MCCRF - A global volunteer network

பதஞ்சலி யோக சூத்திரம் - I. ஸமாதி பாதம்

ஓம் ஸ்ரீ விக்னேஸ்வராய நம:

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி பாதம் போற்றி

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் பாதம் போற்றி 

ஸ்ரீ ராய் யூஜீன் டேவிஸ் பாதம் போற்றி 

பதஞ்சலி யோக சூத்திரம் 

I. ஸமாதி[i]பாதம்

1. யோக சாசனம் விளக்கப்படுகிறது.


2. யோகம் [ஸமாதி] என்பது சித்த விருத்திகள் [எண்ண ஓட்டங்கள்] அடங்குதல்.


3. ஸமாதி தருணத்தில் ஒருவர் தன் மெய்த்தன்மையில் [நிஜசொரூபத்தில்] ஒன்றுகிறார்.


4. மற்ற தருணங்களில் [அவர்] விருத்திரூப வசமாகிறார்.


5. துன்பம் விளைவிப்பனவும், விளைவிக்காதவையுமான விருத்திகள் ஐந்து.


6. அறியும் கருவி [அளவை], பொய்யறிவு, கற்பனை, நித்திரை, ஞாபகம் என்பன அவ்விருத்திகள்.




7. [புலன்களால்] நேரடி காட்சி, [குறிகளால் உய்த்துணரும்] அனுமானம், [பிறர் மூலம் அறியும்] ஆகமம் என அளவைகள் மூன்று.


8. பொய்யறிவு [மருள்] என்பது உள்ளதை உள்ளபடி அறியாமல் குறைவாகவோ, அல்லது மாற்றியோ அறிவது.


9. இல்லாத ஒன்றினை மனத்தினால் காணும் காட்சி [கற்பனை].


10. உணர்வற்ற நிலையை அனுபவிக்க விழையும் விருத்தி நித்திரை.


11. முன்னம் அனுபவித்து, அழியாமல் தங்கியிருக்கும் நினைவுகள் ஞாபகம்.


12. அவ்விருத்திகளை தொடர்பயிற்சி [அப்யாஸம், சாதனை] மற்றும் பற்றின்மையால் [நிராசை, வைராக்கியம்] அடக்கமுடியும்.


13. ஒரே விஷயத்தில் கவனத்தை நிலைநிறுத்த முயற்சிப்பது அப்யாஸம்.


14. அப்யாஸத்தை வெகுகாலமாய், தடைபடாமல் ஊக்கத்தளர்வின்றி, நம்பிக்கையுடன் செய்வதினால் அது உறுதிபெறும்.




15. [புலன்களால்] கண்டுகொண்ட, கேள்வியுற்ற விஷயங்களில் உருவாகும் ஆசைத்தாகத்தினை தன்வசத்தில் ஆளுதல் வைராக்கியம்.


16. தன் மெய்த்தன்மையை அறிவதனால், குணக் கலப்பினாலான விஷயங்களில் ஏற்படும் விரக்தி மேன்மையான வைராக்கியம்.


17. உட்தர்க்கம்[ii] [ஸவிதர்கம்], உள்விசாரம் [ஸவிசாரம்], ஆனந்திக்கும் நிலை [ஸானந்தம்], ‘நான்’ நினைவு நிலை [ஸாஸ்மிதா] – இவை அறிவுச்சார்புடைய [ஸம்ப்ரஞாத] ஸமாதி அனுபவங்கள்.


18. தொடர்ச்சியான அப்யாஸத்தின் மூலம் விருத்திகளை அடக்கச்செய்யும் நல்வினைகள் அமையப்பெற்று அறிவுச்சார்பற்ற [அஸம்ப்ரஞாத] ஸமாதிக்கு வழிவகுக்கிறது.


19. தோற்றமுக்தி[iii] [ப4வப்ரத்யயம்] என்பது இயற்கைப் பரிணாம வளர்ச்சி வாயிலாக தன் [ஸ்தூல, சூட்சும, காரண] உடம்புகளை நீக்கி இயற்கையின் மூலத்தில் [மூலப்ரக்ருதி] லயமடையும் போது நேர்கிறது.



