W73. என் கவனத் திசைமுள்ளை எப்போதும் உன்னையே நோக்கித் திருப்பு. (Whispers from Eternity - Tamil & English)
73. என் கவனத் திசைமுள்ளை எப்போதும் உன்னையே நோக்கித் திருப்பு.
இரும்புப்பறவைகளுடன் ஆகாயத்தில் பறந்தாலும், இயந்திரக் குதிரைகளால் இழுக்கப்படும் ரதங்களால் சுற்றிவந்தாலும், ரப்பர் சக்கரங்களால் உருண்டோடினாலும், உள்ளத்தைப் பிளப்பதான சத்தங்கள் செய்பனவற்றின் தாயகமான ஒன்றில் பயணித்தாலும், என் கவனத் திசைமுள், உன்னால் காந்தமயமாக்கப்பட்டு, எப்போதும் தவறாமல் உன்னையே நோக்கி திரும்பும்.
துரதிருஷ்டமெனும் காற்றினால் அடித்து வீசப்பட்டாலும், துன்பமெனும் மழையினால் நனைத்து முழுக்காட்டப்பட்டாலும், சிக்கவைக்கும் செயல்களெனும் சேற்றில் உழன்றாலும், என் வாழ்க்கைப் பயணம் இருள்-மண்டிய பாதைகளில் அங்குமிங்குமென அலைக்கழிக்கப்பட்டாலும், என் மனம் எப்போதும் உன்னையே நோக்கித் திரும்பிக் கொண்டேயிருக்கும்.
என் மனப்படகு, ஆசைகளின் சூறாவளியினால் முடுக்கமடைந்து, திருப்தியடையாத அவாவெனும் கற்பாறைகள் மிகுந்த பகுதிக்கு நகர்ந்து சென்று கொண்டிருந்தது.
எங்கள் ஞானவானில் பிரகாசிக்கும் துருவ நட்சத்திரமே, உன் ஜோதியின் மின்னும் ஒளி என்னை பூரணதிருப்தியெனும் உன் நிரந்தரமான கரைக்கு திருப்பி அழைத்து வந்தது.
என் அன்பின் புறாவானது, விதியின் சுழல்காற்றில் மாட்டிக் கொண்டு தத்தளித்தாலும், விக்னங்களின் பீரங்கிக் குண்டுகள் சுற்றி வீசப்படும் வழியே சென்றாலும், அல்லது அச்சமுறுத்தும் மோகங்களின் அடர்ந்த புகைமண்டலங்கள் வழியே பறந்து சென்றாலும், அது எப்போதும் உன்னையே நோக்கி கவரப்பட வேண்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
73 Keep the needle of my attention ever pointing toward Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org