W75. நான் உன் அதீத-உணர்வின் பிராணசக்திப் பிரபஞ்சத்திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதை நான் அறியுமாறு செய். (Whispers from Eternity - Tamil & English)
75. நான் உன் அதீத-உணர்வின் பிராணசக்திப் பிரபஞ்சத்திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதை நான் அறியுமாறு செய்.
பிடிபடாத இந்த உலக ஒலி-ஒளிக் காட்சிகளைக் காண்கையில், தினமும் மாறிக்கொண்டே சுற்றிச்சுழன்று விறுவிறுப்பாக நடம்புரியும் ஜீவராசிகளின் வாழ்க்கை நாடகம், ஒரு மகத்தான கனவுத் திரைப்படக்காட்சியைத் தவிர வேறெதுவுமில்லை என்ற எண்ணம் ஏற்படுவது உறுதி.
உலகில் காணும் சோகங்கள், நகைப்புகள், வாழ்வின் முரண்பாடுகள், பிறப்பு-இறப்பெனும் கனவுகள், மாறிக்கொண்டே இருப்பவைகளின் தகவல் துணுக்குகள் என இவையாவும் நம் எல்லாப் புலன்களையும், எண்ணங்களையும் மோகப்படுத்துவதற்கும், பொழுது போக்குவதற்குமான பேசும்படங்களைத் தவிர வேறெதுவுமில்லை.
பேரியக்குனரான இறைவனே, எங்களை மகிழ்விக்கவும், பொழுதுபோக்கிற்காகவும், உன் பிரபஞ்ச-அதிர்வலைகளைக் கொண்டு, எல்லாப் புலன்களினால் வழியேயும் அறியுமாறு, பேசும் பிரபஞ்சத் திரைப்படங்களைப் புதுப்புதிதாக, முடிவில்லாமல் தொடர்ந்து அனுதினமும் காட்டிக்கொண்டே இருக்கின்றாய்.
மாய இயக்குனரே, உன் பிரபஞ்சப்படங்களை நாங்கள் பார்க்கவும், கேட்கவும் முடிவதோடு மட்டுமின்றி அவைகளைத் தொட்டு உணரவும் முடிகின்றன. உன்னுடைய கட்புலனாகின்ற, தொட்டுணரப்படுகின்ற, இரைச்சலிடுகின்ற, போலியாக வாழும் சப்த-நிழல்கள் தினசரி எங்கள் உணர்வுத்தளத் திரையில் காண்பிக்கப்படுகின்றன.
உன் அருட்கொடையால், நான் உன் சினிமா கொட்டகையில் துயரமும், நகைச்சுவையும் இரண்டும் கலந்த பகுதிகளை நடிக்கத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன். என் சோகமான பகுதிகளையும், மகிழ்வான பகுதிகளையும் நான் முறையாக நடிப்பதே நன்று. ஆனால், இறைத்தந்தையே, எனக்கு அவ்வப்போது என் வேலைகளிலிருந்து சில நாட்கள் ஓய்வு கொடு. அதன்மூலம், நான் என் அகவிசாரணையின் மேல்மாடத்திற்குச் சென்று, என் எண்ண-அவையோர்களுடன் கூடி, புன்னகைக்கும் இதயத்தினால் என்னுடைய சுய துயரக்காட்சிகளையும், நகைச்சுவைக்காட்சிகளையும் காண்பிக்கப்படுவதைக் கண்டுகளிக்க முடியும்.
என்னுடைய சொந்த வாழ்வின் துயரக்காட்சிகளை ஒரு விறுவிறுப்பான ஆர்வத்துடன் பார்க்க எனக்குக் கற்பி. அதன்மூலம், ஒவ்வொரு பெருந் துயரமான படத்தைப் பார்த்து முடித்ததும், "ஆ! அது விறுவிறுப்பும் ஜீவக்களையும் நிறைந்த ஒரு சிறந்த படம். அப்படத்தைப் பார்த்ததில் எனக்குத் திருப்தி, ஏனெனில், நான் அதிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்!" என நான் வியந்துரைப்பேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
75 Make me see that I am just acting in Thy super-sense vitaphone cosmic pictures.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org