W123. தெய்வ மானே, நான் என் ஆன்மக் காட்டில் உன்னை வேட்டையாடிப் பிடிப்பேன். (Whispers from Eternity - Tamil & English)
123. தெய்வ மானே, நான் என் ஆன்மக் காட்டில் உன்னை வேட்டையாடிப் பிடிப்பேன்.
தெய்வ மானே, நான் என் சுயநல ஆசைகளினாலான ஈட்டிகளைத் தாங்கிக்கொண்டு உன்னைப் பிடிக்க உன் பின்னால் ஓடினேன். நீ தப்பி ஓடிவிட்டாய்! நான் பலத்த சத்தத்துடன் கூடிய பிரார்த்தனைகளாலான விமானத்திலேறி உன்னை விடாமல் பின்தொடர்ந்தேன். அது என் மேலுங்கீழுமான சஞ்சலமெனும் பூமியில் இடித்து நொறுங்கி விழுந்தது. அந்த பயங்கரமான ஆரவாரம் உன்னை என்னிடமிருந்து துரத்தியடித்தது! என் கவன ஒருமுகப்பாடென்னும் வில் அம்புடன் உன்னை நாடி மறைவாக ஊர்ந்து பின்சென்றேன். ஆனால் என் கரமோ நிலைதடுமாற்றத்தினால் நடுக்கமுற்றது, நீ என் பார்வையிலிருந்து குதித்து ஓடி மறைந்துவிட்டாய். உன் பாதங்கள், "பக்தியில்லாமல் நீ வெறுமனே ஒரு அசட்டு வில்லாளனே!" என்று எதிரொலித்தன. நான் உறுதியான பக்தியுடன், தியான அம்பினை வில்லில் பூட்டுகையில், உன் தெய்வீகக் காலடிகள், "உன் மனோ அம்புகளின் வீச்சிற்கு நான் அப்பாற்பட்டவன்; நான் அப்பாற்பட்டவன்!" என மீண்டும் ஒலித்துரைத்தன. பெருங்கலக்கமுற்று இறுதியில், நான் என் தெய்வீக அன்பின் இருதய குகையில் தஞ்சம் புகுந்தேன். ஆஹா! அந்த தெய்வ மானான நீ ஆசையுடன் என்னுள்ளே வந்து புகுந்தாய்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
123 O Divine Hart, I will hunt for Thee in the forest of my Soul.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org