9. ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் - பகவத்கீதை - The Eternal Way
பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).
பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயம்
9. ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
(ராஜவித்யா ராஜரகசிய யோகம்)
உயர்மட்ட உண்மைகளின் உள்ளார்ந்த விளக்கங்களுடன் சென்ற அத்தியாத்தின் கருப்பொருள் தொடர்கிறது. மேலும், விழிப்படைந்து வரும் ஆன்மா, அவ்வுண்மைகளை எவ்வாறு முழுவதுமாய் அறிவது எனவும் சித்தி பெறுவது எனவும் விவரிக்கப்படுகிறது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது:
9.1. இக்கல்வியை எதிர்வாதம் செய்யாமல் ஏற்றுக் கொள்ளும் உனக்கு, இந்த மிக ரகசிய ஞானத்தையும் அதன் அனுபூதியையும் விளக்குவேன். இதனை அறிந்து, பிழைகளிலிருந்து விடுபடுவாய்.
உட்பொருள்:
உண்மை மீது அவநம்பிக்கையும் வீண் தர்க்கங்களும் இல்லாத உனக்கு, பூர்வாங்க சத்யம் அனுபவத்துடன் தானாய் வெளிப்பட்டு, அதனை அறியும் நீ, நுண்ணறிவுத்தனமான பிழைகளிலிருந்தும் பிறழ்காட்சிகளிலிருந்தும் விடுபடுவாய்.
உரை:
சொந்த அறிவுக்காட்சிகள் மற்றும் வெளியான தகவல்கள் நுண்ணறிவு வெளிச்சத்தில் வடிகட்டப்படும்போது, அவைகளில் தேர்ந்த அறிவை விவேகித்து உடனே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நேர்மையான கேள்வி கேட்டல் உதவும். கீழ்த்தரமான விவாதம் அறியாமையைத்தான் கெட்டிப்படுத்தும்.
9.2. இது ராஜரீகமானது, ரகசிய ஞானம், உன்னத சுத்த உபகாரி, தர்ம பூர்வமானது, அனுஷ்டிக்க எளிது, நித்யமானது
(குறிப்பு – "நேரில் கண்டனுபவிக்கக் கூடியது" என உரையாசிரியர் “அண்ணா” வால் மொழிபெயர்க்கப்பட்ட “ப்ரத்யக்ஷாவகமம்” எனும் வார்த்தையை ராய் அவர்கள் ஏனோ மொழி பெயர்க்கவில்லை. மேலே ஸ்லோகத்தில் “தர்ம பூர்வமானது” எனும் வார்த்தைக்கு முன்பாக உள்ளது)
உட்பொருள்:
வெளிப்படுத்தப்பட்ட ஞானமானது உயர்தரமானது, ஆனால், யோகதர்சனம் பலவீனமானவர்களுக்கு அது மர்மமாக இருக்கும். புரிந்துவிட்டாலோ, மூடநம்பிக்கைகளிலிருந்தும் காட்சிப்பிழைகளிலிருந்தும் மனதை தெளிவாக்கும். இது ஆன்மீக வளர்ச்சியினையும் ஆன்ம திறவாதலையும் ஊட்டுவதான படைப்புப் பரிணாமத்திற்கு முற்றிலும் அனுசரணையானது. மேலும், புரிந்து அனுஷ்டித்தால் எளிதானது. இதுதான் என்றென்றும் ஆன்மவளர்ச்சிக்கும் உணர்வுத்தளையின் விடுவிப்புக்கும் ஊக்க உபகாரி.
9.3. இந்த ஞானத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் இறையனுபூத சித்தி பெறாதவர்களும் அநித்தியமான ஜட இருப்புக்குத் திரும்புகிறார்கள்.
உட்பொருள்:
பேருணர்வின் சத்ய சொருப ஞானம் வெளிப்பாடானதை மனக்குழப்பத்திற்கு இடமின்றி ஏற்கவேண்டும். இது ஒரு உயர் மாறுதலுக்கான நெறியாக அறியப்படாமல், அனுபவிக்கப்படாமல் போனால், சுயம் மேலோங்கிய நிலையிலேயே ஒருவன் இருந்து, மயக்குவதான சலன நிலைகளுக்குத் தள்ளப்படும் கதியினை அடைகின்றான்.
9.4. இந்த முழுப் பிரபஞ்சமும் என் வெளித்தோன்றாத வஸ்துவால் சூழப்பட்டுள்ளது. எல்லா படைப்புகளும் என்னில் தங்கியுள்ளன. நான் அவற்றின் கட்டுக்குள் இல்லை.
உட்பொருள்:
இந்த முழுப் பிரபஞ்சமும் இறைவுணர்வால் சூழப்பட்டுள்ளது. சர்வ வியாபக இறையுணர்வில் எல்லா ஆன்மாக்களும் தங்கியுள்ளன. ஆனால், இறைப்பேருணர்வு அவைகளின் கட்டுக்குள் இல்லை.
9.5. மேலும், பிரபஞ்சத்தில் வெளித்தோன்றியவைகளும் என்னிடம் நிஜத்தில் இருப்புடையவை அல்ல. என் தெய்வசக்தி வாய்ந்த யோகத்தைப் பார்! வஸ்துக்கள் வெளிப்படவும், நிலைத்திருக்கவும் நான் செய்கிறேன் என்றாலும் அவைகளில் இருப்புடையவனல்ல.
உட்பொருள்:
இறைப்பேருணர்வில் அனைத்து ஆன்மாக்களும் வசித்தாலும், உடலின் மற்றும் மனதின் குணங்கள் இறைப்பேருணர்வில் இல்லை. மயக்கத்திற்கும் காட்சிப் பிறழ்சிக்கும் காரணமான, உண்மையை மறைக்கும் மூல இயற்கை எனும் மாயாவின் வலிய விசையின் விளைவுகளைப் பார். இறைமையின் பிரதிபலித்த ஒளியே ஆன்மா. இறைமை அவைகளை நிலைக்க செய்கிறது. ஆனால் அவைகளின் சொந்த மாய எண்ணமான தான் தோன்றி இருப்பு எனும் ஆணவம் இறைமையைக் கட்டுப்படுத்தாது.
