15. புருஷோத்தம யோகம் - பகவத்கீதை - The Eternal Way
பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).
பகவத் கீதை பதினைந்தாம் அத்தியாயம்
15. புருஷோத்தம யோகம்
(உன்னத இருப்புண்மையின் யோகம்)
சதா தொடரோட்டமாய் இயங்கி, மாறுவதாயுள்ள சம்சாரம் எனச் சொல்லப்படும் இந்த படைப்புத் தோற்றப் பரப்பில் ஜீவராசிகள் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதனையும், அதன் பிடியிலிருந்து எவ்விதம் விடுபடுவதென்பதையும் அதற்கான வழிமுறையும் இந்த அத்தியாயம் விளக்குகிறது.
உள்ளுறைச் செய்தி என்னவென்றால், நாம் நம் குறுகிய அகந்தையுணர்வின் வசத்தில் அகப்பட்டுக்கொண்டு, வெறுமனே முக்தி எப்படியோ கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையில் காலந்தள்ளக் கூடாது. மாறாக, நம் விவேகித்த விசாரணைப் புத்தியினை உபயோகித்து, சதா மாறிக் கொண்டிருப்பதான தோற்றப் பரப்பினூடேயும் அதைக் கடந்தும் உள்ளதுமான, அவைகளின் காரணபூதமான, மாறா இருப்புண்மையை அறிந்து அனுபவிக்க வேண்டும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது.
15.1. வேர் மேலேயும் கிளைகள் கீழேயும், தானாய் விளங்கப்பெற்ற புனித மந்திரங்களே இலைகளாயும் உள்ள சனாதன விருட்சத்தைப் பற்றி அவர்கள் விவரிக்கிறார்கள். எவனொருவன் இதனை அறிவானோ அவனே வேதங்களை அறிந்தவன்.
உட்பொருள்:
மேலே உயர் பேருணர்வில் வேர்பிடித்தும், கீழ்முகத்தே கிளைகள் விரிந்தும், வளர்ச்சிப் பரிணாமத்திற்கு செய்யும் அர்ப்பணங்களாலும், தானாய் விளங்கப்பெற்ற உண்மைமொழிகளாலுமான இலைகளால் ஊட்டி வளர்க்கப்படுவதாக உள்ள ஒரு அற்புதமான மரத்தைப் பற்றி சிலர் கூறுகிறார்கள். அதனை அறியும் சாதகனே, அந்த தானாய் விளங்கப்பெற்ற ஞான சித்தி பெற்றவன்.
உரை:
பிரபஞ்சம்தான் இங்கு ஒரு பிரம்மாண்ட மரமாக, அதன் வேர்கள் உன்னதப் பேருணர்விலே அமைந்து, கீழ்முகமாக விரிந்த கிளைகள் இயற்கையின் பரிணாம வளர்போக்குகளுக்கு அளிக்கப்பட்ட உயிர்க் கொடைகளால் ஊட்டம்பெற்று நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக ஒரு ஒப்புமை செய்யப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தோற்றத்தின் உண்மையைப் பிசிறின்றி அறியும் ஒரு சாதகனே இறுதி உண்மையை அறிந்தவனாகிறான்.
15.2. குணங்களால் ஊட்டப்பட்டு அதன் கிளைகள் மேலும் கீழும் பரவுகின்றன. புலன் விஷயங்களே அதன் துளிர்கள். அதன் வேர்கள் கீழே ஜீவராசிகளின் உலகில் விவகாரச் செயல்பாடுகளுக்கு ஆதாரமாகப் பரவியிருக்கின்றன.
உட்பொருள்:
அதன் கிளைகளோ பரு உலகப் பரப்பில் பரவி, அதுவே உள்முகமாக சூட்சும மற்றும் காரணப்பரப்பில் இருக்கிறது. அவைகளெல்லாம் குணங்களால் ஊட்டப்படுகின்றன. புலன் விஷயங்களே அதன் துளிர்கள். அவைகளே பற்றுகளை வளர்க்கின்றன. கீழே பரவியுள்ள வேர்களோ அப்புலன்களின் காரியங்களையும் எதிர்வினைகளையும் பரு உலகப் பரப்பில் நீட்டித்து நிகழ்த்துகின்றன.
