MCCRF - A global volunteer network

1. அர்ஜுனனின் மனக்கலக்கம் எனும் யோகம் - பகவத்கீதை - The Eternal Way

பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
 

THE ETERNAL WAY
The Inner Meaning of The Bhagavad Gita
AuthorRoy Eugene Davis

Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).

பகவத் கீதை முதல் அத்தியாயம்

1. அர்ஜுனனின் மனக்கலக்கம் எனும் யோகம்

அத்தியாய முகவுரை:

கீதை ஆரம்பிக்கும்போது, மிகப்பெரிய அளவினதான சவாலை, ஒளியூட்டப்படாத ஆன்மா (அர்ஜுனன்) எதிர்கொள்கிறது.

ஆனாலும், அந்தச் சவால் வாழ்க்கையின் துடிப்பான வளர்போக்குகளைக் கற்க அரிய வாய்ப்பினை நல்குகின்றதாகவும்,
மேலும், அது தன்னைக் கட்டிப்போடும் நிர்ப்பந்தங்களை முறியடித்து ஆன்ம வளர்ச்சிக்கு உதவுவதாகவும் உள்ளது.

ஆன்மீகப்பாதையின் துவக்கத்தில், சிலருக்கு மனக்கலக்கம் ஏற்படும். அந்த தற்காலிகமான கலக்கமும், சாதகனை இறையனுபவத்துடன் இணைக்க உதவுகின்ற காரணத்தினால், அத்தியாய தலைப்பிலும் "யோகம்" (இணைப்பி) என சேர்க்கப்பட்டுள்ளது.

1.1 திருதராஷ்டரன் கேட்டார்
“தர்மக்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் போராடும் நோக்கத்தோடு
கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்கிறார்கள், சஞ்சயனே ?”

உட்பொருள்:
மயக்குறு மனம் விசாரித்தது:
உண்மையையும்-பொய்மையையும் முடிவாகக் கொண்ட தர்ம-அதர்ம விளை நிலத்தில், எதிர்கொள்ளத் துணிந்து கூடிய
சுயவூட்ட மனப்போக்குகளும்
புனித ஆன்மத் தன்மைகளும்
என்ன செய்கின்றன? உள்காட்சி விவேகமே, ஆவதை வெளிப்படுத்து.

உரை: சூழ்ந்துள்ள நடப்புநிஜத்தை எதிர்கொள்ளத் திராணி இல்லை என உணர்ந்த ஒளியூட்டப்படாத ஆன்மா, மனத்தின் (திருதராஷ்ட்ரன்) வாயிலாக, உள்காட்சிக்கும் விசாரணைக்கும் தஞ்சமடைகிறார்.

உடல்—மன அறிவுதளத்தில், ஒருபுறத்தில் ஆணவ உந்துதலைக் கொண்டுள்ள எண்ணிலடங்கா மனப்போக்குகள், மறுபுறத்தில் உள்ள ஒழுக்கத் தூண்டுதல்களை எதிர்கொள்கையில், இருவரும் வெற்றி தங்களின் பக்கமே என எதிர்பார்க்கும் போது, என்ன நடக்கிறது?

அதிஉணர்வு (Super Consciousness) தான் ஆன்மாவின் அடிப்படை. சாதாரண வாழ்வில் விழிப்பு, கனவுடனான தூக்கம், கனவற்ற தூக்கம் என இம்மூன்று நிலைகளில், நம் மேம்போக்கான உணர்வு ஊடுருவி எல்லா தளத்திலும் நடப்பதைக் கவனிக்கிறது.

குழப்ப நிலையிலும், உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் கூட, அப்போதைக்கு ஆதிக்கம் செய்யும் இயல்பினதான மன, உணர்வு நிலைகளிலிருந்து, நாம் வேறுபட்டவர்கள் என அறிந்து கொள்ள முடியும்.

மேலும், நம் தற்காலிக மேலோட்ட ஈடுபாடுகளுக்கு நடுவே, நம் இருப்பின் ஆழ்மையத்தில்
எல்லா கேள்விகளுக்கும் அதில் பதிலிருக்கிறது என்றும்,
நம் எல்லா பிரச்னைகளுக்கும் அதில் தீர்வு மூலம் இருக்கிறதென்றும்
முழு அமைதி அதில் நிலவுகிறது என்றும்

உள்ளுணர்வு அறிவால் அறிவோம்.

ஆ சிந்தனைக்கீற்று Reflection
என் மகன்கள் தர்மத்தின் பக்கம் இல்லை -- எனும் தந்தையின் குறுகுறுப்பு இந்த ஸ்லோகத்தில் வெளிப்படுகிறது.
அர்ஜுனனின் மனக்கலக்கம் அவனை இறையனுபவத்துடன் இணைக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும் - வாழ்வனைத்தும் யோகம் எனும் ஸ்ரீ அரவிந்தரின் சொல் இங்கு நினைவு கூறத்தக்கது.
“ தொலி சூப்புலோ செலி ராசினா சுபலேகா ” (முதல் பார்வையிலேயே திருமண அழைப்பிதழை எழுதிவிட்டாள். என் செல்லம்) எனும் தெலுங்குத் திரைப்படப்பாடல் முதல் வரி எனக்கு நினைவுக்கு வருகிறது. பகவத் கீதை, அத்தியாயத் தலைப்பிலேயே அதன் தத்துவ சாரம் ஊட்டிவிடுகிறது.

1.2 சஞ்சயன் கூறியது:
பாண்டுபுத்ரர்களின் சேனை, போருக்குத் தயாராயிருப்பதைப் பார்த்த துரியோதனன், அவனுடைய ஆசிரியர் துரோணரைப் பார்த்து இவ்வாறு பேசினார்.

உட்பொருள்:
உள்காட்சி உணர்வில் வெளிப்பட்டது:
ஒழுக்க குணங்களானவை, மனதின் சுயபோக்குகளை எதிர்க்க ஆயத்தமாகியிருப்பதை அறிந்த ஆசைவேட்கை [துரியோதனன்], தங்கள் இருப்பை நிலைக்கச் செய்யும் நோக்கில், லௌகீக வாழ்க்கைப்பாணியை ஆதரிக்கும் முந்தைய அனுபவங்களின் கொள்ளிடமான அதன் “ஆசிரிய” ரிடம் [துரோணர்] நாட்டம் செலுத்தியது.

1.3 ஆசிரியரே, உங்களிடம் கற்றதால் புத்திசாலியாயிருக்கிற துருபதபுத்ரன், பலமிக்க பாண்டுபுத்ரர்களை சீரணியில் நிறுத்தியுள்ள படையைப் பாருங்கள்;

உட்பொருள்:
நினைவுகளின் கொள்ளிடமே, அனுபவத்தால் ஆதரிக்கப்படும் உள்ளொளியால் [குண்டலினியின் ஒரு அம்சமான திருஷ்டத்யும்னன்] வழிகாட்டப்பட்டு, தூய நுண்ணறிவுக்குப் பிறந்த ஒழுக்கமிக்க தன்மைகளின் [பாண்டுபுத்ரர்கள்] மாபெரும் அணிவகுப்பைப் பாருங்கள்;

1.4 இங்கே நாயகர்கள், பலமிக்க வில்லாளிகள். போர்க்களத்தில் அவர்கள் பீமன், அர்ஜுனன், யுயுதானன், விராடன், பெரும் போர்வீரனான துருபதன் போன்றோருக்குச் சமமானவர்கள்;

உட்பொருள்:
இங்கே நாயகப்பண்புகள், திறன் வாய்ந்த செய்கைகள். எந்தப்போட்டியிலும் அவைகள் உள்ளார்ந்த பலம், பிராணனின் கட்டுப்பாடு, பலமான உள்மன ஆற்றல், நம்பிக்கையின் அடிப்படையிலான மன உறுதிப்பாடு, எல்லாச் சூழ்நிலையிலும் சமச்சீர்மை, நுண்மாண் நுழை புலம் ஆகியவற்றுக்குச் சமமானவர்கள்.

