12. பக்தி யோகம் - பகவத்கீதை - The Eternal Way
பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).
பகவத் கீதை பன்னிரண்டாம் அத்தியாயம்
12. பக்தி யோகம்
விழிப்புற்ற ஆன்மா, அடிப்படைத் தத்துவ அறிவையும், இறைமையின் வரம்பற்ற இருப்புண்மையின் விளக்கத்தையும் ஓரளவிற்குப் பெற்றபின்னர், ஆன்மாக்கள் அனைத்திலும் பூர்வாங்கமாய்ப் பொதிந்துள்ள ஆற்றலுக்குத் திறவாகி அணுகவும், முழு உண்மையின் அனுபூதி பெறவும் மிகப் பொருத்தமான வழிமுறையினை விசாரிக்கிறது.
அர்ஜுனன் வினவியது:
12.1. உன் பக்தர்களில் நிலைத்த பக்தியுடன் உன்னை உபாசிப்பவர்கள் சிறந்தவர்களா? அல்லது பூரணத்தை உபாசிப்பவர்கள் சிறந்தவர்களா? இவர்களில் எவர் யோக அறிவில் சிறந்தவர்கள்?
உட்பொருள்:
நிலைத்த பக்தியுடன் இறைமையை உபாசித்தல், தூயப் பேருணர்வு தளத்தினை மனமொருமித்து தியானித்தல் எனும் இவ்விரண்டில் எது ஆன்ம வளர்ச்சிப் போக்கிலும் சமாதி அனுபவத்திலும் உயர்ஞானம் உடையது?
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதில் கூறியது:
12.2. என் பக்தசீலர்களாக நான் கருதுவது யாரை என்றால், யார் அதி உத்தம நம்பிக்கையும் பற்றுறுதியான மனஒருமையும் கொண்டு சலனமற்ற பக்தி சிரத்தையுடன் உபாசிக்கிறார்களோ அவர்களையே.
உட்பொருள்:
யார் இறைமையை அறிவதில் முழுமனத்துடனான பேரார்வம் கொண்டு, ஆன்மீகப் பயிற்சிகளால் தன் சுய ஊட்ட உணர்வை சரணடைவித்து இறையுணர்வை அனுபவிக்கிறார்களோ, அவர்களே இறைமையின் உண்மை உபாசகர்களாக அங்கீகரிக்கப் படுகிறார்கள்.
உரை:
பக்தியால் மட்டுமே ஒருவன் இறைமையை அறியமுடியும். இதற்கு வேண்டுவது சாதகனின் இறையுணர்வு பெறுவதற்கான உண்மையான ஏக்கம்; மற்றும், அவன் தன் தவறான நம்பிக்கைகளையும் இறைமை பற்றிய கற்பனைப் புரிதல்களையும் துறத்தல் வேண்டும், அதன்மூலம் ஆன்மீக வளர்ச்சி தன்னிச்சையாக மலரும்.
இறைவனைத் தள்ளிவைத்துச் செய்யும் அன்பு, அதாவது,
• சுய ஊட்ட உணர்வில் இருத்தல்
• இறைமை என்பது ஆன்மாவிலிருந்தும் பிரிந்து வெளியில் பிறிதொன்றாக இருப்பதாக எண்ணுதல்.
ஆகியன ஆன்மீக வளர்ச்சிக்கான உணர்வளவு பக்குவப்படுத்தல்களுக்குப் போதாது.
ஒருவனின் ஆழ்ந்த சுயத்திலிருந்து இறையனுபூதியும் இறையறிவும் தானாக திறவாகத் தகுந்த பூரண சமர்ப்பணம் ஒருவனுக்குத் தேவை. மனச்சுத்திக்கான பயிற்சிகள் மற்றும் அதீத உணர்வு நிலைகள் திறவாகச் செய்யப்படும் சங்கல்பித்த ஆன்மீகப் பயிற்சிகள் பக்தியுடன் கூட்டு சேரும்போது ஆன்மீக வளர்ச்சி விரைவாகிறது.