15.3. இவ்வுலகில் அதன் உருவத்தைக் காணமுடியாது. அதன் ஆரம்பத்தையோ, முடிவையோ, இருப்பையோ காணமுடியாது. பற்றின்மையெனும் கோடாலியால் அதன் வேரை அறுத்து,
15.4. எதனையடைந்து மீண்டும் ஜென்மமெடுக்க அவசியமில்லையோ, அம்முடிவிடத்தை நோக்கி, “ஆதி சக்தி ஊற்றெடுக்கின்ற அந்த மூல ஆன்மாவில் நான் புகலிடம் புகுகிறேன்,” எனும் பாவனையில் அதனை நாடவேண்டும்.
உட்பொருள்.
விவகார உலகம் அதன் வளர்போக்கு மற்றும் மூலகாரணம் உட்பட வெளிப்பட்ட விதத்தை புலன்களால் மட்டுமே அறியக்கூடியதல்ல. அமைதியான பற்றின்மை மூலமாகத்தான் ஒரு சாதகன் வெளிப்பட்ட விவகார உலகத்துடனான ஈடுபாட்டினை களைய வேண்டும். அதன் பிறகே, பூரண தூய பேருணர்வுப் பரப்பினை நாடி, உணர்ந்து, அதில் நிலைத்துவிட்டால், மாறுகதி உடைய தோற்ற நிகழ்வு உடைய விவகார உலகத்துக்குத் திரும்ப மாட்டான். விடுதலையை விரும்பும் ஆன்மா, சனாதன ஓம் ஸ்வர மூலத்தில் தியானம் செய்ய வேண்டும்.
உரை:
வெளித்தோன்றல் என்பதில் உள்ள உருவமற்ற பேருணர்வுக்கும் அதுவே தோற்றத்தில் பருவுருவேற்பதற்கும் உள்ள வேறுபாட்டினை அறிவதென்பது, நாம் நம் ஆன்மாவுக்கும் அதன் வாகனமான உடல்-மன ஜோடிக்கும் உள்ள வேறுபாட்டினை அறிந்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு, பிரபஞ்ச சக்திகளை இயக்கும் குணங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியே ஜட இயற்கையின் காரியக் கிரமங்கள் நடைபெறுகின்றன என்பதும் மற்றும் இவை யாவும் ஓம் ஸ்வரமாகிய இறைமையின் பரப்பிலிருந்தே தோன்றுகின்றன என்பதும் அறிவது உதவிகரமாக இருக்கும்.
நம் உடலானது பிரபஞ்ச விருட்சம் போன்று மேலே வேரும் கிழே கிளைகளும் பரவியதாகும். மூளை மேலேயும் நரம்புகள் அவைகளின் கிளைகளுடன் கீழேயும் பரவியுள்ளன. சகஸ்ராரமும் ஆக்ஞா சக்கரமும் மேலே உள்ளன. ஐந்து சக்கரங்களும் அவைகளின் நாடிகளும் கீழே உள்ளன. உள்முகத் தியானத்தின் மூலம் விழிப்பு நிலை கவனத்தினை புலன் விஷயங்களுக்கு ஊட்டம் தரக்கூடிய சூழலிலிருந்து உள்முகமாக மனதளத்திற்குத் திரும்பி, தண்டுவடப் பாதையில் செலுத்தி, சகஸ்ராரத்திற்கு மேலேற்றி இயல்கடந்த உண்மைகளில் மனமொருமிப்பதன் மூலம் ஆன்மஞானத்திற்கு விழிப்படைவதை சாத்தியமாக்கலாம். ஒளியூட்டம் பெற இதுவே உடனடி வழியாகும்.
15.5. செருக்கும் மயக்கமுமின்றி, தவறான ஞானத்தினால் ஏற்படும் பற்றுக்களை வென்று, உன்னத ஆன்மாவில் எப்போதும் நிலைப்பெற்று, ஆசைகளற்று, இருமைகளிலிருந்து விடுபட்டு, மயக்கமுறாத ஆன்மாக்கள் அழியா ராஜ்யத்திற்குச் செல்கின்றன.