1.5 திருஷ்டகேது, சேகிதானன், பலத்திற்குப் புகழ் பெற்ற காசி மன்னன், புருஜித், குந்திபோஜன், போராளிகளில் பலம் வாய்ந்தவர்கள்;

உட்பொருள்:
தடைகளை நீக்குவதான கட்டுப்பாடு, உயர் நுண்ணறிவு, பேரார்வம், மன மற்றும் புலன் தூண்டுதலின் வெறியடக்க வெற்றி, தடை நீங்கியதாலுண்டான அமைதியும் திருப்தியும், பெரிய பலத்தை அளிப்பதான ஒருமுகப்பட்ட ஒழுக்கம்

VRGC குறிப்பு:
தேர்ந்த மனோதத்துவ அறிவால் மட்டுமே குணவேறுபாடுகளைப் பட்டியலிட முடியும் நம் புராணங்களில் மனோதத்துவம் செறிந்து கிடக்கிறது. புராணங்களை ஊன்றிப்படித்தால் முதலில் மனோதத்துவம் கற்கலாம். துர்பிரசாரகர்களால் நினறய இழந்திருக்கிறோம் எனும் எண்ணம் உண்டாவதைத் தடுக்க முடியவில்லை. கதை சொல்லி வளர்ந்த நாடு பாரதம் என்பார்கள். ஆனால் அந்தக் கதைகளில் வாழ்க்கைதான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மகாபாரதத்தில் இல்லாதது எதிலும் இல்லை என்பது உண்மையே.

1.6 மேலும், ஆற்றல் மிக்க யுதாமன்யு, வீரியமிக்க உத்தமௌஜஸ், சுபத்திரையின் மகன், திரௌபதியின் மகன்கள், இவர்கள் அனைவரும் உண்மையில் தேர்ந்த போராளிகள்.

உட்பொருள்:
மேலும், வேட்கையின்மை, செயலில் தைரியம், அன்பில் உருவாகும் மகிழ்ச்சி, சக்கரங்களின் வழியாக வெளிப்படும் குண்டலினியின் உயிர்ப்பூட்டமிக்க ஆற்றல், இவையனைத்தும் சாமர்த்தியமிக்கவை,

உரை:
நாம் நம் ஆணவமைய ஆசைகளையும், ஆத்மதூண்டலின் சாயல்களையும் ஒரு சேர அறிந்திருக்கும் அதே சமயம், நாம் செய்யும் செயல்கள் சரியானதாக இருக்க விரும்புகிறோம் என்றாலும், பழக்கப்படுத்தப்பட்ட நடத்தைகளும் எதிர்மாறாக நிர்ப்பந்திக்கின்றன.
நம் ஒழுக்கங்களையும் ஆத்ம தன்மைகளையும் அறிந்திருந்தாலும், புலன்களினுடையதும் சலனமனத்தினுடையதுமான தூண்டல்களையும் நிறைவேற்ற விரும்புகிறோம்.
சரியானதைத் தேர்ந்தெடுக்க வல்லவர்களென்றாலும், முன் அனுபவத்தில் ஊன்றிய ஆசைகளின் அடக்குமுறையில் கட்டுண்டிருப்பதையும் உணரவல்லோம்.
நாம் நம் சுயவிருப்பத்திற்கு வளைத்துக் கொள்வதாலோ, வாழ்க்கையை அனுசரணையாக்குவதை விட்டு வாழ்க்கையை இறுக்கவதை விரும்பிச் செய்வதாலோ, அறியாமை இருளையும் அறிவு ஒளியின் மீது அதன் தீய விளைவுகளையும் தேர்ந்தெடுத்து நம் புனிதத் தூண்டல்களை மறுக்கிறோம்.
இது மாதிரி சமயங்களில், அடுத்துவரும் சுலோகங்களில் விவரிக்கப்படுவது போல, நாம் நம் ஆணவம் ஆதரிக்கும் குணங்களை ஆராயலாம்.

1.7 இப்பொழுது, நம் பெருமைமிக்க போராளிகளை அறிவீர் ! இருபிறப்பாளரில் உயர்ந்தோனே [துரோணர்]! தலைவர்களின் தகுந்த பெயர்களால் அவர்களை விவரிக்கிறேன்

உட்பொருள்:
<மூலத்திலிருந்து மாற்றமில்லை>

1.8 தாங்கள் [துரோணர்], பீஷ்மர், கர்ணன், கிருபன், போரில் வாகை சூடும் அஸ்வத்தாமன், விகர்ணன், மேலும் சோமதத்தனின் மகன்களும்;

உட்பொருள்:
மாற்றத்தை ஆதரிக்கின்ற அனுபவப் பதிவுகள், தன் மைய ஆளுமைத் தன்மையின் வலிய உணர்வு, தன்னிச்சையான ஆசை, அதீதமான இரக்க குணம், மேல்போக்கான அழிவதான பொருட்களில் பற்று வைத்திருக்கும் லௌகீகம், வெறுப்பு, நிலையாமை;

1.9 என் நிமித்தம் தங்களின் உயிரைப் பணயம் வைத்துள்ள பல நாயகர்கள், போரில் வல்ல அவர்கள் கட்டளைக்குட்படும் பல ஆயுதங்களுடன்;

உட்பொருள்:
கடும் ஆசைகளைப் பாதுகாக்கும் பந்தப்படுத்தும் பற்பல மனப்போக்குகள், பலவழிகளில் வெளிப்படும் அவைகளின் செயல்வல்லமைகளுடன்;

1.10 பீஷ்மரால் காக்கப்படும் நம் படைகள் போதுமானவை. பீமனால் காக்கப்படும் படை போதுமானதல்ல,

உட்பொருள்:
பலமான புலனாளுமையால் ஆதரிக்கப்படும் மனப்போக்குகளும், உந்துதல்களும் சவாலை சந்திக்கப் போதுமானவை. பிராணன் ஆதிக்கம் செய்யும் ஒழுக்கத்தன்மைகள் போதுமானதாக இல்லை.

VRGC குறிப்பு:
இங்கு பீஷ்மரின் படைகள் "போதுமானவை" என்பதற்குப் பதிலாய் "வரம்புக்குட்பட்டவை" எனவும், பீமனின் படைகள் "வரம்புக்குட்படாதவை" எனச் சில உரையாசிரியர்கள் விளக்குகின்றனர். ஆனால் வரும் சுலோகத்தில் [1.11] இவ்வுரையாசிரியர் உரையில், மேல் கூறிய அர்த்தத்தைக் கொண்டே விளக்கம் தருகிறார். மொழியின் போதாமைக்கு இது நல்ல உதாரணம்.

1.11 எனவே, இந்தப் போர் நடக்கும்போது, உங்களில் ஒவ்வொருவரும் அவரவர் இடங்களில் இருந்துகொண்டு பீஷ்மரைக் காக்கவேண்டும்.

உட்பொருள்:
எனவே, போரின் துவக்கத்தில் உங்களின் விசேஷித்த பங்காற்றுங்கள். வியக்த சுதாரிப்பு உணர்வைக் காத்துக்கொள்ளுங்கள்

உரை:
ஆணவமைய சுய உணர்வு, கெட்டிப்பட்டுப்போன மன இயல்புடன், அது விரும்பாத மாற்றங்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள, அதன் வலிமையைத் திரட்டுகிறது அதன் பழக்கங்கள், பதனிடப்பட்ட தன்மைகள் அதன் பாதுகாப்புக்கு ஒருங்கு திரள்கின்றன.
இதனால் பொய்யான பாதுகாப்புணர்வு பெற்றவன், பயனுள்ள அல்லது ஆக்கபூர்வ மாற்றத்தை எதிர்க்க முயல்கிறான்.
ஏழாவது ஸ்லோகத்தில் “இருபிறப்பாளர்” எனும் வர்ணனை இங்கு முகஸ்துதியாய் கருத வேண்டும். அது மனதின் செயலை ஆதரிக்கும் எண்ணப்பதிவுகளை வலுவூட்ட எடுக்கும் முயற்சியே. இருபிறப்பாளர் என்பவர் உண்மையில் ஆன்மசத்யத்திற்குத் திறவானவரே, எதிர்புறத்தில் இருப்பவர் அல்ல.

ஒருவன், தன்வயத்தில், தீர்மானகரமான, தற்காப்பு முகாந்திரத்தில் இருக்கும்போது, மாயக்கட்டில் அகப்பட்டு, தன் ஆத்மகுணங்களை விட பலசாலியாகவும், திறன் மிக்கவனாகவும் தவறுதலாக நினைத்துக் கொள்கிறான்.

