; ஆன்மப் பயிற்சிகளிலும் ஈடுபடவேண்டியதில்லை. வெளியில் தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என ஆத்ம உணர்வாளன், மேலும் வேறு பயிற்சிகளை முயல வேண்டியதில்லை.
2.47. கர்மத்தில்தான் உனக்கு அதிகாரம்: அதன் பலனில் அல்ல. கர்மபலனை எதிர் நோக்கி உனது காரியத்தைச் செய்யாதே; [அதே சமயம்] காரியம் ஆற்றாமையிலும் பற்று வேண்டாம்.
2.48 ஆத்மசித்தியில் ஸ்திரமாகி, கைவசமுள்ள வேலைகளைச் செய். அவைகளில் பற்றுதலை விட்டு, வெற்றி-தோல்விகளில் நிஸ்சலன மனத்தினனாய் இரு. உண்மையில், சமநிலையில் நிலைபெற்றிருப்பதே யோகம்.
2.49 காம்ய கர்மம், நிஷ்காம்ய கர்மத்தைவிட கீழானது. பலனை மட்டுமே கருதிக் கர்மத்தில் ஈடுபடுவோர் இரக்கத்துக்குரியவர்கள்.
2.50 உண்மை ஆன்மாவை அறிந்தவன், நன்மை-தீமை இரண்டையும் விடுகிறான். எனவே, ஆன்மசித்தி யோகத்தில் விருப்பார்வம் கொள். கர்மத்தினை திறன்புஷ்டியாய்ச் செய்தலே யோகமாகும்.
2.51 ஒளியூட்டத்தை சாதித்த அறிவாளியானவர்கள், கர்மபலனைத் துறந்தவர்களாய், மறுபிறவிக் கட்டாயத்திலிருந்து விடுபட்டவர்களாய்
வருத்தத்தைக் கடந்த ஆத்மாநந்தத்தில் திளைக்கிறார்கள்.
உரை:
நம் விழிப்புணர்வு கலங்கலாய் இருக்கும்வரை, மனமாற்றங்களும் வளர்ச்சி முயற்சிகளும் அவசியமான கடமைகள். நம் சரியான முயற்சிகளின் பலன்கள், நம் ஆன்மதிறவினாலன்றி, நம் செய்கைகளால் அல்ல. உன்னத அணுகுமுறை எதுவென்றால், பலன் மேலான பதற்றமின்றிச் செய்யவேண்டியதைச் செய்வதும், தன்னால் பலன் விளைந்ததாக உரிமை கொண்டாடாமையும் ஆகும். ஏனென்றால், சரியான செயல் நாம் விழிப்படையும் போக்கில் வெற்றியைக் கொடுப்பதால், நம் செயல் மற்றும் பலன் ஆகியவற்றின் ஒரு ஆர்வமற்ற கவனிப்பாளராவதே நம் பங்கு.
ஆன்ம ஞான சமாதியாகிய யோகத்தில் நிலைபெற்றிருப்பதுதான் உத்தி.
நுண்ணறிவின் அத்தியாவசியத் துணையைப் பயன்படுத்தாத இயந்திரகதிச் செயல்பாடு, விரும்பிய பலனைத் தராது.
உணர்ந்து அறிவுடன் செய்யப்பட்ட செயல் அதனளவில் நிறைவானது. ஏனென்றால், அது மோகத்தை விலக்குகிறது; மேலும், நாம் தனித்து இயங்குகிறோம் என்ற மாயயையும் போக்குகிறது. இதனால், முழுவாழ்க்கை எனும் ஒரு ஒருமை அல்லது இசைவு அனுபவிக்கப்பட்டு, அது உருவாக்குவதான விளைவை மனக்கட்டாயமும் மற்றும் சஞ்சலமுமின்றி அறிந்தேற்பது நடக்கிறது.
பேருணர்வு பற்றிய முழு அறிவும் அதன் செயல்பாடும் ஆகிய ஒளியூட்டம் சாத்தியப்பட்டுவிட்டால் அது நிரந்தரமே.
