7. ஞான விக்ஞான யோகம் - பகவத்கீதை - The Eternal Way
பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).
பகவத் கீதை ஏழாம் அத்தியாயம்
7. ஞான விக்ஞான யோகம்
(விவேகித்த விசாரணை மற்றும் ஞானானுபூதி யோகம்)
ஒவ்வொருவரும் மனம் மற்றும் உடற்செயல்கள் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதால், அவர்களின் உள்ளத்தின் அடியாழத்தில், தங்களின் உண்மையான சொரூபம் என்ன என்றும், இறைச்சொரூபம் பற்றியும் முழுமையாக அறிய விரும்புகிறார்கள்.
ஆயினும், எதை யாரும் பொதுவாக உணரவில்லை அல்லது ஏற்கவில்லை என்றால், நம் தினசரி வாழ்சூழல் மற்றும் உறவு வட்டத்திலேயே இவ்வுயர்ஞானத்திற்கு விழிப்புப் பெற்று, அதை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும் என்பதுதான்.
எல்லா மனிதகுலப் பிரச்னைகளின் குழப்பங்களையும், துயரங்களையும் முடிவுக்குக் கொண்டவரக்கூடிய தீர்வானது, நாம், இறைமையுடன் உறவு வைத்துள்ள ஆன்மீக வியக்திகள் என உணர்வதும், அந்த உறவு நமக்கு பிரயோஜனமாக ஊட்டம் கொடுக்க அனுமதிப்பதுமாகும்.
இந்த அத்தியாயத்தில், உண்மை மீதான விவேகித்த விசாரணையும் நேரடியாக இறையனுபூதி பெறுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப் படுகிறது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது:
7.1. யோகப்பயிற்சியினால் என்னில் மனம் லயித்து, என்னைச் சரணடைந்து, என்னை எவ்வாறு முழுதாய் அறிவாயோ அதைக் கேள். இதில் ஐயமேதுமில்லை.
உட்பொருள்:
இறையுண்மையில் தன் விழிப்புணர்வை லயித்துவிடுவதான சமாதிப்பயிற்சியினால் இறைமையை அதன் சொரூப உண்மையில் இறைமையாகவே நீ அறிந்து அனுபவிப்பாய். இது உறுதியான உண்மை.
உரை:
ஆன்மாவின் பேரார்வம் இறைமையைப் பற்றி அறிவதால் மட்டும் திருப்தியுறாது, நேரடியாக இறையனுபூதியைப் பெறுவதே அதனைப் பூர்த்தி செய்யும். இதற்கு, சிந்தனையையும், நுண்ணறிவுப் பூர்வ முயற்சியையும் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. உயர்பேருணர்வு நிலைப் பயிற்சிகளின் விடாமுயற்சியினால் தடைகள் நீங்கப்பெறுகையினாலும், இறைக்கருணையினால் ஏற்படும் சுத்தீகரிப்புக் கைங்கர்யத்தாலும், இறையுண்மை தவறாமல் வெளிப்பட்டே தீரும்.
7.2. எதை அறிந்து, அது புரிந்துவிட்டால், அதற்குமேல் வேறெதையும் அறியத் தேவையிராதோ அந்த அனுபவத்தோடு கூடிய ஞானத்தை நான் உனக்கு உரைக்கிறேன்.
உட்பொருள்:
இறையுண்மை ஞானம் சுயவிளக்கமாய் அனுபூதிபூர்வமாய் தெளிவாவதால் இறைமையையும் பிரபஞ்ச வாழ்வு இயக்கங்களையும் முழுவதுமாய் அறிய முடிகிறது.
உரை:
அனைத்தையும் உள்ளடக்கிய இறையுண்மை ஞானமானது அறிந்து அனுபவமாகும்போது அறியவேண்டியதனைத்தையும் அறிந்தாகிவிட்டது. ஆன்ம மற்றும் இறையனுபூத ஜீவிகளாக நாம் ஆகாதவரை, வாழ்வின் புலனறியா மெல்லிய அம்சங்கள் பிடிபடாது. மனதிலும் நம் விழிப்புப்பரப்பிலும் மயக்கமும் காட்சிப்பிறழ்ச்சிகளும் நிலவும் வரை இந்த அனுபவபுஷ்டியான அறிவு நம்முடையதல்ல. மனதையும் நம் விழிப்புப்பரப்பினையும் அதனதன் கட்டுகளிலிருந்து களையெடுக்கும் முயற்சியின் வெற்றியால் நம் சொரூப அறிவும் இறைச்சொருப அறிவும் அடையும் திறன் பெறுகிறோம். ஆன்ம ஒளியாலும் ஆன்மவிழிப்பாலும் மனம் தெளிவாகும்போது இறைமையின் உள்ளார்ந்த நம் அறிவு தானாக விளக்கமுறும்.
7.3. ஆயிரம் பேர்களில் யாரோ ஒருவன் சித்திமுழுமைக்கு முயல்கிறான். அவ்வாறு முயல்பவர்களிலும், முயன்று சித்தி பெற்றவர்களிலும், எவனோ ஒருவன்தான் என்னை உள்ளவாறு அறிகிறான்.
உட்பொருள்:
பேருணர்வின் முழுப் பிரகாசத்திற்கு விழிப்படைய ஆயிரம் ஆத்மாக்களில் வெகுசிலரே பற்றுறுதியுடன் முயல்கின்றனர். அவர்களிலும் சமாதி நிலை எய்தப்பெற்று அனுபவபூதனாய் இருந்தாலும் இறையனுபூதி வாய்க்கப்பெற்றோர் வெகு சிலரே.
உரை:
விழிப்பு நிலை, உடல் மற்றும் மனதளவு அடுக்கிலேயே அதிகப்படியாக ஆழ்ந்து இருப்பதால் பெரும்பாலோர் இறைமையை அதன் உண்மை சொரூபத்தில் உள்ளபடி அறிவதில்லை. ஆணவமையத்தில் ஊன்றி இருப்பதால், அவர்கள் தங்களின் ஆன்ம இயல்பை அறிவதில்லை. அவர்களின் உள்ளிருக்கும் சக்தியை அறியாத காரணத்தால் அதனைத் திறவாக்கும் பேரார்வம் கொள்வதில்லை. முயன்று ஒருவாறாக அனுபூதி அடையப்பெற்றோரிடையே வெகு சிலரே இறையுண்மையை அதன் முழுஅளவில் அறிகின்றனர். பலர், முந்தைய சுவாபிமான உணர்வினைக் காட்டிலும் தங்களுக்கு வாய்த்திருக்கும் முழுமைபெறாத ஆன்மவிழிப்பாகிய "தெய்வீகபூரிப்பு நிலை" திருப்தி கொடுப்பதாய் அறிகின்றனர். ஆனால், அதிலிருந்து சித்திமுழுமைக்கு மேலும் திறவாகக்கூடிய முயற்சி தேவைப்படுகிறது.
ஏன் இந்த இறையுண்மை எளிதாக ஏற்கப்பட்டு வெளிப்படையாக நடைமுறையில் வருவதில்லை? மக்கள் இறைஞானத்திற்கும் அனுபூதிக்கும் விழிப்பாக வேண்டியவர்களாக இருக்க, ஏன் அவ்வாறு பெருவாரியான மக்கள் விழுப்புறுவதில்லை? மேலும், நாம் செய்ய விரும்பினால், திறம்படச் செய்வதெப்படி?
இறைஞானத்திற்கும் அனுபூதிக்கும் திறவாகாமல் இருப்பதற்கான சில காரணங்கள்:
• இறையுண்மையைப் பற்றி பரிச்சயம் இன்மை
• இறைமை அறிவு பெற விரும்பாமை
• இறைமை அறிவு போதாமை
• சுயஊட்டத்தை முதன்மைப் படுத்துதல்
• இறைவன் அறியவொண்ணாதவர் அல்லது அறியப்படக்கூடாதவர் எனும் தவறெண்ணம்
• மனக் கோளாறுகளினால் இறையறிவார்வம் பின்னிழுக்கப்படுகை
இவைகளை விளக்கமாக இவைகளின் நிவாரணத்துடன் இனி பார்ப்போம்.
இறையுண்மையைப் பற்றி பரிச்சயம் இன்மை.
