W48. அனைவரின் இதயத்திலும் என் ஆனந்தவெள்ளம் நயாகரா அருவியாய்க் கொட்டட்டும். (Whispers from Eternity - Tamil & English)
48. அனைவரின் இதயத்திலும் என் ஆனந்தவெள்ளம் நயாகரா அருவியாய்க் கொட்டட்டும்.
நான் சந்திக்கும் அனைவரின் மேலும் என் இதயத்திலிருந்து சுரக்கும் ஆனந்தவெள்ளம் என்றும் வற்றாமல் நயாகரா அருவியாய்க் கொட்டட்டும். அந்த பெரும் வெள்ளம் கனத்த மரக்கட்டை போன்ற மற்றவர்களின் கஷ்டங்களை அடித்துச் செல்லட்டும். என் ஆனந்தம் சிந்தும் நிலவின் கிரணங்களைக் கொண்டு பிரிந்து வாடும் அனைவரும் அவர்கள் ஏக்கத்தைக் கழுவட்டும்.
பலமைல் தூரம் விரிந்து அகன்று, எண்ணற்றோர் மனோபாவங்களில் சோகத்தினாலான பெருங்கட்டிடங்களை நொறுக்கித்தள்ளும் சிரிப்பின் பெருஞ்சுழற்காற்றாக நான் ஆவேனாக. அனைவரின் நெஞ்சங்கள்படும் அல்லல்களை நான் சுழற்றி எரிந்து தகர்ப்பேனாக.
இரவின் இருள் கவ்விக் காணாத மனங்களுக்கடியில் மறைக்கப்பட்ட உன் பரந்த எழிலழகை, மின்னல் ஒளிக்கீற்று போன்று என் புன்னகையினால் துரிதமாக பிறர் காணும்வண்ணம் வெளிக்கொணர்வேனாக.
நான் ஒளிக்கதிர்களாகி, மனித மனங்களில் இருண்ட மூலைமுடுக்குகளிலெல்லாம் யுகாந்தரமாக ஆக்கிரமித்திருக்கும் காரிருளை ஒரே அடியில் துரத்தியடிக்க எனக்கு அருள்புரி. உன் அருளால் ஞானஒளியின் சிறுகீற்று, பலகோடி ஆண்டுகளாய்க் குவித்துவந்த தீவினைகளை ஒருகணத்தில் தவிடுபொடியாக்கும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
48 May the Niagara of my Joys inundate all hearts.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org