18. மோக்ஷ சன்யாச யோகம் - பகவத்கீதை - The Eternal Way
பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).
பகவத் கீதை பதினெட்டாம் அத்தியாயம்
18. மோக்ஷ சன்யாச யோகம்
(சரணாகதத் துறவு மூலம் விடுதலை எனும் யோகம்.)
இந்நூலின் முதல் அத்தியாயம் பிரச்சனையை முன் வைத்து பகவத் கீதையின் தீர்வுகாணும் போக்கினை சுட்டிக்காட்டியது. அது ஆன்மா, தன் சுயத்தைப் பற்றிய குழப்பத்தில் இருப்பதையும் அதன் உறவு மற்றும் கடமைகளில் குழம்புவதையும் கூறியது. இந்த இறுதி அத்தியாயத்தில், இப்போது ஒளியூட்ட முழுமையை நெருங்கிய ஆன்மாவான அர்ஜுனன் இரண்டு முறை பேசுகிறார். ஆரம்ப ஸ்லோகத்தில், ஆன்மா தன்னைப் புரிந்துகொள்ளத் தேவைப்படுவதான நுண்ணிய ஆன்மீக விஷயத்தைப் பற்றி விசாரிக்கிறது. பின்னர், உரையாடலின் முடிவில், அதன் சுயவிளக்க அறிவினை உறுதிசெய்து, அதன் விதிக்குச் சரணடைகிறது.
அர்ஜுனன் கூறியது:
18.1 சன்னியாசத்தினுடைய மெய்ப்பொருளையும் தியாகத்தினுடைய மெய்ப்பொருளையும் இவைகளுக்கிடையே உள்ள வேறுபாட்டினையும் அறிய விரும்புகிறேன்.
உட்பொருள்:
செய்யாமல் விடுவதற்கும் செயலின் விளைவில் பற்றில்லாதிருப்பதற்கும் உள்ள வேறுபாட்டினை அறிய விரும்புகிறேன்.
18.2. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதில் கூறியது:
சன்னியாசம் என்பதை ஆசையினால் உருவாகும் செயல்களை விடுவதென அறிஞர் கூறுவர். தியாகம் என்பது செய்வதன் விளைவின் மீது பற்று விடுவதே எனவும் கூறுவர்.
உட்பொருள்:
ஞான ஆசான்கள் சன்னியாசம் என்பதை
• சலனப்பாடு
• ஏக்கம்
• சம்ஸ்காரப் பதிவுகளின் பாரம்
ஆகியவைகளினால் உருவாகும் செயல்களை விடுவதென கூறுவர்.
தியாகம் என்பது அவசியப் பட்ட காரியங்களைச் செய்வதன் விளைவின் மீது பற்று விடுவதே எனவும் கூறுவர்.
உரை:
செயல்படுதல் முறைமை என்பது அவசியமான, வாழ்வூட்டம் தருவதான செயல்களுக்கும் அவசியமற்ற, வாழ்வினை பலவீனப்படுத்தும் செயல்களுக்கும் உள்ள வேறுபாட்டினை அறிந்து, அர்த்தமுள்ள செயல்களைச் செய்வதில் கவனம் செலுத்தி, பிற அவசியமற்றவைகளை விட்டுவிடுவதாகும். அவசியமான, வாழ்வூட்டம் தருவதான செயல்கள் என்பவை வெறும் புலன்திருப்தியை மட்டும் கொண்டதாயிராது. இங்கு புலன்திருப்தி என்பது சலனப்பாடுகளாலும், திரும்பத் திரும்பச் செய்யத் தூண்டும் போதை வச ஏக்கங்களாலும், ஆழ்மனக் கட்டளை வச நிலைப்பாட்டினாலும் உருவாகுபவை. ஆசைகளை அடக்குவதென்பது மன மற்றும் உணர்ச்சி ஏமாற்றத்திற்கும் உடலளவு இறுக்கத்திற்கும் கொண்டு செல்லும். மாறாக மனோவேகங்களை நுண்ணோக்கிக் கவனித்து சிந்தனையையும் சக்தியையும் ஆக்க பூர்வ காரணங்களுக்குத் திருப்பி விடுதல் வேண்டும்.
அவசியமற்ற செயல்களும் ஈடுபாடுகளும் தான் விடவேண்டியவைகள். வாழ்வினைத் திறம்பட வாழவேண்டும்:
• கடமைகளை சிரத்தையுடன் ஆற்றவேண்டும்.
• அர்த்தமுள்ள செயல்களைச் செயல்படுத்தி முடிக்கவேண்டும்.
• பிறருக்குச் செய்ய ஒப்புக்கொண்டவைகளை நிறைவேற்றவேண்டும்.
புரிதலுடன் இவற்றைச் செய்வதனால், இவை ஆன்மீக வளர்ச்சியில் குறுக்கிடாது. மாறாக, நேர்த்தியாக வாழ்தலால் ஆன்மக் குணங்களும் அதன் திறன்களும் கூடி ஆன்மதிறவாதல் சித்தியாகும். நேர்த்தியான வாழ்க்கை நம் அறிவினைச் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு தருகிறது: நம் ஆன்மீக வளர்ச்சி மெய்யானபாதையில் செல்கிறதா அல்லவா என வெளிப்படுத்தவும் உதவுகின்றது.
அவசியமான, மதிக்கத்தக்கச் செயல்களும் ஈடுபாடுகளும் திறம்படச் செய்யப்பட்டால் எதிர்பார்த்த பலன்களைக் கொடுக்கும். காரணபுஷ்டியான வாழ்க்கையுடன், அந்தந்தக் கணத்திற்குப் பொருத்தமான அல்லது சரியான செய்கை செய்தல் முக்கியம். விளைவுகளோ ஊறிவெளிப்படும். விளைவுகளின் மீது நாம் பதட்ட உணர்வு கொள்ளவேண்டியதில்லை. அதேசமயம் விளைவுகளின் மேல் பற்றும் வேண்டாம். இவ்வாறு பந்தப்படுத்தாத செயல்கள் செய்யப்பட்டு வாழ்வு மகிழ்வானதாக சுதந்திரமானதாக இருக்கும். பற்றினால் விளையும் மனப் பேதலிப்புகள் இன்றி விழிப்புணர்வு தெளிவாகவும் ஆன்மீக வளர்ச்சி எளிதாகவும் இருக்கும்.
18.3. துயரத்திற்குக் காரணமாக இருப்பதால் செயலை துறக்கவேண்டும் என கற்றறிந்தோர் சிலர் கூறுவர். ஆனால், பிறரோ, புனிதக் கொடைகள், தானங்கள், தவம் ஆகியன விட்டுவிடக் கூடியவை அல்ல என்பர்.
உட்பொருள்:
துயரத்திற்குக் காரணமாக இருப்பதால் எல்லா செயல்களையும் துறக்கவேண்டும் என கற்றறிந்தோர் சிலர் கூறுவர். ஆனால், பிறரோ, ஆன்மீகப் பயிற்சிகள், சுய அர்ப்பணம், உதவிகரமான ஒழுக்கங்கள் துறக்கப்படக் கூடாது எனக் கூறுவர்.
உரை:
ஒளியூட்டம் பெறாத கற்றறிந்த மேதைகள் எவ்வகை காரியங்களும் விவகார உலக வாழ்க்கைக்குப் பந்தப்படுத்தும் எனவும் காரண—காரிய சுழற்சிக்கு இழுத்துவிடும் எனவும் கூறுவர். வாழ்வுக்கு ஊட்டம் தரக்கூடிய மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு உரிய செயல்களை, அன்றாட வாழ்க்கைக்கும் இறையனுபூதிக்கும் உண்டான உடல் மற்றும் மனோ ரீதியான தடைகள் அகலும் வரையில் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒளியூட்டம் நிறைவேறும்போது செய்வன செய்யாதன பற்றி சிந்திக்கத் தேவையிராமல் சுதந்திரமாக, இயல்பூக்கமாக, பொருத்தமாக வாழலாம்.
18.4. மூவகைத் துறவுகளைப் பற்றி இப்போது முடிவான என் கருத்துக்களைக் கேள்.
உரை:
மூவகைத் துறவுகளைப் பற்றி பேருணர்வின் முடிவான வெளிப்படுத்தல்களை இப்போது புரிந்துகொள்.
18.5. புனிதக்கொடைகள், தானம், தவம் ஆகியவைகளை விடக்கூடாது. ஏனென்றால், தன்மனத்தை ஆள்பவனை அது தூயவனாக்குகிறது.
உட்பொருள்:
ஆன்மீகப் பயிற்சிகள், மனத்தையும் ஆணவத்தையும் உயர் பேருண்மைக்கு அர்ப்பணம் செய்தல், அவசியமான ஒழுக்கங்கள் ஆகியவைகளை விடக்கூடாது. ஞான ஸ்மரணையுடன் இவைகளைச் செய்யும் சாதகனுக்கு அவை தூய்மைப் படுத்துபவை.
உரை:
தியானம் மற்றும் பிற ஆன்மீகப் பயிற்சிகளின்றி, சுய ஊட்ட உணர்வினை இறையுணர்வுக்கு அர்ப்பணம் செய்தாலன்றி, விழிப்புணர்வின் சுதந்திர ஓட்டத்திற்குத் தடைகளான புலன் வேகங்களையும் மன நிலைகளையும் வழிவழி வந்த பழக்கங்களையும் ஒழுங்குபடுத்தும் முயற்சிகள், உடல் மனத் தூய்மையை முற்றிலுமாகப் பெற உதவாது.
ஒரு சாதகன், தன் முழு நலனுக்கும் ஆன்மத் திறவுக்கும் அவசியப்படுவதான செயல்களைச் செய்பவனே புத்திமான்.
18.6. இச்செயல்களும் அவற்றின் பலன் மீதான பற்றின்றி செய்யப்பட வேண்டும். இதுதான் என் தீர்க்கமான உயர்வான கொள்கை.
உட்பொருள்:
சங்கல்பித்துச் செய்யும் இச்செயல்களை பலன் மீதான பற்றின்றி செய்தல் வேண்டும். இதுதான் குற்றமற்ற சத்யத்தின் வெளிப்பாடு.
உரை:
பலன் மீதான பற்று துறக்கவேண்டுமென்பதற்கு இரண்டு காரணங்கள்.
1. பற்று எவ்வகையினதாயினும் அது ஆணவ மைய சுய ஊட்டப் பாங்கினை வளர்க்கும்.
2. பலன் மீதான பதட்ட உணர்வு நிலைகொள்ளாமைக்கும் எண்ணச் சிதறலுக்கும் கொண்டு விடும்.
ஆணவமோ சுய ஊட்டமோ எவ்வாறு பார்க்கப்பட வேண்டுமென்றால் விவகார உலகத்துடனான உறவுக்கும் அணுகுகோணத்திற்கும் எனக் கொண்டு ஆனால் ஆன்ம விழிப்புணர்வில் நிலைத்துத் தொடரவேண்டும். அது ஆரோக்கியமான ஆணவம். ஆணவமோ சுய ஊட்டமோ மேலோங்கும்போது நம் ஆளுமையுடன் ஒரேயடியாக சாய்ந்து ஆன்ம விழிப்புணர்வினை அலட்சியம் செய்ய நேரிடுகிறது.
தணியாத உணர்ச்சிகளும் எண்ணச்சிதறல்களும் வாசனா விருத்திக்குக் காரணமாகி நுண்ணறிவைக் கலக்கி ஆன்ம விழிப்புணர்வினை மன ஓட்டங்களுடன் சேர்த்துப் பார்க்க வைக்கிறது. இதன் விளைவோ,
• சகஜ வாழ்வில் குழப்பம்,
• நிலைகொள்ளாமை,
• தியானத்தின்போது அதிமன உணர்வுகளை அனுபவிக்க முடியாமை,
• அதிமன உணர்வு ஏற்பட்டாலும் அதனைத் தக்கவைக்கத் தெரியாமை.
18.7. செய்யவேண்டுவன செய்யாமை முறையல்ல. மயக்குறு மனங்கொண்டு அவைகளைச் செய்யாமல் விடுதல் தாமஸீகமானது.
உட்பொருள்:
செய்ய ஒப்புக்கொண்டவைகளைச் செய்யாமை முறையல்ல. நுண்ணறிவுக் குறைவால் அவைகளைச் செய்யாமை என்பது விழிப்புணர்வினைக் கலக்கி ஆன்ம திறவாதலை பாதிக்கும்.
உரை:
• இயற்கையின் விதிகளுக்கோ சொந்தக் கடமைகளுக்கோ உட்பட்ட ஆன்மீகப் பயிற்சிகள் மற்றும் பிற காரியங்கள் ஆகியவைகளுக்கு நுண்ணறிவுப் பூர்வ காரணத்தைக் காணாததால் செய்திறன் இல்லாதிருக்கும் ஒரு சாதகன்
• நுண்ணறிவு, உணர்வு, ஆன்மீக தளங்களில் வளர்ச்சி மற்றும் ஆதரிப்புச் சூழல் ஆகியனவற்றை விரும்பும் ஒரு சாதகன்,
ஆகிய இருவரும் புத்திமான்களின் பேச்சைக் கேட்கவேண்டும்.
வாழ்வினைப் பற்றிய உண்மைகளை சிறிது அலட்சியப்படுத்தியதால் வாழ்வில் கட்டுண்ட சாதகனுக்கு எளிதாக உள்வளர்ச்சியையும் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் சாதிக்க வேண்டுமென்றால் நிறைமாந்தர்களைப் பின்பற்றுவதே வழி.
18.8. கஷ்டமாயிருப்பதாலோ உடல் உபாதைக்குக் காரணமாயிருப்பதாலோ செயலைத் துறக்கும் ஒரு சாதகன் ராஜஸத் தியாகத்தினை மேற்கொள்கிறான். தியாகத்தின் பலனையும் அவன் அடையமாட்டான்.
உட்பொருள்:
கஷ்டமாயிருப்பதாலோ உடல் உபாதைக்குக் காரணமாருக்கும் என அனுமானிப்பதாலோ செயலைத் துறக்கும் ஒரு சாதகன் மனதிற்கும் தன் உணர்ச்சிகளுக்கும் திருப்திப் படுத்துவதான மேலோட்டமான தியாகத்தினை மேற்கொள்கிறான். ஆன்மீக ரீதியான பலன்களை அவன் அடைவதில்லை.