பெரும்பாலோர் எங்கும் நிறை இறைப்பேருண்மையே தோற்றமாக, அனைத்திலும் வாழ்வாக, ஆற்றலாக, உள்பொதி மெய்ப்பொருளாக அறிந்திருக்கவில்லை. அவர்கள் ஆழ்மனஉணர்வின்றி மேலோட்டமாக வாழ்கிறார்கள். அவர்கள் பிழைப்புவழி சாமர்த்தியத்துடன் சுவாபிமான, ஆனால் நிறைவேறாத வாழ்வை வாழ்கின்றனர்; தங்களின் அதே வாழ்வினை உள்ளடக்கி தங்களின் நலத்திற்குக் காரணமான இறைப்பேருண்மையுடனான தங்களின் உறவை அறிந்திருக்கவில்லை.
நிவாரணம்: அவர்கள் அறிய விரும்பினால், ஆன்மவிழிப்புப் பெறுவதோடு கற்கும் வாய்ப்பினை அவர்களின் விருப்பமே அமைத்துக் கொடுக்கும்.
அவர்கள் அறிய விரும்பாவிட்டாலும் ஆன்மா தன் முழுமைக்கு மீள்வதான அதன் உள்ளார்ந்த கவரும்விசையால் ஆன்மஞானத்திற்கு முன்னேறுவதான ஓட்டம் வாய்க்கப் பெறுவார்கள்.
ஒவ்வொருவரும் இறுதியில் ஆன்மவிழிப்புக்கும் இறைஞானத்திற்கும் விழிப்படையவே செய்வார்கள்.
இறைமை அறிவு பெற விரும்பாமை.
பெரும்பாலானோர் சுயத்தை முன்னிலைப்படுத்துபவர்களாகவோ இறையுண்மை அறிவற்கான உயர்சாத்தியப்பாட்டில் ஈடுபாடற்றவர்களாகவோ இருக்கின்றனர்.
நிவாரணம்: ஆன்மீக விஷயங்களில் நாம் வளர்ச்சி பெறும்போது நம் சுயமுன்னிலைப்போக்கு அதற்கேற்ப குறையும்.
இறைமை அறிவு போதாமை.
விருப்பமிருந்தும், இயற்கை மற்றும் தங்களுடன் இறைமைக்கு உள்ள தொடர்பு ஞானத்துடன் இறைமையைத் தேவையான அளவு உள்வாங்கத் திறனற்றுப் போகின்றனர்.
நிவாரணம்: இவர்களுக்கு எது தேவையென்றால்,
• இறைமை அறிவில் ஆர்வம்
• வழிகாட்டுதலுக்கான வேண்டுதல்
• இறைமை பற்றிய நம்பத்தகு விஷயங்களை தேடல்
• பூரணஞானத்திற்கே திருப்தியடையும் உறுதி
சுயஊட்டத்தை முதன்மைப் படுத்துதல்.
இறையுண்மை அறிவது முக்கியமெனும் அறிவு இருந்தும், ஒருவர் தன் சுயதேவைகள், திட்டங்கள், உறவுகள், செயல்கள், ஆகியனவற்றை முன்னிலைப்படுத்துவதில் இறைஞானம் மற்றும் அனுபவம் பின்வரிசையில் வைத்துப் பார்க்கப்பட்டுவிடுகிறது.
நிவாரணம்: எது தேவையென்றால், எது முக்கியமென்றும் எதற்கு அதிக கவனம் கொடுக்கவேண்டுமென்ற தேர்ந்தெடுப்புக்குத் தோதான வாழ்வூட்ட முக்கியத்துவப் பட்டியலை அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கத் தெரிந்திருத்தலாகும். கவனச்சிதறலாலும் ஆற்றல் விரயத்தாலும் மனம் குழப்பமடைவது மட்டுமின்றி பிராண சக்திக் குறைவும் ஏற்படுகிறது.
அர்த்தபுஷ்டியான ஆக்கபூர்வ செயலுடன், அவ்வப்போது ஓய்வெடுக்க வாய்ப்பு கொடுத்து, தியான ஒருமை மற்றும் தத்துவ விளக்கம் பெறுவதுமான பணிப்பட்டியலும் ஒன்றுக்கொன்று சரிவிகிதத்திலிருக்க வேண்டிய அவசியமிருக்கிறது.
இறைவன் அறியவொண்ணாதவர் அல்லது அறியப்படக்கூடாதவர் எனும் தவறெண்ணம்.
இறையறிவு ஆர்வம் இருந்தும் கீழ்கண்ட இருவித பொய்நம்பிக்கைகள் நிலவலாம்
அ. இறைவன் அறியவொண்ணாதவர்
ஆ. இறைவன் அறியப்படக்கூடாதவர்
முதல் சந்தேகத்தில், ஆன்மா என்பது இறைப்பேருண்மைப் பரப்பின் ஒரு பகாநிலை அம்சம் என்பதும் இவ்வுண்மையை நேரடியாக அனுபவித்துணர முடியுமெனவும் அறியாதிருக்கலாம்.
இரண்டாவது சந்தேகத்தில், மனித இனத்திற்கு இறைவன் புலன்கடந்த ரகசியவஸ்துவாகவே இருக்க கற்பிக்கப்பட்டவர் எனும் தவறான நம்பிக்கை வைத்திருக்கலாம். அதாவது, இறைவனுக்கும் ஆன்மாக்களுக்கும் இடையே ஒரு இடைவெளி எப்போதும் இருக்குமாறும் இறையுண்மையறிவு நமக்குத் தகாததாகவே இருக்க நாம் படைக்கப் பட்டுள்ளதாகவும் புரிந்துகொள்வது.
நிவாரணம்: இந்த பொய் நம்பிக்கைகள் நிலவும் பட்சத்தில் சரியான அறிவுக்கு வழிவிட இவைகளைத் உடனடியாகத் துறப்பது அவசியம். இத்தகைய குழப்பமுள்ளோரிடையே போய் வழிதேடுதலோ, விவாதத்தில் இறங்காதிருப்பதோ நல்லது. ஞானத்திற்கு பயனுள்ள வழி, ஆழ்மன வழிகாட்டுதலைப் பின்பற்றுவதும் நுண்ணறிவு மற்றும் உள்ளுணர்வு ஆகியனவற்றைப் பயன்படுத்துதலாகும். இறைமை பற்றிய முழுஞானம் ஆன்மாவின் உள்ளார்ந்த வஸ்து என்றாலும் அதற்கு விழிப்புப் பெறுதலும் திறவாகுதலும் தேவை.
இறையுண்மையை எட்டிப்பிடிப்பதை ஒரு திருப்தியுடன் களிப்பூட்டும் சாகசச் செயலாகவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாகவும் கருத வேண்டும்.
மனக் கோளாறுகளினால் இறையறிவார்வம் பின்னிழுக்கப்படுகை.
உணர்ச்சித் ததும்பல், மன அமைதியின்மை, மனக்குழப்பம், போதை அடிமை, பச்சாத்தாப மனக்கோணல்களும் உந்துதல்களும் ஆகியவற்றால் ஒருவரின் இறையறிவு ஆர்வம் குறைபட்டிருந்தால், அமைதியாக அவைகளைக் களைந்து ஆக்கபூர்வ மற்றும் வாழ்க்கைக்கு ஊட்டம் தருவதான மனநலத்தை உறுதிப்படுத்துவதும் ஆன்ம வளர்ச்சிக்குத் தோதானதும் ஆன நடத்தைகளையும் மனோபாவங்களையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். இதுதான் ஆன்ம திறவாதலுக்கும் இறையனுபூதிக்கும் அறிவுப்பூர்வமான சங்கல்பித்த சரியான செயலாகும்.
7.4. நிலம், நெருப்பு, நீர், காற்று, வானம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டும் என் இயற்கை வெளித்தோற்றம்.
உட்பொருள்:
பஞ்ச ஸ்தூல பூதங்கள், சிந்தனா பலம், விவேகித்த விசாரணைத் தேர்ச்சி, தன்னால் தானிருப்பு எனும் ஆணவமய அறிவு, ஆகியன பேருணர்வின் எட்டு வகையாயிருப்பதான புலனறி ஜட இயற்கையில் வெளிப்பாடு.
