MCCRF - A global volunteer network

3. கர்ம யோகம் - பகவத்கீதை - The Eternal Way

பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
 

THE ETERNAL WAY
The Inner Meaning of The Bhagavad Gita
AuthorRoy Eugene Davis

Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).

பகவத் கீதை மூன்றாம் அத்தியாயம்

3. கர்ம யோகம்

அத்தியாய முகவுரை:

விழிப்புணர்வினை முழுமைக்குத் திருப்பியதால் ஏற்பட்ட ஆன்ம அமைதிதான் ஆன்மீகப் பயிற்சியின் முடிவு நிலை என்றாலும், அந்த முக்திநிலைக்கு விழிப்புப் பெற, செயல்படுதல் அவசியமாகிறது. அச்செயல்கள்,
வாழ்க்கைப் போக்குகளுடன் இசைவான உறவிலிருக்கவும்
வளர் உணர்வு நிலைகளுடன் வேண்டிய அனுசரணையினை வசதிப்படுத்தவும் தேவையாகிறது.

நன்கு சங்கல்பிக்கப்பட்ட ஆனால் வழிதவறிய செயல்பாடு வாழ்க்கையை மேலும் சிக்கலானதாக்கும். எது தேவையென்றால், ஒளிபொருந்திய அல்லது அறிவார்த்த செயல்பாடுதான்.

அர்ஜுனன் சொன்னது:
3.1 ஞானமார்க்கமே கர்மமார்க்கத்தை விட சிறந்தது என நீ கருதுவதாயிருந்தால், ஏன் இந்த ஆயாசம் தரக்கூடிய முயற்சியில் என்னைத் தூண்டுகிறாய்?

3.2 எனக்கு முரணாகத் தோன்றுகிற வார்த்தைகளால் என் நுண்ணறிவினை நீ குழப்புகிறாய். தெளிவாகக் கூறு. நன்மைதரும் உத்தமத்தை அடைய நான் என்ன செய்ய வேண்டும்?

உரை:
சாதகனாய் இருக்கும் ஆரம்ப காலத்தில், சாதகன் தான் கற்றுக் கொள்ளும் விஷயத்தின் முழு அர்த்தத்தை விளங்கிக் கொள்ள சிரமப்படலாம்.
பிரபஞ்ச வெளிப்பாட்டு விஷயங்களின் ஒரு பாகம் இந்த உரையின் இரண்டாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருந்தது. இந்த அத்தியாயத்தில் கர்ம யோகமாகிய செயல்படும் வழிமுறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஞானம் பெறுவதை முக்கியப்படுத்திய பின், செயலாற்றுவதையும் முக்கியப்படுத்த வேண்டுமா என சாதகன் கேட்கிறான்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதில் கூறியது:
3.3 அர்ஜுனா! பக்தி வாழ்க்கையின் இரண்டு நெறிமுறை மார்க்கங்கள் என்னால் பழங்காலத்திலிருந்தே கற்றுத்தரப்படுகிறது. அவை,
தியான ஒருமை பழகும் சாதகனுக்கு ஞானமார்க்கம், மற்றும்
யோகம் பழகுபவனுக்கு சரியான செயல்பாட்டு கர்மமார்க்கம்

உட்பொருள்:
[என்னால் = உள்ளத்தினுளே சுரக்கும் மெய்யறிவினால்] மற்றவை மூலத்தில் உள்ளது போலவே.

உரை:
ஞானமார்க்கம் என்பது நுண்ணறிவும், ஒரு விஷயத்தின் மீதான உள்ளுணர்வுப் பரிசோதனையும் கலந்து அவ்விஷயத்தின் உட்பொதிந்த அதன் மெய்த்தன்மையை அறிதலே. மிகச் சில சாதகர்களே, ஞானமார்க்கத்தில் வெற்றி பெறத் தேவையான இந்த நுணுக்கமாக விவேகித்தறியும் போக்கினை மேற்கொள்கின்றனர்.

பெரும்பாலானோருக்கு, மன, உடல், நடத்தை சார்ந்தத் தடைகளை நீக்கி பூர்வாங்க ஞானம் அகத்தினுள்ளே இயல்பாகத் திறவாக, நெறியுடன் செயல்படுதல் வேண்டியுள்ளது. அவர்கள், தங்களின் மெய்யான சுபாவத்தினையும், அனைத்தின் உண்மையான சர்வ வியாபக பேருணர்வினையும் அனுபவிக்க தன் வளர்ச்சிக்கான மாற்றங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது.

3.4 செயல்புரியாமல் இருப்பதனால் ஒருவன் கர்மங்களுக்கு அப்பாற்பட்ட விடுதலையைப் பெறமுடியாது. துறவினால் மட்டுமே ஒருவன் முழுமையை உணர்ந்துவிடுவதும் இல்லை.

உரை:
கர்மா என்பது செயலும், செயலின் விளைவும் பற்றியதைச் சுட்டுகிறது. அது, காரிய காரண விதி. செயல் என்பது ஆக்கபூர்வமானதாகவோ, அழிவுப்பூர்வமானதாகவோ அல்லது நடுத்தரமாகவோ இருக்கலாம். அது ஒரு உயிரினம் நகர்தல் போன்று அவ்வளவு பருவானதாகவோ எண்ணத்தின் துடிப்பு போன்று அவ்வளவு சூட்சுமமானதாகவோ இருக்கலாம்.

ஜட உலகத்தில் எல்லா காரியங்களுக்குமே காரணங்களுண்டு. தூய உணர்வுத் தளத்தினிலிருந்து விரிவடைந்த இந்த பிரபஞ்ச பாகத்தில் எல்லாமே ஜடம். இயற்கையின் முக்குணங்கள் அதன் உறுப்புக்கள். காரணத் தூண்டுதல்களின் சாத்தியப்பாடு இன்றி நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை.