12.3. அழியாத, அருவமான, அவ்யக்தமான, நினைவிற்கு எட்டாத, மாறாத, அசையாத, நித்யமான, சர்வ வியாபக இருப்புண்மையை அனுசந்தானம் செய்துகொண்டு,
12.4. புலனடக்கிய, ஆசாபாசமற்ற, சகல படைப்புகளின் நலம் நாடுகிற யாரும் என்னையே அடைகிறார்கள்.
உட்பொருள்:
பூரண, தூயப் பேருண்மையின் களத்தை அறியும் பேரார்வம் கொண்டு புலனடக்கிய, சமபாவனையான மனம் கொண்டு, அனைத்துப் படைப்பின் உயர்நலம் நாடும் யாரும் இறைமையை உணர்கிறார்கள்.
உரை:
இறைமையின் பல்வேறு தன்மைகளுக்கு பக்திபூர்வமான ஈடுபாடு போல பூரணத்திற்கு அனுபூதமானவதும் சாத்தியமே.
இறையுணர்வு கொள்வதென்பதில் நம் அணுகுமுறையானது,
• மனோவியல் சுபாவங்கள் மற்றும்
• விவேகித்த விசாரணை மீதான நம் திறமை
ஆகியனவற்றைப் பொருத்தது.
பக்க சார்பில்லாத அணுகுமுறை எதுவென்றால், இறைமைக்கு - அதாவது எந்தளவு நமக்கு இறைப் பிரசன்னம் விளக்கமாகின்றதோ அந்தளவிற்கு - பக்திபூர்வமாவதுடன், இறைமையின் மிகப் பரிசுத்தத் தன்மையான அறிவைப் பெற்று அனுபூதமாவதற்காக பேரார்வம் கொள்ளுதலும் ஆகும்.
• சரணாகத பக்தி,
• ஆக்கபூர்வ வாழ்க்கை மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளால் ஆதரிக்கப்பட்ட
• இறைமையின் மூல நிஜத்தினை பிரதிபலிக்கும் உள்ளொளியுடனான நோக்கு,
ஆகியன விரைவில் முழுமைக்கு மீள்வதற்கும் விழிப்பாவதற்கும் சாதகமாக்கும்.
12.5. உடலுணர்வு மிக்கவர்களுக்கு எளிதில் அனுபவமாகாததால், பூரணத்தை தியானிப்பவர்கள் அதிக அல்லலுக்குள்ளாகிறார்கள்.
உரை:
இறைமையுடனான உறவில் தாங்கள் தனித்தியங்கும் சுய வியக்தம் எனும் தவறான கற்பித உணர்வு உள்ளவர்களுக்கு, எந்த குணத்தையும் தன்மைகளையும் கலக்காமல் இருக்கும் நிர்க்குணத் தூய ஆன்மாவின் இருப்புவெளியை அறிவதென்பது கடினமாகத்தான் இருக்கும்.
பக்தியும் யோகப் பயிற்சியும் நுண்ணறிவு மற்றும் உள்ளுணர்வு விசாரணைகளுடன் கூட்டுபலம் பெற்ற பெரும்பாலான சாதகர்களுக்கு, (தூய ஆன்மாவின் இருப்பு வெளியை உள்ளவாறு) அறிவதும் அனுபவமாவதும் சற்று எளிதுதான்.
பக்தி கலவாத ஞானத்தேட்டம் உள்ளோர், இறைமையை அறியும் அவர்களின் தீர்மானத்தைச் சரியாகப் பராமரிக்கத் தகுந்த பேரார்வ பின்புலத்தைப்ப பெற்றிருப்பதில்லை. அல்லது இறைமையின் ஒரு பாகத்தை அறியவரப் பெற்று தங்களுக்குப் பூரணம் சித்தித்ததாகத் தவறாகக் கணக்கிட்டுவிடுகின்றனர். முழுப் புரிதல் இல்லாத காரணத்தால், அரைகுறை ஞானத்தின் கர்வசிந்தனையால் ஒழுக்கவாதிகளாகவோ ஒழுக்க வெறியாளர்களாகவோ ஆகிவிடுகின்றனர்.
பூரண இருப்புண்மையினை அறியவும் அனுபவிக்கவும் நேரடியான வழி என்னவென்றால், “நான் யார் அல்லது என்ன?” எனும் தியானமும், “இறைவன் என்பவன் யார் அல்லது இறைமை என்பதுதான் என்ன?” எனும் தியானமும் பழகுவதுதான்.