உட்பொருள்:
தான் எனும் செருக்கும் மயக்கமுமின்றி, தவறான ஞானத்தினால் ஏற்படும் பற்றுக்களை வென்று, ஆன்ம சித்தி ஞானத்தில் நிலைபெற்று, ஆசைத் தூண்டுதல்களை அதன் தோன்றுமூலத்திற்கே திருப்பிவிட்டு சமப்படுத்தி, விவகார உலகாயத சூழலிலிருந்து விடுபட்டு, ஒளியூட்டம் பெற்ற ஆன்மாக்கள் பூரண தூயப் பேருணர்வுப் பரப்பிற்கு விழிப்படைகிறார்கள்.
15.6. எங்கு சென்றடைந்தபின் யாரும் திரும்பி வருவதில்லையோ, அதுதான் என் உன்னத இருப்பிடம். அந்த புகலிடத்தை சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளியூட்டாது.
உட்பொருள்:
ஜட இயற்கையின் எந்த பாகமும், என்றும் அனுபவித்தறியக்கூடிய பூரண தூயப் பேருணர்வுப் பரப்பில் இல்லை. அது தோற்றத்திலுள்ள எல்லா இருப்புக்களையும் வெளிப்படுத்தல்களையும் மீறியது.
உரை:
பூரண தூயப் பேருணர்வு வெளி என்றும் சுயம் பிரகாசம். நாம் ஞான ஒளியுணர்வு பெறும்போது, ஞானத்திற்கான போதனையை வெளியில் தேடவேண்டியதில்லை. பூரண ஞானத்திற்கு நிலைத்துவிட்டால், முந்தைய முழுமையற்ற பகுதி ஞானத்திற்கோ, மயக்குறு நிலைக்கோ, காட்சிப் பிறழ் நிலை உணர்வு தளத்திற்கோ திரும்ப வேண்டியதில்லை. ஒளியூட்டம் பெற நாம் நம் உடம்பை விடவேண்டிய அவசியமுமில்லை,
• நம் மன மயக்கங்களையும்,
• பேருணர்வினையும் அதன் வெளிப்படுத்தல்களையும் குறுக்கிட்டு மறைக்கின்ற பிறழ்நிலைப் பார்வையையும்தான்
விடவேண்டும்.
பேருணர்வின் எல்லா வெளிப்படு அம்சங்களும் அதன் மூலத்தோடு ஒப்பு நோக்கினால் புறவயமானவையே. இறையனுபூதியுடன் உள்ளார்ந்து நிலைத்து இருப்பதுதான் என்றும் சிறப்பானது. நம் வாழ்க்கைப் போக்குகளை அம்மையப் புள்ளியிலிருந்து பார்க்கவேண்டுமே அன்றி மாறாக பூரணத்தினை வெளியிலிருந்து பகுதியாகப் பார்ப்பதல்ல.
15.7. என் அம்சத்தின் ஒரு சிறுபகுதிதான் ஆன்மாவாக ஜட இயற்கையில் ஊடாடி, மனத்தை ஆறாவதாக உடைய புலன்களை தன்னுடன் இழுத்துக்கொள்கிறது.
உட்பொருள்:
தூயப்பேருணர்வின் பரப்பின் ஒரு சிறுபகுதிதான், தனி இருப்புப் பெற்று, ஜட இயற்கையில் ஜீவாத்மாவாகத் தோன்றி மனம் மற்றும் ஐந்து சூட்சுமமான புலன்களையும் தன்னுடன் இழுத்துக்கொள்கிறது.
உரை:
பிரதிபலிக்கப்பட்ட இறைப் பேருணர்வுப் (அதாவது, ஜட இயற்கையில் விழும் இறைமையின் பிரதிபிம்பமான பிரபஞ்ச தனி இருப்புண்மை) பரப்பிலிருந்து மின் ஒளிக்கதிர்கள் பிரபையாய் வெளியாகி பிரபஞ்ச மனத்தையும், உணர்புலன்களையும், செயற்புலன்களையும், ஐம்புல சூட்சும தன்மாத்திரைகளையும் அவைகளின் ஸ்தூல அம்சங்களையும் உருவாக்குவது போல, ஆன்மாவிலிருந்து ஐந்து ஒளிக்கதிர்ப் பிரபை வெளியாகி மனத்தையும், உணர்புலன்களையும், செயற்புலன்களையும், ஐம்புல சூட்சும தன்மாத்திரைகளையும் மற்றும் பரு உடலான சரீரத்தையும் உருவாக்குகிறது.
