MCCRF - A global volunteer network

4. ஞானகர்ம சந்நியாச யோகம் - பகவத்கீதை - The Eternal Way

பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
 

THE ETERNAL WAY
The Inner Meaning of The Bhagavad Gita
AuthorRoy Eugene Davis

Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).

பகவத் கீதை நான்காம் அத்தியாயம்

4. ஞானகர்ம சந்நியாச யோகம்

அத்தியாய முகவுரை:

தேவையான கர்மங்களை மட்டுமே செய்ய ஊக்கம் தரப்படும் சாதகன், வாழ்க்கை வளர்போக்கின் முற்றுமுடிவான புரிதல் ஏற்பட கர்மங்களின் மீதான, அவைகளின் விளைவுகளின் மீதான பற்றுகளைத் துறக்க வேண்டும்.

மானுட முழுமையையோ, மகிழ்ச்சியையோ ஏற்படுத்துவது ஆன்மீகப் பயிற்சியின் நோக்கமல்ல. அவைகளால் ஆன்மீக முன்னேற்றம் வழிமாறாதவரை அவைகளை துணைப் பலன்களாக ஏற்றுக்கொள்ளலாம்.

ஆன்மீகப் பயிற்சியின் முக்கிய நோக்கம், வரம்பற்ற கடவுளுடன் ஆன்மாவுக்கு உள்ள உறவை அறியும் வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதற்காகும்.
இந்த அத்யாயத்தில் சனாதன தர்மத்திற்கான ஞானம், பேருணர்வின் இதயமையத்திலிருந்து வெளிப்படுவதாக விளக்கப்படுகிறது.


பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது:
4.1. இந்த சாஸ்வத யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்கு போதித்தேன்; அவர் மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் போதித்தனர்.

உட்பொருள்:
மேலுயர்வான பேருணர்வானது, இந்த ஆன்ம உணர்வு ஞானத்தை தன் வெளிப்பாடான ஒளிக்கும், அதன்மூலம் பிரபஞ்ச மனத்துக்கும் அதன்வழியே கதிர்வீசும் பிராணனுக்கும் அளித்தது.

உரை:
ஏதோ சரித்திர சம்பவத்தைப் பேசுவதுபோல் இந்த ஆரம்ப ஸ்லோகம் தோன்றினாலும் இதனை உள்காட்சி உணர்வால் விசாரித்தறியலாம். பேருணர்வு ஞானம் ஆன்மாவுக்கு அதன் எல்லா அடுக்குகளிலும் அதன் எல்லாவித தள வெளிப்பாடுகளிலும் பூர்வாங்கமானது. இறையொளியின் கதிர்த்துகள்களாக வெளிப்படும் ஆன்மாக்கள், அதன் உற்பத்தியிலேயே பேருணர்வு மற்றும் அதன் வளர்போக்குகளில் பூரணஞானத்தைப் பெற்றுள்ளது.

இங்கு கூறப்பட்டுள்ள பெயர்களின் சொற்ப்பொருளை உள்காட்சியால் ஆராய்ந்தால், இந்த ஸ்லோகத்தின் உட்பொருள் புரியும்.

முற்றுமுழுதான தூய பேருணர்வு வெளியிலிருந்து வெளிப்படுத்தும் ஒரு தூண்டுதல், "பளபளக்கும் கிரணமாக," (விவஸ்வான்) ஒளியாக முதல் புறவய வெளிப்பாடாகக் கிளம்பியது. அதன் மூலத்தினுடைய தன்மைகள் யாவும் இதனிலும் இருந்தன. ஒளி பின் ஒலியாகவும், மனிதனை உற்பத்தி செய்யும் , பிரபஞ்ச மனத்துடன் (மனு, மனஸ், மனிதமனதுக்கு மூலம்) மூல இயற்கையாகவும் பரிணமித்தது. மனிதனின் மனம் மனிதன் அறிந்து, செயல்பட உதவும் பரிவர்த்தனைகளுக்கு களமாகவும், பிரபஞ்ச மனம் என்பது பிரபஞ்ச பரிவர்த்தனைகள் நடைபெறும் களமாகவும் இயங்குகின்றன.
கிரணங்களுடன் வெளிப்பட்ட பிரபஞ்சப் பிராணன், அதாவது இக்ஷ்வாகு, அதன் இயக்கப் போக்குகளை அறியும் ஞானத்தை வைத்திருந்தது. அது ஜடஇயற்கையினை உயிரூட்டி வாழ்விக்கிறது.

பிரபஞ்ச தோற்ற செயல்பாடுகளைப் பற்றிய இந்த நித்யத்தின் யோக ஞானம் இரண்டாவது மற்றும் மூன்றாவது அத்யாயத்தில் விளக்கப்பட்டது. இங்கு மேலும், பேருணர்வின் ஒவ்வொரு அலகிலும் ஞானமே பூர்வாங்கமாக உள்ளது என விளக்கப்படுகிறது. ஞானயோகத்தை புரிந்து கொள்வதானது கர்மயோகத்தைப் புரிந்துகொள்ள உதவும். அது, வியக்த உணர்வுக் களம், பிரபஞ்ச உணர்வுக் களத்துடன் ஒன்றிணையும் தியான யோகத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இது, சமாதி யோக ஒருமை நிலையை அறியவும், திரும்பப் பெறவும் உதவுகிறது.

4.2. இவ்வாறு இந்த உயர்ஞானம் பரம்பரை பரம்பரையாக மேதகு ஞானிகளுக்கு ஊட்டப்பட்டு வந்தது. பின் ஓரிடத்தில், நீண்ட கால இடைவெளியினால் அந்த வரிசை நின்றுவிட்டது.

உட்பொருள்:
மேலே சொல்லப்பட்டதுடன் அதிக வேறுபாடு இல்லை.

உரை:
இந்த ஸ்லோகத்திற்கு ஒரு உட்பொருள் உண்டு. மனம் (மனு) மற்றும் ஸ்தூல, சூக்ஷம உடலுக்கு சக்கரங்களின் (மேதகு ஞானிகள்) வழியாகப் பிராணனை (இக்ஷவாகு) ஊட்டி சக்தியூட்டுவதான பேருணர்வின் ஒளிக்கிரணங்கள் சூரியனைப் (விவஸ்வான்) போன்ற ஒளியாகப் புருவமத்தியில் காணப்படுகிறது.

ஆத்மாவின் கவனம் வெளியே ஓடும்போதும், விழிப்புணர்வு பற்றுதலால் கலக்கமுறும்போதும் ஒருவனின் உள்ளுண்மை தற்காலிகமாக நினைவிழந்து பின் மீண்டும் நினைவூட்டப்பட வேண்டியுள்ளது.

பகுதிச் செயல்கள் முழுமைச் செயல்களைப் பிரதிபலிப்பதால், பேருணர்வு ஞானத்தின் ஓட்டத்தை, அதன் வளர்போக்கு வெளிப்பாடுகளுடன் வியக்தபாக உணர்விலும் விவேகித்து அறியலாம்.

லாஹிரி மகாசாயா, இந்த ஸ்லோகத்துக்கு உரை கூறுகையில், பேருணர்வு ஞானத்தின் ஓட்டம், வியக்த தளத்தில் உள்ஆத்மாவிடமிருந்து உள் ஒளிக்கு, பின் அது நிஸ்சலனப் பிராணனிடமிருந்து ஆசையற்ற அமைதி நிலைக்கு ஒடி உணர்த்தப்படுகிறது என்பார்.

சாதகன் ஆன்ம அமைதியில் திளைக்கும்போது பிராணன் நிஸ்சலனம் பெற்று விழிப்புணர்வுத் தளத்தில் இயல்பாக நடைபெறும் அலையாட்டங்களும் மாற்றங்களும் அமைதியுற்று, அவைகளைத் தூண்டிவிடும் முடுக்கிகள் செயலிழந்து, உண்மையான ஆன்ம ஒளி பிரகாசிக்கிறது.

பல ஆன்மாக்கள் விழிப்புணர்வில் கலக்கமுற்று, மனம் மற்றும் ஜடங்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அவர்களைப் பற்றியும் இறைமையைப் பற்றியும் மறந்து விடுகிறார்கள்.
இருட்டு கலியுகத்தில் அகவய உண்மைகள் சிலருக்கே புரிகின்றன
இரண்டாவது ஏற்ற துவாபர யுகத்தில் மக்கள் தொகையில் பாதிப்பேருக்குப் புரிகின்றன
மூன்றாவது ஏற்ற திரேதா யுகத்தில் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பாகம் பேருக்குப் புரிகின்றன
இறுதி நான்காவது ஏற்ற அடுக்கில், அதாவது, ஒளியூட்ட சத்ய யுகத்தில் கிட்டத்தட்டமாக எல்லோருக்கும் புரிகின்றன.

எல்லா காலங்களிலும் இந்த நான்கு யுகங்களின் பிரதிநிதிகள் நிரவி இருக்கிறார்கள். எல்லா காலங்களிலும்
சில ஆன்மாக்கள் உண்மைக்குக் கண் மூடியுள்ளன
சிலர் மூடியும் மூடாமலும் உள்ளனர்
பலர் கண் திறந்திருக்கிறார்கள்
சிலரோ முழுவதும் விழித்துக் கொண்டவர்களாய் இருக்கிறார்கள்.

சூரியக் குடும்பத்தின் காலக்கணக்கு ----- காலச் சக்கரம் 12000 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1200, 2400, 3600, 4800 எனும் பிரிவுகள் கொண்ட நான்கு வரிசைக் காலத்தால் ஆகி பின் மீண்டும் இன்னொரு 12000 ஆண்டுச் சுற்று வரும்.

படம் பார்க்க.



ஏறுவட்டத்தில் மனிதர்கள் தங்களின் தெளிவு கூடப்பெறுவதாகவும், இறங்குவட்டத்தில் மனிதர்கள் தங்களின் குழப்பம் கூடப்பெறுவதாகவும் விண்ணரசாள்வோர்களால் வழிநடத்தப்படுகின்றனர். ஆனால். மனிதர்கள் வெளி ஆரவாரத்திற்குத் தொடர்பின்றி தங்களின் ஆன்ம விழிப்புணர்வு விருத்திக்கு ஏதுவாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். ஒரு கிரியா யோகியின் இயல்பான ஆன்மஞானத் திறவுக்கும், நரம்பு மற்றும் மூளையின் தகவமைப்புக்கும் உயர்நுட்பத் தியான வழிமுறைகள் அவனைத் திறனேற்றும்.