தான் யார் எனத் தான் புத்தியால் அறிந்தவாறு உள்ள எதுவும் தன்னை உண்மையில் விவரிப்பதல்ல. அதுபோலவே, இறைமையை யார் அல்லது என்ன எனத் தான் புத்தியால் அறிந்தவாறு உள்ள எதுவும் இறைமையை உண்மையில் விவரிப்பதல்ல. இக் கற்பிதங்களையெல்லாம் ஜீரணிக்கவிட்டு ஆன்ம ஞானமும் இறைஞானமும் அனுபூதியாக விடவேண்டும். இதற்குப் பலவந்தம் தேவையில்லை. உண்மை எதுவென அறிவதில், சுயப் பிரகடனம் ஆகும் வரை சாத்வீக ஆன்மவிசாரணை மேற்கொள்ளுதல்தான் செய்யவேண்டியது.
பேருண்மை அறிவானது பேருண்மையின் பூர்வாங்கமான ஒன்றுதான். இறையொளியின் பிரதிபலிக்கப்பட்ட அலகுதான் நாம் எல்லாம். எனவே, இறைமையறிவோ அதன் உள்ளும் புறமுமான வியாபகத் தன்மையின் அறிவோ நம்மிடம் பூர்வாங்கமாக உள்ளதுதான். இதனைத்தான் திறவாகவிட்டு, முழுவதும் அறிந்து நடப்புச் சாத்தியம் ஆக்கவேண்டும்.
12.6. தம் எல்லா செயல்களையும் எனக்கே அர்ப்பணித்து, போற்றுதலுக்குரிய முதன்மைப் பொருளாக யார் என்னைக் கருதுகிறார்களோ, சலனமற்ற யோகப்பயிற்சி மேற்கொண்டு
12.7. மனத்தை ஒருமுகமாக்கி என்னில் லயிப்பித்த அவர்களை விரைவில் ஜனன மரணச் பெருங்கடலிலிருந்து விடுவிக்கிறேன்.
உட்பொருள்:
இறைமையில் எல்லா செயல்களையும் அர்ப்பணிப்பவன், லயிப்புச் சமாதியை நல்குவதான தியானத்தை மேற்கொள்பவன் இறைக் கருணையால் விடுதலையை விரைவில் அனுபவிக்கிறான்.
உரை:
"ஜனன மரணப் பெருங்கடல்" என்பது, ஆன்ம விழிப்பற்ற ஆன்மாக்கள் வாழும் தளமான இயற்கையின் வெளித்தோன்று தளமே. புலனாகா மண்டலங்களை மனங்கொள்ளமுடியாமல் அவரவர் புரிதல் எதனைப் பிடித்துக் கொண்டிருக்கிறதோ, அதற்கேற்ப இயற்கையில் பொருந்தி செயல்படுவர். உயர் அறிவு மீதான நிலைத்த பேரார்வத்தாலும் சுய பாலனத்தைத் தரக்கூடிய ஒழுக்கங்களைக் கடைபிடிப்பதாலும், மனங்கடந்த அதீத நிலைகளுக்கு சகஜபூதனாவதாலும், "எல்லாவற்றையும் நிர்மூலமாக்குவது மரணம்" எனும் கனவிலிருந்து இறையனுபூதியால் விழிப்படைகின்றனர்.
12.8. என்னையே பூரணனாகத் தியானித்து என் மேல் மனம் நிலைக்கச் செய். இவ்வாறு, இனி நீ எப்போதும் என்னில் வாழ்வாய். இதில் ஐயமேதும் இல்லை.
உட்பொருள்:
இறைமையின் மீதான பிரத்யேக மனமொருமித்தல் செய்துகொண்டே இருக்கவேண்டும். நீ எப்போதும் இறைமையில் வாழ்வதாக உணருவாய். இது சத்தியம்.