பிரதிபலிக்கப்பட்ட இறையுணர்வுப் பரப்பிலிருந்து வெளிப்படும் ஐந்து மின்னொளிப்பிரபை காரண வெளி எனப்படுகிறது. அதேபோல, ஆன்மாவிலிருந்து வெளிப்படும் ஐந்து மின்னொளிப்பிரபை காரணசரீரம் எனப்படுகிறது. புலன்காட்சிகள் புறவுலகத்தை நோக்கவும் அதனுடன் தொடர்பு கொள்ளவும் சாத்தியமாக்குகின்றன. பிரபஞ்சரூபத்தில் புலன்களையெல்லாம் உள்ளடக்கியது சூட்சுமவெளி; ஆன்மரூபத்தில் புலன்களையெல்லாம் உள்ளடக்கியது சூட்சுமசரீரம். பிரபஞ்சரூபத்தில் ஐம்புலத்திற்கு விஷயமான தன்மாத்திரைகள் ஸ்தூலபூதங்களாக வெளிப்படுவதைக் கொண்டது ஸ்தூலவெளி; ஆன்மரூபத்தில் ஐம்புலத்திற்கு விஷயமான தன்மாத்திரைகள் பெற்றோர் வழியாக ஸ்தூல சரீரமாக வெளிப்படுகிறது.
15.8. ஆன்மா உடலெடுக்கும் போதும் உடலைப் பிரியும் போதும், அவ்வுடலின் புலன் விஷயங்களையும் மனதையும், காற்று மணத்தை அதன் மூலத்திலிருந்து எடுத்துச் செல்வது போல, எடுத்துச் சென்று விடுகிறது.
உட்பொருள்:
ஆன்மாவால் புலனாகா தளத்தில் உபயோகிப்பட்ட புலன் காட்சிப் பொறிகள் மற்றும் மனம், ஆன்மா உடலெடுக்கும் போது கொண்டு வரப்படும். ஆன்மா உடல் பிரியும் போது அதனுடன் அவைகள் திரும்ப எடுத்துச் செல்லப்படும்.
உரை:
ஒரு ஜீவாத்மா ஒரே ஒரு மனத்தினை மட்டுமே படைக்கிறது. பின் அந்த மனம் புலன்களைப் படைக்கிறது. இறுதியாக முக்தி வரை ஸ்தூல சரீர தளத்திலும் சூட்சும காரண தளங்களிலும் அதே மனம் ஆயுள் ஆயுளுக்கு உபயோகமாகிறது. மனதில் நினைவுகள் மற்றும் அனுபவங்கள் பதியப்படுகின்றன. ஸம்ஸ்காரங்களான அவை வாழ்வை முடக்குவதாயிருந்தால் வலி பொருந்தியதாகவும் வாழ்வைச் சுகமளிப்பதாக இருந்தால் இன்பம் தருவதாகவும் இருக்கும். அல்லது இவ்விரண்டுமல்லாது, நம் கால இடப் பயணத்தை அறிவதாக, அறிவை எட்ட, வழக்கமான செயல் செய்ய வாழ்வாதார பழக்கங்களை அனுமதிக்க போன்றவற்றிற்காக இருக்கலாம்.
ஒரு சாதகனின் உடனடிக் கவனம் பெறவேண்டியது எதுவாக இருக்குமென்றால் வலி பொருந்தியதான விழிப்புணர்வினையும் செயல்பாட்டினையும் தடுக்கக் கூடியவைகளையே. இவைகளாவன – திரும்பத் திரும்ப நடக்கக்கூடிய, அடிமைப்படுத்துவதான, சுய ஏமாற்ற நடத்தைகள், மன சஞ்சலம் ஏற்படுத்துபவை, அறிவார்த்த சிந்தனைகளைத் தடுப்பவை, பிறழ் காட்சி மற்றும் காட்சி மயக்கங்களைத் தருவனவாக இருப்பது ஆகியனவாகும்.
