MCCRF - A global volunteer network

6. தியான யோகம் - பகவத்கீதை - The Eternal Way

பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
 

THE ETERNAL WAY
The Inner Meaning of The Bhagavad Gita
AuthorRoy Eugene Davis

Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).

பகவத் கீதை ஆறாம் அத்தியாயம்

6. தியான யோகம்

அத்தியாய முகவுரை:

இறைவனின் நேர்மையான சாதகர்களுக்குத் தியானம் என்பது மிகவும் உதவிகரமான ஆன்மீக வளர்ச்சி வழிமுறையாகும். பிரபஞ்ச உணர்வுக்கு, இறையுணர்வுக்கு, உயர்நிலைக்கான முன்னேற்றத்திற்கு இயல்பான திறவாகிட அனுமதிக்கும் சமாதிநிலைக்காக தியானத்தை சரியாகக் கற்று சிரத்தையுடன் செய்வது அவசியம்.

ஆன்ம ஞானத்திற்கு பக்தி மார்க்கத்தை முன்னிலைப்படுத்தும் உரையாசிரியர்கள் இந்த அத்தியாயத்தின் செய்தியை மேம்போக்காகப் பார்க்கிறார்கள். அல்லது இது அலட்சியத்திற்குரியது எனும் தவறினைப் புரிந்துவிடுகிறார்கள்.

அர்ஜுனன் உண்மைக்கு விழிப்படைதலை விவரிக்கும் கீதை இறைமைக்கு உரிமை கோரும் பேரார்வம் உள்ள எல்லா ஆன்மாக்களின் சுயசரிதையாகும்.
முதல் அத்தியாயத்தில் கூறியது போல, ஒளியூட்டம் பெறாத மனத்தில் ஊன்றிப் பழகிவந்த போக்குகளுக்கும் முழுமைக்கு விழிப்படையும் ஆன்மதுடிப்புக்கும் இடையிலான போட்டி, சாதகனின் உடல்-மன தளத்தில் நடக்கிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது:
6.1. பற்றற்று கடமையுணர்வுடன் காரியமாற்றுபவன் துறவி. சிரத்தையற்றவன் புனித சமர்ப்பிப்புக்களை செய்யத் தவறியவன்.

உட்பொருள்:
செய்யவேண்டுவனவற்றை சுயநலமின்றி உரிய காரணங்களுக்காக செயலாற்றுபவன் துறவுபூண்ட யோகாப்பியாசி.
அத்தகைய அர்ப்பணம் இல்லாது ஆணவமைய விருப்பங்களைச் சமர்ப்பிக்காது தியானம் செய்பவன் யோகாப்பியாசியும் அல்லன்; துறவியும் அல்லன்.

6.2. துறவே உண்மையில் யோகம். ஆணவமைய விருப்பங்களைத் துறக்காது யாரும் சமாதி யோகாப்பியாசியாக முடியாது.

உரை:
ஏனென்றால், தான் தனித்தியங்குபவன் எனும் தவறான ஆணவப்புரிதல், கெட்டிப்பட்டுப்போன பழக்கக்கூட்டங்களாலான சுவாபிமான உணர்வு ஆகும். உண்மையான ஆன்மீக வளர்ச்சி தேவையெனில் இதனைத் துறந்து கடந்து செல்லுதல் அவசியம்.
இத்தவறான ஆணவப்புரிதலைச் சமர்ப்பிக்காமல் யோகப் பயிற்சி திருப்திகரமான விளைவு தராது.

6.3. சமாதியை விரும்பும் அறிவார்ந்த சாதகனுக்கு செயல்படுதலே வழி. சமாதி சாதனை அடைந்த ஞானிக்கோ செயலற்ற மோனம் வழி.

உரை:
ஒருமை யோகம் சித்திக்கும் வரை செயல்படுதலும், ஆன்ம ஞானத்திற்குத் தடை நீக்கலும், ஆன்மாவை விடுவிக்கும் உணர்வு நிலை ஏற்ற இறக்கங்களை வழி நடத்தலும் அவசியம்.
ஒருமை யோகம் எனும் சமாதி சித்தித்துவிட்டால், ஆன்ம ஞானத்தில் மோன நிலைப்பே மேம்பட்ட திறவாதலுக்குப் போதும்.

ஆன்மீக வளர்ச்சிக்கு ஆர்வமுறும் சாதகன் ஆக்கபூர்வ செயல்களில் ஈடுபடவேண்டும். விழிப்பு நிலையைச் சிதறச் செய்யும் மன ஆட்டங்களை வலுவான பயிற்சிகளால் அடக்கிவிட்டால் பூர்வாங்க உணர்வுப்பக்குவம் கட்டுடைக்கப்பட்டு ஆன்ம திறவாதல் தானாக தொடர்ச்செயலாய் வாய்க்கப்பெறுகிறது.

பதஞ்சலி யோக சூத்ரா 1.15 முதல் 1.23 வரை சமாதி நிலை மற்றும் சமாதி அனுபவம் கூறப்பட்டுள்ளவாறு :--
1.15. நிர்ப்பந்தங்களையும் உடன்வளரும் ஆத்திரங்களையும் வெல்வதால் ஒருவன் அனிச்சைத் துறவில் நிலைக்கிறான்.

1.16 குணங்களை வெல்லும் திறனூட்டுவதான ஆன்ம விளக்கமுறுதலின் வெளிப்பாடே உயர்மட்டத் துறவு.

1.17 அதீத உணர்வுடனான ஞானநிலையுடன் எண்ணம் கலந்தும், மோனம் மட்டும், அல்லது பிரபஞ்சப் பேருணர்வுடனான ஒருமையுணர்வு போன்ற வகைகளில் சமாதிநிலை சித்திக்கிறது.

1.18 மனவெளித் தூய்மை, மனமாசுகள் அடங்கப் பெறுதல், ஆகியவற்றால் இயல்கடந்த அதீத உணர்வு அனுபவிக்கப்படுகிறது. அது நற்சமஸ்காரங்களை மனத்தில் பதிவு செய்கின்றது.

1.19 உண்மை ஞானத்தால் ஆதரிக்கப்படாத நிலைகடந்த பேருணர்வு தற்காலிகமானது. இந்தப் படிநிலையிலிருந்து ஒருவன் மேம்பட்ட உயருணர்வுக்குச் செல்லலாம் அல்லது மீண்டும் புலனறி உலகத்திற்குத் திரும்பியும் செல்லலாம்.

1.20 ஆத்ம ஞானம், தளராத தன்னம்பிக்கை, சுய ஒழுக்கம், பேரார்வம், கவனக்குவியம், ஆகியனவற்றுடன் ஒருவன் தியானம் பயின்று உணர்வின் இறுதி விடுதலைக்கு விழிப்படையலாம்.

1.21 அத்தகைய சாதகர்கள், தியானப்பயிற்சியில் மனம் ஊன்றி, பேருணர்வினை விரைவில் அனுபவிக்கிறார்கள்

1.22 அதிக ஊக்கம் உடைய சாதகர்கள் உடனடியான உன்னத பலன்களை அடைகிறார்கள்

1.23 இறைவனை சரணடைவதால் விரைவில் சமாதிநிலையை அடைகிறார்கள்.

ஆரம்ப காலங்களில் சமாதிநிலை என்பது நுண்ணிய எண்ணங்கள், யோகக்காட்சிகள், தத்தளிக்கும் மனம் உருவாக்கும் உணர்ச்சிகள் ஆகியனவற்றுடன் இருக்கக் கூடும்.