ஆன்மா, மெய்யான சித்தியில் நிலைபெற்றுவிட்டால், குணக்கலப்பு மற்றும் அதன் சேட்டைகளின் வேலைகளாகிய காரண, காரியச் சுழற்சியிலிருந்து விடுபடுகிறது.
2.52. உன் நுண்ணறிவு, மோகத்தினால் நேரும் குழப்பங்களைக் கடந்து விட்டால், நீ கேட்டறிபவைகளிலோ, இனி கேட்க இருப்பவைகளின் மீதோ, நீ விருப்பார்வம் கொள்ளமாட்டாய்.
2.53. தத்துவக் கருத்துக்களாலும், கிரந்த பாடங்களாலும் பேதலித்துப் போகக் கூடிய உன் நுண்ணறிவு, சமாதி (ஒன்றிப்பு) சித்தியால் ஸ்திரப்பட்டுவிட்டால், அப்போது நீ பிசிறற்ற உள்காட்சி மிக்க ஞானத்திற்கு விழிப்படைவாய்.
உரை:
மெய்ம்மை தெளிந்த ஞானத்தில் ஸ்திரப்பட்டுவிட்டால், ஆன்மீக விழிப்பு சரிவர வாய்க்கப் பெறாதவர்கள் எடுத்துவிடும் தத்துவ, சமய அபிப்பிராயங்களிலும் கோட்பாடுகளிலும் ஒருவன் அக்கறை செலுத்தாத மனப்பூர்த்தியை கொணடிருப்பான்.
தூய உணர்வில் சாதகனின் நுண்ணறிவு நிலைபெற்றுவிட்டால், அங்கு பூர்வாங்கமாய் இருக்கும் ஆன்ம ஞானம் இயல்பாக, தானாய் அதன் போக்கில் திறவாகும்.
அர்ஜூனன் கேட்கிறான்:
2.54 நிலைத்த ஆன்மஞானம் உள்ளவனின் உள்விவரம் என்ன? அவன் எவ்வாறு பேசுவான்? எவ்வாறு நடந்து கொள்வான்?
உரை:
புதிதாக ஆன்மபயிற்சி மேற்கொண்ட சாதகனுக்கு, கவனத்துடனான ஆன்மப் பயிற்சியின் முடிவான பலன்களை அறிவது உதவிகரமானது. ஒளியூட்டம் பெற்றவன் எவ்வாறு சிந்திப்பான், பேசுவான், உறவாடுவான்? அவர்களின் செயலை உந்துவது எது? பிறருடன் உறவாடுவதில் அவர்கள் தங்களை எவ்விதம் காணுவார்கள்? ஆன்மசித்திதான் என்ன?
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளிக்கிறான்:
2.55 மனஇச்சைகளைப் புறந்தள்ளியவனும், ஆன்ம ஞானத்திலேயே பூரண திருப்தியடைந்தவனும் ஞானத்தில் நிலைத்தவன் எனப்படுகிறான்.
உரை:
ஆன்மப் பேராவலான மெய்ஞ்ஞானம், மற்றும் உயர் உண்மைகளை எதிர்ப்பதான மோக மாயைகளால் ஏற்படும் வழிதவறிய தூண்டுதல்கள் மற்றும் ஆசைகளை, உறுதிபூண்ட சாதகன் துறக்க வேண்டும். உண்மை மெய்ஞ்ஞானத்தின் அடியொற்றி வரும் ஆன்மதிருப்தியை, ஆன்மீகத் தன்மைகள் தனக்கு இயல்பாக நடப்பாகும் வரை கவனமாக வளர்த்து வரவேண்டும். அப்போது தான் புரிந்துணர்ந்த உண்மை ஞானத்தில் ஒருவன் நிலைபெறுகிறான்.
2.56. யாருடைய மனம் துயரத்தில் துவள்ந்தும், சுக காலங்களில் மேன்மேல் இச்சைகளையும் உறுவதில்லையோ, யாரொருவன் ஆசை, பயம், கோபம் இல்லாதவனோ, தியான ஒருமை ஸ்திரப்பட்டவனோ அவன் ஒரு ஞானி.