வலி பொருந்திய மனப் பாடுகளை ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் வாழ்நலத்தினை மேற்கொள்வதன் மூலம் பலவீனப் படுத்திவிடலாம். இதனைச் செய்ய வழிகளாவன.
• சொந்த வாழ்சூழலை முன்னேற்றுதல்
• அமைதியான அகத்தாய்வும், விவேகித்த நுண்ணறிவைப் பயன்படுத்துதலும்
• எதிர்மறை எண்ணம் ஏற்படும் போதெல்லாம் அதற்கு மாறான நல்லெண்ண, சாதக, வாழ்வூட்ட தன்மைகளை மற்றும் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுதல்
• உணர்ச்சி ரீதியாக விவேகித்த முதிர்வு நிலைக்குச் சித்தமாகுதல் மற்றும் ஆன்ம போத வழிகாட்டுதலில் உறுதி
• ஆன்மீக வளர்ச்சியைப் பேணுதல்
சமாதி நிலைகள், அழிவுத்தர மனப்பாடுகளை வல்லமையுடன் எதிர்த்துக் கட்டுப்படுத்தி, அவைகளை இல்லாமலாக்கும்.
15.9. கேட்டும், பார்த்தும், தொட்டும், ருசித்தும், நுகர்ந்தும், உடலெடுத்த ஆன்மா புலன்விஷயங்களை அனுபவிக்கிறது.
உரை:
ஜட உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்துவதான நம் புலன்பொறிகள் ஆறாவது புலன் (அறிவு) எனக் கூறப்படும் மனதில்தான் வேரூன்றியுள்ளன. அது தான், புலன்காட்சிகளை கிரகிக்க ஐந்து விசேஷித்த பொறிகளை உருவாக்குகிறது.
15.10. குணங்களுடன் பொருந்தி உறவாடும் ஆன்மா, விழிப்புணர்வு மறைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தெரிவதில்லை. ஞானக் கண்ணுள்ளோர் பார்க்கிறார்கள்.
உட்பொருள்:
ஆன்மாவை அறியாத மக்கள், அல்லது வெளி ஜாலங்களில் கவனம் பதித்தோர்க்கு உடல்-மனம் எனும் முன்கட்டுமானத்திற்குப் பின்னே ஒரு அழியா ஆன்மா உள்ளதெனத் தெரியாது. ஞானமுள்ளவர்களோ தன் இறைமையையும் பிறரிடம் உள்ள இறைமையையும் அறிவர்.
VRGC கருத்து:
புதிய எற்பாட்டில் ஏசு, அங்கங்கே வசனங்களின் இறுதியில், “இதை கண்ணுள்ளவன் பார்க்கட்டும் காதுள்ளவன் கேட்கட்டும்” என்று முடிப்பார்.
15.11. சரியான கதியில் உறுதிப்பட்ட யோக அப்யாசிகள் ஆன்மாவின் இறைத்தன்மையைக் கிரகிக்கிறார்கள். நுண்ணறிவற்ற ஒழுக்கமற்ற அப்யாசிகளோவெனில் ஆன்ம இறைமைக் காண யத்தனித்தாலும் காண்பதில்லை.
உட்பொருள்:
ஆன்மப் பயிற்சி நிறைவை லட்சியமாகக் கொள்ளும் அப்யாசிகள் ஞானசித்திக்கு விழிப்பாகிறார்கள். மயக்குறு மனோபாவ மற்றும் ஒழுக்கவீனர்களான அப்யாசிகளோ பொய்யான முயற்சிகளைக் கொண்டிருப்பதால், அவர்கள் அதிலேயே ஊன்றியிருக்கும் வரை, ஆன்மசித்தி பெறாமல் தவறுகிறார்கள்.
