MCCRF - A global volunteer network

பதஞ்சலி யோக சூத்திரம் - II. சாதனா பாதம்

ஓம் ஸ்ரீ விக்னேஸ்வராய நம:

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே நம:

ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி பாதம் போற்றி

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் பாதம் போற்றி

ஸ்ரீ ராய் யூஜீன் டேவிஸ் பாதம் போற்றி

பதஞ்சலி யோக சூத்திரம்

II. சாதனா[i] பாதம்

1. தவம், சுயக்கல்வியுடன் ஆன்ம விசாரணை, கடவுளைச் சரணடைதல் - இவை கிரியா[i]  யோகத்தில் இன்றியமையாதவை.

2. சமாதி நிலையை அடைவதும், துன்பக்கிலேசங்களை தேய்த்து நாசமுறச் செய்வதும் கிரியா யோகத்தின் நோக்கம்.

3. அவித்யை, அகங்காரம், விருப்பு, வெறுப்பு, அபிமானப்பற்று - இவை ஐந்தும் துன்பக்கிலேசங்கள்.

4. அவித்யை மற்ற கிலேசங்களுக்கு அடிப்படை.கிலேசங்களால் ஏற்பட்ட கர்மவினைகள் உள்ளே செயலின்றியும், தேய்மானமடைந்தும், அடக்கி வைக்கப்பட்டதாகவும், வெளிப்படையாக இயங்கியும் இருக்கும் தன்மைகள் கொண்டவை.   

5. அநித்தியத்தை நித்தியமெனவும், தூய்மையற்றதை தூய்மையெனவும், துக்கமானவற்றை சுகமெனவும், அநாத்ம விஷயங்களை ஆத்மாவாகவும் கருதுதல் அவித்யை.

6. அறியப்படும் [அநாத்ம] விஷயங்களை, அறிபவன் அவற்றைப் பகுத்தறியாமல் தன்னோடு ['நான்', ஆத்மா] ஐக்கியப்படுத்தி உணரும் உணர்வு அகங்காரம்.

7. சுகமான முன்அனுபவத்தை அனுசரித்து அவற்றை மீண்டும் பெற நாடுவது விருப்பு.

8. துக்கமான முன்அனுபவத்தை அனுசரித்து அவற்றை விலக்க விரும்புவது வெறுப்பு.

9. [மரணம் நிச்சயம் என அறிந்தாலும்] தனக்கு அமைந்த உடல்சார்ந்த வாழ்வியல் என்றும் நிலைத்திருக்க வேண்டி அதன்மேல் வைக்கும் பிடிப்பு அபிமானப்பற்று; [பொதுவாக] இது பண்டிதர்களுட்பட எல்லோருக்கும் உண்டு. 


10. கர்மவினைகளில் வெளிப்படாமல் இருக்கும் சூட்சுமமானவற்றை அவற்றின் மூலகாரணத்தைக் கண்டு அந்த மூலத்திலேயே அவற்றை ஒடுக்கி வெல்லலாம்.

11. வெளிப்படையாக இயங்கும் கர்மவினைகளை தியானத்தினால் [அறிவெழுச்சி ஏற்படுவதன் மூலம்] விலக்கலாம்.

12. துன்பக் கிலேசங்களினால் ஏற்பட்ட முன்கர்மவினை ஆசைகள்  உண்டு என்பதை இப்பிறவியினாலும், இன்னும் வரப்போகும் பிறவிகளினாலும் அறியமுடியும்.

13. கர்மவினைகள் உள்ளவரை அதற்கு பொருத்தமான விளைவுகள் நம் மனோநிலை, ஆயுள், அனுபவங்கள் வாயிலாக வெளிப்படும்.

14. மகிழ்ச்சிகர, துக்கமான அனுபவங்கள் முறையே நல்வினை, தீவினையைக் காரணமாகக் கொண்டுள்ளன.