உரை:
ஆரம்பகால அப்பியாசிகள் தங்களின் மனமொருப்பிற்கு உசிதமான ஒரு பொருளையோ கருத்தையோ இலக்காக வைத்துக் கொள்ளலாம். வேண்டிய திறன் வளர்த்துக் கொண்டுவிட்டால், பின் இறைமை மீதுதான் கவனம் செலுத்தல் வேண்டும். பூர்வாங்கப் பயிற்சிகளாக பிரார்த்தனை, மந்திரம், பிராணாயாமம், ஓம் ஸ்வரம் மீதான கவனக்குவிப்பு ஆகியன செய்யலாம். பின்னர், இறைமையின் மிகச் சிறந்த குணங்களுள், தங்களுக்கு எட்டியதில் மனம் செலுத்தி, “இந்த இறையனுபவம்தான் என்ன?” எனும் கேள்வியும், “நிர்க்குண பூரணம் என்பதின் அனுபவம்தான் என்ன?” எனும் கேள்வியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
தியானம் செய்யாத போது, இறையுணர்வில் எப்போதும் இருந்து கொண்டே, இறைமைக்கும் நமக்குமுள்ள சம்பந்தத்தையும், இறைமையின் உண்மைத் தன்மையையும் சிந்தனை செய்யவேண்டும். இவ்விதம், இறைமையின் சான்னித்தியத்திற்கு விழிப்புடன் இருத்தல் எனும் திறமை சீராக நிலைத்துவிடும். சாதகனின் விழிப்புப் பரப்பில் உள்காட்சி அறிவுணர்வு தோன்றும். ஆதலால், இறையுணர்வில் வாழ்வதென்பதே போதும் என அப்போது அறிவுக்கு எட்டும்.
12.9. என்னில் தொடர்ந்து லயிக்க உன்னால் முடியாத பட்சத்தில், நிலைத்த யோகப் பயிற்சியினை மேற்கொண்டு என்னை உணர முயற்சி செய்.
உட்பொருள்:
நீ சமாதியில் நிலைத்திருக்க முடியாவிடில், ஆன்மீகப் பயிற்சிகளாலும் அடிக்கடி சமாதி அனுபவம் கொள்வதாலும் இறையுணர்வுக்கு விழிப்படைய முயற்சி செய்.
உரை:
இறை விழிப்பினை ஒரே தாரையாக இடையறாமல் ஒழுகவிடும் அனுபவமாவது சாத்தியமாகாதிருக்கும்போது, சாதகன் செய்ய வேண்டுவன.
• ஆக்க பூர்வ வாழ்க்கை
• அகத்தாய்வு
• இறைமை மற்றும் ஆன்மீகப் பாதை பற்றிய கிரந்த வாசிப்பு
• இடைவிடாத தியானப் பயிற்சியும் சமாதி நிலை அனுபவங்களும்
• இறைமை அறிவு அடைய தீர்மானகரமான முனைவும், அதற்கான அறவாழ்வும், அர்ப்பணித்த ஆன்மீகப் பயிற்சியும்.
உணர்ச்சிகளை நிர்வகிப்பதில் மனப்பக்குவத்தினைப் பெறும் விருப்பம் மிக முக்கியம். அதாவது,
• எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் நடத்தைகளுக்குப் பொறுப்பேற்றல்
• இறைமை அறிவு பற்றிய உண்மை விளங்க, வாழ்வின் நிஜத்தின் மையத்தினை பார்க்கும் பக்குவத்தைப் பெறுவது.
12.10. யோகப் பயிற்சிகளையும் உன்னால் செய்ய முடியாவிடில், எல்லா செயல்களையும் எனக்கே அர்ப்பணித்துப் பணிவிடை செய்வதால் நீ முழுமை அடைவாய்.
உட்பொருள்:
சமாதிப் பயிற்சிகளையும் உன்னால் செய்ய முடியாவிடில், பரிணாம ஆதரிப்புச் செயல்களால் பணிவிடை செய்து ஞான விழிப்புணர்வு பெறலாம்.
உரை:
அதீத உணர்வுகள் உடனடியாக அனுபவமாகாவிட்டால், ஆன்மீகப் பாதைக்கு அர்ப்பணம் செய்வதானது சீரொழுங்குச் சிந்தனைகளையும் சூழலையும் ஆதரிக்கும் அறவாழ்வால் உறுதியாகும். ஒளியுணர்வு பெற்ற பின்தான்ஆக்க பூர்வ வாழ்வினை வாழ வேண்டுமென்பதில்லை. அறவாழ்வு அறிவு ஊட்டப்பட்டுவிட்டால், பின் அவ்வாறு வாழ்வதா அல்லவா என்பது ஒரு தேர்ந்தெடுப்பு காரியம்தான். மனமாற்றம் பின்னர் தோதாகி, ஆன்ம திறவாதலுக்கான உடலளவு மற்றும் மனதளவு நிர்ப்பந்தங்கள் விலகி, உணர்வறிந்து வாழக் கற்கிறோம்.