உரை:
ஆன்மீகப் பாதை என்பது நேர்மையான, அர்ப்பணித்த, நுண்ணறிவுள்ள, பூரணக் கடமையுணர்வுள்ள சாதகனுக்கு உரியது. அவர்கள் விரைவான திருப்தியான விளைவை அடைகின்றனர். அவர்களின் ஆன்மீக வளர்ச்சி முன்னேற்ற கதியிலும் அதிகாரப்பூர்வமானதாகவும் இருக்கும்.
நேர்மை, அர்ப்பணிப்பு, நுண்ணறிவு, பூரணக் கடமையுணர்வு – எனும் இவைகளைத் துணைகொள்ளாத மக்களோ அவரவர் செயல் மற்றும் திறனளவுக்குரியதான விளைவையே எட்டுவர். இறைமைக்குச் சித்தமுறும் சாதகன், மறைபொருளின் உண்மையைக் கண்டுகொள்ளவும், வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தத்தை அறியவும் தீவிர ஆர்வம் கொண்டிருக்கவேண்டும். நுண்ணறிவுத் திறன்களை மெருகேற்றுவதுடன், “திறவாதலுக்கும், என் ஆன்மாவின் தன்மைகளை செயல்படுத்தவும், இறைமையின் இருப்புண்மை அறியவும் நான் முழுச்சதவீதமும் அர்ப்பணித்துள்ளேன்,” என்பதே அவனது சக்தியூட்டும் மந்திரமாக இருக்கவேண்டும்.
15.12. சூரியக்குடும்பத்திற்கு ஒளியூட்டும் சூரியனின் பிரகாச வல்லமை எதுவோ அது என்னுடையதென அறி.
உட்பொருள்:
வெளியிலே பிரகாசமளிக்கும் எந்த ஒன்றினுக்கும் உட்பொதிந்த கதிர்வீச்சு சுயம் பிரகாசமுள்ள என் பேருணர்வுதான்.
உரை:
வெளிப்பாடு அடைந்த எந்த ஒன்றும் பேருணர்விலிருந்துதான் உருவானது. ஜடப் பொருட்கள் பேருணர்விலிருந்து தோன்றுகின்றது; பேருணர்வு ஜடப் பொருட்களிலே தோன்றுதல் உடையதல்ல. வெளிப்பட்டவைகளில் மிகவும் நுண்ணியது ஒளிக்கதிரே. அக்கதிர்வீச்சின் முழுப்பரப்பில் மிகக் குறுகிய பாகமே (தோராயமாக, பில்லியனில் ஒரு பாகமே) நாம் நம் கண்களால் காணக்கூடியவை. அப்பரப்பில் விசேஷித்த கருவிகளின் உதவியாலேயே காணக்கூடிய எக்ஸ்ரே, காம்மா கதிர்கள், போன்றவைகளும் உள்ளடங்கியுள்ளன. பிரபஞ்சமும் அதன் ஒவ்வொரு அம்சமும் நம் உடல்கள் உட்பட, ஒளிமயமே.
15.13. பூமண்டலத்தினுள் நுழைந்து நான் எல்லா படைப்புக்களையும் சக்தியால் வளர்க்கிறேன். நீர்சம்பந்தமான நிலாமண்டலமாகி மூலிகைகளையும் தாவரங்களையும் வளர்க்கிறேன்.
உட்பொருள்:
ஜடவஸ்துக்களில் ஊடுருவி பேருணர்வின் உயிர்ப்பான அம்சம் அனைத்துப் படைப்புக்களையும் சக்தி ஊட்டி வளர்க்கிறது. நிலவின் ஒளி மற்றும் அதன் ஈர்ப்புசக்தி, கடலில் அலை பாய்ச்சல்களையும் தாவர வர்க்கத்தின் சுழற்சிகளையும் தூண்டுகிறது.
15.14. ஜீரணிக்கும் உஷ்ணமாய் நான் எல்லா உயிர்ப்படைப்புகளின் உள்ளும் இருக்கிறேன். பிராணனுடனும் அபானனுடனும் இணைந்து பல்வேறு வகைப்பட்ட உணவுகளை நான் உருமாற்றுகிறேன்.
உட்பொருள்:
பேருணர்வின் உஷ்ண உக்ரமுடைய பிராணனின் தூண்டுதலால் உணவு மாற்றமடைகிறது. அதுவே அபான வாயுவாக கழிவுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுகிறது.