15. [எண்ணியவண்ணம் நடவாமல் போகுமோ எனும் அச்சம், அனுபவிக்கையில் பிறராலும் நோய்களாலும் வரும் உபாதை, பழவினைகளை நொந்து வருந்துதல் என] முக்காலத்திலும் துயரம் தரும் கர்மவினைகள். மேலும், முக்குணங்கள் ஒன்றோடொன்று முரண்பட்டு செயல்படுவதில் ஏற்படும் குழப்பம் - இவற்றால் விவேகியின் நோக்கிற்கு நல்வினை உட்பட எல்லா வினைகளும்  துக்கமயமே.


16. இனி நேரப்போகும் துன்பங்களை [யோகப் பயிற்சியினால்] தவிர்க்கக் கூடும்.

17. காண்பவன் [ஆத்மா], காணும் அநாத்ம விஷயங்களில் இரண்டறக் கலவுதல் துன்பத்திற்குக்  காரணம்.

18. பிரகாச [சத்வ], செயல்வடிவ [ரஜஸ்], மந்த [தமஸ்] குணங்களினால் பஞ்சபூதங்கள் இந்திரியங்களாக வடிவெடுத்து, ஜீவராசிகள் அனுபவிப்பதற்காகவும், பிறவித்தளையிலிருந்து விடுபடுவதற்காகவும் அமைந்தது காணும் இப்பிரபஞ்சம்.

19. பிரபஞ்சத்தில் தோன்றுபவை நான்கு வகை. அவையாவன: தனித்தன்மை கொண்டவை, தனித்தன்மை அற்றவை, குறிகளால் அடையாளம் காணப்படுபவை, அடையாளம் காணமுடியாதவை.

20. காண்பவன் [அனுபவிப்பவன்], சாட்சி மாத்திரமாக தூய்மையான ஆத்மாவாக இருந்தாலும், [இரண்டறக்கலவுதலால்] பிரபஞ்ச அனுபவங்களை ஏற்கின்றான். ஆயினும், தனது ஸ்வரூபத் தூய்மை மாசடைவதில்லை.

21. அனுபவிப்பவனுக்காக [அதன் மூலம் தனது ஸ்வரூபத்தை மீண்டுமடைவதாகிய முக்திபெற] ஏற்பட்டதே இப்பிரபஞ்சம்.

22. ஒருவர் தன் கடமையில் பூர்த்தி பெற்றதும் [முக்தி பெற்றதும்] இப்பிரபஞ்சம் அதன் மூலத்தில் லயமடைந்து அவரை பாதிப்பதில்லை. ஆயினும், மற்ற சாதாரண [முக்தியை இன்னுமடையாத] ஜீவராசிகளுக்காக இப்பிரபஞ்சம் தொடந்து இயங்குகிறது.     

23. ஒரு விஷயத்தை அனுபவிப்பவன், தனக்கும் அனுபவிக்கப்படும் விஷயத்திற்கும் உள்ள வேறுபாட்டை உள்ளபடி அறிவதற்காகவே இரண்டறக் கலவுதல் ஏற்படுகிறது.

24. அவித்யையே இரண்டறக் கலவுதலுக்குக் காரணம். 

25. அவித்யை நீங்குகையில், இரண்டறக் கலவுதலும் நீங்கும். அதுவே, துன்பமற்ற நிலை. அது கைவல்யத்திற்கு [தனது உண்மை ஸ்வரூபத்தில் ஒன்றுவதற்கு] வழிகாட்டும். 

26.  [காட்சிப் பிறழ்ச்சியற்ற] மாறாத விவேக புத்தியை இடையறாமல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளுதல் துன்பம் தவிர்க்க உபாயம்.

27. விவேக புத்தி ஏழு படிநிலைகளில் மெய்யறிவாகப் பரிமளிக்கும்.


28. யோக அங்கங்களின் பயிற்சியினால் மனமாசு தேயும்; உள்ளொளி பெருகும்; இடைவிடாத பயிற்சியினால் ஒளிபெருகி மேன்மை பெற்று விவேகத்துடன் கூடிய மெய்யறிவாகப் பிரகாசிக்கும்.