இவைகள் விருத்திகளாலும் வாசனைகளால் தூண்டப்படும் மனவெளி அலையாட்டங்களாலும் உருவாக்கப்படலாம். வாசனைகள் என்பவை ஸம்ஸ்காரத் தூண்டல்கள், மனப்பதிவுகள், ஆரவார மனத்தால் வந்த தூண்டல்கள், ஆசைகளின் செல்வாக்கு, உள்ளார்ந்த தூண்டல்களும் போக்குகளும் ஆகும்.

இவ்வாறு, பேருணர்வு ஏகதேசமாக ஒரு அளவில் எண்ணங்களாலும் காட்சி மற்றும் ஓலி மாயத்தோற்றங்களாலும் இன்ப அனுபவங்களாலும் இணைந்து அனுபவிக்கப்படுகிறது.

ஆரம்பகால சமாதிநிலைகளைக் கடந்து செல்லவேண்டும் எனப் புரிந்துகொண்ட சாதகன் நன்மை அடைகிறான். ஏனென்றால் அவன் மனவெளியில் கெட்ட மனப்பதிவுகளைத் தடுப்பதான நல்ல மனப்பதிவுகளை வைக்கிறான்.

நுண்ணிய எண்ணங்களும் யோகக்காட்சிகளும் சூழ்ந்த ஆரம்பநிலைப் பேருணர்வு சவிகல்ப சமாதி எனப்படும். அதாவது தியானத்திற்கான இலக்கிற்கு ஆதரவுடனான பேருணர்வு எனப் புரிந்துகொள்ளலாம். ஆதரவு உடையதால் இது மாறுதலுக்குள்ளாகும் தன்மையது.
தியானக் காட்சிகள் காட்டும் பூரிப்புகளின் வசமாகுதல் சமாதிக்குத் தடையே. மன அமைதி இல்லாததால் ஏற்படும் கனவுமயத் தோற்றங்களைக் காணும் காட்சிகளை அலட்சியப்படுத்த வேண்டும். நுண்ணுணர்வு நிலைகளின் திறவாதலால் ஏற்படும் ஆற்றல் ஓட்டத்தாலோ பேரின்ப நுகர்ச்சியாலோ ஏற்படும் இனிய அனுபவங்களை அலட்சியப்படுத்த வேண்டும்.

உன்னத அல்லது நிலைகடந்த சமாதியே நிர்விகல்ப சமாதி. இது மேற்சொன்ன எதையும் சாராதது. ஆன்ம உணர்வின் இயல்பூக்க அனுபவமே சமாதி என்பதால் இதனை கருத்தூன்றிய தியானத்தாலும் ஆணவ சுய உணர்வினைத் தியாகம் செய்வதாலும் முழுமையைக் கண்டனுபவிக்க எளிதில் அடையலாம்.

6.4. புலன் விஷயங்களிலோ செயல்களிலோ பற்றற்ற சாதகன், எல்லா ஆணவமைய செயல்களையும் துறந்தவன் சித்தி பெற்ற யோகி என அழைக்கப்படுகிறான்.

உரை:
யோக ஒருமைப் பூர்த்தியில் உறுதியாக நிலைக்கும் வரை அது தற்காலிகமானதே. அதுவரை, ஒருவனின் விழிப்பு நிலைப் பரப்புச் செயல்பாடுகளால் கீழ்கண்ட காரணங்களால் நினைவுச்சிதறல் எற்படும்:
சூழலுடன் விவேகித்த சம்பந்தமின்மையால்
சுவாதீன செயல்பாடுகளில் ஆணவ சம்பந்தத்தால்
ஆன்ம விழிப்பு கலக்கமுற்றிருப்பதால்.

எல்லாக் குறைகளும், கட்டற்ற விழிப்புநிலையினை அனுபவிப்பதற்காக தன்னிலை பற்றிய பொய்த்தோற்றத்தைக் களைவதால் நீங்கும்.

6.5. ஆன்மஞானத்தால் சுய உணர்வு நிலையை ஒருவன் உயர்த்திக் கொள்ளவேண்டும். வருத்தமோ மன அழுத்தமோ வேண்டாம். சுய உணர்வு நிலைக்கு ஒருவனின் ஆன்மாவே நண்பன். சுய உணர்வு நிலைக்கு ஒருவனின் ஆன்மாவே பகைவன்.

குறிப்பு:
(மூலத்தில் "ஆத்மா" என வரும் இடங்களில், ராய் "ஆன்மஞானம்" “சுய உணர்வு” என்பதாகப் பிரித்து வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கிறார். இது அடுத்து வரும் சுலோகத்திற்கும் பொருந்தும். கீழே உள்ள தமிழாக்கம் ராமகிருஷ்ண மடம் அண்ணா உரையிலிருந்து எடுத்தது:
"தன்னாலே தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும். தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது. நிச்சயமாக தானே தனக்கு உறவினன். தானே தனக்குப் பகைவன்.")

6.6. சுய உணர்வை ஆன்ம ஞானத்தால் வென்றவனுக்கு ஆன்மாவே நண்பன். ஆனால், சுய உணர்வை ஆன்ம ஞானத்தால் வெல்லாதவனுக்கு அவனுடைய ஆன்மாவே விரோதி.

6.7 சுய உணர்வு நிலைகளக் கடந்து அமைதி சித்திக்கப் பெற்றவன் ஆன்மஞானத்தில் நிலைத்தவனே.

உரை:
ஆன்மஞானத்தாலும் திருப்தி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றாலும் ஆணவ சுயத்தைத் தூய்மைப் படுத்திக் கொள்ளவேண்டும். அதனால், ஆணவசுயம் நன்மையடைந்து மனநலம் ஊட்டம் பெற்று செயல் சிறக்கிறது; ஆணவத்தில் ஊன்றியவனுக்கோ ஆணவசுயம் கெட்டிப்பட்டு, ஆணவசுயத்தின் தரப்பில் திடமாவதனால் ஆன்மாவின் முழுமை, வாழ்வூட்டம், திருவுருமாற்றச் செல்வங்கள் ஆகியன அச்சுறுத்தவதாக அமைகின்றன.

ஆக்கபூர்வ நடத்தைகளாலும், ஆழ்மன ஆட்டங்கள் அமைதிப்படும்போதும், ஆன்ம மோனம் நிரந்தரமாகும்போதும், ஆன்மஞானம் எல்லா காலங்களிலும் எல்லா சூழலிலும் பொருந்துவதாகிறது.

6.8 அறிவாலும் அனுபவத்தாலும் திருப்தியடைந்தவனாய், மாறாதவனாய், புலன்களை வென்றவனாய், உள்ள ஒன்றின் வெளிப்பாடே அனைத்தும் எனும் சமதிருஷ்டி உள்ளவனாய், இருக்கும் சாதகன் யோகத்தில் நிலைத்தவன்.

6.9 நண்பன், உறவினன், எதிரி, ஒதுங்கி இருப்பவன், நடுநிலை வகிப்பவன், வெறுப்புக்கு உரியவன், நல்லவன், கெட்டவன் என எல்லாரிடத்திலும் சமபுத்தி உள்ளவன் யோகத்தில் நிலைத்தவன்.