இறைமைக்குப் புறமாகத் தனியே இருக்கிறோம் எனும் தவறான மயக்கத்தில் ஊன்றி, ஆத்மா மனம் மற்றும் ஜடத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது குழப்பமடைகிறது.

அப்படிப்பட்டவர்கள்
நிர்ணயிப்பதில் தவறிழைக்கிறார்கள்
மன அவலத்தை அனுபவிக்கிறார்கள்
உணர்ச்சிப் பேதலிப்பு அடைகிறார்கள்.
அவர்களைப் பற்றிய தவறான நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள்
வாழ்க்கைப் போக்கு பற்றிய தவறான நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தவறான நம்பிக்கைகளால் தவறாக விஷயங்களைப் புரிந்து கொண்டு மேலதிகமாய் முழிபிதுங்குகிறார்கள்
பற்று, வெறுப்பு, ஆசை, சுகதுக்க நினைவுகள் ஆகியவற்றை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இந்நிலைப்பாடுகள் எல்லாம் தனிமனித கர்மவினையை சார்ந்தவை. ஆன்மாவினுடையதல்ல. அவை, மனம் மற்றும் அதன் உறைகளினுடையவை. அல்லது ஜட உலகத்தில் உறவாட ஆன்மா மேற்கொள்ளும் உடம்பினுடையவை.

ஒரு புத்தியுள்ள மனிதன் தனது கர்மக்கட்டுகளை அறியவந்த பின், அவைகளைத் தன்னுடையதாக உரிமை கொண்டாடுவதைவிடுத்து, அவற்றை எப்படி திறனுடன் கையாள்வது, வெல்வது, கடந்து செல்வது எனும் நோக்கத்தில் அவைகளை தனக்கு அளிக்கப்பட்ட கடமையாக மேற்கொள்கிறான்.

மனக் கட்டுகள், உணர்ச்சிப் பேதலிப்புகள் ஆகியவை, ஆன்மப் பிரக்ஞையை கலங்கலாக்கி, பகுத்தறியும் சிந்தனையில் குறுக்கிட்டு, புரிதலைக் குழப்பி, நடத்தைகளை ஆக்கிரமித்து, தன் மனப்பாங்கிற்கு நேரான சூழலை ஈர்த்துக் கொள்ளும்.

கர்மக் கட்டுக்கள் நம் வாழ்வில் தீர்மானகரக் காரணிகளாக இருக்கும் வரை, ஆன்ம விடுதலையைப் பெறுதல் முடியாது.
ஆகவேதான், கர்மக் கட்டுகளுக்கு மேலான உணர்வுப் படிநிலைகளுக்கு விழிப்புற சாதகன் ஊக்கப் படுத்தப்படுகிறான்.
ஆனால், ஆன்மப் பிரக்ஞையானது மனக்கட்டுதிட்டங்களுடன் அடையாளப்படுத்தப்படும் வரை,
தேவையான மாற்றத்தினைத் தவிர்த்தலோ
தேவையான செயல்பாடுகளை செய்ய மறுத்துத் துறத்தலோ
ஆன்ம விடுதலைக்குக் காரணமான ஆன்மீக வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாது.

3.5. கணமேனும் கருமமின்றி யாரும் இருக்க முடியாது. ஒவ்வொரு உயிரினமும் அதனதன் இயற்கையின் பூர்வாங்க தூண்டுதலால் உந்தப்பட்டு கர்மமாற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
உரை:
கீதையில், கர்மம் என்பது நோக்கம் ஈடேற்றும் செய்கையைக் குறிக்கிறது. கர்மம் என்பதனை
உடலாலும்
மனதாலும் (மனவளர்ச்சிக்கு ஆர்வமுறுதல், சிந்தனை, திட்டமிடுதல், தேர்ந்தெடுத்தல், முடிவெடுத்தல், வேண்டிய பலனைக் கற்பிதம் செய்தல், வேண்டிய விளைவினை அடைய தீவிர நாட்டம் கொள்ளுதல் போன்றவை)
ஆன்மீக வழிகளாலும் (ஆன்மஞானத்தை மீட்கவும், தக்க வைக்கவும் உணர்வு நிலைகளை ஆக்கபூர்வமாக தகவமைப்பதான ஆன்மீக வழிகளாலும்)
என பலவழிகளில் செய்யமுடியும்.

முக்குணங்களின் ஆதிக்கம் நம்மை பாதிக்கும் வரை நாம் கர்மம் ஏதோவொரு வகையில் அனுபவிக்க பலவந்தப்படுத்தப் படுகிறோம்.

3.6. புலன்களை அடக்கி, ஆனால், மனதை புலன் விஷயங்களில் திளைக்க விடும் கலங்கிய மனத்தினன் போலியானவன். அவன் பொய் நடத்தையாளன்.

உரை:
திறனின்றி, ஆவேசத்துடன், அறிவின்மையினால் உணர்ச்சிகளையும் தூண்டல்களையும் அடக்கி, ஆனால், மனதை ஆசைகளில் நிரப்பியிருப்பதானது சுவாபிமான ஆளுமையின் தன்மைகள். அவனுடைய நடத்தைகள் தமஸ் மற்றும் ராஜஸ குணங்களால் தீர்மானிக்கப் படுபவை.
சுயக் கட்டுப்பாடுள்ளவன் போல் காண்பித்துக் கொள்ளும் அவனுடைய செயற்கையான முகப்பு ஒரு வெளி வேஷமேயாகும்.

தியானத்தின்போது, உடல், மன நிலைமைகளைக் கண்டுகொள்ளாமல், முழுக் கவனமும் உயருண்மையின் மேல் கவனம் வைத்து, அப்பயிற்சியின் காரணத்தை ஈடேற்ற சாதகன் நோக்கமாக வைத்திருக்க வேண்டும்.