எனவேதான், “அனுபவம் ஆதரிக்கும் தன்வய உந்துதல்களும், பழக்கப் போக்குகளும், நிறைய இருப்பதாகவும், ஒழுக்கத்தின் செறிவு குறைவாக இருப்பதாகவும்” [1.10] வேட்கை ஆசை எண்ணத்தைத் தூண்டுகிறது.

மயக்குறு மனத்தை காரண அறிவு மாற்றும் வாய்ப்பு மிகவும் குறைவு. எது தேவை என்றால், விழிப்புணர்வு பெற்ற ஆத்மாவின் மாற்றும் வல்லமை கொண்ட சுதாரிப்புணர்வே.

1.12 துரியோதனனை ஊக்கப்படுத்தவும் மகிழ்விக்கவும் குரு (kuru) வம்ச மூத்தவரான பீஷ்மர், சிங்கத்தைப் போல் கர்ஜித்துக் கொண்டு, சங்கினை பலமாக ஊதினார்

உட்பொருள்:
மனப்போக்குகளையும் உந்துதல்களையும் அணிவகுக்கவும், திமிறி நிலைக்க நினைக்கும் ஆசைகளைத் தூண்டவும் வளர்க்கவும், வியக்த சுய உணர்வு, புலன்களைச் சுதாரிக்கச் செய்து வெறியூட்டி பிராணனை எழுப்பியது.

1.13 திடீரென்று, சங்கு ஒலிக்கவும், பேரிகைகளும், மத்தளங்களும், தப்பட்டைகளும், கொம்புகளும் உடனே முழங்கத் தொடங்கின.

உட்பொருள்:
உடனே, தூண்டிவிடப்பட்ட ஆசைகளும் வெறியூட்டப்பட்ட புலன்களும் மேலும் சுதாரித்துக் கொண்டன.

உரை:
ஆணவத்தை முதலாகக் கொண்ட, பொய்யான, உருமதிப்பற்ற நம்பிக்கை, நம் அறிவார்ந்த எண்ண முயற்சிகளை நீர்த்துப்போகச் செய்யும்போது, நம் சொந்த இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என நம்புகிறோம்.
பொய் நம்பிக்கை, நாம் தேர்ந்தெடுத்த அவசர ஆசைக்குரிய பொருளை அடைவதற்கு வெறியூக்கம் கொடுக்கிறது.

---
1.14 பின்னர், வெள்ளைக்குதிரைகள் கட்டப்பட்ட தேரில், நின்று கொண்டிருக்கும் கிருஷ்ணரும் பாண்டுபுத்ரன் அர்ஜுனனும் தத்தம் சங்குகளை ஊதினர்.

உட்பொருள்:
புலன்களை ஆளுவதான உள்நிறை இறை ஆவியும் ஆத்மாவின் திமிறி நிலைக்கும் ஆவலும் தத்தம் நிரூபிக்கப்பட்ட ஆற்றலின் அடையாளங்களை வெளிப்படுத்தின.

1.15 ஸ்ரீ கிருஷ்ணர் , தன் பாஞ்சஜன்யத்தையும், அர்ஜுனன் தன் தேவதத்தையும், வல்லசெயலாளன் பீமன் தன் பௌண்ட்ரத்தையும் ஊதினர்.

உட்பொருள்:
இறையாவி ஓம் ஒலியை வெளிப்படுத்தியது. மணிபூரகச் சக்கரத்தின் பிராண அலைகளும், அநாஹத சக்கரத்தின் ஒலி அலைகளும் ஒத்திசைவாய் பின்தொடர்ந்தன.

1.16 யுதிஷ்டிரன் அனந்தவிஜயத்தையும், நகுலனும் சகாதேவனும் முறையே சுகோஷம், மணிபுஷ்பகம் சங்குகளையும் ஊதினர்.

உட்பொருள்:
விசுத்தி, ஸ்வாதிஷ்டானம், மூலாதாரம் ஆகியவற்றின் ஒலி அலைகளும் வெளியாயின.

1.17 சிறந்த வில்லாளியான காசி மன்னன், சிறந்த வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வெல்லமுடியாத சாத்யகி;

உட்பொருள்:
பேரார்வம், ஆன்மீகம், சுய கட்டுப்பாடு, சமபா:வம், வெல்ல முடியாத சத்ய உணர்வு, ஆகியன உயிரோட்டம் பெற்று வெளிப்பட்டன;

1.18 புவி வேந்தனே [திருதராஷ்டிரனே]! துருபதன், திரௌபதியின் மகன்கள், சுபத்ரையின் மகன், அனைவரும் தத்தம் சங்குகளை ஊதினர்.

உட்பொருள்:
திரண்ட தூய அன்பும், சர்வஞானமும், குண்டலினி சக்தியின் சக்கரப் பிரபைகளும் தன்மைகளும் வெளிப்பட்டன

உரை:
ஸ்ரீ கிருஷ்ணர் , வெள்ளைக் குதிரை பூட்டிய தேரின் தேரோட்டியாக, தூய புலன்களின் கட்டுப்பாட்டில் உள்வாழும் இறையாவியை அடையாளப்படுத்துகிறார்.

பக்தனின் கவனம் தியானத்தில் உள்பக்கம் திரும்பும்போது, ஓம் மூலநாதம் கேட்கப்படலாம். ஓம் என்பது இறை மண்டலத்திலிருந்து வெளிவருவதால் அது இறையிருப்பின் நிரூபணம்.

இங்கு ஓம் என்பது கிருஷ்ணரின் சங்காக வர்ணிக்கப்படுகிறது. நற்குணங்கள் மற்றும் மயக்குறு மனநோக்குகள் அவனுடைய இருப்பை உணர்வதற்கு, அந்த சங்கை ஊதுகிறான்.

ஓம் ஒலி கேட்குமுன், குண்டலினி சக்கரங்களின் ஒலிகள் கேட்கப்படலாம் --- மூலாதாரத்தில், தொந்தரவுக்குள்ளான தேனீக்களின் ரீங்காரம், ஸ்வாதிஷ்டானத்தில் குழலோசை, மணிபூரகத்தில் யாழிசை, அனாஹத சக்கரத்தில் ஆலயமணியோசை, விசுத்தியில் ஒலிக்கலவை
பலவகைப் பிராணன்களின் ஊடுருவுச் செயல்களால் பலவகை ஒலிகளையும் அவைகளின் ஆற்றல் வெளிப்பாடும் கவனிக்க முடியும்.
ஓம் ஒலி கேட்கும்வரை இவைகளுக்கு கவனம் செலுத்தும் ஒரு வெற்றிகரமான தியான அப்யாசி, இதற்குமேல் தன் கவனத்தை ஸ்தூல, மன சங்கதிகளிடமிருந்து விலக்கி, கீழே விவரிக்கப்படும் அதியுணர்வுக் காட்சி முன்னேற்றப்படி நிலைகளை அனுபவிக்கிறார்.

அதி உணர்வு அனுபவத்தின் முன்னேற்றப் படிநிலைகள்

சக்கரத்தின் பெயர்
அதி உணர்வு முன்னேற்றம்
மூலாதாரம்
சந்தேகத்துடன் கூடிய அதி உணர்வு. ஓரளவு தெளிவான புரிதல் இருந்தாலும் தனக்குப் புலனாகியிருக்கும் இயல்பு கடந்த உணர்வு சரியானதுதானா எனும் சந்தேகம்.
ஸ்வாதிஷ்டானம்
உறுதிப்பட்ட ஒருமுனைவு. மேம்பட்ட தெளிவான புரிதல்
மணிபூரகம்
வளர்ந்த ஒருமுனைவு. சுயம் சுவாதீனப்பட்டதன் அடையாள உணர்ச்சியால் பூரிப்பு உணர்வு ஏற்படுதல்
அனாஹதம்
ஆணவ மைய சுய உணர்வு மறைந்து முழுமையை முன்னோக்குதல்
விசுத்தி
சுயத்தைப் பற்றிய முந்தைய திரிபுகள் இற்று, அற்றுப் போதல்
ஆக்ஞா, சஹஸ்ராரம்
இறையறிவு, பிரபஞ்ச இயக்கங்கள், தூய உணர்வுச் சாத்தியம் ஆகியவற்றுக்குச் சுளுவாகத் திறவாதல்

குறிப்பு Remark --

ஒரு கிராஃப் வரைபடம் முயற்சிக்கப்பட்டுள்ளது


1.19 சங்கொலிகளின் பல்வேறு முழக்கங்கள் பேரொலியாக எழுந்து பூமியும் வானமும் அதிருமாறு எதிரொலிக்க, திருதிராஷ்ட்ரனின் மகன்களின் இதயங்களோ நடுக்கமுற்றன.

