W30. நீ புத்தராய் என்னிடம் வருக. (Whispers from Eternity - Tamil & English)
30. நீ புத்தராய் என்னிடம் வருக.
புத்தரே, உன் கருணைச் சொற்பொழிவுகளின் பொன் நாளங்கள், இருள்மண்டிய, கல்நெஞ்சங்களில் விரவி அவைகளின் இருளைப் போக்கி ஒளிமயமாக்கியது.
நீ துறவில் வானைத்தொடும் மகிமை பெற்றவன். உன் கடவுட்நோக்குக் கண்களுக்குக் கீழ், புலன்சுகங்கள் தரும் ராஜ்ஜியம், பருமையான பேராசை நதிகள், காமத்தால் எரிக்கப்பட்ட பரந்துவிரிந்த ஆசைப் பாலைவனங்கள், உயர்வான அநித்தியக் குறிக்கோள் மரங்கள், அரிக்கும் உலக-கவலைக் கள்ளிச் செடிகள் - என இவையாவும் உருகி கண்ணுக்குப் புலனாகாமல் சிறுத்து மறைந்தன.
புத்தரே, உன் தயையின் ஒளிவீச்சு குரூர நெஞ்சங்களின் கடினத்தை உருக்கி இளக்கியது. நீ ஆட்டின் உயிரை பலியினின்று காக்கும் பொருட்டு, அதற்குப் பதிலாய் உன் உயிரையே தியாகம் செய்ய முனைப்பட்டாய்.
ஆனந்தக்களி-லயத்தை நாடும் நெஞ்சங்களைத் தேடி, உன் சாந்தமான எண்ணங்கள் இன்னம் மனவெளிகளில் அமைதியாக பவனி வருகின்றன.
போதி ஆலமரத்திற்கடியில் அமர்ந்து, நீ பேருணர்வுடன் அமைதியான ஒரு சபதத்தை மேற்கொண்டாய்:
"ஆலமரக் கிளைகளுக்குக் கீழே,
புனித ஆசனத்தில் அமர்ந்து நான் இச்சபதம் செய்கிறேன்:
தோல், எலும்புகள், அநித்திய சதை - இவை கரைந்து மறைந்தாலும் சரி;
நான் வாழ்வின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்து,
அனைவரும்-நாடும் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை அடையும்வரை,
இவ்விடத்திலிருந்து நான் ஒருபொழுதும் அசையமாட்டேன், இது உறுதி."
நீ கருணையின் சின்னம், தயையின் அவதாரம், உன் உறுதியை எங்களுக்கும் அளி, அதன்மூலம் நாங்களும் உன்னைப் போலவே விடாமுயற்சியால் மெய்ம்மையை நாடுவோம். நாங்களும் உன்னைப் போல மெய்விழிப்புணர்வு பெற்று, பிறரின் சோகத்துடிப்புகள் நிவிருத்தியடைவதற்காக நாங்கள் எங்களுக்காக எப்படி நாடுவோமோ அப்படி அவர்களுக்காகவும் நாட எங்களுக்கு அருள்புரி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
30 Come to me as Buddha.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org