உரை:
எளிதான சுகமான கடப்பாடுகளை மட்டுமே செய்தல் என்பது சுய ஊட்ட ஆணவத்திற்குப் பணிவிடை செய்தலே ஆகும். பல லட்சக் கணக்கான மக்கள் கூட்டம் இப்படித்தான் நடந்துகொள்கிறது. அவர்கள் சுகமான சுய ஊட்ட உணர்வு வாழ்வினை விரும்பி தங்களுக்கு உயர்லட்சிய முன்னேற்றம் நல்காத பழக்கங்களுக்கு அடிமையாயிருக்கிறார்கள்.
18.9. பலனில் பற்றைத் துறந்து கடமையுணர்வுடன் செய்யப்பட்ட செயல் நல்கும் தியாகம்தான் சாத்வீகமானது.
உட்பொருள்:
அவசியமான செயல்கள் பற்றின்றி கடமையுணர்வுடன் செய்யப்பட்டால் அவ்விதச் செயல்கள் வாழ்வுக்கு ஊட்டம் தருபவையும் ஆன்மீக ரீதியாக ஒளியூட்டம் தருபவையுமாகும்.
உரை:
சாதகன் உலகில் இறைச்சித்தத்திற்கு பிரதிநிதியாக, வரம்பற்ற ஒன்றுக்கு லயப்பட விரும்புதல் வேண்டும் இறைச்சித்தத்தையோ தற்குறித்தனமல்லாத சங்கல்பத்தையோ பரிணாமத்தின் போக்குகதியைப் பார்த்தோ நம் உள்ளறிவைத் திறவாக்கியோ அறியலாம். நாம் இதனைச் செய்யும்போது பிரபஞ்சத்தினை ஆட்கொண்டிருப்பதும் நம்மில் உள் வசிப்பதுமான தூண்டுதல் ஒன்று பரிணாம நோக்கத்தினையும் வளர்த்து முழுமைப்படுத்தும் திசை நோக்கி இருப்பதை நாம் காணுவோம். அப்போது, நம் ஆன்ம தூண்டுதல்களை நம்மை விழிப்பாக்கவும், கற்கவும், வளரவும், செயல்படவும், முழுமைக்குத் திறவாகவும் செய்யும் ஒன்றாக அங்கீகரிப்போம்.
18.10. ஐயமற்று நிறைந்த நெஞ்சமுடைய தியாகி, ஆகாத செயல்களுக்கு வெறுப்போ ஆகப்பட்ட செயல்களுக்கு ஒட்டுதலோ இல்லாதவன்.
உட்பொருள்:
தியாகம் செய்யும் இவ்வாழ்க்கை முறையை அதன் காரணபுஷ்டியுடன் தெளிவாகப் புரிந்துகொள்பவன், சரியான தீர்மானத்திற்கு நிலைத்து ஊக்கம் கொள்பவன், சுகமற்ற செயல்களைத் தவிர்க்காதவனாகவோ செய்யச் சுகமான செயல்களுக்கு ஒட்டுதலோ இல்லாதவனாயிருக்கிறான்.
உரை:
சாதகனாயிருப்பவன் எண்ணங்களையும் விழிப்புணர்வினையும் அல்ப மற்றும் சுய ஊட்ட அக்கறைகளுக்கு மேலே எழும்பவேண்டும். கடமை நிறைவேற்ற கனிந்த அணுகுமுறை எதுவென்றால் செய்யத்தக்கன செய்கையும் இனி செய்யவேண்டுவன செய்யத் துணிகையும். நடப்புகளும் சூழலும் இசைவானதாகத் திறவாகிவிட்டால் பெரும்பாலானவை நமக்கு ஆனந்த அனுபவம் தரும். அவ்வாறின்றி சுகமற்ற செயல்கள் எதிர்படும்போது அவைகளை பற்றற்ற பாங்குடன் நளினமாகக் கையாண்டு, அவ்விதம் நாம் ஈடுபடுவதன்மூலம், அதன் கதிப்போக்கிலிருந்து கற்கவும் செய்யலாம்.
பரிந்துரைக்கப்பட்ட ஒழுக்கங்களையும் ஆன்மீகப் பயிற்சிகளையும் கூட சிலர் அசௌகரியமாக எண்ணி அவர்களின் உள்மாற்றங்களுக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் வேறு வழிகள் இல்லையோ என ஐயமுறுகின்றனர். அவர்கள் எவ்வளவு ஒழுங்கீனர்கள் என்றால் ஏதோ ஒன்றினைத் தேர்ந்தெடுத்தல் கூட பிரச்னைக்குரியது என கருதி தேர்ந்தெடுக்காமையில் உழல்வது. தாவர உணவு கொள்பவனாக இருப்பது எனத் திட்டமிட்டால் குடும்ப உறுப்பினர்களும் உறவு வட்டாரமும் நண்பர்களும் எங்கே அசௌகரியப்படுவரோ எதிர்ப்பு தெரிவிப்பரோ எனும் எண்ணத்தில் அவ்வாறு செய்வது அவ்வளவு எளிதாக அவர்களுக்கு இருக்காது. இவ்விதம், செய்ய வேண்டியதைச் செய்யாமலிருக்க நாம் ஆயிரம் சால்ஜவாப்புகளை வைத்திருப்போம். விருப்பு வெறுப்புகளால் உருவாக்கப்படும் மனோபோராட்டங்களை வெல்ல எளிய வழி எதுவென்றால், செய்யவேண்டியதற்குத் தேவையான மகிழ்ச்சியான திறன்பட்ட எதிர்கொள்ளலைக் காட்டத் தீர்மானிப்பதே.
18.11. உடலெடுத்த ஆன்மாக்கள் செயல்களை முழுதுமாய் விடமுடியாது. அவைகளின் பலனில் பற்று விடுகிறவர்கள் தியாகிகளே.
உட்பொருள்:
உடல், விண், காரண தளங்களில் உடலெடுத்த ஆன்மாக்கள் செயல்களை முழுதுமாகத் துறக்கவியலாது. எனவே, செயல்களின் பலன்களை உணர்ச்சி அளவில், மனதளவில் விட்டவர்கள் தியாகிகளே.
உரை:
இயற்கைக்கும் சமுதாயத்திற்கும் ஏற்ப உடலளவில் உறவு அளவில் அவைகளின் பராமரிப்புக்காக செயலாற்ற வேண்டியிருப்பதால், யாரொருவரும் செயல்களை முழுதும் விடமுடியாது. இயற்கையின் குணங்களைக் கடந்தாலன்றி அவைகளுடன் ஊடாடிக் கொண்டிருத்தலிலிருந்து விடுபடமுடியாது. அதுவரை நம் பக்குவப் பட்ட அளவிற்குட்பட்டு திறம்பட வாழ்வதே புத்திசாலித்தனம். இதனைச் சாதிப்பதற்கு எதனையும் புரிந்துகொண்டு, ஆனால் அதே சமயத்தில் அச்செயல்களின் விளைவுகளுடன் மனதளவு, உணர்ச்சி அளவு பற்று கொள்ளாமல் விலகியிருக்க வேண்டும்.
18.12. உடல் இறந்த பிறகு, பற்று விடாதவர்களின் செயல்களின் விளைவுகள் மூவகையாவன: ஆக்கபூர்வமானது, அழிவுப்பூர்வமானது, இரண்டின் கலவையாக இருப்பவை; பற்று விட்டுவிட்டு செயல் ஆற்றியவர்களுக்கோ விளைவுகள் ஏதும் இல்லை.
உட்பொருள்:
பற்று விடாதவர்களின் செயல்களின் விளைவுகள் மூவகையாவன: ஆன்ம விழிப்பைத் தடுப்பவை, ஆன்மாவின் செயல்களை ஆதரிப்பவை, இரண்டின் கலவையாயிருப்பவை. மன மற்றும் உணர்ச்சி பந்திப்பற்ற செயல் மற்றும் அதன் விளைவுகள் ஆற்றிய சாதகர்களுக்கு செயலின் விளைவுகள் ஏதும் இல்லை.
உரை:
இயல் கடந்த பௌதீக நிலைக்கு உயர்ந்தாலன்றி, பரு உடல் மண்டலம் விட்ட ஆத்மாக்கள் அவர்களின் வளர்ச்சி அனுபவங்களை புலனாகா விண் மற்றும் சூட்சும மண்டலங்களில் தொடர்வார்கள். மனப்புலன் அவர்களிடம் மாறாதிருக்கிற காரணத்தால் ஸம்ஸ்காரங்கள் ஆன்மாவுடன் ஒட்டிக்கொண்டு நெருக்கடி கொடுக்கும். வலி பொருந்திய ஸம்ஸ்காரங்கள் இருந்திருந்தால் உடல் விட்ட பின்னரும் அதே துன்பங்கள் அனுபவிக்க நேரிடும். உடலுடன் இருக்கும் காலத்தில் அவர்கள் கஷ்டத்தில்தான் இருப்பார்கள். வாழ்வினை ஆதரிப்பதான ஸம்ஸ்காரங்கள் இருந்திருந்தால் அவர்கள் ஆக்கபூர்வ பலம் பெற்றிருப்பர். இவைகளின் இரண்டின் கலப்பான ஒரு கதி இருக்கவும் முடியும். சமன்படுத்தப்பட்ட ஸம்ஸ்காரங்களை உடைய ஆன்மாக்கள் உடல் விடுகையில் அவை மேல் மண்டலங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் நிர்ப்பந்தம் இருக்காது.
எல்லா செயல்களும் உடலால் நடப்பது அல்ல. சில உணர்ச்சி தளத்திலும் சில மனோதளத்திலும் நடப்பவை. செயல்களான நம் மனக் கோணங்களுடனும் எண்ணங்களுடனும் நம் விருப்பம்போல் அவைகளுடன் பற்றிக்கொண்டோ அல்லது பற்றில்லாமலோ இருக்கிறோம். மகிழ்வான அல்லது துயரமான மனக்கோணங்களை, நம்பிக்கைகளை, காட்சிப்பிறழ்வுகளை, கற்பனைகளைப் பற்றிக்கொண்டு வாழ்வதென்பது ஆன்ம விழிப்பினைத் தள்ளிப்போடும். தேர்ந்தெடுத்தோ அல்லது ஆன்ம ஞான விழிப்புத் திறனாலோ இயல் கடந்த அனுபவங்களாலோ எல்லா பற்றுகளையும் களையவேண்டும்.
18.13. சாங்க்ய சாஸ்திரத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளபடி, எல்லா காரியங்களையும் செய்து முடிக்கத் தேவையான ஐந்து காரணிகளை என்னிடமிருந்து அறி.
உட்பொருள்:
எல்லா பணிகளையும் செய்து முடிக்கத் தேவையான ஐந்து காரணிகளை, பிரபஞ்சப் படைப்பை எண்ணி வகைப்படுத்தும் தத்துவ நூலிலுள்ளபடி உன் பூர்வாங்க ஞானம் திறவாக்குவதனை அறி.
18.14. செயலின் அமைவிடமான உடம்பு, கர்த்தா (செய்பவன்), செயலில் ஈடுபடும் புலன்கள், விவித காரியங்கள், மற்றும் ஐந்தாவதான, இவைகளின் சாத்தியப்பாட்டிற்கான (புலனாகு, புலனாகா, வளர்ப்பது, தடுப்பது ஆகிய) இயக்கு விசைகள்.
உரை:
உடம்போ செயலின் இருப்பிடம். உடம்பெடுத்த ஆன்மாவிற்கு செயல்கள் மூன்று (பரு, விண், காரண) உடல்களிலும் நடைபெறும். ஏனென்றால், பரு உடலை பிற இரண்டும் ஆதரிக்கவேண்டும். விண்ணுடம்பில் நடைபெறும் செயல் காரண உடம்பிலும் நடைபெறவேண்டும். ஆனால், காரண தளத்தில் காரண உடம்பு மட்டும்தான் ஆன்மா உறையுமிடம்.
கர்த்தா (செய்பவன்) என்பது செயலினைத் துவக்கி வைப்பது. அதாவது அவை செய்பவனின் குணங்களே.
புலன்கள் என்பவை, மனம், விஷயத்தினைப் புலப்படுத்தும் உறுப்புக்கள், செயலுக்கேற்றவாறு மற்றும் பிற.
விவித காரியங்கள் என்பவை, மூச்சு மற்றும் பிற உயிரியல் காரியங்கள், மன—உடல் இடையீட்டுக் காரியங்கள், மற்றும் பிற
இயக்கு விசைகள் என்பவை
பிரபஞ்சக் கருணையினால் தானே திறவாகும் எதிர்பாரா அதிர்ஷ்டம், நாம் எதிர்பார்த்த அல்லது நம் தவறுகளுக்கிடையேயும் அலட்சியங்களுக்கிடையேயும் நமக்குத் தெரியாமல் நாம் வெளிப்படுத்துவதான சாதகப் பூர்வ திறவாகுதல் ஆகியனவாகும். இயக்கு விசைகள் சில சமயம் நம் விதி எனவும் கூறப்படும். இதனை அறிந்து, ஆக்க பூர்வ செயல்களை, இவ்வகை மறைவிசைகளின் பலமறிந்தும் வினையாற்றியும், செய்து நம்மை உதவிக் கொள்ளலாம்.
18.15. உடல், மனம், பேச்சு என இவைகளுடன் எந்த பணியினையும் தொடங்கினாலும் அது சரியோ தவறோ, இந்த ஐந்தும்தான் எல்லா பணிகளையும் செய்து முடிக்க காரணிகள்.
உரை:
சரியான செயல்கள் தர்மத்திற்கு எதிரானவை அல்ல. அவைகள் ஒழுங்கானவை, வாழ்வுக்கு ஆதரவானவை. ஆனால் தவறான செயல்களோ ஒழுங்கிற்கோ ஆதரவான வாழ்முறைக்கோ எதிரானவை.
18.16. இது இவ்வாறிருக்க, தன்னைச் செய்பவனாகப் பார்ப்பவன் உண்மையில் பார்க்கவில்லை. அவனுடைய புரிதல் நிறைவானதல்ல.
உரை:
மேற்கூறியதிலிருந்து விளக்கப்படுவது என்னவென்றால், ஆன்மா காரியகர்த்தா அல்ல. வேறுவகையாய் நினைத்தல் தவறான புரிதல். ஆணவம் அதாவது பொய்யான சுயபிம்பம் இங்கு நடம்புரிகிறது. நம் ஆன்மா அதன் தோன்றுமூலத்தில் இருக்கும் வகையில் பார்த்தால் எந்தச் செயலிலும் விளைவிலும் அது என்றும் விலகியே இருக்கிறது.
ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, ஒரு சாதகன் அறியவேண்டுவது:
"உடலையும் மனதையும் தூயதாக்கவே நான் இதனைச் செய்கிறேன். முழுமையான சுயரூபத்தை திரும்பியடையவே இதனைச் செய்கிறேன். [எப்போதும் பூரணமாகவுள்ள] என் சுயரூப ஆன்மீக வியக்தியின் தன்மையைப் புதிதாக மேம்படுத்த நான் இதனைச் செய்யவில்லை".
18.17. ஆணவம் நீங்கி தூய நுண்ணறிவுடன் ஒருவன், [எதிரணியில் போரிட அணிவகுத்துள்ள] இவர்களைக் கொன்றாலும் அது கொலை அல்ல. அவன் அச்செயலால் பந்திக்கப்படமாட்டான்.
உட்பொருள்:
தான் தனித்தியங்குவதாக நினைத்துக் கொள்வதான ஆணவகதியை விட்ட ஆன்மாக்கள் தூய நுண்ணறிவு வல்லமையுடன், தனது அழிவுகதி மன ஓட்டங்களையும் ஆசைகளையும் [இவர்களை] ஒழித்தாலும், அவைகளைக் கொன்றதற்கான காரணகர்த்தா ஆவதில்லை.
உரை:
இரண்டாம் அத்தியாயத்தில் நமக்குக் கற்பிக்கப்பட கருத்து இங்கு நமக்கு நினைவூட்டப்படுகிறது. அங்கு, ஆன்மா, தீய போக்குகளையும் கர்ம உந்துதல்களையும் எதிர்த்து எல்லா வகையிலும் அவைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.அப்போதுதான் ஆன்மா ஞானத் தேடலை ஆரம்பித்திருந்ததால், அதனுடன் சுய ஊட்ட நிலை, பந்திக்கும் குணங்கள் ஆகிய இரண்டும் விடாது ஒட்டிக்கொண்டிருந்தது.
போதுமான விழிப்புக்குப் பின்தான், ஆன்மா மனதில் வேர்கொண்ட அழிவுகதிப் போக்குகளை எதிர்த்து, நீர்க்கச் செய்து ஒழிக்கும் வல்லமையடைகின்றது. இந்த அழிவுகதிப் போக்குகளை ஒழிப்பதற்கான உபாயங்களாவன:
• ஒழிக்க விரும்பும் முனைப்பு
• மன நிலைகள், உணர்வு நிலைகளின் மாற்றங்கள்
• கெட்ட நடத்தைகளிலிருந்து விடுபட நல்ல நடத்தைகளை, நடத்தை மாற்றப்பயிற்சிகளால் பெறல்
• மன ஒருமைப்பாட்டு தியானம்
• அதி உணர்வு நிலைகளின் அனுபவம்.
இன்னும் விழிப்பு நிலை கூடும்போது ஆன்மா வாழ்வின் உண்மைகளைத் தரிசிக்கத் தடையாயிருந்த அதன் மனப் பிறழ்வுக் காட்சிகளை அறிந்து அவைகளை நீக்கிவிடும். பின்னர், ஆன்மாவின் மேம்பட்ட வல்லமைகள் மனதையும் உடலையும் தூயதாக்கி கர்ம ஸம்ஸ்கார வித்துக்களைக் கரைக்கும்.
18.18. அறிவு, அறிபடு பொருள், அறிபவன் ஆகியன செயலினைத் தூண்டும் மும்மைத் துடிப்புகள் ஆகும். சாதனம், செயல், கர்த்தா (செய்பவன்) ஆகியன செயலின் மும்மைத் தொகுப்பு.
உரை:
அறிவு என்பது நம் விழிப்புப் பரப்பில் நாம் காணுவதை புரிந்துகொள்வது ஆகும்.
அறிபடுபொருள் என்பது எதைக் காணுகிறோமோ அல்லது எதனுடன் அனுபவத் தொடர்பில் உள்ளோமோ அது. அறியப்படுத்தும் வழிமுறைகளாவன --- பிரத்யக்ஷம் அல்லது நேரடிக் காட்சி, அனுமானம், துணைக் கருத்துக்களின் சேர்மானம் தரும் கூட்டு அறிவு, கூட்டு அறிவினை பகுத்துப் பார்த்து அறிவது, ஆப்த வாக்கியம் எனும் சான்றோர் சொல். இவைகளில் பிரத்யக்ஷம் விரிவான, துல்லியமான அறிவைக் கொடுக்கும்.
அறிபவன் என்பது ஆன்மாவே. அதுதான் காணுவதும் அனுபவத்துக்குள்ளாவதும் ஆகும். ஆன்மாவின் உணர்வு எப்போது மனம் மற்றும் அதன் பந்தக் கூறுகளின் வழியே இயங்காதிருக்கிறதோ, அப்போது தன் உள்ளுறையும் காரணத்தாலேயே ஆன்ம ஞானம், இறைஞானம், பிரபஞ்சப் போக்குகள் யாவும் உடனே காட்சிப்படும். அறிவு, அறிபடுபொருள், அறிபவன் யாவும் செயலுக்கு மூலம்.
அறிவு, அறியும் திறன், அறிபவன் இவற்றின் தேவை இருக்கும்வரை, அறிவைத்தேடுபவன் வியக்த விழிப்புணர்வு ஸ்திதியிலேயே காணும் பொருட்களில் விவித பேதங்களைக் காண்பான்.
சாதனம் செயல்களைச் சாதகமாக்குகிறது. முக்குணங்களே எல்லாச் செயல்களிலும் கிரியசாதனங்கள், அத்துடன் உடலெடுத்த ஆன்மா பயன்படுத்தும் பல்வேறு புலன், கர்மேந்திரிய உறுப்புக்களும் சாதனத்தில் அடங்கும்.
கர்த்தா (செய்பவன்) என்பது "நான்தான் செய்கிறேன்", "என்னால் இச்செயல் நடைபெறுகின்றது" என ஆன்மா தன்னைத் தவறாக பா:வித்துக் கொள்ள வைப்பதான சுயபிம்பம். நடப்பவைகளுக்கு ஆன்மா சாட்சிபூதம் மட்டுமே. அது செயலாலோ விளைவாலோ தீண்டப்படுவதில்லை.
18.19. பிரபஞ்சப் படைப்பு வகையறாக்களை எண்ணி வகைப்படுத்தும் சாங்க்ய தத்துவமுறையில், அறிவு, செயல், கர்த்தா (செய்பவன்) என ஒவ்வொன்றும் குணங்களைப் பொருத்து மூவகை எனக் கூறப்பட்டுள்ள முறைமையையும் அறிவாயாக.
உரை:
உயர் இருப்புண்மைகளின் முழுப்புரிதலை வெளிப்படுத்துவதில்லை எனும் காரணத்தால், சாங்க்ய தத்துவத்தினை முழுமையான ஒன்றென யோக நூல் கற்றறிந்தோரால் கருதப்படுவதில்லை. ஆனாலும், குணங்களின் செயல்கள் மற்றும் தொடர்பான பிற சங்கதிகள் பற்றி அதன் விரிவான விளக்கங்களுக்காக, சாங்க்ய சாஸ்திரம் அர்த்தம் பொதிந்ததாகவும் நம்பத்தகுந்ததாகவும் ஏற்கப் படுகிறது.
18.20. அழிவற்ற ஒன்றினை எல்லா படைப்புக்களிலும் பகுபடாத ஒன்றாகக் காணும் அறிவு சாத்வீகம்.
உட்பொருள்:
எல்லா உயிர்களின் வழியாக பேருணர்வே ஆன்மாவாக வெளிப்படினும், அவற்றில் பேருணர்வையே முழுமையாகக் காணும் அறிவு உண்மையை-விளங்கச் செய்வது.
உரை:
பேருணர்வு ஒன்றுமட்டும் இருக்கிறது என அறிந்தபின், ஆன்மாக்கள் என்பவை இறையொளியின் கீற்றுக்கள் என அறிகிறோம். அதாவது, நமக்கு எட்டிப் புலனாவதான வெளிப்பாட்டில் உள்ள எல்லாம், பேருணர்வின் ஆற்றலே. மேலும், இறைமையின் தூய உணர்வே உயிர்களை வாழவைக்கிறது.
18.21. எல்லா படைப்புக்களிலும் அவைகளின் விவிதப் பிரிவுபாடுகளாலேயே பன்மையைப் பார்க்கும் அறிவு ராஜஸீகமானது.
உட்பொருள்:
எல்லா படைப்புக்களிலும் அவைகளின் மேல்போக்கான விவிதப் பிரிவுபாடுகளாலேயே பன்மையைப் பார்க்கும் அறிவு, சிதறலானது. மனக்குழப்பத்தை ஏற்படுத்தி பிறழ்காட்சியினை விளைவிக்கிறது.
உரை:
நிலைகொள்ளாமையாலும் மனப் போக்குகளின் குழப்பத்தாலும் விழிப்புணர்வு எப்போது தெளிவின்றி இருக்கிறதோ அப்போது பொய்க்காட்சிகள் மற்றும் காட்சிப் பிறழ்வுகள் ஏற்படும். அப்போது, ஒருவன் பேருணர்வின் சம்பந்தமின்றி விவித விசைப்பாடுகள்தான் வேலைசெய்வதாகப் பொய்யாக அனுமானிக்கிறான். ஒரு சாதகன் சத்யமான ஒருமைத் தத்துவத்தில் எப்போதும் மனம் குவித்து, உண்மை என ருசுப்பிக்கப்பட்ட ஒன்றுக்கு மாறான எண்ணங்களும் புலக்காட்சிகளும் தோன்றுகையில், அவை அவ்வாறல்ல என சுயபோதத்தால் தெளிய வேண்டும்.
18.22. தோற்றத்தில் காரியமாக வெளிப்பட்ட அல்பமான ஒன்றை காரணமின்றிப் பிடித்துக் கொண்டு, அதுதான் முழுமை எனக் காணுகின்ற அறிவு தாமஸீகமானது.
உட்பொருள்:
சத்யத்தைக் காணாது, ஒற்றை நிகழ்வினைக் குருட்டுத்தனமாய் முழுச் சூழலுக்கும் வகைமாதிரியாய்ப் பிடித்துக்கொள்ளும் அறிவு குறுகிய, பேதைமையான அறிவு.
உரை:
நுண்ணறிவு பலவீனமாயிருக்கும்போது கிடைத்ததை நிஜமென நம்புகிறோம். சத்யத்திற்கும் பொய்யை சத்யம் என நம்புவதற்குமிடையே உள்ள வேறுபாடு தெரிவதில்லை. ஆன்மீக அறிவை வளர்த்துக் கொள்ள, ஒளியூட்டம் பெற்றவர்களின் போதனைகளை உடனே புரியாவிட்டாலும் விசுவாசிக்க வேண்டும். அப்போது பயனுள்ள அறிவு கைகூடும். தொடர் விசாரணை புரிதலை மேம்படுத்தும்.
18.23. கடமை சார் செயல்களைப் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றி, பலனை எதிர்நோக்காமல் செய்தல் சாத்வீகம்.
உட்பொருள்:
அவசியப்பட்டச் செயல்கள் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றி, பலனை எதிர்நோக்காமல் செய்தல் தூய்மையானது.
உரை:
புரிதலோடு இருப்பதில் ஊன்றிவிட்டால், நம் கடமைகளை திறம்பட மகிழ்வோடு செய்வோம். புரிவதற்கு முன்பு கூட ஒளியூட்டம் பெற்ற ஆன்மாக்கள் வாழ்வதைப் போல வாழ முயலவேண்டும். மன ஆரோக்கிம் அப்போது சகஜமாகிவிடும். நம் பகுத்தறிவுக்குட்பட்டச் செயல்கள் ஆக்கபூர்வமாகிவிடும்.
18.24. அதிக முயற்சிகளுடனும் இச்சாபூர்த்தியை நோக்கிய சுய ஊட்ட செயல்கள் ராஜஸீகமானவை.
உட்பொருள்:
அதிக முயற்சிகளுடனும் இச்சாபூர்த்தியை நோக்கிய சுய ஊட்ட செயல்கள் தூயதற்றதாகக் கொள்ளப்படும்.
உரை:
சங்கல்பித்த ஊக்கபூர்வ செயல்கள் வாழ்வில் தேவைப்படும் வேளைகள் இருக்கத்தான் செய்கின்றன. மேதகு அறிவால் வழிகாட்டப்பட்டுவிட்டால் அவை நன்மை பயப்பனவே. ஆணவ ஊட்டத்தை வளர்ப்பதாகச் செயல்களை அனுமதித்துவிடக்கூடாது என்பதுதான் இங்கு முக்கியம். ஆணவ ஊட்டம் என்றால் ---
• தற்பெருமை கொள்ளுதல்
• புலன் திருப்தி மட்டுமே நாடுதல்
• அல்ப பலன் கருதுதல்.
பிரபஞ்ச ஓட்டத்துடன் லயப்பட்ட செயலாற்றும்போது அதன் முழு ஆதரவு கிடைப்பது மட்டுமன்றி நம் பக்கம் கிஞ்சித்த முனைவு அல்லது அதுவுமின்றி செய்துவிடலாம். தவறாய்த் தேர்ந்த காரியத்தினாலோ, வெற்றிக்கு தேவையான அறிவின்மையாலோ, வழிமுறைகளின் திறனின்மையினாலோ நாம் போராடி ஒரு காரியம் நிறைவேற்றும்படி நேரலாம். வாழ்தலும், கடமைகளை நிறைவேற்றுதலும், ஆன்மீக வளர்ச்சியை ஊட்டுவதும் எளிதானதாகவும் ஆனந்தமாயும் இருக்கவேண்டும்.
18.25. மயக்குறு மனத்துடனும், தனக்கு நேரும் நஷ்டம், பிறர்க்கு நேரும் துன்பம் போன்ற பின்விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமலும், தான் செயல் செய்துமுடிக்க வலிமையுடையவனா என அறியாமலும் ஆற்றும் செயல்கள் தாமஸீகமானவை.
உட்பொருள்:
மயக்குறு மனத்துடனோ கஷ்டம், வலி போன்ற விளைவுகளைக் கருதாமலோ, அக்காரியமாற்றத் தன் சாமர்த்தியம் கணக்கிடாமலோ ஆற்றும் செயல்கள் வாழ்வை அழுத்துபவை மற்றும் அழிவைத் தருபவை.