29.  யமம் (தகாதன விலக்கல்), நியமம் (தகுந்தன பழகுதல்), ஆசனம், பிராணாயாமம், உள்முகமாக்கல் (பிரத்தியாஹாரம்), ஒருமுகப்படுத்துதல் (தாரணை), தியானம், சமாதி என்பன யோகத்தின் எட்டு அங்கங்கள்.


30.  அஹிம்சை (இன்னா செய்யாமை), ஸத்யம் (பொய்யாமை), அஸ்தேயம் (கள்ளாமை), பிரம்மச்சரியம் (கூடாஒழுக்கமின்மை), அபரிக்கிரஹம் (தேவைமீறிக் கொள்ளாமை) - இவை யமம் என்னும் தகாதன விலக்கல்[iii]

31. மனோநிலை, தேசம், காலம், சமய சம்பிரதாயம் வேறுபடினும், இவைகள் [யோகப் பயிற்சிகள், பொதுவாக] எல்லா மக்களாலும் மேற்கொள்ளத் தகுந்தப் பெரும் விரதங்கள்.

32. [அகம், புறம்] தூய்மை, ஆன்மதிருப்தி, தவம், சுயக்கல்வி பயிலுதல், கடவுளைச் சரணடைதல் - இவை நியமம் என்னும் தகுந்தன பழகுதல்.

33. தீங்குதரும் பாவனைகளை வெல்ல அதற்கு நேரெதிரான நன்மை பயக்கும் பாவனைகளைப் பழக வேண்டும்.

34. பேராசை, சினம், மதிமயக்கம் இவைகளால் தூண்டப்பட்டு, சிறிய, நடுத்தர, பெரிய விதங்களில், சுயமாகவோ, பிறர் ஏவியோ, பிறர்திருப்திக்காவோ செய்து பழகிய தீங்குதரும் பாவனைகள் பற்பல இன்னல்களையும், குழப்பங்களையும் விளைவிப்பவை. இவைகளை வெல்ல நன்மைதரும் பாவனைகளைப் பழகுதல் அவசியம்.  


35. இன்னா செய்யாமையில் (அஹிம்சை) நிலைபெற்றவர் வாழுமிடத்தில் பிறஉயிரினங்கள் [மனிதனுட்பட] தத்தம் விரோதங்களை மறந்து உறவாடும்.

36. பொய்யாமையை (ஸத்யம்) வழுவாமல் கடைபிடித்தவர்க்கு எண்ணிய காரியங்கள் எண்ணியவாறு கைகூடும்.

37. கள்ளாமை (அஸ்தேயம்) தவறாதவரிடம் எல்லாவிதமான செல்வங்களும் செழிப்புடன் வந்தடையும்.

38. கூடாஒழுக்கமின்மையில் (பிரம்மச்சரியம்) நிலைபெற்றவர் [பிறரை ஆட்கொள்ளும்] வீரியசக்தியைப் பெறுவர்.

39. தேவைமீறிக் கொள்ளாமல் (அபரிக்கிரஹம்) ஒழுகுபவருக்குப் பழைய, முன்ஜன்ம அனுபவங்களும் நினைவிற்கு வரும்.


40. புறந்தூய்மை பழகியவர் தன் [மலஞ்சோரும்] உடலைப் பேணுவதிலுள்ள சிரமத்தை அறிவதனால் பிறரிடம் கலவி சுகத்தை நாடமாட்டார்.

41. அகந்தூய்மையால் நல்மனமும், ஒருமுகச்சிந்தனையும், புலன்களின் மேல் ஆளுமையும், ஆன்ம தரிசனத்திற்கான யோக்கியதையும் உண்டாகும்.

42. உற்றதை ஏற்றுக் கொண்டு எப்போதும் திருப்தி கொள்பவனுக்கு குறைவற்ற இன்பம் உரித்தாகும். 