9.6. பலமான பெருங்காற்று எங்கும் உலாவினாலும் வானவெளியில் எவ்வாறு நிலைத்திருக்கிறதோ, அவ்வாறே, எல்லா ஆன்மாக்களும் என்னில் நிலைபெற்றுள்ளன. இதை உய்த்துணர்!
உட்பொருள்:
வானவெளியில் காற்று நிறைந்திருப்பது போல, எல்லா ஆன்மாக்களும் சர்வ வியாபக இறைப் பேருணர்வில் வசிக்கிறது. ஆன்மாக்கள் என்பவை, தான் தோன்றி இருப்பாயில்லாமல், இறைப்பேருண்மையின் ஆகச்சிறு பகுபடா நுண்ணலகுகளாக, வரம்பற்ற நித்ய வாழ்வுக் கடலில் குமிழிகள் போலுள்ளன. இதனை நுண்ணுணர்வுப் பூர்வமாக அறியும்வரை ஆராய்ந்து, இதுவே ஆகப் பெரிய உண்மை என அனுபவமாகும்வரை நிதித்தியாசனம் செய்ய வேண்டும்.
9.7. பிரபஞ்ச வெளிப்பாட்டு யுகத்தின் முடிவில் சித்தி பெறாத எல்லா ஆன்மாக்கள் மூல இயற்கைக்குத் திரும்பி, அடுத்த யுகத்தின் ஆரம்பத்தில் நான் அவர்களை பிறப்பெடுக்க அனுப்புகிறேன்.
உட்பொருள்:
வெளிப்பாட்டின் ஒரு சுற்றின் முடிவில் சித்தி பெறாத எல்லா ஆன்மாக்கள் மூல இயற்கைக்குத் திரும்பி, அடுத்த வெளிப்பாட்டின் சுற்று ஆரம்பிக்கும் போது, இறை இருப்பின் பரப்பில் ஏற்படும் உந்துவிசைச் சிலிர்ப்பால் அந்த ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுக்க அனுப்பப்படுகின்றன.
உரை:
நம் அறிவும் விழிப்புணர்வும் எதனை ஒத்துப் போகின்றதோ, அதனுடன்தான் நாம் உறவு கொள்கிறோம். குணங்களானவை, பிரபஞ்ச வெளிப்பாட்டுச் சுற்றின் முடிவில் மூல இயற்கைக்குத் திரும்பும்போது, ஜட இயற்கையுடன் இன்னும் தொடர்பில் உள்ள ஆன்மாக்கள் அவ்வுறவில் லயித்திருக்கும்.
இட, கால பெருவெளித் திரையில் அடுத்தச் சுற்றுப் படமாடும் வரை, இந்த ஆன்மாக்கள் பிரக்ஞையற்று இருக்கும். பிறகு மீண்டும் வெளியாகி ஆட்டத்தில் கலக்கும். ஆன்மாக்களானவை எப்போது இயற்கையுடனான மயக்கத்திலிருந்து தெளிகிறதோ அப்போது அது தன் கட்டுகளிலிருந்து மேலெழும்பும்.
9.8. பிரகிருதியைக் கொண்டு, மீண்டும் மீண்டும் பிரபஞ்ச வெளிப்பாடுகள் என்னால் அனுப்பப் படுகின்றன. பிரகிருதிக்கு வசமான அவைகள் அதனை மீறச் சக்தியின்றி அதன் கட்டுக்குள் உள்ளன.
உட்பொருள்:
ஓம் ஸ்வரத்தில் தோற்றம் கொள்வதான ஜட இயற்கையை வசப்படுத்திக் கொண்டு, பிரபஞ்ச வெளிப்பாட்டின் சுழல்கதிச் சிலிர்ப்பினால், மயக்க நிலையில் இருப்பதான ஆன்மாக்கள் அதனை மீறச் சக்தியின்றி மீண்டும் மீண்டும் இயற்கையின் சலனகதிச் செயல்பாட்டிற்கு அனுப்பப் படுகின்றன.
உரை:
ஒளியூட்டம் பெறாத ஆன்மாக்கள் தங்களை இயற்கையுடன் அடையாளப்படுத்திக் கொள்வதாலேயே இயற்கையின் செயல்களை மீறச் சக்தியுற்றன அல்ல. காலம், வெளி மற்றும் கர்மாக்களுடனான குருட்டாம்போக்கான உறவிலிருந்து விடுபடும் வழி எதுவென்றால், இறைஞான வளர்ச்சி, வாழ்வின் போக்கு பற்றிய மெய்யறிவு, மற்றும் அங்கீகரிக்கப் பட்ட ஆன்மீக வளர்ச்சி ஆகியன ஆகும். அறிவுப்பூர்வமானதாகவும், செயல் சுதந்திரமும் நிரூபணமான ஆன்மீக வளர்ச்சியே அங்கீகாரம் பெற்ற ஒன்றாகும்.
9.9 இச்செயல்கள் என்னை பந்திப்பதில்லை. அவைகளில் நான் சார்பற்றும் பற்றற்றும் இருக்கிறேன்.
உட்பொருள்:
இந்தப் பிரபஞ்ச வெளிப்பாடுகள், தன்னிறைவாயும் பந்திக்கப்படாமலும் உள்ள இறைப் பேரிருப்பைப் பாதிப்பதில்லை.
உரை:
நம் நினைவுவெளியில் உள்ள நம் எண்ணம் போல, இறைமையின் சர்வ வியாபகப் பேருணர்வில் இந்தப் பிரபஞ்சம் உள்ளடக்கமாயிருக்கிறது. ஓம் ஸ்வரத்தின் மூலம் இறைமை, விண்ணகப் பருப்பொருள்களையும், எல்லா புறவய தன்மைகளையும் உற்பத்தி செய்வதான காலம், வெளி, பிரபஞ்ச விசை ஆகியனவாக அடையாளப்படுவதாகிய காரணத்தால், இந்தப் பிரபஞ்சம் ஜட இயற்கையின் வெளிப்பாடாக, இறைமையை விடத் தாழ்ந்ததே.