பேருணர்வு ஞானம் எவ்வாறு அதன் மூலத்திலிருந்து படிப்படியாக அதன் வெளிப்பாடுகளுக்கு வெளிப்படுகிறதோ, அவ்விதமே ஒரு தேர்ந்த, ஞானத்தில் நிலைபெற்ற ஆசிரியர் அவருடைய மாணவருக்கும், அவர் முழுஞானம் பெறுகையில் அவர் வழியாக ஒரு பரம்பரை வரிசைக்கும் இறக்க முடியும்.


4.3. அதே புராதன யோகம் உனக்கும் சொல்லப்பட்டது. ஏனென்றால், நீ என் சீடனும் சிநேகிதனும் ஆவாய். இது உண்மையில் உயரிய ரகசிய ஞானம்

உட்பொருள்:
விவேகித்து விசாரணை செய்யாதவனுக்குக் கிட்டாத பேருணர்வு மற்றும் அதன் வளர்போக்குகள் பற்றிய ஞானம், சாதகன் அதனைப் பெறத் தயாரானவுடன் உடனே அவனுக்குச் சுயவிளக்கம் ஆகின்றது.

அர்ஜுனன் சொன்னது.
4.4. நீ இந்தப் புராதன மாந்தர்களின் காலத்திற்குப் பின் பிறந்தவன். நீ அவர்களுக்கு இந்த ஞானத்தைப் போதித்ததாகச் சொல்வதை நான் எப்படிப் புரிந்துகொள்வது?

உரை:
இந்நிலையில் சாதகன் சுதாரிப்புப் பெற்றவனாய் இருந்தாலும், உண்மை ஆன்மா என்பது ஒளி, மனம், பிராணனின் வெளிப்பாடுகள் ஆகியனவற்றிற்குப் பின் வந்ததாகத் தவறாக நினைக்கிறான்.

4.5. நான் பலவித வெளிப்பாடுகளில் தோன்றியுள்ளேன். நீயும் அவ்வாறே. அனைத்து வெளிப்பாடுகளையும் நானறிவேன். ஆனால், உன்னுடையதை நீ அறியவில்லை.

உட்பொருள்:
வியக்த உணர்வும் வியக்த ஆன்மாவும் எப்படியோ அவ்விதமே சிறப்புயர்வான பேருணர்வு எப்போதும் வெளிப்படு தோற்றங்களுடன் உறவாட்டத்தில் உள்ளது. சிறப்புயர்வான பேருணர்வு அதனை அறியும் புலனுணர்வு கட்டுண்ட ஆன்மாவோ அவ்விதம் அறியவில்லை.

உரை:
சிறப்புயர்வான பேருணர்வு அதன் பலவித வெளிப்படு தோற்றங்களுடன் எப்படி உறவு கொண்டுள்ளதோ, அதே போல ஆன்மா மனதுடனும் ஜடத்துடனும் கொள்ளும் உறவும். வேறுபாடு என்னவென்றால், சிறப்புயர்வான பேருணர்வு இந்த உறவு காரணமாக தன்னைக் குறுக்கிக் கொள்வதில்லை. பிரபஞ்ச வளர்போக்குகளை இயக்கிக்கொண்டே அது தன் உள்பொதிக் கூறு மாறாமலேயே அனைத்திலும் ஊடுருவுகிறது.

ஆன்மாக்களும், வியக்த உணர்வுப் பரப்பும், ஆணவம், மயக்கம், காட்சிப் பிறழ்வு காரணங்களால் மனம் மற்றும் ஜடங்களுடன் மிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. எனவே, அவர்களின் கால மற்றும் இட நினைவுகள் ஆழ்மனத்தின் மறைவிடங்களில் மறைந்துள்ளன.

4.6. நான் பிறப்பற்றவன் என்றாலும், என் உண்மை ஆன்மா அழிவற்றது என்றாலும், நான் எல்லா படைப்புக்களின் முதல்வன் என்றாலும், என் சொந்த இயல்பில் இருந்துகொண்டு, என் ஆற்றலினால் என்னைத் தோற்றத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறேன்.

உட்பொருள்:
மேலுயர் பேருணர்வு பிறக்காதது, அழியாதது, அனைத்தையும் நியமிப்பது என்றாலும், பரமாகிய அதன் தன்மையில் மாறாமல் இருந்துகொண்டு, அதன் வரம்பற்ற உட்பொதிந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அவ்வாறு செய்வதை அது இயல்பாகக் கொண்டுள்ளது.

உரை:
மேலுயர் பேருணர்வு, ஒளியாகவும், ஓம் அதிர்வலையாகவும் நுண்ணறிவுடன் மூல இயற்கையைத் தோற்றுவிக்கிறது. இதிலிருந்து வெளிப்படும் ஒளி வியக்த ஆன்மாவாகவும், வியக்த உணர்வாகவும் வெளிப்படுகிறது. மூல இயற்கையின் மறைப்புத் தன்மை பிரபஞ்ச வெளிப்பாடுகள் நிகழ ஏதுவாகிறது.

4.7. எப்போதெல்லாம் நீதி மங்கி, அநீதி ஓங்குகிறதோ, அப்போதெல்லாம் நான் பிறப்பெடுக்கிறேன்.
4.8. துஷ்டர்களைத் தண்டிக்கவும், சிஷ்டர்களைக் காக்கவும் , நீதியை நிலைநிறுத்தவும் நான் காலந்தோறும் பிறப்பெடுக்கிறேன்.

உட்பொருள்:
எப்போதெல்லாம் நீதி மங்கி, அநீதி ஓங்குகிறதோ, அப்போதெல்லாம் மேலுயர் பேருணர்வு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள உந்தப்படுகிறது. ஆக்கபூர்வச் சூழலை காக்கவும், ஆர்வமுறும் ஆன்மாக்களைக் காக்கவும், ஒழுங்கான ஆன்மதிறவுக்குத் தடை ஏற்படும்போதும், இசைவான ஆக்கபூர்வச் செயல்களுக்காகவும் அது தன்னை தேவைப்படும் போதெல்லாம் வெளிப்படுத்திக் கொள்கிறது.

உரை:
வியக்த உணர்வு வெளியிலும், கிரகங்களின் உணர்வுவெளியிலும், எப்போதெல்லாம் பரிணாமத்தின் தூண்டுதல் எதிர்ப்பை சந்தித்து, ஒழுங்கின்மை அதிகரிக்கரிதோ, அப்போதெல்லாம் தூய பேருணர்வில் ஒரு ஆன்மீகத் தூண்டுதல் தோன்றி, பரிணாமத்தின் வேகத்தை சீரமைக்கிறது. ஆன்மாக்களையும் இயற்கையையும் வளர்க்கவும், பரிணாமச் செயல்களுக்கு ஏற்பட்டத் தடைகளை நீக்கவும், ஆதரவான செயல்களைத் தக்கவைக்கவும் இது நிகழ்கிறது.

எல்லா உயிரினங்களும் பகிர்ந்துகொள்ளும் கூட்டு உணர்வுவெளியில், பரிணாமம் என்பது வளர்போக்கு உடையதும், ஏற்படுத்திக் கொண்ட காரணத்தை நிறைவேற்றுவதுமாகவும் இருக்கும். முரண்படுவேளைகளிலும் மேலுயர் ஆன்மாவான இறைவனே முழுஆதிக்கமும் உடையவன். தற்கால சகாப்தத்தில், பரிணாம ஒட்டம் கூட்டு ஆன்ம விழிப்புணர்வாகவும், "பிரபஞ்ச அவதாரமாகவும்" (universal avatar) வெளிப்படுகிறது. அது மனிதர்களிடையேயும் இயற்கையிடத்தும் இறையுணர்வு வெளிப்படுவதைத் தெளிவாகக் குறிப்பால் உணர்த்துகிறது.

காலந்தோறும் ஒளியூட்டம் பெற்ற ஆன்மாக்கள்
சனாதன உண்மைகளைப் புதிதாகக் கற்பிக்கவும்
ஆக்கபூர்வ காரியங்களை ஆற்றவும்
வாழ்க்கை என்றால் எப்படி இருக்கும் எனப் பிறருக்கு எடுத்துக்காட்டவும்
கூட்டு உணர்வுக்கு வளர்ச்சி தரும் மாற்றத்திற்கு உத்வேகம் தரவும், உயிரோட்டத்துடன் நம்மை அழிவிலிருந்து மீட்கும் ஆன்மசக்தியை அளிக்கவும்
உலகத்தில் தோன்றுகின்றனர்.

இவர்களின் இருப்பை உணரும் சாதகன், தன் ஆன்ம வளர்ச்சிக்கு தன் பொறுப்பை விடாதிருக்க வேண்டும். அறிவுப்பூர்வமான காரியமாற்ற வாய்ப்பு ஏற்படும் போதும் போலி திருப்தியில் திளைப்பது முட்டாள்தனமானது.
அதுபோலவே, தன் இயலாமையை முன் நிறுத்தி ஏதேனும் ஒரு அவதாரம் அவனைக் காப்பாற்ற வந்து எல்லாம் சரிசெய்துவிடும் என நம்புவதும் முட்டாள்தனம்.

நமக்கு அறிவு அளிக்கப்படுவதன் நோக்கம் அதைக் கொண்டு நாம் கற்கவும், கற்றதைச் செயல்படுத்தவும் முடியம் என்பதற்காகவே. இறைவனைப் பற்றியதும் வாழ்வின் வளர்போக்கினைப் பற்றியதுமான எல்லா அறிவும் ஆதாரத்துடன் நம்பகத்தன்மை கொண்டவர்களிடமிருந்தும், நம் நிரந்தர உட்கிடை மையத்திலிருந்தும் தானாக நமக்குக் கிடைக்கும்படி உள்ளன.

4.9 என் தெய்வீக வெளிப்பாடுகளையும் செயல்பாடுகளையும் உள்ளவாறு அறிந்தவன், உடலை விட்டபின் மீண்டும் பிறப்பதுமில்லை. அந்த ஆன்மா என்னிடமே வருகிறது.

உட்பொருள்:
மேலுயர் பேருணர்வை அதன் வெளிப்பாடுகளுடனும் செயல்பாடுகளுடனும் நன்கு புரிந்து கொண்டவன், பிசிறற்ற முழுமைப் பேறை நிலைக்கச் செய்துகொண்டு பிறப்பு--இறப்பு மயக்கங்களிலிருந்தும் மாயத்தோற்றங்களிலிருந்தும் விழிப்புப் பெறுகிறான்.

4.10. என்னை ஒருவனையே மனமொருமித்து, புகலிடமாய்க் கருதி, பேராசை, அச்சம், கோபம் ஆகியன அழிந்து, அறிவின் ஒழுங்கால் தூய்மை பெற்று என்னுடைய அறிவு நிலைக்கு உயர்ந்தவர்கள் பலர்.

