W5. ஆன்மீக நோக்கில் "இறைவனிடம் செய்யும் பிரார்த்தனை" ("Lord's Prayer" in the Bible). (Whispers from Eternity - Tamil & English)
5A. ஆன்மீக நோக்கில் "இறைவனிடம் செய்யும் பிரார்த்தனை" ("Lord's Prayer" in the Bible).
பரலோகத் தந்தையே, தாயே, நண்பனே, பிரியமான என் கடவுளே! உன் இருப்பின் ஒளிப்பிரகாசம் எங்கள் எல்லா மனங்களிலும் பரவட்டும்.
பொருளுலகத்தை நோக்கிச் செய்யும் துதி உன்னை நோக்கிச் செய்யும் துதியாய் மாறட்டும். நீ இல்லாமல் நாங்கள் எதனையும் உண்மையில் விரும்பமுடியாது. ஆகையால், எல்லாவற்றிற்கும் மேலாக, முதலில் உன்னை நேசிக்க நாங்கள் கற்போமாக. உன் பேருணர்வில் உள்ள பரமான ஆனந்த ராஜ்ஜியம் எல்லா தெய்வீகக் குணங்களுடன் இந்நிலவுலகில் நன்கு விளங்கட்டும். பரிச்சேதம், குறைபாடு, துன்பங்கள் போன்றவைகளில் இருந்து எல்லா தேசங்களும் விடுபடட்டும். உள்ளிருக்கும் உன் ராஜ்ஜியம் வெளியிலும் வெளிப்படட்டும்.
தந்தையே, நாங்கள் கொடையாக உன்னிடமிருந்து பெற்ற அறிவினைத் தவறாக உபயோகித்ததினால், ஆசையெனும் பெருங்குழியில் வீழ்ந்துள்ளோம். எங்களை அந்தக்குழியிலேயே விழுந்து கிடக்குமாறு விட்டுவைக்காதே. நாங்கள் உள்ளதைவிட அதிக விடுதலையுணர்வும் பலமும் பெற்ற பின்னர் -- நாங்கள் உன்னை விட எங்கள் ஆசைகளை அதிகமாக நேசிக்கிறோமா என எங்களை நீ சோதித்துப் பார்க்க விரும்பினால் -- அப்போது நீ உன்னை எல்லா விருப்பங்களுக்கும் மேலான விருப்பமாய் ஆக்கிக்கொள். தந்தையே, எங்களைச் சோதனைக்கு உள்ளாக்குவது உன் விருப்பமெனில், உன் சோதனைகளை நாங்கள் எதிர்க்கொண்டு வெல்லுமாறு எங்கள் இச்சாசக்தி நன்கு வலிமையடைவதற்கு நீ உதவு.
எங்களுக்கான தினசரி அமுதான: உடலுக்கு உணவையும், ஆரோக்கியத்தையும், செழிப்பையும்; மனதிற்கு செயல்திறனையும்; எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் உள்ளங்களுக்கு உன் ஞானத்தையும், அன்பையும் எங்களுக்கு நீ நல்கு. எங்கள் சுய கவனக்குறைவினால் பின்னப்பட்ட அறியாமை வலையினில் சிக்கியுள்ள எங்களை நாங்கள் மீட்டுக்கொள்ள எங்களுக்குக் கற்பித்து உதவு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
5 Spiritual Interpretation of the Lord's Prayer
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org