நம் நினைவுவெளியின் உள்ளடக்கங்களை நாம் அறிந்திருந்தும் பொருட்படுத்தாமலிருப்பது போல, உன்னதப் பேருணர்வு, இப்பிரபஞ்சத்தின் செயல்கள் மற்றும் உள்ளடக்கங்களுக்கு ஆதரவோ எதிர்ப்போ அற்ற நிச்சலனமாக இருக்கிறது.
9.10. என் சங்கல்பத்தால், பிரக்ருதி எல்லா உயிருள்ளவை மற்றும் உயிரற்றவைகளைப் படைக்கிறது. இதனால், பிரபஞ்சம் தொடர்கிறது.
உட்பொருள்:
இறை இருப்பில் தன்னை வெளிப்படுத்துவதற்கான சிலிர்ப்பு தூண்டப்படுகையில், ஜட இயற்கை தன்னிலிருந்து பிரபஞ்சத்தின் எல்லா அம்சங்களையும் படைக்கிறது. வெளிப்படுவதற்கான தூண்டலே முதல் காரணம். நிகழ்வாகும் பிற யாவும் முதல் தூண்டுதலின் விளைவே ஆகும்.
9.11. கட்டுண்டபிறவிகள் தங்களின் மயக்கத்தில், படைப்பின் மூலமானது என் உயர் இயற்கையே என அறியாதவராய், என்னை உயர்வாய் மதிப்பதில்லை.
உட்பொருள்:
ஜன்மமெடுத்த ஆன்மாக்கள் இறைமையின் இருப்பையோ அதன் படைப்பு அதிகாரத்தையோ அறியாததால், உன்னதப் பேருணர்வின் உண்மையிருப்பைக் கொண்டாடவோ, அங்கீகரிக்கவோ செய்வதில்லை.
9.12. அவர்கள், வீண் நம்பிக்கை மற்றும் செய்கைகளால் அறிவின்றி, குழம்பிய, சுயவூட்டம் பெற்ற, ஆன்மசோகை நிலைக்குச் சிக்கிவிடுகின்றனர்.
உட்பொருள்:
அவர்களின் எண்ணங்களும் செயல்களும் ஆணவத்தால் சுயஊட்டம் பெற்று ஆன்ம ஞானமின்றி, குழம்பிய, சுயதிருப்தியுறுவதான, கோண மனோபாவத்துடன், மயங்கிய உணர்வில் பிடிவாத கெட்டிப் பட்டிருக்கின்றனர்.
உரை:
தமஸ் குணத்தின் ஆதிக்கத்தினால், ஜட இயற்கையுடன் ஒரேயடியாய் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆன்மாக்களின் உடல்களும் மனங்களும், எவ்வளவு வலிமையாக தங்களை அதில் உட்புகுத்தியிருக்கிறதோ அவ்வளவுக்கு தான்தோன்றி இருப்புடன் மாயையில் மூழ்கியிருக்கின்றன.
தங்களின் விழிப்புப் பரப்பை, ஆன்ம விழிப்புக்கு உட்படுத்தும் வரை, உண்மையின் பேரியல் மண்டலங்களுக்கு நிதித்தியாசனம் செய்யத் திறனின்றி அல்லது விருப்பமின்றி, சுய நோக்குகளுக்கும், சுவாபிமான நடத்தைகளில் கெட்டிப்படுவதற்கும் இச்சிக்கின்றனர்.
9.13. திவ்ய இயல்புக்கு நிலைத்து விட்ட விழிப்படைந்த ஆன்மாக்களோ, சகலப் படைப்புக்களின் அழியா மூலமாய் எனை அறிந்து குவிந்த நோக்குடன் எனை கொண்டாடுகின்றனர்.
உட்பொருள்:
விழிப்புப் பெற்ற ஆன்மாக்கள், ஆன்மாக்களின் சனாதன மூலம் இறைமையே என அறிந்து, கவனம் சிதறவிடாமல், இறைமையை அடக்கத்துடன் அங்கீகரிக்கின்றனர்.
9.14. எப்போதும் என்னை அங்கீகரித்து, பற்றுறுதியான முயற்சியுடன், என் மீதான மாறா பக்தியுடன், என்னைக் கொண்டாடுகின்றனர்.
உட்பொருள்:
இறை இருப்பின் பிரக்ஞையில் எப்போதும் லயித்து நேர்மையான வாழ்வுக்கும் ஆன்மீகப் பயிற்சிக்கும் உறுதியுடன் கடமைப்பட்டு, விழிப்புப் பெற்ற ஆன்மாக்கள் என்னில் பக்திவசப் பட்டுள்ளன.
9.15. பிறர் என்னை பூரணம், படைப்பு இயற்கையில் நானாவித வெளிப்பாடு, மற்றும் விரிவான தோற்றம் கோண்டவன், சர்வ வியாபி, சர்வக்ஞானி என அறிந்து யக்ஞம் செய்கின்றனர்.
உட்பொருள்:
பிற சாதகர்கள், ஆழ்ந்த ஞானத்துடன், இறைமையை, சனாதன இருப்பாக, சர்வ வியாபியாக, இயற்கையின் எல்லா அம்சங்களையும் அறிந்ததாக அதற்கு தங்களின் செயல்களை அர்ப்பணிக்கின்றனர்.
9.16. நானே சடங்குக்கிரியை, நானே யக்ஞம், நானே மருந்து, நானே மந்திரம், நானே நெய், நானே அக்னி, நானே ஹோம கருமம்.
