W19. அகத்திலிருந்து எல்லாவற்றிற்கும் பரந்து விரியும் சகோதர அன்பினை வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
19. அகத்திலிருந்து எல்லாவற்றிற்கும் பரந்து விரியும் சகோதர அன்பினை வேண்டுதல்.
தெய்வத்தாயே, என் நெஞ்சில் சுரக்கும் உன் அருட்கொடையான அன்பினால் என்னை நான் நேசிப்பதைக் காட்டிலும் மேலாக, என் குடும்ப அங்கத்தினர்களை நேசிக்க எனக்குக்கற்பி. என் குடும்பத்தைக் காட்டிலும் மேலாக, என் அக்கம்பக்கத்தினர்களை நேசிக்க எனக்கு அருள்புரி. என் அக்கம்பக்கத்தினர்களைக் காட்டிலும் மேலாக, என் நாட்டினை நேசிக்க என் மனத்தை விரிவுபடுத்து. என் நாட்டுமக்கள், அக்கம்பக்கத்தினர்கள், குடும்ப உறுப்பினர்களைக் காட்டிலும் மேலாக, என் உலகினையும், அதில் வாழும் எல்லா மனித சகோதரர்களையும் நேசிக்க என் மனத்தை விரிவுபடுத்து.
முடிவில், அனைத்திற்கும் உச்சமாக உன்னை நேசிக்க எனக்குக்கற்பி. ஏனெனில், உன் அன்பினால்தான் மற்ற அனைத்தையும் நேசிக்கமுடிகின்றது. நீயில்லாமல் என்னால் மற்ற யாரையும், எதனையும் நேசிக்கவே முடியாது.
இறைத்தந்தையே, இல்லற அன்பின் வாயில்களின் வழியே நுழைய எனக்குக்கற்பி, மேலும் நண்பர்களின் நேசத்தின் மூலம் விஸ்தாரமான சமூக அன்புக்கட்டிடத்திற்குள் நுழைய எனக்குக்கற்பி. பின், சமூக அன்பின் கதவுகள் வழியே சென்று இன்னும் விரிவான சர்வதேச அன்பின் அரண்மனைக்குள் நுழைய எனக்குக்கற்பி. சர்வதேச அன்பின் வாயில்களின்மூலம் நுழைந்து தெய்வீக அன்பின் முடிவற்ற எல்லைக்குள் செல்ல எனக்குக்கற்பி. ஆங்கே, எல்லா உயிருள்ளவைகளும் ஜடப்பொருட்களும் உன் அன்பினால் சுவாசித்து வாழ்வதைக் காண்பேன்.
குடும்ப, சமுதாய, சர்வதேச அன்பினாலான எந்தவொரு வசீகரிக்கும் அழகிய வாயில்களிலும் மயங்கித் தாமதிக்காமலிருக்க எனக்குக்கற்பி. அன்பின் சிறிய எல்லைகளுக்கு இட்டுச்செல்லும் இந்த எல்லா வாயில்களின் வழியேயும் நுழைந்து மனித அன்பின் கடைசிவாயில்வரை சென்று, பின்னர் நான் தெய்வீக அன்பின் முடிவற்ற எல்லைக்குள் நுழைய எனக்குக்கற்பி. அங்கே, வாழும் உயிர்களையும், ஜடம்போன்று வாழ்பவைகளையும், ஜடமாக உறங்குபவைகளையும் என்னுடையதாகவே நான் காண்பேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
19 Prayer for expanding love from self to all brethren.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org