உரை:
மக்களிடத்திலும் வெவ்வேறு சூழல்களிலும் சமபுத்தி உள்ளவனாயிருப்பது யோகப்பயிற்சியின் முதல் நிலை வெற்றியாகும். ஒருமையில் நிலைத்திருப்பதென்பது, சாதகன் சாதாரண விழிப்புநிலையில் தன் சுயஇச்சைப் போக்குகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியனவற்றுடன் சமபுத்தியுள்ளவனாதல் வேண்டும். மேலும், சுய இச்சைப் போக்குகள் மற்றும் தன்மைகள், எதிர்த்தும் உறவாடியும் வினையாடும் எண்ண ஓட்டங்கள் ஆக்கபூர்வ மற்றும் அழிவு தருவதான விருப்பார்வங்கள் மற்றும் உந்தல்கள், ஆகியவற்றுடனும் ஒருவன் சமபுத்தி கொள்ளுதல் வேண்டும். சூழல்களை புறவயமாக நோக்குதல் மூலம் அவைகளுடன் உறவாடுதல் எளிது. நன்மைக்குரியவைகளைத் தேர்ந்தெடுப்பதும், அல்லாதவற்றை மாற்றுவதும் துறப்பதும் எளிது.

6.10. யோகசாதகன் தனித்திருந்து, உடல் மனக் கட்டுப்பாடுகளுடன் ஏக்கமற்ற மனத்தினனாய் உன்னதப் பேருண்மைக்கு ஒருமுகப்பட்டிருக்க வேண்டும்.

6.11. தூய்மையான பொருத்தமான இடத்தில் வசதியாக உறுதியான தியானத்தில் நிலைத்து;

6.12. அங்கே, பயிற்சியில் மனம் குவித்து எண்ணங்களும் புலன்களும் கட்டுப்படுத்தி மனதைத் தூயதாக்க தியானத்தில் அமர வேண்டும்;

6.13. உடல், தலை, கழுத்து நேராக வைத்து அசைவின்றி நெற்றிக் கண்ணில் கவனம் வைத்து;

6.14. மன அமைதியுடன் அச்சமின்றி சுயக்கட்டுப்பாட்டில் நிலைத்து, மனத்தூண்டல்களை அடக்கி, உன்னதப் பேருண்மைக்கு ஒருமுகப்பட்டு சாதகன் உயர்ந்த ஞானசித்திக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

உரை:
ஒளியூட்டத்திற்குப் பேரார்வமுறும் சாதகன், தனிவுயர் தூய இருப்புண்மையை சிதறாத மனத்துடன் ஒருமுகப்பட்டு தியானிக்க வேண்டும்.
பயிற்சியின் ஆரம்ப காலங்களில் இது சாத்தியமில்லாதபோது, தியானத்திற்கான திறன் வளர வளர, முற்றுமுழுதான உன்னத இருப்புண்மை அனுபவ சாத்தியத்திற்கு அனுகூலமாக அதற்கு முந்தையதான ஒளிக்காட்சிகளையும் பேரனுபவங்களையும் துறக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

தியானத்தின்போது, இடையூறில்லாத அமைதியான இடத்தில் கவனச்சிதறல் தவிர்ப்பதான தனிமையில் இருக்கவேண்டும். மன மற்றும் உடல் ஆத்திரங்களை சுய ஒழுக்கத்தாலும், ஆன்ம ஞானத்திற்கு விழிப்படைவதற்கான ஆன்மப் பேரார்வத்தினை பிற ஆசைகள் முந்தவிடாமலும் அடக்கவேண்டும்.

தியானத்தின் போது உடல் மற்றும் மன இருப்பு சுகமானதாகவும், வசதியானதாகவும், ஸ்திரமானதாகவும் இருக்கவேண்டும். அவ்வாறு இருப்பதால்தான் அகவய மனக்குவியம் எளிதில் சாத்தியப்படுகிறது. தியானம் என்பது சங்கல்பித்து செய்யும் செயல் ஆதலால், நிமிர்ந்து அமர்ந்த நிலை பரிந்துரைக்கப்படுகிறது. படுத்துக்கிடந்தோ, தலை ஒருக்களித்தோ, குனிந்தோ தியானிக்க முனைவது, சுதாரித்த மேலுணர்வு விழிப்புநிலைக்காக அல்லாமல், தூக்கத்திற்கோ ஆழ்மன ஈடுபாடுகளுக்கோ பொருந்துவதாயிருக்கும்.

ஆரம்பத்திலிருந்தே அமைதி, தைரியம், சுய கட்டுப்பாடு, சங்கல்பித்த பாவனை ஆகிய மன நிலைகளை கைகொள்ளுமாறு சாதகன் அறிவுறுத்தப்படுகிறான். ஒருவன் கேட்கலாம் “ஏன் இதை நான் செய்கிறேன் ?” என்று. தீர்மானம் எப்படி இருக்கவேண்டுமென்றால், “விழிப்புணர்வு ஞானத்திற்கும், என்னுடையதும் இறைவனுடையதுமான சுயரூபத்தை அனுபவிக்கவுமே நான் இதைச் செய்கிறேன்” என்றவாறு.

உணர்ச்சித் ததும்பல்களையும் மனக்குறும்புகளையும் அமைதிப்படுத்த பின்வருவதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும் -- “நான் தியானம் செய்கையில், நான் இப்போது செய்வதைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த எதனையும் செய்யவேண்டுவதில்லை”.

யோகப்பயிற்சியின் நோக்கத்தை ஒருவர் கீழ்கண்டவாறு அறியவேண்டும்.
கவனத்தை உள்முகமாக்குவது
மன அலையாட்டத்தை சாந்தப்படுத்துவது
ஆணவசுயத்திலிருந்து உயருணர்வுக்கு மேலேழும்புவது
ஆன்மாவை உடல், மனம் இவைகளினின்று வேறுபடுத்தி அறிவது
தூய ஆன்மவுணர்வில் திருப்தியடைவது
புலன்கடந்த இருப்புண்மைக்கு விழிப்படைவதும் அனுபவமாவதும்

தியானம் செய்வதானது கீழ்கண்ட காரணங்களுக்காக அல்ல
சுகக் களிப்பு
மனம் காட்டும் ஜாலங்களுக்கு உடன்பட்டு ரசித்தல்
லோகாந்தரப் பிரச்னைகளைத் தீர்க்க
தீர்க்கதரிசனம் பெற்று வெளிப்படுத்த சூட்சும உலக மண்டல ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ள.

பதஞ்சலி யோகசூத்ரத்தில் 1.2 கூறுவதை சாதகன் நினைவில் நிறுத்தவேண்டும்:

1.2: வியக்த விழிப்புணர்விலிருந்து மன அலையாட்டங்களை கட்டுப்படுத்தி அவற்றின் நுண்ணிய உற்பத்தி ஆதாரத்திற்கே திருப்பிவிட்ட காரணத்தினால் அவற்றை நிறுத்துவது சமாதிநிலை எனப்படும்.

இது தியானத்தின் அடிப்படை லட்சியத்தை விளக்குகிறது. உணர்வுத் ததும்பல்களைத் துறந்து ஆன்ம அமைதியில் நிலைப்பது ஒருமை சித்திக்கப்பெற்ற யோகம் எனப்படும். தியானத்தில் ஆழ்ந்திருக்கும் சாதகனுக்கு உணர்ச்சிகளும் நினைவுகளும் தெரிவதில்லை. தியானத்தில் இல்லாதபோதும் அவைகளை புறவயமாக அணுகமுடியும். புற உலக அடையாளங்களிலிருந்து நீங்குவது சமாதி நிலை என்பதால், பற்றின்மை அந்த அனுபவத்திற்கு முன்தேவையாகும்.
ஆகவேதான் கீதையில் பேருணர்வின் வெளிப்படுத்தல் கூறினை புரிந்துகொள்வது மற்றும் அதனை எப்படி உள்விடுதலையை அனுபவித்தவாறே அதனுடன் உறவாடுவது என அதிகம் விவாதிக்கப்படுகிறது.

