8. அக்ஷரப் பிரஹ்ம யோகம் - பகவத்கீதை - The Eternal Way
பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).
பகவத் கீதை எட்டாம் அத்தியாயம்
8. அக்ஷரப் பிரஹ்ம யோகம்
(பூரண சத்ய யோகம்)
நிலைத்த சுயம்பு இருப்பான பேருணர்வே பூரணம் என்றழைக்கப்படுகிறது. ஏனென்றால், அதற்கும் மேலானது எதுவுமில்லை. இயற்கையின் குணங்களால் உருவான மனதால் அதன் உருக்காட்சி புலப்படாது. உள்ளுணர்வாலும் நேரடி அனுபவத்தாலும் அதன் இருப்புண்மையை விளங்கிக் கொள்ளலாம்.
அர்ஜுனன் வினவியது:
8.1. பூரண சத்யமாகிய பிரஹ்மம் என்றால் என்ன ? உன்னத ஆத்மா (அத்யாத்மா) எது? கர்மா என்றால் என்ன? உலகங்கள் (அதிபூதம்) மற்றும் தேவதைகள் (அதிதைவதம்) எனும் மூலக்கூறுகளின் ஆட்சியெல்லை மற்றும் தன்மை என்ன?
உட்பொருள்:
பூரண, சர்வ வியாபக, வரம்பற்ற பேருணர்வு என்பது யாது? தலைமையிலுள்ள ஆத்மப் பேருணர்வு எது? எது கர்ம விளைவுக்குக் காரணம் ? உலகங்கள் மற்றும் அவைகளை நியமமாக இயக்கும் தலைதேவதைகள் எனும் மூலக்கூறுகளின் ஆட்சியெல்லை மற்றும் தன்மை என்ன?
8.2. இவ்வுடலால் செய்யும் தியாகம் (அதியக்ஞம்) என்பதன் அடிப்படை என்ன ? சுயநியமத்தைக் கைக்கொண்டவனால் அவனுடைய அந்திமக் காலத்தில் நீ எவ்வாறு அறியப்படுகிறாய் ?
உட்பொருள்:
மாற்றத்தை விளைவாக உடைய புனிதக் கொடைகள் வழங்குவதின் முகாந்திரம் என்ன ? ஆன்ம ஞானத்தில் நிலைத்த சாதகன் தன் உடலை விடும் காலத்தில் இறைமைக்கு எப்படி விழிப்படைகிறான் ?
உரை:
இக்கேள்வி அம்புகளனைத்தும் புதிதாய் ஆன்ம பயணம் மேற்கொண்ட சாதகனின் தன்மைகள். ஆசிரியனின் மேல் மரியாதை மேலிட்டவனாயும் கற்பதில் ஆர்வம் மிக்கவனாயும் சரியான கேள்விகள் கேட்கிறான்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதில் கூறியது.
8.3. அக்ஷரப் பிரஹ்மம் எனும் பூரண சத்யமானது, அழிக்கமுடியாத நித்யம். அது உன்னதப் பேராத்மாவின் (அத்யாத்மா) உள்ளியல்பு. அது தோன்றுதலாகி உலகை வியாபித்து படைப்புகளின் சார இருப்பாக வியக்தப்படுகிறது. கர்மா என்பது பிரபஞ்ச வெளிப்பாட்டினை விளைவிக்கும் தூண்டுதல் காரணியும், ஆன்மாக்களை வெவ்வேறு சூழலில் பருவுடலுடன் வியக்தம் ஆக்குபவையும் ஆகும்.
உரை:
நிர்குணமான மாறா தூய பேருணர்வு பூரணம் எனப்படும். அதனை உன்னதப் பேராத்மா அல்லது உன்னதப் பேரிருப்பு எனலாம். அது பிரபஞ்சத்தின் இறைதள இருப்பிலிருந்து வெளிப்பாட்டின் எல்லா படிநிலைகளிலும் பரவியிருக்கிறது. ஆன்மாக்கள் என்பவை மனம் மற்றும் உடலுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதான உன்னதப் பேராத்மாவின் வியக்த அலகுகளே.
மூலகாரணங்களின் வலிய விசைகளிலிருந்து விளைவுகள் தோன்றுகின்றன. இறைமையிலிருந்து வெளியோடி வருவதான ஓம் ஸ்வரத்தின் தூண்டுதலால் ஆன்மாக்கள் மனம் மற்றும் ஜடத்துடன் ஒன்றி பிரபஞ்சத் தோற்றம் அமைகிறது. தெளியா நிலையாலோ ஆன்ம விழிப்பற்றோ ஆன்மாக்கள் பிரபஞ்ச வலிய விசைகளாலும், சூழலிலுள்ள வலிய விசைகளாலும், வலிய ஆசைகளாலும் ஆட்டுவிக்கப்படுகின்றன. அவைகளை விடுவிப்பதான ஆன்ம விழிப்படையும் வரை ஆன்மாக்கள் ஆட்டுவிக்கப்படுகின்றன.
குணங்களின் குறுக்காட்டங்களால் தோற்றுவிக்கப் படுவதான தேவதைகள்தான் ஜடஇயற்கையின் செயல்களை இயக்குகிறது.
