பதஞ்சலி யோக சூத்திரம் - IV. கைவல்ய பாதம் - முக்தி
ஓம் ஸ்ரீ விக்னேஸ்வராய நம:
ஸ்ரீ குருப்யோ நம:ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே நம:
ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி பாதம் போற்றி
ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் பாதம் போற்றி
ஸ்ரீ ராய் யூஜீன் டேவிஸ் பாதம் போற்றி
பதஞ்சலி யோக சூத்திரம்
IV. கைவல்ய[i] பாதம் - முக்தி
1. [நல்வினையுடன் கூடிய] பிறப்பு, மருந்து, மந்திரம், தவம் ஆகியவைகளாலும் தியான சமாதியினால் அடையக்கூடிய சித்திகளைப் பெறமுடியும்.
2. ஜீவராசிகளில் [உடல், மனங்களின்] பரிணாம வளர்ச்சியை இயற்கை தக்க சூழ்நிலைகளை நிரப்பி [உருவாக்கி] ஏற்படுத்துகின்றது; இது தொடர்ந்து ஜன்மாந்தரமாகவும் நடைபெறுகின்றது.
3. ஒருவரது செயல் இயற்கையின் செயலை நேரடியாகப் பாதிக்காது; ஆயினும் உழவன் [தன் வயலுக்கு குளத்துநீர்பாய்ச்ச வரப்பிலுள்ள] தடைகளை அகற்றுவது போல், தனது மனத்தை மூடிய இருள் திரையை அகற்ற அந்தச் செயல் பிரயோஜனமாகும்.
4. அகங்கார தனித்துவத் தன்மையினால் ஜீவராசிகளில் தனித்தனியாகச் சித்தம் உருப்பெறுகின்றது.
5. ஜீவராசிகளில் சித்தங்களின் செயல்கள் பலவேறுபட்டாலும் அவையாவும் [பிரபஞ்சத்தை இயக்கும் கடவுளின்] ஒரு பெரும்சித்தத்தின் அம்சங்களாகவே உள்ளன.
6. சமாதி-தியானத்தினால் சித்தத்தில் கர்மவினை மேலும் சேராது.
7. [சமாதி நிலையிலில்லாத] மற்றவர்களின் கர்மவினைகள் ஒளி [சத்வ], இருள்[தமஸ்], இவையிரண்டன் கலவை [ரஜஸ்] என மூவகைப்படும்; யோகியின் செயல் [போட்டமுடிச்சை அவிழ்ப்பது போல - "Undo Action"] மூவகையிலும் சேராது.
8. கர்மவினையின் விளைவு, அதற்குத் தக்க சூழ்நிலை அமையும்போது வெளிப்படும்.
9. ஞாபகநினைவும், அனுபவ எண்ணப்பதிவுகளும் ஒரே தன்மையனதாக [அதாவது, அவைகள் காரண-காரியத் தொடர்பினால் ஏற்படுத்தும் அனுபவங்கள் ஒரே மாதிரியாக] இருப்பதால், ஜென்மம், இடம், காலம் ஆகியவை இடைப்பட்டாலும், முந்தைக் கர்மவினை சிதையாமல் தொடர்ந்து வந்து [தக்க சூழ்நிலையில்] விளைவு உண்டாக்கும்.
10. உயிர் என்றும் நித்தியமாக வாழ விரும்புவதால், கர்மவினைகளின் ஆதித்தோற்றுவாயை அறியவே முடியாது. [கர்மவினையின்றி, ஒரு உயிர் பிரபஞ்சத்தில் வெளித்தோற்றம் கொள்ளாது. பிரபஞ்சத் தோற்றத்தில், காலத் தத்துவம் ஏற்படுவதற்கு முன்னரே, அந்தக் கர்மவினை இருந்தபடியால் அதன் ஆதித்தோற்றுவாயை அறிவது சாத்தியமில்லை.]
11. காரணம், விளைவு, அடிப்படை, புலன்சார்பு ஆகியவைகளால் கர்மவினை இயக்கம் பெறுகிறது. இவைகளை நீக்கினால் கர்மவினையும் நீங்கும்.
12. இன்னும் நேரவேண்டிய விளைவுகளுக்குக் காரணமான கர்மவினைகளை எப்படி வினையாளர் எதிர்கொள்கிறோரோ, அதைப்பொறுத்து விளைவுகள் மாறுபடும்.