உட்பொருள்:
தூய பேருணர்வில் நினைவு குவிந்து, அதிலேயே நிலைக்கச் செய்து, பல ஆத்மாக்கள் ஆன்ம விழிப்புணர்வுக்குத் தடையாயிருப்பவைகளை வென்று, வாழ்க்கை உண்மையில் அறிவு நிலைக்கச் செய்ததால் பிழையகற்றி, முற்றுமுடிவான விடுதலையை உணர்ந்தனர்.

உரை:
சுய உணர்வுக்கும் அதன் தன்மைகளுக்கும் நாம் அடையாளப்படுத்திக் கொண்டு அதைத் தேர்ந்தெடுத்தால், ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் இடத்தில் நாம் ஆணவமைய பங்காற்றுகிறோம். முற்றுமுடிவான பதத்திற்கு நம் கவனத்தைச் செலுத்திடத் தேர்ந்தெடுத்தால், நாம் நம்மைக் கட்டுகளிலிருந்து விடுவிக்கும் விழிப்புணர்வு பெற்று, முழு அறிவும் விடுதலையும் அனுபவிக்க வசதி செய்து கொடுக்கிறோம்.

4.11. எந்தெந்த வழியில் சாதகர்கள் என்னைச் சரணடைந்தாலும், நான் அவர்களுக்குக் கருணை பொழிகிறேன். எங்கும் உள்ள சாதகர்கள் [பல மனோபாவங்களுடனும் பல வழிகளிலும்] என் பாதையையே பின்பற்றுகிறார்கள்.

உட்பொருள்:
எவ்வாறு இறைவனை நோக்கித் திரும்பினாலும், இறைவன் கருணை பொழிகிறார். முயற்சியின் மற்றும் பயிற்சியின் வெளித்தோற்றம் எப்படியிருப்பினும், சரியான தீர்மானத்துடன் அறிவுடனும் பக்தியுடனும் உள்ள ஆன்மாக்கள் சனாதன தர்மத்திற்கு உட்படுகிறார்கள்.

உரை;
பேருணர்வின் இருப்பை நாம் நம் திறனுக்கேற்பவே புரிந்து முன்னோக்குகிறோம். ஆன்மாவைக் காண நம் சுயதேடலின் புதிதில் இறைவன் என்றால் என்னவென்ற மரபான கருத்தை நாம் கொண்டிருக்கிறோம். இறைவனை அறியும் நம் முயற்சிகள் நம்முடைய நிர்ப்பந்திக்கப்பட மனத்தோற்றங்களாலும் முதிராத, உணர்ச்சி ததும்பிய ஆர்வங்களாலும் மட்டுப்படுத்தப் படுகின்றன.

இருந்தாலும், நாம் நேர்மையாக இருந்து, உயர் உண்மைகளுக்கு நாம் மனம் கொண்டால், நமக்கு விழிப்பு நிலை ஏற்படுத்தி,
ஆன்ம வளர்மாற்றத் தூண்டல்களாக
தினசரி வாழ்சூழலுக்கு ஆதரவாக
தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுவதான கருணையின் செயல்களுக்கு நாம் திறவாகிறோம்.

4.12. தங்களின் கர்மங்களுக்கு இப்புவி வாழ்க்கையிலேயே பலனை விரும்புவோர் தேவதைகளுக்கு பலியிடுகிறார்கள். அவைகளின் பலன்கள் உடனடியாக விளைபவையே.

உட்பொருள்:
தங்களின் ஆசைகளின் உடனடி திருப்தியை இப்புலனறி வாழ்விலேயே வேண்டுவோர் இயற்கையின் படைப்பு விதியில் உடனடிப் பலன் தருபவைகளைக் கற்று உபயோகிக்கின்றனர்.

உரை:
தேவதைகள் (தேவர்கள்) என்பவர்கள் பிரபஞ்ச இயக்கத்தில் கர்மங்களுக்குப் பலனை முடிவு செய்பவர்கள். நம் ஆசைகள் நிறைவேறும்போது நாம் அறிந்திருக்க வேண்டியதென்னவென்றால், இத்தேவதைகளுக்கு உசிதமாக நாம் நம்மை வைத்துக் கொள்வதே.

நம்மைக் குறுக்கித் தளர்விக்கும் கருத்துகளிலிருந்து மனதை விடுவிப்பதாலும், ஆக்கபூர்வ மனக்கிரியைகளாலும், தேவைப்படும்போது வளர்ப்போக்காக செயல்படுவதாலும் நம் ஆசைகள் எளிதாக நிறைவேறும், நம் தேவைகள் தானாக பூர்த்தியாகும்.

இறையுணர்விற்கு விழிப்புணர்வடைதல் உள்ளிட்ட நம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக திறமையாக இயங்குவதற்கு நாம் கற்கவேண்டும்.
நம் விருப்பங்களும் செயல்களும் சுயநலத்தைச் சுற்றியதாக இருந்தால், நாம் உலகாயத இருப்பில் நம்மை வசதியாக்கிக் கொள்ளலாம், ஆனால் இறைஞானமும் ஆன்ம நிம்மதியும் இருக்காது.
நம் ஆன்மீக இலக்கை அடைய நாம் உலகாயத உறவுகளிலிருந்து முற்றுமாக விடுவித்துக்கொள்ள வேண்டியதில்லை. அது முடியவும் முடியாது. ஆன்மீக வளர்ச்சியை முதன்மையில் வைப்பதும் இயல்பான ஒழுங்கான வாழ்வு வாழ்வதை உடன்சேர்ப்பதும் நாம் செய்யத் தகுந்தது.
உலகாயத வாழ்வினை வாழத் தேவையான ஆக்கபூர்வத் திறமைகளான
கற்பனை
சங்கல்பம்
நம்பிக்கையின் வளர்ச்சி
புதிய மற்றும் மாற்றுச் சூழல்களை முன்னோக்குதல் மற்றும் பொருந்திக் கொள்ளுதலுக்குத் தேவையான விழிப்புணர்வு விரிவாக்கம்
ஆகியனவற்றை ஆன்மீக வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.

நான் ஏற்றுக்கொண்ட கிரியா யோக மார்க்கத்தின் முதல் குருவான மகாவதார் பாபாஜி, “புலனூட்ட விழிப்புணர்வு நிலையில் உள்ள மனித இனத்தில் சிலரே, இறையுண்மை பூமியின் தரைதளத்தையும் நிறைத்திருப்பதாக அறிகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.
நாம் இந்த உலகில் சுதந்திரமாக வாழவேண்டும். முழு விடுதலை என்பது ஆன்ம விடுதலையையும் உள்ளடக்கி இருத்தல் வேண்டும்.

4.13. இயற்கை இயங்குதளத்தில் குணங்கள் மற்றும் செயல்களின் பிரிவுக்கேற்ப நான்கு அடுக்கு மனித முயற்சிப்போக்குகள் என்னால் படைக்கப்பட்டன. அவைகளின் படைப்பாளி நான் என்றாலும் அவைகளைக் கடந்து, செயல்களுக்கும் மாற்றங்களுக்கும் அப்பாற்பட்டு நான் இருக்கிறேன் என அறி.
உட்பொருள்:
சத்வ, ரஜஸ், தமஸ் குணத் தன்மைகள், கர்மா, மற்றும் வியக்த உற்பத்திக் காரணிகளுக்கேற்ப நான்கு வகை மனித மனோதேக உட்கூறு வகைகள் விளக்கப்படுகின்றன. மேலுயர் பேருணர்வினால் இவை சாத்தியப்பட்டிருந்தாலும், அது இவைகளினின்றும் விலகியிருக்கிறது.

உரை:
நான்கு வித மானுட நடத்தைகள் அனைத்தும் நான்கு காலச் சுழற்சியில் அவ்வக்கால தனிமனித, மன, மற்றும் ஆன்மீகக் கடமைகளைப் பூர்த்தி செய்வதற்குரியதாகும். அவைகள் தனிமனித கர்மவினைக்கேற்ப இயற்கையின் குணாதிக்கங்கள் எவ்விதம் வெளிப்பாடு மற்றும் மாற்றம் கொள்கின்றன என்பதனைப் பொறுத்து அமையும்.

தாமஸ குணங்களால் அக்கறையின்மை மற்றும் மந்தத்தன்மை விளையும்போது, மனிதர்கள் அடிமட்ட வாழ்நிலையை மேற்கொள்ளுமளவே திறனுடையவர்களாகிறார்கள். சமுதாயத்தில் பூமியை நிறைத்திருக்கும் பெரும்பாலோர் இம்மாந்தர்களே. பகவத் கீதை எழுதப்பட்ட வரலாற்றுக் காலத்தில் இம்மாந்தர்களை சூத்திரர்கள் ஆகிய தொழிலாளர் ஜாதி என அழைக்கப்பட்டனர்.
தாமஸ மற்றும் ராஜஸ குணக்கலப்பு மேலோங்கியிருக்கும்போது மனிதர்கள் சுய சிந்தனை மற்றும் சுயசெயல்பாட்டுத் திறன் பெறுகிறார்கள். இத்தன்மை திட்டமிடுவோர், அமைப்பாளர்கள் மற்றும் செயல்படுத்துவோரிடம் வெளிப்படுகிறது. இவர்களை வைஸ்யர்கள் என்கிறார்கள்.

ராஜஸ மற்றும் சாத்வீகக் குணங்கள் மேலோங்கும்போது பொது நன்மைக்குரிய மாண்புகளையும் சூழலையும் தக்க வைத்துக் கொள்ளும் செயல்வேகம் மனிதர்களிடம் காணப்படுகிறது. சமுதாயத்தில் இவ்வகை மனிதர்களை அரசு சார்ந்த பிரதிநிதிகளிடமும், கல்வி, அறிவியல், கலைகள், மதம், தத்துவம் ஆகியன சார்ந்த பிரதிநிதிகளிடமும் காணலாம். இவர்கள் க்ஷத்ரியர்கள். அர்ஜுனன் இவ்வகையைச் சேர்ந்தவர்.

சாத்வீகம் மேலோங்கும்போது, மனிதர்கள்
உள்காட்சி மிக்கவர்களாகவும்
நுண்ணறிவு ஆற்றல் மேலோங்கியவர்களாகவும்
ஆன்மீகத் தன்மைகள் தெள்ளத் தெளிவாகப் பெற்றவர்களாகவும்
இருக்கிறார்கள்.
இத்தகைமைகளை கருத்தியலாளர்கள், ஞானதிருஷ்டியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், முக்கால தீர்க்கதரிசிகள், ஒளியூட்டம் பெற்ற தத்துவவாதிகள், ஆன்மீக நெறிப் பாதுகாவலர்கள் மற்றும் அவைகளை கற்பிப்போர் ஆகியோரிடையே காணலாம். இவர்கள் பிராம்மணர்கள்.