(குறிப்பு – “நானே பித்ருக்களுக்கிடும் அன்னம்” என உரையாசிரியர் “அண்ணா” வால் மொழிபெயர்க்கப்பட்ட “ஸ்வதா அஹம்” எனும் பதத்தை ராய் அவர்கள் ஏனோ மொழிபெயர்க்கவில்லை. மேலே ஸ்லோகத்தில் ”நானே மருந்து” எனும் பதத்திற்கு முன்பாக உள்ளது.)
உட்பொருள்:
இறைமை ஒன்றே இருந்து நிலவும் சத்யமாகையால், அதுவே சங்கல்பித்துச் செய்யும் அனைவற்றின் நிகழுண்மையாகும். அதுவே தியாகம், நலம் வளர்க்கும் மூலிகை, கிரந்தங்களிலுள்ள சத்யம், சுய ஒழுக்கம் மற்றும், ஆன்மீகப் பயிற்சிக்கு ஆதரவான ஆக்கபூர்வ தன்மைகள், குண்டலினி சக்தியின் வளர்மாற்றவல்ல கிரியைகள், அர்ப்பணிப்பு உள்ளிடுகைகள்.
உரை:
மத சடங்காச்சாரங்களில், பல்வேறுபட்ட கிரியைகள் நடத்தப்படுகின்றன, சங்கேத அடையாள வஸ்துக்கள் பயன்படுத்தப்படும். இறைப் பேரிருப்பை விழிப்புக்குக் கொண்டு வர, ஹோம அமைவிட சுத்தம் செய்தல் அல்லது அந்தச் சூழலை பொருத்தமாக்கத் தகுந்த சக்திகளை ஆஹாவனம் செய்தல் ஆகியன புனித நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்த மந்திரங்களை ஓதுதலால் உத்தேசிக்கப்படும். சாதகன் தனது உட்புறமான சடங்கான தியானம், இறைமையை உணர் பிராணனை சக்கரங்களில் ஏற்றுதல் மற்றும் ஆணவத்தை உயருணர்வில் கரைத்தல் முதலியன செய்கிறான். பேருணர்வே வழியாகவும் அவ்வழியை ஊட்டி முன்தள்ளுவதாகவும் புரிந்துகொண்ட பின்னணியில் இவைகள் செய்யப்படுகின்றன.
VRGC குறிப்பு –
பகவத் கீதை அத்தியாயம் 4 ஸ்லோகம் 24, “பிரஹ்மார்ப்பணம” எனும் ஸ்லாகமும் இதே அர்த்தத்தில் வருகிறது. புதிய எற்பாட்டில் ஏசுநாதர் “நானே வழியும் சத்யமும் ஜீவனுமாய் இருக்கிறேன்” என்று கூறுவதோடு ஒப்பிடலாம்படி இருக்கிறது.
9.17. நானே பிரபஞ்சத்தின் தந்தை, தாய், சகலத்தின் ஒழுங்கமைப்பாளன், தாத்தா, அறிவின் லட்சியம், சுத்தீகரிப்பவன், ஓம் எனும் புனித ஒலியக்ஷரம், உள்ளேசுரந்து வெளிப்பட்ட அறிவான வேதம் ஆகியன ஆவேன்.
உட்பொருள்:
இறைமைதான்
• பிரபஞ்சத்தின் மூலம்,
• பிரபஞ்சததை உருக் கொள்ளச் செய்த தாயான மூல இயற்கை,
• பிரபஞ்சச் செயல்களை தீர்மானகரமாக, நுண்ணறிவு விசையால் முடுக்குவது,
• இறைச்சிகரத்திற்கு மேலான பேருணர்வுப் பூரண வெளி,
• அனைத்து அறிவின் இருப்பிடம்,
• தூய்மைப்படுத்துவதான அல்லது தூய்மைக்கு மீட்பதான ஆற்றல்,
• ஓம் எனும் படைப்புத் தரங்கிணி,
• சுய வெளிப்பாடாவதான மெய்யறிவு
9.18. நான்தான் இலக்கு, நான்தான் தாங்குபவன், கோலோச்சுபவன், அடைவிடம், புகலிடம், நண்பன், ஆதார மூலம், ஆக்கத்திற்கும் அழிவிற்கும் நிகழ்விடம், பொக்கிஷ மாளிகை, அழிவில்லா ஆதார வித்து.
உட்பொருள்:
இறைமை என்பது,
• விடுதலை விழையும் ஆன்மாவுக்கு அனுபூதமாகக் கூடியது
• வெளிப்படு தோற்றங்களின் ஆதரிப்பு
• தீர்மானகர அல்லது வழிநடத்தும் செல்வாக்கு
• அனைத்தின் கொள்ளிடம்
• சுகத்திற்கும் நிறைவிற்கும் ஆன்மா தேடிக்கொள்வது
• ஊட்டி வளர்க்கும் பேரிருப்பு
• அனைத்தின் மூலாதாரம்
• வெளிப்படு தோன்றலின் ஆவாஹனமும், பிரபஞ்சத்தின் அந்தமும்
• மதிப்புள்ள அனைத்தின் இருப்பிடம்
• நிரந்தர இருப்பு கொண்ட, அது தானே சுயமாய் வெளிப்படு அம்சங்களின் மூலாதாரம்.
9.19. நானே வெந்தழல், நானே மழையை அனுப்புபவனும் அதனை நிறுத்துபவனும், நானே நித்ய வாழ்வும் மரணமும், நானே இருப்பும் இருப்பின்மையும்.
உட்பொருள்:
பேருணர்வே வெயிலும், வாதாவரண மற்றும் சீதோஷ்ண ஒழுங்கின் மூலாதாரமும், நித்யமும், அழியும் ஜீவராசிகள் மற்றும் வஸ்துக்களின் முடிவும், வியக்த ஜீவராசிகளில் தனித்துவமாகத் தோன்றினாலும் அவைகளைக் கடந்தும் இருப்பதாகும்.
