W33. ஒரே மெய்யுணர்வு வேகவழிச் சாலையில் பயணிக்க உரிமையுடன் வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
33. ஒரே மெய்யுணர்வு வேகவழிச் சாலையில் பயணிக்க உரிமையுடன் வேண்டுதல்.
எங்கள் ஒரே தந்தையே, நாங்கள் உன் ஒரு ஒளிச் சந்நிதியை அடைய பல நிஜ வழிகளில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். எல்லா மதநம்பிக்கைகளெனும் துணைவழித் தடங்களும் ஒன்றுகூடும் பொதுவான ஒரே மெய்யுணர்வு வேகவழிச் சாலையை எங்களுக்குக் காண்பி.
வேறுபட்ட மதங்கள் மெய்ம்மையெனும் உன் ஒரே மரத்தின் கிளைகள் தான் என்பதை நாங்கள் உணருமாறு செய். பலதரப்பட்ட எல்லா ஆகம போதனைகளாலான கிளைகளிலும் தொங்கும், அறிவால் சோதிக்கப்பட்ட, கனிந்த, இனிமையான ஆத்மஞானப் பழங்களை நாங்கள் புசித்துமகிழ எங்களுக்கு அனுக்கிரகம் செய்.
உன் அமைதிக் கோயிலில் நாங்கள் பல்வேறு குரல்களினால் இயைந்த ஒரே இன்னிசையாய் உனைநோக்கிப் பாடுகிறோம். உன்மேல் கொண்ட எங்கள் அன்பினுடைய பல வெளிப்பாடுகளை நாங்கள் ஒருமித்த இயைபுடன் இசைக்க எங்களுக்குக் கற்பி. எங்கள் அந்த ஆன்ம கீதம் நீ உன் அமைதிச் சபதத்தை மீறி, அழிவற்றதும், பிரபஞ்ச நோக்குடன் புரிதலும் உடைய உன் மடியில் நீ எங்களைத் தூக்கி அமர்த்தத் துணைபுரியட்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
33 Demand to travel on the one Highway of Realization
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org