W36. அன்பு மணிகளினாலான மாலையைக் கொண்டு பிரார்த்திக்கின்றேன். (Whispers from Eternity - Tamil & English)
36. அன்பு மணிகளினாலான மாலையைக் கொண்டு பிரார்த்திக்கின்றேன்.
பக்தியினால் கோர்க்கப்பட்ட என் அன்பு மணிகளினாலான மாலையைக் கொண்டு என் பிரார்த்தனைகளை ஜபிக்கின்றேன். கடவுள், பேருணர்வு, பிரம்மம், கிறிஸ்து, ஆதிசங்கரர், ஸ்ரீ கிருஷ்ணர், புத்தர், முகம்மது நபி என எந்த ஒரு நாமத்தையும் நான் குறிப்பிட்டுப் பற்றிக் கொள்வதில்லை; ஏனெனில் இவையாவும் உன் நாமங்களே. நீ பல நாமங்களை விரும்பி ஏற்பதை நான் அறிந்ததனால், சில சமயங்களில் நான் இவை எல்லாவற்றையும் சேர்த்து விளிப்பதும் உண்டு.
பன்னெடுங்கால மேடையில் நடக்கும் உன் பிரபஞ்ச நாடகங்களில், அதில் தோன்றும் உன் எத்தனையோ விதமான பாத்திரங்களில், நீ பல்வேறு நாமங்களினால் அழைக்கப்படுகிறாய்; ஆயினும், நீ இடையறாத இன்பம் எனும் என்றும் மாறாத ஒரு பெயரைக் கொண்டுள்ளாய் என்பதை நான் அறிவேன்.
நான் உன்னுடன் பலமுறை இணைந்து நடித்தும், உன்னுடைய கானங்களைப் பாடியுமுள்ளேன். எல்லா ஜீவனங்களுக்கும் ஆதாரமான உன் நெஞ்சகக் கடலில், ஒரு சிறுதுளி உயிரான என்னைக் காத்துப் போஷித்து வந்துள்ளாய். பிரிவெனும் குளிர்காலம் முடிந்து நான் உனைநாடி வீடு திரும்பும் போதெல்லாம், பல நூற்றாண்டுகளாய் அளாவிய உன் இதமான ஸ்பர்சங்களை நான் நினைவுகூர்கிறேன். மீண்டும் இந்தப் பகல்வேளையில் உன்னுடன் இணைந்து நடித்து உன் கீதங்களைப் பாடுகின்றேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
36 Prayers on the beads of love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org