உரை:
நிலம் (அடர்த்தி), நீர் (திரவத் தன்மை), நெருப்பு (நிலைமாற்றும் தன்மை), காற்று (வாயு நிலை), வானம் (வெளிப்படுத்திக் கொள்ளத்தக்க வஸ்துக்களுக்கான வெளியிடம்) - இவைகள் யாவும் முக்குணக் கலப்பால் உண்டான சூட்சும புலனதிர்வுத் தன்மாத்திரைகளிலிருந்து உண்டானவை. பஞ்ச தன்மாத்திரைகளில், ஒரு தன்மாத்திரையின் பாதி அளவை (1/2) எடுத்துக்கொண்டு, அதனுடன் மற்ற நான்கு தன்மாத்திரைகளின் அரைக்கால் (1/8) பங்கு சேர்த்துக் கலந்து, அந்த பாதியளவுத் தன்மாத்திரைக்கு நேரான ஸ்தூல பூதத்தை உருவாக்குகிறது. இந்தப் பஞ்சீகரண முறையில் பஞ்ச ஸ்தூல பூதங்கள் உருவாகியுள்ளன.
நிலமானது தாமஸகுணமும், நீரானது தாமஸ மற்றும் ராஜஸ குணமும், நெருப்பானது ராஜஸ குணமும், காற்றானது ராஜஸ மற்றும் சாத்வீக குணமும், ஆகாயம் சாத்வீக குணமும் கொண்டிருக்கின்றன. படம் காண்க:
இறைப்பேருண்மையிலிருந்து புதுப் பிரபஞ்சச் சுழற்சி வெளிப்பாட்டுக்கான தூண்டுதல் சிலிர்த்தவுடன், இறையுணர்வின் ஒரு பகுதி, இறைமையின் படைப்பாக்க சக்தி. அதாவது, ஓம் எனும் அதிர்வோட்டம், காலமாக, இடமாக, வடிவவெளிப்பாட்டுக்குத் தங்களை பரிணமித்துக் கொள்ளத்தக்க விண்பொருட்களாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.
பீஷ்மராகிய பிரதிபிம்பப் பேருணர்வு உருவாகி தொடர் பரிணாமத்திற்கான சாத்திய வசதி ஏற்படுகிறது. அவையாவன:
அ. நுண்ணறிவு சூழ்ந்த பிரபஞ்ச மனம்
ஆ. காரண, சூக்ஷ்ம, ஸ்தூல தளங்கள்
இவைகளிலிருந்து தன்மாத்திரைகளும் ஸ்தூல பூதங்களும் சத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்கணக் கலப்பால் உருவாகிறது.
ஏழு தளங்களின் வர்ணனை:
• இறைதளம் – வெளிப்படு பிரபஞ்சத்திற்கும் மேம்பட்ட தளம்
• இறைமைப் பேருணர்வு தளம் – வாழ்வூட்டும் பிரகாசமான ஓளி, மூல இயற்கையில் பட்டுத் தெரிக்கும்போது வியக்த ஆத்மா ஆகிறது.
• ஆன்மப் பிரதிபலிப்பு தளம் – இங்குள்ள ஆத்மாக்கள் ஒளியூட்டம் பெற்றவைகளென்றாலும் தன்னால் தான் எனும் ஆணவமயக் காட்சியை உடையன.
• மூல இயற்கைத் தளம் --- ஓம் மந்திரமானது தன்னைத்தானே காலம், இடம், மற்றும் பிரபஞ்ச வஸ்துக்களாக பரிணமித்துக் கொள்கிறது. இதன் தொடர்பால் ஆன்மாவானது அறிவுக்கண் கட்டப்பட்டு (ஆவரண), வடிவபிம்பங்களை உருவாக்குவதான (விக்ஷேப), ஜட உலகத்தில் ஸ்தூல, சூக்ஷ்ம, நுண்ணிய வெளிப்பாடுகளுடன் மாயவலையில் சிக்குண்டு தன்னை கெட்டியாக அடையாளப்படுத்திக் கொள்கிறது.
• காரண ஒளியுடல் தளம் – காரண உலகமானது தன்மாத்திரைகளுடன் கலப்பாகி சூக்ஷ்ம மற்றும் ஸ்தூல பிரபஞ்ச வெளிப்பாடுகளுக்குக் காரணமாகிறது. இந்தத் தளத்தின் ஆன்மாக்கள் கூட்டமானது காரண உறைகளால் மூடப்பட்டு நுண்ணறிவு மற்றும் மனத் திறன்களை உபயோகித்து வாழ்கின்றன.
• சூட்சும பிராண தளம் --- விண்ணகம். விண்ணுறை மூடிய ஆத்மாக்கள் இங்கு வாழ்கின்றன.
• ஸ்தூல உலகம் --- குணங்களால் ஆளப்படுகின்ற ஜடபூத இயற்கையின் ஜட வடிவப் பிரபஞ்சம்.
இறைமையை ஒத்த வடிவத்தில் மட்டுமல்லாது ஆன்மா என்பது இறைப்பேருணர்வின் வியக்த அலகாயுமிருப்பதால் மனிதக்கூட்டத்தின் அங்கமாக நம்மை அடையாளப்படுத்தும் அனைத்து அம்சங்களும் இறைவனின் பிரபஞ்ச உடலுக்கும் அடையாளமாயிருக்கும். ஆணவசுய ஆன்மா ஜடத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஆன்மாவின் சத்வ பாகம் அதில் ஒரு மனபரிபாகத்தை பிரபஞ்ச மனத்துடன் ஒத்த ஒரு களமாக உருவாக்குகிறது. மனம் தகவல்களை வாங்கி சமைக்கிறது. அது ஆன்மவிழிப்பை ஜட உலகத்துடன் இணைக்கிறது.
[VRGC கருத்து: பெருமாளை உடலாகவும் அவனது படைப்பினை அதன் உறுப்புக்களாகவும் ஸ்ரீ ராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தில் விவரிக்கிறார். அவயவன் அவயவி உறவு. எனவே விசிஷ்டாத்வைதத்திற்கு சாரீரக சாஸ்த்ரம் என்று இன்னொரு பெயர்.]
உணர்வாகா அடித்தட்டு மனம் என்பது சமஸ்காரங்களின் கிடங்கு. மனதளவில் ஆணவசுய ஆன்மா பிரபஞ்ச மனத்துடன் தொடர்புடையது. மனநிலைகள், எண்ணங்கள், ஆசைகள், கற்பிதங்கள், ஆகியனவற்றிற்கு பிரபஞ்ச மனம் பதிலளிப்பதே நம் வாழ்சூழலில் நம் மனவாஞ்சைக்கொத்த சம்பவங்கள் நடத்துவிக்கக் காரணமாகிறது.
மனம் தூயதானால். மனநிலைகள், எண்ணங்கள், ஆசைகள், கற்பிதங்கள் ஆகியனவற்றின் சத்வபாகம் உருவாகும். மனக் கலக்கத்தில் ரஜஸ் குணம் மேலோங்கி சும்மாயிருக்கையில் சஞ்சலத்துடனும், செயல்படுகையில் வேட்கையுடனும் இருக்கும். தாமஸ குணம் மேலோங்குகையில் சும்மாயிருக்கையில் சுயப் பச்சாத்தாபத்துடனும், செயல்படுகையில் அழிவெண்ணங்களுடனும் இருக்கும்.
விவேகித்த விசாரணை செய்யும் மனதின் பரிபாகமான புத்தி (நுண்ணறிவு) எது உண்மை எனத் தீர்மானிக்கிறது. சாதகன் முக்கியமெது-முக்கியமல்லாததெது மற்றும் நிலைத்ததெது-நிலைக்காததெது எனும் வேறுபாடு அறியும் நுண்ணறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். பேருண்மையின் நிஜத்தன்மை, வகைப்பாடுகள், செயல்பாடுகள் ஆகியவை எவையென்பதை தூய நுண்ணறிவு புரிந்துகொள்கிறது.
கி. பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர், தன் நூலான ஆத்ம போதத்தில் ஆத்மா என்பது நுண்ணறிவின் மீது பிரதிபலிக்கும் பேருணர்வு ஒளி என வரையறுத்திருக்கிறார்.
ஆன்மாவானது மனதுடனும் ஜடத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது அதன் முதல் நுண்ணறிவுத் தவறாகும். அதிலிருந்து எல்லா பிழையறிவும் அதனால் மயக்கமும் உண்டாகின்றன.
