MCCRF - A global volunteer network

W43. என்னை எல்லாம் ஆளும் உன் ஞானத்தின் சிங்கமாய் ஆக்கு. (Whispers from Eternity - Tamil & English)



43. என்னை எல்லாம் ஆளும் உன் ஞானத்தின் சிங்கமாய் ஆக்கு.

இறைவியின் சிங்கக்குட்டியான நான் துர்பலமுடைய மனித ஆட்டுமந்தை வாழ்க்கையில் ஏதோ ஒரு காரணத்தால் தூக்கி எறியப்பட்டேன்.

பயம், தோல்வி, நோய்களுக்கு வசமாகும் ஆடுகளின் நடுவே வெகுகாலமாய் வாழ்ந்து, நானும் அவைகளைப் போலே 'மே-மே'யென கோழைத்தனமாய் கத்தினேன். வஞ்சகமாய், தொடர்ந்து நைக்குந் துன்பங்களை நடுக்கி அச்சமுறுத்தும் என் உறுமலை மறந்து போனேன்.

மெய்யணர்வின் சிங்கமே, நீ என்னை ஆட்டுமந்தையில் இருந்து வெளியிலிழுத்து என்னை தியானக் குளத்திற்கு இட்டுச்சென்றாய். 'கண்ணைத்திற! உறுமல் செய்!' என நீ எனக்குக் கட்டளையிட்டாய். ஆனால், நான் என் விழிகளை இறுக்கமாய் மூடிக்கொண்டு 'மே-மே'யென பயத்தில் அலறினேன். உன் ஞான கர்ஜனை என்னுள்ளே முழுதும் பரவி அதிரவைத்தது. உன்னுடைய பலமான ஆன்ம வலுவுள்ள ஆட்டுவித்தலினால் என் கண்கள் திறந்தன. ஆ! அங்கு சலனமற்ற தெளிந்த குளத்தில் பிரதிபலிக்கும் என் முகம் உன் முகத்தைப் போலவே இருப்பதை எனக்குக் காட்டினாய்!

நான் என்னை இப்போது பிரபஞ்ச சக்தியை உள்ளடக்கிய சிங்கமாய் அறிகிறேன். அச்சத்தால், தளர்வால், துன்பத்தால் நடுங்கி எழும் ஆட்டுக்கத்தல் இன்றோடு ஒழிந்தது; இனி, எல்லாம் வல்லவனின் உயிரூட்டும் சக்தியைக் கொண்டு நான் கர்ஜிப்பேன்! அனுபவமெனும் காட்டில் உலாவி, சிறு ஜந்துக்களாய்த் திரியும் விரக்தியூட்டும் கவலைகள், தளர்த்தும் அச்சங்கள், அலைக்கும் கோணாய் அவநம்பிக்கைகள் போன்றவைகளைக் கவ்விக் பிடித்து இரக்கமற விழுங்குவேன்.

மரணமில்லா சிங்கமே, என்மூலம் சர்வவல்லமை படைத்த உன் ஞான கர்ஜனையால் உறுமுவாயாக!


தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா

Original:
43 Make me a lion of Thy all-conquering Wisdom.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!

Powered by Blogger.