தியானத்தின் பல செய்முறைகளான
வழிபாடு
பிராணாயாமம்
உள் ஒலி மற்றும் ஒளியில் கவனம்
முழுமைக்கு மீட்டுக்கொள்வதான ஆன்மாவின் இயற்கையான தூண்டுதலுக்கு இணங்குதல்
போன்ற இவையாவும் கவனச்சிதறலை உண்டாக்கும் காரணிகளிடமிருந்து சாதகனை விலக்குகின்றன.

உடல் சார்ந்த தன்மைகளுடன் வேரூன்றி இருத்தலை விட்டு, அமைதி ஸ்வரூபமான ஆன்ம விழிப்புணர்வுக்கு, சாதகன், தியானத்தின் போது தன்னை முனைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

3.7. ஆனால், கர்மபலனில் பற்றற்றும் புலனடக்கமும் கொண்டு செயலுறுப்புக்களை கர்மயோகத்திற்கு உபயோகிப்பவனுமாகிய சாதகன் மேலானவன்.

உரை:
முக்கியமாக சங்கல்பத்துடன் தியானத்தில் ஈடுபட்டிருக்கையில், புலன் தூண்டல்களைக் கட்டுப்படுத்தி, அனுபவத்திற்கு வேட்கையுறாமல் பலமான ஆன்ம விழிப்புணர்வுக்கு ஏதுவானதற்கு ஆர்வமுறவேண்டும்.
புலன்களை
தேர்ந்தெடுத்தும்
மன மற்றும் உணர்ச்சிபூர்வப் பற்றின்றியும்
உடலையும் மனத்தையும் குளிர்விப்பதான பிராணாயாமத்தாலும்
பிரார்த்தனையாலும்
அதீத உணர்வுத் தியானத்தாலும்
கையாளலாம்.

3.8. உன் கடமையை நீ செய்வது உன் பணி. செயலாற்றாமையை விட செயலாற்றுதல் மேல். உன் உடலைப் பராமரிப்பது கூட அதற்கான கர்மமின்றி முடியாது.

உரை:
சாதகனின் கடமையாகச் சொல்லப்படும் பணிகள் என்னவென்றால்,
தன்னுடைய முழு நலம்
வாழ்க்கைப் போக்குடன் அனுசரணை உறவு வைத்துக்கொள்ளுதல்
விரைவான ஆன்மீக வளர்ச்சி

சங்கல்பித்த ஆக்கபூர்வ பணிகளை ஆற்றாவிட்டால், ஒருவனின் வாழ்க்கை
சூழலின் தயவுக்கு
மனமறியா போக்குகளுக்கு,
மனமறிந்தவற்றுக்கு அப்பாற்பட்ட போக்குகளுக்கு
குணசேஷ்டைகளுக்கு
சாயும்.

இயல்பான, உள்காட்சிப்பூர்வ பொருத்தமான சாத்வீக நடத்தைகளை ஈனும் ஆன்ம வளர்ச்சி ஏற்படும் வரை, ஒரு நேர்மையான சாதகன் தன் அசமந்த (தமஸ்) குணத்தை (தமஸ்) ஆக்கபூர்வ ராஜஸ கர்மங்களாக மாற்ற ஊக்கப்படுத்தப்படுகிறான்.

3.9. பகவத் அர்ப்பணமாக செய்யப்படும் கர்மங்களைத் தவிர, இந்த உலகம் கர்மத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. எனவே, உன் கர்மங்களை பகவத் அர்ப்பணமாகப் பற்றற்று செய்.

உட்பொருள்:
பரிணாம வளர்கூறுகளின் ஆதரிப்புக் கருமங்கள் தவிர, ஜட எல்லைக்குள் பலன் தரும் கர்மங்கள் செய்வதைத் தவிர்க்க முடியாது. எனவே, உன் உயர்நலனுக்காக, உன் எல்லா கருமங்களையும் பரிணாம வளர்கூறுகளுக்கு அர்ப்பணிக்கும் விதமாகச் செய்; உன் கருமங்களிலும் அவைகளின் பலன்களிலும் பற்றின்றி இரு.

உரை:
யக்ஞம் எனும் சமஸ்க்ருத வார்த்தை, பொதுவாக ஒருவருக்காகவோ, ஒரு சமூகக் குழுவிற்காகவோ, தொடர்பு, நல்லுறவு, மற்றும் பிற சலுகைகள் வேண்டி, கடவுளை அல்லது தேவர்களை நோக்கி செய்யும் சடங்குடன் கூடிய பிரார்த்தனையைக் குறிக்கிறது. அச்சடங்குகளில் பல்வேறு பொருட்களை சமர்ப்பிப்பதும் நடைபெறுகிறது.
இந்த ஸ்லோகத்தில் 'யக்ஞம்' எனும் சொல்லின் அழுத்தம் கொடுக்கப்படுவது எதற்கு என்றால், தனி நபருக்காக, பொது நன்மைக்காக, இயற்கையைக் காக்கும் சக்திகளின் ஆதிக்கத்தினை உலக கோளத்தில் இறக்கவும், ஒளியூட்டத்தின் நிறைவேற்றத்தினை விரைவு படுத்தவும், பரிணாமத்திற்கு ஆதரவாக தன் கர்மங்களையெல்லாம் 'புத்தியறிந்து அர்ப்பணிப்பது' என்பதின் மீது ஆகும்.

இவ்வாறு செய்யப்பட்ட கருமத்தினால், சாதகனுக்கு உலக காரண காரியங்களில் தானறியா ஈடுபாட்டினை விலக்கி, விடுதலையளிக்கும் ஆன்ம விழிப்புணர்வு கிடைக்கிறது.