ஆன்மாவின் ஐந்து உறைகளின் வர்ணனை:
ஆனந்தமய கோஷம் – கடவுட் பேருணர்வின் ஜோதி தனித்துவ வியஷ்டி ஆன்மாவாக ஆக்கிக் கொள்ளும்போது தோன்றுவது. இக்கோஷ நிலையில் "தான்" எனும் ஆணவம் மிகவும் மெலிந்து, ஆன்மசாரத்தை அறிந்தவாறே ஆனந்தத்தை ஜீவாத்மா அனுபவிக்கும்.
விக்ஞானமய கோஷம் – ஓரளவு மயக்குற்ற ஜீவாத்மா, விவேகித்து விசாரித்தறியக்கூடிய மெல்லிய காரண வஸ்து.
மனோமய கோஷம் – தகவல்களை சமைப்பதான அல்லது சிந்திப்பதான மெல்லிய காரண வஸ்து.
பிராண மய கோஷம் – சக்கரங்களை ஏந்திய விண்ணக உடம்பு.
அன்னமய கோஷம் --- உணவால் போஷாக்கு பெறக்கூடிய ஸ்தூலதள உடம்பு.
பிரபஞ்ச சக்திகளும் தன்மாத்திரைகளும் தங்களை முழுமையாய் வெளிப்படுத்திக் கொள்ளும்போது, உன்னதப் பேருணர்வின் கவரும்விசை இயக்கமானது, தன்மாத்திரைகள் ஸ்தூல பஞ்சபூதங்களாக உருவாகக் காரணமாகி இயற்கையின் வெளித்தோன்றல் செயலை பூர்த்தி செய்கிறது.
இயற்கையின் வெளிப்படுத்தப்பட்ட பாகம் இப்போது பலயுக சூரிய ஆண்டுகளில் பரிணமிக்க வேண்டியவைகளுக்காகத் தயாராகி உள்ளது. கால ஓட்டத்தின் விவரமாவது:
• உயிர் ஜனிக்கத் தோதான காலத்தில் பிரபஞ்சத்தை நிரப்பியபடி இருக்கும் உன்னதப் பேருண்மையின் கவரும்விசை இயக்கமானது ஜடஉலகின் உரையை விலக்கி பிராணனைப் புகுத்தி தாவர உலகம் பரிணமிக்க வகை செய்கிறது
• பிராண உறையை விலக்கி மனத்திறன்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டவுடன் எளிய உயிரினங்கள், விலங்குகள் தோன்ற வகை செய்கிறது
• மனஉறை விலக்கி நுண்ணறிவு வெளித்தோன்ற அனுமதிக்கப்படும்போது பகுத்தறிவு மனிதன் தோன்றுகிறான்
• நுண்ணறிவு உறை விலக்கி ஆன்மீகக் குணாதிசயங்கள் வெளியாகும்போது மனமயக்கங்களும் காட்சிப்பிறழ்ச்சிகளும் மறைந்து ஆன்மஞானம் திறவாகிறது
• இறுதி உறை விலகும்போது மூல இயற்கையின் பிடியிலிருந்து ஆன்மா முற்றிலும் விலகி விடுதலையடைகிறது.
தன்னால் தான் இருப்பு எனும் ஆணவபா:வம்தான் மனமயக்கத்திற்குக் காரணம்.
அது தூயதாகும்போது, ஆன்மாவானது நிஜதளத்துடன் உறவாகிச் செயல்பட்டு அதன் தன்னிச்சை பா:வம் மங்கி, தான் ஆன்ம விழிப்புணர்வுடன் இருந்துகொண்டே, தனது ஆணவபா:வம் உலகுடன் தொடர்புகொள்ளத் தேவைப்படும் ஒரு கண்ணோட்டம் என அறிவான்.
“நான் மனோதேக வியக்தி” என ஆன்மவிழிப்புப் பெற்ற மனிதன் நினைக்க மாட்டான். “சர்வவியாபக, சர்வக்ஞ, சர்வசக்தியுடையதுமான முழுமையில் திளைத்திருப்பதும் ஆன இறைவாழ்வின் ஒரு கதிராகிய வியக்த அலகே நான்” என எப்போதும் அவன் அறிந்திருப்பான்.
7.5. (மேற்சொன்ன) இவை என் கீழியற்கை. இது, ஜீவபூதமானதும் பிரபஞ்சத்தைத் தாங்குவதுமான என் மேலியற்கையினின்றும் வேறானது என அறி.
உட்பொருள்:
மேற்சொன்ன இவை, பேருண்மையின் புறவய வெளிப்பாடு. இவைகளை வெளித்தோன்றுகிற இயற்கைகளைத் தாங்குகிற இறைதளத்தினின்றும் வேறென அறி.
உரை:
இறைமையின் மேதகு இயற்கை பிரபஞ்சமாகவும் ஆன்ம அலகுகளாகவும் தன்னை விரித்துக் கொள்கிறது. பிரபஞ்சம் இறைதளத்தின் உள்ளடக்கம் என்றாலும் அதனால் இறைமை பந்திக்கப்படுவதில்லை.
VRGC கருத்து:
Godhead or Oversoul என்பதை ராமகிருஷ்ண உரையாசிரியர் அண்ணா “ஜீவபூதம்” என கூறுகிறார். எனக்கு “இறைச்சிகரம்” மற்றும் “மேதகு ஆத்மா” எனும் வார்த்தைகள் தோன்றுகின்றன.
7.6. இந்த (மேலான) இயற்கையில் அனைத்தும் அவைகளின் மூலத்தைக் கொண்டுள்ளன என அறி. நானே அவைகளின் மூலமும் முடிவும் ஆவேன்.
உட்பொருள்:
இறைமையிடமே அனைத்து ஆத்மாக்களும் அவைகளின் மூலத்தைக் கொண்டுள்ளன என அறி. இறைவன் பிரபஞ்சத்தைப் படைத்து வெளிப்படுச் சுழற்சியின் முடிவில் மூலசாரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார்.
உரை:
இறைதளத்தில் பிரபஞ்சம் உற்பத்தியாவதைப்போலவே, எல்லா ஆத்மாக்களும் உற்பத்தியாகும்போது, இறைவன் தன் விருப்பத்துக்கேற்ப இவைகளைச் செய்கிறார் என துல்லியமாகக் கூறமுடியாது. இறைவனுக்கு மனிதச் சிறுமையை நாம் ஏற்றிச் சிந்திக்கும்போது, அவனும் மனிதனைப் போலவே பந்திக்கப்பட்ட மனதுடன் சிந்திப்பதாகவும், உணர்வதாகவும், செயல்படுவதாகவும் ஒரு பிறழ்பார்வைக் கொள்ளவேண்டியுள்ளது.
பல மதங்களில், இறைவன் என்பவன் அன்பானவனாக, அக்கறையுள்ளவனாக, நீதிமானாக, கண்டிப்பவனாக, வணக்கத்தை வேண்டி ஏற்பவனாக, சில நிவர்த்திப் பலிச்சடங்குகளைக் கட்டளையிட்டுப் பெறுபவனாக சித்தரிக்கப் படுகின்றான். அக்ஞானிகளால் இறைவன் திட்டப்பட்டும், விமர்சிக்கப்பட்டும், அச்சம் கொள்ளப்பட்டும், மன்னிப்பு மற்றும் வரங்கள் கேட்கப்பட்டும், தங்களின் பெற்றோருக்குப் பதிலாக ஒரு மாற்றுப் பெற்றோராக பார்க்கப்பட்டு வந்துள்ளான்.
இறையுண்மை அறியப்படக் கூடியது. ஞானம் பெற்று விழிப்படைதல் நம் தர்மம்.
பரிணாம வெளிப்பாடு ஒரு சுற்று முடிந்து பிரளயம் நடக்கும்போது பிரபஞ்ச வெளிப்பாடுகள் அவற்றின் மூலத்திற்குத் திரும்பி, இன்னொரு சுற்று பரிணாம வெளிப்பாடு தொடங்கும்வரை அவை வெளிப்படாத நிலையில் அசைவற்று இருக்கும். நம் பிரபஞ்சத்தைப் போல் பல பிரபஞ்சங்கள் இதே போல பரிணாம வெளிப்பாடு, பிரளயம் என சுழற்சிகளை அடைந்து கொண்டிருக்கக் கூடும். அவைகளைனுத்துக்கும் இறைவனே மூலம்.