20. சிரத்தை [நம்பிக்கை], வீரியம் [நெஞ்சுரம்], ஸ்ம்ருதி [மெய்சிந்தனை],  ஸமாதி, ப்ரஞா [மெய்ஞ்ஞானம்] – இவை அறிவுச்சார்பற்ற [அஸம்ப்ரஞாத] ஸமாதிக்கு வேண்டிய ஸாதனங்கள்.


21. திண்மையான விடாமுயற்சியினால் [கைவல்ய] முக்தியை விரைவில் அடையலாம்.


22. மந்த, மத்திய, தீவிர வகை முயற்சிகளில், தீவிர வகை சிறந்தது. அதிலும், அதிதீவிர வகை மேம்பட்டது.    


23. கடவுளைச் சரணடைதல்[iv] முக்திக்கு [சிறந்த] வழி.


24. மேம்பட்ட உத்தம புருஷனான கடவுளைத் துன்பம் [கிலேசம்], கர்ம வினைகள், அதன் விளைவுகள், மற்றும் அதன் சேமிப்பு ஒரு போதும் நெருங்காது.


25. கடவுளின் முற்றுணரும் சர்வக்ஞத் தன்மை ஈடுஇணையற்றது.


26. கடவுள் முந்தோன்றிய குருமார்கள் எல்லார்க்கும் கால [தேச, வஸ்து] வரம்பினுக்கு அப்பாற்பட்ட குரு. [கடவுளையும், பிரபஞ்ச இயக்கங்களையும் பற்றிய முழுவிவரமும் ஆன்மஞானமாக ஒவ்வொரு ஜீவனிலும் பொதிந்துள்ளது.]


27. பிரணவ நாதம் [ௐ] கடவுளின் நாமம்.


28. பிரணவத்தை [உள்ளும், புறமும்] ஜபித்தலினால் அப்பெயரை உடையவரான கடவுளின் உணர்வு சித்திக்கிறது.


29. பிரணவஜபம் மேலும் உள்முகமான மெய்யுணர்வையும், இடர்களிலிருந்து விடுதலையையும் அளிக்கிறது.



30. வியாதி, மதப்பு, சந்தேகம், முட்டாள்தனம், சோம்பல், சக்திவிரயம், குழம்பிய நோக்கு, ஆன்மமுன்னேற்றமின்மை, நிலைதடுமாற்றம் – இவை சித்தத்தை அல்லல்படுத்தும் இடர்கள். 


31. துக்கம், மனத்தளர்வு, உடலங்கங்களில் சலனம், ஒழுங்கற்ற சுவாசம் - இவை மனஅலைவோடு கூடித்தோன்றும் அதை உணர்த்தும் அறிகுறிகள்.


32. இவ்விடர்களை வெல்ல வழி: [முற்கூறிய] ஒருமைத் தத்துவ பயிற்சி [கடவுளைச் சரணடைதல்]




33. சுகம், துக்கம், நல்லன, தீயன ஆகிய விஷயங்களில் [முறையே] நட்பு, கருணை, மகிழ்ச்சி, உதாசீனம் முதலிய பாவனைகளைப் பழக்குதல் மனவமைதி தரும்.


34. மூச்சைச் சீராக உள்ளிழுத்து, அடக்கி வெளிவிடும் பயிற்சியும் [மனவமைதி தரும்].


35. [புலனுக்குட்படா] சூட்சும விஷயங்கள் விளங்குகையில் மனம் அவற்றில் நிலைபெறும். அதனாலும் [மனவமைதி நேரும்].


36. சோகமற்ற [ஆனந்தமய] ஜோதியை [அகத்தினுள்ளே] தரிசனம் செய்வதாலும் [மனவமைதி உண்டாகும்].


37. பற்றறுத்த மகான்களைப் பற்றிய சிந்தனையும் [மனவமைதி தரும்].


38. கனவு, நித்திரை நிலைகளுக்கு ஆதாரமான நம் உணர்வுதளத்தை ஆராய்தலும் [மனவமைதி தரும்].


