MCCRF - A global volunteer network

W160. சினம் கொள்ளும் பழக்கத்தைக் குணமாக்க வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)



160. சினம் கொள்ளும் பழக்கத்தைக் குணமாக்க வேண்டுதல்
பரப்ரம்மமே! எங்கள் எல்லோருக்கும் தந்தையே! என் மூளையைத் தகிக்கும், நரம்புகளைப் புடைக்கும், ரத்தத்தை விஷமாக்கும் கோபம் என்னும் தீய நோய் என்னை அணுகாமல் காப்பாயாக.

என்னைச் சினம் தீண்டும் போதெல்லாம், மனக்கண்ணால் என்னை ஆராய்ந்து பார்க்கும் கண்ணாடியை என் முன் காட்டு. அஷ்டகோணலாய், அசிங்கமாய் என்னாலேயே சகிக்க முடியாத சினம் தாக்கிய மூஞ்சியை நான் பிறரிடம் காட்டும்படி செய்து விடாதே!

என்னையும், பிறரையும் துயர்ப்பட வைக்கும் கோபத்தைக் கரைக்க எனக்குக் கற்பி. எனக்கும் பிறருக்கும் இடையிலுள்ள பரஸ்பர அன்பினை என் சுயவிரக்தியால் மாசு படுத்தாமல் இருக்க அருள்புரி!

மேன்மேலும் கோபம் கொண்டு என் கோபத்தை வளர்க்காதிருக்க ஆசிர்வதி. என் சினத் தீயினால் பொசுங்கிய பிறர் நெஞ்சங்களில், சுயமரியாதை மருந்து கொடுத்து, கருணைக்களிம்பு தடவி நான் அவர்களைக் குணப்படுத்த எனக்கு வரம் அருள்!

துன்புறுத்தும் கோபப்புயலால் என் அன்புப்பொய்கை எப்போதும் சஞ்சலமடையாதிருக்க ஆணையிடு!
மிக மோசமான என் பகைவனும் என் சகோதரனே என எனக்கு அறிவுறுத்து. என்னை நேசிப்பது போலவே, அவனையும் நீ நேசிக்கின்றாய் என்னும் உண்மை எனக்கு எப்போதும் மறக்காமல் ஞாபகத்தில் இருக்க வரமருள வேண்டும்!


தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா / VR Ganesh Chander

Original:
160 Demand for the cure for the anger habit
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!

Powered by Blogger.