8.4. மாற்றத்திற்குரிய ஜடஇயற்கையின் (அதிபூதம்) மீது குணங்கள் செலுத்தும் ஆதிக்கமே வெளிப்படு தோற்றங்களின் மற்றும் செயல்களின் மூலமாகும். இறையாத்மாதான் (அதிதெய்வம்) இந்த மாற்றத்தை வழிப்படுத்தும் சாதனமாகும். இவ்வுடம்பில் நான்தான் யாகத்தின் (அதியக்ஞம்) அடித்தளமாவேன்.
குறிப்பு:
ராமகிருஷ்ண மடத்தின் “அண்ணா” உரையையும் இங்கு சேர்த்து வாசிப்பது உசிதம்:
உடல் தாங்கியவருள் சிறந்தவனே! அழியும் இயல்புடையது அதிபூதம் எனப்படும். புருஷனே அதி தெய்வம். இந்த தேகத்தில் நானே அதியக்ஞம்.
உட்பொருள்:
ஜடஇயற்கையில் குணங்களின் கலப்புக் கூட்டினால் விளைபவைதான் வெளித்தோன்றிய உரு மற்றும் செயல்களின் அடிப்படை. இறைமையின் வாழ்வூட்டும் அம்சம்தான் எல்லா வகைமாதிரிகளின் உருமாற்றத்திற்கு காரணம். உடலிலும் பிரபஞ்சத்திலும் அர்ப்பணித்தலும் கொடைகளும் ஆன்மாவை அடிப்படையாகக் கொண்டவை.
உரை:
ஒரு சாதகன் தன் எண்ணங்களை, மன வேகங்களை, செயல்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறான். இதுதான் நமது வாழ்விற்கு சுயலாப எதிர்பார்ப்பின்றி நாம் அளிப்பதான கொடை. படைப்புகளின் பரிணாமவளர்ச்சிக்குத் தோதாக பிரபஞ்ச காரியங்கள் தடையற்ற ஓட்டம் கொண்டுள்ளன. இறைமையுடன் லயம் பெற, நம் செயல்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.
8.5. என்னை தியானித்தவாறே உடலை விடும் சாதகன், என்னில் ஒன்றிய நிலையை அடைகிறான். இதில் எதுவும் ஐயமில்லை.
உட்பொருள்:
உயிர் மாறாட்ட காலத்தில், தூயப் பேருணர்வின் தளத்தில் மனமொருத்திருந்தால், ஆன்மா இயல்பாகவே ஆன்மானுபூதிக்கு விழிப்படைகிறது. இது நிச்சயமாக நிகழ்கிறது.
8.6. உடலை விடுகையில் எந்நிலையில் மனம் லயித்திருக்கிறானோ, அந்நிலையையே அவன் அனுபவிக்கிறான்.
உரை:
உடல் நீங்கும் காலத்தின்போதோ, நீங்கிய உடனேயோ நமது பார்வைக் கோணத்தையும் அனுபவத்தையும் நிர்ணயிப்பது எதுவென்றால் (அம்மாறாட்ட காலத்துடையதான) உணர்வு, மன மற்றும் உணர்ச்சி நிலைகளே ஆகும். உடல் மாறாட்ட காலத்தில் ஒருவரின் விழிப்பு நிலை தெளிவானதாகவோ அமைதியானதாகவோ இல்லாதபோது மனவெளியை கர்மவாசனைகள் தொந்தரவுக்குள்ளாக்கி குழப்பி, சாதாரணமாக தியானம் செய்யும்போது மனம் உள்முகமானாலும் இன்னும் இலக்குப் பொருளுடன் ஒருமைப்படாதிருக்கும் நிலை போன்று இருக்கும்.
உடல் மாறாட்ட காலத்தில்
• அமைதியாகவும் தியானநிலையிலும் இருந்துகொண்டு
• தொந்தரவுக்குள்ளாக்கும் சூழலிலிருந்து விலகி
• உணர்ச்சிக் கொந்தளிப்புடனானவர் அல்லது குழப்ப மனத்தினரிடமிருந்து விலகி
இருப்பது சிறந்தது.
8.7. ஆகவே, மனமும் நுண்ணறிவும் என் மேல் நிலைநாட்டியவனாய் எல்லா நேரங்களிலும் என்னைத் தியானி. நிச்சயமாக என்னை வந்தடைவாய்.
உட்பொருள்:
உடல் விடுவதான இறுதிக் காலத்தில் எண்ண நிலை எதுவோ அதுதான் அதற்கடுத்த அனுபவத்தை நிர்ணயிப்பதால், உன் கவனமும் விவேகமும் வரம்பற்றதுடன் சதாகாலமும் உறவு ஒருமிக்கச் செய். இதனால் நிச்சயமாக இறைமையில் விழிப்பு அடைவாய்.
8.8. யோகப் பயிற்சியில் பக்குவமடைந்த, மற்றும் பூரணத்தை தியானிக்கும் சாதகன், அந்த அகண்ட நிலைக்கு விழிப்படைகிறான்.
உட்பொருள்:
சமாதி சித்திக்கப் பெற்று சுயத்தை வென்ற, மற்றும் தூயப் பேருணர்விற்கு பிசிறற்ற கவனத்தை ஓடவிடுபவனான சாதகன், அப்பேருணர்விற்கு அனுபூதனாகிறான்.