யோகப்பயிற்சியில் வெற்றிபெற, தீங்கின்மை, உண்மை, நேர்மை, பிராண சக்திகளை காப்பதும் மாற்றுவதுமான செய்கை, பற்றின்மை ஆகியவற்றை அடைவிப்பதான உடலளவு மனதளவு ஆத்திரங்களைக் கட்டுப்படுத்துகையை நல்குவதான யமங்களைப் பயின்று முழுத்தேர்ச்சி பெற வேண்டும்.
அதே சமயம் நியமங்களை செயல்படுத்தவேண்டும் அவைகளின் விவரம் வருமாறு –
உள்சுத்தமும் வெளிச்சுத்தமும்
அனைத்து சூழலிலும் ஆத்மதிருப்தி
அகத்தாய்வு மற்றும் ஆன்ம வெளிப்பாட்டைத் தடுக்கும் மனக்கிரியைகளை வெல்வதான சுய ஒழுக்கம்
இறை ஞானக்கல்வி மற்றும் வாழ்க்கைப் போக்கு ஆராய்ச்சி
ஆன்ம ஞானம், பிரபஞ்ச உணர்வு, இறையனுபூதி, சுயஉணர்ச்சிகளிலிருந்து விடுதலை, ஆகியனவற்றிற்கு ஆணவசுயம் அடங்கப்பெறுதல்.

எல்லா காலங்களிலும் உணர்வுடனும், முழுமையாகவும், பொருத்தமாகவும் வாழ விரும்புதல் ஆன்மீக வளர்ச்சியை துரிதப்படுத்தும். தத்துவ ஈடுபாடு, தியானம் ஆகியவைகளின் அவசியம் மற்றும் அவைகளில் கிடைக்கும் உதவி போன்றே இவையும் உதவிகரமானது என புரிந்துகொள்கிறான்.

தியானத்தில் நிமிர்ந்து அமர்ந்து ஒரு சாதகன் செய்பவைகளாவன –---
வெளிக்கவனம் நீங்குகை
உடலளவு, மனதளவு, உணர்ச்சி சார்ந்த ஈடுபாடுகள் விடுகை
பிராண ஓட்ட ஒழுங்கு
கவனம் உள்முகமாக்குகை
தேர்ந்தெடுத்த உயர்இலக்கின் மீது கவனம் குவித்தல்
குவியத் தொடர்ச்சி நீடிக்கும் வரை மேற்சொன்னவைகளை பழகுகை
பின்னர் நியமித்துக்கொண்ட உயர்இலக்குடன் அடையாளப்படுத்திக் கொள்கிறான் அல்லது தானாக அமையப்பெற்ற உயருணர்வு அனுபவம் அல்லது இயல்நிலை கடந்த அனுபவம் வாய்க்கப் பெறுகிறான்.
தியானத்தின் இறுதி மூன்று (ஸம்யமம் எனும்) அங்கங்களாவன ----
தேர்ந்தெடுத்த உயர்இலக்கின் மீது கவனம் குவித்தல்
தடையற்ற குவியத்தின் கால நீட்சி
பயிற்சியை பக்குவநிறைவுக்குக் கொண்டுவருதல்.

இதற்கு முந்தியவை யாவும் தியானத்திற்கான ஆயத்தப்பணிகள்.

ஆரம்பகால ஆயத்த உத்திகள் உடல்தளர்வுக்கும் (ரிலாக்ஸ்) மனத்தெளிவுக்கும் பயன்படுத்தலாம் அல்லது இவைகளற்று தியானம் இயல்பாய் வளரலாம்.
அந்த உத்திகளாவன –--
பிரார்த்தனை
மூச்சைக் கவனித்தல்
மந்திரங்களை மனதால் கேட்டல்
விழிப்புணர்வினையும் பிராணனையும் சக்கரங்களில் ஒடவிடுதல்
ஓம் மந்திரத்தை மனதால் கேட்டல்
உள்ளொளி மீது கவனக்குவியம்
தியானத்திற்கு உதவக்கூடியதென ஒருவரறிந்த பிற அனைத்தும்

இயல்பூக்கமாய் தியானம் அமையப்பெறும்போது, ஆன்மாவின் உள்ளார்ந்த விடுதலையுணர்ச்சி வேகத்தால் ஆதரிக்கப்படுவதால், ஆன்ம ஞானத்திற்கும் உயர் இருப்புண்மைகளுக்கும் விழிப்புப் பெறுவதான சாதகனின் பேரார்வம்தான் தியானத்தின் போக்கினையும் திறவாதல் அனுபவங்களையும் நிர்ணயிக்கிறது.

சாதகன் கீழ்கண்டவற்றுக்கு ஆர்வமுறுமாறு அறிவுறுத்தப்படுகிறார் ---
ஆன்மவிழிப்பு
அவசிய மற்றும் உதவக்கூடிய செயல்களைக் கவனிப்பது
பதட்டமும் முடிவு பற்றிய எதிர்பார்ப்பும் அற்று நம்பிக்கையுடன் முனைவது
விழிப்புநிலையை நெறிப்படுத்துவதான, உள்ளார்ந்த நுண்ணறிவால் தீர்மானிக்கப்படுகின்ற விளைவுகளைக் கொண்டிருப்பது

விழிப்புநிலைத் தொடர்ச்சிக்குத் தடை நீங்கும்போது, அருள் சகஜமாகிறது.

தியான முறைமைகளுக்கு பரிச்சயமாகவும் ஆக்கபூர்வ விளைவுகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ளவும் புது சாதகர்கள் ஒரு நாளைக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு முறைகளோ கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம் வரை தியானம் செய்யலாம்

பின்னர் ஒரு நாளைக்கு அரை மணிநேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நீட்டிக்கலாம். அதிக ஆர்வமுள்ள சாதகர்கள் ஆனமட்டும் சுதாரிப்பும் கவனமும் தொய்வாகாதவரை ஆழமான தியானம் செய்யலாம்.

தியானத்தின்போது தவிர்க்கப்பட வேண்டியன ----
சுவாரஸ்யமற்ற ஜடபாவம்
எண்ணப்போக்குகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் மனஉசுப்பல்களுக்கும் பலியாகுதல்.

தியானப்பயிற்சிக்கு கட்டகச் செய்முறைமை இருப்பது மிகவும் நல்லது. எந்த தோதான வேளையும் மதிக்கத்தக்கது என்றாலும் அதிகாலை வேளை சிறந்தது. தியானப்பயிற்சிக்கு என்று அமைதியான தனியிடம் இருப்பது உதவிகரமானது.

முக்கியமானது எதுவென்றால் தியானத்தைக் கற்பதும் பயிற்சி செய்வதும் ஒரு வரைத்திட்ட ஒழுங்கில் படிவதாகும். ஒத்த சிந்தனையுள்ள சகாக்களுடன் கூட்டுத் தியானம் செய்வது ஆதரவானது என்றாலும் அவசியமானதெனக் கருதத் தேவையில்லை.

யோக ஆசான்களின் அறிவுரை என்னவென்றால் இறையுணர்வுக்கான ஒருவரின் அர்ப்பணிப்பு அந்த ஒருவருடைய சொந்த விஷயமாகும். அதனைப் பொது விஷயமாக்கும் முயற்சியானது பயிற்சியில் கவனப்பிறழ்வு ஏற்படுத்துவதாகும்.

