W24. என் குருநாதர் (Whispers from Eternity - Tamil & English)
24. என் குருநாதர்
என் வாழ்வின் ஒளியே - நீங்கள் என் ஆன்ம பாதையை ஞானசுடரால் ஒளிர்விக்க வந்துள்ளீர்கள். பலநூற்றாண்டுகளாகப் படிந்துகிடந்த இருள் உங்கள் ஒளிப்பிரகாசத்தின் அருளால் மறைந்து போயின.
சிறுவயதில், நான் தெய்வத்தாய்க்காக ஏங்கி அழுததின் பயன் அவள் என் குருவாய் - சுவாமி யுக்தேஸ்வராய் [பரமஹம்ஸ யோகானந்தராய்] - வடிவெடுத்து என்னை அணுகினாள். என் குருநாதரே, அச்சந்திப்பின் போது ஒரு ஒளிக்கீற்று உங்களிடமிருந்து வெளிப்பட்டு, பிறவிதோறும் கடவுளுக்காக ஏங்கிய என் தாபங்களை உருக்கி, ஆனந்தச்சுடராய்ப் பரிமளித்தது. என் எல்லா கேள்விகளும் அந்த சுடரும் பொன்மய ஸ்பரிசத்தில் விடைபெற்றன. உங்கள் அருளால் நிலையான, நிரந்தர திருப்தி என்னில் குடிபுகுந்தது.
கடவுளின் குரலாய் ஒலிக்கும் என் குருதேவரே, உங்களைக் கண்டது என் ஆன்மதாபங்களின் பயனே. என் துன்பகர உறக்கம் ஒழிந்தது, நான் எல்லையில்லா ஆனந்தத்தில் விழிப்படைந்து விட்டேன்.
எல்லா தேவர்கள் என்மேல் குறைகாணிணும் பரவாயில்லை, உங்கள் மகிழ்ச்சி ஒன்றே எனக்குப் போதும், நான் உங்கள் திருப்தியெனும் கோட்டையில் பத்திரமாய் இருப்பேன். மாறாக, எல்லா தேவர்களும் என்னை அவர்கள் ஆசீர்வாத வரங்களினால் காக்கினும், உங்கள் அருளாசி எனக்கு கிட்டவில்லையெனில், நான் ஒரு அனாதையாய், உங்கள் ஆன்ம அதிருப்தியெனும் பாழடைந்த இடுபாடுகளில் அலைந்து உழல்வேன். ஏ குருநாதரே, நீங்கள் என்னை அடியில்லாத புதைகுழி இருளிலிருந்து மீட்டு சாந்தி சொர்க்கத்தில் புகுவித்தீர்கள்.
நம் உள்ளங்கள் வெகுகாலம் பொறுத்து சந்திக்கின்றன. அவை இப்போது எங்கும்நிறை பூரிப்பினால் நம்முள்ளே அதிர்கிறது. நாம் முன்னர் சந்தித்துள்ளோம், அதனால் தான் இங்கு சந்தித்திருக்கின்றோம்.
நாம் இருவரும் இணைந்து கடவுளின் தீரத்திற்கு பறந்து செல்வோம். அங்கு நம் குறுகிய விமானங்களை முழுதுமாய் சுவடு தெரியாமல் நொறுக்கி அழித்து, நம் எல்லையற்ற வாழ்வினில் கலந்து மறைவோம்.
அமைதியான கடவுளின் பேசும் குரலாயுள்ள உங்களை என் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். முக்திக் கோயிலின் தெய்வ வாசலாய் இருக்கும் உங்களை என்றும் தலை வணங்குகிறேன். உங்களையும், உங்கள் குருநாதர் - யோகா அவதாரமாய் தோன்றிய லாஹிரி மஹாசாயரையும் நான் மறவாமல் தலைவணங்குகின்றேன்; என் பக்தி மலர்களை நம் மாபெரும் குருவான மஹாவதார் பாபாஜி பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
24 My Guru
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org