பதஞ்சலி யோக சூத்திரம் - III. விபூதி பாதம் - சித்திகள்
ஓம் ஸ்ரீ விக்னேஸ்வராய நம:
ஸ்ரீ குருப்யோ நம:ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே நம:
ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி பாதம் போற்றி
ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் பாதம் போற்றி
ஸ்ரீ ராய் யூஜீன் டேவிஸ் பாதம் போற்றி
பதஞ்சலி யோக சூத்திரம்
III. விபூதி[i] பாதம் - சித்திகள்
1. சித்தத்தின் கவனத்தை ஒரே இடத்தில் [விஷயத்தில்] தக்கவைத்திருப்பது ஒருமுகமாக்கல் [தாரணை].
2. ஒருமுகமாகி அந்த விஷயத்தின் தன்மையை கிரகிப்பது தியானம்.
3. தியானிக்கப்படும் விஷயம் தனது மெய்த்தன்மையை எவ்வித வடிவமுமின்றி உள்ளபடி ஒளிர்வது சமாதி.
4. மேற்கூறிய மூன்றும் [3.1 - 3.3] ஒருங்கே "ஸம்யமம்" என்றழைக்கப்படும்.
5. ஸம்யமத் தேர்ச்சியினால் மெய்யறிவு தோன்றுகின்றது.
6. மெய்யறிவு பல படிநிலைகளில் வெளிப்படும்.
7. ஸம்யம-மூன்றினை முன்கூறிய பூர்வாங்கமான [ஐந்து] யோக அங்கங்களுடன்[ii] ஒப்பிடுகையில் இவை உட்புற யோக அங்கங்கங்களாகக் கருதப்படும்.
8. ஆனால், இவையும் [ஸம்யம-மூன்றும்] நிர்பீஜ சமாதி நிலைக்கு வெளிப்புற அங்கங்களே.
9. அடக்கும் மன அலைகள் உதித்து முன்னெழுந்த [துன்பகர] மன அலைகள் அடங்கி மறையும்போது, சித்தம் அடக்கல் (நிரோத) பண்பினைக் பெறுவதால் அம்மாற்றம் "அடக்கல் (நிரோத) பரிணாம மாற்றம்" எனப்படும்.
10. அடக்கல் பரிணாம மாற்றத்தின் தொடர்ந்த நற்பயிற்சியினால் மனம் சாந்தியடையும்.
11. பல்வேறு விஷயங்களை நாடிச் செல்லும் மன அலைகள் ஒடுங்கி, ஒரு விஷயத்தில் குவிந்து நிலைபெறுகையில் உண்டாவது சித்தத்தின் "சமாதி பரிணாம மாற்றம்".
12. ஒரே விஷயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக சித்த விருத்திகள் அவ்விஷயத்தைப் பற்றியே தொடர்ந்து அறிவுறுத்துவது "ஒருமுகப்பட்ட (ஏகாக்ர) பரிணாம மாற்றம்".
13. இப்பரிணாம மாற்றங்களின் [3.9 - 3.12] மூலம் பஞ்சபூதங்கள், இந்திரியங்கள் ஆகியவைகளின் பண்பு, தன்மை, நிலை, பரிணாம மாற்றங்கள் போன்றவை அறியப்படுகின்றன.
14. ஆழ்மனதில் ஊழ்வினைகள் அடங்கியோ, வெளிப்பட்டுக் கொண்டோ, இன்னம் முழுவடிவம் அடையாமலோ இருக்கும். அனுபவிப்பவர் அவற்றை அணுகும் விதத்தைப் பொருத்து அவற்றின் பலன் வேறுபடும்.
15. ஊழ்வினைகளின் [வகை, வடிவு, செயல்பாடு, பிறிதின்கண் தொடர்பு என இவ்வாறான] அமைப்பு எத்தகைய மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதற்கு அடிப்படை.