8.9. சர்வக்ஞனான, சூட்சுமத்தினும் சூட்சுமமான, சகலத்தின் ஆதாரமான, மனித மனத்தால் உருக்கொள்ள முடியாதவனான, சூரியன் போல ஒளி வெள்ளம் கொண்டவனான, இருளுக்கு அப்பாற்பட்டவனான, ஒன்றின் மீது தியானம் செய்யும் சாதகன்,
8.10. உடலை விட்டுச் செல்கையில், மனதின் ஒருமித்தலில் திடமாகி, பக்தியாலும் சமாதி பலத்தாலும் பிராணனை இரு புருவங்களின் மத்தியில் நிலைத்தவனாகியவனான அவனே இறைமைக்கு விழிப்படைகிறான்.
உரை:
பேருணர்வின் சுடரொளி பருப்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டிலும் பிரகாசிக்கிறது. அப் பேருணர்வு ஒளியினை காணுவதும் அதனுடன் கலப்பதும் உடல் விடுகையில் நடக்க வேண்டும். தியானத்தின் போது இவ்வொளியினைக் கண்டு பழக்கமான சாதகர்கள் தங்களின் சுய விருப்பத்தில் இதனைச் செய்து விடுகின்றனர். புறவயச் சூழல் மற்றும் புலன்வய விஷயங்களிலிருந்தும் மன ஓட்டங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்ட சாதகன் சமாதியை அனுபவிக்க “புறவுலகிற்கு இறக்கிறான்”. பேருணர்வு ஒளியுடனான இறுதி ஒன்றிப்பு “மகாசமாதி” அல்லது “ மேதகு ஒருமை” எனப்படும். பிராணனை சக்கரங்களின் வழியாக யோகக் கண்களுக்குத் திருப்பி விடுவது முதல் படி. உள்ளொளி காண்பதன் மூலம் அதில் மனம் ஒருமித்து தன் விழிப்புணர்வை அதில் முழுவதுமாக அமிழ்த்தலாம்.
8.11. வேதம் அறிந்த ஞானிகள் நித்யமானது என எதை அழைக்கிறார்களோ அதனை உனக்கு விளக்குகிறேன். பற்றற்ற துறவிகள் அதனில் நுழைகிறார்கள். அதன் மேல் உள்ள விருப்பார்வத்தால் அவர்கள் பிரஹ்மச்சர்யம் என அழைக்கப்படுவதான சுய நியம வாழ்வை வாழ்கின்றனர்.
உரை:
தன்னார்வ எளிமையே துறவியின் வாழ்க்கைப் பாணி. இவ்வாழ்வு வாழ ஒருவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளத் தேவையில்லை. வாழ்வுக்குத் தேவையான அடிப்படை மீது கவனம் கொடுத்தால் போதும். பிரஹ்மச்சர்யம் என்பது பிரஹ்ம = இறைவன், மற்றும் சர்யம் = அணுகுவது அதாவது உள் நோக்கிய பயணம். அதாவது, ஆன்ம விழிப்பில் நிலைத்து வாழ்வது, நினைவுகள் ஒழுங்கற்று போகவிடாமை, சக்திகளை முக்கியமல்லாதவற்றிற்கு விரயம் ஆக்காமை. இயற்கை சார்ந்த, முழுதும் இயக்கம் நிறைந்த ஆக்கபூர்வ வாழ்வில் இதனை நிறைவேற்றலாம்.
8.12. புலன்வாயில்களை மூடி, இருப்பின் உள் ஆழ்ந்த மையத்தில் விழிப்பை குவித்து, பிராணனை உயர்சக்கரத்தில் வைத்து, தியான ஒருமையில் நிலைத்து;
8.13. இறைமையில் மூலம்கொண்ட ஒற்றை ஒலியான ஓம் ஸ்வரத்தை உச்சரித்தவாறே, உடலைத் துறப்பவனான சாதகன், உயர் சித்திக்கு விழிப்படைகிறான்.
உரை:
உடல் மற்றும் மனப் போக்குகளை வெல்லவும், உணர்வு நிலைகளை வேண்டிய நிலைகளில் தன் உந்துதலில் மாற்றிக்கொள்ளவும் (உதவுவதான) பிராணனை யோகி தன் நியமத்தில் ஓட விடுவதற்கு திறனளிப்பதான தியானத்தை அனுசரிக்கலாம். நினைவையும் பிராணனையும் தண்டுவடத்தின் வழியாக சக்கரத்திற்கு, யோகக் கண்கள் மற்றும் உச்சந்தலைக்கு கொண்டு வருவது ஒரு வழி. ஆன்மாவின் பிராணன் மூளையின் கீழ்ப்பகுதியிலுள்ள மெடுல்லா ஓப்ளாங்கேட்டாவிலிருந்து இறங்குவதால், சாதகன் பிராணனை அதன் இருப்பிடத்தை நோக்கி மேலே திருப்பி விடுகிறான். இதனால் யோகக் கண்களுக்கு நினைவு உள்முகமாகிக் குவிவதானது நன்றாக நடைபெறுகிறது. அதன் பிறகு ஓம் ஸ்வரத்துடனும் பேருணர்வு ஒளியுடனும் லயிப்பதுதான் பாக்கி. ஓம் தானாகக் கேட்கிறதென்றால் அதனை உச்சரிக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறில்லாத பட்சத்தில் ஓம் மந்திரத்தில் மற்றும் உள்ளொளியில் லயிப்பது முன்பாகச் செய்யவேண்டியது. லாகவம் எட்டும் வரை இதனை பயிற்சியாக மீண்டும் மீண்டும் செய்தாகவேண்டும். இதனாலேயே இறுதிக் காலத்தில் உடல் பிரியும் போது எளிதாக இது உபயோகமாகும்.