இந்த நான்கு வகைப்பாடுகளும்
குணக் கலப்பு
பரம்பரை முன்கட்டமைப்பு
நுண்ணறிவு வேறுபாடு
ஆன்ம விழிப்புணர்வு
தனிமனித கர்ம நிலைப்பாடுகள்
ஆகிய காரணங்களால் விரிவான பரப்புள்ளவை.

மனக்கோளாறு இல்லாதிருந்தால் தவிர, மக்கள் மாறுவதற்கும், கற்பதற்கும், வளர்வதற்கும் திறனுடையவர்கள். ஆகையால், தானே தேர்ந்தெடுத்தல் மற்றும் சுயநடத்தையால் தவிர யாரும் ஒரு குறிப்பிட்ட சமூக வகுப்பிற்கோ வாழ்வு நிலைப்புள்ளிக்கோ கட்டிவைக்கப்பட்டவர்கள் அல்லர்.

ஒரு ஆன்மீகப் பாதையில் உள்ள சாதகன், இயற்கைப் படைப்பின் தன்மைகளின் ஆதிக்கங்களை வெளிப்படுத்திக்கொண்டே அவரவர் உணர்ச்சி, மனம், நுண்ணறிவு, நெறி மற்றும் ஆன்மீக வளர்ச்சி ஆகியவைகளுக்குத் தொடர்புடைய தனிநபர் தன்மைகளையும் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறான்.

தாமஸ குண ஆதிக்கம் பெற்ற சாதகர்களுக்குக் கற்பிப்பது ஏன் கஷ்டமாக இருக்கிறது என்றால் அவர்களின் கலங்கிய நுண்ணறிவும் ஆர்வமற்றுச் செய்யும் அலட்சிய முயற்சிகளும்தான் காரணம். அவர்களில் மதநம்பிக்கை உடையவர்கள் தத்துவங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றனரே அன்றி கற்பதிலோ அதன்படி நடப்பதிலோ ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் தியானம் செய்தால், சுரத்தின்றி, உணர்வு விழிப்பற்ற நிலைகளுக்கு ருசிகண்டு, சுகம் மற்றும் மனத்திருப்திகளைத் தரக் கூடியதான இன்பகர உணர்வெழுச்சிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

தாமஸ ராஜஸ கலப்பு உள்ளவர்கள் அதிசய நடப்புகளில் வசியப்பட்டு, அபூர்வ மற்றும் மர்ம நிகழ்ச்சிகளில் விருப்பார்வம் கொண்டு, தவறான நம்பிக்கைகளால் ஆன மனமயக்கங்களாலும் காட்சிப்பிழைகளால் ஏற்பட்ட மாயக்காட்சிகளாலும் குழம்புகின்றனர். அவர்கள் தியானம் செய்தால், செயற்கையான உட்காட்சிகளாலும், போலியான அடையாளக் குறிப்பறிவுகளாலும், மனோபிம்பங்களாலும் அனுபவங்களாலும் ஈர்க்கப்படுகின்றனர்.

ராஜஸ சத்வ குணக்கலப்பு உள்ளவர்கள் துடிப்பான ஆற்றலோடு சுயவழிகாட்டலில் சுயதேவைப் பூர்த்தி செய்துகொள்ளத் தெரிந்தவர்களாயிருக்கிறார்கள். மத, தத்துவச் சார்புடையவர்கள் அதில் வெறித்தனம் உடையவர்களாயிருக்கிறார்கள். தியானம் செய்தால், அதைச் செய்கையில் பலவந்தமாக, விளைவு கொடுத்தேயாகுமாறு கட்டாயப்படுத்தி, அதீத மகிழ்வு எழுச்சி நிலைகளை உருவாக்குவதும் அல்லது உள்காட்சி நிலைகளுக்குத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதுமாய் இருக்கிறார்கள். தியான வழிமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவைகளை முதன்மைப்படுத்தி, அவற்றைக் கற்பதில் கவனமும், சக்தியையும் செலுத்தி, அவைகள் உண்மையான இலக்கை அடைய உதவும் படிநிலைகளே என்பதை நினைவுகூர மறந்து விடுகிறார்கள்.

சத்வகுண சாதகர்கள் நுண்ணறிவுத் திறமைகளையும், ஆன்ம குணங்களையும், அதன் திறன்களையும் வளர்த்துக் கொள்வதையே முழுநோக்கமாகக் கொண்டுமுயற்சிக்கிறார்கள். அவர்களின் விருப்பார்வம் ஓளியூட்டம் பெறுவதிலும் கர்மத்தளைகளிலிருந்து விடுவித்துக் கொள்வதிலும்தான். அவர்கள் தியானம் செய்யும்போது இறைவனுடன் உள்ள தனது உறவிலும் இயல்கடந்த உண்மைகளில் உள்ள உறவிலும் மனமொருமிக்கிறார்கள்.

மேற்கூறிய நால்வகை சாதகர்கள் அனைவரும்
அதிக தகவல் ஊட்டப்படுவதாலும்,
அறிந்ததை செயல்படுத்துவதாலும்,
முழுமை அடைய இச்சிப்பதாலும்,
ஆக்கபூர்வ வாழ்முறையாலும்,
நன்னடத்தை உள்ளோரை முன்மாதிரியாகக் கொள்வதாலும்,
அவர்களின் திறனை இயன்றவரைப் பயன்படுத்தி அவர்களின் சாமர்த்தியத்தினை உச்சியளவு வரை எட்டச்செய்ய வேண்டும் என்ற லட்சிய வாழ்வாலும்,
அவர்களின் ஆன்மபயிற்சியினையும் சூழலையும் முன்னேற்றலாம்.

4.14. செயல்கள் என்னை மாசுப்படுத்துவதில்லை. அவைகளின் பலன்களில் எனக்கு ஆசையும் இல்லை. [உண்மையாக] என்னை அறியும் சாதகன், செயல்களால் கட்டுப்படுத்தப் படுவதில்லை

உட்பொருள்:
இயற்கையின் தன்மைகளாலோ அல்லது மேலுயர் பேருணர்வின் உள்நோக்கமற்ற ஆக்கபூர்வத் துடிப்புகளாலோ ஆகும் பிரபஞ்சச் செயல்கள் அந்தப் பேருணர்வினைக் கட்டுவதில்லை. ஆன்ம உணர்வினில் நிலைநின்ற சாதகனும் அவ்வாறே செயல்களால் பாதிக்கப்படுவதில்லை.
உரை:
ஆன்ம உணர்வில் அமிழ்ந்திருக்கும்போது, நாம் செய்பவைகளை நம் எண்ணங்களோ உணர்வுகளோ செயல்களோ அல்லது அவைகளின் பலன்களோ எதிராக நம்மை பாதிப்பதில்லை.

4.15. உணர்வு விடுதலைக்கான பேரார்வத்தில் முற்கால சாதகர்கள் இதனை அறிந்து பூரணமான செயலாற்றினர். ஆகவே, அவர்கள் செய்ததைப் போல நீ யோகப் பயிற்சியில் ஈடுபடு.

உரை:
ஆன்மாவானது சாதாரண பழக்கங்களாலோ ஆன்மீகப் பயிற்சிகளாலோ பாதிக்கப்படாதிருந்தாலும், அதன் தன்மைகளும் திறன்களும் மனம் மற்றும் ஜடத்துடன் அடையாளப்படுவதால் விழிப்புணர்வை திரையிடுவதான அல்லது செயல்களை பேச்சுக்களைத் தடுப்பதான உடல் மற்றும் மனத்தடைகள் ஏற்படுகின்றன. அத்தடைகளை அவற்றிற்கு மாறான உதவிகரமான செயல்களைச் செய்வதால் நீக்க முடியும். தடைகள் நீங்கும்போது ஆன்மாவின் குணங்களும், திறன்களும் நன்கு வெளிப்படும். இதில் வெற்றியடைந்த முன்னோர்களை உதாரணமாகக் கொண்டு நாமும் ஊக்கத்துடன் இதனை நிறைவேற்றலாம்.

4.16. எது செயல்? எது செயலின்மை? என்பதில் அறிவாளிகளும் குழம்புகின்றனர். செயல் எது என நான் உனக்கு விவரிக்கிறேன். இதனை அறிந்து அறியாமையால் ஏற்படும் எல்லாத் தளைகளிலிருந்தும் நீ விடுபடுவாய்.
4.17. ஒருவன் சரியான செயல், தவறான செயல், செயலின்மையின் தன்மை ஆகியனவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும். தெளிவான உள்காட்சி இதற்குத் தேவை.
4.18. யாரொருவன் செயலின்மையில் செயலைக் காண்கிறனோ, செயலில் செயலின்மையைக் காண்கிறானோ அவன் மனிதர்களில் மேதாவி. அவன் யோகத்தில் பூர்த்தியானவன்.

ஒரு செயல் என்பது விளைவை உண்டாக்குவதான ஒரு துடிப்பு. ஒரு சாதகனுக்கு நற்செயல்கள் என்பவை
வாழ்வை வளமாக்குவது
நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவது
ஆன்மீக வளர்ச்சிக்குப் பங்களிப்பது
தவறான செயல்கள் என்பவை
வாழ்வைக் குறைப்பது
ஒழுங்கின்மைக்கும் துரதிருஷ்டத்திற்கும் பங்களிப்பது
ஆன்மீக வளர்ச்சிக்குக் குறுக்கிடுவது
உள்காட்சி ஊட்டம் பெற்ற சாதகன், செயல்படும்போது நம் இருப்பின் சாரமான ஆன்மா எப்போதும் செயலற்றது என அறிகிறான்.

4.19. எந்த காரியம் துவங்கும் போதும், அதில் தன்னிச்சையின் சங்கல்பம் இல்லாது, ஞானாக்னியில் கர்மங்களை எரித்து அதனை அணுகும் சாதகன் ஞானி.

உட்பொருள்:
மேலுள்ளவாறே.

உரை:
ஒரு சாதகனின் நடத்தை அறிவால் தூண்டப்படவேண்டும், கட்டாயப்படுத்தியோ சுயவிருப்பத்திலாலோ அல்ல. உள்ளார்ந்த பிடிவாத அரிப்பே கட்டாயத்திற்குக் காரணம். உணர்ச்சியில் முதிராமை, சுயநலம் ஆகியன சுயவிருப்பத்திற்குக் காரணம். உயர் உண்மை பற்றிய அறிவு,
அழிவு தரும் மனக்கட்டளைகளை நீர்க்கச் செய்வதான,
ஆன்மாவை மயக்கத்திலிருந்து தெளிவிப்பதான
மனவியல் மாற்றங்களைத் தூண்டுவதால், அக்னிமய தீவிரத்துடன் ஒப்பிடப்படுகிறது.