உட்பொருள்:
சக்கரங்களின் பிராண அலைவரிசைகளின் ஒலியலைகள், சுவாபிமானத்தில் ஊன்றிய மனப்போக்குகளையும் உந்துதல்களையும் இடறலுக்குள்ளாக்கின. அவை பக்தனின் உடல், மனம், உணர்வுதளம் ஆகியவற்றில் பரவின.

உரை:
ஓம் தியானம் அதிக முனைவு பெறுகையில், அந்த மூலநாதத்தின் செல்வாக்கு, திரண்டு கெட்டிப்பட்ட மனதின் செயல்களையும், அழிவுப் போக்கு உந்துதல்களையும் வலுவிழக்கச் செய்தும் கரைத்தும் பாதிக்கின்றன.
விளைவாக, தாமஸ ஆக்கிரமிப்புகளான இருள் மற்றும் செயலின்மை, ராஜஸ ஆக்கிரமிப்பான தவிப்பு ஆகியன நீக்கப்பட்டு சாத்வீக ஆதிக்கமான ஒளி மட்டும் நிலவுகிறது.
இவ்வாறு, புலனுந்தல்களையும் மனச் செயல் ஓட்டங்களையும் தன் பிடியில் கொண்டுவர பிராணாயாமத்தைச் செய்து, அதன் பின் தியானத்தை முனைந்து செய்தல், தன் மனத்துக்குள்ளேயே எண்ணிக்கொள்ளுதல் அல்லது மேம்போக்கான முயற்சிகளை விட எவ்வளவோ சிறந்தது

1.20 அனுமான் கொடி தாங்கிய தேரில் இருந்த அர்ஜுனன், ராணுவ களத்தில் திருதராஷ்ட்ரனின் மகன்களைப் பார்த்தார். படைக்கலன்களின் உரசல் ஆரம்பித்தபோது, தன் வில்லை எடுத்தான்.

உட்பொருள்:
ஆத்ம உறுதிப்பாட்டால் செறிவூட்டப்படும் ஒருமுனைப்பட்ட பேரார்வம், வெற்றியின் அடையாளத்துடன், சுவாபிமான மனப்போக்குகளையும் அவைகளை மாற்றுவதைத் தடுக்கும் எதிர்ப்புகளையும் அறிந்து, அவனுடைய வில்லை எடுத்தான்.

உரை:
ஹனுமான், வெற்றிமுகமான ஒருவனை அடையாளப்படுத்துகிறான். வெற்றி நம்பிக்கையில், செய்யவேண்டியதை அறிந்து, வாழ்க்கை நடப்புப்போக்குகளில் ஈடுபட விரும்பியும், ஆன்ம வளர்ச்சி அடுக்குகளில் ஊடுருவி எழவும் சாதகம் எனும் ஆயுதத்தை பக்தன் எடுத்தான்.

இறையிடம் தன்னை ஒப்புவித்த பக்தனுக்கு, ஹனுமான் கொடி, அழிப்பதான மனப்போக்குகளுக்கு பொருத்தமற்ற எதிர்வினையாற்றுவதிலிருந்து காப்பதையும், அவைகளின் ஆக்கிரமப்புகளை வலுவிழக்கச் செய்வதையும் அடையாளப்படுத்துகிறது.

அர்ஜுனன் வில்லை எடுப்பதானது, ஆன்மீகத்திற்குத் திறவாகும் செயலைத் தடுப்பவைகளை எதிர்க்கும் தேவையை அறிந்து, உறுதியூக்கத்துடன் பக்தன் தியானத்தில் அமர்வதைக் குறிக்கிறது.

1.21 பின்னர், அர்ஜுனன் கிருஷ்ணரைப் பார்த்து, “அழிக்க முடியாதவனே! இரண்டு படைகளுக்கு இடையில் என் தேரை நிறுத்து” என்றார்.

உட்பொருள்:
ஆத்மபலத்தால் செறிவூட்டப்படும் ஒருமுனைப்பட்ட பேரார்வம், போட்டியிடும் பகைகளினிடையே விளங்கும் தூய பேருணர்வை அறிய முனைகிறது.

அர்ஜுனன் தொடர்ந்தான்:
1.22 நான் போரிட வேண்டியவர்களை நான் பார்க்கும் விதமாக [தேரை நிறுத்துவாயாக].

உட்பொருள்:
நீக்கப்படவேண்டிய தடைகளை காணும் வண்ணம் [நடுநிலையை நாடுகிறது].

1.23 திருதராஷ்ட்ரனுடைய மகனும் கெடுமதியாளனுமானவனுக்கு ஆர்வத்துடனும் விரும்பியும் பணி செய்யக் கூடியிருப்பவர்களை இப்போது நான் பார்க்கிறேன்

உட்பொருள்:
ஆத்ம வளர்ச்சிக்கும் உணர்வு ஒளிக்கும் தடை செய்வதான மனமயக்கத்தில் உருவாகும் போக்குகளும் செயல்களும் தெளிவாகத் தெரிகின்றன, அறியப்படுகின்றன.

உரை:
சரியான செயலுக்கு நாம் சித்தமாகுமபோது, தூய உணர்வின் வியக்த வெளிப்பாடாக நம் உண்மை இயல்பை அறிந்து நம்மை ஆன்மீகரீதியாக திரட்டிக் கொள்கிறோம். இதுவே, அர்ஜுனன் (ஆர்வமுறும் சாதகன்) ஏன் கிருஷ்ணரை (பூர்வாங்க தூய உணர்வு) பகைப் படைகளின் நடுவே நிறுத்தச் சொன்னது என்பதற்கு விளக்கம்.

ஸ்ரீ கிருஷ்ணர் போரில் பங்கேற்காமல் நியாயத்தின் பக்கம் சார்ந்ததனால், தூய உணர்வு நேரடியாக செயலாற்றாவிட்டாலும், எல்லா செயல்களையும் சாத்தியமாக்குகிறது. நாம் ஆன்ம உணர்வில் திளைக்கும்போது, நம் கடமை என்ன என்பதையும் அதனை எவ்வாறு செய்வது எனவும் தெளிவாகப் பார்க்கிறோம்.

சஞ்சயன் கூறியது:
1.24 அர்ஜுனனால் கேட்டுக்கொள்ளப்பட்டவனாய், ஸ்ரீ கிருஷ்ணர் , மிகப் பெருமை வாய்ந்த தேரை, இரண்டு படைகளுக்கு இடையே நிறுத்தினார்.

உட்பொருள்:
நிலைமைகளின் யதார்த்தத்தை அறிய விரும்பும் ஆத்மாவின் ஆர்வத்திற்கு பதிலிறுக்க, உள்ளுணர்வுடன் சேர்ந்த பூர்வாங்க அறிவு, இரண்டு பக்க நிலைமைகளையும் பகுத்தறியும் திறனை சாதகனுக்குத் திறவாக்குகிறது.

1.25 பீஷ்மர், துரோணர் மற்றும் பிற நாயகர்கள் முன்பாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது. “அர்ஜுனா, இங்கு கூடியிருக்கும் குரு வம்சத்தவரைப் பார்’

உட்பொருள்:
பிரதிபலிப்பினால் வியக்த உணர்வாயிருப்பதும், நினைவுக் கூட்டங்களின் தொகுப்பும், மற்றும் நிர்ப்பந்திக்கும் பழக்கத்தால் இறுகிப்போன போக்குகளும் என பலவற்றை அறியும் சுதாரிப்பு அறிவுடன் ஆத்மா அதன் மலர்வைக் கட்டுப்படுத்தும் மன நிலைகளை ஆராய விரும்பியது.

உரை:
சுயம் (பீஷ்மர்) என்பதிலிருந்து வேறுபட்டு, ஒரு சாதகன் தன் ஆத்ம வளர்ச்சிக்கும் அதனை ஆதரிக்கும் போக்குகளுக்கும் தடை செய்வதான
மாற்றத்தைச் சார்ந்த அனுபவம் (துரோணர்)
உலகச்சூழலின் நச்சரிக்கும் தன்மைகள்,
ஆகியவற்றுக்குக் காரணமானவைகளையும்
ஆத்மாவின் பூர்வாங்க ஆக்கபூர்வ வாழ்திறனைச் செறிவூட்டும் குணாதிசயங்களையும்
அவனுடைய அறிவும், உள்ளுணர்வும் அவனுக்குத் திறனூட்டி அறியவைக்கின்றன.