உரை:
நம் சுய தேவைகளின் பூர்த்திக்காகவும் சின்னச்சின்ன ஆசைகளின் பூர்த்திக்காகவும் செய்யும் செயல்கள் பெரும்பாலும் கெடுபலன் தராதவையே. ஆனால், அவை பிறரின் உரிமையைப் பங்கப்படுத்தி அவர்களைத் துயருக்குள்ளாக்குவதாகவோ வலி ஏற்படுத்துவதாகவோ இருந்தால், அல்லது வேண்டிய பலனைத் தரத்தகாத திறன் பற்றாக்குறை இருந்தாலோ அப்போது நம் நடத்தைகள் மயக்குறுகதியில் இருக்கின்றன. அவை பரிணாமத்திற்கு ஒவ்வாதவை.
18.26. பற்று, ஆணவம் விட்டு, உறுதியான உத்ஸாகத்துடன் வெற்றி, தோல்விகளுக்கு அசைவின்றி இருப்பவன் சாத்வீகமானவன்.
உட்பொருள்:
பற்று, ஆணவம் விட்டு அலைபாயா மனத்துடன் காரியத்தில் உறுதியுடன், விளைவுகளில் நிஷ்சலனத்துடன் இருப்பவன், ஆன்ம உயிர்ப்பினை தன்னகத்தே உடையவனாயும் வாழ்வுக்கு ஊட்டம் கொடுக்கும் தன்மை கொண்டவனாயும் இருக்கிறான்.
உரை:
சுளுவாக செயல் நடத்தி இம்மாதிரியாக வாழ்ந்தால் ஆன்ம விழிப்புணர்வுக்கு உறுதிப்படுகிறோம். நேரிய வழியில் வாழ சிரமப்பட்டு முனைவுப்படுவது தேவையின்றி, ஆன்ம தூண்டுதலாலேயும் அதன் உள்காட்சியாலேயும் தானே செய்பவர்களாய் ஆகிவிடுகிறோம்.
18.27. கர்மபலனை ஆவலுடன் எதிர்பார்த்தும், பேராசையுடனும், பலவந்தமாயும், தூயதற்ற நோக்கத்துடனும் மகிழ்ச்சி அல்லது துயரங்களுக்கு ஆளாகுபவனுமாய் இருப்பவன் ராஜஸீகமானவன்.
உட்பொருள்:
வெளி ஓட்டமுள்ள ஆசைகளையும் சலன மனத்தின் உந்துதல்களையும் திருப்திப் படுத்த முனைபவனாய், பேராசைக்காரனாய், பலவந்தமாய், தூயதற்ற தீர்மானங்களுடன் மேலோட்டமான மகிழ்ச்சி மற்றும் அதன் இழப்புத் துயரம் ஆகியன கொண்டவனாய் இருப்பவன் ஆசைவேகத்தினால் உந்தப்படுபவன்.
உரை:
சுய ஊட்டத்துடன், சலனமனத்துடன், புலன் ஆட்சிக்குட்பட்டு நிர்ப்பந்த கதியில் நம் கவனமும் சக்தியும் வெளிப் போவதாய் இருக்கும்போது நாம் அறிவிலித்தனமாக நடந்துகொள்கிறோம். இதனால், நம் செயலின் பலனாய் ஏற்படும் தற்காலிக மகிழ்ச்சியும், அக்களிப்பு மறைந்ததும் ஏமாற்றத்தைத் தரத்தக்கதான சோகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
பலமான ராஜஸீக கெட்டிப்பிடியை தளர்த்த ஆக்கபூர்வ வாழ்க்கைப் பாணி மேற்கொண்டு ஆன்மீகப் பயிற்சிகளை கற்று செய்யவேண்டும்.
18.28. ஒழுக்கமின்றி, அசிங்கமான, பிடிவாதமான, கொடூரமான, கள்ளத்தனமான, சோம்பல் நிறைந்த ஒருவனாக, கவலையில் அமிழ்பவனாக, தள்ளிப்போடும் பழக்கத்துடன் இருப்பவன் தாமஸீகமானவன்.
உட்பொருள்:
ஒழுக்கமின்றி, கலாச்சாரமின்றி, அறியாமையால் பிடிவாதக்காரனாயிருந்து கொடூரமான, கள்ளத்தனமான, சோம்பல் நிறைந்த ஒருவனாக, கவலையில் அமிழ்பவனாக, தள்ளிப்போடும் பழக்கத்துடன் இருப்பவன், இம்மயக்கங்களாலேயே சத்யத்தினைக் காணத் திராணியற்றவனாவான்.
உரை:
நம் எண்ணங்கள், மனச் சாயல்கள், நடத்தைகள் ஆகியவை மயக்குறுமனத்தினால் ஆட்டப்படுபவையாய் இருந்தால் நாம் அறியாமையையும் துயரத்தினையும் நிரந்தரமாக்குகிறோம். சோர்ந்த மனத்துடன் இருக்கும் ஒருவனுக்கு சூழலை மாற்றத்தக்க கற்பனையும் சுய ஊக்கமும் அவ்வளவு எளிதானதல்ல. தற்போதைய சூழ்நிலைகளினில் பற்று கொண்டிருத்தல் இறுக்கமான மனோபாவத்தினை கூட்டி, அது மனத் திரிபுகளாய் வெளிப்படும்: அதாவது, பயனுள்ள விஷயங்களையும் சுயநலமான, தாறுமாறான காரணங்களுக்காகத் திரித்துத் தரும் மனப் பழக்கங்களே.
தாமஸப்பிடியை தளர்த்த, முழுமையான ஆக்கபூர்வ செயல்களைச் செய்தவாறே தத்துவ ஆராய்ச்சி மற்றும் கிரமகதியில் ஆன்மீக பயிற்சிகளைச் செய்வதே வழி.
18.29. புத்தியினுடைய மற்றும் திட சித்தத்தினுடைய மும்மைக் குண பேதங்களை முழுமையாயும் பாகுபடுத்தியும் விளக்கப்படுவதைக் கேள்.
உட்பொருள்:
புரிதிறன், அலைபாயா உறுதி, ஆகியனவற்றின் வேறுபாடுகளை குணங்களின் செயல்பாடுகளைக் கொண்டு மாறாட்டம் புரிவதனை உன் அகத்தாய்வுத் திறனால் தெளிவாக அறி.
உரை:
தெளிந்த புரிதலுடன் ஒரு சாதகன் தன் ஆன்மீக வளர்ச்சியில் நிலைபெறுமாற்றினை இங்கு மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. ஆன்மஞானத்தில் உறுதிப்பாடு எட்டாதவரை நம் விழிப்புணர்வு இயல்வகைக் குணங்களாலும் ஒழுங்கற்ற மன நிலைகளாலும் ஆட்டுவிக்கப்படுகிறது.
18.30. செயல்படுகாலம், செயல்படாக்காலம், செய்ய வேண்டுவன, செய்யவேண்டாதன, அஞ்சுதல் அஞ்சாமை ஆன்மாவினைக் கட்டும் கர்மம் ஆன்மாவினைக் விடுவிக்கும் கர்மம் – என இவற்றை பாகுபடுத்தி அறியும் புத்தி எதுவோ அது சாத்வீகமானது.
உட்பொருள்:
எப்பொது செயல்படலாம் எப்போது செயல்படக்கூடாது, எதனைச் செய்யலாம், எதனைச் செய்யலாகாது, எதற்கு அஞ்சவேண்டும் எதற்கு அஞ்சத் தேவையில்லை, ஆன்மக் கலக்கத்திற்கான மற்றும் ஆன்ம விடுதலைக்கான காரணச் செயல்கள் ஆகியன விவேகித்தறியும் புலனே சத்யத்தை வெளிப்படுத்துவது.
உரை:
புத்தி தூயதானால் திறம்பட வாழ்வதை எளிதாக அறிந்துவிடலாம். மன மயக்கங்கள் ஏன் மற்றும் எவ்வாறு நம் விழிப்புணர்வினைக் கலக்குகின்றன என அறிந்தால் பிரச்னைக்குத் தீர்வினை விவேகித்தறியலாம். இத்தவறுகளைக் களைந்துவிட்டால் மன மயக்கங்களும் மறைந்துவிடும்.
18.31. சரி, தவறு, செய்யத் தகுந்தன, செய்யத் தகாதன ஆகியன தீர்மானிக்க இயலாத புத்தி, ராஜஸீகமானது.
உட்பொருள்:
தர்மத்துடன் இயைந்து ஒழுகுவதும் ஒழுகாததுமாகிய ஒன்றினை வேறுபடுத்தி அறிய இயலாத மற்றும் எதைச் செய்யலாம் எதைச் செய்யலாகாது என அறிய இயலாத புத்தி குழப்பத்தால் பிசிறடைந்த ஒன்றாகும்.
உரை:
நம் புத்தியானது எப்போது நிலைகொள்ளாமையாலும் ஒழுங்கற்ற மனப்போக்குகளாலும் கலங்கியிருக்கிறதோ அப்போது காட்சிப் பிழைகள் உருவாகி மேலும் குழப்பத்தை உண்டாக்குவதான தோற்றமாயங்களை உருவாக்குகிறது. அப்போது என்ன தேவைப்படுகிறதென்றால் பகுத்தறியும் சிந்தனை நிலவுவதான அமைதியான உணர்ச்சியும் மற்றும் மன நிதானமும்.
18.32. இருளில் முழ்கி, தவறை சரியென தீர்மானிப்பதும், எல்லாவற்றையும் தலைகீழாய்ப் பார்ப்பதுமான புத்தி தாமஸீகமானது.
உட்பொருள்:
ஒழுங்கின்மையினை ஒழுங்கென தவறாகத் தீர்மானிப்பதும், காட்சிப் பிறழ்ச்சி ஏற்படுத்துவதுமான இருள் மூடிய விவேகம் மயக்குவதாகும்.
உரை:
வாழ்வின் சத்யங்களை அறவே அறியாத, பிறழ் பார்வை கொண்ட ஒருவன், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமெனப் பார்த்துக் கற்க உதாரணபுருஷர்களைக் கொண்டிருக்க வேண்டும். பகுத்தறிவு பழக்கமாகும் வரை ஊக்கமுடன் சுய வளர்ச்சிக்கு முனைப்புறவேண்டும்.
18.33. யோக நிலையில், மனப்போக்குகளையும் பிராணனையும், புலன்களையும் அலைபாயாமல் திடசித்தத்துடன் ஒழுக்கும் உறுதி சாத்வீகமானது.
உட்பொருள்:
சமாதி நிலையில், மனசஞ்சலங்களையும் அவைகளின் மூலத்தையும் பிராண ஓட்டங்களையும் புலன் தூண்டல்களையும் உறுதிப்பட சீராக ஒழுக்குதல் உண்மையை வெளிப்படுத்துவது.
உரை:
அதியுணர்வு அனுபவங்களுக்கு முந்தையதான யோகாப்பியாசங்கள் சமாதிநிலை அனுபவமாக முன்னோடிகள். சமாதி நிலைக்கு இட்டுச் செல்வதான திரும்பத் திரும்ப நிகழும் அதியுணர்வு அனுபவங்களால், ஆன்ம விழிப்புணர்வில் ஸ்திரமாகிவிடுவதன் காரணமாக, மன ஆட்டங்கள் அனைத்தும் அடங்கி, அவைகளின் மூலங்களும் -- அதாவது, நிலை கொள்ளாமை, ஒளிந்திருக்கும் ஆழ்மன ஸம்ஸ்கார விசைகள் -- விலகுகின்றன, உடலின் பிராணன் தானே நிர்வகிக்கப் படுகிறது, புலன் தூண்டல்கள் நின்றுவிடுகின்றன.
18.34. கடமை, இன்பம், செல்வம் என எவை ஒருவனைப் பற்றுகதிப் போக்கில் திடசித்தத்துடன் பலன் விரும்பிச் செயலில் தள்ளுகிறதோ அந்த உறுதி ராஜஸீகமானது.
உட்பொருள்:
கடமை, இன்பம், செல்வம் ஆகியனவற்றை மன மற்றும் உணர்ச்சி பூர்வப் பிடிமானத்துடன் பற்று கொண்டு அவைகளின் பலனில் ஆசை கொண்டவனின் உறுதி, மயக்குறு சிந்தனைகளாலும் இயற்கையின் பிரபஞ்ச விசைகளாலும் ஆதரிக்கப்படுவதான செயலைத் தூண்டுவிப்பது.
உரை:
நம் கடமைகளுக்கு உரிய கவனம் செலுத்துதல் நமக்கு முக்கியம். வாழ்வைக் கொண்டாடி வாழவேண்டும். சொத்துகளுக்குப் பொறுப்பேற்பதும் முக்கியம். மகிழ்ச்சியான பலன்தருவதான வாழ்க்கைக்கு எது குறுக்கீடு என்றால் மன மற்றும் உணர்ச்சிபூர்வப் பிடிமானங்கள், சுய ஊட்ட ஆசைகளைத் திருப்தி செய்வதற்கான நிரந்தர உள்துரத்தல் ஆகியனவாகும். சாதகன் எவனும் வாழ்விலிருந்து பின்வாங்கக் கேட்டுக்கொள்ளப் படுவதில்லை. மாறாக, தெளிந்த புரிதலோடு திறம்பட வெற்றிகரமாக வாழ்வதே அறிவார்ந்த அணுகுமுறை.
18.35. அறியா மாந்தர் தேவைக்கதிகமான தூக்கம், பயம், கவலை, மன அழுத்தம், செருக்கு ஆகியனவற்றைக் கெட்டிப்பிடியாய் விடாமல் இருக்கும் உறுதி தாமஸீகமானது.
உட்பொருள்:
தெளிவற்ற மனிதன் அதி தூக்கம், பல்வேறுவகை பயங்கள், மன அழுத்தம், செருக்கு ஆகியனவற்றுக்குக் கட்டுண்டு பிடிவாதத்துடன் இருப்பது மனமாயங்களுக்கும் கலங்கிய விழிப்புணர்வுக்கும் மயக்குறு மனத்துக்கும் அடையாளம்.
உரை:
உணர்விழப்பின் சுகத்தில் பிடிபட்டிருத்தலே அதிதூக்கத்தின் காரணம். அது இன்மையின் நிலையை அனுபவிப்பதற்கான விருப்பம். பயனுற வாழ்வது எங்ஙனம் என அறிய ஆர்வமற்றிருத்தலே, ஒருவன் அதிக அளவுத் தூக்கத்துக்கு நேரம் எடுத்துக் கொள்ளக் காரணம். பயம் மற்றும் அது போன்ற மனக் குறைநிலைகளுக்கு ஒருவன் ஆட்படுவது உணர்ச்சி முதிர்ச்சியின்மையாலும் சுய ஊட்டத்திற்கு அடிமைப்பட்டிருத்தலாலுமே.