8.14. என்னை மட்டும் இடையறாமல் தியானம் செய்யும் சாதகனுக்கு நான் எளிதில் சித்தியாகிறேன்.
உட்பொருள்:
இறைமையில் மனமொருமித்து எப்போதும் அதில் அமிழ்ந்திருப்பவன் அந்த சமாதி அப்யாசிக்கு இறைமை எளிதில் உணரப்படுகிறது.
8.15. என்னருகில் வருபவர்களான அந்த மகாத்மாக்கள் யோக அனுஷ்டானத்தில் தேர்ந்தவர்களாய், குறையுடைய பிரபஞ்சவெளியில் மறுபடியும் பிறப்பெடுப்பதில்லை.
உட்பொருள்:
புலனறியா மண்டலங்களின் உணர்வுகளுக்கு விழிப்படைந்தவர்களான உன்னத ஆன்மானுபூதிமான்கள், அடிக்கடி சீர்குலைவு அனுபவிப்பதான ஜட பேருலகிற்குத் திரும்புவதில்லை.
8.16. இறைமையின் தளத்திற்கு வெளியேயிருப்பதான வெளிப்பாட்டு மண்டலத்தில்தான் மறுபிறப்பின் நிகழிடங்கள் உள்ளன. என்னில் விழிப்படைந்தவன் இதற்குள் திரும்புவதில்லை.
உட்பொருள்:
மூல இயற்கை மற்றும் காரண, விண்ணக, மற்றும் ஸ்தூல தளங்களுக்கு மயக்குறு ஆன்மாக்கள்தான் திரும்ப வருவார்கள். இறைமைக்கு முற்றிலும் விழிப்பானவர்கள் இவற்றிற்குள் திரும்புவதில்லை.
8.17. இறைவனின் பகல் மற்றும் இரவு தனித்தனியே ஆயிரம் யுகங்கள் என அறிந்தவர்களே இரவு பகல் என்பதை உண்மையில் அறிந்தவர்கள்.
உட்பொருள்:
பிரபஞ்ச வெளிப்பாடு ஆயிரம் சுற்றுகள் எனவும், அதுதான் இறைவனின் பகல் சுற்று எனவும், அதேயளவு காலம் இரவு சுற்று எனவும் அறிந்தவர்கள்தான், இரவு பகல் என்றால் என்ன என அறிந்தவர்கள்.
உரை:
ஞானதிருஷ்டியாளர்கள், தோராயாகமாக 400 பில்லியன் வருடகால அலகு கொண்ட காலகட்டங்களில் அல்லது யுகங்களில் பிரபஞ்ச படைப்புகள் நடந்தன என கற்பித்தார்கள். இத்தகைய ஆயிரம் சுற்றுக்கள் கொண்டதே புறவயத் தோற்றப் பரிணாமம் ஏற்பட்ட ஒரு நாள் எனக் கொண்டு ஒரு பிரபஞ்சப் படைப்பின் காலம் 400 ட்ரில்லியன் ஆண்டுகள் எனக் கணக்கிடலாம். இப்போதைய கணக்கின்படி, நம் பிரபஞ்சத்தின் வயது 20 பில்லியன் முதல் 22 பில்லியன் ஆண்டுகளாக கொள்ளப்படுகிறது; எனினும் அது இன்னும் தன் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறது. ஸ்ரீ யுக்தேஷ்வர் அவர்களின் கணக்கு விண்வெளிப் பால்வீதியில் சூரிய மண்டல மற்றும் அதனைச் சார்ந்த பூமி மற்றும் பிற கிரகங்களின் இயக்கப் பின்னணியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 24000 ஆண்டுகள் கொண்ட சுற்றில், 12000 ஆண்டுகள் ஏறுமுக ஆண்டுகளாகவும், 12000 ஆண்டுகள் இறங்குமுக ஆண்டுகளாகவும் கணக்கிட்டுள்ளார்.
8.18. இறைவனின் நாட்பொழுது புலர்கையில் அவ்யக்த (வெளிப்படா) மண்டலங்களிலிருந்து தோற்றங்கள் எழுகின்றன. அந்தி சாய்கையில் அத்தோற்றங்கள் அனைத்தும் வெளிப்படா மண்டலங்களில் தோய்கின்றன.
உட்பொருள்:
பிரபஞ்ச வெளிப்பாட்டுச் சுழற்சியின் தொடக்கத்தில், இயற்கையின் எல்லா அம்சங்களும் மூல இயற்கையின் அவ்யக்த (வெளிப்படா) மண்டலங்களிலிருந்து தோன்றி, பின் அதன் முடிவில் எதிலிருந்து தோன்றியதோ அந்த மூலத்திற்கே திரும்பிக் கலக்கின்றன.
