W184. அறியாமைக் கூட்டினை அறுத்துக்கொண்டு வெளியேறுவதற்காக.(Whispers from Eternity - Tamil & English)
184. அறியாமைக் கூட்டினை அறுத்துக்கொண்டு வெளியேறுவதற்காக.
[ஓ பராசக்தித் தாயே! நான் உன் குரலால் இச்செய்தியைச் சொல்லக் கேட்டேன்,] "நீ வெகுகாலமாய் தவறான மனிதப் பழக்கங்களாலான கூட்டினில் அடைப்பட்டுக் கிடக்கிறாய். பட்டுஇழைகளை சேகரிக்கும் அந்தகன் வந்து உன்னை அழிக்குமுன்னர், நீ சீக்கிரம் வெளியே வா! மயக்கமுறுத்தும், சொகுசு தரும், கவரும் பழக்கங்களெனும் பட்டுக்கயிறுகளால், நீ காலனின் பிரத்தியேக அறைக்குள் பிணைக்கப்பட்டுள்ளாய்.
"வெளியே வா! தவறுதலாக, பலவீனத்தைத் தன் சுபாவமென எண்ணி உறங்கும் மனிதப் புழுவாய் இருப்பதை விட்டொழி. மோகக் கூட்டிலிருந்து வெளியே வா! உன் வேண்டுதல்களையும், குறிக்கோள்களையும் ஆன்மீகப்படுத்தி, அதன் மூலம் உன் இறகுகளில் வரம்பற்ற சக்தியையும், தேஜஸையும் பெருக்கி, அவைகளை விரித்துப் பரப்பு.
"வெளியே வா! நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய் நீ ஆகு! இயற்கையின் எண்ணற்ற அழகுகளினால் உன் உணரும் இறகுகளை அலங்கரித்துக் கொள்; அவைகளைக் கொண்டு விண் முழுதிலும் எல்லாப்புறங்களிலும் விரித்து, எல்லா ஜீவராசிகளையும் உல்லாசப்படுத்து.
"எல்லையற்ற வானவெளியில் உன் அழகிய இறகுகளினால் சிறகடித்துப் பறந்து செல்; அழகை ஆராதிக்கும் அனைவரையும் ஈர்த்து உன் கவின்மிகு அழகினை ரசிக்கச் செய். சூரிய-விண்மீன் பொறிகள் உன் இறகுகளினில் மினுமினுக்கும்; நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய், ஆனந்த மார்க்கத்தில் நீ சிறகடித்துப் பறக்கும்போது, உன் வழியில் தென்படும் நெஞ்சங்களினில் உள்ள கலக்கத்தை எல்லாம் அது துரத்தியடிக்கும்."
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
184 Cutting through the Cocoon of Ignorance
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org