16. மூவகைப் பரிணாமங்களினில் செய்யும் ஸம்யமத்தால், கடந்தகால, எதிர்கால சம்பவங்கள் நினைவுக்கு வரும்.
17. ஒரு சொல், அது குறிக்கும் பொருள், அதனால் ஏற்படும் அறிவு, இவை பரஸ்பரம் பிணைந்தும் கலந்தும் விளங்கும் தன்மையன. இவற்றைப் பாகுபடுத்தி அவைகளின்மேல் செய்யும் ஸம்யமத்தால் சகல ஜீவராசிகள் [மனிதனுட்பட] உண்டாக்கும் சொல்லோசைகளின் பொருள் விளங்கும்.
18. ஊழ்வினைகளை ஸம்யமத்தால் உள்ளபடி அறிவுணர்வதினால், பூர்வஜென்ம நிகழ்வுகள் நினைவுக்கு வரக்கூடும்.
19. பிறர் சித்தத்தின்மேல் செய்யும் ஸம்யமத்தால், அவர்களுடைய மனநிலையை விளங்கிக் கொள்ளமுடியும்.
20. பிறரின் மனநிலையை அறிந்தாலும், ஸம்யமத்தின் எல்லைக்கப்பாற்பட்ட, அவர்கள் மனநிலைக்கு அடிப்படையான ஊழ்வினைகளை [பொதுவாக] அறியவோ, மாற்றம் செய்விக்கவோ இயலாது [விதிவிலக்கு 3.39ல் உரைக்கப்பட்டுள்ளது].
21. தேக உருவத்தின்மேல் செய்யும் ஸம்யமத்தால், உருவத்தினின்று வெளிப்படும் ஒளி அதிர்வலைகளின் கிரகிக்கும் சக்தியைத் தடைப்படுத்தி, பிறரின் கண்ணில்படாமல் உலாவலாம்.
22. இதேபோல் [3.21], சத்தம் முதலான தன்மாத்திரைகளினின்று வெளிப்படும் அதிர்வலைகளின் கிரகிக்கும் சக்தியைத் தடைப்படுத்தி, அவற்றைப் பிறரால் கிரகிக்க முடியாதவாறு செய்யலாம்.
23. துரிதமாகவும், தாமதித்தும் வெவ்வேறு வேகத்தில் வெளிப்படும் ஊழ்வினைகளினில் செய்யும் ஸம்யமத்தால், மரணம் மற்றும் கொடிய சம்பவங்களின் நிகழ்வுகளை முன்கூட்டியே அறியலாம்.
24. நட்பு [கருணை, மகிழ்ச்சி,...] முதலான ஆக்கபூர்வ மனோபாவனைகளினில் செய்யும் ஸம்யமத்தால், அத்தகைய குணநலன்களில் வலுப்பெறலாம்.
25. மேற்கூறிய [3.24] மனோபாவனைகளில் செய்யும் திண்மையான ஸம்யமத்தால், அத்தகைய குணநலன்களில் யானையைப்போல [மிக்க வலிவுடைய] பலம் பெறலாம்.
26. உள்ளொளியின் மீது செய்யும் ஸம்யமத்தால், நுணுக்கமான, புலனாகாத, கடினமான விஷயங்களை அறியலாம்.
27. சூரியன் மீது செய்யும் ஸம்யமத்தால், அண்ட சராசாரங்களின் தன்மையை அறியலாம்.
28. சந்திரன் மீது செய்யும் ஸம்யமத்தால், நட்சத்திரக் கூட்டங்களின் வியூகத்தை [குழுவின் கட்டமைப்பு] அறியலாம்.
29. துருவ நட்சத்திரத்தின் மீது செய்யும் ஸம்யமத்தால், மற்ற நட்சத்திர, கோளங்களின் சஞ்சாரங்களை அறியலாம்.