6.15 இடைவிடாத ஓழுக்கம், மனத்துடிப்புகளின் அடக்கம், அமைதி ஆகியவற்றுடன் இருக்கும் சாதகன் மேலுயர் ஒருமையுணர்வை சித்திக்கப்பெறுகிறான்.

உரை:
சுய ஒழுக்கம் என்பது புலன் மற்றும் மனத்துடிப்புகளை அடக்கியாளுவது. வாசனைகளான மனத்துடிப்புகளை எப்போது அதன் மூலஸ்தானத்திற்கே திருப்பியனுப்பியாகியதோ, அப்போது சாதகன் ஆன்ம அமைதி மற்றும் தூய உணர்வு ஆகியன அனுபவிக்கிறான்.

6.16. யோகப்பயிற்சியானது அதிகம் உண்பவனுக்கோ அதிகம் உண்ணாவிரதம் அனுஷ்டிப்பவனுக்கோ அல்ல. அது அதிகம் உறங்குபவனுக்கும் அதிகம் முழித்திருப்பவனுக்கும் அல்ல.

6.17. உணவிலும் களிப்புகளிலும் மிதம், ஒழுக்க நடத்தைகள், தூக்கமும் முழிப்பும் கட்டுப்பாட்டில் இருத்தல் ஆகியன பழகும் சாதகனுக்கு யோகப்பயிற்சி எல்லா துன்பங்களையும் நீக்கும்.

உரை:
வாழ்க்கை லயச்சுற்றுடன் ஒருங்கிசைவதானது சாதகனிடம் முழுநலம் மற்றும் பிரபஞ்சத்துடன் இயல்பான ஆதரவான உறவினை உறுதிப்படுகிறது. ஆன்ம உணர்வு வளர்ப்பதாலும் மனோதேக பிரகிருதி சமதையிலிருப்பதாலும், ஆன்ம-மனோ-தேகத்தின் ஊடே நடக்கும் பரஸ்பர செயல்கள் சுளுவாகின்றன.

ஆன்மீகப் பேராவல் கொண்ட சாதகன் இரட்டைகளில் ஒருபக்கம் சாய்ந்த தீவிரத்துவத்தைத் தவிர்த்து, கீழ்கண்டவாறு செயல்பட வேண்டும்:
நடப்பு சாத்தியமான, பொது அறிவு அணுகுமுறையிலான வாழ்க்கை, உண்ணுதல், உறங்குதல் ஆகியன அட்டவணைப்படுத்தி செய்தல்
தேவையான ஒப்புக்கொண்ட பணிகளைச் செயல்படுத்தல்
குடும்ப மற்றும் சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுதல்
பிற லோயாகயத பணிகளுக்கும், ஆன்மீகநூல்களைக் கற்கவும், தியான ஒருமைக்கும் எவ்வளவு நேரம் மற்றும் சக்தி ஒதுக்குவதென முடிவெடுத்தல்

முழுமையான ஒழுங்கான வாழ்க்கையானது, ஒருவனுடைய
தேக, மன நலன் காக்கும்.
பொருட் திருப்தி தரும்.
தத்துவ விசாரணைக்கும் தியான ஒருமைக்கும் ஒருமுகப்படுவதான மன ஊட்டத்தைக் கொடுக்கும்.

இயற்கையோடு இசைந்த வாழ்வும் யோகப்பயிற்சிகளும் மகிழ்ச்சிக்குத் தூண்டுதலாயிருப்பது மட்டுமின்றி தேக, மன, சூழல் சார்ந்த எதிர்காலத் துயரங்களையும் நீக்கும்.

6.18. தன் விழிப்புணர்வை தூய உணர்வில் மட்டுமே நிலைநிறுத்தியவனாய், வாசனைகளை அடக்கியவனாய், ஏக்கங்கள் மற்றும் ஆசைகள் வென்றவனாய் உள்ளவன் முழுமையில் நிலைபெற்றவன்.

உரை:
சமாதி நிலை என்பது கணநேர தற்காலிகமானதோ , தியானத்தின்போது மட்டுமோ அனுபவமாவதல்ல. உயிர் இருப்பின் ஆழத்தில், முழுமை என்பது ஆன்ம விழிப்பின் நிரந்தர நிலையாகும். எப்போதும் தூய உணர்வுக்கு விழிப்புப் பெற்றவனுக்கு வாசனைகள் தானாகக் கையாளப்பட்டுவிடுகின்றது, ஏக்கமும் மற்றும் ஆசைகளும் நெருக்குவதாயிருக்காது.

6.19. யோகசமாதி பயில்கின்ற, வாசனைகள் களையப்பெற்ற சாதகனின் மனஒருமைக்கு, காற்றில்லாத இடத்தில் மினுக்காமல் நிலைபெற்ற விளக்குச்சுடர் உவமையாக சொல்லப்படுகிறது.

உரை:
வாசனைகள் தணிந்த முழுமை அனுபவ சித்தியின்போது முன்பு குழப்பமாகவும் முரண்பட்டதாயும் இருந்த காரணிகள் நீங்கப்பெற்று சாதகனின் விழிப்பு நிலைப்பரப்பு தெளிவாகவும், அலைபாயாத மனஒருமையுடனும் இருக்கிறது.

6.20. யோகப்பயிற்சியால் அடங்கிய மனமுடையவன், ஆன்ம தர்சனத்தால் ஆன்ம ஞானத்தில் திருப்தியடைந்தவன்,

6.21. புலன்களைக் கடந்த, புத்தியினால் கிரகிக்கமுடிகின்ற எல்லையற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பவன், அவ்வுண்மையான அனுபவத்தில் நிலைபெற்று அதிலிருந்து நழுவமாட்டான்.

6.22. எதை அடைந்தபின், அதற்கும் மேலாக வேறு எந்த ஒன்றையும் கற்பனையிலும் நினைக்கமுடியாதோ; அதில் நிலைபெற்ற பின், ஒருவன் எவ்விதமான அதிதுயரங்களாலும் பலியாகமாட்டான்.

6.23. துக்கத்திலிருந்து விடுதலை பெறுவதே யோகம் எனப்படும். அதுவே நம்பிக்கையுடன் தீர்மானகரமாக பயிலுதற்குரியது.

உரை:
முன் ஸ்லோகங்களில் கூறப்பட்ட சித்தி உணர்வு விவரங்களை ஒப்பிடுகையில் தன் ஆன்மிக வளர்ச்சியின் தற்போதைய கதி மந்தமாக இருப்பதை அறிந்து, ஒளியூட்டம் பெறுவதற்கான தன் விழைவை அந்த ஏமாற்றம் அமுக்கவிடக்கூடாது.

ஆன்ம ஞானம் மற்றும் திறன்களைப் பெற்று மன ஆட்டங்களை வெல்லும் வழிகாட்டுதல்கள் யோக சூத்ரம் 1.30 முதல் 1.36 வரை கூறப்பட்டுள்ளன.

யோக சூத்ரம் 1.30 – நோய், சோம்பல், சந்தேகம், அலட்சியம், தள்ளிப்போடுதல், தத்துவக் குழப்பங்கள், முன்னேறாமை, புலன் சுகங்களின் மீது பற்று, காட்சிப்பிழை, கவனச்சிதறல் ஆகியன யோகப்பயிற்சித் தடைகள்.

யோக சூத்ரம் 1.31. கவனச்சிதறலின் துணையாக வருத்தம், பதட்டம், தியானத்தின்போது உடல் ஸ்திரமின்மை, ஒழுங்கற்ற மூச்சு ஆகியன இருக்கும்.