7.7. என்னைக் கடந்த ஒன்று ஏதுமில்லை. நூலில் கோர்க்கப்பட்ட மணிகளாய் இப்பிரபஞ்சம் என்னில் கோர்க்கப்பட்டுள்ளது.
உட்பொருள்:
பேருணர்வுக்கு புறமாய் ஏதுமில்லை. பிரபஞ்சத்தின் எல்லா அம்சங்களும் உன்னதப் பேருணர்வில் பாதுகாக்கப்பட்டு முறைப்படுத்தப் பட்டுள்ளது.
7.8. நான் நீரில் அதன் சாரமும் நீர்மையும் ஆவேன். சந்திர சூரியர்களின் ஒளிச்சுடர் நான்தான். வேதநூல்களில் கூறப்படும் ஓம் புனித ஒலிச்சுருதி ஆவேன். காற்றில் ஒலியும் வாழ்வில் உயிர்மையும் ஆவேன்.
உட்பொருள்:
வெளித்தோன்று இயற்கை, பிரதிபலிக்கும் மற்றும் பிரகாசிக்கும் ஒளிச்சுடர்கள், மூல இயற்கையின் ஓம் மந்திரம் யாவும் சர்வ வியாபகப் பேருணர்வின் சாரமே. அது காற்றில் ஒலியதிர்விலும் வாழ்வின் உயிர்மையிலும் இருக்கிறது.
7.9. மண்வாசனை, அக்னியின் ஒளி, எல்லா வாழ்வினங்களுக்கும் உயிர், புனிதர்களின் புனிதம் நானே.
உட்பொருள்:
வாசனைகளின் சாரம், உருமாற்றும் செயல்களின் புத்தொளி, அனைத்து ஜீவாத்மாக்களின் பிராணன் மற்றும் உணர்வு, தன்னையறியும் முனைப்புள்ளோரின் தூய்மைப்படுத்திக்கொள்ளும் காரியங்கள் யாவும் சர்வ வியாபகப் பேருணர்வின் சாரமே.
7.10. எல்லா உயிர்களின் ஆதிமூலம் நானென அறி. நுண்ணறிவாளர்களின் நுண்ணறிவு, வீரனின் வீரம் நானே.
உட்பொருள்:
உன்னதப் பேருணர்வு எல்லா உயிர்களையும் வெளித்தோன்றச் செய்கிறது. நுண்ணறிவால் செய்யப்படும் விவேகித்த விசாரணை, தேஜஸ் உடையவைகளின் பிரபை ஆகியன உன்னதப் பேருணர்வே.
7.11. பற்றில்லாத பலசாலிகளிடம் நான் பலம். படைப்புகளின் நியாயமான ஆசை நானே.
உட்பொருள்:
பற்றில்லாத பலசாலிகளிடம் உள்ள பலமும், படைப்புகளின் நியாயமான ஆசைகளும் உன்னதப் பேருணர்வே.
உரை:
பலமானது எப்போது அறிவால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், தெளிவான சங்கல்பத்துடனும் இருக்கிறதோ அப்போது அது உன்னதப் பேருணர்வின் சத்வத் தன்மைகளை வெளிப்படுத்தியும் காரியபுஷ்டியாகவும் இருக்கிறது. ஒரு காரணத்தைப் பற்றி எந்த ஒரு துடிப்பாலும் கிளம்பும் ஆசையானது இறைப்பரிணாமத்தை அனுசரித்தால் அந்த ஆசை ஆன்மாவின் அடியாழத்திலிருந்து வந்ததென்பது குறிக்கப்படுகிறது.
7.12. சத்வ, ராஜஸ, தாமஸ நிலைகளிலுள்ள படைப்புகள் அனைத்தும் என்னில் தோன்றியவை என அறி. நான் அவைகளில் இல்லை. அவை என்னிடம் உள்ளன.
உட்பொருள்:
தூயதான, வலிய, அசமந்த நிலை உடைய படைப்புகள் உன்னதப் பேருணர்விலிருந்து தோன்றுகின்றன என அறி. உன்னதப் பேருணர்வு அவைகளின் கட்டுக்குள் இல்லை. பேருணர்வில் அவைகள் உள்ளன.
உரை:
இறைதளத்தில் உள்ள முக்குணக் கட்டுகளால் ஆளப்படுவதுதான் இயற்கையின் வெவ்வேறு நிலைகள். இவைகள் இறைவனில் தோன்றி மூல இயற்கையில் வெளிப்பட்டு பிரபஞ்சமாக ஸ்தூல தோற்றம் பெறுகின்றன. அவையாவும் சர்வ வியாபகப் பேருணர்வு தளத்தின் உள்ளடக்கம்.
7.13. முக்குணக் கூட்டால் ஆன படைப்பு இந்த மூன்று நிலையிருப்பின் மயக்கத்தால், அவைகளைக் கடந்து என்றும் நிலைத்து இருக்கும் என்னை அறிவதில்லை.
உட்பொருள்:
உடல் பெற்ற ஆத்மாக்கள் குணங்களின் செய்கைகளால் கலக்கமுற்று இருப்பதால் சர்வ வியாபகமானதும் காலத்தாலும் குணங்களாலும் பந்திக்கப்படாததுமான பேருணர்வினை அறிவதில்லை.
7.14. முக்குணங்களால் ஆனதும் ஊடுருவ முடியாததுமாக ஆக்கப்பட்டுள்ள இந்த என் மாய உலகம் தெய்வீகமானது. என்னைச் சரணடைந்தவர்களால் மட்டுமே இதனைக் கடக்க முடியும்.
உட்பொருள்:
இறைவனின் ஆக்கசக்தி முக்குணக் கூட்டாலான பிரபஞ்சமாக வெளிப்பாடு அடைகிறது. இயற்கையின் மயக்குவதான ஜாலங்களுக்கு ஒரேயடியாக பலியானவர்களுக்கு அவைகளின் மூலத்தைக் காணுதல் எளிதானதல்ல. ஆனால் கவனக்குவிப்பொருமையுடன் முழுமைக்கான ஞானவிழிப்பால் அது சாத்தியம்.
உரை:
ஒரு பிரச்னை, அதனைத் தோற்றுவித்த அதே உணர்வு மற்றும் காரிய தளத்தில் இருந்துகொண்டு அதனைத் தீர்க்கமுடியாது. உணர்வு மற்றும் காரிய தளங்களால் தோன்றிய மயக்கங்களை அவற்றிற்குத் தோற்றுவாயான தங்களாலேயே களையமுடியாது. புலன்களால் அறியப்படக்கூடியது என்பதால் இவ்வுலகம் ஒரு மாயக்காட்சி அல்ல. நாம் காணுவதும் உணர்வதும் நம் பிறழ்காட்சிக் கோணல்களாலேயே சிதைவுற்று மயக்குகிறது.
7.15. அதர்மிகள், ஆன்மீக விழிப்பற்றவர்கள், குழப்பமும் மயக்கமும் அடைந்தவர்கள், சுயஊட்டப் பற்று கொண்டவர்கள் [உன்னதப் பேருணர்வாகிய] என்னைத் தேடிக்கொள்தில்லை.
உரை:
அதர்மி என்பவன் ஆன்மீக விழிப்பற்று, குழப்பமான சுயஊட்டத்தில் நாட்டம் கொண்டு, தெரிந்தோ தெரியாமலோ, பரிணாமப் படைப்புப் போக்குடன் முரண்படுகிறான். சுயஊட்டத்தில் நாட்டம் உள்ளதால் உயர்ஞானம் பெறும் சங்கல்பமில்லை. ஆயினும், விழிப்பில் நாட்டமுறுத்தும் ஆன்மத் துடிப்பு இறுதியில் வெல்லும்.
7.16. உன்னதப் பேருணர்வாகிய என்னை நான்கு வகையான நன்மக்கள் வணங்குகிறார்கள்: வருத்தப்படுவோர், பொருள்தேடுவோர், ஞானவேட்கையுள்ளோர், ஞானிகள்.
உரை:
ஒழுங்கான நிறைவாழ்வு வேண்டுகிற பல்வேறு மக்கள் அவரவர் தேவைக்கேற்ப அல்லது அவரவர் புரிதலுக்கேற்றவாறு இறைவனை அணுகுகின்றனர்.