மனிதர்கள் எவ்வாறு ஒரே மாதிரியான மனோ ஆத்ம குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறார்களோ அவ்வாறு, இந்த இரு பக்க உறவுக்காரர்களும் ஒரே குரு (Kuru) வம்சத்தவர்கள்.

கடவுளைச் சாராமல் தனித்தியங்கும் பொய்யறிவை ஆத்மாவுக்குக் காட்டும் ஆணவம்தான் சுவாபிமான உணர்வின் ஆதாரம். இறையுணர்வு தான் ஆத்மா மற்றும் அதன் தன்மைகளுக்கு மூலம் என்றாலும், ஆணவத்தின் விளைவுகள் தூக்கலாய்த் தெரிவதற்குக் காரணம், உணர்வானது கலங்கலான அறிவிலும், மனப்பழக்கங்களிலும் வெளிப்படுவதுதான்.

1.26 அர்ஜுனன், தந்தையர்களையும், தாத்தாக்களையும், ஆசிரியர்களையும், தாய்மாமன்களையும், அண்ணன்களையும், மகன்களையும், பேரன்களையும், அவர்களின் நண்பர்களையும் பார்த்தான்,

1.27 அவன் மாமனார்களையும், நண்பர்களையும இரண்டு படைகளிலும் பார்த்தான். உறவினர்கள் இவ்வாறு அணிவகுத்து நிற்பதைப் பார்த்த அவன்,

1.28 இரக்கத்தாலும் வருத்தத்தாலும் ஆட்கொள்ளப்பட்ட அவன் இரக்கத்தில் மேலிட்டவனாய் சொன்னது. “!கிருஷ்ணரே! ! என் உறவுமக்களே போரிடும் விருப்பத்துடன் முன் நிற்பதைப் பார்க்கும்போது,

1.29 என் உடல் நடுங்கி, வாய் உலர்வதாக, மயிர்க்கூச்செறிவதாக உணர்கிறேன்.

1.30 என் வில் கைநழுவுகிறது. காய்ச்சலில் தோல் எரிவதாக உணர்கிறேன். என்னால் உறுதியாக நிற்க முடியவில்லை. என் மனம் அலை பாய்கிறது.

உட்பொருள்:
எதிர்க்கும் பக்கத்தில்,
"தகப்பனார்" என்பது தோன்றும் மயக்கநிலை: அறிந்த அறியாத செயல்களின் மூலம் பிறப்பு, இறப்புகளின் தோற்றுவாய். மேலும்,
தாத்தா (பீஷ்மர்) – வியக்த உணர்வு
ஆசிரியர்கள் – நினைவுகளின் அடிப்படையான மனப்பதிவுகள்
தாய்வழித் தாத்தாக்கள் – விருத்திகள், அதாவது, நிதானமிழப்பின் மன அலைகள் மற்றும் ஸ்தூல ஆசைகள்
அண்ணன், தம்பிகள் – ஆணவ அவசரம்
மகன்கள் – ஆணவத்தின் விளைவுகள்
பேரன்கள் – ஆசைகளின் இனமறியா அலைகள்
நண்பர்கள் (அஸ்வத்தாமன்) – விருப்ப எண்ணங்களும் கற்பனைகளும்

ஆதரிக்கும் பக்கத்தில்,
துருபதன் - சர்வமும் அறிந்தவன்- சர்வக்ஞன், குண்டலினியின் பிறப்பு மூலம், உதவிகரமான மன அலைகள் – விருத்திகள்

என புரிந்து கொள்ளவேண்டும்.

உரை:
ஒரு சாதகன், தன்
a. ஆணவமைய சுவாபிமான உணர்வு
b. பூர்வாங்க ஆன்ம தரம் மற்றும் பலம்

ஆகியவற்றின்
தன்மைகளையும், உந்து போக்குகளையும் ஒரு சேர அறியும்போதும்,
அவைகள் ஒன்றுக்கொன்று எதிரெதிர் என அறியும்போதும்

“a” யில் கூறிய தன்மைகளை விடவேண்டியிருப்பதால், தள்ளிப்போடும் எண்ணமும் கலக்கமும் தலை தூக்கும்.

இந்தச் சவால் பயங்கரமானதாக தோன்றும். தன்குணாதிசயங்களுடன் மேலுள்ள ஒட்டுதலினால், ஆதாரமற்ற அதிக சுய பச்சாதாபமாகவும், கண்மூடித்தனமான, உணர்ச்சி சார்ந்த மரபாகவும் வெளிப்படும்.

அவன் பலவீனமானவானாக, பாதுகாப்பற்றவனாக, பயம் கவ்வியவனாக உணர்வான்.

சுவாபிமானம் ஒங்கிய மனிதனுக்கு, என்னதான் ஆன்மீக உந்தார்வம் இருந்தாலும், தன்னுடைய பிறவிக்குண வாசனைகளுக்கும், சூழலுக்கும் பழக்கப்பட்டவனாக, அவைகளை விடுவதான எண்ணம் கூட சந்திக்க முடியாத சவாலாக முன் நிற்கிறது.

அர்ஜுனன் கையிலிருந்து நழுவும் வில், எவை இல்லாவிட்டால் தியான ஓர்மையும், காரண புஷ்டியான வாழ்வும் சாத்தியமில்லையோ, அந்த வலிய தீர்மானம் எனும் ஆயுதத்தையும், நிறைவேற்றியே தீர்வதான மன உறுதியையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

மனோபலவீனமான சாதகன், நிதானமிழப்பு மற்றும் குழப்பத்தால் நிலைகுலைந்திருக்கிறான்.
எது தேவை என்றால்
மேம்பட்ட புரிதல்
உயர் சத்யங்களை எதிர்நோக்கும் வாய்ப்பு குறித்த துடிப்பான பேரார்வம்
ஆன்ம விழிப்புணர்வு பெற வற்றாத பேராவல்

அர்ஜுனனின் வில், கண்டறியும் சுதாரிப்புணர்வு மற்றும் சங்கல்பம் கொண்ட சாதகனின் செங்குத்தான முதுகெலும்பினையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது
அர்ஜுனனின் கையிலிருந்து நழுவும் வில், தியானச் செயலுக்குச் சித்தம் கொள்ளாமையைக் குறிக்கிறது.

விருத்தி எனும் சம்ஸ்க்ருத வார்த்தை, கலங்கிய மனத்தின் குதியாடல்களையும், செயலை, ஆசையை தூண்டிவிடுவதான மன அலையாட்டத்திற்குக் காரணமான எண்ணங்களையும் குறிக்கின்றன.

இந்த அலையாட்டத்தினை நிறுத்தி, தெளிந்த நிலைக்குத் திரும்பினால்தான் விழிப்புணர்வு துல்லியமாக இருக்கும். தூய பேருணர்வின் சமாதி நிலையை அப்போதுதான் அனுபவிக்க முடியும்.

தூய பேருணர்வு ஒரு நிரந்தர அனுபவமாக இல்லாவிட்டால், ஆன்ம உணர்வு என்பது விருத்தியின் விளைவுகளினால், அதாவது, மனக்கோணல்களான – பாதிப்பு , வலி, அசுத்தம், பந்தப்பட்டிருக்கை அல்லது மனக்கோணங்களான – பாதிப்பின்மை, வலியின்மை, சுத்தம், விடுவிக்கப்பட்டிருக்கை ஆகியவற்றுடன் ஈடுபட்டிருக்கும்.

இந்த ஸ்லோகங்களில், ஆன்மா என்பது அதன் ஆன்மீக வளர்ச்சிக்கு குந்தகமாயும், சாதகமாயும் இருப்பதான மனச்சாயல்களை ஒருசேரக் காண்பதாக விவரிக்கப்படுகிறது.

