W202. என் பார்வையை உன்மீதன்றி வேறெந்தபக்கத்திலும் செலுத்தமாட்டேன். ஆரோக்கியம்-நோய் ஆகிய இருமைகள் கனவென்று நான் அறியுமாறு செய். (Whispers from Eternity - Tamil & English)
202. என் பார்வையை உன்மீதன்றி வேறெந்தபக்கத்திலும் செலுத்தமாட்டேன். ஆரோக்கியம்-நோய் ஆகிய இருமைகள் கனவென்று நான் அறியுமாறு செய்.
நான் ஓர் புனித சபதம் செய்கின்றேன்! என் அன்பின் பார்வையை உன் இடையறாத நினைப்பின் தொடுவானத்தில் இருந்து ஒருபோதும் கீழ்நோக்கிச் செலுத்தமாட்டேன். என் மேனோக்கிய கண்களின் காட்சியை ஒருபோதும் கீழிறக்க மாட்டேன்; அதனை உன் மேலல்லாது வேறெதன்மேலும் வைக்க மாட்டேன்! என் மனதை ஒருக்காலும் உன்னை நினைவுறுத்தாத எதனை நோக்கியும் திருப்பமாட்டேன்! கெட்டகனவு போன்ற அறியாமை தீண்டிய செயல்களினை நான் வெறுப்பேன். நற்காரிய சாதனைக் கனவுகளை நான் நேசிப்பேன். அனைத்து நல்லவைகளின் கனவுகளையும் நான் நேசிப்பேன், ஏனெனில் அவை உன் கனவுகள் என்பதால்.
நான் பல கனவுகளைக் காண்பேன், ஆனால் நான் உன்னில் விழிப்புற்று எக்கணமும் உன்னையே நினைத்திருப்பேன். என் ஆன்மபீடத்தில் எரியும் புனித வேள்வித்தீயான இடையறாமல் தொடரும் நினைவில், நான் உன் திருமுகத்தை என்றும்-விழித்திருக்கும் என் அன்பின் கண்களினால் தொடர்ந்து தரிசிப்பேன்.
உன் கருணையால், ஆரோக்கியம்-நோய், வாழ்வு-சாவு ஆகியவை கனவென்று நான் அறிகிறேன். என் நல்ல கனவுகளின் கனவு-கதை முடிவுற்று, பிரபஞ்ச ஓவியம் வரையப்பட்ட மாயத்திரைக்குப் பின்னால் விழிப்புறும்போது, நீ மட்டுமே ஒரே பேருண்மை எனக் கண்டுணர்வேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
202. I shall ne'er turn my gaze away from Thee. Make me see that health and sickness both are dreams.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org