இதற்கு, நம் ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு ஆசையும், ஒவ்வொரு உணர்ச்சி நிலையும், ஒவ்வொரு உறவும், ஒவ்வொரு வழக்கமான நடத்தையும், ஒவ்வொரு செயலும் பிறர் நலனுக்காகவும் பிரபஞ்ச நலனுக்காகவும் ஓர் அர்ப்பணிப்பு பாவனையுடன் செய்யவேண்டும். சுய ஊட்ட நோக்கமற்று எதனையும் செயயவேண்டும். நம் நற்பணிகளுக்கு பாராட்டு கிடைக்கும் எண்ணம் நமக்கு இருக்கவேண்டியதில்லை. நாம் நல்லவிதமாக வாழ்ந்தால், அது சனாதன தர்மத்திற்கு இசைவானது என்பதால், அதுவே நமக்கு வாய்த்த நித்ய இறையாசி.
12.11. உன்னால் இதையும் செய்ய முடியாதென்றால், என் மீதான பக்திதான் உனக்கு புகலிடம். சுய ஒழுக்கமுள்ளவனாகி கர்மங்களின் பலனை விட்டவனாகு.
உட்பொருள்:
உன்னால் இதுவும் முடியாதென்றால், உனக்குப் புரிந்தவரையிலான இறைபக்தி கொள். செய்கைகளின் பலன்கள் மீதான ஒட்டுதலின்றி சீரொழுங்கு வாழ்க்கை வாழ்.
உரை:
ஆக்கபூர்வ செயல்களும் செய்ய முடியாதபோது. சாதகன், அவனறிந்த உயர் இலக்குக்கு வாழ்பவனாகி, காரியங்களின் விளைவுகளின் மேலான பதட்டத்தை விட்டு இறைபக்தி மேற்கொள்ள வேண்டும். சாதகமான சூழல் வாய்த்து முன்னுந்தும் ஆன்மீக வளர்ச்சி இயல்பாக நடக்கும். அப்பட்டமான நம்பிக்கையும் சரணாகத வாழ்வும் நிறைய புனிதர்களை உருவாக்கியிருக்கின்றன -- அதாவது எவர்கள் வழியே தெய்வீகக் குணங்கள் வெளிப்படுகின்றனவோ அவர்கள். ஒருவன் தன் உயர் அறிவுக்கு வாழ நேர்மையுடன் முயலவேண்டும். இதனால் ஆன்மீக வளர்ச்சி ஊக்கப்படுத்தப்படுகிறது.
12.12. பயிற்சியை விட அறிவு மேலானது, அறிவை விட தியானம் மேல், தியானத்தை விட கர்மவிளைவில் பற்று விடுவது, மேலானது. அமைதி துறவினைத் தொடர்ந்து உடனே பரிமளிக்கின்றது.
உட்பொருள்:
இறைமை மீதான ஓரளவு அறிவு என்பது அவ்வறிவினை அடையும் பயிற்சியினைக் காட்டிலும் மேலானது. ஓரளவு அறிவினைக் காட்டிலும் இறைமையின் நேரடி அனுபவத்தைத் தரும் தியானம் மேலானது. ஆன்மீகப் பயிற்சி தரும் மாயத் தோற்றங்களுக்குப் பலியாகாமல் அதன் அனைத்து விளைவுகளையும் விடும் துறவு என்பது மிக மேலானது. ஏனெனில் அது ஆன்ம அமைதியைத் தருகிறது.
