W208. தெய்வ மாதா, நான் உன்னுடையவனாகவே எப்போதும் இருப்பேன், ஏனெனில் நீ நிரந்தரமாக என்னுடையவளே. (Whispers from Eternity - Tamil & English)
208. தெய்வ மாதா, நான் உன்னுடையவனாகவே எப்போதும் இருப்பேன், ஏனெனில் நீ நிரந்தரமாக என்னுடையவளே.
அழகிய பலவண்ணமான பக்திப் பூமாலைகளால் உன் சர்வவியாபகமான அன்பின் தாமரைப்பாதங்களைச் சுற்றி அலங்கரிக்கின்றேன்.
நான் உன் செயல்களின் நாட்டியமாடும் பாதத்தை நட்சத்திரங்களின் மின்மினுப்பில் கண்டுற்றேன். உன் ஒளியின் நடனத்தை நீலக்குவளை மலர்களிலும், ஊதாநிற மத்தாப்புப்பூக்களிலும் கண்டுற்றேன். உன் காலடிகளின் பிரதிபலிப்பு அலையலையாக விரவும் அரோரா ஒளிர்மேகங்களில் தெரிகின்றது. உன் அற்புத நடனத்தை ஜீவராசிகளின் வாழ்க்கைப் பரிணாமவளர்ச்சி அரங்கங்களில் கண்டுற்றேன். ஆனால், தெய்வத்தாயே, உன் ஆனந்தமுகத்தின் சாந்தமான கருணை வெளித்தோற்றங்களின் மேகமூட்டங்களின் பின்னும், என் அலைபாயும் எண்ணங்களின் மாயத்திரைக்குப் பின்னும் எப்போதும் மறைந்தே இருக்கின்றது.
நான் வெகுகாலமாய் உன் முகத்தைத் தரிசிக்க காத்திருக்கின்றேன். என் பொறுமையின்மை லட்சக்கணக்கான தீநாக்குகளினால், உனக்காக ஏங்கும் என் ஏக்கத்தின் பெரும் சுடருடன் சுட்டெரித்துக் கொண்டுள்ளது.
நான் வானத்தை எரித்தேன். நட்சத்திரங்களைப் பற்றவைத்தேன். கோளங்களுக்கு கட்டமைப்புதரும் அணுக்களை உருக்கினேன். என் உருகும் ஒளியில், உன்னைத் தேடும்போது, வான ஒளிவிளக்குகள் தங்கள் நிலை தடுமாறி, தலைக்குப்புற விழுந்தன. வான்வெளியின் நிழல்கள், மனோ நிழல்கள், அறியாமை நிழல்கள் எல்லாம் என் வாழ்வின் ஒளியின் ஆற்றல்மிக்க சிதறலால் விலகி ஒதுங்கின.
என் பேராற்றலுடைய ஜோதி எல்லாவற்றையும் விழுங்கி, என் ஒளிரும் அன்பின் பலகரங்கள் உன்னை பிடித்துக் கட்டித்தழுவ யத்தனிக்கும்போது, எல்லாப்புறங்களிலும் இருந்து என்னை நோக்கிப் பாழ்சூன்யம் நகைத்தது; அந்தோ, என் அன்பொளியின் இதயம் சுக்குநூறாய் உடைந்தது!
எல்லா வெட்டவெளியிலும் எனது ஒளியின் கிரணங்கள் நிரப்பும்வரை, என் ஒளி மினுமினுக்கும் விண்மீன்களாய் கண்ணீர்சிந்தியது. என் கதறும் சுடர் எல்லாப்புறங்களிலும் உன்னை நாடிக் கூவியழைத்தது, உனது சர்வவியாபக வெளியில் எதிரொலித்த அதன் சத்தத்தில், உனது குரல் நிசப்தமாகச் சொல்லியது:
"எல்லாவற்றையும் ஒரே ஜோதியில் விழுங்கிய உன் அன்பின் ஜோதியானது நானே! நீயாக ஆகிய என்னைத்தான் நீ தேடியுள்ளாய், ஆனால் என்னை உன்னிடமிருந்துத் தொலைவில் இருத்தியிருந்தாய். என்மூலம் உன்னைக் கண்டுகொண்டதற்குப் பின், என்னை உன்னிடமிருந்து தள்ளியிருப்பதாக, அதாவது, உனது இதய எல்லைக்கு வெளியே இருப்பதாக எண்ணி, இனி என்னை நாடாதே. நீயே நான்; நானே நீ!"
பூமி தூள்தூளாகத் தெறித்து விண்வெளியில் எறியப்படினும், காலமெனும் திரையில் பல பிரபஞ்சத் திரைப்படங்கள் வந்து சென்றாலும், தெய்வ மாதா, நான் உன்னுடையவனாகவே எப்போதும் இருப்பேன், ஏனெனில் நீ நிரந்தரமாக என்னுடையவளே.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
208 O Divine Mother, I am Thine, for Thou art eternally mine.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org