யோக சூத்ரம் 1.32. இவைகளைக் களைய தியானத்தையும் இறைமையின் படைப்பாக்க வெளிப்படுகையான ஓம் மீது மனஒருமையும் கொள்வதுமான பயிற்சி செய்ய வேண்டும்.

யோக சூத்ரம் 1.33. நட்புணர்வு, தயை, மகிழ்ச்சி, சமாதானம் போன்ற மனோபாவனைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான தேறிய வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவற்றால் மனவெளி அமைதி மற்றும் சுத்திகரிப்பு கிடைக்கும்.

யோக சூத்ரம் 1.34. பிராணாயாமம் செய்வதால் தியானத்தில் வெற்றிக்குத் தடையான அனைத்தையும் உறுதியாக வெல்லலாம்

யோக சூத்ரம் 1.35. அகவெளிக்காட்சி, புலனறியா பிரபஞ்சச் சக்திகள், மற்றும் அவைகளின் வெளிப்படுதல்கள் ஆகியன மனவெளியைப் பக்குவமாற்றம் செய்து தியானப்பயிறுசியில் சாதகன் உறுதிப்படும் திறனளிக்கிறது.

யோக சூத்ரம் 1.36. பேருண்மை ஒளி அனுபவமாகும்போது மனவெளி மோனசித்தி அடைந்து ஆத்மார்த்த நம்பிக்கை உச்சமடைகிறது.

மஹாவதார் பாபாஜி, லாஹிரி மஹாசாயா, ஸ்ரீ யுக்தேஷ்வர், பரமஹம்ச யோகாநந்தர் ஆகியோரைக் கொண்ட என் குரு சிஷ்ய பரம்பரையின் கிரியா யோகா மரபில்:
மந்திர உச்சாடனம்,
சற்று மாறுபட்ட சுஷும்னா சுவாசம்,
உள்ளொளியிலும் ஓம் மந்திரத்திலும் ஐக்கியமாதல்,
ஆகியவைதான் முதன்மை உபாயமாகும்.

புதிய சாதகர்களுக்கு, இரண்டு மாத்திரை கொண்ட மந்திரத்தை இயல்பான சுவாசத்துடன் மனம் ஒருமித்துக் கவனிக்கக் கற்றுத்தரப்படுகிறது. சுவாசம் மீதான கவனிப்பு சிறிது சிறிதாக ஒதுக்கிவிட்டு மந்திர உச்சாடனம் மையம் பெறுகிறது. கவனக்குவிப்புக்கு ஒரு ஈர்ப்புப் பொருளாக இருக்க மந்திரம் உபயோகமாகி மனத்ததும்பல்கள் அலட்சியப்படுத்தப்பட்டு அது மறைய உதவுகிறது. பேருணர்வு நிலைகள் திறவாகும் வரை செய்யப்பட்டால், மந்திர உச்சாடனத்தாலேயே சமாதி நிலை எய்தலாமென யோகாநந்தாஜி அடிக்கடி கூறுவார்.

ஆரம்பத்தில் கற்றுத்தரப்படும் கிரியா பிராணாயாமம் பிராண சக்தியினை சக்கரங்களில் ஓட்ட உபயோகமாகிறது.

சங்கல்பித்த தியானப்பயிற்சியின் இறுதிக்கட்டத்தில், ஓம் மந்திரம் கவனிக்கப்பட்டு, அதில் ஐக்கியமாகுதல் நடைபெறுகிறது. ஓம் மந்திரத்தில் ஒருமுகப்பட்டிருக்கும்போது ஒருவர் ஆன்மீகக் கண்ணில் ஒளிக்காட்சி பெறலாம். அது வெண்மை நிறமானதாகவோ, பூரணச்சந்திரன் போன்றோ, பொன்னிறமானதாகவோ, நீலநிறமுடையதாகவோ இருக்கலாம்.
மூளையின் மெடுல்லா ஓப்ளாங்கேட்டாவிலிருந்து இந்த வர்ணங்கள் பிரதிபலிக்கின்றன. ஆன்மீகக் கண்ணில் காணும் பொன்னிறம் ஓம் மந்திரத்தின் புலன்கடந்த அதிர்வு அலைவரிசையைக் குறிக்கிறது.
கருநீல ஒளி நுண்ணறிவு சர்வவியாபக பேருணர்வின் புலனறியா அதிர்வு அலைவரிசையாகும். பிரகாச வெண்மை நிறம் மூல இயற்கையுடன் சகல உறவையும் கடந்த பேருணர்வு தளத்தினை அடையாளப்படுத்துகிறது.

தெளிவான ஒளிக்காட்சி பெறுவதற்கு முன்பாக, இந்நூலில் அறிமுக அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ள கீழ் ஐந்து சக்கரங்களின் அதிர்வு அலைவரிசைகளை சாதகன் காணக்கூடும்.

சிறிது நேரத்திற்கோ அல்லது நீண்ட நேரத்திற்கோ தியானம் செய்தாலும், இடைவிடாத தியானப் பயிற்சி சிறந்தது. அதையும் கவனத்துடன் செய்யப்பழகுதல் வேண்டும். தியானப்பயிற்சியை தம் அத்தியாவசிய கடமைகளுடன் அனுசரித்துக் கவனத்துடன் செய்து, வெளியுலக வாழ்க்கையிலிருந்து தன்னை உள்ளிழுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். போலிதிருப்தி மற்றும் தினசரிக் காரியங்களிலும் பயனுள்ள வேலைகளிலும் விருப்பமின்மை ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.

6.24. ஆணவ ஊட்டத்தால் நிர்ப்பந்திக்கப்படும் எல்லா ஆசைகளையும் நீக்கமற விட்டுவிட்டு, புலன்களை மனக்கட்டுப்பாட்டால் அடக்கி;

6.25. படிப்படியாக நிதானமாக சாதகன் நிஷ்சலனத்திற்கு வரவேண்டும். உண்மை சுயத்திற்கு நுண்ணறிவால் மனஒருமை பெற்று பிறிதொன்றிலும் கவனமற்று இருக்கவேண்டும்.

உரை:
ஆன்ம ஞானத்திற்கும் இறையனுபூதிக்கும் தன்னல நாட்டமொழித்த தூய்மை இருக்கவேண்டும். சன்னமாய் புலன்பிடிபடாத ஆத்திரங்களை சங்கல்பத்தினாலோ, மன இறுக்கமகற்றியோ (relax), எளிய தியான உத்திகளாலோ கட்டுப்படுத்தலாம். சாதகனின் கவனம் உள்முகமாகும்போது, தடையற்ற தூய உணர்வுக்கான மனஒருமை கவனத்துடன் பயிலவேண்டும்.

6.26. எப்பொழுதெல்லாம் மனம் சஞ்சலம் அடைந்து கவனம் அலைபாய்கிறதோ, அப்பொழுதெல்லாம் சுயஉறுதிப்பாட்டால் மனத்தை ஆன்மவசத்தில் நிலைப்படுத்தி வெல்லலாம்.

உரை:
தியானம் ஓட்டஒழுங்கில் இருக்கும்போது, சன்னமான மன மாற்றங்கள் மிகக் குறைந்திருக்கும். இவைகள் தொந்தரவளித்தால் சாதகன் இறைமைக்கான மனக்குவிப்பினை மீட்கவேண்டும். ஏனெனில் ஆத்மா மனதைவிட உயர்ந்தது. அது மனத்தூண்டல்களை மனஉறுதிப்பாட்டால் வெல்லவல்லது.

6.27. மன அமைதி, உணர்ச்சிகளின் தணிவு, தூய்மையில் நிலைப்பு, இறையனுபூதி ஆகியன சித்திக்கப்பெற்ற சாதகன் உயர் ஆனந்தத்திற்கு விழிப்புறுகிறான்.