உரை:
இறைமை அறிவானது கிரந்த வாசிப்பினாலும் அதில் பெற்ற அறிவினை அனுபவத்தில் நடத்திப் பார்த்தும் உண்மை இறைத் தன்மை மீது மனமொருத்தலாலும் அடையலாம். இறைத் தன்மை மீது மனமொருமையை தியானம் மூலம் அடையலாம். தியானத்தின் மூலம் அமைதி சித்தித்துவிட்டால் பின் அதற்கு மேலான திறவாதல்கள் தானாக நடக்கும். திறவாதலில் அடையப்படும் யோகக் காட்சிகளைப் பலமாகப் பற்றிக்கொண்டிருக்கக் கூடாது; தியானத்தில் பழகப் பழகக் கிடைக்கும் உயர் யோகசித்திகளை பருநிலையிலிருந்து நுண் நிலை வரை மற்றும் அதிலிருந்து இறுதி நிலை வரை அவைகள் வரும் தரத்தில் உற்று நோக்கி உணரவேண்டும்.
12.13. எந்த யோகாப்பியாசி,
அ. எவர் மீதும் தீய எண்ணமற்றவனோ
ஆ. எல்லோரிடமும் நட்புடனும் அன்புடனும் இருப்பவனோ,
இ. பொருட் பற்றில்லாதவனோ,
ஈ. ராஜஸ குணமற்றவனோ
உ. இனிய மற்றும் கசப்பான அனுபவங்களுக்குள் ஈடுபாடற்றவனோ,
ஊ. பொறுமையுடையவனோ,
உரை:
இந்த ஸ்லோகம்,
• நற்குணங்களைக் கருத்தூன்றி வளர்ப்பதாலும்
• அறவாழ்வு வாழ்வதாலும்
• யோகமார்க்கங்களை அர்ப்பணபுத்தியுடன் செய்வதாலும்
விளையும் சுயத்தை ஆளும் வலிமையும் நிலைத்த அறிவும் கலந்ததான மனோ ஆன்மீக நிலைமைகளை விவரிக்கிறது.
12.14. எந்த யோகாப்பியாசி, திருப்தனாயும், நிச்சலன மனத்தினனாயும், சுய கட்டுப்பாடு உள்ளவனாயும், பற்றுறுதி உள்ளவனாயும், என்னில் தன் மனதையும் நுண்ணறிவையும் பதித்தவனாயும், என் மேல் பக்திமயனாயும் உள்ளவன் எனக்குப் பிரியமானவன்.
உட்பொருள்:
எந்த யோகசமாதி அப்பியாசி, திருப்தியுடன் அமைதியாய், சுய கட்டுப்பாடு உள்ளவனாய், பற்றுறுதி உள்ளவனாய், இறைமையில் நினைவும் விவேக முடுக்கமும் வைத்தவனாய், இறைமை மேல் பக்தியாய் உள்ளவனாய் இருக்கின்றானோ அவன் அந்த இறை சான்னித்தியத்தை அவ்வளவு அனுபவிக்கிறான்.
உரை:
முழுமைக்கான சித்திக்கு நிலைபெற்றவனாகி, இறைமையை நோக்கிய நினைவு கொண்டு, அதனை அறியவும் உணரவும் தலைப்பட்டு உள்ளவனுக்கு, அவனுடைய விழிப்புணர்வு தூயதாகிறது. வரம்பற்ற ஒன்றின் மீது அன்னியோன்னிய உறவை ஸ்தாபிக்கிறது. “எனக்கு அன்பானவன்” எனும் வார்த்தைப் பிரயோகமானது, நம் செயல்களால் கடவுளைத் தூண்டி நம்மேல் தனிக்கவனைத்தை ஈர்க்கலாம் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளக்கூடாது. நம் அறச்செயல்கள்தான் இறைமை பற்றிய விழிப்புணர்வினை விளைவிக்கும். அச்சமயங்களில், இறைவன் கவனிப்பவனாகவும், ஆதரிப்பவனாகவும், ஒட்டு மொத்தத்தில் நல்லவனாகவும் தோன்றும். இக்கருத்தினை பின் வரும் ஸ்லோகங்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
12.15. தான் பிறரையும் சூழலையும் கிலேசப்படுத்தாமலும், பிறராலும், சூழலாலும் தான் கிலேசப்படாமலும், இன்பம், அவசரம், பயம், உத்வேகம் என்பவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவன் எவனோ அவன் எனக்குப் பிரியமானவன்.