9.20. மூவேதங்களை அறிந்த ஞானிகள், புனித அமிர்தத்தை அருந்துபவர்கள், மாசு நீங்கிய சுத்தாத்மாக்கள் ஆகியோர் தங்களின் புனிதக் கொடைகளுடன் என்னைக் கொண்டாடி, சுவர்க்கத்திற்கு வழி தேடுகின்றனர். அவர்கள் தெய்வ நாயகனின் தூயராஜ்யத்திற்குச் சென்று தேவலோக சுகங்களை அனுபவிக்கின்றனர்.
உட்பொருள்:
ஞானத்தின் சுயவெளிப்பாடு அடைந்த சாதகர்கள், சமாதியில் இறைமையுடன் ஒன்றும் அமைதியால் ஊட்டம் பெறுபவர்கள், ஞானத்தாலும் உன்னதப் பேருணர்வின் மீட்புவல்லமையின் செய்திறத்தாலும் மயக்கம் தெளிந்தவர்கள், இறையனுபவத்திற்கான பேரார்வத்தினால், இறையனுபூதிக்கு பக்தி சிரத்தையுடன் இருக்கிறார்கள். அவர்கள் விரும்புவதை அவர்கள் அடைந்து அவர்களின் செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கிறார்கள்.
உரை:
மேம்பட்ட உன்னத உணர்வு திறவாகி ஆன்மசாந்தம் அனுபவிக்கையில், ஒரு முத்தான புத்துயிர்ப்பு தரவல்ல சார அம்ருதம் மூளையில் சுரந்து முழு உடற்கூறையும் புத்தாக்கம் மற்றும் வலுவாக்கம் செய்து நரம்பு மண்டலத்தையும் மூளையையும் சுத்தீகரிக்கிறது. இதனைத்தான் சோமபானம் அல்லது கடவுளர்களின் உணவாகிய அம்ருதம் என பழங்கால யோககிரந்தங்களில் குறிக்கப்படுகிறது. ஆன்ம திறவாக்கம் நடக்கையில் ஸ்தூல தேகம் ஆன்மாவின் பிராணசக்தியால் தாங்கப்படுகிறது.
நேர்மையான ஆத்மாக்கள் ஒளி பொருந்திய விண்ணகவாசிகள் வாழும் ராஜ்யத்திற்கு நுழைகின்றன என பல மத சம்பிரதாயங்கள் கற்பிக்கின்றன. நாம் கற்பிதம் செய்வதை நாம் அனுபவக்கிறோம் எனும் எண்ணப்பிரபை மனோவிதியின் படி, பல ஆன்மாக்கள் அவைகளின் உணர்வு நிலைகளுக்கேற்ப விண்ணக பரிபக்குவங்களை அனுபவிக்கும். இது எதைப் போன்றதென்றால், அவைகளுடைய ஸ்தூல தேக வாழ்க்கை அனுபவங்கள் அவைகளின் எண்ணங்களை பிரதிபலிப்பது போல ஆகும். பந்திக்கப்பட்ட உணர்வு அல்லது பிசிறுபட்ட மனக்காட்சி ஆகிய எந்தவொரு குறுக்கமும் விடுதலையை விரும்பும் சாதகனுக்கு மேலூடுருவிப் பாயாமல் தடுக்கும் தடைகளாகும்.
9.21. சொர்க்க மண்டலத்தின் விரிவான ராஜ்யத்தை அனுபவித்த பின் அவ்வாத்மாக்களின் ஆக்கபூர்வ கர்மாக்கள் தீர்கையில், புலனின்ப அனுபவ ஆசையால் தேக ஜனன மரண சுழலில் உள்ளதான அழிவுறு ராஜ்யத்திற்குத் திரும்புகிறார்கள்.
உட்பொருள்:
அனுபவ காலம் முடிந்தவுடன், அவ்வனுபவத்தினை ஆதரித்த காரணிகள் பலவீனப்பட்டு, அகந்தை காட்டும் திருப்திகளுக்கு ஏங்கி, அவ்வாத்மாக்கள், அவைகளின் புரிதல் பரப்புக்கும் கர்மவினைகளின் அந்தஸ்த்திற்கும் பொருந்தும் ஒரு அனுபவ நுகர்வுக்காக மீண்டும் ஜனனம் எடுக்கிறார்கள்.
9.22. பக்தியுடன் என்னை ஒருவனையே தியானிக்கும் திட உறுதி பெற்ற ஆத்மாக்களுக்கு குறைவுள்ளதைக் கொடுக்கிறேன்; இருப்பதைக் காக்கிறேன்.
உட்பொருள்:
இறைமையில் முழு சரணாகதி பெற்ற ஆத்மாக்கள் அதன் கருணையால் அவைகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன; ஏற்கனவே அவைகள் வைத்திருப்பதை இழக்காமல் காக்கப்படுகின்றன.
உரை:
ஒழுங்கை பராமரிக்கும் நோக்கத்தோடு வாழ்க்கை மேற்கொள்ளும் ஆதார அனுசரணையின் விளைவாகவே இறைக் கருணை விளங்குகிறது. சர்வ வியாபகப் பேருணர்வு, காலப் பரப்பின் வெளிப்புறமாக இருப்பதால், கருணையின் சகாயப்படுகை என்றும் உள்ளது. அது ஆன்மாவின் இயல்வெளியும் அந்த ஆன்மாவும் கண்டுகொள்ளும் அளவுக்கேற்ப துரிதமாக விளங்கும்.
இறைமையில் கரைந்து நிலைத்து நிற்கும் சாதகர்களின் தேவைகள் அக்கருணையால் பூர்த்தி செய்யப்படுகின்றன. கருணையின் மீட்பு சகாயத்தால் அவர்களின் உடலளவு புத்துருவாக்கம், மனதளவு திருவுருமாற்றம், மற்றும் ஆன்மீகத் திறவாதல் ஆகியன நடக்கின்றன, கருணையின் ஊட்டிவளர்க்கும் பாங்கு, சாதகர்களின் நலவாழ்வில் ஆதரவான நிகழ்ச்சிகளுக்கும் சூழலுக்கும் செழிப்பிற்கும் வாசல் திறக்கிறது. வாழ்க்கை அதன் முழுநோக்கில் தன்வய-பிரதிபலிப்பான அமைப்பில் இயங்குகின்றது. அதன் செயல்களுக்குத் தோதாக நாம் இருந்துவிட்டால், அதன் கதியோட்டத்தில் நாம் இணைத்துக் கொள்ளப் படுகிறோம். கருணையின் சகாயமோ தேசகாலவரம்பற்ற பாரபட்சமற்ற முழுமை. கருணையின் சகாயம் வழி கிடைக்கும்போது, வழி கிடைக்கும் இடத்தில் வெளிப்படு தரம் கொண்டது.