உரை:
ஆத்மதிருப்தியானது ஒருவனை ஒவ்வாச் சூழ்நிலையிலும் அமைதி பேணும் திறனுள்ளவனாய் ஆக்குகிறது.
மேலும், அது ஒரு சாமான்யனின் சுயக்கட்டுப்பாட்டை இழக்கச் செய்கிறதான, மகிழ்ச்சிகரமான சூழ்நிலையிலும் இம்மியளவும் ஆசைகொள்ளாத திறனுள்ளவனாகவும் ஆக்குகிறது.
இச்சை, பயம், கோபம் மற்றும் அதன் வகையறாக்கள் ஆகியவற்றின் உந்துகாரணிகள், ஆன்ம அமைதி பெற்றவனுக்கு முற்றிலும் அவிந்துவிடுவதால், தியான ஒருமை எளிதாகி வலுப்படுகிறது.
பதஞ்சலி யோகசூத்ராவிலிருந்து ஒரு ஒப்புமை (4.26):
[ஆன்மதரிசனம் பெற்றபின்] தன் விழிப்புணர்வு, உடல், புலன்கள், மனம் ஆகியவற்றுடன் அடையாளம் காணுவதிலிருந்து விடுபட்டு, தன் உணர்வு மண்டலம் அமைதியாகி, பூரண விடுதலையை நோக்கி சீரான ஓட்டத்துடன் செல்கிறது.
2.57 உணர்ச்சிவயப் பற்று விட்டவன், மகிழ்வில் ஆரவாரமின்றியும், பிரியமில்லாத விஷயங்களில் வெறுப்பும் இல்லாதவன் நிலைத்த மதியினன்.
உரை:
உணர்ச்சிவயப் பற்று (sentimental attachment) என்பது விவேக அறிவைச் சார்ந்திராமல், உணர்ச்சியைச் சார்ந்துள்ளது. தெளிவான புத்தியுள்ளவன், தன் உறவுகளுடன் மகிழ்ந்துறவாடினாலும், அவற்றுடன் குருட்டுத்தனமான பற்றுள்ளவனுமல்ல. மேலும், பிரிய, பிரியமற்ற விஷயங்கள் இவ்விரண்டிலும் அதிக பாதிப்பு உறுவதில்லை. அவனுக்கு எல்லாச் சூழ்நிலைகளிலும் உள்காட்சித் தெளிவு நிலையாய் இருக்கிறது.
2.58 ஆமை தன் புலன்களை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல, எவனொருவன் தன் புலன்களை அவைகளின் ஈர்ப்புகளிலிருந்து விடுவித்துக் கொள்கிறானோ, அவன் ஞானத்தில் நிலைத்திருப்பவன்.
உரை:
அறிவாளி, உடல் மற்றும் மன இச்சை வேகங்களை ஒடுக்குவதில்லை. ஆனால், புலன்களுக்கு ஊட்டம் தரக்கூடிய பொருள் மற்றும் சூழ்நிலைகளிலிருந்து தன் விழிப்புணர்வினை விடுவித்துக் கொள்கிறான்.
எளிதான முதல் படிநிலை எதுவென்றால், ஆன்மாவை மையமாகக் கொண்டு, வெளி விஷயங்களில் இச்சையற்றும், வேகமற்றும் இருப்பது.
அறிவு விசார வழிமுறையானது, தேர்ந்த காரணத்தை மூலமாகக் கொள்ளாத செயல்பாட்டின் துரதிருஷ்ட விளைவுகளை அறியும் திறன் கொடுக்கும். அதனை ஞானம் நம் நடத்தையை ஆளுவதனால் வெளிப்பாட்டினுடன் சீர்தூக்கி பார்க்க உதவுகிறது.
வாழ்வின் இலட்சியத்தை ஆன்மீக வளர்ச்சி நிர்ணயித்தால், புலன்களின் பக்கம் சாயாமல் அவைகளைக் கையாள்வது எளிது.