3.10. யக்ஞங்களுடன் மனிதர்களைப் படைத்த பின், படைப்பின் தலைவன் பிரஜாபதி கூறியது. “இதனால் [யக்ஞத்தினால்] நீங்கள் விருத்தி செய்து கொள்ளுங்கள். உங்களின் நியாமான ஆசைகளை இது பூர்த்தி செய்யட்டும்."

3.11. இந்த யக்ஞங்களால் நீங்கள் தேவர்களைப் போஷியுங்கள். அவர்கள் உங்களை போஷிப்பார்களாக. பரஸ்பர போஷிப்பால் உயர்நலனை நீங்கள் அடைவீர்கள்.

3.12. யக்ஞத்தால் திருப்தியடைந்த கடவுளர்கள் உங்களுக்கு ஆசைகளை அனுபவிக்கும் இன்பத்தை அளிப்பார்கள். அவர்களால் கொடுக்கப்பட்டதை, அவர்களுக்கு பிரதிபலனாய் ஏதும் கொடுக்காமல், அனுபவிப்பவன் திருடன்.

3.13. யக்ஞம் செய்துவிட்டு எஞ்சியதை உண்ணும் சாதுக்கள் எல்லா துரதிருஷ்டங்களிலுருந்தும் விடுபடுகின்றனர். ஆனால், ஆணவமைய மனக்கோணல் உடைய, தங்களுக்கு மட்டுமே ஊட்டமளித்துக் கொள்ளும் பாவிகள் அந்தப் பாவத்தையே உண்கின்றனர்.

3.14. ஜீவராசிகள் உணவினின்றும், உணவு மழையினின்றும், மழை யக்ஞத்தினின்றும், யக்ஞம் கர்மத்தினின்றும் உண்டாகிறது.

3.15 கர்மம் இறைவெளி (பிரஜாபதி, பிரமன்) யிலுருந்தும், இறைவெளி அழிவற்ற நித்ய முழுமையான தூய பேருணர்விலிருந்தும் உண்டானது. ஆகவே, எங்கும் பரவியுள்ள இறைவெளி யக்ஞத்தில் நிலைபெற்றுள்ளது.

உரை:
இயற்கை, படைப்புக்கள், மனிதக்கூட்டம் யாவும் ஒரே பேருணர்வு வெளியில் தோன்றுகின்றன. அந்த உணர்வு வெளி தன்னைத் தானே இவ்வாறாக வெவ்வேறு விதமாய் வெளிப்படுத்திக் கொள்கிறது.

அதைப்போலவே, நம் ஆசைகளுக்கும் தேர்ந்தெடுப்புகளுக்கும் ஏற்ப நம் அனுபவங்களும் சூழ்நிலைகளும், நம் உணர்வு வெளியிலும், அதே சமயம் வரம்பற்ற வெளியிலும் வெளிப்படுத்தப்படுகிறது. அவை நம் எண்ணங்கள் எவ்வளவுக்கெவ்வளவு இயற்கை நியதியை அனுசரித்து இருக்கிறதோ அதைப் பொறுத்து அமைகின்றன.
தேவர்களாக வேதத்தில் கூறப்படுபவர்கள் உருக் கொண்டவர்கள் அல்லர். அவர்கள் இயற்கையின் செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள். அவர்கள் நம்மை போஷிக்கிறார்கள். நம் உணர்வு சுத்தமாகவும் நம் செயல்கள் பொருத்தமாகவும் இருந்தால் நாம் அவர்களை போஷிக்கிறோம். நாம் நம்மையும் நம் செயல்களையும் வாழ்க்கைக்கு அர்ப்பணிக்காவிட்டால், அதன் காரணத்தாலேயே இயற்கையின் கொடை நம் பக்கம் பாயாது. இயற்கையின் ஆசிகளை மனநலம் உடையவர்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. மனநிம்மதி இழந்த மன முரண்பாடானவர்கள் சுயநலமிகளாக சுயபாதிப்புச் செயல்களில் ஈடுபட்டு மேலும் தங்களை காயப்படுத்திக் கொள்கிறார்கள்.

படைப்புகள் உணவாலும், உணவானது எதிர்நோக்காமல் வழங்கும் மழையினாலும், அம்மழை இயற்கையின் செய்கையாலும் ஊட்டம் பெறுகின்றன. முழுமையான தூய உணர்வுவெளியிலிருந்து எங்கும் நிறைந்த பேருணர்வு உருவாகிறதென சாதகன் அறிய வேண்டும். கடவுள், பரிணாம வளர்ச்சியை ஆதரிக்கும் எல்லா கொடைகளிலும் இருக்கிறார்.

'யக்ஞம் செய்துவிட்டு எஞ்சியதை உண்ணும்' [3.13] என்பதன் விளக்கம்: தியானத்திற்குப் [தியாகச்செயல்களுக்கு] பின் சாதகர்களின் விழிப்புணர்வு அமைதியில் அமிழ்ந்திருப்பதால், பேருணர்வு வெளியின் சுத்தப்படுத்தும் வல்லமையால் அது அவர்களை 'துயரத்திலிருந்து விடுவிக்கிறது'.

3.16. பிரபஞ்ச ஆதாரமான செயல்காரணிகளின் சுழற்சிக்கு யார் உதவவில்லையோ, அவன் கீழ்த்தரமான, விஷயசுக விரும்பியாய், வீண் வாழ்க்கை வாழ்கிறான்.

3.17. ஆன்மஞானம் ஒன்றிலேயே ஆநந்திப்பவனுக்கு, அதில் திருப்தியடைந்தவனுக்கு, அதிலேயே பூரிதமடைந்தவனுக்கு செய்யவேண்டிய காரியம் வேறொன்றும் இல்லை.