இறையனுபூதிக்கான பேரார்வம் நம்மிலும் நம் ஆதரிப்புச் செய்கைகளிலும் உறுதிப்படும்போது, நாம் திடமாய் புதிய விழிப்புணர்வில் உயர் ஸ்தானத்திற்கு முன்னேறும் வரை ஸ்திரமாகிறோம். பின்சறுக்குதல் இல்லை. ஆன்ம விழிப்பு உறுதிப்படுவதும் விரைவானதும் ஆகும்.
9.23. பிற கடவுளர்களை நம்பி வணங்குபவர்கள், அவர்களும் உண்மையை சரியாக அறியாமல் என்னையே வணங்குகிறார்கள்.
உட்பொருள்:
இறைமையின் நிஜ இயல்பு பற்றிய அறிவற்றவர்கள் தங்களின் கற்பிதக் கடவுளர்களை நேர்மையுடன் கொண்டாடுவதனால், இறைமையை நோக்கியே ஆர்வமுறுகிறார்கள்.
உரை:
இரண்டற்ற ஒன்றேயான இறைமை மட்டுமே நிலவுலதால், கற்பிதக் கடவுளர்கள் பலரும் சாதகர்களின் இறைமை பற்றிய புரிதலின்றி கற்பிதம் செய்யப்படுகின்றனர். அல்லது, தங்களின் மனதுக்கு உகந்த அல்லது சொந்தமான மற்றும் அடையப்படக்கூடிய எளிய உருவமாகக் கற்பிதம் செய்து வழிபடுகின்றனர்.
ஆன்மத்திறவு முன்னேற்றத்தை அனுமதிக்கும் அளவுக்கு பக்தி நேர்மையானதாயும், பேரார்வம் போதுமானதாயும் இருந்துவிட்டால் உண்மை இறுதியில் தானாக வெளிப்படும்.
9.24. நானே அனைத்து யக்ஞங்களின் அனுபோக்தன் மற்றும் யக்ஞப்பிரபு. இறைமையைப் பற்றிய புரிதல் சரிவர முதிராதவர்கள் உண்மையில் என்னை அங்கீகரிக்காமல் வீழ்கிறார்கள்.
உட்பொருள்:
நேர்மையாய் வழிபடும் அனைவரின் வழியாயும் இறைமை வெளிப்படுகிறது. ஆணவமைய சாதகர்களின் அறிவு சொல்பமாயிருப்பதால் ஒரு சிறிய தகுந்த தியானத்திற்குப் பிறகு அவர்களின் குறுகலான உணர்வுநிலைக்குத் திரும்புகின்றனர்.
9.25. தேவதைகளை வழிபடுவோர் தேவதைகளை அடைகின்றனர். முன்னோர்களை வழிபடுவோர் முன்னோர்களை அடைகின்றனர். ஆவிகளை வழிபடுவோர் ஆவிகளை அடைகின்றனர். என்னை வழிபடுவோர் என்னை வந்தடைகின்றனர்.
உட்பொருள்:
அவரவர் கற்பிதக் கடவுளர்களை அல்லது விண்ணக விசைகளை வழிபடுவோர் அவைகளுடன் அடையாளமாகி அவைகளை அனுபவிக்கின்றனர். குடும்ப உறவு வழி ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் சித்தமுடையோர் அவ்வாறே செய்கின்றனர் அல்லது அந்த அளவு சார்புடைமை கொண்டிருக்கின்றனர். மறுஜென்மம் எடுக்கக் காத்திருக்கும் விண்ணக உயிரிகளுடன் [ஆவிகளுடன்] சேர்ந்திருக்க விழைவோரின் எண்ணங்கள் அதற்கேற்ப ஈடேறப்பெறுகின்றன. இறையனுபூதிக்கு பேரார்வமுறுவோர் இறைமைக்கு விழிப்பாகின்றனர்.
உரை:
உண்மைக்கு முழுவதும் விழிப்படையும் வரை, இறைமையைப் பற்றிய நம் குறுகிய நம்பிக்கைகளையும் கருத்துக்கூட்டங்ககளையும் சார்ந்திருக்கின்றோம். அவையாவன:
இறைமையைப் பற்றி
• நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டவைகள்.
• நாம் அறிந்த பிறரின் நம்பிக்கைகள்
• அல்லது எது நமக்கு அரைகுறையாக உள்ளிருந்து விளங்கியுள்ளதோ அது
இந்நிலைப்பாடு உள்ளவரை, நாம் மன ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டிருப்பதால், தொடர்ச்சியான மாயத் தோற்றங்களுக்கான வாய்ப்புக்கள் முடிவற்றன.
சில சாதகர்களோ, தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைவதையோ, முக்தியை அடைய இன்னும் முயன்றுகொண்டிருக்கும் தங்களளவு ஆத்மாக்களுடன் இணைவதையோ விரும்புகின்றனர்.
இறைமையின் முழு உண்மை மீதான அறிவு மற்றும் அனுபூதி வேண்டும் ஆத்மாக்கள் மட்டுமே அதற்கு முழுவதும் விழிப்பாகின்றன.
9.26. இதய சுத்தியான பக்தி சிரத்தையுடன் எனக்கு இலையையோ, மலரையோ, கனியையோ, நீரையோ அர்ப்பணித்தாலும், அந்தப் பக்தியின் அர்ப்பணிப்பினை நான் ஏற்கிறேன்.