மன மற்றும் உணர்ச்சி அழுத்தம் சிலருக்கு உடலளவு வேதிப்பொருட்களின் குறைப்பாட்டினால் அல்லது நரம்பு மண்டலக் கோளாறுகளால் என்றாலும் அது பெருமளவு ஒருவனின் வாழ்வின் அர்த்தம் மற்றும் காரணம் மீதான புரிதலின் குறைபாடே. மனப்பாங்கினை சரிப்படுத்துதல், ஆரோக்கியமான வாழ்வுபாணி, மற்றும் வாழ்வது எப்படி எனும் போதனை ஆகியன மன மற்றும் உணர்ச்சி அழுத்தங்களை நீக்க உதவிகரமாயிருக்கும். சுயதம்பட்டம் என்பது தாழ்வு மனப்பான்மையையும் மயக்குறு மனப்பாங்கினையும் ஈடு செய்ய வெளிப்படுகிறது.
18.36. யோகப்பயிற்சியினால் அடையப்படுவதும் துயரத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதுமான மூவகையான மகிழ்ச்சிகளைப் பற்றி இப்போது என்னிடமிருந்து அறி.
உட்பொருள்:
சமாதிப்பயிற்சிகளாலும் துயரங்களிலிருந்து ஆன்மா மீள்வதுமான மூவகை மகிழ்ச்சிகளைப் பற்றி உன் சுய வெளியாகு ஞானம் உனக்குத் திறவாக்குவதை கற்பாயாக.
18.37. மனதில் பிறக்கும் எந்த ஒரு மகிழ்ச்சி துவக்கத்தில் விஷமாயும் முடிவில் தேனாயும் இருக்கிறதோ அந்த மகிழ்ச்சி சாத்வீகமானது.
உட்பொருள்:
மனதில் பிறக்கும் எந்த ஒரு மகிழ்ச்சி துவக்கத்தில், விரும்பத்தகாததாய், ஏனென்றால் அது புலனின்பம் போல ஆர்ப்பரிப்பு இல்லாததால், ஆனால் நம்மை மறு ஆக்கம் செய்வதாயும் பலப்படுத்துவதாயும் இருப்பது சத்யத்தினை வெளிப்படுத்துவதே.
உரை:
மனம் சத்வ குணத்தின் தளம். முதன்முதலாய் மன அமைதி நிலவும்போது, நாம் சரியாகத்தான் இருக்கிறோமா என ஐயம் ஏற்பட்டுவிடும். உள் அமைதி திறவானவுடன் நாம் அறிய வருவது என்னவென்றால் அமைதிக்காக வெளிச் சூழல்களைச் சார்ந்திரா நிலை ஏற்படுவதால் கிடைக்கும் நம் மதிப்பீடுகளிலான மாற்றமே. நம் உள்வயமாதலானது மனம் மற்றும் விழிப்புப் படலத்தின் மேலதிகமான மறைபொருட்களை ஆர்வமாய் ஆராய ஆரம்பித்து, அதனாலேயே நம்மைப் பற்றியே நம் கவனத்திற்கு வராதவைகள் தெரியவர, ஒரு அசௌகர்யம் உணர நேரிடுகிறது. ஆன்ம விழிப்புணர்வில் லயித்து விட்டாலோ நம் இயல் கடந்த மகிழ்ச்சி தேனைப் போல மதுகரமானது. அது வாழ்வுக்கு ஊட்டம் தரக்கூடியதும் ஆன்மாவின் வல்லமையைக் கூட்டக்கூடியதுமாகும்.
18.38. புலன் மற்றும் அதன் விஷயங்களுக்கிடையே ஏற்படும் தொடர்பினால் பிறக்கும் மகிழ்ச்சி துவக்கத்தில் தேனாய் இனித்து ஆனால் முடிவில் விஷமாக ஆகுதல் ராஜஸீகமானது.
உட்பொருள்:
இச்சாபூர்த்தியினால் கிடைக்கும் மகிழ்ச்சி, முதலில் மகிழ்ச்சி ஊட்டுவதாய் தோன்றி பின் மனமயக்கியாக பரிணாமிப்பது, சொல்ப காலமே நிலவுவதான உற்சாகமூட்டும் தன்மையது.
உரை:
புறவய திருப்தியில் மனமூன்றி உலகத்துடன் ஒரு சார்புறவை உருவாக்கிவிடுகிறோம். சூழல் தோதாக இல்லாமல் போனாலோ துயரப்படுகிறோம். குறிக்கோளை எட்டிவிட்டால் ஆசை நிறைவேறியதன் காரணமாக மகிழ்ச்சி கொள்கிறோம். ஆன்ம அமைதி இல்லையென்றால், வெளிப்புறத்தில் தன்னை உற்சாகமூட்டும் செயல்களை நாடி, நாம் உயிர்த்துடிப்புடன் தான் உள்ளோம் என்பதை நமக்கே நிரூபித்துக் கொள்ள விழைகிறோம்.
தியானம் பயில்பவர்கள் கூட ராஜஸப் பிடியில் சிக்கிவிடுகிறார்கள். அதில் அவர்கள் புதுப் புது யோகக் காட்சிகளைப் பார்த்துவிடுவதான, பூரித்த நிலை அனுபவித்துவிடுவதான, வரம்பற்ற உண்மைப்பொருளை நாடுவதை விடுத்து வரம்புக்குட்பட்ட வஸ்துக்களின் சொரூபக் காட்சிகள் கண்டுவிடுவதான, அதிமானுஷ்ய திறமைகளை நாடி, அவைகளை சமாதி நிலைகளின் துரித சித்திக்காக உபயோகிக்க எண்ணாமல், அவைகளின் சக்தியின் மேல் மோகப்பற்று கொண்டு அடைய முயற்சிக்கிறார்கள்.
18.39. பெருந்தூக்கம், சோம்பல், அலட்சியம் ஆகியனவற்றால் ஏற்படும் மகிழ்ச்சி, ஆரம்பத்திலும் பின்பும் மனக் கலக்கத்தை உருவாக்கி விழிப்புணர்வினைத் தடுப்பதும் ஆகிய தாமஸம்.
உட்பொருள்:
அதிக தூக்கத்தால், சோம்பலால், விருப்பமின்மையால், முக்கியமானவைகளைக் கவனிக்காமையால் ஏற்படும் மகிழ்ச்சி, முன்பும் பின்பும் மனக்கலக்கம் உண்டாக்கி, அதனால் விழிப்புணர்வுக்குத் தடை ஏற்படுத்துவதுமானது - அத்தகைய மகிழ்ச்சி மேலும் அறியாமையையும் விழிப்பின்மையையும் கூட்டும்.
உரை:
அறியா மன நிலைகளோ நடத்தையை மயக்குவதோ மகிழ்ச்சி எனக் கொள்ளப்படும்போது அது ஒருவனின் சூழலை முன்னேற்றவோ, உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவோ, ஆன்மீக விழிப்புணர்வை உயர்த்தவோ சற்றும் உதவாது. தாமஸக் குணப் பிடியில் சிக்கி வாழும் வாழ்க்கை கொஞ்சமேனும் ஆன்மத் திறவாகுதலை அடையாவிடில் வீணே.
ராஜஸக் குணப்பிடியில் வாழ்பவனாவது ஓரளவு நம்பிக்கையைத் தருகிறான், ஏனெனில் வெளித் தூண்டல் முயற்சிகளினால் மட்டுமே சுகம்பெறுவதில் என்றேனும் ஒருநிலையில் சோர்வினை அடைவான்; அது அர்த்தப்பட வாழ தானாக வழிதேடத் தூண்டுதலாக அமையும். ராஜஸ வாழ்க்கைப் பாணி, செயல்படுத் திறன்களை வளர்க்க உதவுவதால், அதற்கான காரண காரியங்களைப் பற்றிய செயலறிவை நாட வாய்ப்பளிக்கும். ஆன்மீக வளர்ச்சிக்கான யோகப் பாதை எதுவென்றால், ஆக்க பூர்வ செயலில் ஈடுபட்டு தாமஸ குணத்தை விலக்குதல், மற்றும் சத்வ மற்றும் உயர்வுதரு குணங்களை வளர்த்து ராஜஸ குணத்தை வெல்லுதல் ஆகும்.
18.40. மூல இயற்கையில் இருந்து தோன்றிய இம்முக்குணங்களிலிருந்து விலக்களிக்கப்பட்ட எவரும், தேவ தேவதைகள் உட்பட, புவியிலோ சொர்க்கத்திலோ இல்லவே இல்லை.
உட்பொருள்:
இங்கே பூமியிலோ அல்லது உயர் ஆன்மாக்கள் இருப்பதாகக் கருதப்படும் சூட்சும காரண தளங்களிலோ வெளிப்பாடான பிரபஞ்சத்துடனான உறவில் மூல இயற்கையில் இருந்து தோன்றிய இம்முக்குணங்களால் ஆட்கொள்ளப்படாமல் யாரும் இல்லை.
உரை:
ஆன்மா ஒரு உடல் அல்லது மனத்துடன் உறவாட்டத்தில் இருக்கும் வரை இயற்கையின் தன்மைகளால் வடிவம் கொண்டுள்ள இவ்விரண்டிலும் குண சேஷ்டைகள் ஆட்கொண்டுவிடும். இது மூன்றான ஸ்தூல, சூக்ஷம மற்றும் காரண தளங்களுக்கும் உண்மை. ஆன்மா தன்னை உணர்ந்து லயித்திருக்கும் போது அது இயற்கையின் பிடியின் தாக்கங்களிலிருந்து விலகுகிறது. முக்குணப் பிடியில் சற்றுச் சிக்கியிருந்தாலும் உடல் மன தள வெளிப்பாடுகளில் அமைதி நிலையினை பராமரிப்பது சாத்தியமே. விழிப்புணர்வு நிலைப்பட்டுவிட்டால் பிரபஞ்ச உணர்வு திறவாகி, மேதகு அதியுணர்வு விசைகள் உடலையும் மனத்தையும் கிரமகதியில் தூய்மைப்படுத்தி, சத்வ குணநலன்கள் பரிமளிக்க ஏது செய்யும்.
18.41. பிராஹ்மணர்கள், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், மற்றும் சூத்ரர்கள் ஆகியோரின் கடமைகள் அவரவர் அடித்தள உடல் மன பிரகிருதி குணங்களால் நிர்ணயிக்கப்படுகின்றனர்.
உட்பொருள்:
• தூய நுண்ணறிவுடன் ஆன்ம விழிப்புப் பெற்றவர்கள்,
• செயல்வேகத்துடன் ஆனால் சுயக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்,
• இன்பம் மற்றும் வெற்றியினை அனுபவிக்கிறவர்கள்,
• உலகாயத காரியங்களில் தனது ஆர்வம் திறமைகளை செலுத்துபவர்கள்
--- ஆகிய இந்நான்கு வகையினரும், அவரவர் அடித்தள உடல் மன பிரகிருதி குணங்களால் நிர்ணயிக்கப்படுகின்றனர்.
உரை:
வேத நூல் வழியைப் வெகுவாகப் பின்பற்றிய பண்டைய காலத்து இந்தியாவில், ஒருவன் தன் சொந்தத் தேவைகளையும் சமுதாயத்தின் தேவைகளையும் அவனவன் உடல் மன பிரகிருதிக்கு ஒப்பிய வாழ்பாணியைக் கடைபிடித்தால் சிறப்பாக நிறைவேற்றி விடலாம் என நம்பப்பட்டது. அதுவே காலத்தோடு ஒத்து மாறிக்கொள்வதை உறுதிப்படுத்தி அவனுடைய தனிப்பட்ட உயர்வுக்கும் திறன் மேம்பாட்டிற்கும் வழியாகும்.
இருள்மய நூற்றாண்டு காலகட்டங்களில், பல கலாச்சாரங்களில் தத்தம் நுண்ணறிவு வேறுபாட்டினை மற்றும் திறமைகளைக் கணக்கிலெடுக்காமல் தத்தம் பெற்றோரின் சமூக அந்தஸ்தினையே பின்பற்ற சமுதாயத்தால் கட்டாயப் படுத்தப் பட்டனர்.
எது சிறப்பானது என்றால் அவரவர் செயலாக்கத் திறன்களை அடையாளம் கண்டோ அவ்விதம் இல்லாத பட்சத்தில் கற்றாவது திறம்படப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், ஒருவரின் உடல் மன பிரகிருதிக்கு ஒத்து, உணர்ச்சி, நுண்ணறிவு, ஆன்மீக வளர்ச்சியை நல்குவதான திறம்பட்ட செயல்பாட்டுக்கு சமர்த்தன் ஆகிறான்.
பின் வரும் மூன்று ஸ்லோகங்களில், நான்கு உடல்—மன பிரகிருதி வகைப்பாடுகளின் தன்மைகளை விவரிக்கக் காணலாம்.
18.42. அமைதி, கட்டுப்பாடு, தவம், தூய்மை, மன்னிக்கும் மனோபாவம், நேர்மை, அறிவு, ஞானம், இறை நம்பிக்கை ஆகியன (வளர்ப்பதே) பிராஹ்மண [அதாவது, ஆன்மீக மற்றும் நுண்ணறிவு ரீதியாக வளர்ச்சியடைந்த] சுபாவமுடையோரின் தன்மைகள்.
உரை:
ஆன்மீக மற்றும் நுண்ணறிவுப் புலன்கள் வளரப் பெற்ற சாதகர்களுக்கு, இறைமையின் கருணைக் கொடை எனும் இருப்புண்மையை நம்புபவர்களாக இருந்து, அப்புலன்களை மேலும் வளர்த்துக் கொள்வது எளிதானது. ஆன்மத் திறவுக்குத் தடை எதுவென்றால், ஆன்மீக விழிப்புணர்விலும் நுண்ணறிவிலும் தனக்குள்ள ஈடுபாட்டின் மேல் கொள்ளும் கர்வ எண்ணமே. இதனைச் சமாளிக்க, நற்குணங்களைச் செயல்படுத்தும் போது, இறைச் சரணாகதியில் தன்னை அமிழ்த்திக் கொள்ளுவதான எண்ணப்பாங்கில் இருப்பதே வழி.