6.28. யோகப்பயிற்சியில் நிலைத்து, தடைகள் நீங்கப்பெற்று கட்டற்ற மகிழ்ச்சியைப் பொழிவதான இறைஞானம் மற்றும் இறையனுபூதி ஆகியனவற்றை எளிதில் அடைகிறான்.

உரை:
இறையனுபூதி சித்தித்ததற்கான ஓர் அடையாளம் என்னவென்றால் ஆனந்தத்தின் நிதர்சனம்: கட்டற்றுப்போனதால் கிடைத்த தூய ஆன்மக்களிப்பு. இதனை உணர்ச்சித் ததும்பல், மரபுப் பழக்கம், அல்லது சுகானுபவத் தூண்டலை விளைவிக்கும் பிற எந்நிலையோடும் கலந்து குழப்பிக்கொள்ளக்கூடாது.
யோகப்பயிற்சியில் நிலைத்திருப்பது என்பது இறையனுபவ சமாதியில் லயித்திருப்பதுதான்.

VRGC குறிப்பு:
ரமணர் இங்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். 'உள்ளமைதி மற்றும் ஆனந்தக்களிப்பு ஆகியனவற்றையும் அனுபவிப்பது’ யார் என விசாரிக்க அறிவுறுத்துகிறார். எனென்றால் அகங்காரம் இதிலும் கைவைத்து சாதகனை ஏமாற்ற பிற எல்லாவற்றையும் போலவே ஒரு போலியை உருவாக்கிவிடும் என்கிறார்.

6.29. யோகப்பயிற்சியில் பக்குவப்பட்ட சாதகன், ஆன்மாவின் சமதையை எல்லாவற்றிலும், எல்லாவற்றையும் ஆன்மாவிலும் காண்கிறான்.

6.30. அந்த சாதகன் எங்கும் எதிலும் என்னையே காண்கிறான். நானில்லாத அவனோ, அவனில்லாத நானோ இல்லை.

உட்பொருள்:
யோகப்பயிற்சியால் பக்குவப்படுத்தப்பட்ட சாதகன் சகலத்திலும் ஒன்றேயான சமவாழ்வைப் பார்க்கிறான். இவ்வாறு கண்டு ஞானசித்தி பெற்ற சாதகன், சர்வ வியாபக உன்னதப் பேருணர்வினை அறிந்து அதில் சகல படைப்புகளும் உள்ளடக்கமாகியிருத்தலை அறிகிறான்.

6.31. அந்த யோகி, ஒருமையில் சமதையாகி, எல்லா படைப்புகளிலும் நிலைகொள்பவனாக மதிப்புடன் என்னை ஏற்றுக்கொள்பவன், என்ன வாழ்தகுதியில் இருந்தாலும் என்னில் வாழ்கிறான்.

உட்பொருள்:
இறையனுபூதியில் நிலைத்த சாதகன் எல்லா உயிருள்ள [VRGC: மற்றும் உயிரற்ற] படைப்புகளிலும் இறைமையே உள்ளடக்க இருப்புண்மை என அறிகிறான். எனவே, கடமையாலும் விதியாலும் அமையப்பெற்ற வாழ்நிலை எதுவானாலும் தான் இறைமையில் அமிழ்ந்திருப்பதை அறிகிறான்.

6.32. மகிழ்ச்சியிலோ துயரிலோ, தன்னுடைய ஆன்மாவின் சாயலை எல்லாவற்றிலும் சமதையைக் காணும் சாதகன், சித்தி பெற்ற யோகியாக அறியப்படுகிறான்.

உட்பொருள்:
ஆன்மசாரமும் உன்னதப் பேருணர்வின் சாரமும் ஒன்றென அறிந்த சாதகன், சூழல் மற்றும் காட்சி மாறாட்டங்களிடையே ஆத்ம திருப்தியில் நிலைபெற்ற சமாதி நிறைவாளன் ஆகிறான்.

அர்ஜுனன் சொன்னது:
6.33. என் சஞ்சலத்தால், மனசமதை என நீ வர்ணிக்கும் இந்த யோகத்தின் வலுவான அஸ்திவாரத்தை நான் புரிந்துகொள்ளவில்லை.

6.34. மனம் நிலையற்று, தவிப்புடன், பிடிவாத கெட்டியுடன் இருக்கின்றது; அது காற்றைப் போல அடக்க முடியாததாய் இருப்பதாகத் தோன்றுகிறது.

உரை:
சாதாரண, சுவாபிமான உணர்வு வாழ்வில் திறம்பட சாதித்த ஒவ்வொருரையும் அர்ஜுனன் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். ஆனால் ஆன்மீக பாடங்களை உள்வாங்கிக்கொள்ள இயலாதவனாகவும் நினைவுகளையும் மனஆட்டங்களையும் வெல்லும் பழக்கம் இல்லாதவனாயும் இருக்கிறான். குறிப்பாக, மாற்றத்திற்கு உட்படாத சமாதி நிலை என்றால் என்னவென்று நினைக்கமுடியாமலும், அதனை அனுபவித்தல் எப்படியென விளங்காமலும் உள்ளான். ஆனாலும், நேர்மையான ஒரு ஆத்மவிசாரணை மனதை ஒளிர்விப்பதான ஒரு உள்ளார்ந்த ஞானத்திற்கு திறவாக்குகிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்:
6.35. ஐயமின்றி மனம் நிலைபெறாததும், நிறுத்தவியலாததுமாகும். ஆனால் அதனை யோகப்பயிற்சியினாலும் பற்றின்மையாலும் வெல்லலாம்.

6.36. சுவாபிமான உணர்வு கட்டுப்படாத ஒருவனுக்கு யோகப்பயிற்சி கடினமானதென நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஆன்ம-இச்சைப்படியான சுயஒழுக்கத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட சுவாபிமான உணர்வு, உள்ள சாதகனுக்கு சரியான முயற்சி மற்றும் சரியான வழிமுறைகளால் அது சாத்தியமே.

உரை:
யோகப்பயிற்சி என்பது கீழ்கண்ட வழிமுறைகளை உள்ளடக்கியது.
அ. ஆக்கபூர்வ உடல் மற்றும் மன மாற்றங்களை செயல்படுத்துவது
ஆ. மன ஆட்டங்களை வெல்லுதல்
இ . சமாதியை விளைவிக்கக் கூடிய பேருணர்வு நிலைகளுக்குத் திறவாதலுக்கான ஆதரிப்புகள்

சுவாபிமான உணர்வு ஆணவமையமானது. மனதை ஆன்ம-இச்சைப்படி ஆள விருப்புறுதி மற்றும் குவிந்த சங்கல்பம் ஆகியனவும் மற்றும் பிறவும் கைகொள்ளுமாறு சாதகன் ஊக்கப்படுத்தப் படுகிறான்.

அர்ஜுனன் வினவியது.
6.37. நம்பிக்கை இருந்தும் கட்டுப்படாத மனமுடைய சாதகனின் கதி என்ன? பயிற்சியில் நழுவியதால் யோகசாதனையில் முழுமை பெறாத அவனுக்கு என்ன நடக்கும்?

6.38. இரண்டு உலகத்திலிருந்தும் இடறி, குழம்பி, புகலிடம் அற்று, கலைந்து போகும் மேகத்தைப் போல அவன் காணாமல் போய்விடுவானா?

