W7. பிரபஞ்ச மூர்த்தியினை வழிபடுதல். (Whispers from Eternity - Tamil & English)
7. பிரபஞ்ச மூர்த்தியினை வழிபடுதல்.
எல்லையற்ற பேருணர்வே, உன்னை எல்லைக்குட்படுத்தி நான் இன்று பூஜிப்பேன். பிரபஞ்ச அமைதியே, உன்னுடைய முன்கேளாத குரலை ஓடைநீர் சலசலப்பிலும், குயில்களின் பாட்டோசையிலும், முழங்கும் சங்கொலியிலும், சமுத்திரத்தின் அலைத் தாளத்திலும், அதிர்வலைகளின் ரீங்காரத்திலும் நான் கேட்பேன்.
என் எல்லைக்குட்பட்ட மூர்த்தியே, பிரபஞ்சம் மேவும் என் மனக்கோயிலில், இந்திய-சம்பிரதாயப்படி, நான் உன்னைச் சடங்குகளுடன் பூஜை செய்வேன். சூரியனின் ஜீவசக்தியுடன் ஒளிரும் செம்மையான உன் முகத்தை நான் பணிவுடன் காண்பேன். உன் குளிர்ந்த நிலவொளிக் கடைக்கண் பார்வையினால் என் சோகம் முற்றிலும் விலகும்.
உன்னைக் காணமுடியாதவரென்று இனி நான் கூற முடியாது, ஏனெனில் என் பூஜையில் நான் உன் ரகசிய இதயத்தை, உன் எல்லையற்ற, நட்சத்திரக் கண்களின் வழியே நேரே காண்பேன். காற்றில் மேலெழும்பும் உன் சுவாசத்தினுடன் காணிக்கையாகப் பெற்ற எனது சுவாசத்தைக் கலப்பேன். உனக்காக ஏங்கும் என் சொல்லற்ற மந்திரங்கள் என் இதயத்துடிப்பின் தாளத்திற்கேற்பக் கவிபாடும். உன் இதயத்தை எல்லா இதயங்களிலும் துடிப்பதை உணர்வேன். உன் உழைக்கும் கரங்களை புவியீர்ப்பு விசையிலும், இதர பிரபஞ்ச சக்திகளிலும் காண்பேன். உன் காலடியோசையை எல்லா ஜீவராசிகளின் காலடியோசையிலும் கேட்பேன்.
என் வழிபாட்டில், கருமையால் சூழப்பட்டு மின்மினுக்கும் இரவுத் திரையிலும், மங்கலான வெளிச்சம் காட்டும் விடியலிலும், சாம்பல்நிற அந்திசாயும் வேளையிலும் உன் பரந்துவிரிந்த விண்ணுடலைக் காண்பேன். பால்வெளி கேலக்சியின் நட்சத்திர மணிகளால் கோர்க்கப்பட்ட மாலையையும், வானவில்லாலான கிரீடத்தையும், ஒளிவீசும் கோளங்களாலான வைரங்களையும் அணிந்துள்ள என் பிரபஞ்ச மூர்த்தியே, உன்னை என் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
வான்வெளியின் துவாரங்கள் வழியே உன் வாழ்க்கையின் வியர்வை சிந்துகின்றது; நதிகள், நீரோடைகள், கிளைநதிகளெனும் நாளங்கள் வழியேயும், மனிதர்களின் ரத்த அணுக்களின் மூலமாகவும் உன் ரத்தம் பாய்கின்றது; உன்னை இனி நான் கட்புலனாகாதவராக வழிபடாமல், என் கண்ணுக்குப் புலனாகும் பிரபஞ்ச உருக்கொண்ட மூர்த்தியாக வழிபடுவேன்.
என் ஆன்மாவின் கட்புலனாகும் மூர்த்தியே, இயற்கையின் ஒத்திசையில் ஒலிக்கும் கோயில்-மணிகள், கடலின் உருமலில் இசைக்கும் மேள தாளங்கள், பல்வித மெழுகுவர்த்தியாய் ஒளிரும் மனங்கள், எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் ஓதப்படும் மந்திரங்கள், ஜீவாத்மாக்களின் தோட்டங்களில் பூக்கும் பக்தி-மலர்கள், நேசங்களின் சுகந்தம் - இவையாவும் உன் வழிப்பாட்டுக்கு உபசாரமாக என்னால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மனக்கண்ணுடன் சேர்ந்து திறந்த இரு கண்களுடனும், என் இயற்கை-மூர்த்தியான வாழும் கடவுளான உன்னை நான் கண்டுகளித்து, மந்திரங்களை வாக்காலும், மனத்தாலும் ஜபித்து, பக்தியும், செயலும், ஞானமும் ஒருங்கிணைந்த பூங்கொத்துடன், அன்பின் மொழியினாலும், இதயத்தின் சல்லாப முணுமுணுப்பாலும், தியானத்தின் கண்ணீரற்ற கண்ணீராலும், பிரக்ஞானத்தின் அமைதியான மூச்சிரைப்பாலும் உன்னை வழிபடுவேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
7 Worshipping the Cosmic Idol.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org