4.20. பலன்மேல் எவ்வித பற்றுமின்றி, ஆத்ம திருப்தியுடனும், பிறர்மேல் சார்பற்றும் செயலாற்றும் சாதகன் உண்மையில் செய்தும் செயல்புரியாதத் தன்மையைக் கொண்டவன்.

உட்பொருள்:
துறவாலும் ஆத்மஞானத்தாலும் சரியாகச் செயல்படும் சாதகன் “செய்பவன் நானல்லன்” என அறிகிறான்.

உரை:
ஆத்மதிருப்தியில் நிலைத்து நம் தெளிவான சங்கல்பம் மற்றும் ஆக்கபூர்வ நடத்தைகளுக்குப் பொறுப்பேற்று, என்ன நடக்கிறதோ அது இயற்கைவெளியின் நம் செயலுக்கான விளைவு எனும் புரிதலுடன் எதனுடனும் கட்டப்படாமல் சுதந்திரமாய்ச் செயல் புரியலாம்.

4.21. நிர்ப்பந்திக்கும் ஆசைகளின்றி, அடைவதற்கான உந்துதல், உள்நோக்கம் ஏதுமின்றி, உடலால் செயலாற்றும் சாதகன் தவறிழைப்பதில்லை.

உட்பொருள்:
அதிக வேறுபாடில்லை.

உரை:
உடலால் செயலாற்றுவது என்றால், உடல் வழியாக ஆத்மாவின் வெளிப்படுத்தலாக எல்லா செயல்களையும் சாட்சிக்காரனாகப் பார்த்தலாகும் தேவைப்பட்ட செயல்களைப் பின்னர் பற்றின்றி பொருந்திய திறனுடன் செய்யலாம்.

4.22. கொடுப்பினைக்கு உட்பட்டு தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைபவன், சுகதுக்க இரட்டைகளைக் கடந்தவன், பொறாமையைக் கடந்து வெற்றி தோல்விகளில் சமான புத்தியுள்ளவன் காரியம் செய்தாலும் அதனால் பந்தப்படுவதில்லை.

உட்பொருள்:
சொந்தக் கடமைகளில் விளைவுகளை சம்மதப்புத்தியுடன் ஏற்பவன், மாறும் சூழலுக்குத் தன்னை பந்தித்துக் கொள்ளாதவன், மனோ தோஷங்களிலிருந்து நீங்கியவனாய் அமைதி காத்து, சம்பவத்தினால் சஞ்சலமுறாதவனாய், சரியான செயலைச் செய்து, உள்ளார்ந்து சலனமற்றிருக்கிறான்.

4.23. பற்றில்லாதவன், கர்மபந்தங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவன், ஞானத்தில் நிலைத்தவன், தியாகபுத்தியுடன் செயலாற்றுபவன், எனும் இத்தன்மைகளை ஒருங்கே உடையவனுடைய செயல்கள் முற்றிலும் கரைந்துவிடுகின்றன.

உட்பொருள்:
பற்றில்லாதவன், மயக்கம் மற்றும் பிம்பக்காட்சிகளின் பின் செல்லாதவன், பேருணர்வு மற்றும் அதன் வளர்போக்கு ஞானத்தில் நிலைபெற்றவன், பரிணாமத்திற்குக் கொடையாகக் காரியமாற்றுபவன், --- இவ்வாறான தன்மைகளுடையவனின் செயல்கள் செய்த சுவடுகளின்றி மறைந்து போகின்றன.

4.24. அர்ப்பணம் பிரஹ்மம், அர்ப்பிக்கப்படும் பொருளும் பிரஹ்மம், அக்னியாகிற பிரஹ்மத்தில் பிரஹ்மத்தாலேயே ஹோமம் செய்யப்படுகிறது. கர்மத்தில் பிரஹ்மத்தை மட்டுமே காண்பவன் பிரஹ்மத்தையே அடைகிறான்.

உட்பொருள்:
பரிணாமத்திற்கு அர்ப்பிக்கப்படும் செயலே இறைவன். அவனே மாறும் வளர்போக்குடைய பரிணாமத்தில் செயலோட்டம். இதனைத் தெளிவாக உணரும் சாதகன் இறையனுபூதி பெறுகிறான்.

உரை:
இறைவனின் எல்லாத் தன்மைகளும் செயல்களும் சாதகனால் உணரப்படும்போது அகங்காரம் சுத்தீகரிக்கப்படுகிறது. தனித்தியங்குபவனாக தன்னால் உணரப்படும் அகங்கார எண்ணம், இயற்கைப் படைப்புடன் ஆத்மா கொண்டுள்ள உறவினைச் சாத்தியமாக்க தேவைப்படும் ஒரு கண்ணோட்டமே என அறிகிறான். ஆத்ம ஞானத்தில் நிலையூன்றியிருந்தாலும் அகங்காரத்திரையின் வழியாக உலகைக் காண்கிறான்.

4.25. வேறு யோகிகள் தேவர்களுக்குரிய யக்ஞத்தைச் செய்கின்றனர். மற்றும் சிலர் பிரஹ்மமாகிய அக்னியில் தன் சுயநலமற்ற வாழ்வினை அவியாகக் கொண்டு யக்ஞம் செய்கின்றனர்.

உட்பொருள்:
சில யோக அப்யாசிகள் தங்கள் எண்ணம் மற்றும் செயல்களை, தங்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்பவையான இயற்கைப் படைப்பின் பிரதிநிதிகளுக்கு அர்ப்பணிக்கின்றனர். மேன்மையான பிறரோ சுய உணர்வினை இறைநிலைப் பூர்த்திக்காக சரணாகத புத்தியுடன் சமர்ப்பிக்கின்றனர்.

உரை:
ஆத்மஞானம் மற்றும் இறைநிலைப் பூர்த்திக்காக ஆணவத்தின் சமர்ப்பணத்தைக் கைகொள்வதன் அவசியத்தை கற்பிப்பதே கீதை மற்றும் பிற யோக சாஸ்த்ரங்களின் தலையாய போதனையாகும்.

பதஞ்சலி யோக சூத்ரம் 3.38 ல், யோகசித்திகள் விவரிக்கப்பட்டிருந்தாலும் அவை ஆன்ம விழிப்படைதலுக்காவே என அழுத்தமாக கூறப்பட்டுள்ளது.

“இந்த யோகசித்திகளை வெளிமுகமாகப் பாய அனுமதித்தால், சுய விழிப்புணர்வுக்குத் திறவாதலைத் தடுக்கும். அவைகள் சரியாக உபயோகிக்கப்பட்டாலோ, உடன்பிறந்த மற்றும் கெட்டிப்பட்டுவிட்ட கெட்ட உந்துதல்களை வழிநடத்தவும் நீர்த்துப்போகச் செய்யவும் உதவுவதான இயல்கடந்த திறன்களை நல்கும்.”

யோக சூத்ரம் 3.51,52 ல்
"அச்சக்திகளின் மேலுள்ள பற்றைத் துறப்பதால், பந்தப்படுத்தும் காரணிகளை விலக்கி அவை தொடர்புடைய அனைத்தினையும் முற்றிலும் கடக்கிறான். அவைகளை பிரயோகிப்பதில் பெருமையோ ஒட்டுதலோ இருக்கக் கூடாது. அப்படிச் செய்வது தன் விழிப்புணர்வின் நிலையிலிருந்து தாழ்ந்த படிநிலைகளுக்குக் கொண்டுபோகக் காரணமாகும்."

4.26. மற்றும் பிறரோ, கேட்டல் முதலிய புலன்களை அடக்கமெனும் அக்னியிலும்; இன்னும் பிறர் ஒலி எனும் புலன்விஷயங்களை புலனாகிய அக்னியிலும் ஹோமம் செய்கின்றனர்.

உட்பொருள்:
பிற சாதகர்கள் புலன் மற்றும் மனத்தூண்டல்களையும் இன்னும் பிறர் ஆசைகளை அடக்கியும் பற்று விட்டும் புலன் சுத்தீகரிப்பு செய்கின்றனர்.

உரை:
புறச் சூழலுடன் தொடர்பு கொள்ள மனமும் ஐம்புலன்களும் அனுமதிக்கின்றன. நாம் வெளியுலகத் தொடர்பினை வெட்டவோ, எண்ணப்போக்குகளை வலுவாக அமுக்குவதையோ கைகொள்ளத் தேவையில்லை. புலன்களைத் தூயதாக்கி முழுமையான ஆக்கபூர்வ வாழ்க்கை வாழ வேண்டும். மனப்போக்குகளை ஒழுங்குபடுத்தி அறிவார்ந்த சிந்தனையை இயல்பாக்கிக் கொள்ளவேண்டும்.

4.27. சிலர் ஞானமய ஆன்மாவினால் வளர்க்கப்பெறும் யோகாக்னியில் எல்லா இந்திரியத் தொழில்களையும் பிராணனின் தொழில்களையும் ஹோமம் செய்கின்றனர்.

உட்பொருள்:
உயர் அறிவால் ஊக்கச்செழுமை பெற்றும், யோகப் பயிற்சிக்கு அர்ப்பணித்தும், சில சாதகர்கள் சுய ஒழுக்கத்தாலும், மந்திரம், பிராணாயாமம், தியான ஒருமை போன்ற பல பயிற்சிகளாலும் பிராணனை உள்முகப்படுத்துகின்றனர்.

உரை:
மனதையம், புலன்களையும் வெல்வதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் நேரடியான, பலன் தரக்கூடிய வழி எதுவென்றால், நினைவையும், பிராணனையும் தண்டுவடத்தில் இருக்கும் விண்ணகப் பாதையான சுஷும்னா நாடிக்கு ஏற்றி ஆன்மீகக் கண்களை நோக்கி மேற்புறமாக ஓட்டுவதாகும்.

உயர்நுணுக்க கிரியா யோக பிராணாயாமம் மற்றும் அதனடியான தியானப் பயிற்சிகளை
குண்டலினி சக்தியை எழுப்ப,
சக்கரங்களை உயிரூட்ட,
ஓம் மந்திரத்தில் கலக்க,
இயல் கடந்த பேருணர்வினை அனுபவிக்க
உபயோகிக்கலாம்.

இந்த உயர்நுணுக்க வழிமுறைகளுக்கு சாதகன் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதுடன் ஒரு தேர்ந்த ஆசிரியரின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் தீக்ஷையும் தேவைப்படும்.

தீக்ஷை வழங்கப்பட்ட சாதகன் இறைவனின் சிஷ்யன் ஆகின்றான். குரு அவனுக்கு தினசரி வாழ்க்கை மற்றும் தியானப் பயிற்சிகளைக் குறித்த துல்லியமான வழிகாட்டுதலைத் தருகிறார். சாதகன் தன் ஆத்மாவிற்கு பலம் தருவதான சக்தியேற்றத்தையும் அதன்மூலம் பெறுகிறான்.