30. நாபி [மணிபூரக] சக்கரத்தில் செய்யும் ஸம்யமத்தால், உடலமைப்பு, உள்ளங்கங்களின் இயக்கச் செயல்முறைகள் போன்றவற்றை அறியலாம்.
31. தொண்டை [விசுத்தி] சக்கரத்தில் செய்யும் ஸம்யமத்தால், தாகம், பசி போன்றவற்றை தவிர்க்க இயலும்.
32. கூர்மநாடியில் [இருதய அனாஹத சக்கரத்தில்] செய்யும் ஸம்யமத்தால், நிலைத்த உறுதிப்பாடு தோன்றும்.
33. புருவமத்தியில் [ஆக்ஞா சக்கரத்தில்] செய்யும் ஸம்யமத்தால், உள்ளொளி தோன்றும், மெய்ஞ்ஞானியர் மற்றும் மெய்க்காட்சி தரிசனம் பெறலாம்.
34. ஒளிரும் மெய்க்காட்சியினால், [அறியத்தக்க] அனைத்தையும் அறியலாம்.
35. இருதயத்தினில் [இருப்பின் மூலஸ்தானம்] செய்யும் ஸம்யமத்தால், சித்தத்தின் தன்மையை நன்கு அறியலாம்.
36. அனுபவிப்பவன் [ஆன்மா] அனாத்மா விஷயங்களுடன் [அகங்கார மனங்கள்] இரண்டறச் செறிதலினாலாகும் மருட்பார்வையினால், தன் மெய்யான நலத்தில் அக்கறையின்றி போகப் பொருட்களின் மேல் கவனம் செல்லும்; அவற்றினிலிருந்து உள்முகமாகத் திசைதிருப்பி தன் மெய்யான கடமையில் செய்யும் ஸம்யமத்தால் ஆன்மஞானம் ஏற்படும்.
37. மேலும், மெய்க்காட்சியினால் புலன்களுக்கப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிய ஞானம் புலன்கள்மூலம் நேரடியாக அனுபவித்து அறிவதுபோல் உண்டாகும்.
38. இவை [3.16 - 3.51] ஆரவாரத்தன்மை கொண்ட வெளிமுகமாகப் பாயும் சித்திகள்; [தனது ஆன்மவளர்ச்சிக்கு மாறாக இவற்றைப் பிரயோகிப்பதனால்] சமாதியில் தொடர்ந்து நிலைப்பதற்கு இடையூறாக அமையும்.
39. தனது கர்மவினை பந்தங்களை நீக்கிவிட்டு, உடல், மனங்களில் உலவும் ஐவகைப் பிராணவாயுக்களின் செயல்பாட்டை ஸம்யமத்தால் நன்கு அறிவதினால் பிறர் சரீரத்தில் புகுந்து தன்வசம் ஆளலாம்.
40. உதான வாயுவில் ஸம்யமத்தின் தேர்ச்சி உடலை மேலெழுப்பும் சக்தியை உண்டுசெய்யும்; அதனால் சுற்றுப்புறத் தொல்லைகளை தவிர்க்க இயலும்.
41. சமான வாயுவில் ஸம்யமத்தின் தேர்ச்சியினால், ஜொலிக்கும் தேஜஸ் ஏற்படும்.
42. ஆகாசம் - சப்தம் இவைகளின் சம்பந்தத்தை ஆராய்வதினால், திவ்யமான சப்தங்களைக் கேட்கும் சக்தி உண்டாகும்.
43. ஆகாசம் - தேகம் இவைகளின் சம்பந்தத்தை ஆராய்வதினால், உடல் பஞ்சுபோல் லேசாக மாறும்; உடற்பளுத் தடையின்றி ஆகாசவழிப் பயணமும் சாத்தியம்.
44. தன்னுணர்வானது வெளிவிஷய கற்பனை விருத்திகளின்றி தன்தேக உணர்வைக் கடந்துசெல்கையில், உள்ளொளியை மறைக்கும்திரை அகலுகின்றது.