• இழப்பு, நோய், தங்களின் நலத்தை மேம்படுத்த விருப்புவோர்
• பொருள் வளம் வேண்டுவோர்
• இறைவனுடனும் உலகத்துடனும் அறிவுபுஷ்டியான உறவு வேண்டுவோர்
• ஒளியூட்டம் மற்றும் ஆன்மவிடுதலையை சித்திப்பதான இறைமை மற்றும் வாழ்வு பற்றிய விரிவான அறிவு,
என நால்வகையினரை அறியலாம்
பேரார்வம் உண்மையானதாகவும் தொடர்ச்சியாகவும் இருந்தால், இறைவனை முதலில் நாட ஏற்பட்ட உந்துதலின் தன்மை அவ்வளவு முக்கியமானதல்ல. திறந்த மனதுடனும் சரணாகத நெஞ்சத்துடனும் முயற்சித்தால் ஆன்மீக வளர்ச்சி நடந்தேறுவது மட்டுமன்றி அவருடைய உள்ளொளியே அவருடைய வழியையும் பிரகாசிப்பிக்கும்.
7.17. இந்நால்வகையினரில் என்றும் இறைமையில் திளைக்கும் ஞானி தனிச்சிறப்புடையவன். என் நேசத்திற்குரியவன் அவனே. அவன் என் மேல் நேசம் கொண்டவன்.
உட்பொருள்:
தன்னுயர்வு மற்றும் உயர்ஞானம் வேண்டுவோரிடையே ஞானஉந்துதல் கொண்டு இறையுணர்வில் நிலைத்த நாட்டம் உள்ளவன் தனிச்சிறப்புடையவன். அவனுடைய பக்திசிரத்தை கருணாமூர்த்தியின் முழுமைக்கு திரும்ப மீட்கும் பணிகளினால் ஈர்க்கப்பட்டு உதவப்படுகிறான்.
உரை:
ஆன்மீக வளர்ச்சியானது
• வேகமான விழிப்புக்கு ஏங்குபவனான
• தார்மீக வாழ்வு வாழத் தலைப்பட்டவனான (அதாவது பரிணாமத் திட்டத்திற்கு உடன்படு வாழ்க்கை)
• நுண்ணறிவுத் திறன்களை வளர்த்துக்கொள்பவனான
• பலனில் பற்றற்று ஆக்கபூர்வ செயலில் ஈடுபடுபவனான
• இறையனுபூதிக்கு தன் சுய ஊட்டவுணர்வினைச் சமர்ப்பித்தவனான
பக்தனுக்கு வேகமாகத்தான் இருக்கும்.
ஆன்மீக முழுமைக்கான வழி என்னவென்றால் தானறிந்த மற்றும் தனக்கு உபயோகமான உயர் இலக்குக்கான பாதையில் ஸ்திரப்படுவது ஆகும். பலர் பலமான தீர்மானத்துடன் தொடங்கினாலும் தன்னாலாகிற காரியமா இது என்பன போன்ற பின்வாங்கு எண்ணம் மற்றும் நடத்தைகளால் அதனை விரைவில் இளகவிட்டு முன்நிலைக்கு மீள்கின்றனர்.
சிலர் எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால் ஆர்வத்துடன் மீண்டும் மீண்டும் தொடங்கினாலும் இடைநிறுத்தம் செய்துவிடுகின்றனர். அல்லது வழிமாறியோ, சோம்பலாலோ, விருப்பம் குறைவதாலோ விட்டுவிடுகின்றனர்.
லட்சிய சாதகன் மற்றும் அவனுடைய உறுதியான சாதகத்தின் பலன்களை பின்வரும் ஸ்லோகங்களில் அறியலாம்.
7.18. இந்நால்வகையினரும் புனிதமானவர்களே என்றாலும், ஞானியாயிருப்பவனை நானாகவே நான் கருதுகிறேன். பக்தியில் உறுதிபெற்ற அவன் என்னில் மகத்தான லட்சியப் பேற்றாகக் கருதி நிலைபெறுகிறான்.
உட்பொருள்:
நோக்கம் எதுவானாலும், ஆன்ம வளர்ச்சிக்கு ஆர்வமுறும் அனைவரும் அவரவர் ஆன்ம தன்மைகளுக்குத் திறவாகுவதான உள்ளார்ந்த முனைவினைத் தணிவிக்கின்றனர். விடுவிக்கும் ஞானத்தினை செயல்படுத்தும் முனைவொருமை உள்ளோர் ஆன்மாவின் தூய சிலிர்ப்பினை நிகழ்சாத்தியமாக்குகின்றனர். அந்த முனைவொருமை நிலைத்ததானால் இறுதி நிலையான ஞானானுபூதிக்கு விழிப்படைகின்றனர்.
7.19. பல ஜென்மங்களுக்குப் பின் பேருணர்வின் முழுமையை அறிந்து ஞானி என்னை அடைகிறான். இறையனுபூதி பெற்ற அத்தகைய உயர்ந்த ஆத்மாவைக் காணுவது அரிது.
உட்பொருள்:
இயற்கையில் பல ஜென்மங்களெடுத்து முடித்தபின், சாதகன் தன்னை விடுவிக்கும் ஞானத்திற்கு சிந்தை வளர்த்தவனாகி, இறையனுபூதியைப் பிற எல்லாக் கடமைகளைக் காட்டிலும் பெரிதென வைத்து, இறைமைக்கு விழிப்படைகிறான். இவ்வுலகில், இறைஞான முழுமைப்பெற்ற ஆன்மாக்கள் அபூர்வம்.
உரை:
ஆன்மா மயக்குற்று இருக்கும் வரை, ஜட இயற்கையுடன் தன்னை அடையாளப்படுத்தி பிறப்பெடுப்பது நடக்கிறது. ஆன்மா தன் சுயரூபம் அறிகையில், தான் உடல்-மன ரூபத்தினின்றும் வேறுபட்டதென கண்டு, இறையுண்மைக்குத் தெளிகிறது. கர்மவினைகளின் மிச்சங்களை தன் நிலையுறுதியினாலும் கர்மவினைகளைக் கழிப்பதான செயல் மற்றும் அனுபவங்களாலும் கரைக்கலாம் அல்லது அதியுணர்வு நிலைகளின் மேலான உதவிகளாலும் கரையும்.
7.20. அறிவுப்பற்றாக்குறையுள்ளோர் ஆசையால் வழிமாறி, பிற தேவதைகளுக்குத் தஞ்சம் புகுந்து, அவர்களின் கீழியற்கையினால் பந்திக்கப்பட்டு பலவேறு மதாச்சாரச் சடங்குகளைச் செய்பவர்களாகி விடுகின்றனர்.
உரை:
குருட்டு விஸ்வாசம் கொண்டு மோகிக்கப்படுவதான
• புகழ், பெயர், செல்வாக்கு,
• வெற்றி, பொருள்வளம், ஜட இயற்கையின் வலிய விசைகள்,
• கற்பித தேவர்கள் மற்றும் தேவதைகள், கற்பித புனிதர்கள்,
• ஆணவ நோக்குள்ள சித்திகள், தியான லயிப்புகள், ஆரம்ப கால உயருணர்வு நிலைகள்,
• முழுமையான அனுபூதிக்குக் குறைவான அனுபவங்கள்
போன்றவைகள் “பிற தேவதைகள்” எனலாம்.
உண்மைத் தேட்டம் நேர்மையானால் இறைப்புரிதல் சிறிதென்றாலும், ஆன்மீக வளர்ச்சியை அனுபவிக்கலாம். அடக்கமும் மரியாதையும் கலந்ததாகவும் உள்ள அனைத்து வழிபாடுகளும் ஆன்மாவை உயர்த்த அவசியம் உதவும். ஆன்மீக வளர்ச்சிக்கு வழி என்னவென்றால், நம்பத்தகுந்த அறிவின் மூலத்தை நாடி, இயன்றவரை உண்மை விவரங்களைத் திரட்டி அவைகளை நடைமுறைப் படுத்துவதே ஆகும். நுண்ணறிவும் ஞானமும் மிக்க ஆசிரியர் கிடைக்குமளவு அதிர்ஷ்டம் இருந்து, ஒரு ஆன்மீக சாதனைப் பாடத்திட்டத்திற்கு இணங்கி, சரியான வாழ்வு மற்றும் பயிற்சி கொண்டிருந்தால், முன்னேற்றம் விரைவாகும்.
