W210. இணைந்து ஐக்கியமான இதயங்களின் கோயிலில். (Whispers from Eternity - Tamil & English)
210. இணைந்து ஐக்கியமான இதயங்களின் கோயிலில்.
ஜீவர்களின் கடினமான கல்நெஞ்ச பூமியில் உன் மிருதுவான அல்லிமலர்ப் பாதம் நடனமாடாதென்பது பொருத்தமே. மற்றவர்களுக்காகக் காட்டும் தயையின் இதழ்களின்மேல் உன் கோமள பாதாம்புஜம் என்றும் நடனம்புரியட்டும்.
தெய்வத்தாயே, உன் நெஞ்சத்துடிப்புகளை நான் என்நெஞ்சில் உணரவேண்டும்; உன் ஆனந்தத்தை என் சுகத்திலும்; உன் ஆற்றலின் வழிகாட்டுதலை என் செயலிலும்; உன் பேருணர்வை என் ஆன்மாவிலும் உணரவேண்டும்.
தெய்வத்தாயே, என் அன்புமலர்கள் யாவற்றையும் உன் நிரந்தர பாதங்களில் நான் சமர்ப்பிக்கின்றேன்.
தெய்வத்தாயே, என் பக்தி மலர்மொட்டினை நன்கு விரித்து, உன் நறுமணத்தை அதன்மூலம் வெளிப்படுத்து; அது உன்னைப் பற்றி ரகசியக்குரலில் என்றும் ஒலித்துக்கொண்டே, என் ஆன்மாவிலிருந்து மற்றவர்களின் ஆன்மாக்களுக்கு பரவட்டும்.
என் அன்பை பிறரிடம் நான் காணுமாறு செய்ய வேண்டுகின்றேன். அந்த பேரன்பின் ஒளிப்பிரகாசத்தில் முகத்திரை நீங்கிய உன் சாந்தமுகத்தை நான் காணுமாறு செய்வாயாக.
நான் என்னை மற்றவர்களினில் காணுமாறு செய்வாயாக. எங்கள் இணைந்து ஐக்கியமான இதயங்களினில் நீ வீற்றிருப்பதை நான் என்றும் பார்க்குமாறு செய்வாயாக.
என் இதயத்தின் ரகசியக்குரலில், உன் ரகசியக்குரலின் சிலிர்ப்பை நான் உணர்கின்றேன். உன்மேல் கொண்ட என் அன்பின் தாபத்தினின்று வீசும் ஒளியில், உன் அமைதியானப் புனிதத் திருமுகத்தை மிகுந்த முயற்சிக்குப் பின் இறுதியில் நான் காண்கின்றேன்.
தெய்வத்தாயே, எங்கள் இதயங்களை இணைத்து ஐக்கியமாக்கி ஒரே இதயமாக்கு. அந்த இணைந்து ஐக்கியமான இதயத்தின் புனிதபீடத்தின்மேல், உன் எங்கும்நிறை இறைத்தன்மை கொலுவீற்றிருப்பதை நாங்கள் என்றும் கண்டுகளிக்குமாறு செய்வாயாக.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
210 In the Temple of United Hearts.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org