MCCRF - A global volunteer network

W46. நானும், நீயும் ஒன்று என நான் உணருமாறு செய். (Whispers from Eternity - Tamil & English)



46. நானும், நீயும் ஒன்று என நான் உணருமாறு செய்.

உன் நெஞ்சச் சுடரிலிருந்து, பிரபஞ்சத் தோற்றத்தின் ஒளிப்பொறிகள் ஆதியில் வெளிப்பட்ட போது, உருவாகப்போகும் உலகங்களை எதிர்நோக்கிப் பாடும் ஒளித்தோரணங்களுடன் நானும் சேர்ந்து பண்ணிசைத்தேன்.

நான் உன் பிரபஞ்ச நெருப்பின் ஒரு தீப்பொறி. நீ வாழ்வின் சூரியன், உயிர்ப்பொறி திரவத்தால் நிறைந்துள்ள எங்கள் அநித்தியமான மனக்குவளைகளில் நீ எட்டிப்பார்க்கையில், எங்கள் பொன்மயமான சிறு மனித உணர்ச்சிகளில் அகப்பட்டுக் கொண்டாய்.

அழியும் தன்மையுடைய மாறிக்கொண்டே இருக்கும் ஒவ்வொரு உயிரினத்தின் தசைக் கண்ணாடிகளிலும், நான் உன் எங்கும்நிறை சக்தியின் சஞ்சலமான நாட்டியத்தைக் காண்கிறேன். சலசலக்கும் வாழ்க்கை ஏரியில், நான் உன் சர்வ வல்லமை கொண்ட வாழ்வினைக் காண்கிறேன்.

என் சாந்தமான மன ஏரியின் மேல் ஆரவாரித்து எழும் சஞ்சல ஆசைப் புயல்களை, நான் என் கவன ஒருமுகத்தினால் அவற்றைத் தடுத்து நிறுத்த, கிறிஸ்துவிற்கு கற்றுவித்ததைப் போல எனக்கும் நீ கற்றுக் கொடு. சலனமற்ற என் ஆன்ம ஏரியில், நான் உன் அசைவற்ற, அமைதியான முகத்தைத் தரிசிக்க விரும்புகிறேன். என் வாழ்வாகிய சிறு அலையின் எல்லைத் தடுப்பை உடைத்து விடு, உன் அளப்பரிய பெருவெளி என்மேல் பரவட்டும்.

என் இதயம் உன் நெஞ்சில் துடித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் உணரச்செய். நீயே என் கால்கள் மூலம் நடக்கின்றாய், என் மூச்சின் வழியே சுவாசிக்கின்றாய், என் கைகள் மூலம் செயலாற்றுகின்றாய், என் மூளையில் எண்ணங்களைக் கோர்க்கின்றாய் என்பதனையும் நான் உணரச்செய். நான் அழுது பெருமூச்சு விடுகையில் உன் உறங்கும் சுவாசம் விழிப்படையும். உன் லீலா விநோதத்தினால், உன் கனவுக்குமிழ்களாலான பிரபஞ்சம் எனை மயக்கிக் குழப்பும் உறக்கத்திலான அறைக்குள் மிதக்கின்றன.

உன் விண்மீன் மழையான இச்சா சக்தியே என் இச்சை வானில் பொழிகிறது. நீ தான் நானாக ஆகியுள்ளாய் என்பதை எனக்கு உணர்த்து. ஓ, என்னை நீயாகவே ஆக்கிக் கொள்; நானெனும் சிறுகுமிழ் உன்னுள்ளே மிதப்பதை நான் காணுமாறு செய்.


தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா

Original:
46 Let me feel that Thou and I art One
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.