7.21. ஒரு சாதகன் என்னை எந்த வடிவத்தில் முழுமனத்துடன் நம்பி வணங்கினாலும், நான் அவனுக்கு ஸ்திரமான சிரத்தையை வழங்குகிறேன்.
உட்பொருள்:
இறைவனை எவ்வடிவத்தில் கற்பிதம் செய்துகொண்டாலும் அல்லது அறிந்து கொண்டாலும், சிரத்தையுடனான பக்தி அவனது ஆன்மாவின் தன்மைகளை விழிப்பாக்கி சர்வ வியாபக இறைப்பரப்பிலிருந்து ஆதரவினை வசீகரித்துத் தருகிறது.
உரை:
இறைவனை அறிய நேர்வழி என்னவென்றால், அவன் மீதான எண்ணம், ஆய்வு மற்றும் தியானம் மேற்கொள்ளுதல் ஆகும். அதுதான் தேர்ந்ததானதாகவும், இறையுண்மையின் தேறிய காட்சியை அனுமதிப்பதான உள்ளுணர்வுத் திறவாதலை ஏற்பதானதாகவும் இருக்கும்.
ஆரம்ப காலத்தில் ஒரு சாதகன், இறைவன் தன்னை போஷித்துப் பாதுகாப்பவர் என்ற ஓர் உறவுநிலையை தான் இறைவனுடன் வைத்துக்கொள்ள விரும்பினால், அதனையே தியான ஒருமைக்கு இலக்காக வைத்துக்கொள்ளலாம். அல்லது இறைவனை சர்வவியாபகப் பேருணர்வுத் தளமாக தியானத்தில் இலக்காக்க முடிந்தால், அவனை விண்ணிறை இருப்பாக, ஒளியாக, ஓம் ஸ்வரமாக, முழுமை நிஜமாகக் கொள்ளலாம்.
ஆதிசங்கரர் அவரது “ஆத்மபோதம்” நூலில் கூறியிருப்பதாவது –
வியக்த உன்னதப் பேருணர்வினை அதாவது ஆன்மாவை, உடல், புலன்கள், மனம், புத்தி, மற்றும் ஒடுங்கிய பஞ்சபூதங்களிலிருந்து வேறுபட்டதென உணர். இந்த பேருணர்வு இவைகளின் செயல்பாடுகளின் சாட்சிபூதமாகவும் ஆட்டுவிப்பதாகவும் உள்ளது. மேகங்கள் நகருகையில் நிலவு நகருவதாகத் தோன்றுவது போல, புலன்களின் சலனத்தால் உன்னதப் பேருணர்வு சலனப்படுவதாகத் தோன்றுகிறது. நீரின் அசைவால் அதில் நிழலாகத் தோன்றும் நிலவும் அசைவது அறியாமையால் அறியப்படுவதுபோல, இன்பநுகர்வுகளும் பந்திக்கப்படுவதாகத் தோன்றுவனவும் இறைப்பேருணர்வுக்கு ஏற்றிப் பார்க்கப்படுகிறது.
இறைப்பேருணர்வின் தன்மைகளாவன:
• சனாதனம்
• தூய்மை
• உண்மை
• விழிப்புணர்வு
• ஆனந்தம்
இது எப்படி என்றால்,
சூரியனுக்குப் பிரகாசம் போலவும் நீருக்குக் குளிர்ச்சி போலவும், நெருப்புக்கு சூடு போலவும் ஆகும்.
இறையனுபவத்திற்கான எந்த ஒரு முயற்சியும், சாதகனின் விழிப்புணர்வை அதனுடன் ஒன்றச் செய்து, இயல்பாக உள்ள ஆனந்தப் பேரலைகளைத் தனக்கு சாதகமாக இழுக்கிறது.
7.22. அந்த சிரத்தையுடன் அவன் வேண்டுவன எல்லாம் என் ஆக்ஞையின்படி உறுதியாகத் தரப்படுகின்றன.
உட்பொருள்:
சிரத்தையுடன் சாதகன் கேட்கும் யாவும் அளிப்பது பேருணர்வின் இயல்பான தன்மை ஆகும்.
உரை:
ஆத்ம திருப்தியில் ஊன்றி, நித்யத்துடனான நம் உறவினை அறிந்தால், இறைநம்பிக்கை எளிதாகும். நம் வாழ்வின் எல்லா படிநிலைகளிலும் இறைமையுடன் உறவாடி வாழ்கிறோம்.
ஆன்மப் படிநிலையில் – இறைப் பேருணர்வின் ஒரு கதிர்
மனப் படிநிலையில் – இறைமனதான பிரபஞ்ச மனதுடன் உறவு வைத்துள்ளோம்
உடல் படிநிலையில் – தொடர் நிகழ்வான பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். அது இயற்கையின் எல்லா அம்சங்களின் விரிவான ஆனால் ஒரங்க வெளிப்பாடுதான்.
வாழ்வோட்ட கதி என்பது தேவைகளைப் பூர்த்தி செய்வதையே தனது வேலையாகக் கொண்டுள்ளதால், நம் வாழ்க்கை அதற்கான லயச்சுற்றுடன் இயைந்து நேர்படும்போது, நம் ஆசைகளும் தேவைகளும் நிறைவேறுகின்றன. வாழ்வூட்டத்திற்கான ஆசைகள் மற்றும் தேவைகள் ஒவ்வொன்றையும் இந்த படைப்பாக்க பரிணாமம் பூர்த்தி செய்ய வல்லதாயிருந்து பூர்த்தி செய்துவிடுமாதலால், நம் ஆன்மீகப் பாதை வெற்றி, ஆன்மீக வளர்ச்சி மற்றும் ஒளியூட்டம் ஆகியனவும் நிச்சயமாக ஈடேற்றம் பெறும்.
ஆன்ம விழிப்பால், நம் தனித்துவம் என்பது மாயத் தன்மை என அறிந்து, அதனை ஊடுருவி அறியும் பார்வையுடன், நாம் ஆன்மீக மண்டலத்தில் வாழ்வதாக அறிகிறோம்.
7.23. புரிதல் புன்மையாய் குறுகலாய் இருக்கும்போது அதனால் பெறும் பலன் தற்காலிகமானது. தேவதைகளை வழிபடுவோர் தேவதைகளையும், என்னை வழிபடுவோர் என்னையும் அடைகின்றனர்.
உட்பொருள்:
சங்கல்பித்து ஆசைப்படுதல் மற்றும் விளைவு விதியின் வேலைக்ரமம் மீதான குறுகிய அறிவு காட்டும் ஆசைகளால் பலன் குறுகியும் விரைவில் மறைவதாகவும் இருக்கும். இயற்கையின் தன்மைகள் மற்றும் வல்லமைகளுடன் குறுகிய கால உறவுகள் வேண்டுவோர் அவ்வுறவுகளை வைத்துக்கொள்ளலாம். இறைச்சமர்ப்பணம் உள்ளோர் இறைமைக்கே விழிப்படைகின்றனர்.
உரை:
நாம் எதன் மீது கவனமாயிருக்கிறோமோ அதனுடன் அடையாளப்படுத்திக் கொள்வதோடல்லாமல் அதனை வசீகரிக்கிறோம். மேம்போக்கான விஷயங்களில் விருப்பம் காண்பித்தால், அதனை அடைந்துவிடலாம், ஆனால் அது திருப்தி தராது, நீடிக்காது. விண்ணக தளங்களிலுள்ள ஆன்மாவுடன் உறவு நாடி அல்லது ஒளியூட்டம் பெற்றவரென நாம் கருதும் ஒருவரோடு உறவு வைத்துக்கொண்டால், கற்பிதப்படுத்தல் மிகுந்து நாம் தெளிவிழப்புக்கு ஆளாவோம். பிரபஞ்ச வலிய சக்திகளுடன் நாம் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால், அவ்வாறே செய்யலாம், ஆனால், இறுதி உண்மை மறைக்கப்பட்டிருக்கும். ஆன்ம அறிவுக்கும் இறையனுபூதிக்கும் பேரார்வமுறும் சாதகன் மட்டுமே நிலையில்லாததை மதிக்காதவனாகி, சுவாபிமான சுயத்தை சரணடையச் செய்து முழுமையான ஒன்றிப்பை அனுபவிக்கிறான்.
