W183. மன்னிக்கும் தன்மையை உரிமையுடன்-வேண்டுதல்.(Whispers from Eternity - Tamil & English)
183. மன்னிக்கும் தன்மையை உரிமையுடன்-வேண்டுதல்.
என்னைப் பிறரினுள் காண எனக்குக் கற்பி. நான் என் குற்றங்களை மன்னித்து, அவைகளைக் கமுக்கமாகக் களைய விழைவதுபோல், பிறரை மன்னித்து, அவர்களுடைய குற்றங்களை அவர்கள் சரிசெய்ய விரும்பினால் அவைகளை நிவர்த்திக்க அமைதியாக ஆலோசனையளிக்க எனக்குக் கற்பி.
தடுமாறிக் கொண்டுள்ளோர், அடம்பிடிப்போர் ஆகிய அனைவரையும், கோழைத்தனமான அராஜக சக்தியை விலக்கிவிட்டு, மென்மையான பொறுமையின் வலிமையின்மூலம் நான் உன்னை நோக்கி வழிநடத்திச் செல்வேனாக.
உன் ஒளியானது நல்ல, வைரம்போல் பிரகாசிக்கும் ஆன்மாக்களிலும், கெட்ட, கரிய உள்ளமுடையவர்களிலும் சமமாகவே ஒளிர்கின்றது என்பதனைக் காண எனக்குக் கற்பி. தீயவர்களையும், இருண்டமனங் கொண்டோரையும், பளீரெனத் துலங்கும் ரிஷிகளாக ஆக்கி, அவர்கள் உன் பாரபட்சமற்ற ஞானக்கதிர்களை முழுமையாகப் பிரகாசிக்குமாறு மாற்ற என் புரிந்துகொள்ளும் திறனையும், ஆற்றலையும் நீ வழிநடத்து.
என் ஆன்மாவை மூடிச் சுற்றிலும் அலட்சியக் கரிப்பிடித்திருந்ததை நீ தேய்த்துக் கழுவிவிட்டாய், அது உன் ஒளியைப் பிரகாசிக்கின்றது. இப்போது நான் உன் குழந்தையென்பதை அறிகின்றேன். அதேபோல், அன்பினாலே எல்லா ஆன்மாக்களையும் கழுவ என்னைத் திறம்படுத்து. அதன்மூலம், மிகவும் இருண்ட ஆன்மாக்களையும் உன் குழந்தைகளாக, உறக்கத்தின் வசப்பட்ட என்னுடைய சொந்த சகோதரர்களாகக் காண வை. உன் ஒளியானது வலிமைகுன்றிய இருள் மண்டிய ஆன்மாவிலும் மறைவாக இருக்கின்றது; அது சுய-முயற்சியினால் உதிக்கும் நல்லோர் உறவினில் தோன்றும் சக்தியினால் அங்கீகரிக்கப்பெற்று, தானாக வெளிப்பட அது காலவரம்பற்றுக் காத்திருக்கின்றது. அதேபோல், என்னையும் அப்படிப்பட்ட பொறுமையை உடையவனாகப் பண்படுத்து; அதன்மூலம், உண்மையைத் தவறவிட்ட எல்லா ஆன்மாக்களையும் அவர்கள் விரும்பும்போது உதவ நான் எப்போதும் தயாராக இருக்குமாறு செய்.
பெருந்தூற்றலுக்காளான கொலையாளிக்கும் அவன் நல்லவனாக மாற மீண்டும் வாய்ப்பளித்து, புதிதாக மற்றொரு ஜென்மத்தில் அடையாளங் காணமுடியாத படி உடம்பளித்து, வேறு சூழலில் அவனைப் புழங்க வைக்கின்றாய். அதேபோல், தவறிழைத்து உலகத்தால் கைவிடப்பட்டவனையும் எங்கள் மன்னிக்கும் பொறுமைக் கூடாரத்தில் அடைக்கலம் கொடுக்க எங்களுக்குக் கற்பி. பேருணர்வே, உன்னிடமிருந்து பெற்ற எங்கள் அன்பின் கதிரொளி அவனின் தவறினால்-உறைந்த ஆன்மாவின் நடுக்கத்தை விலக்கட்டும்.
இவ்வுலகம் தவறான காரியங்களின் கடலிலிருந்து அதன் இச்சைப்படி எப்போது மீண்டு வெளிவருகிறதோ, அப்போது உன்னை விளங்குமாறு செய்ய நீ ஆவலுடன் காத்திருக்கின்றாய். தவறினுள் ஆழ்ந்த இவ்வுலகின்முன் நீ காட்டும் அமைதி, உன் பொறுமையையும், மன்னிக்கத் தயாராகவுள்ள குணத்தையும் புலப்படுத்துகின்றது. பிறர் எங்களைக் கசப்புணர்வினால் குரூரமாகக் காயப்படுத்தினாலும், எங்கள் இனிமையான உதவும் கரங்களை அவர்களுக்கு நீட்ட மறுக்காமலிருக்க எங்களுக்குக் கற்பி; அதுவும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி, அவர்கள் தாங்களே தங்களுக்கு உதவிக்கொள்ளுமாறு உதவ எங்களுக்குக் கற்பி. அதன்மூலம், ஒருக்கால் நாங்கள் அவர்களுக்கு உதவமுடியாத பட்சத்தில் அவர்கள் எங்களுக்கெதிராக மாறினாலும், நாங்கள் அவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்வோம்.
எங்களை மிகவும் துன்புறுத்துபவர்களை, முதலில் உள்முகமாகவும், பின் வெளிப்படையாகவும் மன்னிக்க எங்களுக்குக் கற்பி. மன்னிக்கும் குணத்தின் நறுமணத்தை நாங்கள் எங்கும் தெளித்து, புளித்துப்போன வியப்பிற்குப் பதிலாக இனிய சொற்களையும், வெறுப்பிற்கு அன்பையும், சினத்திற்கு கருணையையும், தீங்கிற்கு நன்மையையும் நல்குமாறு எங்களுக்கு அருள்புரி.
மிகவும் இருள் மண்டிய ஆன்மாவும், பிழைபட்ட கனாக்காணும் ஒரு நித்தியனே என்பதை நாங்கள் உணருமாறு எங்களை விழிப்புறச் செய். மன்னிப்புக் குணத்தின் தெய்வீகத் தன்மையினால், அவனின் உணர்வு நிலையை தூய, அமிருத, விண்ணுலக மைந்தன் எனும் ஸ்தானத்திற்கு விழிப்புறச் செய்யுமாறு எங்களுக்கு மேம்படுத்தும் சக்தியளி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
183 Demanding forgiveness.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Post a Comment