உரை:
ஆயுர்வேத நூலின் படி, உணவின் மாற்றங்களாலான தாதுக்கள் ஏழுவகையாவன ----
அ. பிளாஸ்மா
ஆ. இரத்தம்
இ. சதை அல்லது தசை
ஈ. கொழுப்பு
உ. எலும்பு
ஊ. எலும்பு மஜ்ஜை
எ. ஜீவனோற்பத்தி ரஸங்கள்.
இதற்கும் மிகுபட்ட உணவின் சாரமானது, ஓஜஸ் எனும் புலனாகாச் சக்தியாக மாறி உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுவூட்டி ஆரோக்கியமானது சுடர்பிரகாச வலிமை பெற பங்காற்றுகிறது.
உணவு மாற்றம் அடைவதென்பது ரஜோ குணத்தில் உருவாகும் புலனறியா உஷ்ண மூலகத்தினால் ஆகிறது.
15.15. நான் எல்லா உயிர்ப்படைப்புகளின் இதயத்தில் நுழைந்திருக்கிறேன். என்னிடமிருந்துதான் அறிவுபெறுதலும், நினைவுகூர்தலும், அவைகளின் மறதியும் நிகழ்கின்றன. எல்லா வேதங்களிலும் அறியப்படுபவன் நானே. வேதாந்தத்தை படைத்தவனும் நானே, வேதங்களை அறிபவனும் நானே.
உட்பொருள்:
பேருணர்வுதான் எல்லா ஆன்மாக்களின் சாரம். அதன் தூண்டுதலாலேயே வெளித்தோன்று வாழ்க்கையின் எல்லா கதிப்போக்குகளும் சாத்தியமாகின்றன. தூய பேருணர்வுதான் உண்மையின் வெளிப்பாடான வேதங்களிலிருந்து அறியவேண்டியது. பேருணர்வுதான் தனது பேருண்மையைப் பகரும் வேதங்களின் முற்றுமடிவான வேதாந்தங்களை வெளிப்படுத்துகிறது. வாழ்வின் கதிப்போக்குகளையும் பேருணர்வுதான் வாழ்வினங்களில் உட்பொதிந்துள்ள தனது ஞானத்தினால் அறிவிக்கிறது.
உரை:
பிரபஞ்ச மன வெளியின் செயல்களின் பதிவுகளே பிரபஞ்சக் கதிப் போக்குகளின் நினைவுகளாகும். இது எதைப் போன்றது என்றால், நம் மனக் கோணங்களும் அனுபவங்களும் எவ்வாறு மனதில் பதிவு கொண்டுள்ளதோ அது போன்றது. பேருணர்விலிருந்து ஞானம் திறவாகிறது. நினைவுகளையும் பேருணர்வு வெளிப்படுத்தும் ஞானத்தையும் தமஸ் குணம் மறைக்கும் தன்மையுடையது; ரஜஸ் குண சேஷ்டைகள் அவைகளைத் திரித்தும் குழப்பியும் விடும்.
15.16. இவ்வுலகில் பேருணர்வின் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று அழிவது, மற்றொன்று அழியாதது. வெளித்தோன்றலால் வந்தவை யாவும் அழிவன. மாறாமலிருப்பது அழியாதது.
உரை:
ஒன்றேயான பேரிருப்பின் இரண்டு அம்சங்கள் உள்ளன. வெளிப்படுவது எதுவோ அது அழிவது. அது கால, இட வெளியில் இருப்புக் கொண்டு இறுதியில் அதன் உருவக் கட்டுமான அம்சங்கள் ஜட இயற்கைக்குத் திரும்பிவிடும்போது கரைந்துவிடுகிறது. அழியா அம்சம் என்பது இறைமையின் வாழ்விக்கும் தூய உணர்வே.
15.17. உன்னத ஆன்மாவான அனைத்தையும் கடந்த இருப்பு, மேற்சொன்னவைகளுக்கெல்லாம் வேறானது. நித்யப் பிரபுவாக மூவுலகத்தையும் ஊடுருவி அவைகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது.