4.28. சிலர் தங்களது ஆஸ்திகளை தானவேள்வியாகச் செய்கின்றனர், சிலர் தவத்தையும், ஆன்மீகப் பயிற்சிகளையும் வேள்வியாகச் செய்கின்றனர். மற்ற சிலர், தாங்கள் கல்வி, அறிவு பெறுவதை ஞானவேள்வியாகச் செய்கின்றனர்.

உட்பொருள்:
சிலர் தங்களது புனிதக் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ளப் பொருத்தமான நலவாழ்வைக் கூட்டுவதற்காக தங்களது பொருள்வளத்தை உபயோகிக்கின்றனர். வேறு சிலர் தங்களது ஒழுக்கபூர்வச் செயல்களையும் இறைமையை உணர்த்துவதான ஆன்மீகப் பயிற்சிகளையும் அர்ப்பணம் செய்கின்றனர். உறுதிச்செம்மை வாய்ந்த பிற சாதகர்களோ ஞானத்தில் நிலைக்க வேண்டி சத்யவேட்கைக் கல்வி கற்று பின்பு அதையும் கடந்து உள்ளிருந்து சுரக்கும் ஞானத்திற்கு பக்குவமடைகின்றனர்.

உரை:
ஆன்மீக உயர்வுக்கு நாம் முழுவதுமாக முனையும்போது நாம் செய்வதெல்லாம் அனந்தமான பரம்பொருளுடன் நமக்குள்ள உறவை புரிந்துகொள்ளவும், நம் ஆன்மத்திறவை துரிதப்படுத்துவதற்குமே செய்வதாக ஆகும்.

4.29. சில யோகிகள் பிராண சக்தியை சமன்செய்து சீர்மைப்படுத்த, அபானவாயுவை பிராணனிலும் பிராணவாயுவை அபானவாயுவிலும் அர்ப்பணம் செய்கின்றனர்.

உட்பொருள்:
சில யோகப் பயிற்சியாளர்கள் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு இரண்டினையும் முறையே பிராண அபான வாயுக்களை நிர்வகித்து பிராணசக்தியை அமைதிப்படுத்த விரும்புகின்றனர்.

உரை:
பிராணன் என்பது உடல் முழுவதும் பரவியிருக்கும் ஆன்மாவின் உயிர்ச்சக்தி. இதன் பல வகைகள் உடலின் பல்வேறு உடற்கூறு இயக்கங்களுக்குத் துணைசெய்கின்றன.

அபான வாயு: கீழ்முக இறக்கம். வெளிமூச்சுக்குத் துணையாவது
பிராண வாயு: மூச்சை நிர்வகிப்பது; உள்மூச்சுக்குத் துணையாவது;
இவையிரண்டும் உயருணர்வு அனுபவிக்கப்படும் தியானத்தின்போது குறைகின்றன.

சாதகன் சரியாக தியானம் செய்ய முடியாமல் போவதற்குக் காரணம்
அழுத்தம்
பதட்டம்
உணர்ச்சிக் குறுக்கீடுகள் அல்லது
மனச் சஞ்சலம்

பிராணாயாமப் பயிற்சி செய்வதனால் கீழ்வரும் பலன்களைத் தருவதாக ஆகின்றன
உடல் இறுக்கத்தளர்வு
மெதுவான ஆனால் சுத்தமான மூச்சு
உணர்வெழுச்சியடங்கிய நிலை
மன அமைதி
உள்முக மன ஒருமை
இதனால் பேருணர்வின் மீதான நிதித்தியாசனம் தடைகளற்று குவிய ஏதுவாகிறது.

மன மற்றும் உணர்வெழுச்சி நிலைகளை நாம் இச்சித்துக் கட்டுப்படுத்த முடியுமென்றாலும், அது சாத்தியமற்றபோது, பிராணாயாமம் அறிந்த சாதகன் நேரடியாகவும் விரைவாகவும் உடற்கூறின் உளரீதியான தடைகளை விலக்கி, மனக்குவியத்துக்காகவும் விரிவடைந்த உணர்வு நிலைகளுக்கும் வழியமைத்துக் கொள்கிறான்.

உடலில் மூளையின் அடிப்பகுதியான மெடுல்லா ஓப்ளாங்கேட்டா எனும் இடத்தில் பிராணன் மையம் கொண்டும் பின்பு மூளையில் மேலேறி பிற மையங்களுக்கு இடங்கொள்கிறது. பின்பு தண்டுவடம் வழியாக சக்கரங்களுக்கு இறங்கி உடம்பின் பிற பகுதிகளுக்கு வினியோகமாகிறது.

தண்டுவடத்தை பாதையாகக் கொண்ட நாடிகள் விளக்கம்
இடா நாடி: தண்டுவட இடபாகத்திலுள்ள சந்திர நாடி - தண்டுவடத்தின் அடியில் தொடங்கி, மூக்கின் இட நாசியில் முடிவடைகிறது. மூளையின் வலபாகத்திற்குப் பொறுப்பு. குளிர்ச்சியானது, அமைதிப்படுத்துவது, உள்முக, அகவய உணர்ச்சிகளுக்கானது.

பிங்களா நாடி: தண்டுவட வலபாகத்திலுள்ள சூரிய நாடி - தண்டுவடத்தின் அடியில் தொடங்கி, மூக்கின் வல நாசியில் முடிவடைகிறது. மூளையின் இடபாகத்திற்குப் பொறுப்பு. உஷ்ணமானது, ஊக்கப்படுத்துவது, செயலாக்கம் மிக்கது, புறவய தர்க்க மனநிலைகளுக்கானது

சுஷும்னா நாடி: இறைவழி என்றழைக்கப்படும் தண்டுவட நடு வழி - தண்டுவடத்தின் அடியில் தொடங்கி, மூளையின் உச்சி வரை செல்வது. இதன் வழியாகப் பிராண ஒட்டம் விறுவிறுப்பாக இருக்கும்போது மேலிரண்டு நாடியின் மின்னதிர்வுகளும் தணிக்கப்படுகின்றன.

சுவாசம், பிராண ஓட்டம், மனச் செயல்பாடுகள், உணர்ச்சி நிலைகள், உடற்கூறுச் செயல்கள் ஆகியன ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சுவாசம் மெதுவாகும்போது, மன அழுத்தம் குறைந்து, உணர்ச்சிகள் அமைதியாகி மனச்செயல்பாடுகள் தூய்மையாகிக் குறைகின்றன. சாதாரணமாக, தவறான வேகமான சுவாசம் , உணர்ச்சிச் சமநிலைப் பிறழ்வு மற்றும் மனப் பதட்டம் மற்றும் குழப்பம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. தணிவான தூய சுவாசம், உணர்ச்சி அமைதி, மன ஒழுங்கு மற்றும் மனத்தெளிவு ஆகியவைகளுடன் தொடர்புடையது.

சுவாச ஒழுங்கை நிர்வகிப்பதானது, உடல், உணர்ச்சி, மன நிலைகளை ஒழுங்குபடுத்தி ஆன்ம விழிப்புணர்வினை எளிதாக்க பிராண ஒட்டத்தை நிர்வகிப்பதற்குத் திறனளிக்கிறது.

நம் உடலில் ஆன்மசக்தியின் ஐந்து அம்சங்கள் செயல்படுகின்றன. ஆன்ம சக்தி, மூளையில் உள்ள மெடுல்லா ஓப்ளாங்கேட்டாவுடன் இணைந்து நம் நலவாழ்வுக்காக பல செயல்களை ஊக்குவிக்க ஐந்து ஆற்றல்மிக்க அலைவரிசைகளாக வெளிப்படுகிறது.

வாயு வகைகளும் விளக்கமும்

பிராணா: உட்சுவாசத்தின்போது செயல்வேகம் பெற்று ஆக்ஸிஜன் அணுக்களிலிருந்து கூடுதல் பிராணன் பெற உதவுகிறது.

அபானா: வெளிச்சுவாசத்தின்போது செயல்வேகம் பெற்று கழிவுநீக்கத்திற்கு உதவுகிறது.

வியானா: உடலில் எல்லா திரவ ஓட்டங்களுக்கு பொறுப்பேற்று தேய்மானம் நடக்காவிதம் தடுத்து பொது உடல் நலம் காக்கிறது

சமானா: ஜீரணம், உட்கிரகிப்பு, உயிர்வேதி மாற்றங்கள், மற்றும் உடலின் உறுப்புச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கிறது.

உதானா: பிராணனை உயர்மையங்களுக்கு உயர்த்துகிறது. இறப்பின் போதும் வினையாற்றுகிறது.

யோகம் பயிலுவோர்க்கு தண்டுவடப்பாதையில் ஓடும் நான்கு நாடிகளைப் பற்றிய விளக்கம் சுவாரஸ்யமானதாயிருக்கும்.

யோக நாடிகளைப் பற்றிய விளக்கம்

சுஷும்னா நாடி: மூலாதாரம் தொடங்கி மூளை உச்சி வரை ஓடுவது. ஆழ்ந்த தியானத்தில் பிராண சக்தி துடிப்புடன் ஓடும். மன அமைதியாலும் நாடிசுத்திப் பிராணாயாமப் பயிற்சியாலும் பிராண சக்தி இப்பாதையில் ஓடவிடலாம். இதனுள் கீழ்வரும் இரண்டு சூட்சும நாடிகளும், ஒரு காரண நாடியும் பீச்சாங்குழலினைப் போல் ஒன்றிற்குள் ஒன்றாக உள்ளன.

வஜ்ர நாடி: சூட்சும நாடியில் ஒன்று. ரஜோகுணம் வாய்ந்தது. நினைவுகளை உள்முகமாய்க் குவித்து இந்த நாடியில் ஓடவிடுவதால் விழிப்புணர்வு தெளிவில்லாவிட்டாலும் விவேகித்த விசாரணை கூர்மையாக இல்லாவிட்டாலும் பல விண்ணக அதிசயக் காட்சிகள் –ஒலி, ஒளி விழிப்புணர்வுப்பெருக்கம், -- ஆகியன சாத்தியமாகும்

சித்ர நாடி: சூட்சும நாடியில் ஒன்று. சத்வகுணம் வாய்ந்தது. நினைவுகளை உள்முகமாய்க் குவித்து இந்த நாடியில் ஓடவிடுவதால், பல ஒளிமய விண்ணகக்காட்சிகள் சாத்தியமாகும்.

பிரஹ்ம நாடி: காரண நாடி. காரண உடலின் செம்மையான நாடி. நினைவுகளை உள்முகமாய்க் குவித்து இந்த நாடியில் ஓடவிடுவதால் விண்ணகக் காட்சிகளைக் கடந்து இயல்கடந்த உண்மைகளை அறிய முடிகின்றது.