3.18. அத்தகைய ஆன்மபிரேமிக்கு செய்துமுடித்த காரியங்களாலோ, செய்யாமல் விட்ட காரியங்களாலோ ஆகவேண்டியது ஒன்றுமில்லை. எந்த காரணத்திற்காகவும் பிறரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

3.19 ஆகவே, தவிர்க்க முடியாதவைகளை தவறாமல் பற்றின்றி செய். அப்படி பற்றின்றி நற்காரியம் புரிதல் உயர்ப்பலனைத் தரும்.

உரை:
யாரொருவன் இயற்கையின் வளர்போக்கிலும் அதன் புத்தாக்கத்திலும் பங்கெடுக்க விரும்பவில்லையோ, அவன் புலன்களின் பிடியில் சிக்கி, சுயநல ஆசையுந்தல், மற்றும் காரணபுஷ்டியற்றவனாய், வாழ்வின்அர்த்தத்தை அறியாதிருக்கிறான்.

ஆன்ம ஞானம் பெற்ற சாதகனுக்கு, செய்யவேண்டியது எதுவுமில்லை. அவனுடைய ஞானத்தினால் தேர்ந்தெடுத்த பணிகள் அல்லது அடிப்படைத் தேவைகள்
1. உள்காட்சித் தூண்டலால் உந்தப்பட்டும்
2. இயற்கையில் உள்ள வாழ்க்கைப் போக்கு ஓட்டத்தின் ஆதரவாகவும்
தானாக நிறைவேற்றம் அடைகின்றன.

முழுமை வாழ்க்கையின் கூட்டுமொத்த விழிப்புணர்வில் அஸ்திவார பலமுள்ள அவன், என்றும் வற்றாத தெய்வீக வளத்தினால் ஊட்டம் பெறுகிறான்.

எல்லாச் செயல்களையும் அவைகளினுடைய ஆக்கபூர்வ வெளிப்பாடுகளுக்காகச் செய்யவேண்டும். இதுதான் சரியான, தர்மமான, ஆதரவான வாழ்க்கை வழி.

3.20. சரியான கர்மத்தினாலேயே ஜனகர் போன்ற அரசர்கள் முழுமையை உணர்ந்தார்கள். உலகை பராமரிக்க நீ சரியான கர்மம் செய்.

உரை:
பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்தியாவில், ஜனக மகாராஜா தன்னுடைய அரசாட்சிக் கடமைகளைச் செய்துகொண்டே ஆன்ம ஞானத்தில் நிலைத்திருந்ததனாலேயே பெருமை பெற்றவர்.

எல்லா சூழ்நிலைகளிலும் இறைவனை சிந்திப்பதே அவருடைய தலையாய கடமை. ஒளியூட்டம் பெற்ற பின்பும் பெரும்பாலான சாதகர்களுக்குப் பொறுப்புகளும் உறவுகளும் தொடரும்.

ஒன்றையொன்று சார்ந்தே வாழ்க்கை அமைந்திருப்பதை நன்கு உணரவேண்டும். பொது வாழ்க்கை சீராக நடைபெற, வாழ்வுநெறி சூட்சும தளத்திலிருந்து ஸ்தூல தளத்திற்கு ஒளியூட்டம் பெற்றவர்கள், ஒளியூட்டம் பெறாதவர்கள் என எல்லா மக்களுக்கும் இசைவானதாக விரிவடைதல் வேண்டும்.

3.21. மேன்மையான [சாதித்த, மதிப்பிற்குரிய, அதனால் செல்வாக்குள்ள] மக்கள் என்ன செய்கிறார்களோ, அதனைப் பிறர் பின்பற்றுவர்.

நம் உணர்வு நிலைகள், மன நிலைகள், நடத்தைகள், ஆகியன சமூக மற்றும் உலக உணர்வுகளோடு பிறரை பாதிக்கும். நம் மன நிலை, உடலெடுத்த அனைவரின் பொதுவான பிரபஞ்ச மனதின் அகவய தளத்துடன் உறவாடும். நம் நடத்தைகள் பிறர் அறியவரும்போது அவை அவர்களை சாதகமாகவோ பாதகமாகவோ பாதிக்கும். முக்கியமாக, நம் சாதனைகளுக்காக நம்மை மதிப்பவர்கள், நம் நல்ல உதாரணங்களை பின்பற்றுவர்.

3.22. மூவுலகத்திலும் நான் செய்ய வேண்டிய கடமை ஒன்றும் இல்லை. இனி அடைய வேண்டியதும் ஒன்றும் இல்லை. ஆயினும் நான் கர்மத்தில் ஈடுபட்டுள்ளேன்.

3.23. நான் சோர்வறியாத செயலில் ஈடுபடவில்லையென்றால், உலகம் அவ்வாறே என்னைப் பின்பற்றி செயலற்றுவிடும்.

3.24. நான் கர்மம் செய்வதை நிறுத்தினால், உலகம் அழியும். மக்களிடையே குழப்பமும் அழிவும் ஏற்படுத்தியதிற்கு நான் காரணமானவன் ஆகிவிடுவேன்.

உட்பொருள்:
வரம்பறியாத உயர் உணர்வுக்கு, அது பூரணமாக இருப்பதால் அது ஆற்ற வேண்டிய கர்மம் ஏதுமில்லை. ஆயினும் அது வெளிப்படுத்திய தளத்தில் அத்தளம் இயங்குவதற்கான தூண்டுதலை அது வழங்கிய வண்ணம் உள்ளது. விசேஷித்த பிரிவுபாடுகளுடன் எங்கும் வியாபித்திருக்கும் இந்தப் பேருணர்வின் பற்றற்ற கர்மங்கள் செய்யப்படவில்லையென்றால், படைப்பு வடிவற்ற நிலைக்குத் திரும்பிவிடும்.