39. மனத்திற்கு உகந்த ஏதாவது ஒரு [பாதகமற்ற] விஷயத்தில் ஆழ்ந்த கவனமும் [மனவமைதி தரும்].


40. [மனவமைதி சித்தியினால்] அணுவைவிட நுண்ணியன முதல் சிருஷ்டிக்கு ஆதாரமான மாபெரும் 'மஹத்' வரை எதனையும் கிரகிக்கக் கூடிய ஆளுமை ஏற்படும்.




41. விருத்திகள் தேய்ந்து நாசமுறும் போது சுத்த ஸ்படிக மணி எப்படி அருகிலுள்ள பொருளின் நிறத்தை ஏற்கிறதோ அப்படி புத்தி தான் கிரகிப்பதன் தன்மையதாகவே பரிணாம மாற்றம் அடைகிறது.


42. உட்தர்க்க [ஸவிதர்க்க] சமாதி நிலையில் கிரகிக்கும் [ஸ்தூல] விஷயங்களின் தன்மைக்கு மனம் நிலைமாற்றம் அடைவதோடு, அதனைப் பற்றிய எண்ணங்களும் அதனில் கலந்திருக்கக் கூடும். 


43. உட்தர்க்கமற்ற [நிர்விதர்க்க] சமாதி நிலையில் நினைவுகள் பரிசுத்தமடைந்த மனம், தன்தன்மையை இழந்து, தான் கிரகிக்கும் [ஸ்தூல] விஷயங்களின் தன்மையதாகவே ஒளிர்கிறது.


44. மேற்கூறிய இரு விளக்கங்களை சூட்சும விஷயங்களில் முறையே உள்விசாரம் [ஸவிசார], உள்விசாரமற்ற [நிர்விசார] சமாதி நிலைகளுக்கு விளக்கங்களாகக் கொள்க.


45. சூட்சும விஷயங்களின் பரப்பு [பிரபஞ்ச காரணமான] அடையாளமற்ற மூல ப்ரகிருதி வரை விரிந்து அதில் முடிவுறும். 


46. இதுவரை விளக்கப்பட்டவை வித்தையுடைய [அறிவுச்சார்புடைய; ஸபீஜ] சமாதி நிலைகள்.


47. நிர்விசார நிலையில் தொடர்ந்து பயின்று மேன்மை பெறுகையில் மெய்யான ஆன்ம உணர்வு உள்ளே விளங்கும்.


48. அப்போது [உள்ளதை உள்ளபடி அறியும்] மெய்யறிவு தோன்றுகிறது.


49. இந்த மெய்யறிவு அனுமான, ஆகமங்களால் பெறும் அறிவைக் காட்டிலும் வேறுபட்டது; மிகச் சிறப்பானது.


50. இந்த மெய்யறிவிலிருந்து தோன்றும் நல்வினை ஸம்ஸ்காரங்கள் மற்ற [தீய] ஸம்ஸ்காரங்களை அடக்கி நாசமுறச் செய்கின்றன.


51. [தீய வினைகள் முழுமையாக நீங்கிய பின்] நல்வினைகளும் அடங்கி, எல்லா ஸம்ஸ்காரங்களும் ஒடுங்க சித்திப்பது விதையற்ற [அறிவுச்சார்பற்ற; நிர்பீஜ] சமாதி நிலை.    


[i]ஸமாதி என்பது குறுகிய ஜீவ உணர்வு எல்லாம் ஆன கடவுட் பேருணர்வொடு ஐக்கியமாதல்.

[ii] ஸவிதர்கம் என்பது பெறும் புது அறிவினை இருக்கும் அறிவுடன் மோதவிடுவதான குறுக்கு விசாரணை.  

[iii] முழுமையான விவேகத்தினைப் பெறாததினால் தோற்றமுக்திக்குப் பின்னர் மறுபடி பிறக்கவும் வாய்ப்புள்ளது.  

[iv] நம் குறுகிய ஜீவ உணர்வினை நிராகரித்தல்.

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!     
Powered by Blogger.