VRGC கருத்து:
இது, மன நல ஆலோசனை (counseling) தொடர்புடைய நல்ல கூர்நோக்கு (Observation). மனிதன் இயற்கையில், தான் இருந்து பழகி வாழ, இரண்டு எதிரெதிர் அறிபொருள் இருப்பதும், அந்த இரண்டில், தான் தன் புலன் சுகம் கருதி தேர்ந்தெடுத்த ஒன்று, காலப்போக்கில் கெட்டிப்பட்டுப் போய், தன் சுயரூபம் தனக்கு விளங்கும்போது அந்த சுயரூபத்தை அனுபவிக்கத் தடையென அறிவதால் எற்படும் ஒரு மன நிலை விளக்க இயலாதது.
ஒப்பிடுக - பாரதியார் “சுடர் மிகும் அறிவுடன் எனைப் படைத்துவிட்டாய்”
(அவ்வாறில்லாமல் என்னை சாதாரண புலனறிவாளனாகவே விட்டிருக்கக் கூடாதா? எனும் ஏக்கம் இதில் இருக்கிறது)
இரண்டு மனம் வேண்டும். இறைவனிடம் கேட்பேன். நினைத்து வாட ஒன்று: மறந்து வாழ ஒன்று. -- (ஒரே மனதால் இரண்டும் செய்யமுடியவில்லை எனும் பச்சாதாபம்)

1.31. கிருஷ்ணரே ! துரதிருஷ்டத்தின் சகுனங்களை நான் பார்க்கிறேர். போரில் என் உறவு மக்களைக் கொல்வதால் நல்லது எதுவும் எனக்குத் தென்படவில்லை.
1.32. நான் வெற்றியையோ, ராஜ அந்தஸ்தையோ, இன்பங்களையோ விரும்பவில்லை. (சுய தலைமை, சுயரூபக் காட்சி எனப்படுகிற) இம்மாதிரியான ராஜரீகத்திற்கும், களிப்பிற்கும், வாழ்க்கைக்கும் என்ன மதிப்பு ?

உரை:
காரண காரிய அறிவானது, உணர்ச்சியால் ஆட்கொள்ளப்படும்போது, ஒருவனின் பகுத்தறிவு நிலை தவறுகிறது. தன் முன்னுள்ள சவாலையும் கஷ்டங்களையும் முன்னறியலாம்.
உள்ள சூழ்நிலையைத் தக்கவைக்க, கலங்கிய நுண்ணறிவு, தன்னை நியாயப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் காரணவிளக்கமற்ற காரியத்தில் இறங்கும். இதுவே, இடறலுண்டாக்கும் குணாதிசயங்களை விலக்குவது தவறு எனவும், எந்த நன்மையையும் இது கொண்டு வந்துவிடாது எனும் நிலைப்பாடும் எடுக்கக் காரணமாகிவிடும்.
பழக்கப்பட்டுவிட்ட நினைவுகள், உணர்ச்சிகள், அபிப்பிராயங்கள் ஆகியன இல்லாத வாழ்க்கை, வாழத்தகாததாகத் தோன்றும். இந்தப் போரில் ஈடுபடுவதால் எந்த உருப்படியான விளைவும் ஏற்பட்டுவிடப்போவதாக தான் பார்க்கவில்லை என அர்ஜுனன் கூறுவதாகக் காட்டப்படுகிறார்.
தாமஸ குணத்தாலும், குழப்பத்தாலும் அபகரிப்பட்ட மனமுடைய சாதகனுக்கு, அறிவை உபயோகித்து அடையப்படக்கூடியதான உயர்வாழ்வு முன்னோக்கப்பட முடியாது.
அர்ஜுனனின் வார்த்தைகள் ஒரு குறுகிய கோணப்பார்வையில் வாழ்வையும் அதன் வாய்ப்புகளையும் வெளிப்படுத்துவது என நாம் விரைவில் அறியப்போகிறோம்.

VRGC கருத்து:
யாருமே தன்னை “நியாயகர்த்தா” அந்தஸ்த்தில் வைத்துக்கொண்டு பிறரிடம் தன்னை அவ்வாறு காண்பித்துக்கொள்ளவே விரும்புகின்றனர். மன நல ஆலோசனையில் இந்த நியாயகர்த்தா கருத்தில் ஒரு கட்டுக்குலைப்பும் மறுகட்டுருவாக்கமும் செய்வதே பிரதான சவால்.
லாப நோக்குடைய வணிகர் கூட வாடிக்கையாளரிடம், “எனக்கு லாபம் முக்கியமில்லே, சார். காசு சம்பாதிச்சு என்ன செய்யறது ? எல்லாரும் நல்லா இருக்கணும். அதான் நான் விரும்புறது” என்பார்.

"பழக்கப்பட்டுவிட்ட நினைவுகள், உணர்ச்சிகள், அபிப்பிராயங்கள் ஆகியன இல்லாத வாழ்க்கை, வாழத்தகாததாகத் தோன்றும் “ – J K யின் உரை இதனைச் சுற்றிச்சுற்றி வரும்.

1.33 யாருக்காக நாம் ஆட்சி, மகிழ்ச்சி ஆகியனவற்றை விரும்புகிறோமோ, அவர்கள் தங்களின் வாழ்வையும், செல்வங்களையும் துறந்து இங்கு அணி வகுத்துள்ளனர்.
1.34 ஆசிரியர்கள், தந்தையர்கள், மகன்கள், தாத்தாக்கள், தாய்மாமன்கள், மாமனார்கள், பேரன்கள், மைத்துனர்கள், மற்றும் பிற உறவு மக்கள்
1.35. அவர்கள் என்னைக் கொல்லும் நோக்கம் கொண்டிருந்தாலும், நான் அவர்களைக் கொல்ல விருப்பமில்லை. அம்மூவுலகுமே எனக்குக் கிட்டுவதாக இருந்தாலும் நான் அவ்வாறு செய்வதற்கு இல்லை, இந்த பூமியில் ராஜ்யம் எனக்கு எம்மாத்திரம்?
1.36. கிருஷ்ணரே ! திருதராஷ்டரனின் புதல்வர்களைக் கொல்வதால் நாம் அடையும் இன்பம் என்ன? இந்த உக்ரக்காரர்களை அழிப்பதால் நமக்குப் பாவமே.
1.37 எனவே, திருதராஷ்டரனின் புதல்வர்களாகிய இந்த நம் உறவு மக்களைக் கொல்வது நமக்குச் சரியல்ல. கிருஷ்ணரே ! இவ்வாறு செய்து நாம் எப்படி மகிழ்ச்சி அடைய முடியும்?
1.38. பேராசையால் ஆட்கொள்ளப்பட்டு குடும்பத்தின் அழிவிலும் நட்புத்துரோகத்திலும் உள்ள தவறை இவர்கள் பார்க்கவில்லை என்றாலும்,
1.39. நாம் நம் விவேக விசாரிப்பால் இந்தக் குடும்ப அழிவிற்குக் காரணமான புத்தியற்ற தன்மையை மறுத்து ஏன் போரிலிருந்து பின் வாங்கக்கூடாது?

உரை:
மன அழுத்தம், உணர்ச்சிவயப்படுதல், பகுத்தறிவற்ற நிலை என்பவைகளில் ஆட்பட்டிருக்கும் ஒருவனின் இயல்பான தன்மையோடு அர்ஜுனன் தன் கருத்துக்களை ஆதரித்து வாதிடுகிறார். சாதகன் இந்த வளர்பக்குவத்தில் இன்னும் மனித சுபாவத்தில் ஒட்டிகொண்டு அதற்கு வாதிட விரும்புகிறான்.
அவனுடைய பேருணர்வைப் (கிருஷ்ணரைப்) பார்த்து , “கண்மூடித்தனமான மனத்தின் (திருதராஷ்டரன்) தன்மைகளை (மகன்கள் அல்லது வாரிசுகள்) ஒழிக்க முயல்வது சரியானதல்ல” என கபடமின்றி கூறுகிறார்.
உபயோகமற்ற, கெடுதலான மனப்போக்குகளைத் துல்லியமாக அறிந்திருந்தாலும், சாதகன் தன் மனோவலிமையை போதுமான அளவு பயன்படுத்தி அவைகளை எதிர்க்கவும் ஆளவும் வல்லமையற்றிருக்கிறான்.
பிரச்னை இரண்டு முனைப்பட்டது:
1. அவசர சுயதிருப்தி (நுண்ணறிவுச் சோம்பல்)
2. செயல்படாமை
இந்தக் குழப்ப மன நிலையில் ஒருவன், எதிர்மறை மற்றும் அழிவுப்பூர்வ நிலைப்பாடுகள் ஆகியனவும் நேர்மறை மற்றும் ஆக்கபூர்வ நிலைப்பாடுகள் ஆகியனவும் கூடிப் பொருந்துவதான ஒரு வாழ்முறையை வடிவமைத்துவிடலாம் எனும் தவறான கருத்து கொண்டிருக்கிறான்.
பிரச்னையிலிருந்து விலகிவிடுதல் எளிதான தீர்வாக ஒருவன் கபடமின்றி நினைக்கிறான்.