உரை:
மெய்யனுபூதி பெற்ற ஆன்மா, இறைவன்
சர்வ வியாபி என்றும்
உலக வெளிப்பாட்டு வளர்ச்சியினை ஒரு தூண்டுதலால் ஆரம்பித்து அதனை பாதுகாப்பதான இயற்கையின் பரப்பினை வெளிக் கொண்டுவந்து அதனையும் வளர்ப்பதான, உயர் உணர்வின் வெளிப்பாடு என்றும்
அறிகிறான்.

இந்தத் தூண்டுதல், 'இறைச் சித்தம்' (God's Will) என்றும் விளைவை உருவாக்கும் சங்கல்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இறைச்சித்தத்தை மனிதனின் ஆணவ மைய சுவாபிமான உணர்வுள்ள விருப்பார்வத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.

3.25 அறியாத மனிதர்கள் தங்களுடைய நிர்ப்பத்தங்களுக்கு சிரத்தையாய் இருந்து பற்றுதலை ஒட்டி காரியமாற்றுவதுபோல, அறிவாளிகள் இயற்கையின் பராமரிப்பிற்கு அதற்கு அனுசரணையாய் பற்றற்ற கர்மாக்களில் ஈடுபடவேண்டும்.

3.26. கர்மங்களில் பற்று வைத்துச் செயலாற்றும் மனிதர்களுக்கு அறிவாளி மனத்தடுமாற்றத்தை உண்டாக்கக் கூடாது. அறிவாளிகள் ஒழுக்கமுள்ள கர்மாக்களைச் செய்துகொண்டே, பிறருக்கு முன்மாதிரியாக இருந்து அவர்களை நற்காரியங்களில் ஈடுபட ஊக்கமூட்ட வேண்டும்.

உரை:
ஞானத்திறவற்ற மக்கள் எவ்விதம் தங்களுடைய லௌகீகப் பக்குவத்திற்கும் பழக்கத்திற்கும் பணிந்து செயல்படுகிறார்களோ, அவ்விதமே சாதகர்கள் தங்களின் கடமைகளை பரிணாமத்திற்கு ஆதரவாக ஆன்ம இயல்புக்குச் செயல்படவேண்டும்

சாதகர்கள் அவர்வர்களுடைய கடமைகளைச் செய்துகொண்டே ஞானவிழிப்பற்ற பிறரையும் இடையூறு செய்யாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆரோக்கியமான செயல்பாட்டுச் செறிவான வாழ்க்கைக்கு பிறருக்கு உதவும் சிறந்த வழி, சாதகர்கள் தங்களை முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு அதேசமயம் முடிந்தபோதெல்லாம் ஊக்கவார்த்தைகள் பகிர்வதாகும்.

பிறர் என்ன செய்கிறார்கள் என்பதில் அக்கறை செலுத்தாமல், சாதகன் தன்னை கர்மயோகத்திலும் ஒழுக்க நடத்தைகளிலும் சிரத்தையுடன் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.

3.27. இயற்கையின் குணங்களால் எல்லா கர்மங்களும் செய்யப் படுகின்றன. ஆணவத்தால் மயக்குற்ற மனிதன் அவைகளை, "நான் செய்கிறேன்" என எண்ணுகிறான்.

3.28. ஆத்மா செயல்களிலிருந்து விலகி இருக்கிறது, குணங்களே செயல்களை நடைபடுத்துகின்றன - என்ற இருபக்க உண்மையை அறிந்தவன் குணங்களின் பரிவர்த்தனையே செயல்களுக்குக் காரணமென அறிந்து அச்செயல்களில் பற்றுகொள்வதில்லை.
3.29. இயற்கையின் குணமாயையில் சிக்குண்டவர்கள் தங்களின் கர்மத்தின்மேல் பற்று வைக்கிறார்கள். உயர்ஞானம் உள்ளவன் அறிவில் முழுமையுறாத மக்களின் மனதைப் பாதிக்கக் கூடாது.

உரை:
வாழ்க்கையின் வளர்போக்குகளுடன் நாம் உறவு வைத்துக்கொள்வது மற்றும் என்ன பணியாற்றுவது என அறியச் சிறந்த வழி, தன்னை ஒரு ஆன்மசொரூப வியக்தியாக உணர்ந்து, உண்மைத் தன்மையுடன் விழிப்புடனிருத்தலே ஆகும்.
ஒழுங்கற்ற எண்ணப்போக்கு, மரபு உணர்ச்சி ஆட்டங்களுடன் ஆன்ம விழிப்புணர்வு கலந்து அடையாளப்படுத்தப்படும்போது கலங்கலும் குழப்பமும் ஏற்படுகிறது.

3.30. சகல கர்மங்களையும் எனக்கு அர்ப்பணித்து, ஆன்ம ஞானத்தில் நிலைபெற்று, ஆசைகளிலிருந்தும் ஆணவத்திலிருந்தும் விடுபட்டு, குழப்பம் நீங்கியவனாய், சரியான முயற்சியில் ஈடுபடு.

உட்பொருள்:
வரம்பற்றதற்கு சகல கர்மங்களையும் அர்ப்பணித்து, ஆன்மஞானத்தில் நிலைபெற்று, ஆசையிலிருந்தும் ஆணவத்திலிருந்தும் [அதாவது, தவறாகக் கற்பிதம் செய்யப்பட்ட சுய அடையாளத்திலிருந்து] விடுபட்டு, முந்தைய குழப்பங்களிலிருந்து விடுபட்டு, சரியான முயற்சியில் ஈடுபடு.

3.31. நம்பிக்கையால் பூரித்த சாதகர்கள், இந்த என் உபதேசங்களை உறுதியான விடாமுயற்சியுடன் பின்பற்றி பற்றுதல்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

3.32 ஆனால் இந்த உபதேசங்களில் நம்பிக்கையில்லாமல், அவமரியாதையுடன் பின்பற்றாதவர்களை குழம்பிய ஞானமுடையவர்கள் மற்றும் விவேகத்தை இழந்தவர்கள் என அறி.