உட்பொருள்:
தான் பிறரையும் சூழலையும் கலக்கம் உறுத்தாமலும், பிறரின் செய்கையாலும், சூழலாலும் தான் கலங்காமலும், இன்பம், அவசரம், பயம், மனஇசைவுக்கேடு என்பவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவன் எவனோ அவன் இறைமைக்கு எளிதாக விழிப்படைகிறான்.
உரை:
நம் உள்ள அமைதி நம்மில் நிலைத்திருக்கும்போது, பிறருக்குத் தொந்தரவு செய்வதோ சூழலைக் கெடுப்பதோ, நம் மன மற்றும் ஆன்ம அமைதியானது பிறரின் நடத்தைகள் மற்றும் மாறும் சூழல்களால் தொந்தரவுக்குள் ஆவதோ இல்லை. இந்த உன்னத நிலை, யோகாப்பியாசத்தின் வெற்றிக்கு முதல் தேவைகளான:
• தீங்கு செய்யாமல் இருப்பது
• உண்மையாக இருப்பது
• நேர்மையாக இருப்பது
• பிராண சக்தியை ஆக்கச் செயல்களுக்கு மட்டும் பயன்படுத்துவது
• எவ்வித பற்றும் இன்றி வாழ்வது
ஆகியன (யமம்) நம்மில் பொருந்திவருவதின் விளைவு ஆகும்.
12.16. ஏக்கமோ பதட்டமோ இல்லாமல், தூயவனாக, திறனாளியாக, ஒரு பக்கச் சாயல் இல்லாதவனாக, எவ்வித சுயநலவாத நோக்கமும் இல்லாதவனாக, என் மேல் பக்தி உள்ளவனாக இருப்பவன் எனக்குப் பிரியமானவன்.
உட்பொருள்:
எதையும் அதன்வயத்தில் கட்டுண்டு செய்பவனாக இல்லாமல், பதட்டத்துடன் ஆன்மீகப் பயிற்சிகளின் விளைவை நாடுபவனாக இல்லாமல், தூய மனத்தினனாய், திறமைசாலியாய், பட்சபாதமற்றவனாயய், ஆணவ மையத்தால் ஊட்டப்படாதவனாய், இறையனுபூதிக்கு அர்ப்பணித்தவனாய் உள்ளவனுக்கு இறைக்கருணை விளங்கும்.
உரை:
வாழ்வை வளப்படுத்துவதான தன்மைகளை விரைவில் நாம் அடைவதற்கான உபாயம், முழுமையுடனான நம் உறவை நினைவுபடுத்திக் கொள்ளுதலும், மேலும், அதனுடானான இசைவுத் தன்மையில் நாம் எப்போதும் வாழ்வதும் ஆகும். எந்த மனோபாவத்தையும் நடத்தையையும் துறக்கவேண்டுமென்றால், எவை சுயநல ஊட்ட விழிப்புணர்வின் தன்மைகளோ அவைகளை. நம் எண்ணக் கோணத்தை ஆணவ மையத்திலிருந்து ஆன்ம மையத்திற்குத் திருப்பும்போது ஆன்மீக வளர்ச்சியைத் தடுப்பதான மனோபாவங்கள் மற்றும் நடத்தைகள் ஆகியன ஆன்மீக வளர்ச்சிக்கு ஆதரவாகத் திருப்பி விடப்படுகின்றன.
12.17. யாருக்கு அதி மகிழ்ச்சி, வெறுப்பு, ஏக்கம், தணிக்க முடியாத ஆசை ஆகியன இல்லையோ, தனக்கு உகந்தவை, உகவாதவை எனும் பிரிவினையைத் (வேண்டுதல்—வேண்டாமை இலான்) துறந்தவனோ, பக்தி ததும்பும் அவன் எனக்குப் பிரியமானவன்..
உட்பொருள்:
சலனப்படும் வாழ்நிகழ்வுகளுக்கு அலட்டிக் கொள்ளாதவன், வெறுப்பு, துயரம், தணியாத் தாகம் ஆகியன அற்றவன், தனக்கென எவ்வித முன்கருத்துமற்றவன், பக்தியில் தோய்ந்தவனாகிய அவன் இறைமையில் அமிழ்கிறான்.