13. வெளித்தோன்றுவதும், சூட்சுமமானதுமான கர்மவினைகள் அனைத்தும் முக்குணத் தன்மையனவே.
14. பிரபஞ்சத்தில் காணும் வஸ்துக்கள் [ஸ்தூல பொருட்கள் (தேகமுட்பட), சூட்சும விஷயங்கள் (தன்மாத்திரை, பிராணன், இந்திரியங்கள், அந்தக்கரணங்கள் உட்பட), காரண-காரிய தத்துவங்கள் (கர்மவினையுட்பட)], ஜீவராசிகளின் உடல், மனங்களின் பரிணாம வளர்ச்சி இவையாவும் ஒரே முக்குணத் தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டவை.
15. வஸ்து ஒன்றேயாயினும், வெவ்வேறு சித்தங்கள் அதனதன் வாழ்க்கைப்பாதையைப் பொறுத்து, அதை வெவ்வேறு விதமாக அனுபவிக்கின்றன.
16. வஸ்து ஒரு சித்தத்திற்காக மட்டும் உருவாகுவதில்லை; அப்படியானால், அச்சித்தம் அதை அனுபவிக்காவிடில், அந்த வஸ்துவின் உண்மை இருப்பிற்கு என்ன ஆதாரம்? [அதாவது, வஸ்துக்களின் உண்மையை உள்ளபடி அறியாமல் தவறாகக் கருதினாலும், உலகில் காணப்படும் வஸ்துக்கள் மாயக்காட்சி அல்ல. அவற்றின் உண்மையைப் பிறரும் ஊர்ஜிக்கமுடியும்.]
17. சித்தத்தின் வளர்ச்சித் தேவைக்கும், அதுகொண்ட கர்மவினை நிறத்தையும் [தனித்துவ குண அமைப்பு] பொறுத்து, அது ஒரு குறிப்பிட்ட வஸ்துவை அறிவதும், அறியாமல் இருப்பதும் நிகழ்கிறது.
18. சித்தத்தின் எஜமானான ஆன்மா எவ்வித மாற்றத்திற்கும் உட்படாததால், அது எப்போதும் சித்தத்தின் விருத்திகளை சாட்சியாக அறிந்துகொண்டே இருக்கின்றது.
19. ஆன்மாவிற்கு சித்தம் அறியப்படுபொருளாக இருப்பதால், சித்தத்தின் அறிவுணர்வு சுயமாக அதிலிருந்தே தோன்றியதல்ல [ஆன்மாவின் பிரகாசத்தினால் சித்தம் ஒளிருகிறது].
20. சித்தம் சுயம்பிரகாசம் அற்றதனால், ஒரே சமயத்தில் [அகத்தே அதனை ஒளிர்விக்கும் ஆன்மாவையும், புறவிஷயத்தையும்] இவ்விரண்டையும் சேர்த்து அறிய இயலாது.
21. ஒரு சித்தத்தின் அறிவுணர்வு மற்றொரு சித்தத்தினைச் சார்ந்து விளங்குவதல்ல. அப்படிச் சார்ந்து விளங்கினால், ஒன்றனுக்கொன்றாக முடிவற்ற சார்புத் தொடரில் புத்தி அகப்பட்டுக் கொண்டு, எதையும் உறுதியாக அறியமுடியாமல் நினைவில் குழப்பமே மிஞ்சும்.
22. தூய ஆன்ம சைதன்யம் எந்த பாதிப்புக்கும் உட்படாது; அதன் தன்மையை சித்தம் ஏற்றுக்கொள்வதால், சித்தம் அறிவுணர்வு பெறுகின்றது.
23. அனுபவிப்பவர், அனுபவிக்கப்படுபொருள் இவ்விரண்டின் நிறத்தையும் சித்தம் ஏற்றுக்கொள்வதால் [ஸ்படிகம் தன்னைச் சுற்றியுள்ள பொருளின் நிறத்தை தான் ஏற்று பிரதிபலிப்பது போல்], அதனால் எந்த ஒரு விஷயத்தையும் விளங்கிக் கொள்ளமுடிகின்றது.
24. எண்ணற்ற விதவிதமான கர்மவினைகளைக் கொண்டிருப்பினும், சித்தம் அதை உடையவரின் ஆன்மலாபத்திற்காக, பரஸ்பர தேவையுடைய ஒரு துணைக்கருவியாகவே செயல்படுகின்றது.