மேலும், ஒழுங்கு தவறாத தியான ஒருமை, ஆன்ம சக்தியை உண்மையான சுயத்திற்குத் திருப்புகிறது, பிராண ஒட்டத்தை நிதானப்படுத்துகிறது, மனதை அமைதிப்படுத்துகிறது, ஆன்ம விழிப்புணர்வினை நிலைப்படுத்தும் உடல், மன, உணர்ச்சி நிலைகளை சமப்படுத்துகிறது.
2.59. புலன் விஷயங்களிலிருந்து விலகியவனுக்கு புலன் விஷயங்கள் விட்டுப்போகின்றன ஆனால், அவைகளின் வாசனை தொடர்கிறது. மேலுயர்ந்த சத்யத்தை முன்நோக்குபவனுக்கு அவ்வாசனைகளும் விட்டுப்போகும்.
உரை:
"பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உள்ளது" என்னும் அகவய, காரணவிதி அல்லது தொடர்புக் கோட்பாடு, உறுதிப்படுத்துவது என்னவென்றால், நம் உணர்வு மற்றும் மன நிலைகள் அவைகளை ஆதரிக்கும் சூழ்நிலைகளுக்கு ஒத்துப் போகின்றன.
நமக்கு ஒத்துப்போவதை நாம் ஈர்க்கிறோம். அவ்விதமான ஒத்துப்போதல்கள் ஏதும் இல்லாதபோது புலன் விஷயங்களும் நம்மால் ஈர்க்கப்படுவதில்லை. ஆனாலும் நம் மேலுயர்தலுக்கு இடையூறு செய்யும் அவைகளின் நினைவுகள், நம்மிடம் இருக்கக்கூடும்
ஆன்ம வளர்ச்சியால் அந்நினைவுகளும் மறையும்.
2.60. முழுமையை நோக்கி தொடர்ந்து எத்தனிக்கும் சாதகனுக்கும், பலம் வாய்ந்த புலன் வேகங்கள் மனதை வலுவுடன் சுண்டி இழுக்கக் கூடும்.
உரை:
உணர்வொளி மனதைத் தூயதாக்கும் வரை, ஆன்ம வளர்ச்சிக்குச் சங்கல்பித்தாலும், உணர்ச்சியின் விரட்டுதலில் ஆர்ப்பரிக்கும் ஆத்திரங்கள், முன் சுகானுபவத்தால் ஊட்டப்பட்டு, மனதில், ஆசை, கற்பனை, மாயக்கிரியைகளைத் தோற்றுவிக்கும்.
ஒழுக்க முயற்சியாலும், திரும்பத் திரும்பச் செய்யும் தியான உயருணர்வு அனுபவங்களாலும் இவைகளை எதிர்த்து மாற்றவேண்டும்.
உயருணர்வு அனுபவங்கள் ஆக்கபூர்வ மனப்பதிவுகளான சம்ஸ்காரங்களை உருவாக்கி, அழிவுப்பூர்வ மனப்பதிவுகளை நீர்க்கச் செய்து அழிக்கும்.
பதஞ்சலி யோக சூத்ரா (1-33)
மனதை
• நட்பு பாவனை வளர்ப்பதாலும்
• இரக்கத்தாலும்
• மகிழ்ச்சியாலும்
• நடுநிலை காப்பதாலும் – அதாவது சாதகனின் முன்னேற்றத்தைப் பாதிக்காதவைகளின் மேல் அக்கறையின்மை
• உயர்சாத்தியங்களைப் பரிசோதிப்பதாலும், சிந்திப்பதாலும்
அமைதி மற்றும் சுத்தீகரிப்பு அடையும்.
2.61. புலன் ஆத்திரங்களை கட்டுப்படுத்திய பின், பேருணர்வு தியான ஒருமையான யோகத்தில் லயித்து உயருண்மைக்கு அவாவுறவேண்டும். புலன்களை அடக்கியவனுக்கு நுண்ணறிவு ஸ்திரமாகிறது.
உரை:
உணர்வு, மன, உணர்ச்சி நிலைகளை அடக்குவதானது, புலன் ஆத்திரங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை ஒருவனுக்குத் தருகிறது.