உரை:
“பக்தி ததும்புதல்” என்பதுதான் இங்கு முக்கியம். ஆன்ம சமர்ப்பண பக்தி ஆற்றலுடன் பிரவாஹமெடுக்கும் போது, ஆணவபல சுய ஊட்டத் தன்மைகள் விலகுகின்றன.
12.18. நண்பனிடமும் பகைவனிடமும் கௌரவத்திலும் அவமானத்திலும், பனியிலும் உஷ்ணத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும், சமபாவம் கொண்டவன், பற்றற்றவன்,
உட்பொருள்:
எல்லா (எதிரெதிர்ச்) சூழ்நிலைகளிலும் ஆன்ம-மையத்திலூன்றி நிதானத்தைக் கடைபிடித்து பொருத்தமாக நடந்துகொள்பவன்,
உரை:
ஆன்ம அனுபூதி பெற்றவனின் சில குணாதிசயங்கள் என்னவென்றால்
• சம மரியாதையுடன் அனைத்து வகை மக்களுடன் பழகுதல்
• பிறரின் அபிப்பிராயங்களால் தன் நிலைப்பாட்டில் மாறாமை
• தற்காலிகத் துயரங்களில் நுணங்காமை
• தன் வளங்களைப் பயன்படுத்துவதில் கவனமாக இருந்தாலும், அதன்மேல் லோபம் கொள்ளாமலும் அவைகளைச் சாராமலும் இருத்தல்.
12.19. இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் மதிக்காதவன், சாந்தன், திருப்தன், இருப்பிடமற்றவன், சமபாவனையுள்ளவன், பக்தி நிரம்பியவனாகிய அவன் எனக்குப் பிரியமானவன்.
உட்பொருள்:
பிறரின் அபிப்பிராயங்களால் நிலைசாயாதவன், கட்டுப்பட்டப் பேச்சுள்ளவன், தன் செய்கைகளாலும், தெய்வச் செயல்களாலும் கிடைப்பதில் திருப்தி காண்பவன், ஒரு குறிப்பிட்ட இடத்துடன் தன்னை அடையாளம் காணாதவன், சமபாவனையுடன் இயல்பாகவே பக்திமானாயுள்ளவன் எளிதாக வரம்பற்றதுடன் லயம் கொள்கிறான்.
12.20. என்னை அடைவதையே உயர் இலக்குப் பொருளாகக் கொண்டு, நம்பிக்கையுடன் என் மேல் பக்தி செலுத்துகிறவன், சனாதன தர்மத்தை மதித்து நடக்கும் அவன் எனக்கு மெத்தப் பிரியமானவன்,
உட்பொருள்:
அனைத்திற்கும் மேலாக இறைமைக்குப் பக்தி பூண்டவர்கள், அறவாழ்வை ஆதரிக்கும் கருத்துக்களின் படி வாழ்பவர்கள் இறைச்சித்தத்திற்கு எளிதில் இசைவுபட்டுவிடுகிறார்கள்.
உரை:
இந்த அத்தியாயத்தின் இறுதி ஸ்லோகத்தில் இரண்டு ஆதரிப்புத் தத்துவங்கள் சொல்லப்பட்டுள்ளன.
அ. அனைத்திற்கும் மேலாக இறைமைக்குப் பக்தி பூணுதல்
ஆ. அறவாழ்வால் பக்தியை நிரூபித்தல்
ஆன்மீக வாழ்வின் சாரம் இதுவே.
இறைவனுக்கு அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு ஆன்ம விழிப்புணர்வுக்கும் இயற்கை விதிகளுக்கும் இசைவாகாமலிருப்போம். அல்லது, ஆக்கபூர்வமான வாழ்வை மேற்கொண்டாலும் இறைமையைப் புரிந்துகொள்ளாமலும், கடவுளை மெய்யாக உணர்வதையே லட்சியமாகக் கொள்ளாமலும் இருக்கிறோம்.
நம் பக்தியினால் பெற்ற இறையுணர்வு, நம் செயல்களின் வாயிலாக வெளிப்பட்டால் நாம் சரியான வழியில் இருக்கின்றோம் எனக் கொள்ளலாம்.
முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், பக்தி யோகம் என மூலத்திலும், இவ்வுரையிலும் தலைப்பிடப்பட்ட 12 ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.
Send Your Comments to phdsiva@mccrf.org