18.43. சூரத்தனம், தேஜஸ், உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, தாராளத்தன்மை, மற்றும் நாயகத்துவம் ஆகியன க்ஷத்ரியர் எனப்படும் உத்வேகத்துடன் சுய ஒழுக்கமுள்ள சுபாவமுடையோரின் அடிப்படைக் குணாதியங்கள்.
உரை:
இந்த ஸ்லோகம் அர்ஜுனன் போன்றோரை ஒத்த சாதகர்களைப் பொருந்தி தைரியத்துடன் ஒரு போட்டியில் ஈடுபடவும், அழிவுப்பூர்வ மனப்போக்குகளையும் திறன் முடக்கும் சுய பழக்கங்களையும், சுய ஒழுக்கத்தாலும் தியானத் திறமையினாலும் எதிர்கொள்ளவும் தூண்டப்படுகிறார்கள்.
வீரசூரத்தனத்துடன், உயிர்ப்பும் உறுதியும் திறமையும் தைரியமும் திறந்த மனதுடைமையும் தீர்மானகர புத்தியும் உடைய ஒருவன் அதற்கான தூண்டுதல் தரப்பட்டால் தகுந்த குறிக்கோள்களை அடைபவனாய் --- கிரிய யோகத்தினால் எல்லா தடைகளையும் விலக்குபவனாய் --- ஆவான்.
18.44. திட்டங்களைச் செயல்படுத்தும் பாங்கு, வாழ்வை அனுபவித்தும் வளங்களைத் திறம்பட பயன்படுத்தியும் வாழ்பவர்களான வைசிய சுபாவத்திலுள்ளோரின் கடமைகள். சேவை செய்தல் மற்றும் அது போன்ற காரியங்களைச் செய்வது, திறன் குறைவாயுள்ள, குறுகியவட்டத்தில் செயல்படும் சூத்ர சுபாவத்திலுள்ளோரின் கடமைகள்.
உரை:
வாணிபம் செய்வதற்கான அமைப்பொழுங்கினை இயல்பாக வாய்க்கப்பெற்றவர்கள், அவர்களின் திறனையும் சிறப்பாய் வாழத் தகுந்த ஆற்றலையும் ஆன்மீகப் பாதையில் பயன்படுத்தி, அதே சமயம் ஆன்ம தன்மைகளையும் உடன் வளர்த்து நிலைப்படுத்தி, தியான ஒருமையில் மூழ்கி விரைவான முன்னேற்றம் காண முடியும். வாழ்வின் உயர் லட்சியங்களை அடைய அவசியமான காரியங்களில் மனங்குவிக்க முடியும்.
இயல்பாகவோ அல்லது அனுபவமின்றியோ சாதகர்கள் மட்டுப்பட்ட புரிதலுடன் வளராத செயல்திறன் கொண்டு சுய முன்னேற்றம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தை நாடி முயற்சியில் ஈடுபடும்போது, அவர்களின் முயற்சிகளுக்குத் தோதான ஒரு வாழ்முறையை வைத்துக் கொண்டு அதில் லயித்தால் விரைவாக முன்னேறலாம்.
18.45. தன் கடமையை அர்ப்பண சிரத்தையுடன் செய்பவன் பூரணத்தினை அடைகிறான். அத்தகைய அர்ப்பணிப்பு சிரத்தை உள்ள ஒருவன் பூரணத்தினை அடையும் பாங்கினைக் கேள்.
18.46. படைப்புக்கெல்லாம் மூலம் எதுவோ எதனால் இப்பிரபஞ்சம் அகிலமும் வியாபிக்கப்பட்டுள்ளதோ, அந்த ஒன்றினுக்கு சிரத்தாபூர்வ கடமையாற்றுபவன் பூரணத்தினை அடைகிறான்.
உரை:
செய்யும் அனைத்து செயல்களிலும், நுண்ணறிவினையும் திறனையும் மனங்குவித்து செயலாற்றி வரம்பற்ற ஒன்றுக்கு ஒத்திசைந்து செய்வதே திறம்பட வாழ்வதற்கான வழியும் ஆன்மாவின் உட்கிடை ஆற்றலைத் திறவாக்கும் வழியும் ஆகும். தனிப்பட்ட வாழ்சூழல் வேறுபடினும், உயர் அறிவுக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் முயற்சி ஆரம்பிக்கும் போது, நாம் அனைவருமே இறைமையின் ஒளிக்கீற்று என்பதனால், தனது முயற்சியில் வெற்றிபெற நம் அனைவருக்குமே சமமான உட்கிடை ஆற்றல் உள்ளது. இதனைச் செய்ய வழி எதுவென்றால், உள்ள திறன்களை பயன்படுத்துவதும் வேண்டிய திறன்களை சரியான முயற்சியாலும் அனுபவத்தாலும் பெறுவதே ஆகும். நமக்கு உதவிக் கொள்ள நாம் நம்மால் ஆவதனைத்தும் செய்துவிட்டால் இறைக்கருணை ஆக வேண்டிய மிச்சத்தைப் பார்த்துக் கொள்ளும்.
18.47. பாங்காய் செய்யப்பட்ட பரதர்மத்தைக் காட்டிலும், குறைபடினும் ஸ்வதர்மமே மேல். தனக்குப் பொருத்தமான கடமைகளைச் செய்வதால் ஒருவன் துயருக்குள்ளாவதில்லை.
உரை:
நாம் செய்வதற்கு நன்கு தகுதியுடையவைகளான செயல்களை நாம் சிறக்கச் செய்துவிடுகிறோம். செய்யும் திறனை இனிமேல்தான் கற்றுச் செய்யவேண்டுமென்றாலும், பிறரின் செயலை மேலோட்டமாக பிரதியெடுப்பதை விட, நம் செயலை தெரிந்தவரை செய்வதுதான், நமக்கு நாமே நேர்மையாக நடந்துகொள்வது என்பது என இந்த சுலோகத்தில் நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. கற்பதுதான் நம் வளர்ச்சியை உறுதி பயப்பதும் விரும்பத்தக்கதும் ஆம். அதுதான் நம் வாழ்வு மலர பலமான அடித்தளம் அமைக்கும்.
18.48. பிறவியின் நோக்கமாக வந்த கடமையினை பழுதென்றாலும் செய்யவேண்டுமேயன்றி விலக்கக்கூடாது. தீயானது புகையால் சூழப்பட்டுள்ளது போல் எல்லா செயல்களும் குற்றங்களால் கரைபடுத்தப்பட்டுள்ளது.
உரை:
இச்சை, அறிவு, திறமை ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்ட செயலை செய்வதுதான் வேண்டப்படுவது. நாம் எதற்குத் திறன் பெற்றிருக்கிறோமோ அதனை குறைபடச் செய்யக்கூடாது, ஏனென்றால், மேலோட்ட செயல்பாடு வளர்ச்சிக்கு உகந்ததல்ல. கற்கவும், திறம்படச் செயலாற்றவும், சேவையாற்றவுமே நாம் இங்கிருக்கிறோம். நாம் நம்மால் இயன்றவரை ஆகப்பெரியதை வாழ்க்கைக்கு வழங்கவேண்டும். நாம் நம்மை பரம்பரைத் தொழில் வளையத்திற்குள் கட்டிப்போட்டுக்கொள்ள வேண்டியதில்லை. உணர்வுப் பெருக்கத்தாலும், திறன் வளர்ச்சியாலும், நாம் உள்காட்சியுள்ளவர்களாக நிறைவானவர்களாக இயல்பாகவே ஆகிறோம்.
18.49. புத்தியில் அறவே பற்றற்று, தன்னாட்சி பெற்றவனாய், ஆசைகளை விலக்கியவனாய் இருப்பவனாகிய சாதகன், செயல்களிலிருந்து முற்றிலும் விடுபட்ட பரமமான நிலைக்கு சித்தி பெறுகிறான்.
உரை:
ஆன்ம ஞானம் திறவாக ஆக நாம் நம் பற்றுகளிலிருந்து விடுபட்டு, ஆன்ம விழிப்பில் நிலைபெற்று, மனம் மற்றும் புலன்களை ஆள்பவர்களாய், காமமின்மையை செயல்படுத்துகிறோம். ஞானசித்தியால் விளையும் காமமின்மை, நாம் நம் வாழ்வை வாழும் விருப்பத்தையோ, காரணபுஷ்டியான நம் காரியங்களை நிறைவேற்றும் விருப்பத்தையோ களைவதில்லை. மாறாக, அது நம் உட்கிடை ஞானத்தால் நம் விருப்பத்திற்கு இயல்பூக்கத்தில் செயல்படவைக்கிறது.
18.50. முழுமைக்கு விழிப்பான ஒருவன் எவ்வாறு பரமநிலையான பிரஹ்மத்தை அடைகிறான் என என்னிடமிருந்து சுருக்கமாக அறி.
உட்பொருள்:
தானே திறவாகும் உன் உட்கிடை ஞானத்திலிருந்து, முழுமைக்கு விழிப்பான ஒருவன் எவ்வாறு தூயப் பேருணர்விற்குத் திறவாகிறான் என அறிவாயாக.
உரை:
ஆன்மஞானத்திற்கு விழிப்படைந்த பின்னும், மேலும் கண்டுணரும் ஆர்வத்தினால், பூரணத்தின் முழுச் சித்தியை இயல்பாய் முடிவிப்பதான அடுத்த அடுத்த விழிப்புநிலைகள் இயல்பாய் நிகழும்.
18.51. தூய நுண்ணறிவு வாய்க்கப்பெற்று, உறுதியான சுய கட்டுப்பாடு கொண்டு, புலன் விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்பு இன்றி,
18.52. தனிமையில் அமிழ்ந்து, உண்டிச் சுருக்கம் உள்ளவனாய், பேச்சு, உடல் மற்றும் மனம் கட்டுப்பட்டவனாய், யோகதியானத்திற்கு என்றும் நிலைத்து, எதிலும் வைராக்கியத்துடன்,
18.53. ஆணவம், அடக்குமுறை, கர்வம், ஆசை, கோபம், பற்று ஆகியன விலக்கி, சுயநலமின்றி அமைதியுற்று இருப்பவனாகிய சாதகன் உன்னதப் பேருணர்வினுக்குச் சித்தியாக முற்றும் பொருத்தமானவன்.
உரை:
இறையனுபூதிக்கான ஆர்வம் மட்டும் இருந்துவிட்டால் போதாது என அறிய வேண்டும். முதிராத இறையனுபூதியும் அதனை கனியவைக்கத் தொடர்ந்து செய்யவேண்டிய முயற்சிகளுமின்றி, ஆன்மீகப் பாதையில் வெற்றிக்கு உத்தரவாதம் கிடையாது.
நுண்ணறிவு ஆற்றலானது, தவறுகள்-நீங்கிய விவேகத்தின் துணையாலும் உயருணர்வு தியானத்தினாலும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
சுய கட்டுப்பாட்டினைத் தன்னாட்சியில் கொண்டு வந்திருக்க வேண்டும்.
மகிழ்ச்சிக்காகவும், தற்காப்பு உணர்வுக்காகவும் புறப்பொருட்களைச் சார்ந்திருத்தலை விலக்க வேண்டும்.
எதன் மேலேயும் அதிக வெறித்தனம் இல்லாமலும், அதேசமயம் துர்பாக்கியங்களை எப்படியாவது தவிர்த்தே ஆகவேண்டுமென அதீத பிரயத்தனமும் கூடாது. ஆன்ம திருப்திக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தனிமையில் இனிமை காணல் என்பது அவசியமற்ற கவனச்சிதறல் இல்லாமையே.
சத்தான உணவுகளை அளவோடு வயிற்றிற்கும், அமைதி தருவதும் ஆக்கபூர்வமானதாகவும் உள்ள கருத்துக்களால் மனதிற்கும் உணவளிக்க வேண்டும்.
பேச்சு, நடத்தை, சகஜ சிந்தனைப் பாடு ஆகியன வாழ்வின் உயர் லட்சியங்களென நாம் புரிந்து கொண்டவைகளோடு இயைந்து செல்லுமாறு ஒழுக வேண்டும்.
உயருணர்வு தியானம் தொடர்ந்து அன்றாடம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
வைராக்கியம் என்பது மன அமைதி, உணர்ச்சிச் சமன்பாடு ஆகியனவற்றை உறுதி செய்வதான நிஷ்சலன மனமே. ஆன்மீகப்பாதையில் வெற்றிபெற இது மிக அவசியம்.
ஆணவத்தை தியாகம் செய்தல் என்பது தற்பெருமையின்மையும் செருக்கின்மையும் ஆகும்.
அடக்குமுறை, கர்வம், ஏக்கத்துடனான ஆசை, கோபம், பற்று, ஆகியனவற்றை விலக்குதல் என்பது ஆன்மதிருப்தி நல்குவதான சுயநலமின்மை மற்றும் மன அமைதியை ஸ்தாபிக்கும்.
18.54. உன்னதப் பேருணர்வில் லயித்து, அமைதி காப்பவன், துயருறுவதோ ஆசை கொள்வதோ இல்லை. அவன் எவ்வுயிரிடத்தும் பேதமின்றி தூய பரமான பக்தியை அடைகிறான்.
உரை:
இறைச் சரணாகதி அடையும்போது நம் பக்தி தூய்மையானதாகும். உணர்ச்சித் ததும்பலும், மனோவிகாரங்களின் ஆட்ட ஆர்ப்பரிப்பும் ஆகிய ஏதுமற்ற பக்தியானது, தான் தனித்து இயங்குகிறேன் என எண்ணும் அறிவினைக் கரைக்கிறது.
18.55. பக்தியால்தான் என்னை உள்ளவாறு அறிகிறான். உள்ளவாறு என்னை அறிந்த அவன் என்னில் ஐக்கியமாகிறான்.
உட்பொருள்:
பூரணத்திற்குப் பக்தி செலுத்தும் ஒருவன் பேருணர்வின் அறிவுக்கு விழிப்படைகிறான். இதனை அறிந்தே அவன் பூரணத்திற்கு விழிப்படைகிறான்.
உரை:
ஒருவன் ஆன்மீகப் பயிற்சி தொடங்கும்போது இறைமை பற்றிய புரிதல் இன்றியும், ஆன்மத் திறவாதலில் முன்னேறுகையில், இறைமையின் இருப்புண்மையை புரிந்துகொள்பவனாகிறான்.
