W31. கடவுளை ஒன்றிணைந்த அகிலஉலக நாடுகளுக்கு தலைவனாக ஆட்சிபுரிய உரிமையுடன் பிரார்த்தனை. (Whispers from Eternity - Tamil & English)
31. கடவுளை ஒன்றிணைந்த அகிலஉலக நாடுகளுக்கு தலைவனாக ஆட்சிபுரிய உரிமையுடன் பிரார்த்தனை.
எங்கள் இறைத்தந்தையே, கோளங்கள், கேலக்சிகள், உலகங்கள், பிரபஞ்சங்கள் இவைகளை ஒருங்கே ஆட்சிபுரியும் தலைவனே, சுய-வளர்ச்சி மற்றும் சுதந்திர-இச்சாசக்தியுடன் கூடிய உன் ஜனநாயக ஆட்சியின்மூலம் உன் பிரஜை-குழந்தைகளை உன் பூரணத்துவத்தினை நோக்கிக் கிரமமாக அழைத்துச் செல்கின்றாய்.
உன் சுதந்திர-இச்சாசக்தி நாடுகளில் பிறந்ததினால், நாங்கள் எங்கள் தெய்வீகப் பிறப்புரிமையான நிரந்தரமான, அழியாத சுதந்திரத்தை பெற்றுள்ளோம். ஆனால், அந்தகோ! எங்கள் எங்கும்நிறைத் தன்மையை புலன்-சுகங்கள், தீயவை, சுயநலம், கண்மூடித்தனம், குறுகியநோக்குடைய நாட்டுப்பற்று போன்ற சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அடைத்து சிறைப்படுத்திவிட்டோம்.
கற்பனையில் பனிக்கட்டியாக திடமாகிய குடும்ப, சமுதாய, நாட்டு வரம்புகளையெல்லாம் எங்கள் புரிதலுடன் கூடிய அன்பின் இளஞ்சூட்டினால் உருக்கிக் கரையச்செய்ய எங்களுக்குக் கற்பி.
சர்வமும் அறிந்த தந்தையே, நாங்கள் சுயமாக நிர்ணயிக்கும் விவேகத்தைக் கொண்டு எங்களை நாங்களே ஆள, எங்கள் நெஞ்சங்களில் உள்ள எல்லா நற்பிரஜைகளின் சுதந்திர தீர்மானத்தின்மூலம், ஒருங்கிணைந்த அகிலஉலக நாடுகளுக்கு உன்னை நிரந்தரமாகத் தலைவனாய் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் நாங்கள் வாழுமாறு எங்களுக்கு அருள்புரி.
எங்கள் தேசாபிமானத்தை விரிவடையச் செய்து, அதில் ஜாதி, வகுப்பு, கொள்கை, நிற வேற்றுமையின்றி, பூமியில் வாழும் எல்லாரையும் அரவணைக்குமாறு, எங்கள் ஆன்மா, செழுமை, புரிதல் ஆகியவற்றை வளப்படுத்த எங்களுக்குக் கற்பி.
பிரபஞ்சத் தலைவனே, உன் வாழ்வின் நெறியை நாங்கள் கடைபிடிக்க எங்களுக்கு அருள்புரி; சுதந்திரமாகப் பிறந்த உன் குழந்தைப் பிரஜைகள் அனைவரையும்: நல்லவர்களையும் தவறின் போதையில் மதிமயங்கியவர்களையும் மட்டுமல்லாது, பாலூட்டிகள், பறவைகள், விலங்குகள், மென்மையான மலர்கள், கவனமின்றி நடக்கையில் எங்கள் காலடியின்கீழ் நசுங்கும் பேசா புற்கள், காட்டுத் தளைகள் போன்றவைகளையும் அவைகளின் சுதந்திரத்தை மதித்து அன்புடன் அணுக எங்களுக்கு அருள்புரி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
31 Prayer-Demand asking God to be the President of the United States of the World.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org