உட்பொருள்:
இறைமைக்கு இதயசுத்தியான பக்தனின் அர்ப்பணிப்பு எவ்வகைத்தாயினும், அது இறைமையுடன் ஓர் உறவை நிலைக்கச் செய்துவிடுகிறது.
உரை:
சடங்காச்சார வழிபாட்டில் நித்யத்திற்கு அர்ப்பணிக்கப்படும் அடையாள வஸ்து பக்தியின் சைகனையாகக் கொள்ளப்படும்.
அந்த சடங்காச்சாரம் இறைமையிடம் நேரடியாக செல்வாக்கு செலுத்தாவிட்டாலும், அது சாதகனிடம் ஆணவத்தையோ சுய ஊட்ட பாங்கினையோ அகற்றி. இறையிருப்புக்கான மேம்பட்ட விழிப்பை அவனுக்குப் பிடிபட வைக்கிறது.
9.27. எது செய்தாலும், எதை உண்டாலும், எதை அர்ப்பணித்தாலும், எதைக் கொடுத்தாலும், எந்த சடங்காச்சாரத்தை மேற்கொண்டாலும் அவைகளை நீ எனக்குப் புனிதக் கொடையாகச் செய்.
உட்பொருள்:
எதனை நீ சங்கல்பித்து செய்தாலும், உண்டாலும், அர்ப்பணித்தாலும், தானம் செய்தாலும், சுய ஒழுக்கக் காரியமாற்றினாலும், எந்த ஒன்றையும் இறைமைக்கு அர்ப்பணிக்கும் புனிதச் செயலாகவே செய்.
உரை:
உணர்ந்து செய்யும் எதனையும் நித்யத்துடனான நம் உறவிற்கு அத்தியாவசியமானதாகக் கருதவேண்டும். இவ்வழியில், ஒவ்வொரு கணமும்
• ஆன்மப் பயிற்சிக்கு,
• வாழ்வு அதன் லயச்சுற்றுடன் ஒன்றிப்பதற்கு,
• ஆன்ம அனுபூதியும் இறையுணர்வும் நிலைப்படுவதற்கு
அர்ப்பணமாகிறது.
9.28. [அர்ப்பணிப்பினால்] நீ நிச்சயமாக ஆக்கபூர்வ மற்றும் அழிவுத்தர செய்கைகளிலிருந்து விடுபடுவாய். தளைகளிலிருந்து விடுபட்டு, துறவு யோகத்தில் மனதை ஒழுக்கமுறச் செய்து என்னையே அடைவாய்.
உட்பொருள்:
நீ நிச்சயாகக் கர்மாவிலிருந்து விடுபடுவாய். தளைகளிலிருந்து விடுபட்டு, துறவு யோகத்தில் மனதை ஒழுக்கமுறச் செய்து பூரண இறையனுபூதிக்கு நீ விழிப்பாவாய்.
9.29. அனைத்துப் படைப்புகளிடமும் நான் சமமாக உள்ளேன். என்னால் விரும்பப்பட்டவன் என்றோ விரும்பப் படாதவன் என்றோ யாரும் இல்லை. ஆயினும், பக்தியுடன் என்னை வணங்குவோர் என்னிடம் உள்ள (தாகக் காணப்படுகின்ற) னர், நான் அவர்களிடம் (உள்ளவனாகக் காணப்பட்டு) உள்ளேன.
குறிப்பு:
பக்தர்களல்லாத பிறரிடமும் நான் இருந்தாலும் அவ்வாறு அறியப்படவில்லை என்று பொருள் கொள்ளுதல் நலம்.
உட்பொருள்:
இறைப் பேருணர்வுதான் எல்லா ஆத்மாக்களாக வெளிப்படுவதால், இறைமை எல்லா ஆத்மாக்களிலும் ஒரேமாதிரியான சமமான உறவு கொண்டுள்ளது. இறைமைதான் ஒவ்வொரு ஆத்மாவின் இருப்புண்மை ஆதலால், இறைமைக்கு வெறுத்து ஒதுக்குதலோ ஒரு பக்க ஆதரிப்புச் சாயலோ இல்லை. முழு பக்தியுடன் இறைமைக்கு சரணடைந்தோர் இறைமையில் தன்னையும் தன்னில் இறைமையும் தானே இறைமையாகவும் அனுபவிக்கின்றனர்.
9.30. தவறிழைப்பிற்கு உட்பட்டவன் என்றாலும் ஏகாக்ரத சிந்தையுடன் ஒருவன் என்னை வழிபட்டால் அவனை செம்மையானவனாகவே கருதலாம். ஏனென்றால், தீர்மானம் செம்மையானது என்பதனால்.
உட்பொருள்:
நடத்தை சரியில்லாத ஒருவன் முழு பக்தியுடன் இறைமைக்குச் சரணடைந்தால் அவனை செம்மையானவனாகவே கருதலாம். ஏனென்றால், தீர்மானம் செம்மையானது என்பதனால்.
உரை:
நம் கடமைகளிலும், நாம் தேர்ந்தெடுத்த பணிகளிலும் செய்கை நேர்த்தியுடன் செய்யும் திறமை பெறும்வரை, நம்மால் இயன்றயளவு முயன்று செய்தால் நாம் வாழ்க்கையின் கிரமகதியுடன் இயைந்துதான் இருக்கிறோம். ஆன்ம ஞான விளைவால் அறிவார்த்தமாகவும் இயல்பூக்கத்தாலும் வாழும்வரை நம் நடத்தைகள் பிழையற்றதாக இருக்கமுடியாது. வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்ப்பது நம் முழுஆற்றலை நம்மாலானவரை வெளிக்கொணரும் சாமர்த்தியத்தையே.
9.31. அவன் தர்மசிந்தையுடையவன் ஆகி, சாஸ்வத சாந்தியை அனுபவிக்கின்றான். என் பக்தன் நாசமடைய மாட்டான் என நிச்சயமாக அறி.