உரை:
இறைவனிடத்தில் நம்பிக்கையுள்ளவர்களும், இந்தப் பாடங்களில் ஒளியூட்டம் பெற்றவர்களும், பலனுள்ளதாக அவர்கள் அறிகிறதைச் செய்வதால், அவர்களுக்கு ஆன்மீகப் பயிற்சியை சிரத்தையுடன் மேற்கொள்வது எளிதாகி விடுகிறது.

ஆன்மீகப் பயிற்சிகளின் மதிப்பைச் சந்தேகிப்பவர்கள், குற்றம்சாட்டுபவர்கள் போன்றோர் வாழ்வின் காரணபுஷ்டியையும் சாதிப்புகளையும் சரிவர அறியாமால் விவேகமற்றிருக்கிறார்கள்.

3.33. ஒருவர் அவருடைய சுபாவத்தின் படியே நடக்கிறார். அறிவாளியும் அப்படியே. மக்கள் அவரவர் சுபாவத்தின் படி நடக்கும்போது, அவைகளைக் கட்டுப்படுத்துவதால் ஆகப்போவதென்ன?

உரை:
யோகப்பயிற்சியில் முழுமையான அர்ப்பணம்தான் வெற்றிக்குத் தேவை. அர்ப்பணம் பூர்த்தியற்றதானால், அவர்:
இயல் கடந்த விகற்பத்தில் திளைக்கிறார்,
வாழ்க்கையின் நிஜங்களைச் சந்திக்கத் தவிர்த்து அரைமனதான தியானத்தில் ஈடுபடுகிறார்
உணர்ச்சி முதிர்வடைவதைத் தவிர்க்கிறார்

பழக்கங்களால் ஆளப்படும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு வரும் மக்கள், அவர்களின் உடலளவு, மனதளவுத் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த அவர்கள் எடுக்கும் மிகமெல்லிய முயற்சியின் மதிப்பென்ன? அவர்கள் உயர்புரிதல் பெறக்காட்டும் பேரார்வத்தின் மதிப்பென்ன? எனும் கேள்வி எழுகிறது.

சாதகர்கள் எனச் சொல்லிக்கொண்டு மிக உயர்ந்த நேர்த்தியை அடைவதற்கான சாதக வாழ்வினை வாழாதவர்களை, நாம் அவர்களை ஞானவாழ்க்கைக்கு எது தேவை என அறியாதவர்கள் அல்லது அசிரத்தையுடையவர்கள் எனக் கருத நேரும்.

3.34. புலன்விஷயங்களில்தான் பொருள்களின் மீதான பற்றும் வெறுப்பும் நிலைகொண்டிருக்கிறது. ஆன்மாவின் நலத்திற்கு எதிராக இருப்பதால், இந்த இரண்டு இழுவைகளின் ஆதிக்கத்திற்குள் ஒருவன் விழக்கூடாது.

உரை:
பற்றையும் வெறுப்பையும் கடக்கச் சிறந்த வழி
a. இரண்டையும் பிரச்னையாகக் கருதக்கூடாது
b. உயர் ஞானத்திற்கு விழிப்படைவதையும், அப்படி விழிப்புணர்வினால் ஏற்படும் சுதந்திரமான வாழ்வினையும் உறுதியான குறிக்கோளாகக் கருத்தில் வைத்துக்கொண்டு, பற்று--வெறுப்பு மீதும் அவை தொடர்புடைய பொருள்களின் மீதும் கவனத்தை விலக்குவது.

3.35. சிறப்பாகச் செய்யப்பட்ட இன்னொருவரின் தர்மத்தை விட, குறைவுடனாவது செய்யப்பட்ட ஸ்வதர்மம் சிறப்பானது. தன் சொந்தக் கடமையில் தோற்பதும் மேலானது, ஏனெனில் இன்னொருவரின் பாதையைப் பின்பற்றுவது பயம் உண்டுசெய்யும்.

உரை:
உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள் – நான் இங்கு, இப்போது என்ன செய்யவேண்டும்? என்று. இதனை அறிந்தபின், செய்ய வேண்டியத்தைச் சிறப்பாகச் செய்யுங்கள். இந்த வழியில் நீங்கள் ஞானத்திலும் நாகரீகத்திலும் சிறப்பாக வளர்வீர்கள். அடுத்தவரைப் பின்பற்றுவது என்பது, மேலோட்டமான வாழ்க்கை வாழ்வதும் ஆத்மதிருப்தியற்றதும் ஆகும். பொருளாசை வாழ்க்கை வாழ்பவர்கள், கல்லறை செல்லும் வரை உயிரைத் தாங்கிப்பிடித்து வாழ்வது என நினைக்கிறார்கள். மரணம் தவிர்க்க முடியாதது என்று நம்பி, அதற்கு அஞ்சி, வாழ்க்கையில் நம்பிக்கையற்றிருக்கிறார்கள்.

ஒரு சாதகன் “நான் என்றும் அழியாதவன்: ஆன்ம ஸ்வரூபன்” என அறிந்து அந்தப் புரிதலில் வாழ வேண்டும். அப்போது, வாழ்க்கையை அச்சமின்றியும், திறமையுடனும், வெற்றியுடனும் வாழலாம்.

அர்ஜுனன் வினவியது:
3.36. ஒருவனுடைய சுயவிருப்பத்திற்கு மீறிய ஒரு சக்தியினால் தூண்டப்பட்டது போல் எதனால் உந்தப்பட்டு மனிதன் தவறிழைக்கிறான்?