இதனால், நித்யத்தை தியானிப்பதில் லயிப்பது எளிதாகி, தேவையான அல்லது தேர்ந்தெடுத்த உறவாட்டங்கள் ஆகிய எல்லா சூழ்நிலைகளிலும் இறையுணர்வு ஆர்வம் நிலைத்திருக்கிறது.
தன்னியல்பு சகஜ சமாதி, வாழ்க்கை உண்மை பற்றிய முழுமையான கூட்டு விழிப்புணர்வு மற்றும் அதன் போக்குகள் நிலைபெறுகின்றன.
2.62. புலன் விஷயங்களில் கவனத்தை செலுத்தும் ஒருவனுக்கு, அவைகளின் மேல் பற்று தோன்றுகிறது. பற்றுகளிலிருந்து ஆசையும், ஆசை தோல்வியுறும்போது கோபமும் தோன்றுகின்றன.
2.63. கோபத்திலிருந்து குழப்பமும், குழப்பத்திலிருந்து நினைவுச் சிதறலும் நினைவுச் சிதறலினால் விசாரித்துத் தேறும் அறிவு குறைந்து அவன் திசைபோக்கற்றவன் ஆகின்றான்.
உரை:
புலன் விஷயங்களில் மும்மரமாய் இருப்பதானது, விழிப்புணர்வை ஆட்கொள்வதான பிடிவாத போதையை ஏற்படுத்திவிடும். அது, நிறைவேறாமல் போகும்போது கோபம், அதனால் மனக்குழப்பம் ஆகியனவற்றை உண்டாக்கிவிடும். கோபம் முன் நடந்த இணையான ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டி, கால, இட பேதலிப்பு உண்டாக்கிவிடும். விசாரித்தறியும் குணம் பலவீனமாகி, இயல்பு அறிவு கைவிடப்பட்டு, ஒருவன் தவறாகவும் பொருத்தமற்றும் நடந்துகொள்கிறான்.
2.64. மன ஒழுக்கம் உள்ளவன், அன்றாட செயல்களில் ஈடுபடும்போதும் புலன்களை அடக்கி பழகுபவன், பற்று துவேஷங்களை விட்டவன் அமைதியில் நிலைத்திருக்கிறான்;
2.65. அந்த ஆத்ம சுத்தம் [அமைதிப் பிரசாதம்] ஒருவனை அனைத்துத் துயரங்களிலிருந்தும் காக்கும். இதனால், சாதகனின் அறிவு விரைவில் நிரந்தர அமைதியில் வலுப்படுகிறது.
உரை:
• மனதை, ஆன்ம விருப்பும், அதீத உயர் உணர்வும் ஆட்கொள்ளும்போதும்
• புலன்களை அடக்கியபோதும்
• வழிவழிவந்த இச்சைகளும் வெறுப்புணர்ச்சிகளும் நீங்கியபோதும்
மன மற்றும் உணர்வு நிலைகளை அல்லல்படுத்தும் வாசனைகள் அடங்கி, உள் அமைதி நிலவுகிறது. இதனால், ஆன்மா, அதிருப்தி மற்றும் துயரத்திலிருந்து அதனை விடுவிப்பதான பிசிறற்ற சுத்த சுய ஞானத்தில் லயிக்கிறது.
2.66. கட்டுக்கடங்காத மனிதனுக்கு, விவேகம், மன ஒருமை, உள் அமைதி ஆகியன இல்லை. உள் அமைதி இல்லாத அவனுக்கு மகிழ்ச்சி எங்கே?
2.67. ஆர்ப்பரிக்கும் புலன் வேக இழுப்புகளை மனம் பின்தொடரும்போது, காற்றால் அடித்துச் செல்லப்படும் படகினைப் போல, அவனுடைய புரிதல் திறனை அம்மனம் அலைக்கழிக்கிறது.
2.68. எனவே, புலன் விஷயங்களிலிருந்து விடுபட்டவனுடைய நுண்ணறிவு, ஸ்திரமானது.