உரை:
இறைவனின் இரவில், குணங்கள் மூல இயற்கையில் சலனமற்று இருக்கின்றன. இறைதளத்திலிருந்து எப்போது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டு படைக்கும் தூண்டுதல் எழுகிறதோ, அப்போது இந்தச் சலனமின்மையில் ஒரு குறுக்கீடு ஏற்பட்டு மூலஇயற்கை உருவம் சிதைந்து தோன்றுதல் மீண்டும் ஆரம்பிக்கிறது.
8.19. தோற்றச்சுழற்சியில் வெளித்தோன்றும் பல்லாயிரக்கணக்கான படைப்புகள் அனைத்தும், இரவு வந்தால் மறைந்தே தீருவதும், விடியும்போது எழுவதுமாயிருக்கின்றன.
உரை:
மூல இயற்கையானது அதன் தோற்றுவாயும் காப்பதுமான பேருணர்வின் அளவுக்கு நித்யமானது. பிரபஞ்சம் என்றும் படைக்கப்படுவதோ அழிக்கப்படுவதோ இல்லை. மூல இயற்கையிலிருந்து அது வெளிப்பட்டு மீண்டும் அதிலேயே ஐக்கியமாக்கப்படுகிறது. அதன் புறவய வெளித்தோன்றல் குணங்களின் ஆட்டத்தினால் தொடர்கிறது. குணங்கள் சமநிலை அடையும்போது மீண்டும் தோன்றா நிலை அடையப்படுகிறது. எதிர்காலத்தில் நமது பிரபஞ்சத்தின் அழிவு பல ட்ரில்லியன் சூரிய ஆண்டுகள் கழித்து நடைபெறும்.
பிரபஞ்சங்களும் அதன் நானாவித துணை நிகழ்வுகளும் இறைவெளியின் சிலிர்ப்பாலும் அவைகளின் உள்ளார்ந்த குணக்கலப்பாலும் உருவாவதைப் போல, நம் நினைவு வெளிக்கிளம்ப யத்தனிக்கும்போது, நம் வியக்த விழிப்பு மண்டலம் சிலிர்ப்புற்று மனோநிகழ்வுகளை உருவாக்குகிறது. இந்நிலையில் மனப்பதிவுகள் நிச்சலனமாயிருந்தால், நாம் நினைவற்ற ஒரு சாந்தமோனத்தை அனுபவிக்கலாம். விழிப்பு நிலை புறவயமாகும்போது மீண்டும் எண்ணங்கள் தோன்றும்.
சமாதி பயிற்சியாளர் ஆன்ம விழிப்பை புலன் விஷயங்களிலிருந்தும் மன நிலைப்பாடுகளிலிருந்தும் அகற்றுவதான தூயப் பேருணர்வினை உணர்வதை இலக்காகக் கொள்ளவேண்டும். அதனால், இதே நிலையில் அல்லது பிற எந்த சூழலிலும் அகவயத்தில் நிலைத்தவாறே ஒளியூட்ட அறிவோடு வாழலாம்.
என்னுடைய முதலாமாண்டு சீடத்துவப் பயிற்சியின்போது பரமஹம்ச யோகாநந்தாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் எனக்கு ஐயங்கள் ஏதேனுமுண்டா என் வினவினார். நான், அவருடைய நூல்களில் அவர் எழுதியிருந்த சில ஞானிகளைச் சுட்டிக் காட்டி அவர்கள் முற்றிலும் விடுதலை பெற்றவர்கள்தானா அல்லது அவ்வாறில்லையா என சந்தேகம் கலந்த ஆச்சரியத்துடன் கேட்டேன். அவர் கூறினார். “அவர்கள் எல்லோருமே முடிவான முக்திபெற்றவர்களல்ல. இறையொருமை காட்டும் களிப்பிற்கே பல லட்சம் ஆண்டுகளுக்கு, இறைமையில் முழுவிழிப்புப் பெறுமுன், சிலர் திருப்தி அடைந்துவிடுகிறார்கள்” என்று கூறியவர், சற்று நிறுத்தி, “ஆனால் நீ, அவைகளைக் கடந்து, முடிவு வரை செல்!” என்றார்.
8.20. தோன்றா வெளியை மேலூடுருவி இன்னொரு மேம்பட்ட தோன்றா வெளி உண்டு. அது முன் சொன்ன தோன்றா வெளி அழிகையிலும் தான் அழியாமலிருக்கும்.
உட்பொருள்:
மூல இயற்கையின் தோன்றா வெளியை மேலூடுருவி அதனை விட உயர்ந்ததும் பிரபஞ்சம் மூலத்தில் லயிக்கும்போதும் தான் அழியாமலிருப்பதான இறைவெளியின் தோன்றா வெளி உள்ளது.
உரை:
இறைமூலமானது, மூல இயற்கையின் தோற்றுவாயும் அதனிலும் மேலானதுமாகும். தோற்ற காலச் சுழற்சியில் பிரபஞ்ச ஒடுக்கத்தின்போதும் இறைமூலமானது தன் இருப்பைத் தொடர்வதாகும்.