43. தவத்தில் நிலைபெற்றவர் மனமாசு அகன்று பல்வேறு சித்திகள் கைவரப் பெறுவர்.

44. சுயக்கல்வி நன்கு பயில்வதானால் தான் பூஜிக்கும் இஷ்ட தேவதைகளின் [பிரபஞ்சத்தை இயக்குவிக்கும் சக்திகள்] அனுக்கிரக பலனைப் பெறுவர்.

45. கடவுளைச் சரணடைதலினால் எங்கும்நிறை கடவுட் பேருணர்வுடன் ஒன்றுபடும் சமாதிநிலை சித்தியாகும்.

 

46. ஆசனத்தின் போது உடல் சலனமின்றி நிலையாகவும், சுகமாகவும் இருத்தல் வேண்டும்.

47. சுயமுயற்சியின் வேகம் தணிந்து மனம் எல்லையற்ற ஒன்றை நோக்கி விரிவடைகையில் அது சமாதிநிலைக்குத் தயாராகிறது.

48. மனம் விரிவடைந்த நிலையில் இருவினைகளின் தாக்கம் மனதைப் பாதிக்காது.


49. ஆசன நிஷ்டையில் சுவாசகதி அடங்கி, பிராணன் தங்குதடையின்றி மேலே சிரசை நோக்கி சஞ்சாரம் செய்கிறது. இது பிராணாயாமம்.

50. மூச்சை வெளிவிட்டு உள்ளிழுத்து அடக்கும் பயிற்சியை, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில், இன்ன காலவரம்புடன், குறிப்பிட்ட உடற் பகுதியில் கவனம் செலுத்தி முறையாகச் செய்து வந்தால், மூச்சு நீள் இடைவெளிகளுடன் மிதமடைந்து நுண்மையடையும்.

51. மூச்சை வெளிவிடுதல், உள்ளிழுத்தல், நிறுத்துதல் - இம்மூன்று பகுதிகள் சமனடைகையில், இவற்றைக் கடந்த நான்காவது நிலை [துரீய நிலை] சித்திக்கிறது.

52. பிராணாயாம சித்தி பெறுகையில் உள்ளொளியை மூடியிருக்கும் மறைப்பு அகலுகிறது.

53. மேலும், பிராணாயாம சித்தியால் மனம் ஒருமுகப்பாடு பெற ஆயுத்தமாகிறது.


54. புலன்கள் தத்தம் விஷயங்களை நாடி வெளிமுகமாகச் செல்லும் அவைகளின் ஓட்டத்தினை, சித்தத்தின் உண்மையான [ஆன்மாவை நோக்கிய] நாட்டத்திற்கு ஏற்பத் திசைதிருப்புதல் உள்முகமாக்கல் (பிரத்தியாஹாரம்).

55. உள்முகமாக்கலில் மேன்மை பெறுதலால் புலன்களைத் தன்வசத்தில் ஆளும் சக்தி உண்டாகும்.


---

[i] சாதனா என்பது முனைப்புடன் செய்யும் ஆன்மீக யோக ஒழுக்கச் செய்முறையைக் குறிக்கும்.

[ii] கிரியா என்பது பொதுவாக நாம் விரும்பிச் செய்யும் செயல்களைக் குறிக்கும். இங்கு நம் வாழ்க்கை முறையை வளப்படுத்த, மனப்பக்குவம் பெற, ஆன்மீக வளர்ச்சிக்கென செய்யும் செயல்களைக் குறிக்கிறது.

[iii] ஸத்யம் என்பது பொய் பேசாமல் இருத்தல், பிரம்மச்சரியம்  என்பது கூடாஒழுக்கத்தை விலக்குதல் என்ற நோக்கில், இவை தகாதன விலக்கல் எனும் யமம் தொகுப்பில் இடம்பெறுகின்றன.

---

ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!      

Powered by Blogger.