உட்பொருள்:
அவன் ஆன்மாவின் மாட்சிமைகளுக்குத் திறவாகி நித்யமான சாந்தியை அனுபவிக்கிறான். எந்த பக்தனும் அழிவற்றவன் என அறி.
உரை:
சங்கல்பித்த நடத்தை மாற்றம் என்பது நம்மிடம் உள்ள விரும்பத்தகாத பழக்கங்களைக் கைவிடுவதான திறனை ஊட்டுகிறது. ஆன்மாவை பந்திப்பதான ஊனச் சாயல் பழக்கங்களை நேர்வழிப் பிரயத்தனங்களால் முறியடிக்கலாம் என்பதை யோக சூத்ரா 2-33,34 ல் கூறப்பட்டுள்ளது.
யோக சூத்ரா 2.33 - 34:
அழிவுத்தர மற்றும் பழக்கதோஷ வேகங்களையும் போக்குகளையும் நீர்மமாக்கவும் வெல்லவும் ஒருவன் அவைகளுக்கெதிரான நடத்தைகளையும் பழக்கங்களையும் கைகொள்ளவேண்டும்.
பழக்கதோஷ வேகங்களும் போக்குகளும் சன்னமாகவோ, நடுத்தரமாகவோ, கெட்டியாகவோ இருக்கலாம். அவை வலியும் துயரமும் தருவதனால், அவைகளை சரியான நடத்தைகளை வளர்ப்பதால் வெல்லவேண்டும்.
9.32. என்னைச் சரணடைந்தவர்கள், குணநலனற்ற சூழலிலோ மட்டமான சூழலிலோ பிறந்திருந்தாலும், அவர்கள் யாராயிருந்தாலும், அவர்களின் மேம்பட்ட நற்கதிக்கு விழிப்படைகிறார்கள்.
உட்பொருள்:
இறைமைக்கு படிந்த சாதகர்கள், அவர்களின் பிறப்பு நிலை எவ்வகைத்தாயினும் அல்லது அவர்களின் அந்தஸ்து எவ்வகைத்தாயினும் ஆன்ம அனுபூதிக்கு விழிப்பாகிறார்கள்.
உரை:
ஆன்மீக வளர்ச்சிக்கும் உணர்வு விடுதலைக்கும் சித்தமானால், நம் சுய வரலாறு ஒரு பொருட்டல்ல. நம் முந்தைய அனுபவங்கள் எதுவும் நம் ஆன்ம அனுபூதிக்கும் சாமர்த்தியமாய் வாழ்வதற்கும் விழிப்படையும் நம் முயற்சிக்குத் தடையல்ல. ஆன்ம திறவாதல் என்பது பாலினம் கருதியோ, இன, கலாச்சாரச் சூழல் கருதியோ, இறைமையை அறிய நாம் தேர்ந்தெடுத்த கணத்திற்கு முந்தைய நம் அனுபவங்களைக் கருதியோ நிர்ணயிக்கப்படுவதல்ல. ஆன்ம திறவாதலுக்கு எது முக்கியமென்றால், நேர்மையான தீர்மானம், ஆக்கபூர்வ வாழ்க்கை, மற்றும் பலன்தரும் ஆன்மீகப் பயிற்சி ஆகியன ஆகும்.
9.33. அப்படியிருக்க, உள்ளத்தூய்மை உள்ளவர்களுக்கும் அர்ப்பணிப்புப் பூர்த்தியான ஞானிகளுக்கும் விழிப்படைவது எவ்வளவு எளிதானது. பலருக்கும் துன்பம் தருவதான இந்த ராஜ்யத்திற்கு வந்தடைந்த உன்னை என்னிடத்தில் அர்ப்பணி.
உட்பொருள்:
சாதாரணச் சூழல் உள்ள சாதகர்களே இவ்வளவு எளிதாக இறைமைக்கு விழிப்பாகலாமென்றால், இதயசுத்தி உள்ளோரும் ஏற்கனவே ஆன்ம தன்மைகள் சற்றே திறவாகி அர்ப்பணித்த ஞானிகளுக்கும் இன்னும் இலகுவானதல்லவா? பலருக்கும் துயரமான ஒன்றாக இருக்கும் இந்த ஸ்தூல மண்டலத்தில் இருக்கும் நீ, இறையனுபூதிக்குச் சரணடை.
9.34. என்னில் மனங்குவித்து, அர்ப்பணபுத்தியுடன் இரு. புனிதக் கொடைகளால் என்னை ஆராதி. இவ்வாறாக, என்னை உன் உன்னத இலக்காக உறுதிபூண்டு வழிபட்டால் என்னையே அடைந்துவிடுவாய்.
உட்பொருள்:
இறைப் பேரிருப்பை சதா நினைவில் நிலைபெற்றவனாய், அர்ப்பணிப்புப் புத்தியுடன் வாழ். இறைமைக்கு ஆத்மதியாகம் செய்து அதற்குச் சரணாகதி செய். இவ்வாறு, இறையனுபூதியே உன் உயர்ந்த பேரார்வமாய்க் கொண்டு உறுதிபூண்டு வாழ்வதினால் இறைமைக்கு விழிப்படைவாய்.
உரை:
ஆன்ம வளர்ச்சிக்காச் செய்யப்படும் சீரற்ற முயற்சிகள், அதன் இறுதி இலக்கான ஆத்ம திறவுக்கு அற்ப மதிப்புடையது.
• ஆக்கபூர்வ வாழ்க்கைக்கு அர்ப்பணிப்புப் புத்தியுடனான முயற்சி மற்றும்
• இறையிருப்பினை விழிப்பில் வைத்திருந்து வளர்ப்பது,
ஆகிய இவையிரண்டும் துரித ஆன்மதிறவுக்கு வழிகாட்டும்.
முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
என மூலத்திலும், ராஜவித்யா ராஜரகசிய யோகம்
என இவ்வுரையிலும் தலைப்பிடப்பட்ட 9 ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.
Send Your Comments to phdsiva@mccrf.org