8.21. பூரணமான இந்த தோன்றா வெளி அழிக்கவொண்ணாததும் நித்யமானதுமாகும். அனைத்தும் மேலூடுருவிய தளத்தினதும், எதை அறிந்தபின் சாதகர்கள் விடுவதில்லையோ அவ்வளவு உயர்வானதுமாகும். இதுதான் என் உன்னத ஆட்சிக்களம்.
உட்பொருள்:
இறைமையின் இந்தத் தோன்றா வெளி அழிக்கவொண்ணாததும் நித்யமானதுமாகும். இந்த மேலூடுருவிய மட்டத்தை சாதகர்கள் உணர்ந்துவிட்டால், பின் இயற்கைப்படைப்பு வெளிக்குத் திரும்புவதில்லை. இதுதான் கால ஸ்பர்ஸமற்ற பூரண உன்னத இருப்பு வெளி.
உரை:
யோகசமாதியின் உண்மையான இலக்கு எதுவென்றால்
• இறையனுபூதி எனும் உச்சமட்ட முழுமைக்கு விழிப்பாவதை மீட்பதான,
• குணங்கள் எனப்படும் இயற்கை விண்விசையின் ஆளுமையை எதிர்க்கச் சக்தியற்ற உறவினை உதறுவதான விழிப்பினைப் பெறுவதாகும்.
பிசிறற்ற அந்த அனுபூதி நிலைத்துவிட்டால், ஆன்மா, இயற்கையின் செயல்களோடு கண்மூடித்தனமாக ஈடுபடாது.
8.22. பற்றுறுதியான பக்தியால் அனுபூதமாவதான இந்த உன்னத நிலை; படைப்புகள் அனைத்தும் இதில் புகலிடம்கொண்டும், பிரபஞ்சம் முழுதும் இதனால் நிறைக்கப்பட்டும் உள்ளது.
உட்பொருள்:
இந்த மேலூடுருவிய நிலை, தடுமாறாத உறுதியான பக்தியால் உணரப்படுகிறது. பிரபஞ்சத்தை நிறைத்திருக்கும் இதில்தான் வெளித்தோன்றலான எல்லாப் படைப்புகளும் வசிக்கின்றன.
உரை:
தடுமாறாத உறுதியான பக்தி, உணர்வின் தூய நிலை அனுபூதமாவதை சாத்தியப்படுத்தி, ஆன்மாவின் தன்மைகள் தானே திறவாக சுய ஊட்ட ஆன்மநிலைகளைச் சமர்ப்பித்து நம் ஆக்கபூர்வச் செயல்பாடுகளுக்கான ஒரு பேரார்வம் நிகழ்சாத்தியமாக்குகிறது. ஆனால், இது ஏதோ ஒரு அந்நியமான வெளியில் இருப்பதான சேரிடம் அல்ல. இது நாம் எங்கிருக்கின்றோமோ அங்கேயே, நம் ஆழ்மையத்தில் ஊன்றியிருக்கிறது.
8.23. யோகம் பயில்வோர் மறுபிறவி எடுப்பதை அல்லது எடுக்காததை எது நிர்ணயிக்கிறது என இப்போது விவரிக்கப் போகிறேன்.
உட்பொருள்:
சமாதி பயில்வோர் மறுபிறவி எடுப்பதை அல்லது எடுக்காததை எது நிர்ணயிக்கிறது என இப்போது விவரிக்கப்படும்.
உரை:
ஆன்ம விழிப்பு தெரிந்தோ தெரியாமலோ இயற்கைப் பரப்புடன் அடையாளமாகும்போது இயற்கையின் விசைகளோடும் உடன் தோன்றக்கூடிய சூழல்களோடும் உள்ள உறவு, அந்த இயற்கை உறவுடன் விழிப்புணர்வு அடையாளமிழக்கும்போது விலகும். விழிப்பற்ற ஆன்மாக்கள், சூழலின் பிடியில் கவ்வப்பட்டு விதியை தனது வசமின்றி வரவழைத்துக் கொள்வதானது, சாதாரண மக்கள் உறக்கத்தின்போது கனவினைத் தேர்ந்தெடுப்பது போலாகும். விழிப்பு போதும்போதாமலிருக்கும் ஆன்மாக்கள், தங்களின் எண்ணங்களுக்கும் சூழலுக்கும் ஓரளவு நியம அதிகாரம் பெற்றுவிடுகின்றனர். முழு விழிப்புப் பெற்ற ஆன்மாக்கள், நுண்ணறிவுடன் தேர்ந்து, இயற்கைப் போக்குகளுடன் உடனோடி வாழ்பவர்களாகவும், விருப்ப நியமனத்தில் அதனை விட்டுவிடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
8.24. அக்னிப் பிரகாசம், ஜோதி, பகல், சுக்ல பக்ஷம், உத்தராயண காலம் – பூரணத்தை அறிந்து இவற்றில் உடம்பை விட்டவன் அந்த பூரணத்திற்கு விழிப்பாகிறான்.