25. ஆன்மதரிசனம் பெற்றவருக்கு, [அதையடைய முன்னர் மேற்கொண்ட] தன்னை ஆன்மாவாய் கற்பித்துக்கொண்ட முழுமைபெறாத மனோபாவனைகளின் தேவை நீங்கும்.
26. ஆன்மதரிசனம் பெற்றபின், சித்தம் விவேகத்தை [தூய ஆன்மாவிற்கும், குணக்கலப்புடைய மற்ற மனநிலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறியும் அறிவை] உறுதியாகப் பற்றிக்கொண்டு, கைவல்யத்தைத் தன் தலையாய லட்சியமாக முற்கொண்டு இயங்கும்.
27. கைவல்ய நிலையை அடையுமுன்னர், தனது பூர்வகர்மவினைகளால் எண்ணங்களில் பிழைப்பட்டு இடையூறுகள் [1.30] நேரலாம்.
28. அவ்விடையூறுகளை [4.27], துன்பக்கிலேசங்களைக் களைய முன்னர்க்கூறிய [குறிப்பாக, 1.32 - 1.39 மற்றும் 2ஆம் பாதத்தில் கூறப்பட்ட] உபாயங்களைக் கடைப்பிடித்து நீக்கலாம்.
29. அதீத உணர்வுநிலைகளினால் தோன்றும் [பொதுவாக 3ஆம் பாதத்தில் கூறப்பட்ட] சிறப்பியல்புகளின்மீது பற்று கொள்ளாமல், விவேகத்தை எப்போதும் வழுவாமல் கடைப்பிடித்தால், தர்மமேக [சகஜ] சமாதிநிலை சித்திக்கும்.
30. தர்மமேக சமாதியடைந்தபின், துன்பக்கிலேச கர்மங்கள் சார்பின்றி நீங்கும்.
31. இவ்வாறாக [4.30], மனத்தின் மாசுத்திரையை முற்றிலுமாக அகற்றியதால் வெளிப்படும் முடிவற்ற ஞானத்தினால், மேற்கொண்டு அறியவேண்டுபவை சொற்பமே.
32. இவ்விதம் [4.31], தன்கடமை பூர்த்தியுற்றதனால், இயற்கை தன்செயலான பரிணாம வளர்ச்சியின் கிரமத்தையும் முடிவுபடுத்தும்.
33. கைவல்யநிலையை எட்டும் சமீபத்தில், தன் உணர்வுநிலையில் கணப்பொழுது வித்தியாசத்தில் நிகழும் மாற்றக் கிரமங்களை கிரகிக்கமுடியும்.
34. தன் வளர்ச்சித் தேவைகள் அறவே நீங்குவதனாலும், இயற்கைக்குணங்கள் அவற்றன் மூலத்தில் ஒடுங்குவதனாலும், ஆன்மாவிற்கு கைவல்யநிலை சித்திக்கின்றது. அதாவது, ஆன்மா தன் மெய்யான சுயரூபத்தில் முழுமையான அறிவுணர்வு ஆற்றலுடன் நிலைத்தபேறு பெறுகின்றது.[ii]
---
35. கைவல்யம் என்பது முடிவான, முழுமையான நிர்வாண ஒருமை நிலை.
36. கைவல்ய நிலையில், முக்தியுற்ற ஆத்மா தன் சுயரூபமான தூயஉணர்வில் நிலைகொள்கிறது.
37. கைவல்ய நிலையில், அனைத்தும் ஒருமித்த ஒருமைப் பேருண்மை விளங்குகின்றது. பிரபஞ்சமும், அதன் இயக்கங்களும் அந்த பேருண்மையின் பிரதிபலிப்பாகத் தோன்றுகின்றன.
38. இருப்பு (ஸத்), பேருணர்வு (சித்), ஆனந்தம் பேருண்மையின் வெளிப்பாட்டு அம்சத்தின் (expressive aspect) குணங்கள். பேருண்மையின் அறுதிமுடிவான முழுமைத்தனித்துவ அம்சம் (absolute aspect) குணங்களற்றது.
---
[ii] பல பதிப்புகளில் 34ஆம் சூத்திரத்துடன் இப்பாதம் நிறைவுபெறுகிறது. ஸ்ரீ ராய் யூஜீன் டேவிஸ் பதிப்பில் உள்ளபடி இங்கு சூத்திரம்-38 வரை இடம்பெற்றுள்ளது.
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org