ஸ்ரீ கிருஷ்ணர் மௌனமாக எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதனால், தன் பக்க “நியாய” ங்களைக் கொட்டித் தீர்க்கிறான் அர்ஜுனர். இந்தக் கொட்டித்தீர்த்தலை (Catharsis) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அனுமதிக்கிறார். இது மன நல ஆலோசனையில் முக்கிய பாகம்.

1.40 குடும்பங்கள் அழியும்போது சம்பிரதாயங்கள் அழியும். சம்பிரதாயங்கள் அழியும்போது குடும்பங்கள் கட்டுக்குலைகின்றன.
1.41 குலதர்மத்தின் கேடால், கிருஷ்ணரே!, பெண்களின் சீரழிவும், அதனால் வர்ணக்கலப்பும் ஏற்படும்.
1.42 குடும்பத்திற்கும் அதனை அழித்தோர்க்கும் குழப்பத்தால் சண்டை சச்சரவும், ஒழுங்கின்மையும் ஏற்படும். அதனால் அவர்களின் மூதாதையர் ஊட்டமின்றி அல்லலுறுவர்.
1.43 இந்த கலக குடும்பசீரழிவினைத் தரும் தவறான செயல்களினால், வாழ்வை நிலைநிறுத்தும் நித்திய தர்மங்கள் அழிகின்றன.
1.44 கிருஷ்ணரே, நாம் கேள்விப்பட்டதில்லையா! தர்மம் கெட்ட குடும்பங்கள் என்றும் துர்கதியில் இருக்கும்.


VRGCகுறிப்பு:
மூல ஸ்லோகங்களோடு ஒப்பிடுகையில் இங்கு மேலை நாட்டார்க்கு புரியாத சில விஷயங்களை ராய் தவிர்த்திருப்பது தெரிகிறது. ராய் ஆங்கிலத்தில் கூறியுள்ள வடிவத்திலேயே இங்கு தமிழில் சுருக்கித் தரப்பட்டுள்ளது.

உரை:
தியானத்தில் கவனத்தைக் குவித்து புலனாசைகளையும் ஆத்திரங்களையும் சாந்தப்படுத்துவதாலோ, அல்லது தினசரி வாழ்சூழலில் சுயசங்கல்பத்தில் கட்டுப்படுத்துவதாலோ, ஆசைகளின் நிறைவேற்றத்தை சாத்தியமாக்கும் சாதக அம்சங்கள் நிரந்தரமாக செயலிழக்கின்றன என சாதகன் தவறாக நம்புகிறான். இது உண்மை இல்லை என்றாலும், மேம்போக்காக தூண்டிவிடப்பட்ட சாதகனுக்கு, ஆன்மீகப் பயிற்சிகளைத் தவிர்க்க இது ஒரு சாக்காக இருக்கிறது.

இந்த அர்த்தமற்ற பயம் என்னவென்றால், புலன் சேஷ்டைகளை அடக்கும்போது, அவைகளின் செயல்பாடு ஒழுங்கற்றுப் போவதும், சுகம் உணரும் தன்மை பலமிழப்பதும் இதனால் ஆசைக்கூட்டங்களுக்கும் சுவாபிமான உணர்வுக்கும் (இங்கு குலப்பெண்களாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது), முரண் மற்றும் ஒழுங்கின்மை உருவாக்குவதான குழப்பத்தைத் தருகிறது என்பதுதான்.

இந்த நிலையில், ஒரு உயர்ஞானம் இல்லாத சாதகன், உடல், மன ஆத்திரங்களை பகுத்தறிவால் அடக்கினால்
அழிவுக்குரிய உந்துதல்கள் நீங்குதல்
பழக்கமாகிவிட்ட நடத்தைகளை ஆக்கபூர்வமாக மாற்றுதல்
பிராண சக்தியினை பாதுகாத்தல்
மனோசக்திகளை பலப்படுத்துதல்
மனமும் புலனறிவும தூய்மையாகுதல்
ஆகிய பலன் கிடைக்கும் என்றும் இதனால் வாழ்க்கை மேலும் ஆனந்தமாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்கும் என்றும் அறியமாட்டார்.

அகவய, மெலிதான புலன்கூறுகள், தத்துவங்கள் அல்லது மூல சாரங்கள் (தன்மாத்திரைகள்), அல்லது பார்த்தல், கேட்டல், சுவைத்தல், தொடுதல், முகர்தல் ஆகியனவற்றை சாத்தியமாக்கும் வெளிப்புலன்களின் மூலவஸ்துக்கள் ஆகியன நுண்ணறிவு மற்றும் தெளிந்த மனபரிபாகத்தால் அனுபவ சாத்தியமாகின்றன.

உடலளவு ஆசைகளைப் பூர்த்தி செய்யப் புலன்களைப் பயன்படுத்துதலானது, அளவில் அதிகமாகும்போது, அவை, ஸ்தூல மனக்கோணக் காட்சிகளுக்கும், கோண உணர்வுகளுக்கும் உபயோகமாகிறது.

ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள ஒருவன் பலமான உணர்ச்சிகளையும் ஆத்திரங்களையும் அனுமதிக்குமபோது, பிரச்னை தலையெடுக்கிறது.
ஆசைகள், காரணபுஷ்டியான, ஆக்கபூர்வ வெளிப்பாட்டுக்கு மாற்ற, உறுதியான பாவனையோடு கையாளப்பட வேண்டும்.

தியானத்தின் போதுகூட,
உள்காட்சிக்கும் ஆன்மஸ்மரணை விரிவுக்கும் துணைபோகாத ஆனால் சுகமாயிருக்கிற
புதிய அனுபவங்களும் இடை வழி ஆநந்த நிலைகளும்,
ஆகியன, எவ்வாறு மாற வேண்டுமென்றால்

ஆன்மஞானத்திற்கும் இறை அனுபூதிக்கும்
தூய ஆவலுறுமாறு மாற்றியமைக்க வேண்டும்.

ஆணவமும், தூயசுயமும்தான் ஆசைக்கூட்டத்தின் மூத்தபரம்பரை. ஆணவம் என்பது தன் இருப்புக்குத் தானே ஆதாரம் எனும் பொய்யறிவு. கவனிக்காமல் அலட்சியப்படுத்துவதால் ஆணவம் மறைகிறது. இறைபக்தனுக்கு (ஜீவாத்மா) இது ஆன்பலாபமே.

ஜீவாத்மா
தூய சுயத்தின் ஸ்மரணை
பிரார்த்தனை
பக்தி
தியானம்
சமாதி
ஆகியவற்றால் ஊட்டம் பெறாவிட்டால், ஒரேயடியாக அது தன்னை
மனக்கோணல்கள் மற்றும் மாற்றங்கள்
புலனின்பங்கள்
வெளியுலக சூழல்கள்
ஆகியவற்றில் ஈடுபடுத்திக் கொள்ளும்.

பரிணாமத்தின் வளர்போக்குகளை ஆதரிக்கும் உற்பத்திக் கோட்பாடுகளே வாழ்வை நிலைநிறுத்தும் நித்திய விதிகள்.
அவைகளின் செயல்பாடுகள் ஒழுங்கான ஸ்வரத்தில் பிரபவிக்கவில்லை என்றால், வாழ்வை அர்த்தபுஷ்டியாக்கும் இயற்கையின் வளர்போக்குகள் திறவாதலும், ஆன்ம வளர்ச்சிக்குத் திறவாதலும் தடைபடும்.

ஒளிராத உணர்வின் தன்மைகளான தூண்டல்களையும் செயல்களையும் ஒழுங்கமையச் செய்வதானது, பாதக விளைவுகளை உருவாக்கும் எனும் தவறான புரிதல் ஆதாரமற்றது.
கெட்டிதட்டிப் போன குணாதிசயங்களை பரிட்சைக்குள்ளாக்குவதும் மாற்றுவதும், ஆன்மாவின் திறவாதலுக்குச் சாதகமான உயர் தர சூழ்நிலைகளைக் கொடுக்கும்.