உரை:
சமாதி பயிலுவோருக்குப் புரியக்கூடிய சங்கேத பாஷை இச்சுலோகத்தில் உள்ளது. சில யோகிகள் வளர்பிறையில், இளவேனில் மற்றும் வெயில் காலத்தில், மற்றும் பிற அண்டவெளி ஹோரைகள் சாதகமாயிருக்கும்போது உடம்பை விட எத்தனிப்பார்கள். அதைவிட, எவ்வாறு சூட்சும சக்திகளின் ஆதரவைப் பெறுவது எனும் அறிவுடையவர்களாவது முக்கியம்.
நெருப்பும் ஒளியும், ஆன்ம விழிப்பு எனும் பகலுக்குத் தன்மைகளான உயிர்மை மற்றும் வெளிச்சம் என்பதாகும். நிலவு என்பது உணர்வின் பிரதிபலிப்பாக சாதகனின் கவனம் பெறும் சூழலை அறியும் அறிவை அடையாளப்படுத்துகிறது. வளர்பிறை என்பது அந்தச் சூழலறிவு நாளுக்கு நாள் வளர்வதைக் குறிக்கிறது. உத்தராயாணம், சூரியனின் மிக வெளிச்சப் பக்கத்திற்கு அது திரும்புவதைக் குறிக்கிறது. யோகிகள் உடலின் முன்பாகத்தை கிழக்கு எனக் கொள்கிறார்கள். மனதால் ஆளப்படும் புலன்கள் மற்றும் அவைகளின் சுகானுபவமும் உடலின் முன்பாகத்தைச் சேர்ந்தவை. உடலின் முதுகுப் பாகத்தில் தண்டுவடம் மற்றும் சக்கரங்கள் இருக்கின்றன. அது மேற்குப் பகுதியாகக் கொண்டு, புலன்களில் சுகானுபவ விலக்கத்திற்கு சாதகனின் அடைக்கலமாகிறது.
தண்டுவடத்தின் கீழ்பாகம் தெற்கு எனக் கொண்டு, கீழ் மூன்று சக்கரங்களின் ஆதிக்கத்தில் அடங்கி, மாயத் தோற்றங்களுக்கும் சுயம் மேலோங்கிய அனுபவங்களுக்கும் தொடர்புடையதாகிறது.
தண்டுவடத்தின் மேல்பாகம் வடக்கு எனக் கொண்டு, மேல் சக்கரங்களின் ஆதிக்கத்தில் அடங்கி, தெளிவான காட்சி மற்றும் புலன்பிடிபடா உணர்வுகளுக்குத் தொடர்புடையதாகிறது.
எனவே, உடலை விடுவதற்கு ஏற்ற சமயம் எதுவென்றால், உணர்வின் உள்ளொளியான சூரியன், மேல்நோக்கியதான வடக்கில் இருக்கும் யோக விழிகள் மற்றும் சகஸ்ராரச் சக்கரத்திற்கு ஏறும்போது ஆகும்.
இந்தச் சாதகச் சூழலில் உடலை விடுவதானது, புலன் விஷயங்களிலிருந்தும் அத்தகைய மனோநிலைகளிலிருந்தும் ஆன்மவிழிப்பு விலகி, விடுதலைக்கு ஆன்மா விழிப்பாவதை அனுபவ சாத்தியமாக்கும்.
8.25. புகை, இரவு, கிருஷ்ணபக்ஷம், தக்ஷிணாயநம் – சந்திர ஒளிப்பாதையான இவற்றில் உடலை விடுபவன், மறுஜென்மம் எடுக்கிறார்.
உரை:
புகை – மங்கிய தெளிவற்ற காட்சிகள்.
கிருஷ்ணபக்ஷம் – தன் சொந்த ஆதார ஒளியினாலன்றி பிரதிபலிக்கப்பட்ட உணர்வு தெளிவற்று இருத்தல்.
தக்ஷிணாயநம் – உள்ளொளி கீழ்முகமாக கீழ்சக்கரங்களில் அதிக தொடர்பு கொண்டு மாயத்தோற்றங்களுக்கும் சுகானுபவங்களுக்கும் ஈடுபடுதல்.
இச்சாதகமற்ற சூழலில் உடல் விடுவதானது, ஆன்மா தொடர்ந்து மாயத்தோற்றங்களுக்கும் சுகானுபவங்களுக்கும் ஈடுபடுதலுக்குள்ளாகிறது. எனவே, மறுஜென்மத்திற்கு ஆயுத்தமாகின்றது.
ஸ்தூல உடலெடுப்பதான மறுஜென்மத்திற்கு ஆளாகாமல், விண்ணக மற்றும் காரண தளத்தில் ஆன்ம விழிப்பு பெறவும் எப்போதும் வாய்ப்புண்டு.
8.26. இவ்விரண்டு மார்க்கங்களின் இயக்கங்களும் உலகில் நித்யமாக உள்ளவையாகக் கருதப்படுகின்றன. ஒன்றால், இந்த இடத்திற்கு பிறவாமையையும், இன்னொன்றால் மீண்டும் பிறப்பதும் நடக்கின்றன.