மனதால் ஏவப்பட்டு தோன்றும் ஆசைகள், வெளிப்புறங்களிலிருந்து வரும் கட்டளைகளைப் போல நிர்ப்பந்திப்பதாய் இருக்கும். சிறப்படையும் பேராவலால் தூண்டுப்பட்டு வரும் ஆக்கபூர்வ ஆசைகள், நம்மை சுய—கண்டுபிடிப்பின் உச்சிக்கு உயர்த்தும். மாறாக, திசை தவறிய ஆசைகள் காரண அறிவை மழுக்கி, வலி, சிறுமை ஆகியன கொண்டுவந்து சேர்க்கும்.
தற்போதைய ஆசைக்குரிய பொருளை அடைய இதுவரை அடைந்த எல்லாவற்றையும் விட்டுவிடுவதான பலமான அவசரத்தை, இன்றோ, என்றோ, உணராதவர் யார் உளர்?
உடலளவு, மனதளவு ஆத்திரங்களை ஆள நேரடியான வழி நடுநிலைமையான வேற்றுமை உணர்வே. அதாவது அவை நம்மிலிருந்து வேறுபட்டவை எனக் கொள்ளுதலாகும்.
ஆன்மா என்பது நம் உடலோ, மனமோ அல்ல. அது வியக்த விழிப்புணர்வின் அழிவற்ற ஒரு அலகு மற்றும் அவ்விரண்டையும் வாழவைப்பதான உயரியதுமாகும்.
மனச் சாய்வற்று நோக்கினால், சலனமுறும் புலன் ஆத்திரங்களின் கோணல்கள் உள்ளவாறு தெரியும்: அவை வெறுமனே திருப்தியின்மையின் விளைவுகள் என்று.
ஆசைகள், பற்றுகள், போதைவசமான நடத்தைகள், ஆகியன தன் சொந்த உடைமைகள் என உரிமை கொண்டாடப்படும்போதுதான் அவை சக்தி பெற்று மேலோங்குகின்றன.
அவைகளைப் பிரச்னைகள் எனக் கொள்வதானது, முடிவெடுப்புச் சுதந்திரத்தினை தீர்மானகரமாக செயல்படுத்தும் விருப்பார்வம் இல்லாதிருப்பதையே காட்டுகிறது.
பகுத்தறிவானது உணர்வெழுச்சிகளால் சூழப்படுவதனால், சரியான முடிவை எடுப்பது சிரமம்.
மனச்சலனங்களையும் நிர்ப்பந்திக்கும் ஆசைகளையும் வெல்லத் தகுந்த சிறந்த வழிமுறை என்னவென்றால், அவைகள் தன் உண்மையான ஆன்ம உணர்வுக்கு வெளிப்புறமானவை என உறுதியுடன் கவனத்தைத் உட்புறம் திருப்பி நிலைமைகளை தன்னிலிருந்து புறவயமாய்ப் பார்ப்பதாகும்.
இதற்கு நாம் செய்ய வேண்டுவதெல்லாம்
• நாம் உடல் மற்றும் மனதிலிருந்து வேறுபட்டவர்கள் எனும் உண்மையையும்
• நாம் அழிவற்ற ஆன்மக்கதிர்கள் எனும் உண்மையையும்
தொடர்ந்து நினைவுபடுத்திக் கொள்ளுதலாகும்.
ஆத்மதிருப்திக்கு விரைவான வழி, தன்னை அர்ப்பணிக்கும் பிரார்த்தனையும் தியான ஒருமை லயிப்பும் ஆகும். தினசரி வாழ்சூழலில் அமைதியைக் கடைபிடிப்பதின் மூலம் உதவிகரமான பல செயல்களைச் செய்யமுடியும்.