45. ஸ்தூல, சூட்சும விஷயங்களின் தன்மை, அவற்றிற்கிடைப்பட்ட தொடர்பு, அவற்றின் சாராம்சம் ஆகியவைகளில் செய்யும் ஸம்யமத்தால், பஞ்சபூதங்களை தன்வசத்தில் ஆட்கொள்ளும் சக்தியைத் தோற்றுவிக்கும்.
46. இதனால் [3.45] அணிமாதி சித்திகள் தோன்றும்; உடல் பஞ்சபூதங்களினால் ஏற்படும் அவதிகளிலிருந்து விடுபடும்.
47. இதனால் [3.45] அழகும், பலமும் கொண்ட வைரத்தினும் கடினமான [அதீத எதிர்ப்புசக்தி கொண்ட] தேகத்தைப் பெறலாம்.
48. அகங்காரம், வெளியுலக அனுபவம் இவைகளின் தன்மை, அவற்றிற்கிடைப்பட்ட தொடர்பு, அவற்றின் சாராம்சம் ஆகியவைகளில் செய்யும் ஸம்யமத்தால், புலன்களை அடக்கி வெல்லும் சக்தி பிறக்கும்.
49. இதனால் [3.48], புலன்களின் குறுக்கீடின்றி, மனோபாவனைகள் மற்றும் உணர்வின் சூட்சும உயர்மட்ட நிலைகளை தன்வசத்தில் ஆளலாம்.
50. அகங்காரம் [ஸத்வம்], ஆன்மா [புருஷன்] இவைகளை வேறுபடுத்தி அறிதலால், [அறிந்து அகங்காரத்தை ஆன்மவுணர்வில் சமர்ப்பிப்பதன்மூலம்] எங்கும்நிறை ஸர்வாத்மக உணர்வையும், எல்லாமறியும் ஸர்வக்ஞ தன்மையையும் பெறலாம்.
51. இவற்றில் [3.50, பொதுவாக எந்த சித்திகளிலும்] பற்று கொள்ளாமல், இவற்றின்மூலம் தன்குறைகளின் மூலத்தை [கர்மவினைகளை] நீக்குகையில், தன் உண்மை சுயரூபத்தில் ஒன்றும் கைவல்ய அனுபவம் ஏற்படுகிறது.
52. [காரண-காரிய தத்துவங்களான] தேவதைகளின் உபசரிப்பினால் ஏற்படும் திவ்ய சக்திகளில் பற்றும், பெற்றதால் மகிழ்ந்து கர்வமும் கொள்ளற்க; அது வேண்டத்தகாத முந்தைய மனநிலைக்கு திரும்பவும் இட்டுச்செல்லும்.
53. கணந்தோறும் மாறும் நிகழ்வின் காலக்கிரமத்தில் செய்யும் ஸம்யமத்தால், நிகழ்வின் எல்லா பாகங்களையும் விவேகித்து அறியும் ஞானம் ஏற்படும்.
54. சூழல், இடம், காலம் வேறாயினும் ஒரேமாதிரி தோன்றும் சம்பவங்களைத் துல்லியமாக வேறுபடுத்தி விவேகத்தினால் அறியலாம்.
55. முக்திபயக்கும் தாரகமான விவேக ஞானத்தினால் எல்லாவிஷயத்தையும் கிரமமின்றி ஒருமித்து முழுமையாக அறியலாம்.
56. தூய ஆன்மாவிற்கு நிகராக அகங்கார மனங்கள் [ஸத்வம்] தூய்மையடைந்தால் கைவல்யசித்தி அடையலாம்.
---
[i] விபூதி என்பது கடவுளின் சக்தி.
[ii] பூர்வாங்கமான [ஐந்து] யோக அங்கங்கள்: யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், உள்முகமாக்கல் . இவை சாதனா [2-ஆம்] பாதத்தில் கூறப்பட்டுள்ளன.
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org