7.24. தோன்றுதலற்ற என்னை, சனாதனமானதும் உன்னதமானதுமான என் பரமாத்ம சொரூபத்தை அறியாததினால், மதியீனர் தோன்றுபவனாகக் கருதுகின்றனர்.
உட்பொருள்:
முழுமை எப்போதும் உள்ளபடியே அதன் தன்மையில் இருந்தாலும், முழு உண்மை அறியாச் சாதகர்கள் வரம்பற்ற இருப்பும் மாறுபாடற்றதுமாகிய நித்யத்தை, தோற்றம் கொண்டு வெளியாகுவதாகக் கருதுகின்றனர். பிரபஞ்சம் என்பது தூய இருப்புப் பெருவெளியில் தோன்றுவதான பேரண்ட சக்திகளின் பிம்ப ஜோடனையே ஆகும்.
7.25. மூல இயற்கையின் வெளிப்பாடான என் மாயையால் மூடப்பட்டு அனைவராலும் நான் காணப்படுவதில்லை. உலகத்தின் மயக்குறு மக்கள் பிறவாத நித்யப் பேருண்மையான என்னை அறிவதில்லை.
உட்பொருள்:
முக்குணச் செயல்பாட்டால் தடுக்கப்பட்டு, பார்க்கத் திறமையற்றவர்களால் முழுமையை அறிய முடிவதில்லை. விழிப்புணர்வுக் கலக்கமுற்றவர்கள் முழுமையை நித்யமானதென அறிவதில்லை.
7.26. கடந்த, நிகழ், வருங்காலத்தை நான் அறிவேன், [ஆன்ம விழிப்பற்றவர்கள்] யாரும் என்னை அறிவதில்லை.
உட்பொருள்:
முழுமை அதன் ஆன்ம வியக்த வெளிப்பாடு எனும் அந்தஸ்த்தில் கடந்த, நிகழ், மற்றும் வருங்காலங்களை அறிகிறது. ஆனால் மயக்குறு ஆன்மாக்கள் முழுமையை உள்ளவாறு அறிவதில்லை.
7.27 பிறப்பில் எல்லா படைப்புகளும் விருப்பு விருப்பின்மையால் தோன்றுவதான நுண்ணறிவுப் பிழையால் மயக்குறும்.
உட்பொருள்:
எல்லா ஆன்மாக்களும் உடலெடுக்கும் போது நிஜமான சுயப் பிரக்ஞையற்று மனம் மற்றும் ஜட வஸ்துவுடன் தவறாக இணைத்துப் பார்த்து சுயஊட்ட உணர்வுக்கு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.
உரை:
ஜடத்துடனான ஆன்மாவின் முதல் தொடர்பினை அதனுடைய "முதல் பிறப்பு" எனலாம். தன் இருப்புக்குத் தானே ஆதாரம் எனும் தவறான புரிதலால் அது மனதுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு ஓர் உடலில் பிறக்கிறது. இதனைத்தான் அது வாழ்வதின்மூலம் புரிந்துகொண்டு களையவேண்டியுள்ளது. பிற பிறப்புக்களும் இறப்புக்களும் அவ்வளவு முக்கியமல்ல. ஏனென்றால், ஸ்தூல மட்டத்திலுள்ள ஆன்மாக்களுக்கு ஸ்தூல மற்றும் சூட்சும தளங்களுக்கிடையே போக்குவரவும், ஆன்ம வளர்ச்சியில் உயர்மட்டத்திலுள்ள ஆன்மாக்களுக்கு சூட்சும மற்றும் காரண தளங்களுக்கிடையே போக்குவரவுமாக ஒரு பரிவர்த்த காரியமாக மட்டுமே இயங்குகின்றன. இது ஆன்மா ஒளியூட்டம் பெறும்வரை தொடர்ந்து நடைபெறும்.
இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. ஒளியூட்டம் பெற்ற ஆன்மாக்கள் ஒரு காரணம் கருதி படைப்புக் காரியம் தொடர்பான அவதாரம் எடுக்கும்போது மட்டும் இந்த முறைவைப்பு மாறுதலுறும். அப்படியென்றாலும் இவ்வான்மாக்கள், சிறிதளவு தெளியாநிலையினை ஆரம்பத்தில் காட்டினாலும் அவர்களின் வயது கூடுகையில் மறைந்து தங்களின் கடமையினை ஈடேற்றுகின்றனர்.
7.28. தூய செய்கையும் பிழையற்றவர்களுமாகிய சாதகர்கள் துவந்த (இருமை) மயக்கங்களிலிருந்து விடுதலையுற்றவர்களாய் உறுதிச்சிரத்தையுடன் என்னைக் கொண்டாடுகிறார்கள்.
உட்பொருள்:
ஆனால் தங்களின் உள்ளக்கிடக்கையை ஆதரிப்பு வாழ்சூழலுடன் ஒருமித்தவர்களாக்கி சிந்தையாலும் செயலாலும் தவறிழைக்காத சாதகர்கள், தவறான நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, சீரிய சிந்தைக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாய் தெய்வீகமானதையெல்லாம் கௌரவித்து, இறையனுபூதிக்குத் தங்களின் சுயஊட்ட உணர்வுகளைச் சமர்ப்பிக்கிறார்கள்.
7.29. என்னைச் சார்ந்தவர்கள், மூப்பு மற்றும் மரணத்திற்கு விலக்குக் கோருபவர்களாகி முழுமையையும் உன்னதப் பேருணர்வினையும் (அத்யாத்மம்) அவர்களின் எல்லாச் செயல்களிலும் அறிகிறார்கள்.
உட்பொருள்:
இறைவனை அறியும் ஆர்வத்துடன், சமாதி யோகம் ஆசரித்து, சுயஊட்ட உணர்வுகளுக்கும் உடலெடுத்த பிறவிக்கும் தொடர்புடையதான மூப்பு, மரணம், மற்றும் பிற உபாதைகளை அறிந்து விடுபட ஆர்வம் கொண்டு, வரம்பற்ற இறையுண்மைக்கும், தங்களின் எல்லா செயல்களிலும் இறைமையைக் காணும் விழிப்பும் பெறுகிறார்கள்.
7.30. ஜட மண்டலங்களையும் (அதிபூதம்), தெய்வ மண்டலங்களையும் (அதிதெய்வம்) எல்லாப் புனிதக் கொடைகளையும் (அதியக்ஞம்) ஆள்பவனாக என்னை அறிந்தவர்களே, அவர்கள் இறக்கும் தறுவாயிலும் பிசிறற்ற மன ஒருமையுடன் உண்மையில் என்னை அறிகிறார்கள்.
உட்பொருள்:
ஜட மற்றும் புலனறியா மண்டலங்களில் நடப்பவைகள் அனைத்துக்கும், வாழ்வூட்டுவதான செயல்களுக்கும் இறைமைதான் நியம அதிகாரம் உடையது என அறிந்த சாதகர்களே, தங்களின் பிறவி மாறாட்ட காலத்தில் அதுவரை அடைந்த ஞானத்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள்.
உரை:
ஆன்மீக விழிப்புப் பெற்ற ஆன்மாவுக்கு, இறைமைதான் வரம்பற்ற இருப்பு, உயிர்ப்பூட்டி, அதிகாரி, வெளிப்படு வஸ்து, பிரபஞ்சத்தின் புனிதக் கொடைகளான வளர்சிதை மாற்றச் செயல்கள் என தெளிவாகத் தெரிகிறது. அத்தகைய ஆன்மா இதனை அறிந்து அமைதியான சுதந்திரமான இகவாழ்வு வாழ்கிறது. பிறவி மாறும்போது, புறச்சூழல்களிலிருந்து, உடல் மற்றும் மனதிடமிருந்து அறிவைத் திருப்பி, அந்த ஆன்மா வரம்பற்ற யோகக்காட்சிகளுக்கும் ஒருமையுணர்வுக்கும் முழுவதும் விழிப்படைகிறது.
முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், ஞான விக்ஞான யோகம் என மூலத்திலும், விவேகித்த விசாரணை மற்றும் ஞானானுபூதி யோகம்
என இவ்வுரையிலும் தலைப்பிடப்பட்ட 7 ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.
Post a Comment