இறைமையின் முழு வடிவத்தைக் காணும் ஆர்வத்தில் நுண்ணறிவு கூடி, உள்ளறிவு நேர்க்காட்சியை அனுபவப்படுத்தி, செயலூக்க விழிப்புப் பெற்ற ஆன்மசக்தி, ஆன்ம குணநலன்கள் மற்றும் ஆன்ம ஞானம் ஆகியன திறவாதலை விரைவுபடுத்துகிறது.
18.56. என்னைச் சார்ந்து எல்லாச் செயல்களையும் செய்யும் சாதகன், என் கருணையினால் சனாதனமான அழிவற்ற பதத்தை அடைகிறான்.
உட்பொருள்:
வரம்பற்ற ஒன்றைச் சார்ந்து, எல்லாக் காரியங்களையும் செய்யும் சாதகன் இறைக்கருணையினால் சனாதனாமானதும் மாறாததுமாகிய நிலையை எய்துகிறான்,
உரை:
நாம் இறைமையுடன் முழுவதும் மனம்குவித்து, பிரயத்தனப்படாமல் நித்யமாக லயித்திருந்தால், நம் ஒவ்வொரு சிந்தையும் செயலும் இறையுடனான உறவில் இருப்பதை நாம் அறியவருவோம்.
18.57. எல்லாச் செயல்களையும் என்னிடத்தில் மனதால் துறந்து, என்னை முடிவான உன்னதமாகக் கொண்டு பக்தி செலுத்தி, விவேகம் நிறை புத்தி யோகத்தில் அடைக்கலமாகி, உன் கவனம் முழுவதையும் என்னிடத்தில் நித்யமாய் லயம் செய்.
உட்பொருள்:
இறைமைக்கு உன் எல்லாச் செயல்களையும் துறந்து, இறைமையை உயர்சித்தியாக மதித்து, விவேகம் நிறை யோக சமாதியில் லயித்து உன் கவனம் முழுவதையும் நித்யமாய் இறைவனிடத்தில் குவி.
உரை:
இறையிருப்புக்கு முற்றும் விழிப்புப் பெறுவதானது, மகிழ்ச்சியான புத்துணர்வுதரும் ஆக்கபூர்வ அனுபவமே. அது, சில சமயம் பிறரிடம் கவனிக்கப்படும் நுண்ணறிவற்ற உணர்வெழுச்சி மனோபாவத்துடன் கூடிய ஆரவார கொச்சை பக்தியுடன் சற்றும் பொருந்துவதல்ல; அவர்கள் நேர்மையானவர்களாக இருந்தாலும் உண்மையான ஆன்மீக விழிப்புணர்வு பெற்றவர்களல்ல.
18.58. என்னிடத்தில் மனமொருமித்து, நீ, என் கருணையினால் உன் கஷ்டங்களையெல்லாம் கடந்து விடுவாய். ஆனால், ஆணவத்தினால் நீ இதனைக் கவனிக்காமல் விட்டாலோ உனக்கு அழிவே.
உட்பொருள்:
இறையிருப்புண்மைக்கு மனம் ஒருமித்து, எல்லா கஷ்டங்களையும் நீ கடவுளின் கருணையினால் கடந்து விடுவாய். ஆனால், செருக்கினால் நீ இதனைக் கவனிக்காமல் விட்டால் ஆன்மீகப் பாதையிலிருந்து நீ தவறிவிடுவாய்.
உரை:
இறைமைக்கு நம் கவனத்தை செலுத்தி, அதன் கருணையினால் நம் எல்லாத் தடைகளையும் விலக்கிவிடலாம். அது நம் சரியான முயற்சிக்கு உறுதி கூட்டும். விழிப்படைதலின் இறுதிக் கட்டம் வரை ஆணவத்தின் குறுக்கீடு இருக்கும் என்பதனால், நம் ஒளியூட்டத்தினை உறுதி செய்யக்கூடியதான சித்திப்பாடு, ஞானம், ருசுப்பிக்கப்பட்ட நடத்தைகள் ஆகியவைகளால் தீர்மானகரமாகும் வரை இறைமைக்கு விழிப்படைந்தவர்களாக நாம் நமக்கே முன்கூட்டியே முடிவு செய்துவிடக் கூடாது.
18.59. ஆணவத்தினால் நீ, “நான் போரிடமாட்டேன்” என தீர்மானித்தாயானால், உன் தீர்மானம் வீணே. உன் அடிப்படை சுபாவமே உன்னைப் போரிடத் தூண்டிவிடும்.
18.60. பின்னர், உன் மனமயக்கத்தினால், எதைச் செய்ய நீ விரும்பவில்லையோ, அதனையே உன் சொந்த கர்மாவினாலேயே தூண்டப்பட்டு, வேறுவழியின்றி நீ செய்ய நேரும்.
உட்பொருள்.
ஆணவத்தினால் நீ, “ஆன்ம சித்திக்கு உள்ள தடைகளை நான் எதிர்த்து துவம்சம் செய்யமாட்டேன்” என்று நினைத்தாயானால், உன் தீர்மானம் வீணாகும். ஏனென்றால், உன் இயல்பான ஆன்மசுபாவம் உன்னை அவ்வாறுச் செய்யத் தூண்டிவிடும். உன் மனமயக்கத்தினால், ஆன்மீக வளர்ச்சிக்கு ஆசைப்படுபவனாய் இருந்தாலும் உன் உள்முரண்பாடுகளால் அதனைச் செம்மை தவறிச் செய்வாய்.
உரை:
முழுமைக்கான நம் ஆன்ம தாகத்தை நாம் அலட்சியப்படுத்தி விட்டுவிடலாம் என்றிருந்தாலும், நம் உட்கிடை ஆர்வம் நம்மை ஒருகாலத்தில் அதனை நோக்கி வளரக் கட்டாயப் படுத்தும். இதற்குத் தடை ஏற்பட்டாலோ, மனமின்றிச் செய்தாலோ நம் மன முரண்பாடுகளே நம் ஆன்மீகப் பயிற்சியை ஆன்ம திருப்தியுடன் செய்யவிடாமல் உள்மன சேஷ்டைகள் வாழ்வை நிர்ணயிக்கும் நிலை உருவாகும். ஆன்மீக முழுமை பெறுவதற்கு நம் மனதைச் சரணாகதி செய்து, நல்வாழ்க்கைக்கும் அறிவார்ந்த ஆன்மீகப் பயிற்சிக்கும் நம் மனதை உட்படுத்த வேண்டும்.
நாம் உற்சாகத்துடன் இவ்வாறு உள்ளார்ந்த உறுதிசெய்து கொள்ள வேண்டும்: “ஆம்! மயக்கத்திலிருந்து எழுவதான என் ஆன்மாவின் அழைப்புக்கு நான் இணங்குவேன்! சரியான முயற்சியுடனும் இறைக்கருணையினாலும் நான் ஆன்ம ஞானத்திற்கான எல்லா தடைகளையும் வென்று இறையுணர்வு அனுபூதியை முற்றிலும் அடைவேன்!”
18.61. எல்லா படைப்புக்களின் இதயத்திலும் இறைமை குடிகொண்டிருக்கிறது. இறைமையின் மாயா சக்தியினால், எந்திரத்தில் அவைகளை ஏற்றுவித்ததுபோல், அதனதன் அனுபவங்களைத் தொடரவிடுகிறது.
உரை:
பிரபஞ்சத்தினை உருவாக்கும் மூல இயற்கையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, ஜீவராசிகள் தங்களை தங்களின் உள்ளார்ந்த ஆன்ம இருப்புண்மையால் வெளிப்படுகின்றன. மூல இயற்கையின் உண்மையினை மறைக்கும் சக்தியால் கட்டுண்டு, அவ்வான்மாக்களின் ஜன்ம சுழற்சியினை கால மற்றும் இடவெளியில் தொடர்கின்றன. தன்வசமின்றி அகப்பட்ட இச்சுழற்சியின் பிடியிலிருந்து, ஜீவன் தனது இறையுணர்வு உண்மைக்கு விழிப்புறும்வரையில் விடுபடமுடியாது.
18.62. இறைமையை மட்டுமே உன் ஒரே தனிப் புகலிடமாக உன் உடல் பொருள் ஆவியுடன் முழுதுமாகச் சரணடை. இறைக் கருணையினால் உன்னத அமைதியையும் நித்ய வாஸஸ்தலத்யையும் அடைவாய்.
உரை:
நமக்குள்ளேயுள்ள ஆழ்மையக் கருவறைக்குத் திரும்புவதன் மூலம் நாம் இறைமைக்குத் திரும்புகிறோம். இது, நாம் எங்கும் நிறைந்தவனுடைய ஒளிக்கீற்று எனும் உண்மையை நினைவுகூர்கின்றோம். இவ்வெண்ணம் தவிர பிற ஏதேனுமாக நாம் உணர்ந்தாலும் நாம் இறைமை பற்றிய விழிப்புணர்வுக்கு நம்மைப் பயிற்றுவித்துக் கொள்ளவேண்டும். பிரிவு பாவனை மறைந்துவிட்டால் இருப்பதெல்லாம் இறையுணர்வே.
18.63. ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமான ஒன்றின் அறிவு என்னால் உனக்கு விவரிக்கப்பட்டது. அதை முழுமையாகக் கருத்திற்கொண்டு தீர்க்க ஆலோசித்து நீ விரும்புவதைச் செய்.
உட்பொருள்:
சாதாரண மக்கள் அறியாத அறிவு உன் சுய திறவாய் உனக்குக் கிடைத்தது. நீ அறிந்ததின் மீது ஆழ்ந்த தியான ஒருமை கொண்டு கவனத்துடன் சிந்தித்து உன் உள் வழிகாட்டுதலின்படி நடப்பாயாக.
உரை:
இங்கு சொல்லப்பட்ட ரகசியம் ஆன்மா அறியாததல்ல. பலரும் பொதுவாக அறியாத வாழ்வைப் பற்றிய உண்மைதான் என்றாலும் உள்முகமாய் சுய தெளிவு திறவாகும் வரை உள்காட்சி பெற்றவர்களிடமிருந்தும் உயருணர்வின் தன்மையின் மேல் மனமொருமிப்பதாலும் அறிந்து கொள்ளலாம். உண்மையை அறிந்த பின் அதன் படி வாழ வேண்டியதுதான் தேவை.
18.64. மறுபடியும் என் உயர்ஞான அதி ரகசிய வார்த்தைகள். நீ எனக்கு மிகவும் பிரியமானவன். அதனால் உனக்கு உன் நலத்திற்காகப் பேசுகிறேன்.
உட்பொருள்:
அனைத்தையும் விட ரகசியமான உன்னத வெளிப்பாட்டினை மறுபடியும் பெறு. மீட்புக் கருணையின் பிரவாகத்தில் நீ இருப்பதால் வெளிப்பாடுகள் தொடரும்.
உரை:
இறையன்புதான் பேருணர்வு வெளியின் ஈர்க்கும் வல்லமை. அதுதான் ஆன்மாவைப் பற்றியும் இறைமை பற்றிய ஆன்மாவின் உட்கிடை அறிவினையும் திரை விலக்கிக் காட்டுகிறது. ஆன்ம விடுதலை நல்கும் இந்த ஈர்ப்பு வல்லமைதான் கருணையின் தூய வெளிப்பாடு. இதனை நம் செயலால் மட்டுமே பெறமுடியாது. ஆனால் பலனாகக் கிடைக்கும்போது பெற்று அதற்குச் சரணடைய வேண்டும். சாதகனால் சாதாரணமாகப் புரிந்துகொள்ளப்படாதிதனால் இது “ரகசியம்” என விசேஷித்து அழைக்கப்படுகிறது.
ஆணவம் மேலிட்டு தன் இருப்புக்குத் தானே ஆதாரம் என நுண்ணுறிவுக் குறைபாட்டால் தவறாக அடையாளப்படுத்திக் கொள்ளும்போது என்ன தோன்றுகிறதென்றால் –-
• ஆன்மாவும் இறைமையும் வேறு வேறு.
• பகீரதப் பிரயத்தினால்தான் இறைமையை உணரமுடியும்
• ஆன்மா ஒளியூட்டம் பெறுவது இறைவன் நேரம்பார்த்து முடிவெடுத்தால்தான் சாத்தியம்.
எனும் கருத்துக்கள். ஆனால் இவை உண்மை அல்ல. இறைக் கருணை எப்பொழுதும் உள்ளது. ஆன்மா செய்யவேண்டியதெல்லாம் இறைமைக்குத் தன்னைத் திருப்பிக் கொள்வதுதான். உடனே கருணையின் மீட்புச் செயல்கள் செயல்படத் துவங்கிவிடும். ஆன்மீகப் பாதையில் நம் ஆரம்ப கால எல்லா முயற்சிகளும் இறைக் கருணையினால் விடுதலையின் இறுதி அனுபவம் பெறவே.
18.65. என்னை தியானித்து, என் பக்தனாய் எனக்குப் புனிதக் கொடையளித்து என்னைச் சரணடை. இதனால் நீ உண்மையில் என்னிடமே வருகிறாய். என் அன்பனாகிய உனக்கு இதுவே என் வாக்குறுதி.
உட்பொருள்:
இறைமைக்கு பக்தியுடன் பணிவிடை செய்து, தன்னுணர்வினை இறைமைக்குச் சமர்ப்பி. இதனால் உண்மையில் நீ இறைமைக்கு விழிப்படைகிறாய். இறைக் கருணையின் அரவணைப்பில் எப்போதும் இருக்கும் உனக்கு இதுவே வாக்குறுதி.
உரை:
தியானத்தின்போது, இறைமையில் தன்னை முழுவதும் இழந்துவிடவே விரும்பவேண்டும். பரிபூரண பக்தியில் இறைமையில் சங்கமி. தன்னூட்ட உணர்வு குறைந்து இறை உணர்வு வளரட்டும். ஞானிகளாலும் சரணாகதர்களாலும் அனுபவிக்கப்பட்ட இறைசித்திக்கு இதுவே நேர்வழி.
18.66. சர்வ தர்மங்களையும் விட்டு விட்டு என்னை மட்டுமே சரணடை. உன் எல்லா பாபங்களினின்றும் உன்னை மீட்பேன். துயரப்படாதே.
உட்பொருள்:
சர்வ தர்மங்களையும் விட்டு விட்டு இறைமைக்கு மட்டுமே சரணடை. அதன் கருணை உன் எல்லாத் துர்பாக்கியங்களினின்றும் மீட்கும். எதற்கும் துயரப்படாதே.