அவையாவன:
• சொந்த நடத்தை, செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல்
• ஆதரவான உறவுகளையும் சூழ்நிலைகளையும் தீர்மானகரமாகத் தேர்ந்தெடுத்தல்
• நிதான, தைரிய, வாழ்வார்வம் போன்ற குணங்களை வளர்த்தல்
• சிறப்புறுதலை லட்சியமாகக் கொண்டு முன்னேறுதல்
• முனைப்புடன் செய்யும் ஆக்கபூர்வ சிந்தனை
• முனைப்புடன் செய்யும் கருத்து வெளிப்பாடு
• சரிவிகித சத்துணவு
• செயல்படுதல், ஓய்வு ஆகியனவற்றின் சரிவிகிதக் கலவை
• காரணபுஷ்டியான வாழ்க்கையை அறிந்து அதில் ஆர்வமுறுதல்.
மனக்குழப்பம், உணர்ச்சி பேதலிப்பு, மற்றும் பிற ஆளுமைக் கோளாறுகளுக்கு மூலகாரணம் எதுவென்றால், "தன்னைவியத்தல்" (narcissism) எனும் போதைப்போக்கு தான்.
• சுய புகழ்ச்சி
• குழந்தைப் பருவத்தில் உணர்வெழுச்சி நன்கு பக்குவம் பெறாமை அல்லது சற்று மேலும் மோசமாக, அவைகளை வளரவிடாமல் தடுக்கப்படுதல்.
• குழந்தைப் பருவத்தில் உணர்ச்சிகள் உடலை மையமாகக் கொண்டிருப்பதால், வயதான பின்னும் உணர்வெழுச்சி பக்குவமடையாமல் உடல் தேவைகளைச் சார்ந்துள்ள குழந்தைப் பருவத்திற்குத் திரும்புதல்.
கிரேக்க புராணங்களில், இளைஞனான நார்சிஸஸ், குளத்தில் தன் நிழலைப் பார்த்துக் காதல் கொண்டு,மலராக மாறினார் என்று ஒரு செய்தி உள்ளது. அதை மேற்கோளாகக் கொண்டு இதுபோன்ற செயல்களுக்கு அவன் பெயரே நிலைத்துவிட்டது.
ஆன்மப் பிரக்ஞையை மூடும் இந்நிலையைக் குணப்படுத்த, உணர்வெழுச்சி முதிர்ச்சியினை அனுமதித்து அதனைத் திறவாதலுக்கும் சாதனைக்கும் வளரவிடுதலாகும்
ஆணவமைய சுயநலம் என்பது தனக்குத் தானே நிலையாதாரம் எனும் மயக்கமே. அதுதான் காட்சிப்பிழைகளின் (தவறான கருத்து மற்றும் குருட்டு நம்பிக்கை) மூலகாரணம்.
2.69. ஆன்மவிழிப்பற்ற எல்லோருக்கும் எது இரவோ, அது ஒழுக்கமுள்ள சாதகனுக்கு முழித்திருக்கும் காலம்; சாதாரணர்களுக்கு முழுத்திருக்கும் காலமே தெளிவாய்ப் பார்க்கத் தெரிந்த முனிவனுக்கு இரவு.
உரை:
உயர் உண்மைகளைப் பற்றி ஞானஇருளிலுள்ள சுவாபிமானமுடையவர்கள் புலன் விஷயங்களுக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள்; மாறாக, சாதகர்கள் உண்மைக்குத் திறவாகியிருக்கிறார்கள்.
சுவாபிமானமுடையவர்கள் தாங்கள் எதனை வெளித்தோற்றத்தில் கண்டு உண்மையில் உண்டு என நினைக்கிறார்களோ, அந்த வெளித்தோற்ற கற்பித உண்மையை சாதகர்கள் உண்மையை மறைக்கும் இருளாகக் கருதுகிறார்கள்.
2.70 நிரம்பியுள்ள கடல் எப்படி ஆற்றுநீர் வரவினால் ஆரவாரமின்றி ஏற்றுக் கொள்கிறதோ, அப்படி யாரிடம் எல்லா ஆசைகளும் சங்கமம் ஆகி அவற்றுக்கு ஆட்படாமல் மனநிறைவுடன் இருப்பானோ அவன் அமைதியை உணர்கிறான். மாறாக, அவ்வாசைகளுக்கு பலியாகுபவன் அமைதி பெறுவதில்லை.