உட்பொருள்:
பூரணமானது, அதுவே தானாய்ச் சுயம்புவாக வெளித்தோன்றும் இறைமையின் காரண அம்ச தூய உணர்வையும், வெளிப்பட்ட காரண, சூட்சும, ஸ்தூல பிரபஞ்சங்களையும் கடந்தும் விளங்குகிறது. அது எல்லா வெளிகளையும் ஊடுருவி இருந்து கொண்டே அவைகளின் நித்ய ஆதாரமாகவும் இருக்கிறது
15.18. அழிவுறுவதையும் அழியாததையும் நான் மேவியிருப்பதால் உலகத்திலும் வேதங்களிலும் நான் உன்னதப் பேருணர்வு என அழைக்கப்படுகிறேன்.
உட்பொருள்:
தூயப் பேருணர்வானது, நிகழ்வுப் பெரும்பரப்பினையும் இறைமைத் தூய உணர்வினையும் மேவி இந்த உலகத்தில் அதை அறிந்தவர்களிடமும் ஞானத்திறவடைந்தவர்களிடமும் இது மாறா பேருண்மை என போற்றப்படுகின்றது.
உரை:
தூயப் பேருணர்வானது, தன்மைகள் அல்லது குணங்கள் ஏதுமற்றதால் தனக்கென தனிவொரு உருவமற்றது. சத்ய நாட்டம் உள்ள பக்தர்களில் சிலர் கிருஷ்ணரையோ, வேறுசிலர் மற்ற ஒருவரையோ உன்னத வியக்தியாகக் கருதுகின்றனர். அந்தக் கற்பனைக் கருத்துக்களெல்லாம் அருவத்திற்கு உருவம் கொடுத்துவிடுவதான அவர்களின் ஆசை அல்லது தேவை சார்ந்த மன உருப் பிம்பங்களே.
15.19. மயக்குறு மனமற்று யாரொருவன் என்னை உன்னதத் தூய உணர்வாக அறிகிறானோ, அவன் சர்வஞானி. அவன் முழுமனதுடன் என்னைத் துதிக்கிறான்.
உட்பொருள்:
பூரணத்தை தரிசித்த ஒளியூட்டம் பெற்ற ஆன்மாக்கள், எல்லா ஞானத்தையும் கைகூடப்பெற்றவர்களும் அந்த சித்தியில் நிலைத்தவர்களும் ஆவார்கள்.
உரை:
மயக்குறு மனமும் பிறழ்காட்சிகளும் அற்று சுய ஞானம் பெற்ற ஆன்மாக்களின் உள் அறிவானது – அதாவது இறைமையை அதன் சுயரூபத்தில் அறியும் அறிவு --- முற்று முழுதாகத் திறவாகிறது.
15.20. இவ்விதமாக இந்த ரகசிய ஞானம் என்னால் அருளப்பட்டது. இந்த ஞானத்திற்கு விழிப்படைந்த ஒருவன் ஞானியாகி எல்லாக் கடமைகளையும் பூர்த்தி செய்தவன் ஆகிறான்.
உட்பொருள்:
தூயப் பேருணர்வின் பரப்பிலிருந்து இந்த ஆழ்புதை ஞானம் சுயவெளிப்பாடானது. இந்த ஞானத்திற்கு விழிப்பாகி, சாதகனின் பிரக்ஞை ஞானமாக மலர்ந்து அவனுடைய எல்லாக் கடமைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டன.
உரை:
சாதகன், நிறைவான ஆன்மசித்தியில் முழுவதும் நிலைத்தவனாகி அவனுடைய பிரக்ஞை ஞானமாக முதிர்கிறது. செய்யவேண்டுவன எல்லாம் முடிக்கப்பட்டுவிட்டன. பாக்கிச் செயல்களும் நிறைவேறின. போராட்டம் முடிந்தது. அறியாமை அகன்றது. ஞான ஒளி மட்டுமே இருக்கிறது.
முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், புருஷோத்தம ஞானம் என மூலத்திலும், உன்னத இருப்புண்மையின் யோகம் என இவ்வுரையிலும் தலைப்பிடப்பட்ட 15 ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.
Post a Comment