உரை:
ஆன்மீக விழிப்பின் இறுதிக் கட்டத்தில், ஆன்ம திறவாதலுக்கான சுய தந்திர மற்றும் சொந்த முயற்சிகள் யாவும் விடுத்து சாதகனின் எந்தக் குறுக்கீடும் இன்றியிருக்க வேண்டும். அதனால் கருணையின் ஆட்சி தங்குதடையின்றி செயல்படும். ஆன்ம திறவாதலின் இறுதிக்கட்டத்தில், அச்சப்படவோ வருத்தப்படவோ ஏதுமில்லை. பயனுள்ள எதுவும் இழக்கப்படுவதில்லை; அனைத்தையும் உள்ளடக்கிய பூரணத்துவமே இறைமையில் இந்நிலையில் அறிந்து உணரப்படுவது.
18.67. தவம் மேற்கொள்ளாதனுக்கோ பக்தி இல்லாதவனுக்கோ பணிவிடைசெய்யாதவனுக்கோ செவி மடுக்காதவனுக்கோ என்னைக் குறை கூறுபவனுக்கோ, இதனை உரைக்காதே.
உட்பொருள்:
சுய ஒழுக்கமற்றவனுடனோ இறைபக்தியற்றவனுடனோ, பிரபஞ்சப் பரிணாமத்தை ஆதரித்து ஒழுகாதவனுடனோ, கற்க ஆர்வமற்றவனுடனோ இறை இருப்புண்மையினை நம்பாத குரூரர்களுடனோ, இதனை விவாதிக்காதே.
உரை:
நம் ஆன்ம ஒளியூட்டத்திற்கும், உயர் இலட்சியங்களை செயலாக்கம் செய்வதையுமே நாம் வாழும் வழியாகக் கொண்டால், பிறருடன் முரண்பட்ட உறவினைத் தவிர்த்து, நம் மன, உணர்ச்சி, ஆன்மீக மற்றும் பொருள் வளங்களை நன்கு உபயோகிப்போம்.
நம் ஆன்மீக நடவடிக்கைகளைப் பற்றியோ தத்துவங்களைப் பற்றியோ அவைகளைக் கற்க ஆர்வமற்றவர்களுடன் கற்கும் முறை அறிய விரும்பாதவர்களுடன் கற்க எதிர்ப்பு உள்ளவர்களுடன் பேசிக்கொண்டிருக்கக் கூடாது.
தங்கள் செயல்திறனை முன்னேற்ற யத்தனம் செய்பவர்களுக்கு, இறை இருப்புண்மையினையும் அதற்காக ஆன்மசித்தி முயற்சிகளை அறிய நேர்மையுடன் ஆர்வமுறுபவர்களுக்கு தைரியம் கொடுக்கலாம். அவ்வாறு இருந்தாலும், நாம் பிறருக்குக் கற்றுக் கொடுக்கும் தகுதி பெறும் வரை தத்துவ நூல்களை மற்றும் அது போன்ற உதவிச் சாதனங்ஙளைக் கொடுத்து அவர்களை உரிய போதனை ஆதார மையங்களுக்கு மேற்கல்விக்கு பரிந்துரைக்கலாம். நம்மை நாமே உதவிக்கொள்ளத் தகுதியாக்கிக் கொள்ளும் வரை பிறருக்கு உதவ முயல்வது நம் வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கலாம் என்பது மட்டுமல்ல; அது பிறருக்கு அவ்வளவு பயனுள்ளதாகவும் இருக்காது. நேரிய உயர்வெண்ணம் மட்டும் பிறருக்கு அவர்கள் தேவைப்படுவதை வழங்கிவிட உதவாது.
18.68. உன்னத பக்தியை என்னிடம் செலுத்துபவன், என்னுடைய பிற பக்தர்களுக்கு இந்த உத்தம ரகசியத்தைக் கற்பிக்கும்போது நிச்சயமாக என்னிடத்தில் வருகிறான்.
18.69. இதனைக்காட்டிலும் என்னை மகிழ்வுறுத்தும் செயலைச் செய்பவன் யாரும் மனித குலத்தில் இல்லை. பூமியெங்கிலும் என் பாசத்திற்குறியவன் இவனை விட யாரும் இல்லை.
உட்பொருள்:
சுய ஊட்ட உணர்வினை இறைமைக்குச் சரணாகதி செய்ததால் ஆத்ம ஞானத்திற்கு விழிப்புற்றவன், பிற நேரிய சாதகர்களுக்கு இந்த உன்முகப் பாதையினைக் கற்றுத் தருகிறான். அதனாலேயே அவன் உறுதியாக இறைமையின் முழுமையினை உணர்ந்துவிடுவான்.
இறை அனுபூதிக்கு பிற சாதகர்களுக்கு வழி காட்டும் அனுபூதியாளனை விட சீரிய தொண்டாற்றும் ஆன்மா வேறு இல்லை. இயற்கை எல்லைப் பரப்பில் இறைக்கருணையினை பூரணமாக உணரும் ஆன்மா வேறு இல்லை.
உரை:
இறையார்வ ஆன்மாவின் உள் உந்தலில் ஏற்பட்ட வெளிப்பாடு இப்போது முழுமையை நெருங்குகின்றது. தானே சுரக்கும் கருணைப் பெருக்கால், உயருண்மைகளை அறிய தேட்டம் உள்ள பிறருக்குக் கொடுத்துதவ வேண்டும் என அந்த ஆன்மா விருப்பம் கொள்கிறது. ஒருவன் கருணையின் பிரவாகத்தில் இணையோட்டம் கொண்டுவிட்டால் ஆதாரமூலத்திடமிருந்து ஆன்மாக்களுக்கு அவரவர் திறவு பலத்திற்கேற்ப சத்யத்தின் ஊட்டம் கிடைத்துவிடும். சுதந்திரகதியை நெருங்கிய ஆன்மா இப்போது சத்குருவாகி, அதாவது சத்யத்தினைக் கற்றுத்தரும் ஆசானாகி, அவனுடைய சிந்தை, சொல், செயல் அனைத்தும், ஆன்ம ஞானத்திற்கு விழிப்படையச் சித்தமாயிருக்கும் பிறரிடம் உள்ள மனோமயக்கத் திரைமறைப்பினை விலக்குவதையே தனது பணியாகக் கொண்டிருக்கும்.
18.70. நம் இந்தப் புனித சம்பாஷணையினைக் கற்கும் எவராலும், நான் ஞான யக்ஞத்தினால் வழிபாடு செய்யப்பட்டவன் ஆகின்றேன். இது என் உறுதியான கருத்து.
உட்பொருள்:
ஆன்மாவின் இந்தப் புனித வெளிப்பாட்டினை அப்யசிக்கும் சாதகனால், ஞானம் சரியாக ஆசரிக்கப்படுவதாகிறது. இது சத்யம்.
உரை:
விழிப்புறும் ஆன்மா இப்போது புரிந்து கொள்வது என்னவென்றால் தனக்கு வெளிப்பாடான எந்த ஒன்றையும், அந்த அறிவு ஞானமாகி அதுவும் பூரண சித்தியாகும் வரை தியான அமைதியினிடையே பரிட்சீத்துப் பார்க்கவேண்டும் என்பதே.
18.71. விதண்டாவாதமின்றி சிரத்தையுடன் கவனம் வைத்துக் கேட்கும் சாதகன் விடுதலை பெற்று சாத்வீகச் செயல் கனிந்தோரின் மகிழ்ச்சியான லோகங்களை அடைகிறான்.
உட்பொருள்:
ஐயமின்றி யாரொருவன் இதனைக் கேட்கிறானோ அவன் மயக்கங்களிலிருந்து விடுபட்டு உணர்வின் தெளிவான தளத்திற்கு விழிப்படைகிறான்.
உரை:
ஆன்ம விடுதலைக்கான வழியினை அறிந்து விஸ்வாஸத்துடன் ஏற்றுக்கொண்டு வாழ்வில் கடைபிடிப்பவனுக்கு, மயக்கங்களும் காட்சிப்பிறழ்ச்சிகளும் விலகி உயருணர்வு நிலைகளுக்குத் தானாகத் திறவாகிறான்.
"சாத்வீகச் செயல் கனிந்தோரின் மகிழ்ச்சியான லோகங்களை அடைவ"தென்பதின் அர்த்தம் என்னவென்றால் ஆன்ம ஞான வெளிப்பாட்டினால் பயனடையும் ஜீவன், மேம்பட்ட சுதந்திரத்தினை அனுபவிக்கும் அதே நேரம் தன்னூட்ட உணர்வின் முழு விடுதலைக்குத் தேவையான ஆன்ம திறவாதலின் இறுதிப் படிநிலைகளை இன்னும் அடையவேண்டியுள்ளதனைக் குறிக்கிறது.
18.72. நீ இவைகளை ஒருமித்த கவனத்துடன் கேட்டாயா? உன் அறியாமையும் மயக்கமும் அழிந்தனவா?
உரை:
சுய திறவாக வெளியாக்கப்பட்ட உண்மையினை அனுபவித்த சாதகன், இப்போது தனக்கேற்பட்ட புரிதல் முற்றுப்பெற்றதா என்பதனையும் தவறான நம்பிக்கைகள் விலகினவா என்பதனையும் ஆழ்ந்து தியானித்து தெளிவாகத் தேர்வதற்கு ஊக்கப்படுத்தப் படுகிறான். தன்னூட்ட உணர்விலிருந்து முற்றிலும் விடுபட்டாகிவிட்டது என்பதை உறுதிப்படுத்த, ஆணவம் மற்றும் சுய ஏமாற்று உணர்வும் அறவே ஒழிந்து, அவை சல்லி அளவேவேனும் இல்லாமலாக வேண்டும்.
அர்ஜுனன் கூறியது.
18.73. என் மயக்கம் விலகியது. நான் உன் கருணையினால் ஞானம் மீளப் பெற்றேன். என் ஐயங்கள் விலகின. நீ கூறியவாறு நான் செயல்படுவேன்.
உட்பொருள்:
என் மயக்கம் விலகியது. நான் இறைக் கருணையினால் ஞானம் மீளப் பெற்றேன். என் ஐயங்கள் விலகின. இறைவனின் சித்தத்திற்கேற்ப நான் செயல்படுவேன்.
உரை:
முழுவதும் விடுவிக்கப்பட்ட ஆன்மா இப்போது மாசகன்றதாகயிருக்கிறது. விழிப்புணர்வு முழுமைக்கு மீண்டு வந்துள்ளது. மறந்து போன ஞானமானது இப்போது ஆன்மாவில் சுயவிளக்கமாயுள்ள இறைஞானத்தின் மீட்புச்செயலால் சுயம் பிரகாசமானது. ஐயம் ஏதும் பாக்கி இல்லை. ஆன்மா இப்போது எவ்விடத் தயக்கமின்றி உள்ளறிவுடன் வாழ்ந்து தனக்கு விதிக்கப்பட்டதை இயல்பூக்கத்தில் செய்துவிடும்.
சஞ்சயன் சொன்னது.
18.74. உயர் ஆன்மாவான அர்ஜுனனுக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் இடையே நடந்த இந்த ஆச்சர்யகரமான சம்பாஷணையினைக் கேட்டு நான் மெய் சிலிர்த்தேர்.
உட்பொருள்:
இந்த ஆச்சர்யகரமான வெளிப்பாடுகள் ஆன்மாவின் ஆழ்மையத்திலுள்ள உன்னதப் பேருணர்விலிருந்து திறவானதை அறிந்து நான் மெய் சிலிர்த்தேன்.
18.75. வியாஸரின் கருணையினால், இந்த அதி ரகஸ்ய யோகத்தினை யோகேஸ்வரக் கிருஷ்ணரின் சுய சான்னித்தியத்தில் கற்பித்ததை நான் கேட்டேர்.
உட்பொருள்:
அறிவு-ஞானத்தின் கருணையினால், இறைஞானத்திற்கான உள்முக வழி ஆன்மாவின் உள்ளார்ந்த தெய்வீக உண்மையிருப்பினால் தானாகத் திறவாக்கப்பட்டதை அறிந்தேன்.
18.76. பேராச்சர்யமும் புனிதமானதுமான இந்த கிருஷ்ணார்ஜுன சம்பாஷணையினை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து, மீண்டும் மீண்டும் பெருமகிழ்ச்சியடைகிறேர்.
உட்பொருள்:
பேராச்சர்யமும் புனிதமானதுமான இந்த தெய்வீக வெளிப்பாட்டின் சுயதிறவாதல் ஆன்மாவின் ஆழத்திலிருந்து வெளியானதை எண்ணி எண்ணி இடையறாமல் களிப்புறுகிறேன்.
18.77. கிருஷ்ணரின் அந்த வியத்தகு ரூபவிலாசத்தை நினைத்து, நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்; மீண்டும் மீண்டும் நான் மகிழ்வுறுகிறேர்.
உட்பொருள்:
உன்னதப் பேருணர்வின் அந்த வியத்தகு இருப்புண்மையினை அறிந்து எண்ணி எண்ணி என் வியப்புப் பிரவாகத்தால் நான் மகிழ்ச்சியாகவே தொடர்ந்து இருக்க உந்தப்படுகிறேன்.
18.78. இது என் கருத்து. எங்கெல்லாம் யோகேஸ்வரக் கிருஷ்ணரும் சுய ஒழுக்கசீலனான இறைபக்தன் அர்ஜுனனும் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் பிரகாசமான நற்பாக்கியம், வெற்றி, நலம், மற்றும் தர்மம் ஆகியன குடிகொண்டிருக்கும்.
உட்பொருள்:
எங்கெல்லாம் சர்வ நியந்தாவான உன்னதப் பேருணர்வும், இறைமையின் சத்ய சாதகனும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நற்பாக்கியம், எல்லாத் தடைகளையும் தகர்க்கும் வெற்றி, இயல்பூக்க நலம், மற்றும் தர்ம ஸ்தாபகம் ஆகியனவும் நடந்தேறிவிடும்.
முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், “மோக்ஷ சன்யாச யோகம்”
என மூலத்திலும், “சரணாகதத் துறவு மூலம் விடுதலை எனும் யோகம்” என இவ்வுரையிலும் தலைப்பிடப்பட்ட 18 ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து!
ஜெய் குருதேவ்!
மஹாவீர் ஹனுமான் கீ ஜெய்!
ஸமஸ்த ஸாது ஸந்தோங் கீ ஜெய்!
ஸர்வே ஜனா: சுகினோ பவந்து!
Send Your Comments to phdsiva@mccrf.org