உரை:
விழிப்புணர்வுப் பாதையில் எல்லா சாதகர்களும் பற்றுறுதியுடன் இருந்துவிடுவதில்லை. முழுபுரிதலின்றிக் குழப்பதினாலோ அல்லது சொந்த காரணங்களுக்காகவோ, இறை நம்பிக்கை மற்றும் ஆன்மீகப் பாதையில் பலனறிந்த சிலர் காலப்போக்கில் தங்கள் முயற்சிகளில் பலவீனமடைகிறார்கள் அல்லது இடைநின்று போகின்றனர்.
இதனால் தங்களுக்கு என்ன ஆகும் எனும் விசாரணை அவர்கள் செய்வதுண்டு. தங்களது சாதாரண சுயஉணர்வு நிலையில் இருந்துகொண்டே உயர்நிலை உணர்வை ஓரளவு அனுபவித்தவர்கள், இவ்விரண்டு விழிப்புணர்வு நிலைகளிலிருந்தும் தவறிவிழுந்து, மேகக்கூட்டம் கலைவது போல் இரண்டும் ஆகிவிடுமோ எனும் ஐயத்துடன் விக்கித்து நிற்கின்றனர்.

6.39. நீதான் என் ஐயத்தை முற்றிலும் களையமுடியும். நீ அல்லால் இதனைச் செய்ய பிறிதொருவர் இல்லை.

உட்பொருள்:
தானாகிய உண்மை இருப்பின் அடியாழத்திலிருந்து திறவாகும் உண்மை ஞானத்தால் மட்டும்தான் மனதின் குழப்பங்களை முற்றிலும் போக்கமுடியும். இறையுணர் அனுபூதியில் அடித்தளமிட்ட உண்மை ஞானத்தால் அல்லாது பிற எதுவும் இதனை முடிக்கவல்லதல்ல.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது:
6.40. பூலோகத்திலோ மேலோகத்திலோ அவன் இழப்பது ஒன்றுமில்லை. நல்லதைச் செய்பவன் தீமையை ஒருக்காலும் அடைவதில்லை.

உரை:
“நல்லதைச் செய்பவன்” என்பதுதான் இங்கு முக்கிய வாக்கியம். முறையான தீர்மானகரமான சாதகனுக்கு விழிப்புணர்வுப் பாதையில் முன்னேறாமலிருக்கக் கூடிய வாய்ப்புள்ள உணர்வுப்பரப்பு பிரபஞ்சத்தில் எதுவுமில்லை. பயிற்சி பிழைபட்டுப் போனால்கூட, இறைநம்பிக்கை இருந்தால், விழிப்பு நோக்கிய ஆன்மத் துடிப்பே தூண்டுசக்தியாயிருக்கும். அவ்வகை நம்பிக்கையற்று ஆன்மீகப் பாதையிலிருந்து நழுவினாலும் கூட, காலப்போக்கில் அந்த ஆத்மா விழிப்பார்வத்துக்கு மீட்புறும்.

6.41. யோகத்தில் நழுவியவன் புண்ணிய லோகங்களில் நீண்டகாலம் வாசம் செய்து பின் மகிழ்வான செல்வாக்கான சூழலில் புதுவுடல் எடுக்கிறான்.

6.42. அல்லது யோக ஸ்ரேஷ்டர்களின் வம்சத்தில் பிறப்பெடுக்கலாம். ஆனாலும் இந்நிலை எய்துதல் இவ்வுலகில் மிக அரிது.

6.43. அங்கே பூர்வ ஜென்மத்தில் செய்த முயற்சி மற்றும் சித்திக்கப்பெற்ற ஞானமுதிர்வு பற்றிய நினைவுகளும் வரப்பெற்று தன் பூரணதிசைக்கு மீண்டும் முயற்சிக்கிறான்.

6.44. முன்ஜென்ம யோகப்பயிற்சிகளின் தூண்டுதலால் ஆன்மீக முன்னேற்றம் தங்குதடையின்றி தொடர்கிறது. இறைமையை அறிவதான ஆசைகூட ஓம் மந்திரத்தில் ஐக்கியமாவதால் புலனறியா உயர்நிலை அனுபூதியாகிறது.

6.45. விடாமுயற்சி மற்றும் சுயத்தின்மேல் முழுஆளுமை ஆகியவற்றால் பல பிறவிகளில் தூய்மை அடையப்பெற்று, சாதகன் உன்னத ஞானானுபூதிக்கு விழிப்படைகிறான்.

உரை:
ஆதரவான விண்வெளி மண்டலங்களில் சில கால ஓய்வுக்குப் பிறகு அந்த ஆத்மா, விரைவான ஆன்மீக வளர்ச்சிக்குத் தோதான சூழலுள்ள வேறெரு உடலுக்கு மறுபிறப்பு எடுக்கிறது. ஆன்ம ஞானம் வளர்க்கும் ஆர்வம் மீண்டும் தூண்டப்பெற்று முன்ஜென்மத்தில் செய்த பயிற்சிகளின் நினைவுகள் வரப்பெற்று, இந்த ஜென்மத்தில் முதலில் அது பற்றிய பிரக்ஞையில்லாவிடினும் ஆன்மீக வளர்ச்சியை விளைவிக்கிறது.
ஆத்மானுபூதப் பிரக்ஞை திரும்ப அடையும் வரை, புண்ணிய கர்மாவினால் வழிநடத்தப்பட்டு, முடிவில் முழு இறையுணர்விற்கு சாதகன் விழிப்படைகிறான்.

6.46. கடினமான ஓழுக்கவிதிகளைக் கடைபிடிப்பவர்களைக் காட்டிலும், வெறுமனே இறையறிவுக் கல்வி பெற்றவர்களைக் காட்டிலும், வெறுமனே சடங்காச்சாரம் கடைபிடிப்பவர்களைக் காட்டிலும், யோகாவில் தேர்ந்த சாதகர்கள் ஞானானுபூதியில் மிக உயர்ந்தவர்கள். எனவே, நீ யோகியாக இரு.

உட்பொருள்:
யோகாவில் தேர்ந்த சாதகன் ஒருமையுணர்வு சித்திப்பதான சமாதியில் நிலைத்திருப்பதனால், ஆன்ம திருவுருமாற்றத்திற்குக் கடினமான பயிற்சியில் ஈடுபடவேண்டியதில்லை. வெளி ஆதாரங்களிலிருந்து ஞானம் பெறுவதோ, மன ஒருமைக்கு சடங்குகளைத் துணை கொள்வதோ, ஆதரிப்பு அமானுஷ்யங்களின் உதவிகளை அழைத்துப் பெறுவதோ ஏதும் தேவையில்லை. அதனால் நீ யோகசமாதியில் நிலைத்திரு.
6.47. தூய பேருணர்வு நிலைகளை இடைவிடாமல் அனுபவிக்கும் இந்த எல்லா யோக சாதகர்களுக்கு மத்தியில், தன் ஆத்மாவை என்னில் கலந்தவன், என்மேல் பூரண நம்பிக்கையும் மதிப்பும் உள்ளவன், என்மேல் பற்றுறுதி கொண்டவர்களில் மிகச்சிறந்தவன்.

உட்பொருள்:
சமாதி அனுபவிக்கும் எல்லா யோகிகளினிடையே சுய இருப்புணர்வினை தூய பேருணர்வில் கரைத்துக் கொண்டு, அதில் முழுச் சரணாகத பூதனாய் இருப்பவன் இறைமையில் முழுவதும் நிலைபேறுள்ளவனாக இருக்கிறான்.


முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், தியான யோகம் என தலைப்பிடப்பட்ட 6 ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.
Powered by Blogger.