W27. சுவாமி ஆதிசங்கரராய் வந்து எனக்குத் தரிசனம் கொடு. (Whispers from Eternity - Tamil & English)
27. சுவாமி ஆதிசங்கரராய் வந்து எனக்குத் தரிசனம் கொடு.
சுவாமி ஆதிசங்கரரே, ஞானவானில் பிரகாசிக்கும் நீங்கள் ஒரு அற்புத நட்சத்திரம்! சமய சடங்குகளின் இறுக்கத்தினால் கருமையுற்ற பல ஆன்மாக்கள் மீது நீங்கள் உங்கள் ஒளியை வீசினீர்கள்.
மனித இருளெனும் பல ஆடுகள் உங்கள் மெய்யுணர்வென்னும் சிங்கத்தின் உறுமலுக்கெதிரே நடுங்கி ஓடி ஒளிந்தன. கிறிஸ்துவைப் போல, நீங்கள்: "இறைவனே நான்," "நீ இறைவன்," "நானும் என் இறைத்தந்தையும் ஒன்றே" என முழக்கமிட்டு, எங்களை லோகாயத உறக்கத்திலிருந்து விழிப்புறச் செய்தீர்கள்.
"காட்சியில் உண்மையாகத் தோன்றும் பொருட்களின் பொய்ம்மையை" முதலில் விவரித்த உங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.
சுவாமிகளின் சுவாமியே, வரையறுக்கப்பட்ட ரூபங்களுடைய பொருட்களெனும் லயிக்கும் அலைகளுக்கு அடியில், மறைவாக நடனமாடும் ஒரே பேருணர்வுச் சமுத்திரத்தைக் கண்டுகொள்ள எங்களுக்குக் கற்றுத் தந்தீர்கள்.
நம் கடவுள் சுழித்த-முகத்துடன், பழிவாங்குகின்ற, குற்றம் கண்டுபிடிக்கின்ற தன்மைகொண்டவர் அல்ல, மாறாக, அவருடைய முகம் அனைவரையும் வசீகரிக்கும் பிரகாசமான மந்தகாச புன்னகை தரித்தது என நீங்கள் எங்களுக்குப் பகர்ந்தீர்கள். எங்கள் இதயங்களில் மலர்ச்சியாகப் பூக்கும் புன்னகையைப் பெறுவதெப்படி என்பதையும், எங்கள் ஆன்ம மலர்-ஜாடிகளில் மகத்தான, விண்ணுலகப் புன்னகையாலான பூங்கொத்தினை வைத்து அலங்கரிப்பதெப்படி என்பதையும் எங்களுக்கு விளக்கிக் காட்டினீர்கள்.
எங்கள் மகிழ்வான ஜீவிதங்கள் உங்கள் ஒளிக்கடலிலிருந்து கடைந்தெடுக்கப்பட்டவை; எங்கள் பலரின் ஜீவிதங்கள் உங்கள் ஆனந்தக்கடலிலேயே நடனம்புரிகின்றன; எங்கள் ஆசைச் சூறாவளி தணியும்போது உங்கள் பரந்த மகிழ்ச்சியில் நாங்கள் லயம் அடைவோம்.
ஆதிசங்கரரே, உங்கள் புன்னகையில் பேருணர்வுக்கடல் நடனம்புரிவதை பலர் கண்டுள்ளனர்: உங்களுக்கு எங்கள் சிரம்தாழ்ந்த நமஸ்காரங்கள்!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
27 Come to me as Swami Shankara.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org