4.30. சிலர் உணவு உட்கொள்வதில் அளவு நிர்வகித்து பிராண வாயுவை பிராணவாயுவில் ஹோமம் செய்கின்றனர். [சுலோகம் 24 முதலாக கூறப்பட்ட] இவர்கள் யாவரும் யக்ஞத்தை அறிந்தவர்கள். அதனாலேயே பாவம் தேயப்பெற்றவர்கள்.

உட்பொருள்:
பிறரோ, உணவையும் வாழ்வின் பிற அம்சங்களையும் கட்டுப்படுத்தி பிராணாயாமத்தை அதிதீவிரமாய் செய்கின்றனர். ஆத்ம உணர்வுக்கு விழிப்பு பெற ஒழுக்கத்துடன் வாழும் அனைவரும் புனித ஆகுதி அல்லது சரணாகதியில் நிலையூன்றுகின்றனர். அறிவுவெளியில் ஏற்படும் இந்த உயர்வால், முன்பு அவர்கள் இழைத்த தவறான செயல்களின் பதிவுகள் மற்றும் விளைவுகள் கரைந்து போகின்றன.

உரை:
ஆன்மீகப் பாதையில் வெற்றி பெற ஒழுக்கமான நடத்தை முக்கியமானது. விடுதலையை மீட்டுக்கொள்ள, ஆத்மாவின் தூண்டுதலை நடைமுறைப் படுத்துவதும் உணர்வதுமான செயலுக்கு ஒருவரின் வாழ்க்கைப் பாணி ஒத்திருப்பது தேவையானது.

ஒரு சரிவிகிதத் திட்டத்துடனான உணவுமுறை உடலளவு மனதளவு நலனுக்கு உகந்தது. அளவான உணவே உடலுக்குப் போதும். நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். உடலின் சக்திச் சமநிலை காக்கப்படும். உடலின் ஒட்டுமொத்த நலன் வளரும்.

மனதையும் முழுமை எண்ணங்களால் ஊட்டி வளர்ப்பது அவசியம். மனக்கோணல்கள், உணர்ச்சி நிலைகள், புலன் தூண்டல்கள் ஆகியன வழிநடத்தப்பட வேண்டியுள்ளன. வாழும் வகை மற்றும் நடத்தை ஆகியன நரம்பு மண்டலத்தையும் பிராணனையும் அழுத்தாமல் சுகானுபவ பலன்தரக்கூடியதாய் அமைத்துக் கொள்ளவேண்டும். உணர்ந்து சரியாக வாழ்வது மூலம் பிராணன் நிலைகொண்டு, உடலை புத்தாக்கம் செய்வது, மனதிற்கு சக்திசூட்டுவது, மனக்குவிய ஆற்றல் வளர்ப்பது ஆகியனவற்றைச் சாத்தியப்படுத்துகிற நுண்ணியக்கூறுகளாக மாறுகின்றன. பிராணனை அதன் மூலத்திற்குத் திருப்பவதால் சாதகன் பிரபஞ்ச வாழ்க்கைஉணர்வையும் பிரபஞ்சப் பேருணர்வினையும் அனுபவிக்கின்றான்.

தண்டுவடப்பாதையில் உள்ள சுஷும்னா நாடியில் உள்ள சக்கரங்களின் வழியாக பிராணனை ஏற்றி இறக்கம் செய்யும் நுட்பமான கிரியா பிராணாயாமம் செய்வதுதான் சாதகனை திறனூட்டுவதும் பிராணனை அதன் மூலத்திற்குக் சங்கமிப்பதற்குமான சிறந்த வழி.
இதன் சரியான பயிற்சி
பிராணனை இடவல நாடிகளில் நிரவுவதற்கு
கீழ்ச் சக்கரங்களில் ஆத்ம சக்தியை எழுப்பி அதனை மேல் சக்கரங்களுக்கு ஏற்றிவிட
தண்டுவடப்பாதையை காந்தமயமாக்க
இரத்தத்தில் கார்பன் குறைய
உடலை பிராணனால் உயிர்ப்பூட்ட
உணர்ச்சிகளை அமைதிப்படுத்த
மனப்போக்குகளை சுத்தீகரிக்க
மனக்குவிப்பை வலுப்படுத்த
அகவய உணர்வு நிலைகளை சரிப்படுத்துவதில் உதவிட
ஆகிய பலன்களால் பேருணர் நிலைகளை எளிதில் அனுபவிக்க முடிகிறது.

In the Kriya Yoga tradition, it is taught that movements of vital force upward and downward through the sushumna pathway cleanse the physical, astral, and causal sheaths or bodies. The body’s vital forces are balanced, harmful or potentially harmful mental conditionings (samskaras; impressions) are weakened and dissolved, and the subtle organs of perception are purified. It is taught that one complete cycle of mild upward and downward flows of vital force through sushumna contributes to inner transformations equivalent to those normally experienced during the course of a lunar month, a little more than 28 days. When flows are more concentrated, one complete cycle is said to result in transformative changes that normally occur during one solar year (365 days) of stress-free, healthy living supported by entirely natural and wholesome circumstances. By right living and intentional practice of superconscious meditation, the devotee is able to experience a quickening of spiritual evolution, awakening through the stages of soul unfoldment more rapidly than would otherwise be possible. New initiates are advised to practice 14 cycles of this pranayama twice a day. Later, the number can be increased, as can be the frequency of daily practice. When kundalini is awakened, soul-originating life forces (shakti) circulate continuously without the devotee having to perform pranayamas. The impulse of the soul toward liberation impels the appropriate actions which facilitate necessary psychophysiological transformation and regeneration.

Davis, Roy Eugene. The Eternal Way: The Inner Meaning of the Bhagavad Gita . CSA Press. Kindle Edition.
உயர்ஞானம் என்பது இயல்கடந்த இருப்புண்மைகளின் நேரடி அனுபவம். இந்த உண்மையானது ஒருவரை:
1) மயக்கத்திலிருந்து
2) காட்சிப்பிறழ்சியிலிருந்து
3) ஆணவ தன்னுணர்விலிருந்து
4) ஆன்மாவை முந்தைய தவறுகளிலிருந்தும் அவைகளின் விளைவுகளிலிருந்தும்
விடுவிக்கிறது. இறுதியில் நிபந்தனை நிலைகளிலிருந்து விடுவிக்கிறது.

4.31. யக்ஞம் செய்து எஞ்சியதை ஏற்போர் பிரஹ்மத்தை உணர்கின்றனர். யக்ஞம் செய்யாதவர்க்கு இவ்வுலகு இல்லை. வேறு உலகு எங்ஙனம்?

உட்பொருள்:
சரணாகதத் தியானத்தில் ஈடுபடுகையாகிற புனித சமர்ப்பணத்தின் விளைவாக ஆன்ம அமைதி அனுபவிப்பவர்கள் இயல் கடந்த இருப்பு உண்மையை உணர்கின்றனர். இந்த புவி எல்லைக்குள்ளும் சமர்ப்பணம் செய்யாமல் ஒருவரும் வெற்றிகரமாக வாழ முடியாது; அவ்விதமிருக்க பிற எல்லைக்குள் எவ்வாறு சாத்தியம்?

உரை:
சரியான செயல்களின் "புனிதமான எஞ்சல்கள்" என்பவை அவைகளின் பலனாகக் கிடைக்கும் பேரமைதியேயாகும். நித்யத்வ உணர்வூட்டி அதனை சுத்தப்படுத்தி வாழவைக்கும் அமிர்த தாரையும் அதுவே. மேலும் சுயத்தின் திறவாதலாலும் இயல்கடந்த நிலையில் உணர்வூட்டப்படுதலாலும் ஆகிய இயல்பூக்கப் பேரொளியும் அதுவே.

இயற்கையின் இந்தத் தளத்திலும் பிற எல்லா தளங்களிலும் செயல்படுதல் என்பது விளைவுக்காகவும் தேவையெனில், ஆக்கசக்தியின் தடைகளை நீக்கவும் அவசியமாகின்றன.செயல்கள் என்பன சிலசமயம் மனதின், கருத்துக் கண்ணோட்டத்தின் உணர்வு நிலைகளின் மிகச் சன்னமான மாற்றங்களுமாகவும் இருக்கக்கூடும். செயல்கள் என்பன ஸ்தூல, சூட்சும, காரண உருவில் பல தளங்களில் நிகழும் அதிர்வுகள்.

4.32. இறைவனை அறிய பல யக்ஞங்கள் உள்ளன. அனைத்தும் கர்மத்திலிருந்தே உருவாகின்றன என அறி. இவ்வாறு அறிவதனால் நீ கர்மங்களிலிருந்து விடுபடுவாய்.

உட்பொருள்:
இறையுணர்விற்கு விழிப்புற பல புனிதக் கொடைகள் உள்ளன. சரியான செயல்களின் விளைவுகளாக அவைகளை அறி. இவ்வாறு அறிவதனால் நீ விடுபடுவாய்.

உரை:
தேவைக்கேற்ப, விளைவு-தரும் செயல்களை நாம் செய்யலாம் அல்லது விளைவு-அனுமதிக்கும் செயல்களையும் செய்யலாம். சாதாரண செயல்கள் விளைவையோ பலனையோ தரும். சுய வெளிப்பாட்டினைத் தடுக்கும் தடைகளை நீக்கும் செயல்கள் விளைவு-அனுமதிக்கும் வகை. ஒரு சாதகன் சிறந்த விளைவுகளுக்கு எவ்வாறு செயல்படவேண்டும் என அறியவேண்டும்.
இவ்விருவகையைத் தவிர, நடப்பவைகளை சாட்சிபூதமாகப் பார்த்தலும் ஒரு தேர்வாக இருக்கலாம்.

சரியான செயல்களைத் தியாகப்பூர்வமாகச் செய்வது சாதகனின் அறிவு வெளியைத் தூயதாக்கி விடுதலையளிப்பதான இயல்கடந்த பேருணர்வினை அடைவிக்கிறது.

4.33. பொருள் மயமான யக்ஞத்தை விட ஞான யக்ஞம் சிறந்தது. கர்மங்கள் அனைத்தும் ஒன்றுவிடாமல் ஞானத்தை முடிவாகக் கொண்டன.

உட்பொருள்:
சடங்கு, நடத்தை, பிற உடல் மன வழிகளில் காட்டிலும் பிரஹ்ம சத்யத்தை உணர முயன்றுபெற்ற அறிவைத் தியாகம் செய்வது சாலச் சிறந்தது. சமர்ப்பண புஷ்டியான எல்லாவித கர்மங்களும் தவறாமல் ஞானத்திறவினை விரிவுபடுத்தும்.

