MCCRF - A global volunteer network

W191. நான் எனக்குச் செலவழிப்பது போல், பிறருக்கும் செலவழிக்க எனக்குக் கற்பி. (Whispers from Eternity - Tamil & English)



191. நான் எனக்குச் செலவழிப்பது போல், பிறருக்கும் செலவழிக்க எனக்குக் கற்பி.
உன் கருணையால் நான் மற்றவர்களைக் காட்டிலும் அதிக செல்வம் உடையவனாக இருந்தால், என் தேவைக்கதிகமான செல்வத்தை வறியவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்க எனக்குக் கற்பி. ஏனெனில், நீயே தான் வறியவனாய் ஒரு உடலிலும், செல்வந்தனாக மற்றொன்றிலுமாக லீலை புரிகின்றாய். நீ, செல்வந்தனான உனக்கு செல்வத்தை அளித்துக் கொண்டு, அவன் தாராளமனத்துடன் உன்னுடைய செல்வத்தை வறியவர்களாகத் தோன்றும் உனக்கு அளிக்கிறானா? இல்லையா? என்று அவனைச் சோதித்துப் பார்க்கின்றாய்.

பாக்கியசாலிகள் துர்பாக்கியம் தீண்டியவர்களைப் பொருட்படுத்தவில்லையெனில், அவனாலே உன் சர்வவியாபகத் தன்மையை உணரமுடியாது. வறியவர்களினிடத்தில் உன்னைக் காணாத, கொழுத்த சுயநலச் செல்வத்தால் குருடானவர்கள் இங்கு மறுபடி வறித்தவர்கள் ஆக்கப்படுவர். நெஞ்சிலிரக்கமற்ற செல்வந்தர்கள் மறுபடி வறுமையில் உழன்று, சொகுசுகளைப் பிரிந்து, அவர்கள் அதனால்படும் அல்லல்பாட்டை உணர்ந்து, அதன்மூலம் மற்றவர்களின் தேவைகளையும் ஒருவாறு உணர்வார்கள்.

தானம் செய்யக் கற்பதற்காக மனிதர்களுக்கு நீ ஈந்த பரிசுகளை, பிறருடன் பகிர்ந்து கொள்பவர்கள் பாக்கியவான்கள். ஆனால், தேவையுடைய தங்கள் சகோதரர்கள் உதவிக்காக கதறியழும்போது, உபயோகத்துக்கு உகந்த உன் பரிசுகளை முடக்கி, வெறுமனே புழுத்துப்போக வைப்பவர்கள், ஆன்ம சோகையால் நெஞ்சம் குறுகி வறுமையில் காலாவதியாவார்கள்.

எதையும் யாருக்கும் கொடாமல் செல்வந்தனாக இறப்பவன் வறியவனே. ஆனால், மற்றவர்களுக்கு கொடுத்ததனால் வறுமையுற்று காலதேவன் வாயிலுக்கு செல்பவர்கள், உண்மையிலேயே செல்வந்தர்கள்.
செல்வத்தையும், உடல்நலத்தையும் இழந்த மற்றவர்களின் தேவைகளைக் கவனித்து, நம் செல்வம், உடல்வலிமை இழந்தால் நாம் எப்படித் உணர்வோமோ, அதைவிட அதிகமாக நாங்கள் அவர்களுக்காக உணர எங்களுக்குக் கற்பி. நமக்கு வறுமை ஒருக்கால் வந்துவிடுமோ எனும் நினைப்பே நமக்கு அச்சத்தையூட்டினால், தேவைச்சக்கரத்தின் கீழ் அகப்பட்டு நசித்தவர்களுக்காக, பலமடங்கு இரக்கப்பட எங்களுக்குக் கற்பி.

தங்கள் உண்மையான தேவைகளுக்கு எப்படி சந்தோஷமாகவும், உரிமையுடனும் செலவழிப்பார்களோ, அப்படி மற்றவர்களின் அத்தியாவசியங்களுக்காகவும் செலவழிக்க எங்களுக்குக் கற்பி. எல்லாவற்றையும் வழங்கும் சர்வ கொடையாளனான உன்னை மறந்து, உன் கொடைகளை மட்டும் நேசிப்பவர்களாக நாங்கள் இல்லாதிருக்க எங்களுக்குக் கற்பி.

உன் பரிசுகளை உன்னைவிட பெரிதாக எண்ணுபவர்கள், தங்களை உன்னிடமிருந்து பிரித்துக் கொள்கிறார்கள்.

நீ எப்படி ஜீவராசிகளுக்கு வழங்குகிறாயோ, அப்படி உன் பரிசுகளை மற்றவர்களுக்கு எதையும் எதிர்பாராமல் அளிப்பவர்கள், தங்களை ஒன்றே பலவாறாக எல்லா ஜீவராசிகளிலும் காண்பார்கள்.

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
191 Teach me to spend for others as I spend for myself.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.