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதில் கூறியது.
3.37. ரஜோகுணத்தினால் தோன்றிய ஆசையும் கோபமுமே. அவை எல்லா சக்திகளையும் விழுங்கி, பெரும் தீங்கு விளைவிப்பது. இதனை, [நல்லெண்ணங்களுக்கும், நற்செய்கைகளுக்கும்] எதிரி என அறி.
3.38. நெருப்பு புகையாலும் [சத்வ], கண்ணாடி தூசியாலும் [ரஜஸ்], கரு அதன் உறையாலும் [தமஸ்] சூழப்பட்டுள்ளது போல நுண்ணறிவு விருப்பத் துடிப்பால் சூழப்பட்டுள்ளது.
3.39. அர்ஜுனா, திருப்தியாகாத தீயைப்போல் ஆசை எனும் இந்தத் தீங்குகளால் அறிவாளியின் அறிவும் சூழப்பப்ட்டுள்ளது.
3.40. புலன்கள், மனம், நுண்ணறிவு ஆகியன இந்த ஆசைகளின் இருப்பிடம். அவை ஞானத்தை மறைத்து உடலெடுத்த பிறவியை மயக்குகிறது.
3.41. எனவே, புலன்களைக் கட்டுப்படுத்தி விவேகத்தையும் ஞானத்தையும் அழிப்பானாகிய இந்த ஆசையை நிறுத்து.

உரை:
ஆன்மாவின் வியக்த விழிப்புணர்வு ஒரு அதீத உணர்வினை முன்னோக்கும் திறன் பெற்றிருந்தும், பிரபஞ்ச மனத்தின் ஒரு சிறுபகுதியான வியக்த மனத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, நுண்ணுணர்வுப் புலனை உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாட்டினை அறிய பயன்படுத்துகிறது.

தமஸ் குணம் மேலோங்கும்போது விழிப்புணர்வு, மனம், நுண்ணுணர்வுப் புலன்கள் கலங்கியிருக்கின்றன. ரஜஸ் குணம் மேலோங்கும்போது, ஆக்கபூர்வ செயல்களைச் செய்ய விரும்பினாலும், முரண்பாடான, பலமான உணர்வுத்தூண்டல்களால் உந்தப்பட்ட ஆசைகளினால், நுண்ணுணர்வு ஆற்றல் கெட்டு, விளைவு நற்பலன்களைத்தான் கொண்டிருக்கும் என கூறமுடியாதது எனவாக உத்வேகத்துடன் காரியங்களில் ஈடுபடுத்துகிறது.

3.42. புலன்கள் மேலானவை என சிலர் கூறுகின்றனர். உண்மையில், மனம் புலன்களை விடச் சிறந்தது. புத்தி மனதை விடச் சிறந்தது. ஆன்மா, புத்தியை விடச் சிறந்தது.
3.43. எனவே, புத்தியைவிட எது சிறந்தது என அறிந்ததனால், சுய உணர்வை ஆன்மஞானத்தால் நிலைநிறுத்தி, அடக்கமுடியாத ஆசை எனும் தடையை விலக்கிவிடு.

உரை:
தேகத்தைச் சார்ந்த ஆளுமையை முன்வைக்கும் மனிதர்கள்
புலன் உணர்வுக்காட்சி
புலன்விஷயங்களைத் திருப்திப்படுத்துதல்
உணர்ச்சிகளின் பூர்த்தி
ஆகியனவே தன்னையறிதலுக்கும் நம் நடத்தையைத் தூண்டுவதும் என உறுதிப்படக் கூறுகின்றனர். இச்சான்றுகளால் அவர்கள் தங்களுடைய இயலாமையை வெளிப்படுத்துகின்றனர்.

சங்கல்பத்தாலும் தேர்வாலும் புலன்விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதால் மனமே, புலன்களைவிட மேலானது. பொய்யிலிருந்து உண்மையை பிரிக்கமுடிவதால் புத்தியே மனதை விடச் சிறந்தது.

உடலையும் மனதையும் உற்பத்தி செய்வதிலும் ஆட்சி செய்வதிலும் காரணமாக இருந்து, அவைகள் மறைந்தாலும் தான் தொடர்ந்து இருப்பதாலும் ஆன்மாவே அவைகளை விட மிகவும் சிறந்தது.

புலன்கள், மனம், புத்தி, ஆன்மா ஆகியவைகளின் உண்மை அறிந்த பின், சாதகன் அடிமைப்படுத்துவதும், பயனற்றதுமான ஆசைகளைத் துறந்து, தன் சக்தியை நிம்மதியுடன் மனக்குவியம் பெறவும், ஆன்மசக்திகளைக் காரணபுஷ்டியான விஷயங்களுக்குப் பயனாகும் வகையில் பிரயோகிக்கவும் தூண்டப்படுகிறான்.

சரியான கிரியைகளை கற்பதற்குத் தூண்டுதலாக உள்ள ஆன்ம விழிப்புணர்வு ஓட்டங்களையும் ஆன்மாவின் சூட்சுமமான ஆக்க சக்திகளையும் தடுப்பதான தடைகளை நீக்கும்போது மனோ ரீதியான மாற்றங்களும் ஆன்ம விழிப்புணர்வுச் செயல்களும் தடையின்றி நடைபெறுகின்றன.

ஒருவன்
தியான ஒருமையின்போதும்
உறவாட்டங்களிலும் செய்கைகளிலும்
பொழுதுபோக்குப் களிப்பின்போதும்
தூக்கத்தின்போதும்
ஆன்ம விழிப்புணர்வுக்கும் ஆன்மசக்திகளுக்கும் தடையின்றி இருக்கும்போது, உள்ளார்ந்த தன்மைகளும் திறமைகளும் தானாக இயல்பாக மலரும்.

முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், கர்ம யோகம் என மூலத்திலும், கர்ம யோகம் என இவ்வுரையிலும் தலைப்பிடப்பட்ட மூன்றாம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.

Powered by Blogger.