உரை:
சூரியப்பாதை இறுதி அனுபூதிக்கு இட்டுச் செல்கிறது. இருட்டுப் பாதையோ மயக்கத்திற்கும் மாயத்திற்கும் தொடரச் செய்கிறது. உடல் விடும்போது, முன் செய்த பயிற்சி பலத்தால், பூரண சாதகன் நினைவை வெளியிலிருந்து இழுத்து தண்டுவடப் பாதையில் இட்டு விழிப்பினையும் பிராணனையும் சக்கரங்களில் மேலெழும்பச் செய்கிறான்.
இதனால் நிகழும் மாற்றங்களாவன –-
மூலாதாரத்தில் – ஸ்தூலப் பெரும்பற்றுகள் விலகுதல். .
ஸ்வாதிஷ்டானத்தில் – சூட்சுஷமப் பற்றுகள் விலகுதல்.
நாபிச்சக்கரத்தில் – மன நிகழ்வுகளுக்கு மயக்குறதலிலிருந்து விலகுதல்.
அனாஹதத்தில் – சுவாபிமான உணர்வு விலகுதல்
விசுத்தியில் – சுயம் மேலோங்கிய அனுபவங்களின் மீதான பற்று விலகுதல்
ஆக்ஞாவில் – ஆனந்தம் மற்றும் சூட்சுமக் காட்சிகள் மீதான பற்று விலகுதல்.
இதனால் உள்ளொளியை அடைதலான அனுபவம் சித்திக்கிறது.
பிராணனானது, ஆக்ஞாவிலும் சகஸ்ராரத்திலும் மேல் நோக்கி ஏறுவதால், சூழலைப் பற்றிய முழுமையற்ற காட்சி மற்றும் அறிவு தருவதான பிரதிபிம்ப ஒளியினை, உள்ளொளிப் பிரகாசம் நீக்குகிறது.
சாதகன் பின்னர், இந்தப் பிரகாசமான உள்ளொளிக்கு முற்றிலும் சரணடைந்தவனாய், யோகக் காட்சிகளையும் பிற சலனக்காட்சிகளையும் புறக்கணிக்கவேண்டும். யோகக் கண்களில் ஒளிப்பாதை காண நேரிடும். ஓம் ஸ்வரத்துடன் பொன்னொளி அனுபவமானால், இரண்டிலும் கலந்து, சாதகன், இரண்டையும் மேலூடுருவிச் செல்ல விருப்பார்வம் கொள்ளவேண்டும். பின்பு, விஸ்தாரமான நீல ஒளியிலும் வரம்பற்ற வெளியிலும் சுதந்திரம் அனுபவிக்க நேரலாம். அதுவும் முடிவானதொன்றல்ல. அதனையும் கடந்து இருப்பதான பிரகாசமான வெள்ளை ஒளி, ஆன்மாவிற்குத் தூய இருப்பை அனுபூத சாத்தியமாக்குவதான அழைப்புடன் இருக்கும்.
8.27. இவ்விரு பாதையினையும் அறிபவனான யோகாப்பியாசி என்றும் குழம்புவதில்லை. எனவே, எப்போதும் யோகத்தில் நிலைகொள்.
உட்பொருள்:
இவ்விரு பாதையினையும் அறிந்த சமாதியில் நிலைபெற்ற யோகி, தெளிவாக இருக்கிறான். எனவே, சமாதி யோகத்தில் நிலை கொண்டிரு.
உரை:
ஆரம்ப கால சமாதி யோகப் பயிற்சியின்போது, மன ஆட்டங்களையும் மயக்கங்களையும் அணுகி சரி செய்து கொண்டிருக்க நேரிடும். உயர் வழி தென்பட்டவுடன், சமாதியில் நிலைபெற்ற யோகி, நினைவினை மேல் நோக்கித் திருப்பி, புலன் மற்றும் மன ஈடுபாடுகளைக் கடக்க விருப்பார்வம் கொள்கிறான். சமாதியோகத்தில் நிலை கொள்வது என்பது ஆன்ம ஞானத்தில் ஊன்றுவதும், உணர்வின் தூய நிலைகளை அறியும் முனைவு பெறுவதும், பூரண அனுபூதிக்கு விழிப்படைவதுமாகும்.
8.28. யோகி இதனை அறிந்து, புனித நூல் வாசிப்பு, புனிதக் கொடைகள், புனிதச் சடங்குகளைச் செய்தல், தானதரும காரியங்கள், ஆகியவைகளின் பலன்களிலிருந்து விடுவித்துக் கொண்டு, பூரண இருப்பின் மூல நிலையாகிய உன்னதத்திற்கு விழிப்படைகிறான்.
உரை:
சமாதியில் நிலைபெற்ற யோகி, சம்ஸ்காரங்களுக்கும், அவைகளின் விளைவுகளாகப் புனித நூல்களில் பலவாகக் கூறப்பட்டுள்ளவைகள், மேலும் உடனிகழ்வுகளுடனான நிர்ப்பந்திக்கப்பட்ட ஈடுபாடுகள் ஆகியவற்றிலிருந்து விடுபடுகிறான். இறை முழுமைக்கு விழிப்படைவதால் இவை நிகழ்கின்றன.
முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், அக்ஷரப் பிரஹ்ம யோகம் என மூலத்திலும், பூரண சத்ய யோகம்
என இவ்வுரையிலும் தலைப்பிடப்பட்ட 8 ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.
Post a Comment