***
பதஞ்சலி யோக சூத்ரம் 2.1 ல்,
நடத்தைகளை சுவாதீனப்படுத்துதல்
மனதின் இருப்பு நிலைகள்
உணர்வின் இருப்பு நிலைகள்
ஆகியவற்றுக்கு சுய ஒழுக்கமே முதல் தேவையாக வலியுறுத்தப்படுகிறது.
புலன் மற்றும் மன தூண்டல்களை சீரமைத்தல்
அகத்தாய்வு
ஆழ்ந்த இயல்கடந்த விஞ்ஞானக் கல்வி
தியானம்
இறை பேருணர்வுக்கு ஆணவத்தை சரணடையச் செய்தல்
ஆகியன உயர் தர மனக்குவியத்திற்கு செயல்முறைகள். இதுவே கிரியா யோகத்தின் பாதை.
***
சரணடைந்த ஒரு சாதகன், பகல் கனவு, அரட்டை, வீண்வேலை ஆகியவற்றில் தன் ஆற்றலை வீணடிப்பதில்லை. மாறாக, குவியம் பெற்ற கவனத்தை, மனமாற்றம் மற்றும் ஆன்ம வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஈடுபடுத்துகிறான். தன் ஆற்றலை வீணடிப்பதில்லை.

1.45 ஐயோ! நம் மகிழ்ச்சியின் மீதுள்ள பேராசை காரணமாக நம் உறவு மக்களைக் கொல்லும் பெரிய தவறைச் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளோம்.

உரை:
ஒரு சாதகன், சிலசமயம், சுவாபிமானஉணர்ச்சியினால், அதன் மாயத்தோற்றங்களையும், கெட்டிப்பட்டுப் போன மனப்போக்குகளையும் சரியானதே என எண்ணுவது மட்டுமல்ல, அவை தான் உயர்தரமானவை என்றும் குழப்பிக் கொள்கிறான்.

இதன் காரணமாக, ஒரு ஆன்மதிறவற்ற சுவாபிமான சுயம், அறிவொளிக்குப் பதிலாக அக்ஞான இருட்டைத் தேர்ந்தெடுத்து, பழக்கமாகிப்போன எண்ணங்கள், மனக்கோணல்கள், உறவுகள், நடத்தைகள் ஆகியனவற்றை மாற்றுவதை எதனையும் அதனால் ஏற்படும் உளைச்சல்களை கருத்தில் கொண்டு இறுக்கமாய் மறுக்கிறான்.

அப்படிப்பட்டவன், பழக்கப்பட்டுவிட்ட இவைகளின் அலையாட்டத்திற்கு எதிராகச் செயல்படுவது - தன் இச்சைகளைப் பூர்த்தி செய்வதாகத் தோன்றுவதால் - அவை தவறானது என உறுதி பூணுகிறான். மேலும், உயர் அறிவு, ஆன்ம ஞானம் ஆகியன "சுயநல இச்சைகள்" எனவும் கொள்கிறான்.

VRGC கருத்து:
ஆணவம் எல்லாவற்றையும் தலைகீழாய்ப் புரட்டிப்போடும் இத்தன்மையை,
ஆவரணம் (உள்ளதை மறைப்பது),
விக்ஷேபம் (இல்லாததைத் தோற்றுவித்து அதுவே அசல் எனும் மாயையில் ஜீவனை வைத்திருப்பது)
எனும் இரண்டு கருத்துக்களால் விளக்குவதனை, நாநா ஜீவ வாதக்கட்டளை போன்ற வேதாந்த அரிச்சுவடி நூல்களில் காணலாம்.
இந்தியத் தத்துவங்களின் தீர்க்கமான சிந்தனை வியக்கத்தக்கது. ஆனால், இந்த வார்த்தைகள் கீதையில் ஏன் இல்லை என வியப்பாயிருக்கிறது.

1.46 ஆகவே, ஆயுதம் ஏந்திய திருதராஷ்ட்ர புத்ரர்கள் நிராயுதபாணியான, எதிர்க்காதவனான என்னைக் கொன்றால் மகிழ்ச்சியே.

உரை:
சாதகன்
மன உளைச்சல்களால் தாக்குண்டவனாய்,
உணர்ச்சித் தொய்வு கொண்டவனாய்,
முன்னேற்ற ஆர்வமற்று,
செயலார்வம் இழந்து,
மாற்றத்திற்கு ஆன பணிப்பளுவைப் பார்த்து ஸ்தம்பித்தவனாய், தற்காலிகமாக,
ஒளிராத மனத்தினுடைய (திருதராஷ்ட்ரன்) விபரீத போக்குகளுக்கும் உந்துதல்களுக்கும் "நம் தலைவிதி" என வேறு வழியின்றி ஒப்புதல் அளிக்கிறான்.

எவனோருவனும் உள்ளூர, பூர்வாங்க ஆன்மகுணங்களை உணராமையோ, அமுக்கி வைப்பதோ ஒரு நிரந்தர நிலையல்ல என அறிகிறான்.
உண்மை ஞானத்திற்குத் திறவாதலைத் தடுப்பவைகளை ஒருவன் எதிர்கொண்டே தீர வேண்டும் , மேலும், அவைகளை முனைந்து தடுப்பதோ அல்லது அவைகளைக் கரைக்க உயர்கருணைக்கு அனுமதியளிப்பதோ செய்தாக வேண்டும்.

சஞ்சயன் சொன்னது:

1.47 போர்க்களத்தில் இவ்வாறு பேசிய அர்ஜுனன், வில்லையும் அம்பையும் கை நழுவவிட்டு, வருத்தம் அழுந்திய நெஞ்சத்துடன் தேர்த்தட்டில் சாய்ந்தார்.

உரை:
முன்பு, பிடிதளர்வால் வில் நழுவியது. இப்போது, சுயப் பச்சாதாபத்தின் தன்மைகளான வருத்தம், ஏமாற்றம் ஆகியன மேலோங்கி, பயனற்றது எனக் கருதி, வில்லை (தியானம் செய்யும் அவனுடைய தீர்மானத்தை) நழுவவிடுகிறான். இதனை, உணர்ச்சி முதிர்வின்மை, நோய் நிலை சுவாபிமானம் மேலிட்டு அதனால் மறுதலித்ததாகவும் பார்க்க முடியும். அதனை உயர் நன்மைக்கு தடையுணர்வாகவும் பார்க்க முடியும். ஆனால், உயர் நன்மை தற்காலிகமாய் தடைப்பட்டாலும் தவிர்க்க முடியாதது.

அத்தியாய முடிவுரை:
இந்தக் கதையில் அர்ஜுனனும் கிருஷ்ணரும் பேசிக் கொள்வது, சுவாபிமான சுயத்தின் கெட்டிதட்டிப்போன உணர்வுகள், எண்ணங்கள், சாயல்கள், ஆகியவற்றையும் மற்றும் அதன் உயர் அறிவுக்கான ஆர்வம், அதனை உள்காட்சியால் முன்னோக்குவது ஆகியனவற்றையும் பிரதிநிதித்துவப் படுத்துவது என நினைவில் கொள்ளவேண்டும்

போட்டியானது,
சலனத்தன்மை மற்றும் குழப்பம் ஆகியவற்றுடன் கூடிய புலனறிச் சூழல்களுக்கு ஒட்டி இருப்பதான கட்டாயத்திற்கும்
விழிப்புணர்வை, முழுமைக்குத் மீட்பதான பூர்வாங்க உந்துதலுக்கும்
இடையே நடக்கிறது.

இந்த இரு உந்துதல்களும்
நாம் யார்? மற்றும் வாழ்வுடன் நம் உறவு என்ன? என சிந்திக்கும் போதும்
தியான முனைவொருமையிலோ அல்லது
சடங்குத்தனமான சாதாரண செயல்களிலோ மற்றும் உறவுகளிலோ
ஆழ்ந்திருக்கும் போதும் நமக்கு வெளிப்படையாய்த் தெரியும்.


இவ்வாறாக, முழுமை அறிவியலான, யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன சம்பாஷணையான கீதோபநிஷத்தில்,
அர்ஜுன விஷாத யோகம் (அர்ஜுனனின் மனக்கலக்கம் எனும் யோகம்)
எனத் தலைப்பிடப் பட்ட முதல் அத்தியாயம் முடிவுறுகிறது.








Powered by Blogger.