உரை:
ஒருவன் அவனுடைய தேவை மற்றும் தகுதிக்கேற்ப செயலாற்ற வேண்டும். ஆயத்த பூர்வாம்ச காரியங்களை செய்யாமல் லட்சியமடைவது அபூர்வமே. இறுதிக்கட்டத்தில், சரியான செயல்கள் இயல்கடந்த அறிவுக்குத் திறவாகி, முன்பு பலனளித்து தேவையாயிருந்த பல பணிகளின் மீதான சார்பினை விலக்குகிறது.

4.34. இதனை நீ அறிவாயாக! பணிவாலும், பரிவு மிகுந்த கேள்வியாலும், ஸேவையாலும் மெய்ப்பொருள் கண்ட ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிக்க விருப்பம் கொள்வார்கள்.

உட்பொருள்:
இதனை நீ அறி! ஆணவசுயத்தை அடக்குவதாலும், தேறிய விசாரணையாலும், தன்னலம் கருதாத சேவையாலும், இறைஞானத்தை ஒளியூட்டம் பெற்ற ஆத்மாக்கள் உனக்குக் கற்பிக்க ஆவலுறுவார்கள்.

உரை:
ஒருவன் சிஷ்யத்தனத்திற்கு, இறைஞானத்திற்கு, ஆன்மத்திறவை எளிதாக்கும் யோகப் பயிற்சிக்கு –
பணிவு
அறியக்கூடியதும் அதனை அறிவதற்கு வழிகளும் பற்றிய விசாரணை
விவேகித்த விசாரணைக்குத் தேவையான நுண்ணறிவு
உணர்ச்சி முதிர்வு
சுயநலம் கலவாத சேவை
ஆகிய இவைகளால், ஆன்ம வளர்ச்சிக்கு ஏதுவான தன் ஞானத்தை பகிரக்கூடிய குருவின் கவனத்தைப் பெறுவதான ஆசி கிடைக்கப் பெறுகிறான்.

4.35. இவ்விதமாக [உண்மையை] அறிந்து நீ, மீண்டும் மோகத்தை அடையமாட்டாய். எல்லா உயிர்களையும் உன் ஆன்மாவிலும், பின் என்னிடத்திலும் காண்பாய்.

உட்பொருள்:
உன்னிடத்தில் உண்மை ஞானம் இருக்கும்போது, மோகம் உன்னை மீண்டும் ஒருபோதும் ஆட்கொள்ளாது. இஞ்ஞானத்தினால் எல்லா ஜீவாத்மாக்களையும் உன் சர்வவியாபக விழிப்புணர்விலும், இறைப்பரப்பிலும் பார்ப்பாய்.

உரை:
மெய்யான, அறுதியான உண்மையை அடைவதென்பது, மெய்யுணர்வு அனுபவத்தில் என்றும் மாறாமல் நிலையாக நிலைத்திருப்பது. இதனை எட்டிவிட்டால் பின் அந்நிலையிலிருந்து தவறி பழையபடி மோகமுறுவதென்பது இல்லை. ஆத்ம உணர்வானது பலபடிகளில் உயர் உணர்வு நிலைகளையும், பின் பிரபஞ்ச உணர்வினையும் அனுபவிக்க வழியமைக்கிறது. பிரபஞ்ச உணர்வு, தனக்கு அயலாக வேறு எதனையும் பிரித்தறிய முடியாத ஒரு முழு ஒருமையை தெளிவான அனுபவ சாத்தியமாக்கும்.

4.36. பாவம் செய்தவர்களிலேயே நீ கொடிய பாவத்தை செய்து இருந்தாலும், ஞானப்படகால் நீ பாவத்தை வெல்லலாம்.

உட்பொருள்:
எல்லாரை விடவும் நீ கெட்டவனாக இருந்தாலும், விடுவிக்கும் உண்மை ஞானத்தால் எல்லா தடைகளையும் நீ கடக்கலாம்.

உரை;
தவறிழைத்து வாடும் ஆனால் இப்போது ஆன்மீகப் பாதைக்குச் சித்தமுறும் சாதகனுக்கு நம்பிக்கை தரக்கூடிய வாக்கு இது. யோகப் பயிற்சிக்கும் சமாதி யோகத்திற்கும் அர்ப்பண புத்தியுடன் ஈடுபடும் சாதகனுக்கு சரியான செயலின் புத்துயிர்ப்பிக்கும் விளைவுகளாலும், கடவுளின் கருணையாலும் மாற்றமும் விடுவிப்பும் உறுதி,

4.37. தூண்டி வளர்க்கப்பட்ட தீ கட்டையைச் சாம்பலாக்குவது போல, ஞானாக்னி செயல்களைப் பொசுக்கிவிடும்.

உட்பொருள்:
தீ கட்டையைச் சாம்பலாக்குவது போல, ஞானக்கதிர்கள் செயல்களை அதன் சாரமான மூலப்பொருளாகச் சுருக்கிவிடும்.

உரை:
இறைமையின் சகல ஞானத்தையும் மற்றும் வாழ்வின் வளர்போக்குகளையும் நல்கும் உணர்வின் ஒளியேற்றம்: நிகழ்வுகளின் மூலகாரணத்தையும் அவைகளின் விளைவுகளையும் முன்னறிவித்து, செயல்களை தூயதாக்கி, இறுதியில், உடலையும் மனதையும் அனைத்து காரியங்களுக்கும் மூலமாக இருத்தலிலிருந்து விடுவிக்கிறது. செயல்படுத்தும் குணங்கள் கூட செயல்படா மூலப்ரகிருதி நிலைக்குப் திரும்புகின்றன.

4.38. இறைஞானத்திற்கு ஒப்பான தூய்மைப்படுத்தும் எந்த ஒன்றும் பிரபஞ்சத்தில் இல்லை. யோகமுழுமை பெற்ற சாதகன் காலப்போக்கில் அந்த ஞானத்தை தன் ஆத்மாவில் கண்டுபிடிக்கிறான்.

உட்பொருள்:
இறைஞானத்திற்கு ஒப்பான தூய்மைப்படுத்தும் எந்த ஒன்றும் எங்கும் இல்லை. ஆன்மப் பயிற்சி மற்றும் பேருணர்வு சமாதியில் முழுமையடைந்த சாதகன் தன்னை மீட்பதான ஞானம் பூர்வாங்கமாகத் தன் ஆத்மாவில் இருப்பதை அறிகிறான்.

உரை:
வெளிச்சம் இருக்கும் இடத்தில் இருட்டு இல்லை. உண்மை இருப்பைப் பற்றிய சுயவிளக்க அறிவு, ஆன்மாவிலிருந்து முழுவதும் திறவாகும் வரை மென்மேலும் விருத்தியடைந்து வெளிப்படுகிறது. முழு ஞானப்பிரகாசம் அடையும் வரை, பூர்த்திகுறைவுடைய அறிவு மேம்பட்ட அறியாமையே.

4.39. சிரத்தையுள்ளவனுக்கு இறைஞானம் கிடைக்கிறது. அதனை மேலாகக் கருதி புலனடக்கத்துடன் ஞானத்தை அடைகிறான். விரைவில் சாந்தியாகிற பரமபதத்தை அடைகிறான்.

உட்பொருள்:
நம்பிக்கை உள்ளவன் அறிவு பெறுகிறான். அதனை லட்சியமாகக் கருதி புலனடக்கம் முதிர்ந்த உட்காட்சி ஞானம் ஆகியவற்றால் விரைவில் ஆத்ம அமைதியை உணர்கிறான்.

4.40. நம்பிக்கையில்லாத, சந்தேக சுபாவமுள்ள அக்ஞானி அழிகிறான். சந்தேகப்படுபவனுக்கு இவ்வுலகிலும் மேலுலகிலும் சுகமில்லை.

உட்பொருள்:
அறிவில்லாதவன், நம்பிக்கையில்லாதவன், ஆன்ம வளர்ச்சியிலும் [மேலுலக இருப்பு மற்றும் சாத்தியப்பாடுகளில்] பழக்கவய சந்தேகமுள்ளவன் புலனாதிக்கத்திலும் முனைவின்மையிலும் மூழ்குகிறான். [விடாமல்] சந்தேகம் கொள்ளும் மனிதனுக்கு இவ்வலகிலும் மேலுலகிலும் மகிழ்ச்சி வாய்ப்புக்கள் இல்லை.

4.41. யோகப்பயிற்சியினால் செயல்களைத் துறந்த சாதகனுக்கு, ஞானத்தால் ஐயமகற்றியவனுக்கு, ஆத்மப் பிரக்ஞையில் நிலைத்தவனுக்கு அந்தச் செயல்களினால் பந்தம் ஏற்படுவதில்லை.

உட்பொருள்:
உயருணர்வுத் தியானப் பயிற்சியினால் செயல்களைத் துறந்தவனுக்கு, உள்ளூர ஊறும் அறிவால் சந்தேகம் தெளிந்தவனுக்கு, ஆத்ம பிரக்ஞையில் நிலைத்தவனுக்கு செயல்கள் கட்டுவதில்லை.

4.42 . உன் இதயத்தில் அறியாமையால் ஏற்பட்ட ஐயங்களை ஞானவாளால் அறுத்து, யோகா பயிலு. எழுமின்.

உட்பொருள்:
அறியாமையில் தோன்றிய எல்லா சந்தேகங்களும் விவேகத்தால் நீங்கிய நீ சமாதியோகத்தைப் சிரத்தையுடன் பயிலு. உன் தீர்மானத்தில் உறுதி கொள்.

உரை:
கீதையில், அர்ஜுனன் மூன்றாவது சக்கரத்தில் ஆத்மவிழிப்புப் பெற்றவனாகக் காட்டப்படுகின்றார். அந்த விழிப்பு நிலை என்னவென்றால்,
திறமையாக செயல்பட்ட போதிலும், மரபுக்கட்டிலும் பலவந்தப்படுத்தும் கட்டளைகளிலும் சிக்கியவனாய் ஆனால் எவ்வாறு திறம்பட வாழ்வது, உயர் இருப்பு உண்மைகள் என்ன என அறியும் ஆர்வம் மேலிட்டவனாகவும் இருத்தல்.

ஆன்மாவின் தேவைகளைப் பூர்த்தி செய்தற்கு,
இறைப்பேருணர்வின் வெளிப்படுத்தல்கள்
இறைவன், இயற்கை ஜடத்தின் மேல் ஆற்றும் செயல்கள்
போன்றவை தானாக உள்ளூர சுரக்கும்.

இந்த அத்தியாயத்தில், ஒரு ஜீவாத்மா எவ்வாறு
குவிவது
சங்கல்ப முனைவுறுவது
உள்ளார்ந்த ஆழ்மன, உணர்வுகளை ஆய்வது
என்பவைகளில் அறிவு பெறுகிறது.

முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், ஞான கர்ம சந்யாச யோகம் என தலைப்பிடப்படட 4ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.









Powered by Blogger.