2.71 'நான், எனது' என்ற எண்ணங்கள் இன்றி, அனைத்து ஆசைகளையும் விட்டு, அவைகளின் ஆதிக்கங்களற்ற விடுதலை வாழ்க்கை வாழ்பவன், அமைதியை அடைகிறான்.
உரை:
ஆன்ம ஞானத்தில் நிலைபெற்ற சாதகனின் பிரக்ஞை தினசரி வாழ்க்கை ஒட்டத்தின் நினைவுப்பதிவுகளினால் வெளிப்பாய்ந்து அசைவுறுவதில்லை.
எல்லா ஆசைகளையும், பற்றுகளையும், 'நான்' எனும் ஆணவமாயத்தையும்
துறந்து, பேருண்மையின் முழு அறிவுக்கு திறவாகும் நோக்கத்துடன் எந்த ஒரு சாதகன் தன் சுவாபிமான உணர்வை மெய்ப்பிரக்ஞைக்கு சமர்ப்பிக்கிறானோ, அவன் இயல்பான ஓளியூட்டலை தானாக அனுபவிக்கிறான். ஏனென்றால், ஆன்மாவின் உள்ளிருந்து முழுமைபெறற்கு இயல்பாகத் துடிக்கும் பூர்வாங்க வேக எழுச்சி, அதனைத் தணிக்கும் தடைகள் நீக்கப்பட்டதனால் தனது நோக்கத்தை தானாகப் பூர்த்தி செய்து கொள்கிறது.
2.72 அதுதான் இறைநிலை. அதனை உணர்ந்தவனுக்கு என்றும் குழப்பமில்லை. உடலை விடும் சமயத்தில் இதில் நிலைபெற்றவன், என்றும் நிலையான சத்ய இறைப்பிரக்ஞைக்கு ஒருவன் விழிப்பாகிறான்.
உரை:
ஆன்மா, தூய உணர்வின் வியக்தமாதலால் அது தெய்வீகமானதாக இருக்கிறது.
இந்நிலை, நிரந்தரமாக உணரப்படும்போது, முன் ஆன்மப் பிரக்ஞையை மூடியிருந்த எல்லா அக்ஞான கற்பிதங்களையும் அது நீக்குகிறது.
தேவையான புருஷார்த்தங்கள் அனைத்தும் மற்றும் ஆன்ம எல்லையின் அடைவு ஆகியன நிறைவேறிய பின் உடலை விடும் ஆன்மா, ஆன்மவிடுதலை எனும் ஆநந்தத்திற்கு விழிப்பாகிறது.
உடலிருக்கும் போதே ஆன்ம ஞானத்தில் நிலைப்பதென்பது, உலக வாழ்க்கை வாழ்ந்து கொண்டே அதிலிருந்து விடுவித்துக் கொள்வதாகும். யோக இலக்கியங்கள் இந்நிலையை அழிவற்ற 'ஜீவன் முக்தி' என வர்ணிக்கின்றன. இந்நிலையில் தொல்லைகளிலிருந்தும் துரதிருஷ்டங்களிலிருந்தும் முற்றிலும் விடுதலை பெறுவதனால், இதனை என்றும் அழியா முக்தி என்றே கூறுகின்றன.
ஒரு விவரமறிந்த சாதகன், எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில்,
மெய்யுணர விருப்பார்வம் கொள்கிறான். அதனால் உடல் விடுவதற்கு வெகு கால முன்பே, கங்குகரையின்றி வெளிப்படும் அறிவார்த்தமான தன் வெளிப்பாடுகளினால், வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்க முடியும்.
ஆனாலும், மரணத்தருவாயில், ஆன்ம ஞானம் அடைந்து நிலைபெறுவதாலும், ஆன்ம விடுதலை உறுதி.
முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், சாங்க்ய யோகம் என மூலத்திலும், நித்யத்தின் ஞானம் எனும் யோகம் என இவ்வுரையிலும் தலைப்பிடப்பட்ட இரண்டாவது அத்தியாயம், நிறைவுபெறுகிறது.
Send Your Comments to phdsiva@mccrf.org